கர்த்தருடைய இராப் போஜனம் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
“எவன் அபாத்திரமாய்க் [“தகுதியற்ற விதத்தில்,” NW] கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.”—1 கொரிந்தியர் 11:27.
1. இந்த 2003-ம் வருடத்தில் ஆசரிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள மிக முக்கியமான நிகழ்ச்சி எது, எப்போது அது ஆரம்பிக்கப்பட்டது?
இந்த 2003-ம் வருடத்தில் ஆசரிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள மிக முக்கியமான நிகழ்ச்சி ஏப்ரல் 16, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடைபெறும். அப்போது இயேசு கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பை அனுசரிக்க யெகோவாவின் சாட்சிகள் கூடிவருவார்கள். முந்தின கட்டுரையில் விளக்கப்பட்ட விதமாக, பொ.ச. 33, நிசான் 14-ம் தேதி இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் பஸ்கா பண்டிகையை கொண்டாடிய பின்பு இந்த ஆசரிப்பை அவர் ஆரம்பித்து வைத்தார்; இது கர்த்தருடைய இராப் போஜனம் என்றும் அழைக்கப்படுகிறது. நினைவு ஆசரிப்பு சின்னங்களான புளிப்பில்லாத அப்பம் கிறிஸ்துவின் பாவமற்ற சரீரத்தையும் சிவந்த திராட்ச ரசம் அவருடைய சிந்தப்பட்ட இரத்தத்தையும் அடையாளப்படுத்துகின்றன; சுதந்தரிக்கப்பட்ட பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதகுலத்தை மீட்க முடிந்த ஒரே பலி இதுவே.—ரோமர் 5:12; 6:23.
2. என்ன எச்சரிப்பு 1 கொரிந்தியர் 11:27-ல் கொடுக்கப்பட்டுள்ளது?
2 நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்கெடுப்பவர்கள் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பூர்வ கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய இராப் போஜனத்தை உரிய முறையில் அனுசரிக்காததை அவர்களுக்குக் கடிதம் எழுதுகையில் அப்போஸ்தலன் பவுல் தெளிவுபடுத்தினார். (1 கொரிந்தியர் 11:20-22) “எவன் அபாத்திரமாய்க் [“தகுதியற்ற விதத்தில்,” NW] கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்” என பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 11:27) இந்த வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
சிலர் தகுதியற்ற விதத்தில் அனுசரித்தார்கள்
3. கர்த்தருடைய இராப் போஜனத்தின் போது கொரிந்திய கிறிஸ்தவர்களில் அநேகர் எப்படி நடந்துகொண்டார்கள்?
3 கொரிந்திய கிறிஸ்தவர்களில் அநேகர் தகுதியற்ற விதத்தில் நினைவு ஆசரிப்பில் பங்கெடுத்தார்கள். அவர்கள் மத்தியில் பிரிவினைகள் காணப்பட்டன; கொஞ்ச காலமாக சிலர் இரவு போஜனத்தை எடுத்து வந்து கூட்டத்திற்கு முன்பு அல்லது கூட்டம் நடக்கையில் சாப்பிட்டார்கள்; பெரும்பாலும் மிதமிஞ்சி புசிக்கவும் குடிக்கவும் செய்தார்கள். அவர்கள் மனதளவிலும் ஆன்மீக ரீதியிலும் விழிப்புள்ளவர்களாக இல்லை. இதனால், ‘கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவர்களாக’ இருந்தார்கள். இரவு சாப்பாட்டை சாப்பிடாதவர்கள் பசியோடிருந்ததால் அவர்களுடைய கவனம் சிதறடிக்கப்பட்டது. ஆம், அந்த நிகழ்ச்சிக்கு உரிய மரியாதையை காட்டாமல், அதன் முக்கியத்துவத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல் அநேகர் அந்த அப்பத்திலும் திராட்சை ரசத்திலும் பங்கெடுத்தார்கள். இதனால் அவர்கள் தாங்களாகவே தண்டனை தீர்ப்பை வரவழைத்துக் கொண்டதில் ஆச்சரியமேதுமில்லை!—1 கொரிந்தியர் 11:27-34.
4, 5. சின்னங்களில் எப்போதும் பங்கெடுப்பவர்கள், தங்களையே சுயபரிசோதனை செய்துகொள்வது ஏன் அவசியம்?
4 ஒவ்வொரு வருடமும் நினைவு ஆசரிப்புக்கு முன்பாக, சின்னங்களில் எப்போதும் பங்கெடுப்பவர்கள் தங்களையே சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். இந்தக் கூட்டுப் போஜனத்தில் முறையாக கலந்துகொள்வதற்கு அவர்கள் ஆவிக்குரிய விதத்தில் திடமாக இருக்க வேண்டும். அசுத்தமாக இருக்கையில் கூட்டுப் போஜனத்தில் பங்கெடுத்த ஓர் இஸ்ரவேலன் ‘கடவுளுடைய ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டு போனான்’; அதே விதமாகவே இயேசுவின் பலிக்கு அவமரியாதை காட்டும், ஏளனம் பண்ணும் எவரும் அவ்வாறே அழிந்துபோகும் நிலையில் இருக்கிறார்.—லேவியராகமம் 7:20; எபிரெயர் 10:28-31.
5 நினைவு ஆசரிப்பை பூர்வ இஸ்ரவேலரின் கூட்டுப் போஜனத்தோடு பவுல் ஒப்பிட்டார். அதில் பங்கெடுப்பவர்கள் கிறிஸ்துவுடன் பகிர்ந்துகொள்வதாக அவர் குறிப்பிட்ட பிறகு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.” (1 கொரிந்தியர் 10:16-21) நினைவு ஆசரிப்பு சின்னங்களில் எப்போதும் பங்கெடுக்கும் ஒருவர் மோசமான பாவத்தை செய்துவிட்டால், அவர் இதை யெகோவாவிடம் அறிக்கை செய்ய வேண்டும்; மேலும் சபையிலுள்ள மூப்பர்களிடமிருந்து ஆவிக்குரிய உதவியையும் பெற வேண்டும். (நீதிமொழிகள் 28:13; யாக்கோபு 5:13-16) அவர் உண்மையிலேயே மனந்திரும்பி, மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுக்கையில் அதில் தகுதியற்ற விதத்தில் பங்கெடுக்க மாட்டார்.—லூக்கா 3:8.
உரிய மரியாதையை காட்டும் பார்வையாளர்களாக கலந்துகொள்ளுதல்
6. கர்த்தருடைய இராப் போஜனத்தில் பங்கெடுக்கும் விசேஷித்த வாய்ப்பை கடவுள் யாருக்கு ஒதுக்கியிருக்கிறார்?
6 கிறிஸ்துவின் சகோதரர்களான 1,44,000 பேரில் மீதியானோருக்கு இப்போது நன்மை செய்து வருபவர்கள் கர்த்தருடைய இராப் போஜனத்தில் பங்கெடுக்க வேண்டுமா? (மத்தேயு 25:31-40; வெளிப்படுத்துதல் 14:1) வேண்டாம். ‘கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரராக’ இருக்கும்படி கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்திருக்கும் நபர்களுக்கு மட்டுமே அந்த விசேஷித்த வாய்ப்பை ஒதுக்கியிருக்கிறார். (ரோமர் 8:14-18; 1 யோவான் 2:20) அப்படியானால், கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில் பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பு உள்ளவர்களின் நிலை என்ன? (லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 21:3, 4) இயேசுவின் உடன் சுதந்தரவாளிகளைப் போல் அவர்களுக்கு பரலோக நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதற்குரிய மரியாதையை காட்டும் பார்வையாளர்களாக அந்த நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்கிறார்கள்.—ரோமர் 6:3-5.
7. நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்கெடுக்க வேண்டுமென முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஏன் அறிந்திருந்தார்கள்?
7 முதல் நூற்றாண்டில் உண்மை கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் பல பாஷைகளில் பேசுதல் போன்ற ஆவியின் அற்புத வரங்களில் சிலவற்றை பயன்படுத்த முடிந்தது. ஆகவே அத்தகையோர் ஆவியின் அபிஷேகத்தை தாங்கள் பெற்றிருப்பதையும் நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்கெடுக்க வேண்டும் என்பதையும் எளிதாக புரிந்துகொண்டிருப்பார்கள். எனினும், இன்று ஒருவர் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவரா இல்லையா என்பதை கடவுளால் ஏவப்பட்ட இந்த வசனத்தை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கலாம்: “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.”—ரோமர் 8:14, 15.
8. மத்தேயு 13-ம் அதிகாரத்திலுள்ள ‘கோதுமை’ மற்றும் ‘களைகள்’ யாரை பிரதிநிதித்துவம் செய்கின்றன?
8 பல நூற்றாண்டுகளாக, ‘களைகள்’—பொய் கிறிஸ்தவர்கள்—நிறைந்த நிலத்தில், அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையானவர்கள் ‘கோதுமை போல’ ‘வளர்ந்தார்கள். (மத்தேயு 13:24-30, 36-43) 1870-கள் முதல் “கோதுமை” வெகு தெளிவாக வெளியே தெரிய ஆரம்பித்தது; சில வருடங்களுக்குப்பின் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ கண்காணிகளிடம் இவ்வாறு சொல்லப்பட்டது: “மூப்பர்கள், . . . பின்வரும் தேவைகளையும் நிபந்தனைகளையும் [நினைவு ஆசரிப்புக்காக] கூடிவந்திருப்போரின் முன்வைக்க வேண்டும்—(1) [கிறிஸ்துவினுடைய] இரத்தத்தின் மீது விசுவாசம்; (2) மரணம் வரை, கர்த்தருக்கும் அவருடைய சேவைக்கும் ஒப்புக்கொடுப்பது. இந்த மனநிலையுடன் ஒப்புக்கொடுத்திருக்கும் அனைவரையும் கர்த்தருடைய மரணத்தை ஆசரிப்பதில் பங்குகொள்ள வரும்படி அழைக்க வேண்டும்.”—வேதாகமத்தில் படிப்புகள் (ஆங்கிலம்), தொகுதி VI, புதிய சிருஷ்டிப்பு, பக்கம் 473.a
‘வேறே ஆடுகளுக்காக’ தேடுதல்
9. ‘திரள்கூட்டத்தாரின்’ அடையாளம் 1935-ல் எப்படி தெளிவுபடுத்தப்பட்டது, நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்கெடுத்து வந்த சிலரை இது எப்படி பாதித்தது?
9 காலப்போக்கில், கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்டவர்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் யெகோவாவின் அமைப்பு தன் கவனத்தை ஒருமுகப்படுத்த ஆரம்பித்தது. இதன் சம்பந்தமாக 1935-ல் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்பு, கடவுளுடைய மக்கள், வெளிப்படுத்துதல் 7:9-ல் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ‘திரள் கூட்டத்தாரை,’ பரலோகத்தில் உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட 1,44,000 பேர்களுடன் கூட்டுறவு கொள்ளும் இரண்டாந்தரமான ஆவிக்குரிய வகுப்பாராக, அதாவது, மணவாட்டியின் தோழிகளாக அல்லது கிறிஸ்துவின் மணவாட்டியினுடைய கூட்டாளிகளாக கருதினார்கள். (சங்கீதம் 45:14, 15; வெளிப்படுத்துதல் 7:4; 21:2, 9) ஆனால் 1935, மே 31-ம் தேதி, அ.ஐ.மா., வாஷிங்டன், டி.சி.-யில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் கொடுக்கப்பட்ட பேச்சில் ‘திரள் கூட்டம்,’ கடைசி நாட்களில் வாழும் ‘வேறே ஆடுகளையே’ குறிப்பிடுவதாக பைபிள் பூர்வமாக விளக்கப்பட்டது. (யோவான் 10:16) அந்த மாநாட்டுக்குப் பிறகு, நினைவு ஆசரிப்பு சின்னங்களில் முன்பு பங்கெடுத்து வந்த சிலர், தங்களுக்கு பரலோக நம்பிக்கை அல்ல, பூமிக்குரிய நம்பிக்கையே இருக்கிறது என்பதை புரிந்துகொண்ட பிறகு அதில் பங்கெடுப்பதை நிறுத்திவிட்டார்கள்.
10. இன்றைய ‘வேறே ஆடுகளின்’ நம்பிக்கையையும் பொறுப்புகளையும் நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்?
10 முக்கியமாக 1935 முதற்கொண்டு ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்களைத் தேடும் வேலை நடைபெறுகிறது; இவர்கள் மீட்பின் பலியில் விசுவாசம் வைக்கிறார்கள், கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள், ராஜ்ய பிரசங்க வேலையில் அபிஷேகம் செய்யப்பட்ட ‘சிறு மந்தையை’ ஆதரிக்கிறார்கள். (லூக்கா 12:32) வேறே ஆடுகளை சேர்ந்த இவர்கள் பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையைத் தவிர மற்றெல்லா அம்சங்களிலும் இன்றுள்ள ராஜ்ய சுதந்தரவாளிகளின் மீதிபேரை ஒத்திருக்கிறார்கள். பூர்வ இஸ்ரவேலில் இருந்த அந்நியர்கள் யெகோவாவை வணங்கினார்கள், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்; அதைப் போலவே இன்று வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலின் அங்கத்தினர்களுடன் சேர்ந்து நற்செய்தியைப் பிரசங்கிப்பது உட்பட கிறிஸ்தவ பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். (கலாத்தியர் 6:16) எனினும், அந்நியர்களில் யாரும் இஸ்ரவேலின் ராஜாவாகவோ, ஆசாரியராகவோ ஆக முடியாததைப் போலவே வேறே ஆடுகளை சேர்ந்த இவர்கள் யாரும் பரலோக ராஜ்யத்தை ஆளும் வகுப்பாராக இருக்க முடியாது, அல்லது ஆசாரியர்களாக சேவிக்க முடியாது.—உபாகமம் 17:15.
11. ஒருவர் முழுக்காட்டுதல் எடுத்த தேதி, அவருக்குரிய நம்பிக்கையோடு ஏன் தொடர்புடையதாக இருக்கலாம்?
11 1930-களில், பரலோக வகுப்பு முழுவதுமாக தேர்ந்தெடுக்கப்பட்டது கொஞ்சம் கொஞ்சமாக தெளிவானது. பல பத்தாண்டுகளாக, பூமிக்குரிய நம்பிக்கையுள்ள வேறே ஆடுகளை தேடும் வேலை தொடர்ந்து வருகிறது. அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் யாரேனும் ஒருவர் விசுவாசத்திலிருந்து வழுவிப் போனால், 1,44,000 என்ற எண்ணிக்கையை பூர்த்தி செய்வதற்கு, நீண்ட காலமாக கடவுளுக்கு உண்மையுடன் சேவை செய்து வரும் வேறே ஆடுகளை சேர்ந்த ஒருவரை கடவுள் ஒருவேளை தேர்ந்தெடுக்கலாம்.
ஏன் தவறான ஊகங்கள்
12. எந்த சூழ்நிலைகளில் ஒருவர் நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்கெடுப்பதை நிறுத்த வேண்டும், ஏன்?
12 தங்களுக்குப் பரலோக அழைப்பு இருப்பதைக் குறித்ததில் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த அழைப்பைப் பெறாத யாரேனும் தொடர்ந்து நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்கெடுத்து வந்திருந்தால் என்ன செய்வது? தங்களுக்கு ஒருபோதுமே பரலோக நம்பிக்கை இருக்கவில்லை என்பதை இப்போது அவர்கள் புரிந்துகொண்டால், அவர்கள் இனிமேலும் அதில் பங்கெடுக்க நிச்சயம் அவர்கள் மனசாட்சி இடங்கொடுக்காது. தனக்குப் பரலோக நம்பிக்கைக்குரிய அழைப்பு இல்லை என்பதை ஒருவர் தெரிந்திருந்தும், பரலோகத்தில் ராஜாவாகவும், ஆசாரியராகவும் சேவிக்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்டவராக தன்னைக் காட்டிக் கொண்டால் கடவுளின் தயவு அவருக்கு நிச்சயம் கிடைக்காது. (ரோமர் 9:16; வெளிப்படுத்துதல் 20:6) துணிச்சலுடன் ஆரோனின் ஆசாரிய வேலையைப் பெற விரும்பிய லேவியனாகிய கோராகை யெகோவா அழித்துப்போட்டார். (யாத்திராகமம் 28:1; எண்ணாகமம் 16:4-11, 31-35) தான் தவறுதலாக நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்கெடுத்து வந்ததாக எந்தவொரு கிறிஸ்தவராவது உணர்ந்தால் அவர் இனியும் பங்கெடுக்காமல், மனத்தாழ்மையுடன் யெகோவாவின் மன்னிப்பைப் பெற ஜெபிக்க வேண்டும்.—சங்கீதம் 19:13.
13, 14. தங்களுக்குப் பரலோக அழைப்பு இருப்பதாக சிலர் ஏன் தவறுதலாக ஊகிக்கலாம்?
13 பரலோக நம்பிக்கைக்குரிய அழைப்பைப் பெற்றிருப்பதாக சிலர் ஏன் தவறுதலாக ஊகிக்கலாம்? மணத்துணை இறந்துபோனதால் அல்லது ஏதேனும் துயரம் ஏற்பட்டதால் அவர்களுக்கு இந்தப் பூமியில் வாழப் பிடிக்காமல் இருக்கலாம். அல்லது அபிஷேகம் செய்யப்பட்டவரென சொல்லிக் கொள்ளும் ஒரு நெருங்கிய நண்பரைப் போன்று அதே எதிர்கால வாழ்க்கைக்கு இவர்களும் ஆசைப்படலாம். இந்த சிலாக்கியத்தைப் பெற மற்றவர்களை நியமிக்கும் பொறுப்பை கடவுள் யாருக்கும் தரவில்லை. மேலும், ராஜ்ய சுதந்தரவாளிகளை கடவுள் அபிஷேகம் செய்கையில் அவர் அதற்குத் தகுதியானவர் என்பதை ஏதோ ஒரு பேச்சுக் குரல் மூலமும் தெரியப்படுத்துவதில்லை.
14 நல்லவர்கள் எல்லாரும் பரலோகத்துக்குச் செல்வார்கள் என்ற பொய் மதக் கருத்தினால், தங்களுக்கும் பரலோக நம்பிக்கை இருப்பதாக சிலர் நினைத்துக்கொள்கிறார்கள். எனவே, முன்பிருந்த தவறான கருத்துக்களோ மற்ற அம்சங்களோ நம்மீது செல்வாக்கு செலுத்தாதபடி நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, சிலர் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னுடைய உணர்ச்சிகளை பாதிக்கும் மருந்துகளை நான் உபயோகிக்கிறேனா? நானும் அபிஷேகம் செய்யப்பட்டவன் என்று தவறாக முடிவெடுக்குமளவுக்கு நான் அதிக உணர்ச்சிவசப்படும் நபராக இருக்கிறேனா?’
15, 16. தாங்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்ற தவறான முடிவுக்கு சிலர் ஏன் வரலாம்?
15 சிலர் இவ்வாறு தங்களையே கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் பிரபலமடைய ஆசைப்படுகிறேனா? இப்போது அதிகாரம் செலுத்துவதற்கு அல்லது எதிர்காலத்தில் கிறிஸ்துவுடன் சுதந்தரவாளியாக இருப்பதற்கு ஆசைப்படுகிறேனா?’ முதல் நூற்றாண்டில் ராஜ்ய சுதந்தரவாளிகள் அழைக்கப்பட்டபோது, அவர்கள் அனைவருமே சபைகளில் முக்கிய பதவிகளை வகிக்கவில்லை. பரலோக அழைப்பை பெற்றவர்கள் பிரபலமடைய விரும்புகிறதில்லை அல்லது தாங்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என பெருமையடித்துக் கொள்வதில்லை. “கிறிஸ்துவின் சிந்தை” உள்ளவர்களிடம் எதிர்பார்க்கப்படும் மனத்தாழ்மையை வெளிக்காட்டுகிறார்கள்.—1 கொரிந்தியர் 2:16.
16 எக்கச்சக்கமான பைபிள் அறிவு தங்களுக்கு இருப்பதால் தாங்கள் பரலோக அழைப்பைப் பெற்றவர்கள் என்ற முடிவுக்கு சிலர் வரலாம். ஆனால் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு விசேஷித்த புரிந்துகொள்ளுதல் இருக்கிறதென சொல்வதற்கில்லை; ஏனென்றால், அபிஷேகம் செய்யப்பட்ட சிலருக்கும்கூட அறிவுரையையும் கடிந்துகொள்ளுதலையும் பவுல் கொடுக்க வேண்டியிருந்தது. (1 கொரிந்தியர் 3:1-3; எபிரெயர் 5:11-14) தம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் ஆவிக்குரிய உணவை அளிக்க கடவுள் ஓர் ஏற்பாட்டை செய்திருக்கிறார். (மத்தேயு 24:45-47) எனவே, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவராக இருப்பதால் பூமிக்குரிய நம்பிக்கை உடையவர்களைவிட தனக்கு மேம்பட்ட ஞானம் அருளப்பட்டிருப்பதாக யாரும் நினைக்கக்கூடாது. பைபிள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பது, சாட்சி கொடுப்பது, அல்லது பைபிள் பேச்சுக்கள் கொடுப்பது போன்றவற்றில் கெட்டிக்காரராக இருப்பது ஒருவர் ஆவியின் அபிஷேகம் பெற்றிருப்பதை அடையாளம் காட்டுவதில்லை. இந்த அம்சங்களில் பூமிக்குரிய நம்பிக்கை உடைய கிறிஸ்தவர்களும் கெட்டிக்காரர்கள்தான்.
17. எதன் அடிப்படையில், யாரால் ஆவியின் அபிஷேகம் செய்யப்படுகிறது?
17 பரலோக அழைப்பைப் பற்றி சகவிசுவாசி ஒருவர் கேட்டால் ஒரு மூப்பரோ முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவரோ அந்த விஷயத்தை அவருடன் கலந்துபேசலாம். எனினும், மற்றொருவருக்காக யாரும் தீர்மானம் செய்ய முடியாது. இந்த அழைப்பை உண்மையிலேயே பெற்றிருப்பவர் அப்படியொரு நம்பிக்கை தனக்கு இருக்கிறதாவென மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கி”றார்கள். (1 பேதுரு 1:23) கடவுள் தம்முடைய ஆவி, வார்த்தை ஆகியவற்றின் மூலம் பரலோக நம்பிக்கையுள்ள ‘புதுச் சிருஷ்டியாக’ ஆகும் ‘வித்துவை’ தனிப்பட்ட நபர்களில் ஊன்றியிருக்கிறார். (2 கொரிந்தியர் 5:17) யெகோவாவே அவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அபிஷேகம் செய்யப்படுதல், “விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, . . . தேவனாலேயாம்.” (ரோமர் 9:16) தனக்குப் பரலோக அழைப்பு இருப்பதை ஒருவர் எவ்வாறு நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்?
அவர்கள் நிச்சயமாயிருக்க காரணம்
18. கடவுளுடைய ஆவி, அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் ஆவியோடு எப்படி சாட்சி கொடுக்கிறது?
18 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பரலோக எதிர்பார்ப்புகள் இருப்பதை கடவுளுடைய ஆவி தரும் சாட்சி அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது. பவுல் இவ்வாறு எழுதினார்: “அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே [“ஆவிதாமே,” NW] நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார் [“சாட்சிகொடுக்கிறது,” NW]. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.” (ரோமர் 8:15-17) பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால், அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் ஆவி அதாவது முக்கிய மனப்பான்மை, யெகோவாவின் ஆவிக்குரிய பிள்ளைகளைப் பற்றி வேத வசனங்கள் சொல்கிறவற்றை தங்களுக்கு பொருத்திக் கொள்ளும்படி அவர்களைத் தூண்டுவிக்கும். (1 யோவான் 3:2) அவர்களும் தேவ குமாரர்கள்தான் என்ற உணர்வை, கடவுளுடைய ஆவி, அவர்களுக்கு கொடுக்கிறது; விசேஷமான நம்பிக்கையையும் அவர்களில் உண்டுபண்ணுகிறது. (கலாத்தியர் 4:6, 7) பரிபூரண மனிதர்களாக, குடும்பத்தாரும் நண்பர்களும் சூழ நித்திய வாழ்க்கையை பூமியில் அனுபவிப்பது அருமையிலும் அருமை, உண்மைதான்; ஆனால், கடவுள் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் நம்பிக்கை அதுவல்ல. பூமிக்குரிய ஆசாபாசங்கள் அனைத்தையும், எதிர்பார்ப்புகளையும் தியாகம் செய்யுமளவுக்கு, கடவுள் தம்முடைய ஆவியின் மூலம் அவர்களுக்குள் அவ்வளவு உறுதியான பரலோக நம்பிக்கையை வைத்திருக்கிறார்.—2 கொரிந்தியர் 5:1-5, 8; 2 பேதுரு 1:13, 14.
19. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவரின் வாழ்க்கையில் புதிய உடன்படிக்கை என்ன பங்கு வகிக்கிறது?
19 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் பரலோக நம்பிக்கையைக் குறித்து, புதிய உடன்படிக்கையின் அங்கத்தினராக இருப்பதைக் குறித்து உறுதியாக இருக்கிறார்கள். நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைக்கையில் இயேசு இதை சொன்னார்; “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” என்றார். (லூக்கா 22:20) இந்தப் புதிய உடன்படிக்கை கடவுளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. (எரேமியா 31:31-34; எபிரெயர் 12:22-24) இயேசு மத்தியஸ்தராக உள்ளார். கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தால் இந்த புதிய உடன்படிக்கை அமலுக்கு வந்தது; இது யூதர்களிலிருந்து மட்டுமல்லாமல் பிற தேசத்தாரிலிருந்தும் யெகோவாவின் பெயருக்கென ஜனங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஆபிரகாமின் ‘வித்துவினுடைய’ பாகமாக்கியிருக்கிறது. (கலாத்தியர் 3:26-29; அப்போஸ்தலர் 15:14) இந்த “நித்திய உடன்படிக்கை” ஆவிக்குரிய இஸ்ரவேலர் அனைவரும் பரலோகத்தில் அழியாமையை அனுபவிக்கும்படி உயிர்த்தெழுதல் பெறுவதை சாத்தியமாக்குகிறது.—எபிரெயர் 13:20.
20. அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடன் கிறிஸ்து என்ன உடன்படிக்கை செய்திருக்கிறார்?
20 அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தங்கள் நம்பிக்கையைக் குறித்து நிச்சயமாய் இருக்கிறார்கள். ராஜ்ய உடன்படிக்கை எனும் மற்றொரு உடன்படிக்கையும் அவர்களோடு செய்யப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவுடன் அவர்கள் பகிர்ந்துகொள்வதைப் பற்றி குறிப்பிடுகையில் இயேசு சொன்னதாவது: “எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.” (லூக்கா 22:28-30) கிறிஸ்துவுக்கும் அவருடன் ஆட்சி செய்யும் ராஜாக்களுக்கும் இடையிலான இந்த உடன்படிக்கை என்றென்றும் அமலில் இருக்கும்.—வெளிப்படுத்துதல் 22:5.
நினைவு ஆசரிப்பு காலம் —ஆசீர்வாதமிக்க காலம்
21. நினைவு ஆசரிப்பு காலத்திலிருந்து நாம் எப்படி பெரியளவில் பயனடையலாம்?
21 நினைவு ஆசரிப்பு காலத்தில் அநேக ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம். இந்தக் காலப் பகுதிக்காக அட்டவணையிடப்பட்டிருக்கும் பைபிள் வாசிப்பு பகுதியிலிருந்து பயனடையலாம். முக்கியமாக, ஜெபிப்பதற்கும், இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கை மற்றும் மரணத்தைக் குறித்து தியானிப்பதற்கும், ராஜ்ய பிரசங்க வேலையில் பங்கெடுப்பதற்கும் பொருத்தமான காலம் இதுவே. (சங்கீதம் 77:12; பிலிப்பியர் 4:6, 7) இயேசுவின் மீட்பின் பலி சம்பந்தமாக கடவுளும் கிறிஸ்துவும் காட்டிய அன்பை இந்த ஆசரிப்பே நமக்கு நினைவூட்டுகிறது. (மத்தேயு 20:28; யோவான் 3:16) இந்த ஏற்பாடு நமக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கிறது; மேலும், கிறிஸ்துவின் வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கான நம் தீர்மானத்தையும் இது பலப்படுத்தவேண்டும். (யாத்திராகமம் 34:6; எபிரெயர் 12:3) கடவுளுடைய ஊழியர்களாகவும், அவருடைய அருமை குமாரனை உண்மையுடன் பின்பற்றுகிறவர்களாகவும் இருப்போமென நாம் ஒப்புக்கொடுத்ததை நிறைவேற்றுவதற்கும் இந்த நினைவு ஆசரிப்பு நம்மை பலப்படுத்த வேண்டும்.
22. மனிதகுலத்திற்கு கடவுள் கொடுத்த அரும்பெரும் பரிசு என்ன, அதற்கு நன்றியைக் காட்ட நமக்கிருக்கும் ஒரு வழி எது?
22 யெகோவா நமக்கு எப்பேர்ப்பட்ட அருமையான பரிசுகளைக் கொடுத்திருக்கிறார்! (யாக்கோபு 1:17) நமக்கு அவருடைய வார்த்தையின் வழிநடத்துதல், அவருடைய ஆவியின் உதவி, மற்றும் நித்திய வாழ்க்கையின் எதிர்பார்ப்பு உள்ளது. கடவுள் தந்த அரும்பெரும் பரிசு இயேசுவின் பலி; இது, அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் பாவங்களுக்கும், தம்மீது விசுவாசம் வைக்கும் அனைவரின் பாவங்களுக்குமாக செலுத்தப்படுகிறது. (1 யோவான் 2:1, 2) எனவே இயேசுவின் மரணம் உங்களுக்கு எந்தளவுக்கு மதிப்புமிக்கதாக உள்ளது? கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்கும்படி 2003, ஏப்ரல் 16-ம் தேதி சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கூடிவருவதன் மூலம் உங்கள் நன்றியைக் காட்டுவீர்களா?
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, ஆனால் தற்போது அச்சிடப்படுவதில்லை.
உங்கள் பதிலென்ன?
• நினைவு ஆசரிப்பு சின்னங்களில் யார் பங்கெடுக்க வேண்டும்?
• ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தோர் உரிய மரியாதையைக் காட்டும் பார்வையாளர்களாக மட்டுமே கர்த்தருடைய இராப் போஜனத்தில் கலந்துகொள்வது ஏன்?
• கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பில் அப்பத்திலும் திராட்ச ரசத்திலும் பங்கெடுக்க வேண்டுமென அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எப்படி அறிவார்கள்?
• நினைவு ஆசரிப்பு காலம் எதை செய்வதற்கு சிறந்த காலம்?
[பக்கம் 18-ன் வரைபடம்/படங்கள்]
நினைவு ஆசரிப்புக்கு வந்தவர்கள்
லட்சங்களில்
15,597,746
150
140
13,147,201
130
120
110
100
90
80
70
60
50
4,925,643
40
30
20
10
878,303
63,146
1935 1955 1975 1995 2002
[பக்கம் 18-ன் படம்]
இந்த வருடம் கர்த்தருடைய இராப் போஜனத்திற்கு வருவீர்களா?
[பக்கம் 21-ன் படங்கள்]
பைபிளிலிருந்து கூடுதலாக வாசிக்கவும், ராஜ்ய பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்ளவும் நினைவு ஆசரிப்பு காலம் சிறந்த காலம்