விசுவாசமும் தேவபயமும் தருகிற தைரியம்
“பலங்கொண்டு திடமனதாயிரு; . . . உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.”—யோசுவா 1:9.
1, 2. (அ) மனிதருடைய பார்வையில், கானானியர்களை எதிர்த்து இஸ்ரவேலர் வெற்றி பெறுவதற்கு எந்தளவு வாய்ப்பு இருந்தது? (ஆ) யோசுவா என்ன உறுதியைப் பெற்றார்?
இஸ்ரவேலர் பொ.ச.மு. 1473-ல் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய தயாராய் இருந்தார்கள். அவர்கள் சந்திக்கவிருந்த கஷ்டங்களை மோசே அவர்களுக்குப் பின்வருமாறு நினைப்பூட்டினார்: ‘நீங்கள் இப்பொழுது யோர்தானைக் கடந்து, உங்களிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத் துரத்தி, வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து, ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறீர்கள்; . . . ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.’ (உபாகமம் 9:1, 2) வாட்டசாட்டமான இந்த வீரர்களைப் பற்றி உண்மையிலேயே எல்லாரும் அறிந்திருந்தார்கள்! அதுமட்டுமல்ல, கானானியர் சிலரிடம் ஆயுதம் தரித்த சிறந்த படைகள் இருந்தன; குதிரைகள் பூட்டப்பட்ட அவர்களுடைய ரதத்தின் சக்கரங்களில் இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்டிருந்தன.—நியாயாதிபதிகள் 4:13.
2 இஸ்ரவேலரோ அடிமைகளாக இருந்தவர்கள், 40 வருடங்கள் வனாந்தரத்தில் சுற்றித் திரிந்துவிட்டு அப்போதுதான் வந்திருந்தார்கள். எனவே, மனிதருடைய பார்வையில், இவர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரியவில்லை. எனினும், மோசேக்கு விசுவாசம் இருந்தது; தங்களை யெகோவா வழிநடத்திச் செல்வதை அவரால் ‘பார்க்க’ முடிந்தது. (எபிரெயர் 11:27, பொது மொழிபெயர்ப்பு) “உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் . . . [அவர்] அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்” என ஜனங்களிடம் அவர் சொன்னார். (உபாகமம் 9:3; சங்கீதம் 33:16, 17) மோசே இறந்த பிறகு, யோசுவாவுக்கு யெகோவா ஓர் உறுதி அளித்தார்; எப்போதும் தம்முடைய ஆதரவு அவருக்கு இருக்குமென்பதை பின்வரும் வார்த்தைகளில் சொன்னார்: “நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்.”—யோசுவா 1:2, 5.
3. விசுவாசத்தோடும் தைரியத்தோடும் இருக்க யோசுவாவுக்கு எது உதவியது?
3 யெகோவாவின் ஆதரவையும் வழிநடத்துதலையும் யோசுவா பெறுவதற்கு கடவுள் கொடுத்த நியாயப்பிரமாணத்தை வாசித்து, தியானிக்கவும் அதன்படி நடக்கவும் வேண்டியிருந்தது. “அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய் [அதாவது, வழியில் வெற்றி காண்பாய்], அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என்று யெகோவா அவரிடம் சொன்னார். (யோசுவா 1:8, 9) கடவுளுக்குச் செவிசாய்த்ததன் காரணமாக யோசுவா, தைரியமானவராக, பலமுள்ளவராக, வெற்றி காண்பவராக திகழ்ந்தார். ஆனால், அவருடைய வயதை ஒத்த பெரும்பாலோர் கடவுளுக்குச் செவிசாய்க்கவில்லை. அதனால், அவர்கள் வெற்றி காணவில்லை, அவர்கள் வனாந்தரத்திலேயே செத்துமடிந்தார்கள்.
விசுவாசமற்றோருக்கு தைரியம் இல்லை
4, 5. (அ) யோசுவாவுடனும், காலேபுடனும் ஒப்பிடுகையில் அந்தப் பத்து வேவுகாரர்களின் மனப்பான்மை எப்படி இருந்தது? (ஆ) ஜனங்கள் விசுவாசமற்றவர்களாய் நடந்துகொண்டபோது யெகோவா எப்படி உணர்ந்தார்?
4 முதன்முதலாக, நாற்பது வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேலர் கானான் தேசத்தை நெருங்கினார்கள்; அப்போது, அத்தேசத்தை வேவுபார்க்க மோசே 12 பேரை அனுப்பினார். திரும்பி வந்தபோது அவர்களில் பத்து பேர் பயந்துபோயிருந்தார்கள். “நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம்” என கூக்குரலிட்டார்கள். ஏனாக்கியர் மட்டுமல்லாமல், மற்ற “ஜனங்கள் எல்லாரும்” இராட்சதராய் இருந்தார்களா? இல்லை. இந்த ஏனாக்கியர் ஜலப்பிரளயத்திற்கு முன் வாழ்ந்த இராட்சதரின் சந்ததியினரா? அதுவும் இல்லை! இருந்தாலும், இப்படி மிகைப்படுத்திக் கூறியதன் காரணமாக, பாளயத்திலுள்ள அனைவரையும் பயம் கவ்வியது. ஜனங்கள் மீண்டும் எகிப்து தேசத்திற்கே திரும்பிப் போக விரும்பினார்கள்! அதுவும் அவர்கள் அடிமைப்பட்டிருந்த அந்தத் தேசத்திற்கே!—எண்ணாகமம் 13:31–14:4.
5 இருப்பினும், அந்த வேவுகாரர்களில் யோசுவா, காலேப் என்ற இருவரும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குப் போக ஆவலாய் இருந்தார்கள். கானானியர் “நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை” என்று சொன்னார்கள். (எண்ணாகமம் 14:9) ஆதாரமே இல்லாமல் யோசுவாவும் காலேபும் நம்பிக்கையோடு அப்படிச் சொன்னார்களா? இல்லவே இல்லை! பத்து வாதைகளை வரவழைத்ததன் மூலம் பலம்படைத்த எகிப்து தேசத்தையும் அதன் தெய்வங்களையும் யெகோவா சிறுமைப்படுத்தியதை மற்ற ஜனங்களைப் போலவே இவர்களும் கண்ணாரக் கண்டிருந்தார்கள். பிறகு, பார்வோனையும் அவனுடைய படை வீரர்களையும் சிவந்த சமுத்திரத்தில் மூழ்கடித்ததையும் அவர்கள் பார்த்திருந்தார்கள். (சங்கீதம் 136:15) எனவே, பத்து வேவுகாரர்களும் அவர்கள் சொன்னதைக் கேட்ட மற்றவர்களும் அப்படிப் பயப்பட்டதன் மூலம் மிகப் பெரிய தவறு செய்ததாகத் தெரிகிறது. ஏனென்றால், யெகோவா ரொம்பவே வேதனைப்பட்டு, “தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எது வரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?” என்று கேட்டார்.—எண்ணாகமம் 14:11.
6. தைரியம் எந்த விதத்தில் விசுவாசத்துடன் தொடர்புடையதாய் இருக்கிறது, இன்று இதை எவ்வாறு பார்க்க முடிகிறது?
6 யெகோவா அந்தப் பிரச்சினைக்கான அடிப்படை காரணத்தைக் குறிப்பிட்டார்; அந்த ஜனங்கள் பயப்பட்டது, அவர்களுக்கு விசுவாசம் இல்லாதிருந்ததை அம்பலப்படுத்தியது. ஆம், விசுவாசத்திற்கும் தைரியத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது; அந்தளவு அவற்றுக்கு நெருங்கிய தொடர்பிருந்ததால், கிறிஸ்தவ சபையையும் அதன் ஆன்மீக நலனையும் குறித்து அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.” (1 யோவான் 5:4) யோசுவாவும் காலேபும் காட்டியதைப் போன்ற விசுவாசத்தை, பெரியோர் சிறியோர், பலமுள்ளோர் பலவீனர் என 60 லட்சத்துக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் வெளிக்காட்டுவதால் இன்று உலகெங்கும் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. எந்த எதிரியும், தைரியமிக்க இந்த மாபெரும் படையினரின் வாயை அடைக்க முடியவில்லை.—ரோமர் 8:31.
‘பின்வாங்குகிறவர்களாய் இராதேயுங்கள்’
7. ‘பின்வாங்குவது’ எதை அர்த்தப்படுத்துகிறது?
7 அப்போஸ்தலன் பவுலைப் போலவே யெகோவாவின் சாட்சிகளும் இருப்பதால் இன்று அவர்கள் தைரியமாக நற்செய்தியை பிரசங்கித்து வருகிறார்கள்; அவர் இவ்வாறு எழுதினார்: “நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.” (எபிரெயர் 10:39) ‘பின்வாங்குவது’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையை பவுல் இங்கு பயன்படுத்தியிருப்பது, தற்காலிகமாகப் பயப்படுவதை அர்த்தப்படுத்துவதில்லை; காரணம், கடவுளின் உண்மை ஊழியர்களில் பலரும் அவ்வப்போது இப்படிப் பயப்பட்டிருக்கிறார்கள். (1 சாமுவேல் 21:12; 1 இராஜாக்கள் 19:1-4) மாறாக, அந்தப் பயம், “சத்தியத்தைப் பற்றிக்கொள்வதில் அசட்டையாக இருப்பதை” அர்த்தப்படுத்துவதாக பைபிள் அகராதி ஒன்று விளக்குகிறது. “பாய்மரத்தை இறக்கி கப்பலின் வேகத்தைக் குறைப்பதுபோல” கடவுளுடைய சேவையில் ஆர்வம் குறைவதைக் குறிப்பிட ‘பின்வாங்குதல்’ என்ற உருவகம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதாகவும் அந்த அகராதி சொல்கிறது. விசுவாசத்தில் உறுதியாக இருப்பவர்கள் கஷ்டங்கள் வரும்போது, அதாவது துன்புறுத்தல், சுகவீனம் போன்றவையோ வேறு சோதனைகளோ வரும்போது, ‘வேகத்தை [ஆர்வத்தை] குறைத்துக்கொள்வதைப்’ பற்றி எண்ணிப் பார்க்க மாட்டார்கள். மாறாக, யெகோவா தங்களைக் கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொள்கிறார் என்பதையும் தங்களுடைய வரம்புகளை அவர் அறிந்திருக்கிறார் என்பதையும் உணர்ந்தவர்களாக அவருக்குத் தொடர்ந்து சேவை செய்கிறார்கள். (சங்கீதம் 55:22; 103:14) அத்தகைய விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா?
8, 9. (அ) ஆரம்பகால கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை யெகோவா எப்படிப் பலப்படுத்தினார்? (ஆ) நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
8 ஒருசமயம் தங்களுக்குப் போதுமான விசுவாசம் இல்லாததை உணர்ந்து அப்போஸ்தலர்கள் இயேசுவிடம், “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண வேண்டும்” என்று கேட்டார்கள். (லூக்கா 17:5) அவர்கள் ஊக்கமாய் வேண்டிக்கொண்டதால் அதைப் பெற்றுக்கொண்டார்கள்; முக்கியமாக, பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று, வாக்குறுதி அளிக்கப்பட்டபடி பரிசுத்த ஆவி சீஷர்கள்மீது இறங்கி, கடவுளுடைய வார்த்தையையும் நோக்கத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்குத் தேவையான திறனை அளித்தபோது அதைப் பெற்றுக்கொண்டார்கள். (யோவான் 14:26; அப்போஸ்தலர் 2:1-4) அவர்களுடைய விசுவாசம் பலப்பட்டது; அதனால், எதிர்ப்பின் மத்தியிலும் பிரசங்க ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்து “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள்.—கொலோசெயர் 1:23; அப்போஸ்தலர் 1:8; 28:22.
9 விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொண்டு, ஊழியத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு நாமும்கூட பைபிளைப் படித்து, தியானிக்க வேண்டும், அதோடு பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கவும் வேண்டும். யோசுவாவையும் காலேபையும் ஆரம்பகால கிறிஸ்தவ சீஷர்களையும் போலவே நம் மனதிலும் இருதயத்திலும் கடவுளுடைய சத்தியத்தைப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான், ஆன்மீகப் போரில் சகித்திருப்பதற்கும், அதில் வெற்றி காண்பதற்கும் தேவையான தைரியத்தைத் தருகிற விசுவாசத்தைப் பெறுவோம்.—ரோமர் 10:17.
விசுவாசம்—வெறும் நம்பிக்கை மட்டுமல்ல
10. உண்மையான விசுவாசம் எதையெல்லாம் அர்த்தப்படுத்துகிறது?
10 தைரியத்தையும் சகிப்புத்தன்மையையும் தருகிற விசுவாசத்தை பூர்வ காலங்களில் கடவுளுக்கு உண்மையாய் இருந்தவர்கள் வெளிக்காட்டினார்கள்; அது, கடவுள்மீதுள்ள நம்பிக்கையை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. (யாக்கோபு 2:19) யெகோவாவை ஒரு நபராக நாம் அறிந்துகொள்வதையும் அவர்மீது முழு நம்பிக்கை வைப்பதையும் அது அர்த்தப்படுத்துகிறது. (சங்கீதம் 78:5-8; நீதிமொழிகள் 3:5, 6) அதாவது, கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் செவிசாய்த்து, அதற்கேற்ப நடப்பது நமக்கு மிகச் சிறந்த பயனை அளிக்கும் என்பதை மனமார நம்புவதை அர்த்தப்படுத்துகிறது. (ஏசாயா 48:17, 18) யெகோவா தம்முடைய வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார், ‘தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவராக’ ஆகிறார் என்பதை உறுதியாக நம்புவதையும் விசுவாசம் அர்த்தப்படுத்துகிறது.—எபிரெயர் 11:1, 6; ஏசாயா 55:11.
11. விசுவாசத்தையும் தைரியத்தையும் காட்டியதற்காக யோசுவாவும் காலேபும் எப்படி ஆசீர்வதிக்கப்பட்டார்கள்?
11 அத்தகைய விசுவாசம் அப்படியே இருந்துவிடுவதில்லை. நாம் வாழ்க்கையில் பைபிள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும்போது, அதன் பயன்களை ‘ருசிக்கும்போது,’ நம் ஜெபங்களுக்குப் பதில் கிடைப்பதைப் ‘பார்க்கும்போது,’ அதோடு, வேறு விதங்களில் யெகோவாவின் வழிநடத்துதலை நாம் வாழ்க்கையில் உணரும்போது அது அதிகரிக்கிறது. (சங்கீதம் 34:8; 1 யோவான் 5:14, 15) யோசுவாவும் காலேபும் கடவுளுடைய நற்குணத்தை ருசித்திருந்ததால் அவர்களுடைய விசுவாசம் வேர்விட்டு வளர்ந்தது என்பதில் சந்தேகமே இல்லை. (யோசுவா 23:14) பின்வரும் குறிப்புகளைச் சிந்தித்துப் பாருங்கள்: கடவுள் உறுதி அளித்திருந்தபடியே, 40 வருட வனாந்தரப் பயணத்தின் முடிவில் அவர்கள் உயிரோடு இருந்தார்கள். (எண்ணாகமம் 14:27-30; 32:11, 12) கானானியர்களுடன் ஆறு ஆண்டுகள் நடந்த போரில் இவர்களும் முக்கிய பங்கு வகித்தார்கள். இறுதியில், நீண்ட ஆயுசையும் நல்லாரோக்கியத்தையும் அனுபவித்ததோடு, சொத்தாக நிலபுலன்களையும்கூட பெற்றார்கள். தமக்கு விசுவாசத்தோடும் தைரியத்தோடும் சேவை செய்பவர்களை யெகோவா எவ்வளவு அபரிமிதமாய் ஆசீர்வதிக்கிறார்!—யோசுவா 14:6, 9-14; 19:49, 50; 24:29.
12. யெகோவா எப்படித் தம் ‘வார்த்தையை மகிமைப்படுத்துகிறார்’?
12 யோசுவாவிடமும் காலேபிடமும் கடவுள் காட்டிய அன்புள்ள தயவு சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகிறது: “உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் [“பெயரைப் பார்க்கிலும்,” NW] உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.” (சங்கீதம் 138:2) தம் பெயரில் யெகோவா ஒரு வாக்குறுதி அளிக்கும்போது, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலம் அதை ‘மகிமைப்படுத்துகிறார்.’ நம் எதிர்பார்ப்புகளையெல்லாம் மிஞ்சி அது நிறைவேற்றம் அடைகிறது. (எபேசியர் 3:20) தம்மிடத்தில் ‘மனமகிழ்ச்சியாயிருக்கிற’ யாரையும் அவர் ஒருபோதும் ஏமாற்றுவது கிடையாது.—சங்கீதம் 37:3, 4.
‘தேவனுக்குப் பிரியமான’ நபர்
13, 14. ஏனோக்குக்கு ஏன் விசுவாசமும் தைரியமும் தேவைப்பட்டன?
13 கிறிஸ்தவத்துக்கு முன்னான காலத்தில் கடவுளுக்குச் சாட்சியாய் வாழ்ந்த ஒருவருடைய உதாரணத்தைச் சிந்திப்பதிலிருந்து விசுவாசத்தையும் தைரியத்தையும் பற்றி நாம் பெருமளவு கற்றுக்கொள்ள முடியும். அவருடைய பெயர் ஏனோக்கு. அவர் தீர்க்கதரிசியாய் சேவை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பே, தன்னுடைய விசுவாசமும் தைரியமும் சோதிக்கப்படும் என்பதை அறிந்திருக்கலாம் என தெரிகிறது. எப்படி? எப்படியெனில், யெகோவாவை சேவிப்பவர்களுக்கும் பிசாசாகிய சாத்தானைச் சேவிப்பவர்களுக்கும் இடையே பகைமை, அதாவது கடும் வெறுப்பு நிலவும் என்பதாக ஏதேன் தோட்டத்தில் யெகோவா குறிப்பிட்டிருந்தார். (ஆதியாகமம் 3:15) இந்தப் பகைமை மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில் காயீன் தன் சகோதரன் ஆபேலைக் கொலை செய்தபோதே ஆரம்பமானது என்பதையும் ஏனோக்கு அறிந்திருந்தார். சொல்லப்போனால், இவர் பிறந்தபோது இவருடைய முற்பிதாவான ஆதாம் உயிரோடு இருந்தார்; அதன் பிறகு, சுமார் 310 ஆண்டுகள் கழித்தே அவர் இறந்தார்.—ஆதியாகமம் 5:3-18.
14 இந்த உண்மைகளை அறிந்திருந்தபோதிலும் ஏனோக்கு தைரியமாக மெய் ‘தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தார்’; அதோடு, யெகோவாவுக்கு விரோதமாக ஜனங்கள் பேசிய ‘கடின வார்த்தைகளை’ அவர் கண்டித்தார். (ஆதியாகமம் 5:22; யூதா 14, 15) அவர் மெய் வணக்கத்தை இவ்வாறு தைரியமாய் ஆதரித்ததால், அநேகரின் பகைமையை சம்பாதித்துக் கொண்டார், அதோடு, தன் உயிரையும் ஆபத்துக்குள்ளாக்கிக் கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் யெகோவா அவரை மரண அவஸ்தையிலிருந்து காப்பாற்றினார். அவர் ‘தேவனுக்குப் பிரியமானவர்’ என்பதை யெகோவா அவரிடம் தெரிவித்த பிறகு, ஒரு தீர்க்கதரிசன காட்சியைக் காணும்படி செய்திருக்கலாம். மெய்மறந்த நிலையில் அதை அவர் பார்த்துக்கொண்டிருந்தபோது மரணத்துக்குள் ‘எடுத்துக்கொள்ளப்பட்டார்,’ அதாவது, உயிரோடிருந்த நிலையிலிருந்து மரித்த நிலைக்கு மாற்றப்பட்டார்.—எபிரெயர் 11:5, 13; ஆதியாகமம் 5:24.
15. இன்று யெகோவாவின் ஊழியர்களுக்கு ஏனோக்கு எந்த விதத்தில் அருமையான முன்மாதிரியாய் திகழ்கிறார்?
15 ஏனோக்கு மரித்த நிலைக்கு மாற்றப்பட்டதைப் பற்றி குறிப்பிட்ட உடனேயே விசுவாசத்தின் முக்கியத்துவத்தை பவுல் மீண்டும் இவ்வாறு வலியுறுத்தினார்: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.” (எபிரெயர் 11:6) உண்மைதான், யெகோவாவுடன் நடப்பதற்கும், கடவுள் பற்றில்லாத ஜனங்களுக்கு அவருடைய நியாயத்தீர்ப்பு செய்தியை அறிவிப்பதற்கும் தேவைப்பட்ட தைரியத்தை விசுவாசம் அவருக்குக் கொடுத்தது. இந்த விதத்தில் ஏனோக்கு நமக்குச் சிறந்த முன்மாதிரியாய் திகழ்கிறார். மெய் வணக்கத்தை எதிர்க்கிற இவ்வுலகில், எல்லா விதமான கெட்ட காரியங்களும் நிறைந்திருக்கிற இவ்வுலகில், அவர் செய்ததைப் போன்ற அதே வேலையை நாமும் செய்ய வேண்டியிருக்கிறது.—சங்கீதம் 92:7; மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 12:17.
தேவபயம் தரும் தைரியம்
16, 17. ஒபதியா யார், அவர் எத்தகைய சூழ்நிலையில் இருந்தார்?
16 விசுவாசத்தைத் தவிர, மற்றொரு பண்பும் தைரியத்தைத் தருகிறது; அதுதான் கடவுளிடம் காட்டும் பயபக்தி. ஆகாப் ராஜா மற்றும் எலியா தீர்க்கதரிசியின் காலத்தில் வாழ்ந்த தேவபயமுள்ள ஒரு நபரின் அருமையான உதாரணத்தை இப்போது சிந்திப்போமாக. வடக்கு ராஜ்யமான இஸ்ரவேலை ஆகாப் ஆட்சி செய்து வந்தார்; அப்போது என்றுமில்லாத அளவுக்கு பாகால் வணக்கம் அந்த ராஜ்யம் முழுவதையும் பாழ்ப்படுத்தியிருந்தது. சொல்லப்போனால், பாகாலுக்குச் சேவை செய்த 450 தீர்க்கதரிசிகளும் ஆண்குறியை அடையாளப்படுத்தும் தோப்பு விக்கிரகத்திற்குச் சேவை செய்த 400 தீர்க்கதரிசிகளும் ஆகாபின் மனைவியான ‘யேசபேலின் பந்தியிலே சாப்பிட்டு’ வந்தார்கள்.—1 இராஜாக்கள் 16:30-33; 18:19.
17 யெகோவாவைப் பகைத்த, இரக்கமற்ற யேசபேல் மெய் வணக்கத்தைத் தேசத்திலிருந்து அடியோடு அகற்ற முயன்றாள். யெகோவாவின் தீர்க்கதரிசிகளில் சிலரை அவள் கொலை செய்தாள், எலியாவைக்கூட கொல்ல முயற்சி செய்தாள்; அவரோ கடவுளுடைய வழிநடத்துதலினாலே யோர்தானைக் கடந்து சென்று உயிர்தப்பினார். (1 இராஜாக்கள் 17:1-3; 18:13) அக்காலத்தில் வடக்கு ராஜ்யத்தில் மெய் வணக்கத்தை ஆதரிப்பது எவ்வளவு கடினமாய் இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதுவும், அரண்மனையிலேயே நீங்கள் வேலை பார்த்து வந்திருந்தால் உங்களுக்கு அது எவ்வளவு கடினமாய் இருந்திருக்கும்? அத்தகைய சூழ்நிலையில்தான் தேவபயமுள்ள ஒபதியாa இருந்தார்; இவர் ஆகாபுடைய அரண்மனை விசாரிப்புக்காரராய் இருந்தார்.—1 இராஜாக்கள் 18:3.
18. யெகோவாவை வணங்கி வந்த ஒபதியாவை எது அசாதாரண நபராக்கியது?
18 ஒபதியா எச்சரிக்கையோடும் விவேகத்தோடும் யெகோவாவை வணங்கி வந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. இருப்பினும், அவர் இணங்கிப்போய், மெய் வணக்கத்தை விட்டுக்கொடுத்துவிடவில்லை. 1 இராஜாக்கள் 18:3 அவரைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவராயிருந்தார்.’ ஆம், அவர் காட்டிய தேவபயம் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது! இந்தப் பயம் அவருக்கு அசாதாரண தைரியத்தைத் தந்தது; யேசபேல் யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொலை செய்த உடனேயே அவருடைய தைரியம் வெளிப்பட்டது.
19. ஒபதியா செய்த எந்தக் காரியம் அவருக்குத் தைரியம் இருந்ததை வெளிக்காட்டியது?
19 அதைக் குறித்து இவ்வாறு வாசிக்கிறோம்: “யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்து வந்தான்.” (1 இராஜாக்கள் 18:4) இரகசியமாக நூறு பேருக்குச் சாப்பாடு கொடுத்து வருவது எவ்வளவு ஆபத்தான வேலை என்பதை உங்களாலேயே புரிந்துகொள்ள முடியும். அவர் கையும் களவுமாகப் பிடிபடாதிருக்க, ஆகாபையும் யேசபேலேயும் மட்டுமல்ல அந்த அரண்மனைக்கு வந்துபோய்க்கொண்டிருந்த 850 பொய் தீர்க்கதரிசிகளையும் தவிர்க்க வேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, ராஜா, ராணியின் தயவைப் பெறுவதற்காக ஒபதியாவைக் காட்டிக்கொடுப்பதற்கு, ஆண்டிமுதல் அரசன்வரை தேசத்திலிருந்த பலர் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்தார்கள்; அவர்களையும் அவர் தவிர்க்க வேண்டியிருந்தது. அதோடு, இந்த விக்கிரக வணக்கத்தார் எல்லாரும் கவனித்துக்கொண்டிருந்த போதிலும் அவர்களுடைய கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இவர் தைரியமாக யெகோவாவின் தீர்க்கதரிசிகளுடைய தேவைகளைக் கவனித்து வந்தார். தேவபயம் ஒருவரை எந்தளவு தைரியமிக்கவராய் ஆக்குகிறது!
20. ஒபதியாவுக்கு இருந்த தேவபயம் அவருக்கு எப்படி உதவியது, அவருடைய உதாரணம் உங்களுக்கு எப்படி உதவுகிறது?
20 தேவபயத்துடன் இருந்து ஒபதியா தைரியத்தை வெளிக்காட்டியதால், அவருடைய எதிரிகளிடமிருந்து யெகோவா அவரைப் பாதுகாத்ததாகத் தெரிகிறது. “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்” என்று நீதிமொழிகள் 29:25 சொல்கிறது. ஒபதியா விசேஷ சக்தி பெற்றவராய் இருக்கவில்லை; எங்கே பிடிபட்டு, கொலை செய்யப்பட்டுவிடுவாரோ என்று நம்மைப் போலவே அவரும் பயந்தார். (1 இராஜாக்கள் 18:7-9, 12) இருப்பினும், மனிதரிடம் அவருக்கிருந்த கொஞ்சநஞ்ச பயத்தையும் சமாளிப்பதற்குத் தேவையான தைரியத்தைத் தேவபயம் அவருக்குத் தந்தது. ஒபதியா நம் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரி வைக்கிறார்; குறிப்பாக, சுதந்திரம் பறிபோகும் நிலையில் அல்லது தங்கள் உயிருக்கே ஆபத்தான நிலையில் யெகோவாவை வணங்கி வருகிறவர்களுக்கு சிறந்த முன்மாதிரி வைக்கிறார். (மத்தேயு 24:9) “பயத்தோடும் பக்தியோடும்” நாம் எல்லாரும் யெகோவாவுக்குச் சேவை செய்வோமாக.—எபிரெயர் 12:28.
21. அடுத்த கட்டுரையில் எதை சிந்திப்போம்?
21 விசுவாசமும் தேவபயமும் மட்டுமே தைரியத்தைப் பெற தேவையான பண்புகள் அல்ல; அதற்கு அன்பும்கூட அதிகம் தேவைப்படுகிறது. “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” என பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 1:7) கடினமான இந்தக் கடைசி நாட்களில் தைரியமாக யெகோவாவுக்குச் சேவை செய்ய அன்பு நமக்கு எப்படி உதவும் என்பதை அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.—2 தீமோத்தேயு 3:1.
[அடிக்குறிப்பு]
a இவர் ஒபதியா தீர்க்கதரிசி அல்ல.
உங்களால் பதில் அளிக்க முடியுமா?
• யோசுவாவும் காலேபும் தைரியமாய் இருக்க எது உதவியது?
• உண்மையான விசுவாசம் எதையெல்லாம் அர்த்தப்படுத்துகிறது?
• கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்தியை ஏனோக்கு ஏன் தைரியமாக அறிவித்தார்?
• தேவபயம் எப்படித் தைரியத்தைப் பெற உதவுகிறது?
[பக்கம் 16, 17-ன் படம்]
“பலங்கொண்டு திடமனதாயிரு” என யோசுவாவுக்கு யெகோவா கட்டளையிட்டார்
[பக்கம் 18-ன் படம்]
கடவுளுடைய தீர்க்கதரிசிகளை ஒபதியா பராமரித்தார், பாதுகாத்தார்
[பக்கம் 19-ன் படம்]
கடவுளுடைய வார்த்தையை ஏனோக்கு தைரியமாய் பேசினார்