அதிகாரம் 125
அன்னாவிடமும், பிறகு காய்பாவிடமும் கொண்டுபோகப்படுகிறார்
மத்தேயு 26:57-68 மாற்கு 14:53-65 லூக்கா 22:54, 63-65 யோவான் 18:13, 14, 19-24
முன்னாள் தலைமைக் குருவிடம் இயேசு கொண்டுபோகப்படுகிறார்
சட்டவிரோதமாக நியாயசங்கம் விசாரிக்கிறது
இயேசு ஒரு குற்றவாளியைப் போலக் கட்டப்பட்டு, அன்னாவிடம் கொண்டுபோகப்படுகிறார். சின்ன வயதில் ஆலயத்திலிருந்த போதகர்களை இயேசு ஆச்சரியப்படுத்திய சமயத்தில், அவர் தலைமைக் குருவாகச் சேவை செய்திருந்தார். (லூக்கா 2:42, 47) பிற்பாடு, அன்னாவின் மகன்களில் சிலர் தலைமைக் குருக்களாக சேவை செய்திருந்தார்கள். இப்போது அவருடைய மருமகனான காய்பா தலைமைக் குருவாக இருக்கிறார்.
அன்னாவின் வீட்டில் இயேசு இருக்கும்போது, காய்பா நியாயசங்கத்தைக் கூட்டுகிறார். தலைமைக் குரு, முன்னாள் தலைமைக் குருக்கள் ஆகியோர் உட்பட 71 உறுப்பினர்கள் நியாயசங்கத்தில் இருக்கிறார்கள்.
இயேசுவிடம் “அவருடைய சீஷர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும்” அன்னா விசாரணை செய்கிறார். அப்போது இயேசு, “நான் உலகறியப் பேசியிருக்கிறேன். யூதர்கள் எல்லாரும் கூடிவருகிற ஜெபக்கூடத்திலும் ஆலயத்திலும் எப்போதும் கற்பித்திருக்கிறேன்; எதையும் நான் ரகசியமாகப் பேசியதே இல்லை. அப்படியிருக்கும்போது, ஏன் என்னை விசாரணை செய்கிறீர்கள்? நான் பேசியதைக் கேட்டவர்களிடம் விசாரணை செய்யுங்கள்” என்று மட்டும் சொல்கிறார்.—யோவான் 18:19-21.
இயேசு இப்படிச் சொன்னதும், அங்கே நின்றுகொண்டிருக்கிற காவலர்களில் ஒருவன் அவருடைய கன்னத்தில் அறைந்து, “முதன்மை குருவுக்கு இப்படித்தான் பதில் சொல்வதா?” என்று கேட்கிறான். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால் இயேசு, “நான் தவறாகப் பேசியிருந்தால், அந்தத் தவறு என்னவென்று சொல். சரியாகப் பேசியிருந்தால், என்னை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்கிறார். (யோவான் 18:22, 23) பிறகு அன்னா, தன்னுடைய மருமகனான காய்பாவிடம் இயேசுவை அனுப்புகிறார்.
இதற்குள், தலைமைக் குரு, பெரியோர்கள், வேத அறிஞர்கள் என நியாயசங்கத்தைச் சேர்ந்த எல்லாரும் காய்பாவின் வீட்டில் கூடிவிடுகிறார்கள். பஸ்கா இரவில், இப்படி விசாரணை செய்வது சட்டப்படி தவறு. ஆனால், தாங்கள் நினைத்ததைச் சாதிப்பதில் குறியாக இருப்பதால், நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தச் சட்டத்தை அலட்சியம் செய்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தில் இருக்கிற நிறைய பேர் இயேசுவுக்கு எதிராக இருக்கிறார்கள். லாசருவை உயிரோடு எழுப்பிய பிறகு, இயேசுவைக் கொல்ல வேண்டும் என்று நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். (யோவான் 11:47-53) ஒருசில நாட்களுக்கு முன்னால், இயேசுவைப் பிடித்துக் கொலை செய்ய மதத் தலைவர்கள் சதித்திட்டம் போட்டிருந்தார்கள். (மத்தேயு 26:3, 4) விசாரணை ஆரம்பமாவதற்கு முன்பே, இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
சட்டவிரோதமாகக் கூடிவந்தது மட்டுமல்லாமல், இயேசுவுக்கு எதிராகச் சாட்சி சொல்வதற்கு நியாயசங்கத்தில் இருக்கிற முதன்மை குருமார்களும் மற்றவர்களும் பொய் சாட்சிகளைத் தேடுகிறார்கள். நிறைய பேரை அவர்கள் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர்களுடைய சாட்சிகள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. கடைசியாக இரண்டு பேர் வந்து, “‘கைகளால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தைத் தரைமட்டமாக்கி, கைகளால் கட்டப்படாத வேறொரு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன்’ என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்கிறார்கள். (மாற்கு 14:58) ஆனால், இவர்களுடைய சாட்சியும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது.
காய்பா இயேசுவைப் பார்த்து, “உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்கிறார்களே, நீ பதில் சொல்ல மாட்டாயா?” என்று கேட்கிறார். (மாற்கு 14:60) அந்தப் பொய் சாட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் இயேசு அமைதியாக இருக்கிறார். அதனால், தலைமைக் குருவான காய்பா இன்னொரு வழியைக் கண்டுபிடிக்கிறார்.
யாராவது தங்களைக் கடவுளுடைய மகன் என்று சொன்னால் யூதர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது காய்பாவுக்குத் தெரியும். முன்பு, கடவுள் தன்னுடைய தகப்பன் என்று இயேசு சொன்னபோது, அவர் “தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொண்டதாக” யூதர்கள் நினைத்துக்கொண்டு அவரைக் கொலை செய்யப் பார்த்தார்கள். (யோவான் 5:17, 18; 10:31-39) இதெல்லாம் காய்பாவுக்குத் தெரியும். அதனால் அவர் இயேசுவிடம், “உயிருள்ள கடவுள்மேல் ஆணையாகச் சொல், நீதான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்துவா?” என்று தந்திரமாகக் கேட்கிறார். (மத்தேயு 26:63) தான் கடவுளுடைய மகன் என்பதை இயேசு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். (யோவான் 3:18; 5:25; 11:4) இப்போது அதை ஒத்துக்கொள்ளவில்லை என்றால், தான் கடவுளுடைய மகன் என்பதையும், கிறிஸ்து என்பதையும் அவர் மறுப்பது போல ஆகிவிடும். அதனால் இயேசு, “நான் கிறிஸ்துதான்; மனிதகுமாரன் வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும் வானத்து மேகங்களோடு வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள்” என்று சொல்கிறார்.—மாற்கு 14:62.
உடனே, ஏதோ கேட்கக் கூடாததை கேட்டதுபோல் தலைமைக் குரு தன் மேலங்கியைக் கிழித்து, “இது தெய்வ நிந்தனை! இனி நமக்கு வேறு சாட்சிகள் எதற்கு? இதோ! இந்த நிந்தனையை நீங்களே இப்போது கேட்டீர்கள். உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று உணர்ச்சிபொங்க கேட்கிறார். உடனே நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள், “இவன் சாக வேண்டும்” என்று அநியாயமாகத் தீர்ப்பு சொல்கிறார்கள்.—மத்தேயு 26:65, 66.
பிறகு, இயேசுவைக் கேலி செய்து, அவரைத் தங்கள் கைமுட்டிகளால் தாக்குகிறார்கள். மற்றவர்கள் அவரைக் கன்னத்தில் அறைந்து, முகத்தில் துப்புகிறார்கள். அவருடைய முகத்தை மூடி, அவரை அறைந்து, “நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் உன்னை அடித்தது யார் என்று சொல் பார்க்கலாம்” என்று சொல்லிக் கேலி செய்கிறார்கள். (லூக்கா 22:64) சட்டவிரோதமான இந்த ராத்திரி நேர விசாரணையில், கடவுளுடைய மகன் மோசமாக நடத்தப்படுகிறார்.