பிரசங்கிப்பதற்காகப் புதியவர்களைப் பயிற்றுவிக்கும் வழிகள்
1. முதன்முதலில் ஊழியத்திற்குச் சென்றபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
1 நீங்கள் முதன்முதலில் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்குச் சென்றது ஞாபகம் இருக்கிறதா? அப்போது உங்களுக்கு ஒருவேளை ரொம்பப் படபடப்பாக இருந்திருக்கலாம். உங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தியவரோடு அல்லது வேறொரு பிரஸ்தாபியோடு ஊழியம் செய்திருந்தால் அவருடைய உதவியை நிச்சயம் நாடியிருப்பீர்கள். இப்போது நீங்கள் அனுபவம் பெற்ற ஊழியராக இருப்பதால் பிரசங்கிப்பதற்கு புதியவர்களைப் பயிற்றுவிக்கும் நிலையில் இருக்கிறீர்கள்.
2. புதிய பிரஸ்தாபிகள் எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்?
2 வீட்டுக்காரரிடம் சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கும் பைபிளைப் பயன்படுத்துவதற்கும் மறுசந்திப்பு செய்வதற்கும் பைபிள் படிப்பு ஆரம்பித்து அதை நடத்துவதற்கும் புதிய பிரஸ்தாபிகள் கற்றுக்கொள்ள வேண்டும். ஊழியத்தின் வெவ்வேறு அம்சங்களில் கலந்துகொள்வதற்கும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, தெரு ஊழியம் செய்வதற்கும் வியாபார பிராந்தியத்தில் ஊழியம் செய்வதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். அதோடு, வீட்டுக்காரருடைய மத நம்பிக்கைகளை மதிக்கவும் பிரசங்கிக்கையில் சாதுரியமாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். (கொலோ. 4:6) இந்த அம்சங்களில் முன்னேற உங்களுடைய முன்மாதிரியும் ஆலோசனைகளும் அவர்களுக்கு உதவும்.
3. நம்முடைய முன்மாதிரியினால் நாம் மற்றவர்களுக்கு எப்படி உதவலாம்?
3 முன்மாதிரியினால் கற்பியுங்கள்: எப்படிப் பிரசங்கிப்பதென்று இயேசு தம்முடைய சீடர்களுக்கு செய்து காட்டினார். (லூக். 8:1; 1 பே. 2:21) புதிய பிரஸ்தாபியுடன் ஊழியம் செய்கிறீர்கள் என்றால் அவரால் பயன்படுத்த முடிந்த ஒர் எளிய அணுகுமுறையை முன்கூட்டியே தயார் செய்யலாம், ஒருவேளை நம்முடைய பிரசுரங்களில் வெளியான மாதிரி அணுகுமுறையைத் தயார் செய்யலாம். பிறகு, அந்தப் புதிய பிரஸ்தாபி கேட்டு பயனடைவதற்காக முதலில் ஓரிரு வீடுகளில் நாம் பேசலாம். அடுத்த வீட்டிற்கு செல்வதற்கு முன் நம்முடைய அணுகுமுறையில் அவர் என்னவெல்லாம் கவனித்தார் என்று அவரிடம் கேட்கலாம். இப்படிச் செய்வது மற்றவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவும்; அதோடு, அவர் வீட்டுக்காரரிடம் பேசிய பின்பு நாம் கொடுக்கும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவும் அவருக்குச் சுலபமாக இருக்கும்.
4. புதிய பிரஸ்தாபியின் அணுகுமுறையைக் கேட்ட பின் அவருக்கு நாம் எவ்வாறு உதவலாம்?
4 ஆலோசனைகள் கொடுங்கள்: எப்படி ஊழியம் செய்வதென்றும் இயேசு தம்முடைய சீடர்களுக்கு அறிவுரைகளை அளித்தார். (மத். 10:5-14) நீங்களும்கூட இதே விதமாக ஒரு புதிய பிரஸ்தாபிக்கு உதவலாம். அவர் வீட்டுக்காரரிடம் பேசும்போது கூர்ந்து கவனியுங்கள். ஒருவரோடு பேசிய பின்பு, புதிய பிரஸ்தாபியின் அணுகுமுறையில் சிறு குறைகள் இருந்தாலும் அவரை மனதார பாராட்டுங்கள். நீங்கள் ஓர் ஆலோசனையைக் கொடுப்பதற்கு முன் அடுத்த வீட்டிலும் அதே தவறைச் செய்கிறாரா என்று கவனிக்கலாம். ஒருவேளை அவர் படபடப்பாக இருந்ததால் அப்படிச் செய்திருக்கலாம். எல்லா பிரஸ்தாபிகளுக்கும் ஒரேவிதமான திறமைகள் இருக்காது என்பதையும், ஒரு காரியத்தை வேறு விதங்களிலும் சரியாகச் செய்யலாம் என்பதையும் மனதில் வையுங்கள்.—1 கொ. 12:4-7.
5. நீங்களே முன்வந்து ஆலோசனைக் கொடுக்கும்போது என்ன சொல்லலாம்?
5 சில சமயம் புதிய பிரஸ்தாபியே உங்களிடம் ஆலோசனைகள் கேட்கலாம். அவர் அப்படிக் கேட்காவிட்டால் நீங்களே முன்வந்து அவருக்கு உதவலாம். இதை எப்படிச் சாதுரியமாகச் செய்யலாம்? சில அனுபவமுள்ள பிரஸ்தாபிகள் இப்படிக் கேட்கிறார்கள், “நீங்க ரொம்ப நல்லா பேசினீங்க, ஆனால் நான் ஒரேயொரு யோசனை சொல்லட்டுமா?” அல்லது “இப்போ நீங்க பேசியதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?” இப்படியும் சொல்லலாம், “நான் ஊழியத்திற்கு போன புதிதில் இது . . . எனக்கு பெரிய சவாலாக இருந்தது, ஆனால், எனக்கு இது . . . ரொம்ப உதவியாக இருந்தது.” சில சமயங்களில் இருவரும் சேர்ந்து நியாயங்காட்டி பேசுதல் புத்தகத்தில் இருக்கும் ஆலோசனைகளைப் படித்துப் பார்க்கலாம். ஒரே சமயத்தில் நிறைய ஆலோசனைகளைக் கொடுத்து அவரை திணறடிப்பதற்கு பதிலாக, அவருடைய அணுகுமுறையில் ஒரு அம்சத்தை மட்டும் குறிப்பிட்டு அதில் முன்னேற ஆலோசனை கொடுக்கலாம்.
6. ஊழியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், ‘இரும்பை இரும்பு எவ்வாறு கூர்மையாக்கும்’?
6 இரும்பை இரும்பு கூர்மையாக்கும்: அனுபவமுள்ள சுவிசேஷகரான தீமோத்தேயுவை, கற்பிப்பதிலும் முன்னேற்றம் செய்வதிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்படி அப்போஸ்தலனாகிய பவுல் உற்சாகப்படுத்தினார். (1 தீ. 4:13, 15) நீங்கள் பல வருடங்களாக ஊழியத்தில் ஈடுபட்டிருந்தாலும் முன்னேற்றம் செய்வதை ஒருபோதும் நிறுத்திவிட கூடாது. அதிக அனுபவம் இல்லாதவர்களோடு ஊழியம் செய்யும்போது அவர்களிடமிருந்தும் நீங்கள் அநேக விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். திறம்பட்ட ஊழியர்களாக ஆவதற்கு முக்கியமாய்ப் புதியவர்களுக்கு அன்போடு உதவ எப்போதும் தயாராயிருங்கள்.—நீதி. 27:17, பொது மொழிபெயர்ப்பு.