“என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”
அற்புத அதிகரிப்பு—விரைவில் தேவை விரிவாக்கம்
“என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று இயேசு கிறிஸ்து கூறினார். (மத்தேயு 11:28) இது கிறிஸ்தவ சபையின் தலைவரிடமிருந்து வரும் இதயத்திற்கு இதமளிக்கும் அழைப்பு! (எபேசியர் 5:23) அந்த வார்த்தைகளை கவனமாக சிந்திக்கையில், இளைப்பாறுதலுக்கு காரணமான முக்கிய அம்சத்தை—கிறிஸ்தவ கூட்டங்களில் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடன் அனுபவிக்கும் கூட்டுறவை—நெஞ்சார நேசிக்க நாம் தவற மாட்டோம். “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” என சங்கீதக்காரன் பாடியதை நாம் மனதார ஏற்றுக்கொள்கிறோம்.—சங்கீதம் 133:1.
உண்மையில், வணக்கத்திற்காக ஒன்றுகூடும் நமது தோழர்களோடு கூட்டுறவு கொள்வதே மிகச் சிறந்த கூட்டுறவு; அங்கே நிலவும் ஆவிக்குரிய சூழல் பாதுகாப்பானது, மகிழ்ச்சி தருவது. இதன் காரணமாகவே ஓர் இளம் கிறிஸ்தவ பெண் இவ்வாறு கூறினாள்: “எந்நாளும் ஸ்கூலுக்கு போகிறேன், அது என்னை சோர்வடையவே செய்கிறது. ஆனால் கூட்டங்களோ பாலைவனச் சோலைபோல் இருக்கின்றன, அங்கு போனதும் மறுநாள் ஸ்கூலுக்கு போவதற்கு புது தெம்பு கிடைத்துவிடுகிறது.” நைஜீரியாவிலுள்ள ஓர் இளம் பெண் இவ்வாறு குறிப்பிட்டாள்: “யெகோவாவை நேசிப்பவர்களோடு நெருங்கிய கூட்டுறவு வைத்துக்கொள்வது அவரிடம் நெருங்கி வர உதவுவதை நான் கண்டிருக்கிறேன்.”
யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றம், சமுதாயத்தில் மெய் வணக்கத்திற்கு மையமாக விளங்குகிறது. பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்சம் வாரத்திற்கு இரு முறை ராஜ்ய மன்றங்களில் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அங்கு கிடைக்கும் புத்துயிரளிக்கும் கூட்டுறவிலிருந்து பயன் பெற, முடிந்தவரை விரைவிலேயே அக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு பைபிள் மாணாக்கர் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.—எபிரெயர் 10:24, 25.
ஓர் அவசரத் தேவை
இருந்தாலும், எல்லா யெகோவாவின் சாட்சிகளுக்கும் தகுந்த ஒரு ராஜ்ய மன்றம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. உலகளாவிய ராஜ்ய பிரசங்கிப்பாளர்களின் எண்ணிக்கையில் காணப்படும் அற்புத அதிகரிப்பு ஓர் அவசரத் தேவையை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக, வளர்ந்துவரும் நாடுகளில் ஆயிரக்கணக்கான ராஜ்ய மன்றங்கள் இன்னும் தேவைப்படுகின்றன.—ஏசாயா 54:2; 60:22.
உதாரணத்திற்கு, காங்கோ மக்கள் குடியரசின் தலைநகரில் 290 சபைகளுக்கு பத்து ராஜ்ய மன்றங்களே இருந்தன. அந்த நாட்டில் அநேக ராஜ்ய மன்றங்கள் ஓர் அவசரத் தேவையாக இருந்தன. அங்கோலாவில் பெரும்பாலான சபைகள் திறந்த வெளியில்தான் கூட்டங்களை நடத்துகின்றன; அதற்குக் காரணம், அங்கு சொற்ப ராஜ்ய மன்றங்களே உள்ளன. மற்ற பல நாடுகளிலும் இதுபோன்ற தேவை இருக்கிறது.
எனவே, வசதி குறைந்த நாடுகளில் ராஜ்ய மன்ற கட்டுமான வேலையில் உதவியளிப்பதற்கு 1999 முதல் ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நாடுகளில் கட்டுமான திட்டங்களை கவனித்துக் கொள்வதற்கு அனுபவமுள்ள சாட்சிகள் முன்வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் முயற்சியோடு, உள்ளூர் வாலண்டியர்களின் மனமும் கரங்களும் இணையும்போது கிடைக்கும் பலன்கள் அதிக உற்சாகமளிக்கின்றன. அதோடு, உள்ளூர் சாட்சிகளும் தாங்கள் பெறும் பயிற்சியால் நன்மை அடைகிறார்கள். இவையாவும் தங்கள் தங்கள் நாடுகளில் ராஜ்ய மன்ற கட்டுமான தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு உதவுகின்றன.
உள்ளூர் கட்டுமான முறைகளையும் பொருட்களையும் பயன்படுத்தி அதற்கேற்ப ராஜ்ய மன்றம் கட்டுவதற்கு நடைமுறை உதவி அளிக்கப்படுகிறது. இதன் நோக்கம், ராஜ்ய மன்றத்திற்கான இந்த பிரமாண்டமான தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்ல, உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ற பராமரிப்பு ஏற்பாட்டை விரிவாக்குவதுமாகும்.—2 கொரிந்தியர் 8:14, 15.
உற்சாகமூட்டும் முன்னேற்றங்கள்
வணக்கத்திற்காக இட வசதிகளை செய்து கொடுப்பதற்கு எடுக்கப்படும் இந்த முயற்சிகளின் பலன் என்ன? 2001-ம் வருட ஆரம்பத்தில் மலாவியிலிருந்து வந்த அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் உண்மையில் மனதைத் தொடுகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் இன்னும் சில ராஜ்ய மன்றங்களைக் கட்டி முடிப்போம்.” (படங்கள் 1, 2) சமீப மாதங்களில் டோகோவில் வாலண்டியர்களால் எளிய ராஜ்ய மன்றங்கள் பலவற்றை கட்ட முடிந்திருக்கிறது. (படம் 3) மனமுவந்து வேலை செய்யும் வாலண்டியர்களின் நற்செயல், மெக்ஸிகோவிலும் பிரேஸிலிலும், இன்னும் பிற நாடுகளிலும் பொருத்தமான ராஜ்ய மன்றங்களை உருவாக்க வழி செய்திருக்கிறது.
ராஜ்ய மன்றம் ஒன்று கட்டப்படும் போதுதான் யெகோவாவின் சாட்சிகளுக்கென்று நிரந்தர இடம் இருப்பதை உள்ளூர் மக்கள் அறிந்து கொள்கிறார்கள் என்பது சபைகள் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. வணக்கத்திற்காக கூடிவருவதற்கு பொருத்தமான ஓர் இடம் இல்லாத வரையில் அநேகர் யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவு கொள்ள தயக்கம் காட்டியிருப்பதாக தெரிகிறது. மலாவியிலுள்ள நஃபிசெ சபை இவ்வாறு அறிக்கை செய்கிறது: “இப்போது எங்களுக்கு ஏற்ற ஒரு ராஜ்ய மன்றம் இருக்கிறது, இதுவே சிறந்த சாட்சி கொடுக்கிறது. அதனால் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பது எளிதாக இருக்கிறது.”
பெனினில் க்ராக் சபையில் உள்ளவர்கள் ஒரு சமயத்தில் சகித்த கேலி பேச்சுக்கள் கொஞ்சநஞ்சமல்ல; ஏனென்றால் சில சர்ச் கட்டடங்களோடு ஒப்பிட அவர்களுடைய ராஜ்ய மன்றம் பழம்பாணியில் இருந்தது. (படம் 4) இப்போதோ மெய் வணக்கத்தை பிரதிநிதித்துவம் செய்கிற, எளிய, ஆனால் கண்ணியமான, சிறந்ததோர் புதிய ராஜ்ய மன்றம் அந்த சபைக்கு இருக்கிறது. (படம் 5) அந்த சபையில் 34 ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் இருந்தனர்; ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்கு சராசரியாக 73 பேர் ஆஜராயினர். ஆனால் ராஜ்ய மன்ற பிரதிஷ்டைக்கு வந்திருந்தவர்களோ 651 பேர். அவர்களில் பெரும்பாலோர் அந்த நகரத்தை சேர்ந்தவர்களே. குறுகிய காலத்திற்குள் சாட்சிகள் ஒரு மன்றத்தைக் கட்ட முடிந்ததைக் கண்டு அவர்கள் மனங்கவரப்பட்டார்கள். இந்த விஷயத்தில் ஏற்பட்டிருக்கும் கடந்த கால வளர்ச்சிகளை சிந்தித்துப் பார்த்து, ஜிம்பாப்வே கிளை அலுவலகம் இவ்வாறு எழுதியது: “புதிய ராஜ்ய மன்றத்தைக் கட்டி முடித்த ஒரு மாதத்திற்குள்ளாகவே பொதுவாக அங்கு கூடிவருபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காகிறது.”—படங்கள் 6, 7.
ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களுக்கும் அக்கறை காட்டும் ஜனங்களுக்கும் புதிய ராஜ்ய மன்றங்கள் பலவும் ஆவிக்குரிய இளைப்பாறுதல் அளிக்கும் ஸ்தலங்களாக விளங்குவதில் சந்தேகமில்லை. உக்ரேனிலுள்ள ஒரு சபை புதிய ராஜ்ய மன்றத்தை உபயோகிக்க ஆரம்பித்ததும் அங்குள்ள ஒரு சாட்சி “நாங்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம். யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு எப்படி உதவி செய்கிறார் என்பதை நாங்கள் கண்ணாரக் கண்டோம்” என கூறினார்.
[பக்கம் 10, 11-ன் பெட்டி/படங்கள்]
உயர்வாக போற்றப்படும் தாராள உதவி
உலகெங்கிலும் புதிய ராஜ்ய மன்றங்களைக் கட்டும் அவசரத் தேவையை பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அதிவேக முன்னேற்றத்தைக் கண்டு யெகோவாவின் சாட்சிகள் மெய்சிலிர்க்கிறார்கள். பல நாடுகளில் யெகோவாவை வணங்குவோரின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதால் வருங்காலத்தில் புதிய ராஜ்ய மன்றங்கள் பல கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏன், கடந்த 2001 ஊழிய ஆண்டில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 32 புதிய சபைகள் உருவாயினவே! வணக்கத்துக்காக ஒன்றுகூடி வர இப்படிப்பட்ட சபைகளுக்கு இடங்கள் தேவை.
‘முக்கியமாக, அதிக பணவசதி இல்லாத சகோதரர்கள் வாழும் நாடுகளில் புதிய ராஜ்ய மன்றங்களைக் கட்டும் இத்தகைய திட்டங்களுக்கு எவ்வாறு நிதியுதவி கிடைக்கிறது?’ என்ற கேள்வி எழலாம். கடவுளுடைய ஆதரவும் மனிதருடைய தாராள குணமுமே இதற்கான பதில்.
யெகோவா தம்முடைய வாக்குறுதிக்கு இசைவாக தமது ஊழியர்கள் மீது பரிசுத்த ஆவியை ஊற்றி, “நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்” உதவி செய்கிறார். (1 தீமோத்தேயு 6:18) ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை எல்லா விதத்திலும் ஆதரிப்பதற்கு—கிறிஸ்தவ காரியங்களுக்கு தங்களுடைய நேரத்தையும், சக்தியையும், உழைப்பையும், மற்ற வாய்ப்பு வளங்களையும் அர்ப்பணிப்பதற்கு—யெகோவாவின் சாட்சிகளை கடவுளுடைய ஆவி உந்துவிக்கிறது.
விரிவாக்கத்திற்கும் கட்டுமான பணிக்கும் பண உதவி அளிக்க சாட்சிகளையும் மற்றவர்களையும் தாராள மனப்பான்மை தூண்டுவிக்கிறது. உள்ளூர் சபையின் வழக்கமான செலவுகளை சமாளிக்க உதவி செய்வதோடு, உலகின் பிற பாகங்களில் நடைபெறும் கட்டுமான பணிக்கும் அவர்கள் நன்கொடை வழங்குகிறார்கள்.
“உலகளாவிய வேலைக்காக நன்கொடை—மத்தேயு 24:14” என எழுதப்பட்ட பெட்டிகள் ஒவ்வொரு சபையிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. தனி நபர்கள் விரும்பினால் சந்தோஷமாக அதில் நன்கொடைகள் போடலாம். (2 இராஜாக்கள் 12:9) நன்கொடை கொஞ்சமோ அதிகமோ எதுவாக இருந்தாலும் அனைத்தும் போற்றப்படுகின்றன. (மாற்கு 12:42-44) ராஜ்ய மன்ற கட்டுமான பணிகள் உட்பட, தேவைக்கேற்ப இந்த நிதிகள் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நன்கொடைகள் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட மேலாளர்கள் எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை, ஏனென்றால் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் யாருமே இல்லை.
உலகளாவிய வேலைக்கு வழங்கப்படும் நன்கொடைகள் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றனவா? நிச்சயமாகவே நிறைவேற்றுகின்றன. லைபீரியாவில்—உள்நாட்டு போரினால் சின்னாபின்னமாக்கப்பட்ட ஒரு நாட்டில்—வாழும் சாட்சிகள் பெரும்பாலோர் வேலையில்லா திண்டாட்டத்தையும் பண கஷ்டத்தையும் எதிர்ப்படுகிறார்கள் என அங்குள்ள கிளை அலுவலகம் அறிக்கை செய்கிறது. இந்த நாட்டிலுள்ள யெகோவாவின் ஜனங்களுக்கு வணக்கத்திற்குரிய பொருத்தமான இடங்கள் எவ்வாறு கிடைக்கும்? “மற்ற நாடுகளிலுள்ள சகோதரர்கள் தாராளமாக அள்ளி வழங்கும் நன்கொடைகள் இந்த வேலைக்கு ஆகும் செலவை ஈடுகட்ட பயன்படுத்தப்படும்” என அந்தக் கிளை அலுவலகம் குறிப்பிடுகிறது. “எப்பேர்ப்பட்ட ஞானமான, அன்பான ஏற்பாடு!”
தங்களுக்கு கிடைக்கும் குறைந்த வருவாயின் மத்தியிலும் உள்ளூர் சகோதரர்கள் நன்கொடை அளிக்கிறார்கள். சியர்ரா லியோன் என்ற ஆப்பிரிக்க நாடு இவ்வாறு அறிக்கை செய்கிறது: “ராஜ்ய மன்ற கட்டுமான பணியை ஆதரிக்கும் முயற்சியில் உள்ளூர் சகோதரர்கள் பக்கபலமாக இருக்கிறார்கள், தங்களுடைய உடல் உழைப்பையும், தங்களால் இயன்ற பண உதவியையும் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.”
கடைசியில், இந்தக் கட்டுமான முயற்சி யெகோவாவுக்கே துதி சேர்க்கிறது. லைபீரியாவிலுள்ள சகோதரர்கள் சந்தோஷம் பொங்க இவ்வாறு சொல்கிறார்கள்: “இந்த நாடு முழுவதிலும் வணக்கத்திற்காக பொருத்தமான கட்டடங்களைக் கட்டுவது மெய் வணக்கத்திற்கு இங்கே நிலையான இடம் இருப்பதை மக்களுக்கு காண்பிக்கும். அதோடு நம்முடைய கடவுளின் மகத்தான பெயரை மேன்மைப்படுத்தி அலங்கரிக்கும்.”