முதிர்வயதிலும்-ஆன்மீகக் கனி தருபவர்கள்
‘கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் . . . முதிர்வயதிலும் கனி தருவார்கள்.’ —சங்கீதம் 92:13, 15.
1, 2. (அ) முதுமை பெரும்பாலும் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது? (ஆ) ஆதாமிய பாவத்தால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து வேதவசனங்கள் என்ன வாக்குறுதிகளை அளிக்கின்றன?
முதுமை. இந்த வார்த்தையைக் கேட்கும்போது உங்கள் மனத்திரையில் என்னென்ன காட்சிகள் வந்துபோகின்றன? தோலில் சுருக்கம் காணப்படுவதா? காது சரியாகக் கேட்காதிருப்பதா? கைகள் தளர்ந்து கால்கள் தள்ளாடுவதா? அல்லது பிரசங்கி 12:1-7-ல் உள்ள “தீங்குநாட்கள்” பற்றிய விலாவாரியான சித்தரிப்புகளில் வேறொன்றா? இவை மட்டுமே மனக்காட்சியில் தெரிகிறதென்றால், ஒன்றை ஞாபகத்தில் வைப்பது அவசியம். அது என்னவெனில், பிரசங்கி 12-வது அதிகாரத்தில் காணப்படுகிற சித்தரிப்பு, சிருஷ்டிகராகிய யெகோவா தேவனின் கண்ணோட்டத்தில் காலங்கள் கடந்துசெல்வதைப்பற்றிச் சொல்வதில்லை; மாறாக, ஆதாமிய பாவத்தால் மனித உடலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப் பற்றியே சொல்கிறது.—ரோமர் 5:12.
2 வயது ஏறுவதே ஒரு சாபம் எனச் சொல்லிவிட முடியாது, ஏனெனில், கால ஓட்டத்தில்தானே ஒருவரது வாழ்க்கைப் பயணமும் தொடரும்! உயிருள்ள அனைத்து ஜீவிகளிடமும் எதிர்பார்க்கப்படுவது வளர்ச்சியும் முதிர்ச்சியும்தான், அல்லவா? இவ்வுலகில் பாவமும் பிற குறைபாடுகளும் ஆறாயிரம் ஆண்டுகளாக ஏற்படுத்தியிருக்கும் வடுக்கள் சீக்கிரத்தில் மறைந்துவிடும் காலம் மலரவிருக்கிறது; அதுமட்டுமின்றி, சிருஷ்டிகரின் விருப்பப்படியே முதுமையின் வலியும் மரணத்தின் வேதனையும் இல்லாத ஒரு வாழ்க்கை, கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதருக்கும் கிடைக்கப்போகிறது. (ஆதியாகமம் 1:28; வெளிப்படுத்துதல் 21:4, 5) அப்போது, ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லமாட்டார்கள்.’ (ஏசாயா 33:24) முதியவர்கள், “வாலவயது” நாட்களுக்குத் திரும்புவார்கள்; அவர்களது மாம்சம் “வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடையும்.” (யோபு 33:25) ஆனால் தற்சமயத்திற்கு, நாம் அனைவருமே ஆதாமிடமிருந்து ஆஸ்தியாகப் பெற்றுள்ள பாவத்தின் பாதிப்புகளுடன் போராட வேண்டியுள்ளது. என்றாலும், யெகோவாவின் ஊழியர்கள் முதுமையைச் சுமந்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும்போது, விசேஷ வழிகளில் நன்மை பெறுகிறார்கள்.
3. என்ன வழிகளில் கிறிஸ்தவர்கள் ‘முதிர்வயதிலும் கனிதரலாம்’?
3 ‘கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் . . . முதிர்வயதிலும் கனிதருவார்கள்’ என்று பைபிள் உறுதியளிக்கிறது. (சங்கீதம் 92:13, 15) ஆகவே, கடவுளுடைய உண்மை ஊழியர்கள் உடல் ரீதியில் தளர்ந்து போனாலும், ஆன்மீக ரீதியில் தொடர்ந்து முன்னேற்றம் காணலாம், வளர்ச்சி அடையலாம், செழித்து ஓங்கலாம். இந்த அடிப்படை உண்மையைத்தான் அடையாள அர்த்தத்தில் சங்கீதக்காரன் மேற்கண்டவாறு சொல்கிறார். பைபிளிலும் சரி தற்காலத்திலும் சரி, அநேகரது உதாரணங்கள் இதற்கு அத்தாட்சி அளிக்கின்றன.
“தேவாலயத்தை விட்டு நீங்காமல்”
4. முதியவளாய் இருந்த அன்னாள் தன் பக்தியை எவ்வாறு வெளிக்காட்டினாள், என்ன பலனைப் பெற்றாள்?
4 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அன்னாள் என்னும் தீர்க்கதரிசினியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவள் தனது 84 வயதிலும், “தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.” அவளுடைய தந்தை லேவி கோத்திரத்தான் அல்ல, ‘ஆசேர் கோத்திரத்தான்’; எனவே அன்னாள் இரவும் பகலும் ஆலயத்திலேயே வசித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால், தினந்தோறும் காலையிலிருந்து மாலைவரை ஆலயத்தில் இருப்பதற்காக அவள் எவ்வளவு முயற்சி எடுத்திருக்க வேண்டும்! என்றாலும் அவளுடைய பக்திக்குப் பலன் கிடைத்தது, அதுவும் மடி நிறைய கிடைத்தது. எப்படி? நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி யோசேப்பும் மரியாளும் குழந்தை இயேசுவை யெகோவாவுக்கென்று ஒப்புக்கொடுக்க ஆலயத்திற்கு வந்திருந்தபோது, அன்னாள் அங்கிருந்ததால் குழந்தையைக் காணும் பாக்கியத்தைப் பெற்றாள். இயேசுவைக் கண்டவுடனே, அவள் “கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக் குறித்துப் பேசினாள்.”—லூக்கா 2:22-24, 36-38; எண்ணாகமம் 18:6, 7.
5, 6. அன்னாளின் மனோபாவத்தை இன்றைய முதியோர் பலரும் என்னென்ன வழிகளில் வெளிக்காட்டுகிறார்கள்?
5 நம் மத்தியிலுள்ள முதியவர்கள் அநேகர் அன்னாளைப் போலவே இருக்கிறார்கள். எப்படி? கூட்டங்களுக்குத் தவறாமல் வருவதிலும், உண்மை வணக்கத்தின் மேம்பாட்டிற்கு உருக்கமாக ஜெபிப்பதிலும், நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் மும்முரமாக ஈடுபடுவதிலும் அவர்கள் அன்னாளைப் போலவே இருக்கிறார்கள். 80 வயதைக் கடந்த ஒரு சகோதரர் தன் மனைவியோடு கூட்டங்களுக்குத் தவறாமல் வருகிறார்; அவர் சொல்கிறார்: “கூட்டங்களுக்குச் செல்வதை நாங்கள் பழக்கமாக்கிக்கொண்டோம். வேறெங்கும் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை. கடவுளுடைய ஜனங்கள் எங்கிருக்கிறார்களோ, அங்கிருக்கவே நாங்கள் விரும்புகிறோம். அங்குதான் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்.” அனைவருக்கும் உற்சாகமளிக்கும் என்னே ஓர் அருமையான உதாரணம்!—எபிரெயர் 10:24, 25.
6 ஜீன் என்ற கிறிஸ்தவ விதவை 80 வயதைத் தாண்டியவர். அவரது கொள்கை? “கடவுளுடைய சேவையில் என்னால் செய்ய முடிந்த ஏதாவது ஒன்று இருந்தால், அதைச் செய்யவே ஆசைப்படுகிறேன்” என்று அவர் சொல்கிறார். “கஷ்டமான சூழ்நிலைகள் எனக்கு இருக்கத்தான் செய்கின்றன; இருந்தாலும், நான் கஷ்டப்படுகிறேன் என்பதற்காக எல்லாரும் கஷ்டப்பட வேண்டுமா, என்ன?” என்று மேலும் சொல்கிறார். தெம்பளிக்கும் ஆன்மீகக் கூட்டுறவை அனுபவிப்பதற்காக இவர் பிற நாடுகளுக்குச் செல்கிறார், அதில் தான் பெறுகிற மகிழ்ச்சியைக் கண்கள் ஒளிவீச விவரிக்கிறார். அவ்வாறு சமீபத்தில் ஓர் இடத்திற்குச் சென்றிருந்தபோது தன்னுடன் பயணம் செய்தவர்களிடம் அவர் கூறினதாவது: “மாட மாளிகைகளைக் கண்டு ரசித்ததெல்லாம் போதும்; இனி வெளி ஊழியத்திற்குச் செல்லவே ஆசைப்படுகிறேன்!” அப்படிச் சென்றபோது, அங்கு பேசப்படுகிற மொழி ஜீனுக்குத் தெரிந்திருக்கவில்லை; என்றாலும், பைபிள் செய்தியில் ஜனங்களுடைய ஆர்வத்தைத் தூண்ட அவரால் முடிந்தது. அதுமட்டுமல்ல, உதவி தேவைப்பட்ட ஒரு சபையோடு சேர்ந்து பல ஆண்டுகளாக அவர் ஊழியம் செய்தார்; அவருக்குத் தெரியாத ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளவும் கூட்டங்களுக்குப் போக வர இரண்டு மணிநேரம் பயணிக்கவும் வேண்டியிருந்தபோதிலும் அப்படிச் செய்தார்.
மூளைக்கு வேலை கொடுங்கள்
7. தள்ளாத வயதிலும், கடவுளோடு தனக்கிருந்த உறவைப் பலப்படுத்திக்கொள்ள மோசே எவ்வாறு ஆர்வம் காட்டினார்?
7 காலங்கள் கடந்து செல்லச் செல்ல, வாழ்க்கையில் அனுபவத்தைப் பெற முடிகிறது. (யோபு 12:12) ஆன்மீக முன்னேற்றத்தையோ அவ்வாறு காலப்போக்கில் பெற முடியாது. ஆகவே, உண்மைப் பற்றுறுதியுடன் கடவுளுக்குச் சேவை செய்கிற ஊழியர்கள், கடந்த காலத்தில் பெற்றிருந்த ஆன்மீக அறிவையே சார்ந்திருப்பதற்குப் பதிலாக, ஆண்டுகள் செல்லச் செல்ல அந்த ‘அறிவில் விருத்தியடையவே’ அரும்பாடுபடுகிறார்கள். (நீதிமொழிகள் 9:9) மோசேயின் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். யெகோவாவிடமிருந்து நியமிப்பைப் பெற்றபோது அவருக்குச் சரியாக 80 வயது. (யாத்திராகமம் 7:7) அவரது காலத்தில் அந்த வயதுவரை உயிரோடிருப்பது அபூர்வமாகவே இருந்திருக்கிறது. ஆகவேதான் அவர் இவ்வாறு எழுதினார்: ‘எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷம்.’ (சங்கீதம் 90:10) அப்படியிருந்தும், கற்றுக்கொள்ளத் தனக்கு அதிக வயதாகிவிட்டதாக மோசே கருதவேயில்லை. அவர் பல பத்தாண்டுகளாகக் கடவுளுக்குச் சேவை செய்திருந்தார், பல்வேறு பாக்கியங்களைப் பெற்றிருந்தார், வெவ்வேறு பொறுப்புகளைச் சுமந்திருந்தார்; அதற்குப் பிறகும் அவர் யெகோவாவிடம் பின்வருமாறு கெஞ்சினார்: “நான் உம்மை அறிவதற்கு . . . உம்முடைய வழியை எனக்கு அறிவியும்.” (யாத்திராகமம் 33:13) இவ்வாறு, யெகோவாவிடம் தனக்கிருந்த உறவைப் பலப்படுத்திக்கொள்ளவே மோசே எப்போதும் ஆர்வம் காட்டினார்.
8. தானியேல் 90 வயதைத் தாண்டியபோதிலும், எவ்வாறு தன் மூளைக்கு வேலை கொடுத்தார், அதனால் என்ன பலன்களைப் பெற்றார்?
8 தீர்க்கதரிசியாகிய தானியேலின் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். அவர் 90 வயதைத் தாண்டியவர் என்பதாகவே தெரிகிறது; ஆனாலும், பரிசுத்த வேதாகமத்தைக் கண்ணும் கருத்துமாய்த் தியானித்தார். ‘புத்தகங்களைப்’ படித்து அறிந்துகொண்டதாக அவர் குறிப்பிடுகையில், லேவியராகமம், ஏசாயா, எரேமியா, ஓசியா, ஆமோஸ் ஆகிய புத்தகங்களையும் சேர்த்து ஒருவேளை சொல்லியிருப்பார்; அவ்வாறு அறிந்துகொண்டதால் யெகோவாவிடம் உருக்கமாய் ஜெபிக்கும்படியாக உந்துவிக்கப்பட்டார். (தானியேல் 9:1, 2) அந்த ஜெபத்திற்கான பதிலையும் பெற்றார். எப்படி? மேசியாவின் வருகை, எதிர்காலத்தில் தூய வணக்கம் நிலைநாட்டப்படுவது ஆகியவை சம்பந்தமான தகவலைப் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் பெற்றார்.—தானியேல் 9:20-27.
9, 10. தங்கள் மூளைக்கு வேலை கொடுக்க சிலர் என்ன செய்திருக்கிறார்கள்?
9 மோசேயையும் தானியேலையும் போலவே நாமும், நம் மூளைக்கு வேலை கொடுக்க கடினமாய் முயற்சி செய்யலாம்; நம்மால் முடிந்தவரை ஆன்மீகக் காரியங்களின் மீதே கவனம் செலுத்துவதன் மூலம் அதைச் செய்யலாம். அநேகர் அப்படித்தான் செய்துவருகிறார்கள். வர்த் என்ற கிறிஸ்தவ மூப்பர் 80 வயதைத் தாண்டியவர். அவர் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் அளித்து வருகிற ஆன்மீக உணவை உடனுக்குடன் உண்டுமகிழ பெரிதும் முயற்சி எடுக்கிறார். (மத்தேயு 24:45, NW) “சத்தியத்தை நெஞ்சார நேசிக்கிறேன், சத்தியமெனும் ஒளி அதிகமதிகமாய்ப் பிரகாசிப்பதைக் கண்டு மனம் நெகிழ்கிறேன்” என்கிறார் அவர். (நீதிமொழிகள் 4:18) அவ்வாறே, முழுநேர ஊழியத்தில் 60 ஆண்டுகளுக்கும் அதிகமாகச் செலவிட்டிருக்கிற ஃபிரெட் என்பவர், சக வணக்கத்தாரோடு உரையாடுகையில் பைபிள் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேச ஆரம்பிப்பது ஆன்மீக ரீதியில் உற்சாகமளிப்பதாகக் கூறுகிறார். “பைபிள் விஷயங்களை என் மனதில் உயிரோட்டமுள்ளதாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் சொல்கிறார். “பைபிள் விஷயங்களை நம் மனதில் நன்றாகப் பதித்து, அதாவது, அவற்றை அர்த்தமுள்ளவையாக ஆக்கி, நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்களை, ‘ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தில்’ நாம் பொருத்தினால் அவை தனித்தனியே சிதறிக் கிடக்காது. மாறாக, அவை ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் அம்சமாய் அமைந்து, அனைத்தும் ஒன்றுசேர்ந்து அழகிய ஆபரணமாக ஜொலிப்பது நிச்சயம்” என்று உறுதியளிக்கிறார்.—2 தீமோத்தேயு 1:13.
10 புரிந்துகொள்வதற்குக் கஷ்டமான விஷயங்களையும் புதிய விஷயங்களையும் கற்றுக்கொள்வதற்கு முதிர்வயது ஒரு தடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 60, 70, 80 வயதைத் தாண்டிவிட்டவர்களும்கூட எழுதப் படிக்கக் கற்றிருக்கிறார்கள், அல்லது புதிய மொழிகளைக் கற்றிருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளாய் இருப்போர் சிலர் ஒரு முக்கிய நோக்கத்துடன் இவ்வாறு செய்திருக்கிறார்கள். வெவ்வேறு நாட்டிலுள்ள ஜனங்களுக்கு நற்செய்தியைச் சொல்கிற நோக்கத்துடனேயே இவ்வாறு செய்திருக்கிறார்கள். (மாற்கு 13:10) ஹாரியும் அவரது மனைவியும் போர்ச்சுகீஸ் மொழி பேசப்படுகிற பிராந்தியத்தில் உதவத் தீர்மானித்தபோது கிட்டத்தட்ட 70 வயதைத் தொட இருந்தார்கள். “வயது ஏற ஏற எந்தவொரு வேலையையும் அதிக சிரமத்துடனேயே செய்ய வேண்டியிருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்கிறார் ஹாரி. என்றாலும், உழைப்பாலும் விடாமுயற்சியாலும் அவர்களால் போர்ச்சுகீஸ் மொழியில் பைபிள் படிப்புகளை நடத்த முடிந்தது. இப்போது பல வருடங்களாக, ஹாரி தான் கற்றுக்கொண்ட புதிய மொழியிலேயே மாவட்ட மாநாட்டுப் பேச்சுகளையும் கொடுக்கிறார்.
11. உண்மையுள்ள முதியவர்களின் சாதனைகளைப்பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும்?
11 மேற்கண்ட சவால்களை ஏற்றுக்கொள்ள எல்லாருடைய சூழ்நிலையும் உடல்நிலையும் இடங்கொடுக்காது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்படியிருக்க, முதியோர் சிலரது சாதனைகளைப்பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும்? அவர்கள் செய்ததுபோலவே எல்லாரும் செய்ய வேண்டுமென்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, சபையின் உண்மையுள்ள மூப்பர்களைக் குறித்து எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது எந்த எண்ணத்தில் சொன்னாரோ, அதே எண்ணத்துடன்தான் சொல்கிறோம். அவர் எழுதினார்: “அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” (எபிரெயர் 13:7) பக்திவைராக்கியத்துக்கு உதாரணமாய்த் திகழ்ந்தவர்களைப்பற்றி நாம் நிதானமாய்ச் சிந்தித்துப் பார்க்கையில், கடவுளுக்குச் சேவை செய்ய அவர்களை உந்துவிக்கும் உறுதியான விசுவாசத்தை நாமும் பின்பற்ற ஊக்கம் பெறுவோம். இப்போது 87 வயதில் இருக்கும் ஹாரி, தன்னை உந்துவிப்பது எதுவென விளக்கும்போது இவ்வாறு சொல்கிறார்: “என் வாழ்நாளின் மீதி பாகத்தை ஞானமாகச் செலவிட விரும்புகிறேன்; யெகோவாவின் சேவையில் என்னால் முடிந்தவரையில் பிரயோஜனமான காரியங்களைச் செய்ய விரும்புகிறேன்.” முன்னர் குறிப்பிடப்பட்ட ஃபிரெட், தனது பெத்தேல் சேவையில் பரம திருப்தியைக் காண்கிறார். “யெகோவாவுக்கு மிகச் சிறந்த விதத்தில் சேவை செய்யும் வழியைக் கண்டுபிடித்து அதன்பின்னர் அதையே தொடர்ந்து செய்ய வேண்டும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
மாறிப்போன சூழ்நிலைகளிலும் மாறாத பக்தி
12, 13. தனது சூழ்நிலைகள் மாறிப்போனபோதிலும், பர்சிலா தேவபக்தியை எவ்வாறு வெளிக்காட்டினார்?
12 உடல் ரீதியில் ஏற்படும் மாற்றங்களை ஏற்று அவற்றைச் சமாளிப்பது சிரமமாக இருக்கலாம். எனினும், அப்படிப்பட்ட மாற்றங்களின் மத்தியிலும் தேவபக்தியை வெளிக்காட்ட முடியும். இதற்கு கீலேயாத்தியனாகிய பர்சிலா ஓர் அருமையான உதாரணமாகத் திகழ்கிறார். அவர் 80 வயதில் இருந்தபோது, தாவீதுக்கும் அவரோடிருந்த ஜனங்களுக்கும் அசாதாரண விதத்தில் உபசரிப்பைக் காட்டினார்; உண்ணுவதற்கு உணவும் தங்குவதற்கு இடமும் அளித்து அவர்களைப் போஷித்தார். அது, தாவீதை எதிர்த்து அப்சலோம் கலகம் செய்த சமயத்திலாகும். தாவீது எருசலேமுக்குத் திரும்பும்போது, அவரை வழியனுப்ப யோர்தான்மட்டும் பர்சிலா வந்தார். பர்சிலாவை தான் பராமரிப்பதாகச் சொல்லி அவரைத் தன்னோடேகூட எருசலேமுக்கு வரும்படி தாவீது அழைத்தார். அதற்கு பர்சிலா அளித்த பதில்? “இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; . . . புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? . . . இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.”—2 சாமுவேல் 17:27-29; 19:31-40.
13 தனது சூழ்நிலைகள் மாறிப்போனபோதிலும், யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜாவை ஆதரிக்கத் தன்னால் முடிந்தவற்றை பர்சிலா செய்தார். தன்னால் முன்புபோல் நன்றாகக் கேட்கவும் ருசிக்கவும் முடியாதபோதிலும், அதற்காக அவர் வருத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, தான் அனுபவிக்க வேண்டியவற்றை கிம்காம் அனுபவிக்கட்டுமென்று தன்னலமின்றி சிபாரிசு செய்தார்; இவ்வாறு, தன் பெருந்தன்மையை வெளிக்காட்டினார். பர்சிலாவைப் போலவே, இன்றைய முதியோர் பலரும் தன்னலமற்ற, தாராள மனப்பான்மையை வெளிக்காட்டுகிறார்கள். உண்மை வணக்கத்தை ஆதரிக்கத் தங்களால் ஆனவற்றைச் செய்கிறார்கள்; “இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” என அறிந்தவர்களாய் அப்படிச் செய்கிறார்கள். உண்மையுள்ள ஊழியர்கள் நம் மத்தியில் இருப்பது என்னே ஓர் ஆசீர்வாதம்!—எபிரெயர் 13:16.
14. தாவீதின் முதிர்வயது, எவ்வாறு சங்கீதம் 37:23-25-ல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு உணர்ச்சியைக் கூட்டுகிறது?
14 தாவீதின் வாழ்க்கைச் சூழ்நிலையும் காலங்களினூடே பலமுறை மாறியது. இருந்தாலும், பற்றுறுதியுள்ள தம் ஊழியர்கள்மீது யெகோவா காட்டுகிற அக்கறை மாறவே மாறாது என்பதை அவர் உறுதியாக நம்பினார். தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் தாவீது இயற்றிய பாடல் இன்று நம் பைபிளில் சங்கீதம் 37-ல் காணப்படுகிறது. கையில் சுரமண்டலத்தை வைத்து அதை மீட்டிக்கொண்டே தன் வாழ்வில் நடந்தவற்றை நினைத்துப் பின்வரும் பாடலைப் பாடிய தாவீதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்: “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.” (சங்கீதம் 37:23-25) ஆவியின் ஏவுதலால் இயற்றப்பட்ட இந்தச் சங்கீதத்தில் தாவீதின் வயோதிகத்தைக் குறிப்பிடுவதையும் யெகோவா பொருத்தமானதாகக் கண்டார். இது, மேற்கூறப்பட்ட தாவீதின் இதயங்கனிந்த வார்த்தைகளுக்கு எவ்வளவாய் உணர்ச்சியைக் கூட்டுகிறது!
15. சூழ்நிலைகள் மாறிவிட்டாலும் வயது ஏறிவிட்டாலும் உண்மையோடு கடவுளுக்குச் சேவை செய்ததற்கு அப்போஸ்தலனாகிய யோவான் எவ்வாறு அருமையான உதாரணமாய்த் திகழ்ந்தார்?
15 சூழ்நிலைகள் மாறிவிட்டாலும் வயது ஏறிவிட்டாலும் உண்மையோடு கடவுளுக்குச் சேவை செய்ததற்கு அப்போஸ்தலனாகிய யோவான் இன்னொரு அருமையான உதாரணம். அவர் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கடவுளுக்குச் சேவை செய்த பின்னர், ‘தேவ வசனத்தைக் குறித்துப் பேசினதற்காகவும், இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சி கொடுத்ததற்காகவும்’ பத்மு என்னும் தீவிற்கு நாடுகடத்தப்பட்டார். (வெளிப்படுத்துதல் 1:9) என்றாலும், அவருடைய வேலை முடிந்து விடவில்லை. சொல்லப்போனால், பைபிளில் யோவான் எழுதிய அனைத்துப் புத்தகங்களுமே அவரது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் எழுதப்பட்டவை. பத்மு தீவில் இருந்தபோது, அவருக்குக் காட்டப்பட்ட வெளிப்படுத்தின விசேஷத்தின் பிரமிப்பூட்டும் காட்சிகளை அவர் கவனமாக எழுத்தில் வடித்தார். (வெளிப்படுத்துதல் 1:1, 2) ரோமப் பேரரசர் நெர்வாவின் ஆட்சியின்போது அந்தத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது பொதுவான கருத்தாகும். அதன் பின்னர் பொ.ச. 98 வாக்கில், ஒருவேளை அவர் 90 அல்லது 100 வயதில் இருந்தபோது, தன் பெயர் தாங்கிய சுவிசேஷத்தையும் மூன்று கடிதங்களையும் எழுதினார்.
சகித்திருப்பதில் ஓர் அழியாப் பதிவு
16. பேசுகிற திறனை இழந்து தவிக்கிறவர்களும்கூட யெகோவாவுக்குத் தங்கள் பக்தியை எவ்வாறு வெளிக்காட்டலாம்?
16 குறைபாடுகள் வெவ்வேறு விதங்களில், வெவ்வேறு அளவுகளில் இருக்கலாம். உதாரணத்திற்கு, பேசுகிற திறனையும் இழந்து சிலர் தவிக்கிறார்கள். என்றாலும், கடவுள் தங்களிடம் காட்டிய அன்பையும் தகுதியற்ற தயவையும் அவர்கள் மறக்கவே இல்லை. அவர்களால் எல்லாவற்றையும் வாய்திறந்து பிறரிடம் சொல்ல முடியாவிட்டாலும், தங்கள் இதயத்தில் யெகோவாவிடம் இவ்வாறு சொல்கிறார்கள்: “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.” (சங்கீதம் 119:97) அதற்குப் பிரதிபலனாக யெகோவாவும், ‘அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களை’ அறிந்திருக்கிறார்; தம் வழிகளை அசட்டை செய்கிற பெரும்பாலான மனிதரிலிருந்து வித்தியாசமாயுள்ள இப்படிப்பட்டவர்களைப் பாராட்டுகிறார். (மல்கியா 3:16; சங்கீதம் 10:4) நம் இருதயத்தின் தியானமும்கூட யெகோவாவுக்குப் பிரியமாய் இருக்கிறது என்பதை அறிவது எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது!—1 நாளாகமம் 28:9; சங்கீதம் 19:14.
17. நீண்ட காலம் யெகோவாவுக்குச் சேவை செய்து வந்திருப்பவர்கள், ஈடிணையற்ற எதைச் சம்பாதித்திருக்கிறார்கள்?
17 நீண்ட காலம் யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்து வந்திருப்பவர்கள், ஈடிணையற்ற ஒன்றைச் சம்பாதித்திருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது; அதை அவர்கள் வேறெந்த விதத்திலும் பெற்றிருக்க முடியாது. அதுதான் சகித்திருப்பதில் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் அழியாப் பதிவு. “உங்கள் பொறுமையினால் [அல்லது சகிப்புத்தன்மையினால்] உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று இயேசு கூறினார். (லூக்கா 21:19) நித்திய ஜீவனைப் பெற சகிப்புத்தன்மை மிக மிக அவசியம். ‘தேவனுடைய சித்தத்தின்படி நடந்து’ அவருக்கு உண்மைப் பற்றுறுதியை வெளிக்காட்டியிருக்கிற நீங்கள், “வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப்” பெற ஆவலோடு காத்திருக்கலாம்.—எபிரெயர் 10:36.
18. (அ) முதியவர்களிடத்தில் யெகோவா எதைக் கண்டு மகிழ்கிறார்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைப்பற்றிச் சிந்திப்போம்?
18 நீங்கள் முழு ஆத்துமாவோடு யெகோவாவுக்குச் சேவை செய்தால், அது வெகு அதிகமாய் இருந்தாலும் சரி வெகு கொஞ்சமாய் இருந்தாலும் சரி, அதை அவர் பொக்கிஷமாய்ப் போற்றுகிறார். ஒருவர் முதுமை அடையும்போது அவருடைய ‘புறம்பான மனுஷனுக்கு’ என்ன நேர்ந்தாலும், ‘உள்ளான மனுஷன்’ நாளுக்குநாள் புதுப்பிக்கப்படலாம். (2 கொரிந்தியர் 4:16) நீங்கள் கடந்த காலத்தில் சாதித்திருக்கும் அனைத்துக் காரியங்களையும் யெகோவா மதிப்புமிக்கவையாகக் கருதுகிறார் என்பதில் சந்தேகமில்லை; மறுபட்சத்தில், அவருடைய பெயருக்காக இப்போது நீங்கள் செய்துவரும் காரியங்களையும் அவ்வாறே கருதுகிறார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. (எபிரெயர் 6:10) அவருடைய சேவையில் நீங்கள் காட்டுகிற உண்மைத்தன்மை எந்தளவு பலன் தரும் என்பதைப்பற்றி அடுத்த கட்டுரையில் நாம் சிந்திப்போம்.
உங்கள் பதில்?
• முதிர்வயதிலுள்ள இன்றைய கிறிஸ்தவர்களுக்கு என்ன அருமையான உதாரணத்தை அன்னாள் வைத்தாள்?
• ஒருவர் எதையெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கு முதிர்வயது ஏன் ஒரு தடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை?
• முதியோர் எவ்வாறு தொடர்ந்து தேவபக்தியை வெளிக்காட்டலாம்?
• முதியோர் தமக்குச் செய்கிற சேவையை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
[பக்கம் 23-ன் படம்]
தள்ளாத வயதில் இருந்த தானியேல், யூதாவின் சிறையிருப்புக் காலத்தை ‘புத்தகங்களைப்’ படித்து அறிந்துகொண்டார்
[பக்கம் 25-ன் படங்கள்]
முதியோர் பலரும் கூட்டங்களுக்குத் தவறாமல் வருவதிலும், நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் மும்முரமாய் ஈடுபடுவதிலும், கற்பதில் ஆர்வம் காட்டுவதிலும் உதாரணமாய்த் திகழ்கின்றனர்