இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
பல ஏமாற்றங்களைத் தாங்கிக்கொண்டவர்
சீலோ நகரம் மீளாத் துயரில் ஆழ்ந்துபோனதை சாமுவேல் பார்த்தார். அந்நகரமே கண்ணீர்க் கடலில் தத்தளித்ததுபோல் இருந்தது. தகப்பனை... கணவனை... மகனை... சகோதரனை... மரணத்தில் பறிகொடுத்த பெண்களும் பிள்ளைகளும் கதறிய கதறல் நெஞ்சைப் பிளந்தது. எத்தனை பேருடைய வீட்டில் இந்த மரண ஓலம் கேட்டது? பெலிஸ்தரிடம் இஸ்ரவேலர் படுதோல்வி அடைந்ததில் சுமார் 30,000 வீரர்கள் உயிரிழந்தார்கள் என்பது மட்டுமே நமக்குத் தெரியும்; அதற்குச் சற்று முன்னர்தான் இன்னொரு போரில் 4,000 வீரர்கள் உயிரிழந்திருந்தார்கள். —1 சாமுவேல் 4:1, 2, 10.
இடிமேல் இடியாக அடுத்தடுத்து தாக்கிய பெருந்துயரங்களில் ஒன்றுதான் இது. தலைமைக் குருவான ஏலிக்கு ஓப்னி, பினெகாஸ் என்ற இரண்டு மகன்கள் இருந்தார்கள்; அயோக்கியர்களான அந்த இருவரும் பரிசுத்தமான ஒப்பந்தப் பெட்டியை சீலோவிலிருந்து எடுத்துக் கொண்டு போயிருந்தார்கள். அந்த மதிப்புமிக்க பெட்டி பொதுவாக வழிபாட்டுக் கூடாரத்தின் பரிசுத்த அறையில் வைக்கப்பட்டிருந்தது; அது கடவுளுடைய பிரசன்னத்திற்கு அடையாளமாக இருந்தது. ஆனால், மக்கள் அதை ஒரு மந்திரப் பொருள்போல் கருதி, போர்க்களத்திற்குத் தூக்கிக்கொண்டு போனார்கள்; அது இருந்தால் வெற்றி தங்களைத் தேடி வரும் என முட்டாள்தனமாக நம்பினார்கள். ஆனால், பெலிஸ்தர் அந்த ஒப்பந்தப் பெட்டியைக் கைப்பற்றி, ஓப்னியையும் பினெகாஸையும் கொன்றுபோட்டார்கள்.—1 சாமுவேல் 4:3-11.
சீலோவிலிருந்த வழிபாட்டுக் கூடாரத்திற்குப் பல நூற்றாண்டுகளாகப் பெருமை சேர்த்து வந்திருந்த அந்த ஒப்பந்தப் பெட்டி இப்போது பறிபோய்விட்டது. இந்தச் செய்தியைக் கேட்டதுமே 98 வயதான ஏலி தனது இருக்கையிலிருந்து மல்லாக்காக விழுந்து இறந்துபோனார். அன்று விதவையான அவருடைய மருமகளும் பிரசவத்தின்போது உயிரிழந்தாள். “மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று” என்று சொல்லி அவள் உயிர்விட்டாள். ஆம், சீலோ தன் சிறப்பை நிரந்தரமாகவே இழந்துவிட்டது.—1 சாமுவேல் 4:12-22.
இந்தப் பெருத்த ஏமாற்றங்களை சாமுவேல் எப்படித் தாங்கிக்கொண்டார்? யெகோவாவின் ஆதரவையும் அரவணைப்பையும் இழந்திருந்த மக்களுக்கு அவர் உதவ வேண்டியிருந்தது; அந்தச் சவாலைச் சமாளிக்கும் அளவுக்கு அவர் விசுவாசத்தில் உறுதியாக இருந்தாரா? அவருடைய அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியுமெனப் பார்க்கலாம்; ஏனென்றால், விசுவாசத்தின் உறுதியைச் சோதிக்கும் கஷ்டங்களும் ஏமாற்றங்களும் நம் அனைவருக்குமே வரலாம்.
“நீதியை நிலைநாட்டினார்”
பைபிள் பதிவு, இந்தக் கட்டத்திலிருந்து சாமுவேலைப் பற்றிக் குறிப்பிடாமல், பரிசுத்த ஒப்பந்தப் பெட்டியைப் பற்றிக் குறிப்பிடுகிறது; அதை எடுத்துச் சென்றதற்காக பெலிஸ்தர் எவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள் என்பதையும் அதைத் திருப்பி அனுப்பும் நிர்ப்பந்தத்திற்கு எப்படி ஆளானார்கள் என்பதையும் விவரிக்கிறது. பைபிள் பதிவு மீண்டும் சாமுவேலைப் பற்றிக் குறிப்பிடும்போது சுமார் 20 வருடங்கள் உருண்டோடியிருந்தன. (1 சாமுவேல் 7:2) அவ்வளவு வருடங்களும் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதை பைபிளே நமக்குச் சொல்கிறது.
அந்த 20 வருட காலப்பகுதி ஆரம்பிப்பதற்கு முன்பு கடவுளுடைய வார்த்தையை “சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரிடமும் தொடர்ந்து எடுத்துரைத்தார்” என நாம் வாசிக்கிறோம். (1 சாமுவேல் 4:1, NW) அந்தக் காலப்பகுதிக்குப் பிறகு, ஒவ்வொரு வருடமும் அவர் இஸ்ரவேலிலிருந்த மூன்று நகரங்களுக்குச் சுற்றிப்போய் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புகள் வழங்கினார். அதன்பின், தன் சொந்த ஊரான ராமாவுக்குத் திரும்பினார். (1 சாமுவேல் 7:15-17) ஆக, சாமுவேல் கடவுளுடைய வேலையில் எப்போதும் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்; அப்படியென்றால், அந்த 20 வருட காலப்பகுதியின்போதும் அவர் கடவுளுக்காக அதிகத்தைச் செய்திருப்பார்.
ஏலியின் மகன்களுடைய ஒழுக்கக்கேட்டினாலும் ஊழலினாலும் மக்களுடைய பக்தி குறைந்துபோனது. சொல்லப்போனால், அநேகர் உருவ வழிபாட்டில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால்தான், 20 வருடங்களாகக் கடுமையாய் உழைத்திருந்த சாமுவேல் அதன்பின் மக்களிடம் இந்தச் செய்தியைச் சொன்னார்: “நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார்.”—1 சாமுவேல் 7:3.
“பெலிஸ்தருடைய கை” ஓங்கியதால் இஸ்ரவேலர்மீது கொடுங்கோலாட்சி செய்ய ஆரம்பித்தார்கள். இஸ்ரவேலருடைய படையைச் சாமர்த்தியமாக வீழ்த்திவிட்ட பிறகு இஷ்டம்போல் அவர்களை அடக்கி ஒடுக்கத் துணிந்தார்கள். மக்கள் மறுபடியும் யெகோவாவிடம் திரும்பினால்தான் நிலைமை மாறுமென சாமுவேல் சொன்னார். அவர்கள் அதைச் செய்ய விரும்பினார்களா? ஆம், அவர்கள் உருவச் சிலைகளைத் தூக்கியெறிந்துவிட்டு ‘யெகோவா ஒருவருக்கே ஆராதனைசெய்ய’ ஆரம்பித்தார்கள்; இதைக் கண்டு சாமுவேல் மிகுந்த சந்தோஷப்பட்டார். பின்பு, எருசலேமுக்கு வடக்கே, ஒரு மலைப்பிரதேசத்திலிருந்த மிஸ்பா ஊரில் ஒன்றுகூடி வரும்படி அனைவரையும் அழைத்தார். அதன்படியே மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வந்து, விரதம் இருந்து, உருவ வழிபாடு எனும் பாவத்திலிருந்து மனந்திரும்பினார்கள்.—1 சாமுவேல் 7:4-6.
ஆனால், இஸ்ரவேலர் எல்லாரும் ஒன்றுகூடிவந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பெலிஸ்தர் தங்கள் கைவரிசையைக் காட்டத் திட்டமிட்டார்கள். யெகோவாவின் வணக்கத்தாரைத் தீர்த்துக்கட்டுவதற்காகத் தங்கள் படையை மிஸ்பாவுக்கு அனுப்பினார்கள். அவர்கள் படைதிரண்டு வரும் செய்தியைக் கேட்ட இஸ்ரவேலர் நடுநடுங்கிப்போனார்கள்; தங்களுக்காக ஜெபம் செய்யும்படி சாமுவேலைக் கேட்டுக்கொண்டார்கள். அவரும் ஜெபம் செய்து, யெகோவாவுக்குப் பலியைக்கூட செலுத்தினார். அந்தப் பரிசுத்தமான வழிபாடு நடந்துகொண்டிருந்த சமயத்தில் பெலிஸ்தரின் படை மிஸ்பாவை நெருங்கியது. அப்போது சாமுவேலின் ஜெபத்திற்கு யெகோவா பதிலளித்தார். அவர் ஆக்ரோஷமாக முழங்கினாரென சொல்லலாம்; ஆம், யெகோவா ‘மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணினார்.’—1 சாமுவேல் 7:7-10.
இடிச் சத்தத்தைக் கேட்டதும் பயத்தில் ஓடிப்போய் அம்மாவுக்குப் பின் ஒளிந்துகொள்ளும் சிறு பிள்ளைகள் போல் அந்தப் பெலிஸ்தரை நாம் கற்பனை செய்ய முடியுமா? முடியாது, ஏனென்றால் பல போர்க்களங்களைப் பார்த்து மனம் இறுகிப்போன துணிச்சல்மிக்க வீரர்களாக அவர்கள் இருந்தார்கள். என்றாலும், அந்த இடிமுழக்கத்தைக் கேட்டு அவர்கள் அப்படியே ஆடிப்போனார்கள். ஏன்? அது “மகா பெரிய” சத்தத்துடன் ஒலித்ததாலா? அல்லது, மேகமூட்டமில்லாத வானத்திலிருந்து கேட்டதாலா? அல்லது, மலைச்சரிவுகளிருந்து எதிரொலித்ததாலா? எதுவாக இருந்திருந்தாலும் சரி, இப்படியொரு இடி முழுக்கத்தை அவர்கள் வாழ்க்கையில் கேட்டிருந்திருக்கவே மாட்டார்கள். பயங்கரமான குழப்பத்தில், புலிபோல் பாய வந்தவர்கள் சட்டென பூனைபோல் பயந்தோடினார்கள். இஸ்ரவேலர் மிஸ்பாவிலிருந்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, முறியடித்து, எருசலேமுக்குத் தென்மேற்கே பல மைல் தூரம் அவர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள்.—1 சாமுவேல் 7:11.
அந்தப் போர் யெகோவாவின் மக்களுக்கு ஒரு பெரிய திருப்புக்கட்டமாக அமைந்தது. சாமுவேல் நீதிபதியாகப் பணியாற்றிய காலமெல்லாம் பெலிஸ்தர் பின்வாங்கிக் கொண்டே இருந்தார்கள். அடுத்தடுத்து பல நகரங்கள் கடவுளுடைய மக்களின் கைக்குத் திரும்பின.—1 சாமுவேல் 7:13, 14.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ‘நீதியை நிலைநாட்டிய’ உண்மையுள்ள நீதிபதிகளையும் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலன் பவுல் பட்டியலிட்டபோது சாமுவேலின் பெயரையும் அதில் குறிப்பிட்டார். (எபிரெயர் 11:32, 33) கடவுளுடைய பார்வையில் சரியானதையும் நீதியானதையும் நிலைநாட்ட சாமுவேல் உண்மையில் உழைத்திருந்தார். அதுவும் அவர் திறம்படச் செயல்பட்டிருந்தார்; ஏனென்றால், அவர் யெகோவாவுக்காகப் பொறுமையாகக் காத்திருந்தார், ஏமாற்றங்கள் மத்தியிலும் உண்மையோடு தன் பணியை நிறைவேற்றினார், நன்றியுள்ளவராகவும் இருந்தார். மிஸ்பாவில் இஸ்ரவேலருக்கு வெற்றி கிடைத்த பிறகு, யெகோவா செய்த உதவிக்கு நினைவுச்சின்னமாக ஒரு கல்லை நிறுத்தினார்.—1 சாமுவேல் 7:12.
நீங்களும் ‘நீதியை நிலைநாட்ட’ விரும்புகிறீர்களா? அப்படியென்றால், சாமுவேல் காட்டிய பொறுமை, மனத்தாழ்மை, நன்றியுணர்வு ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். இந்தக் குணங்களை வளர்த்துக்கொள்ளும் அவசியம் நம்மில் யாருக்குத்தான் இல்லை? இளவயதிலேயே இந்தக் குணங்களை சாமுவேல் வளர்த்துக்கொண்டதும் வெளிக்காட்டியதும் பயனளித்தன; ஏனென்றால், பிற்காலத்தில் பெருத்த ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்ள அவை அவருக்கு உதவின.
“உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை”
அடுத்ததாக சாமுவேலைப் பற்றி பைபிள் குறிப்பிடும்போது அவர் ‘முதிர்வயதானவராக’ இருந்தாரெனச் சொல்கிறது. அந்தச் சமயத்தில் அவருக்கு வளர்ந்த மகன்கள் இருவர் இருந்தார்கள்; நியாயந்தீர்க்கும் வேலையில் தனக்கு உதவும் பொறுப்பை யோவேல், அபியா என்ற அந்த இருவருக்கு அவர் அளித்திருந்தார். ஆனால், அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக அவர்கள் நடந்துகொள்ளாதது வருத்தகரமானது. சாமுவேல் எந்தளவு நேர்மையோடும் நீதியோடும் நடந்துகொண்டாரோ அந்தளவு நேர்மாறாக அந்த இருவரும் நடந்துகொண்டார்கள்; சுயநலத்திற்காகத் தங்கள் பொறுப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நீதியைப் புரட்டினார்கள், லஞ்சம் வாங்கினார்கள்.—1 சாமுவேல் 8:1-3.
ஒருநாள், இஸ்ரவேலின் மூப்பர்கள் இந்த வயதான தீர்க்கதரிசியிடம் வந்து முறையிட்டார்கள். “உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை” என்றார்கள். (1 சாமுவேல் 8:4, 5) சாமுவேலுக்கு அது ஏற்கெனவே தெரிந்திருந்ததா? அதைப் பற்றி பதிவு எதுவும் சொல்வதில்லை. என்றாலும், சாமுவேல் ஏலியைப் போல் பொறுப்பில்லாத தகப்பனாக நிச்சயம் நடந்திருக்க மாட்டார். ஏலி தன் மகன்கள் செய்த அடாவடித்தனத்தைத் தட்டிக் கேட்காமல், கடவுளுக்கும் மேலாக அவர்களை மதித்ததால் யெகோவா அவரைக் கண்டித்தார், தண்டித்தார். (1 சாமுவேல் 2:27-29) ஆனால், சாமுவேலிடம் யெகோவா அப்படிப்பட்ட எந்தக் குற்றத்தையும் காணவில்லை.
சாமுவேல் தன் மகன்களுடைய பொல்லாத நடத்தையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் எந்தளவு கூனிக்குறுகிப் போயிருப்பார், அல்லது துடிதுடித்துப் போயிருப்பார், அல்லது மனம் உடைந்து போயிருப்பார் என்றெல்லாம் பதிவு சொல்வதில்லை. இன்றுள்ள பல பெற்றோர் அதேபோன்ற வேதனையை அனுபவித்திருப்பது கசப்பான உண்மை. இந்தக் கொடிய காலத்தில், பெற்றோருடைய அதிகாரத்தையும் கண்டிப்பையும் மதிக்காமல் நடக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. (2 தீமோத்தேயு 3:1-5) அப்படிப்பட்ட மனவலியைச் சுமக்கும் பெற்றோருக்கு, சாமுவேலின் உதாரணம் ஓரளவு ஆறுதலைத் தரும், நல்ல வழிகாட்டியாகவும் இருக்கும். மகன்கள் பயபக்தியில்லாமல் நடந்துகொண்டார்கள் என்பதற்காக சாமுவேல் தன் பக்திவைராக்கியத்தைத் துளியும் விட்டுக்கொடுக்கவில்லை. அன்பான வார்த்தைகளுக்கோ கண்டிப்புகளுக்கோ மசியாத பிள்ளைகளின் உள்ளங்களை, பெற்றோரின் முன்மாதிரி மசிய வைத்துவிடலாம் என்பதை நினைவில் வையுங்கள். அதுமட்டுமல்ல, சாமுவேலைப் போலவே பெற்றோரும் தங்களுடைய தகப்பனான யெகோவா தேவனை எப்போதும் பெருமைப்பட வைக்க முடியும்.
“ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும்”
தங்களுடைய பேராசையும் தன்னலமும் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துமென சாமுவேலின் மகன்கள் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார்கள். இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் சாமுவேலிடம் சென்று, “சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும்” என்று கேட்டார்கள். அப்போது, அவர்கள் தன்னை ஒதுக்கிவிட்டதாக சாமுவேல் நினைத்தாரா? அவர் பல பத்தாண்டுகளாக யெகோவாவின் சார்பில் மக்களை நியாயம் விசாரித்து வந்திருந்தாரே! இப்போது நீதி வழங்க சாமுவேலைப் போன்ற ஒரு சாதாரண தீர்க்கதரிசி அல்ல, ஆனால் ஒரு ராஜா வேண்டுமென அவர்கள் கேட்டார்கள். சுற்றியிருந்த தேசங்களை ராஜாக்கள் ஆண்டு வந்ததால் தங்களுக்கும் ஒரு ராஜா வேண்டுமென இஸ்ரவேலர் நினைத்தார்கள். அப்போது சாமுவேல் எப்படி உணர்ந்தார்? அது “சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது” என்று பைபிள் சொல்கிறது.—1 சாமுவேல் 8:5, 6.
இது குறித்து சாமுவேல் ஜெபித்தபோது யெகோவா என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: “ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.” இது சாமுவேலுக்கு ஆறுதல் அளித்தது; ஆனாலும், சர்வவல்லவரை அந்த மக்கள் எந்தளவு அவமதித்திருந்தார்கள்! ஒரு ராஜா அவர்களை ஆட்சி செய்தால் அவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதைக் குறித்து எச்சரிக்கும்படி சாமுவேலிடம் யெகோவா சொன்னார். அதன்படி சாமுவேல் எச்சரித்த பிறகும் அவர்கள், “அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தார்கள். சாமுவேல் எப்போதும்போல் இப்போதும் யெகோவாவுக்குக் கீழ்ப்பட்டு, அவர் தேர்ந்தெடுத்த ஒருவரை ராஜாவாக நியமித்தார்.—1 சாமுவேல் 8:7-19.
சாமுவேல் எப்படிக் கீழ்ப்படிதலைக் காட்டினார்? எரிச்சலோடும் வேண்டா வெறுப்போடும் காட்டினாரா? ஏமாற்றத்தால் கசந்துபோய் மனதை விஷமாக்கிக்கொண்டாரா? இதுபோன்ற சூழ்நிலையில் பலரும் அப்படித்தான் செய்வார்கள்; ஆனால், சாமுவேல் அப்படிச் செய்யவில்லை. சவுலை ராஜாவாக நியமித்து, யெகோவாவே அவரைத் தேர்ந்தெடுத்ததை ஒப்புக்கொண்டார். பின்பு சாமுவேல் சவுலை முத்தம் செய்தார்; தான் அந்தப் புதிய ராஜாவை வரவேற்பதையும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க விரும்புவதையும் காட்ட அவர் இப்படிச் செய்தார். அவர் மக்களிடம், “யெகோவா தெரிந்து கொண்டவனைப் பாருங்கள், ஜனமுழுவதிலும் அவனுக்குச் சமானமானவன் இல்லையே” என்றார்.—1 சாமுவேல் 10:1, 24, திருத்திய மொழிபெயர்ப்பு.
யெகோவா தேர்ந்தெடுத்தவரிடம் சாமுவேல் குறைகளைப் பார்க்காமல் நிறைகளையே பார்த்தார். அவர் அலைபாயும் மனம்படைத்த இஸ்ரவேலருக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள முயற்சிக்காமல் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி உத்தமமாய் நடந்துகொள்ளவே முயற்சித்தார். (1 சாமுவேல் 12:1-4) தன்னுடைய வேலையையும் அவர் பொறுப்பாகச் செய்து வந்தார்; அதாவது, ஆன்மீக ஆபத்துகளைக் குறித்துக் கடவுளுடைய மக்களுக்கு அறிவுரை கூறியதோடு யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருக்கவும் அவர்களை உற்சாகப்படுத்தினார். அவருடைய அறிவுரையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள், தங்கள் சார்பாக யெகோவாவிடம் ஜெபிக்கும்படி அவரிடம் கெஞ்சிக் கேட்டார்கள். அவர்களுக்கு அவர் இவ்வாறு அருமையாகப் பதிலளித்தார்: ‘நான் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.’—1 சாமுவேல் 12:21-24.
யாராவது விசேஷப் பொறுப்பை அல்லது நியமிப்பைப் பெற்றபோது நீங்கள் ஏமாற்றமடைந்தது உண்டா? பொறாமையோ கசப்புணர்ச்சியோ நம் மனதில் வேர்விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை சாமுவேலின் உதாரணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பயனளிக்கிற, மனநிறைவான வேலைகளைக் கடவுள் தம்முடைய உண்மை ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ஏராளமாய்த் தருகிறார்.
“சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்”?
சாமுவேல் சவுலுடைய நிறைகளைப் பார்த்தது நியாயமானதாய் இருந்தது; ஏனென்றால், சவுல் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இருந்தார். பார்க்க வாட்டசாட்டமாக இருந்தார்; அதோடு, தைரியசாலியாக, திறமைசாலியாக இருந்தார்; என்றாலும், (ஆரம்பத்தில்) அவர் அடக்கமாகவும் பணிவாகவும் இருந்தார். (1 சாமுவேல் 10:22, 23, 27) இப்படி ஏகப்பட்ட சிறப்புகளோடு இன்னொரு மதிப்புமிக்க பரிசையும் பெற்றிருந்தார்; அதுதான், சுயமாய்த் தீர்மானங்கள் எடுக்கும் சுதந்திரம். (உபாகமம் 30:19) அந்தப் பரிசை அவர் சரியாகப் பயன்படுத்தினாரா?
பொதுவாக, ஒருவருக்குப் பதவி வந்ததும் முதலில் பணிவு பஞ்சாய்ப் பறந்துவிடுவது சோகமான உண்மை. சவுலும்கூட சீக்கிரத்திலேயே அகங்காரம் பிடித்தவராய் மாறினார். சாமுவேல் மூலம் யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளை மீறினார். ஒருசமயம், சவுல் பொறுமை இழந்து, சாமுவேல் மட்டுமே செலுத்த முடிந்த பலியைத் தானே செலுத்தினார். அதற்காக சாமுவேல் அவரைக் கடுமையாய்க் கண்டித்தார்; அவருடைய குடும்பத்தாருக்கு இனி ஆட்சி உரிமை அளிக்கப்படாது என்றும் முன்னுரைத்தார். கண்டிப்பை ஏற்றுத் திருந்துவதற்குப் பதிலாக இன்னும் மோசமான தவறுகளை அவர் செய்தார்.—1 சாமுவேல் 13:8, 9, 13, 14.
அமலேக்கியருடன் போரிடும்படி சாமுவேல் மூலம் யெகோவா சவுலிடம் தெரிவித்தார். அமலேக்கியரின் கெட்ட ராஜாவான ஆகாகைக் கொல்லும்படியும் யெகோவா தெரிவித்தார். ஆனால், சவுல் அவனைக் கொல்லாமல் விட்டார்; அதோடு, அழிக்க வேண்டியிருந்த கொள்ளைப் பொருள்களில் சிறந்தவற்றையும் அழிக்காமல் விட்டு வைத்தார். சவுல் செய்த தவறை எடுத்துச் சொல்ல சாமுவேல் வந்தபோது, ஆரம்பத்தில் பார்த்த சவுலுக்கும் இப்போது பார்க்கிற சவுலுக்கும் அதிக வித்தியாசமிருந்ததைக் கவனித்தார். ஆம், சவுல் தான் செய்த தவறைப் பணிவோடு ஏற்றுக்கொள்வதற்கு மாறாக நியாயப்படுத்தினார், சாக்குப்போக்குச் சொன்னார், தான் செய்தது சரியெனச் சாதிக்க முற்பட்டார், பிரச்சினையைத் தட்டிக் கழித்தார், மக்கள்மீது பழிபோட முயன்றார். யெகோவாவுக்குப் பலிசெலுத்தவே கொள்ளைப் பொருள்கள் சிலவற்றைக் கொண்டுவந்ததாகச் சொன்னதன் மூலம் சாமுவேலுடைய கண்டிப்பை ஏற்றுக்கொள்ள மனதில்லாதிருந்ததைக் காட்டினார். அப்போது சாமுவேல், ‘பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதல் . . . உத்தமம்’ என்று சொன்னார்; இவ்வார்த்தைகள் பிரபலமான வார்த்தைகளாகும். சாமுவேல் தைரியமாக அவரைக் கண்டித்து, யெகோவாவின் தீர்ப்பை அறிவித்தார்; அரசாட்சி சவுலிடமிருந்து பிடுங்கப்பட்டு அவரைவிடச் சிறந்த ஒருவரிடம் கொடுக்கப்படும் என்றார்.—1 சாமுவேல் 15:1-33.
சவுல் செய்த தவறுகளைப் பார்த்து சாமுவேல் மிகவும் வேதனைப்பட்டார். அதைக் குறித்து இரவு முழுக்க யெகோவாவிடம் மன்றாடினார். சவுலுக்காக அவர் துக்கமும் கொண்டாடினார். சவுலிடம் ஒளிந்திருந்த திறமைகளையும் நற்குணங்களையும் சாமுவேல் பார்த்து அவர்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்; ஆனால், இப்போது அந்த நம்பிக்கை தவிடுபொடியாகிவிட்டது. சவுல் அடியோடு மாறியிருந்தார்; தன்னுடைய நற்குணங்களை எல்லாம் தொலைத்துவிட்டு, யெகோவாவுக்கு விரோதியாக ஆகியிருந்தார். அதற்குப் பிறகு சவுலைப் பார்க்க சாமுவேல் மறுத்துவிட்டார். பிற்பாடு, சாமுவேலை யெகோவா இவ்வாறு மென்மையாய்க் கண்டித்தார்: “இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன்.”—1 சாமுவேல் 15:34, 35; 16:1.
யெகோவாவின் நோக்கம் அபூரண மனிதர்களின் உத்தமத்தன்மையைச் சார்ந்தில்லை; ஏனென்றால், அவர்கள் இன்று உத்தமமாய் இருக்கலாம், நாளை மாறிவிடலாம். ஒருவர் உத்தமத்தைவிட்டு விலகினால், யெகோவா வேறொருவரைப் பயன்படுத்தி தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவார். எனவே, வயதான சாமுவேல் சவுலுக்காகத் துக்கப்படுவதை நிறுத்திக்கொண்டார். யெகோவா சொன்னபடி, பெத்லெகேமிலிருந்த ஈசாயின் வீட்டுக்கு சாமுவேல் போனார்; அங்கு அவருடைய அழகழகான மகன்களைப் பார்த்தார். முதல் மகனைப் பார்த்ததுமே யெகோவா சாமுவேலிடம், “நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; . . . மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்று சொன்னார். (1 சாமுவேல் 16:7) இறுதியில் சாமுவேல் ஈசாயின் கடைசி மகனான தாவீதைப் பார்த்தார்; அவரையே யெகோவா தேர்ந்தெடுத்திருந்தார்.
சவுலுக்குப் பதிலாக தாவீதை யெகோவா தேர்ந்தெடுத்தது எவ்வளவு சரியானது என்பதைத் தன் கடைசி காலத்தில் சாமுவேல் தெள்ளத் தெளிவாகக் கண்டார். சவுல் பொறாமையால் கொலை வெறிபிடித்து அலைந்தார், விசுவாச துரோகியாகவும் மாறினார். தாவீதோ தைரியம், உத்தமம், விசுவாசம், உண்மைத்தன்மை போன்ற அருமையான குணங்களை வெளிக்காட்டினார். சாமுவேல் தன் இறுதி காலத்தில் இன்னும் பலமான விசுவாசத்தைப் பெற்றார். யெகோவாவால் எப்படிப்பட்ட வேதனைக்கும் மருந்திடவும், அதைப் போக்கவும், சொல்லப்போனால் அதை ஆசீர்வாதமாக மாற்றவும் முடியும் என்பதை அவர் கண்கூடாகக் கண்டார். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு உத்தமராய் வாழ்ந்து உன்னதமான பெயரெடுத்திருந்த சாமுவேல் கடைசியில் மரணமடைந்தார். இஸ்ரவேலர் எல்லாரும் உண்மையுள்ள சாமுவேலுக்காகத் துக்கம் கொண்டாடியதில் ஆச்சரியமில்லை! இன்றும் யெகோவாவின் ஊழியர்கள், ‘நான் சாமுவேலைப் போல விசுவாசத்தைக் காட்டுவேனா?’ எனக் கேட்டுக்கொள்ள வேண்டும். (w11-E 01/01)
[பக்கம் 17-ன் படம்]
பெரும் இழப்பையும் ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ள ஜனங்களுக்கு சாமுவேல் எப்படி உதவினார்?
[பக்கம் 18-ன் படம்]
பொல்லாதவர்களாக மாறிய தன் மகன்களால் ஏற்பட்ட ஏமாற்றத்தை சாமுவேல் எப்படித் தாங்கிக்கொண்டார்?