நீங்கள் முன்பு சேவை செய்தவரா? மீண்டும் சேவை செய்ய முடியுமா?
கிறிஸ்தவ சபையில் முன்பு நீங்கள் பொறுப்பான ஸ்தானத்தில் இருந்தீர்களா? ஒருவேளை உதவி ஊழியராகவோ மூப்பராகவோ நீங்கள் இருந்திருக்கலாம். அல்லது, முழுநேர ஊழியராக இருந்திருக்கலாம். அப்படியானால், உங்களுடைய சேவையில் மிகுந்த சந்தோஷத்தையும் மனநிறைவையும் நீங்கள் நிச்சயம் அனுபவித்திருப்பீர்கள். என்றாலும், சில காரணங்களுக்காக இச்சேவைகளில் உங்களால் தொடர்ந்து ஈடுபட முடியாமல் போயிருக்கலாம்.
ஒருவேளை, குடும்ப அங்கத்தினர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்; அல்லது முதுமையோ சுகவீனமோ காரணமாக இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட தீர்மானத்தை எடுத்ததற்காக உங்களையே நீங்கள் நொந்துகொள்ள வேண்டியதில்லை. (1 தீ. 5:8) முதல் நூற்றாண்டைச் சேர்ந்த பிலிப்பு ஒரு மிஷனரியாகச் சேவை செய்தார்; ஆனால் பிற்பாடு, செசரியாவுக்குக் குடிமாறிச் சென்று தன் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டார். (அப். 21:8, 9) பூர்வ இஸ்ரவேலரின் ராஜாவான தாவீது முதிர் வயதில் தன் மகன் சாலொமோனைத் தனக்குப்பின் ராஜாவாக ஆட்சிசெய்ய ஏற்பாடு செய்தார். (1 இரா. 1:1, 32-35) என்றாலும், பிலிப்புவையும் தாவீதையும் யெகோவா நேசித்தார், அவர்களை உயர்வாகக் கருதினார்; இந்நாள்வரை மக்களால் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள்.
மறுபட்சத்தில், ஊழியப் பொறுப்புகள் ஏதாவது உங்களிடமிருந்து நீக்கப்பட்டிருக்கலாம். ஞானமற்ற செயல் காரணமாகவோ குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவோ அவ்வாறு நீக்கப்பட்டிருக்கலாம். (1 தீ. 3:2, 4, 10, 12) அப்படி நீக்கப்பட்டதில் கொஞ்சம்கூட நியாயமில்லை என நீங்கள் நினைத்திருக்கலாம், அதனால் ஏற்பட்ட கோபம் இந்நாள்வரை உங்கள் மனதில் குடிகொண்டிருக்கலாம்.
மீண்டும் சேவை செய்ய உங்களால் தகுதிபெற முடியும்
உங்கள் கைவிட்டுப் போன ஊழியப் பொறுப்பு, போனது போனதுதானா? இல்லை, எல்லாச் சந்தர்ப்பத்திலும் அப்படிச் சொல்லிவிட முடியாது. என்றாலும், நீங்கள் முயற்சி செய்தால் மீண்டும் சேவை செய்வதற்குத் தகுதிபெற முடியும். (1 தீ. 3:1) ஆனால், என்ன காரணத்திற்காக அப்படித் தகுதிபெற நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்? என்ன காரணத்திற்காக யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்தீர்களோ அதே காரணத்திற்காகத்தான். ஆம், யெகோவாமீதும் அவருடைய ஊழியர்கள்மீதும் உங்களுக்கு இருக்கிற அன்பினால்தான். மீண்டும் சேவை செய்வதன் மூலம் அந்த அன்பைக் காட்ட நீங்கள் முன்வந்தால், அந்தப் பொறுப்பை இழப்பதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நீங்கள் பெற்றிருக்கிற அனுபவங்களையும் திறமைகளையும் வைத்து யெகோவா உங்களைப் பயன்படுத்துவார்.
இஸ்ரவேலர்கள் தவறு செய்ததனால் யெகோவாவுக்கு விசேஷ சேவை செய்கிற பாக்கியத்தை இழந்ததையும், அதன் பிறகு யெகோவா அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் நினைவுபடுத்திப் பாருங்கள். ‘நான் யெகோவா, நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை’ என்று அவருடைய வார்த்தை சொல்கிறது. (மல். 3:6) இஸ்ரவேலர்களை யெகோவா நேசித்தார், அவர்களைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினார். உங்களையும் எதிர்காலத்தில் பயன்படுத்த விரும்புகிறார். அப்படியானால், தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்யலாம்? தேவராஜ்ய காரியங்களில் ஈடுபடுவதற்கு உங்கள் சொந்தத் திறமைகளைவிட யெகோவாவோடு உள்ள நெருங்கிய பந்தமே முக்கியம். ஆகவே, சபைப் பொறுப்புகள் அதிகம் இல்லாத இச்சமயத்திலே அந்தப் பந்தத்தைப் பலப்படுத்துவதற்குத் தீவிர கவனம் செலுத்துங்கள்.
நீங்கள் விசுவாசத்தில் ‘பலமடைவதற்கு’ ‘யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் நாட’ வேண்டும். (1 கொ. 16:13; சங். 105:4) இருதயப்பூர்வமாய் ஜெபம் செய்வது அதற்கு ஒரு வழியாகும். உங்களுடைய சூழ்நிலையைக் குறித்து யெகோவாவிடம் சொல்லும்போது, உங்கள் உணர்ச்சிகளையெல்லாம் அவரிடம் கொட்டிவிடுங்கள், அவருடைய சக்தியைத் தரும்படி கேளுங்கள். இப்படிச் செய்யும்போது, யெகோவாவிடம் நீங்கள் நெருங்கிச் செல்வீர்கள்; இதனால், விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்களாவீர்கள். (சங். 62:8; பிலி. 4:6, 13) யெகோவாவோடு உள்ள பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு அவருடைய வார்த்தையை ஆழமாகப் படிப்பது மற்றொரு வழியாகும். ஒருவேளை முன்பு தனிப்பட்ட படிப்பிலும் குடும்பப் படிப்பிலும் தவறாமல் ஈடுபடுவது உங்களுக்குச் சிரமமாய் இருந்திருக்கலாம்; ஆனால், தற்போது உங்களுக்கு கூடுதலான பொறுப்புகள் இல்லாததால், தனிப்பட்ட படிப்பிலும் குடும்பப் படிப்பிலும் அதிகமாக ஈடுபட்டு, அந்த வழக்கத்தைத் திரும்பவும் நிலைநாட்டலாம், அல்லவா?
நீங்கள் இப்போதும் யெகோவாவுக்குச் சாட்சியாகத்தான் இருக்கிறீர்கள். (ஏசா. 43:10-12) ‘கடவுளுடைய சக வேலையாட்களாக’ இருப்பது உங்களுக்குக் கிடைத்திருக்கிற ஈடிணையில்லா பாக்கியம். (1 கொ. 3:9) வெளி ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவது, யெகோவாவோடு உள்ள பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு மிக அருமையான வழியாகும்; இப்படிச் செய்வது நீங்கள் யெகோவாவோடு வைத்திருக்கிற பந்தத்தை மட்டுமல்ல உங்களோடு ஊழியம் செய்பவர்கள் யெகோவாவோடு வைத்திருக்கிற பந்தத்தையும் பலப்படுத்தும்.
உங்கள் உணர்ச்சிகளை மேற்கொள்ள. . .
ஓர் ஊழியப் பொறுப்பை நீங்கள் இழக்கும்போது உங்களுக்குள் அவமானமோ வருத்தமோ தலைதூக்கலாம். உங்கள் பக்கம் இருக்கிற நியாயத்தை எடுத்துச்சொல்ல நீங்கள் துடிக்கலாம். பொறுப்பிலுள்ள சகோதரர்கள் உங்களுடைய நியாயத்தையெல்லாம் கேட்ட பிறகும் குறிப்பிட்ட ஒரு பொறுப்புக்கு நீங்கள் இன்னும் தகுதிபெறவில்லை என நினைக்கும்போது அந்தச் சகோதரர்கள்மீது உங்களுக்குக் கோபம் வரலாம், மனக்கசப்பு ஏற்படலாம். ஆனால் அதுபோன்ற உணர்ச்சிகள், மீண்டும் தகுதிபெற முயற்சி செய்வதற்கு அல்லது கிடைத்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்குத் தடையாக இருக்கலாம். அத்தகைய உணர்ச்சிகளை மேற்கொள்ள யோபு, மனாசே, யோசேப்பு ஆகியோரின் அனுபவங்கள் எப்படி உதவுமென நாம் சிந்திப்போம்.
ஒருகாலத்தில் யோபு, மற்றவர்களின் சார்பில் யெகோவாவை அணுகியிருந்தார்; மூப்பராகவும் நியாயாதிபதியாகவும் பொறுப்பு வகித்திருந்தார். (யோபு 1:5; 29:7-17, 21-25) இப்படிக் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த அவருடைய வாழ்க்கை திடீரென்று தலைகீழாக மாறியது; தன்னுடைய சொத்துபத்துகளையும், சொந்தப் பிள்ளைகளையும், உடல் ஆரோக்கியத்தையும் இழந்தார். அதோடு, மக்கள் மத்தியில் தனக்கிருந்த பேரையும் புகழையும்கூட இழந்தார். “என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்” என்று அவர் சொன்னார்.—யோபு 30:1.
தான் ஒரு குற்றமும் செய்யவில்லை என்று யோபு நினைத்தார்; எனவே, அதைக் குறித்துக் கடவுளிடம் வாதாட விரும்பினார். (யோபு 13:15) என்றாலும், யெகோவாவுக்காகக் காத்திருக்க அவர் முடிவுசெய்தார்; இதனால் ஆசீர்வாதங்களைப் பெற்றார். அதோடு, தனக்கிருந்த எண்ணத்தை, முக்கியமாகச் சோதனைகளை அனுபவித்த சமயத்தில் தனக்கிருந்த எண்ணத்தை, மாற்றிக்கொள்ள வேண்டுமெனப் புரிந்துகொண்டார். (யோபு 40:6-8; 42:3, 6) யோபு மனத்தாழ்மையாய் இருந்ததன் காரணமாகக் கடவுளால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டார்.—யோபு 42:10-13.
நீங்கள் ஏதாவது தவறு செய்ததன் காரணமாக ஊழியப் பொறுப்புகளை இழந்திருந்தீர்கள் என்றால், ‘யெகோவாவும் கிறிஸ்தவ சகோதரர்களும் நடந்ததையெல்லாம் மறந்து என்னை மன்னித்துவிடுவார்களா?’ என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படியானால், யூதாவை அரசாண்ட மனாசேயின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மனாசே ‘யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தார்.’ (2 இரா. 21:6) என்றாலும், பிற்பாடு அவர் சாகும்வரை ராஜாவாக இருந்தார், கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். அப்படி அவர் மாறியதற்குக் காரணம் என்ன?
மனாசே தனக்குக் கொடுக்கப்பட்ட கண்டிப்பைக் காலப்போக்கில் ஏற்றுக்கொண்டார். பல முறை எச்சரிக்கப்பட்டும் அசட்டையாக இருந்த அவரைச் சங்கிலியால் கட்டி பாபிலோனுக்கு நாடுகடத்திவிடும்படி அசீரியர்கள் கையில் யெகோவா ஒப்புக்கொடுத்திருந்தார். அங்கே அவர் ‘தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினார். அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணிக்கொண்டே இருந்தார்.’ அவர் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பியதைச் செயலில் காட்டினார்; அதனால் அவரைக் கடவுள் மன்னித்தார்.—2 நா. 33:12, 13.
உண்மைதான், கைவிட்டுப்போன பொறுப்புகளெல்லாம் அவ்வளவு சீக்கிரம் திரும்ப வந்துவிடுவதில்லை. ஆனால், காலப்போக்கில் சின்னச் சின்ன பொறுப்புகள் உங்களுக்குக் கொடுக்கப்படலாம். அவற்றை ஏற்றுக்கொண்டு உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்போது கூடுதலான பொறுப்புகள் பெரும்பாலும் உங்களுக்குக் கிடைக்கும். எனினும், இவையெல்லாம் அவ்வளவு எளிதில் நடக்குமென நினைத்துவிட முடியாது. சில சமயம் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்: எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிற மனோபாவமும் விடாமுயற்சியும் நல்ல பலனைத் தரும்.
யாக்கோபின் மகன் யோசேப்பை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு 17 வயதாக இருந்தபோது அவருடைய சகோதரர்கள் கருணையே இல்லாமல் அவரை அடிமையாக விற்றுப்போட்டார்கள். (ஆதி. 37:2, 26-28) தன்னுடைய சகோதரர்களே இப்படி விற்றுப்போடுவார்கள் என்று அவர் கொஞ்சம்கூட நினைக்கவில்லை. என்றாலும், அந்தச் சூழ்நிலையை அனுசரித்துப்போக அவர் மனதாயிருந்தார்; ஆகவே, யெகோவாவுடைய ஆசீர்வாதத்தால் ‘தன் எஜமானருடைய வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பைப் பெற்றார்.’ (ஆதி. 39:2, NW) பிற்பாடு, யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டார். அந்தச் சமயத்திலும் அவர் உண்மையுள்ளவராக இருந்தார், யெகோவாவும் அவரோடே இருந்தார்; இதனால், சிறைச்சாலையில் அவரை நம்பி சில பொறுப்புகள்கூட ஒப்படைக்கப்பட்டன.—ஆதி. 39:21-23.
ஒரு நல்ல காரணத்தோடுதான் இப்படியெல்லாம் நடந்ததென்று யோசேப்பு அப்போது அறிந்திருக்கவில்லை. தன்னால் முடிந்ததை அவர் தொடர்ந்து செய்துவந்தார். அதனால்தான், வாக்குப்பண்ணப்பட்ட வித்து வரவேண்டிய வம்சாவளியைப் பாதுகாப்பதற்கு யெகோவாவால் அவரைப் பயன்படுத்த முடிந்தது. (ஆதி. 3:15; 45:5-8) யோசேப்பு வகித்தது போன்ற முக்கியமான ஒரு பங்கை நம்மில் யாருமே வகிக்கப்போவதில்லை என்பது உண்மைதான், என்றாலும், யெகோவாவைச் சேவிப்பவர்களுக்குக் கிடைக்கிற ஊழியப் பொறுப்புகளுக்குப் பின்னால் அவருடைய கரமே இருக்கிறதென்பதை பைபிளிலுள்ள இந்தப் பதிவு காட்டுகிறது. ஆகவே, யோசேப்பைப் போல நடந்துகொண்டீர்களென்றால், ஊழியப் பொறுப்புகள் தானாக உங்களைத் தேடிவரும்.
வேதனைமிக்க சூழ்நிலையிலிருந்து கற்றுக்கொள்ளுதல்
யோபு, மனாசே, யோசேப்பு ஆகிய இம்மூவரும் வேதனைமிக்க சூழ்நிலைகளை எதிர்ப்பட்டார்கள். அவர்கள் எல்லாருமே யெகோவா அனுமதித்த சூழ்நிலையை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்கள் ஒவ்வொருவருமே அவற்றிலிருந்து அருமையான பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள். அப்படியானால், நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
யெகோவா உங்களுக்கு என்ன கற்பிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். யோபு வேதனையில் தவித்துக்கொண்டிருந்தபோது, அவர் தன்னைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கிவிட்டார்; முக்கியமான விவாதங்களைப் பற்றி யோசிக்கத் தவறிவிட்டார். என்றாலும், யெகோவா அவரை அன்பாகத் திருத்திய பிறகு தன் தவறை உணர்ந்துகொண்டார். ‘என்ன பேசினேன் என்று புரியாமலேயே பேசிக்கொண்டிருந்தேன்’ என அவர் ஒத்துக்கொண்டார். (யோபு 42:3, NW) ஊழியப் பொறுப்புகள் உங்களிடமிருந்து நீக்கப்பட்டதை நினைத்து வேதனைப்படுகிற சமயத்தில், ‘உங்களைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ண வேண்டாம்; அப்படிச் செய்வது உங்களுக்குத் தெளிந்த மனம் இருப்பதை வெளிக்காட்டும்.’ (ரோ. 12:3) யெகோவா எந்த விதத்தில் உங்களைச் செதுக்கிச் சீராக்குகிறார் என்பது உங்களுக்குச் சரியாகப் புரியாமல் இருக்கலாம்.
கண்டிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். கடவுள் தன்னை அளவுக்கு மிஞ்சிக் கண்டித்ததாக மனாசே ஆரம்பத்தில் நினைத்திருக்கலாம். என்றாலும், அந்தக் கண்டிப்பை அவர் ஏற்றுக்கொண்டார், மனந்திரும்பினார், தீய வழியைவிட்டு விலகினார். உங்களுக்குக் கிடைத்த கண்டிப்பைக் குறித்து நீங்கள் எப்படி உணர்ந்தாலும் சரி, “யெகோவாவுக்குமுன் உங்களைத் தாழ்த்துங்கள், அப்போது அவர் உங்களை உயர்த்துவார்.”—யாக். 4:10; 1 பே. 5:6.
பொறுமையாகவும் மனப்பூர்வமாகவும் செயல்படுங்கள். யோசேப்பு, தான் பட்ட கஷ்டங்களை நினைத்துத் தன் சகோதரர்கள்மீது பகையையும் கசப்புணர்வையும் வளர்த்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் பகுத்துணர்வோடும் இரக்கத்தோடும் செயல்பட்டார். (ஆதி. 50:15-21) நீங்கள் ஏமாற்றம் அடைந்திருந்தால், சற்றுப் பொறுமையாக இருங்கள். யெகோவா தரும் பயிற்சியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
கிறிஸ்தவ சபையில் முன்பு நீங்கள் பொறுப்பான ஸ்தானத்தில் இருந்தீர்களா? அப்படியானால், எதிர்காலத்தில் ஊழியப் பொறுப்புகளை உங்களுக்கு அளிக்க யெகோவாவை அனுமதியுங்கள். அவரோடுள்ள பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள். பொங்கியெழும் உணர்ச்சிகளின் மத்தியில் பொறுமையையும் மனத்தாழ்மையையும் காட்டுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும் எந்தவொரு நியமிப்பையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள். அதோடு, ‘யெகோவா . . . உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்’ என்பதில் நிச்சயமாய் இருங்கள்.—சங். 84:11.
[பக்கம் 30-ன் சிறுகுறிப்பு]
உள்ளப்பூர்வமான ஜெபத்தின் மூலம் விசுவாசத்தில் பலமடையுங்கள்
[பக்கம் 31-ன் படம்]
வெளி ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவது, யெகோவாவோடு உள்ள உங்கள் பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு மிக அருமையான வழியாகும்
[பக்கம் 32-ன் படம்]
எதிர்காலத்தில் ஊழியப் பொறுப்புகளை உங்களுக்கு வழங்க யெகோவாவை அனுமதியுங்கள்