1 ராஜாக்கள்
1 தாவீது ராஜா மிகவும் வயதானவராக இருந்தார்.+ போர்வைகளைப் போர்த்தியும் அவருடைய உடல் கதகதப்பாகவில்லை. 2 அதனால் அவருடைய ஊழியர்கள், “ராஜாவே, எஜமானே, உங்களுக்காக ஒரு கன்னிப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கிறோம். அவள் உங்களுக்குப் பணிவிடை செய்து உங்களைக் கவனித்துக்கொள்ளட்டும்; உங்கள் பக்கத்தில் படுத்துக்கொள்ளட்டும். அப்போது ராஜாவே, எஜமானே, உங்களுக்குக் கதகதப்பாக இருக்கும்” என்று சொன்னார்கள். 3 ஓர் அழகிய கன்னிப்பெண்ணுக்காக இஸ்ரவேல் தேசமெங்கும் தேடி அலைந்தார்கள். கடைசியில், சூனேமைச்+ சேர்ந்த அபிஷாக்கைப்+ பார்த்து ராஜாவிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 4 அந்தப் பெண் பேரழகியாக இருந்தாள்; அவள் ராஜாவோடு இருந்து அவருக்குப் பணிவிடை செய்தாள். ஆனால், ராஜா அவளுடன் உறவுகொள்ளவில்லை.
5 இதற்கிடையே, தாவீதின் மனைவியான ஆகீத் பெற்றெடுத்த அதோனியா,+ “அடுத்த ராஜா நான்தான்!” என்று சொல்லிக்கொண்டான்; இப்படி, தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்டிக்கொண்டான். ஒரு ரதத்தை ஏற்பாடு செய்து, அந்த ரதத்தோடு சேர்ந்து வருவதற்கு குதிரைவீரர்களையும், அதன் முன்னால் ஓடுவதற்கு 50 ஆட்களையும் வைத்துக்கொண்டான்.+ 6 ஆனால், “ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய்?” என்று அவனுடைய அப்பா அவனை ஒருபோதும் கண்டிக்கவே இல்லை.* அவன் மிகவும் அழகாக இருந்தான். அவன் அப்சலோமுக்குப் பின்பு பிறந்தவன். 7 செருயாவின் மகன் யோவாபுடனும் குருவாகிய அபியத்தாருடனும்+ தன்னுடைய திட்டத்தைப் பற்றிக் கலந்துபேசினான். அவர்கள் அதோனியாவுக்கு ஆதரவு தருவதாகவும் உதவி செய்வதாகவும் சொன்னார்கள்.+ 8 ஆனால், குருவாகிய சாதோக்,+ யோய்தாவின் மகன் பெனாயா,+ நாத்தான்+ தீர்க்கதரிசி, சீமேயி,+ ரேயி, தாவீதின் மாவீரர்கள்+ ஆகியோர் அதோனியாவை ஆதரிக்கவில்லை.
9 ஒருநாள் அதோனியா, என்-ரொகேலுக்கு அருகிலிருந்த சோகெலெத் பாறைக்குப் பக்கத்தில் ஆடுமாடுகளையும் கொழுத்த கன்றுக்குட்டிகளையும் பலி கொடுத்தான்.+ தன்னுடைய சகோதரர்களான எல்லா இளவரசர்களையும் யூதாவைச் சேர்ந்த எல்லா அரசு ஊழியர்களையும் வரச் சொல்லி அழைத்திருந்தான். 10 ஆனால், நாத்தான் தீர்க்கதரிசியையோ பெனாயாவையோ தாவீதின் மாவீரர்களையோ தன்னுடைய சகோதரனாகிய சாலொமோனையோ அழைக்கவில்லை. 11 அப்போது நாத்தான்+ சாலொமோனின் அம்மா+ பத்சேபாளைச்+ சந்தித்து, “ஆகீத்தின் மகன் அதோனியா+ ராஜாவான விஷயத்தை நீங்கள் கேள்விப்படவில்லையா? இதைப் பற்றி தாவீது ராஜாவுக்குக்கூட தெரியாதாமே. 12 தயவுசெய்து நான் சொல்கிறபடி செய்யுங்கள். அப்போதுதான், உங்கள் உயிரையும் உங்கள் மகன் சாலொமோனுடைய உயிரையும் காப்பாற்ற முடியும்.+ 13 நீங்கள் தாவீது ராஜாவிடம் போய், ‘ராஜாவே, என் எஜமானே, “எனக்குப் பிறகு உன்னுடைய மகன் சாலொமோன்தான் ராஜாவாக இருப்பான், அவன்தான் என்னுடைய சிம்மாசனத்தில் உட்காருவான்” என்று இந்த அடிமைப் பெண்ணுக்குச் சத்தியம் செய்து கொடுத்தீர்களே.+ பிறகு எப்படி அதோனியா ராஜாவானான்?’ என்று கேளுங்கள். 14 நீங்கள் ராஜாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் அங்கே வந்து நீங்கள் சொன்னது உண்மைதான் என்று சொல்கிறேன்” என்றார்.
15 அதன்படி, ராஜாவின் படுக்கை அறைக்கு பத்சேபாள் போனாள். ராஜா மிகவும் வயதானவராக இருந்தார், சூனேமைச் சேர்ந்த அபிஷாக்+ அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். 16 அப்போது, ராஜாவுக்கு முன்னால் பத்சேபாள் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினாள். ராஜா அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். 17 அதற்கு அவள், “எஜமானே, ‘எனக்குப் பிறகு உன்னுடைய மகன் சாலொமோன்தான் ராஜாவாக இருப்பான், அவன்தான் என்னுடைய சிம்மாசனத்தில் உட்காருவான்’ என்று உங்கள் கடவுளான யெகோவா பெயரில் எனக்குச் சத்தியம் செய்து கொடுத்தீர்களே.+ 18 ஆனால், ராஜாவே, என் எஜமானே, உங்களுக்குத் தெரியாமல் இப்போது அதோனியா ராஜாவாகிவிட்டான்.+ 19 அவன் ஏராளமான ஆடுமாடுகளையும் கொழுத்த கன்றுக்குட்டிகளையும் பலி கொடுத்திருக்கிறான்; எல்லா இளவரசர்களையும் குருவாகிய அபியத்தாரையும் படைத் தளபதி யோவாபையும்+ அழைத்திருக்கிறான். ஆனால், உங்கள் ஊழியனான சாலொமோனை அழைக்கவில்லை.+ 20 ராஜாவே, என் எஜமானே, உங்கள் வார்த்தைக்காகத்தான் இஸ்ரவேல் தேசமே காத்திருக்கிறது. என் எஜமானாகிய உங்களுக்குப் பிறகு சிம்மாசனத்தில் உட்காரப்போவது யாரென்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். 21 இல்லாவிட்டால், நீங்கள் இறந்ததும்* நானும் என் மகனும் துரோகிகளாகத்தான் கருதப்படுவோம்” என்று சொன்னாள்.
22 ராஜாவிடம் அவள் பேசிக்கொண்டிருந்தபோதே நாத்தான் தீர்க்கதரிசி உள்ளே வந்தார்.+ 23 உடனே ராஜாவிடம், “இதோ, நாத்தான் தீர்க்கதரிசி வந்திருக்கிறார்!” என்று சொன்னார்கள். அவர் உள்ளே வந்து ராஜா முன்னால் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார். 24 பின்பு நாத்தான், “ராஜாவே, என் எஜமானே, உங்களுக்குப் பிறகு அதோனியாதான் ராஜாவாக இருப்பான், அவன்தான் உங்களுடைய சிம்மாசனத்தில் உட்காருவான் என்று எப்போதாவது சொன்னீர்களா?+ 25 இன்று அவன் எக்கச்சக்கமான ஆடுமாடுகளையும் கொழுத்த கன்றுக்குட்டிகளையும் பலி கொடுத்திருக்கிறான்.+ எல்லா இளவரசர்களையும் படைத் தலைவர்களையும் குருவாகிய அபியத்தாரையும் அழைத்திருக்கிறான்.+ அவர்கள் அவனோடு சாப்பிட்டுக் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘அதோனியா ராஜா வாழ்க!’ என்று கோஷம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். 26 ஆனால், உங்கள் ஊழியனான என்னையோ குருவாகிய சாதோக்கையோ யோய்தாவின் மகன் பெனாயாவையோ+ உங்கள் ஊழியன் சாலொமோனையோ அவன் அழைக்கவில்லை. 27 ராஜாவே, என் எஜமானே, இதையெல்லாம் செய்ய அதோனியாவுக்கு நீங்கள்தான் அதிகாரம் கொடுத்தீர்களா? அவன்தான் உங்களுக்குப் பிறகு சிம்மாசனத்தில் உட்காரப்போகிறானா? இதுவரை உங்கள் ஊழியனான என்னிடம் நீங்கள் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?” என்று கேட்டார்.
28 அதற்கு தாவீது ராஜா, “பத்சேபாளைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார். உடனே அவள் உள்ளே வந்து ராஜா முன்னால் நின்றாள். 29 அப்போது ராஜா, “எல்லா கஷ்டத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றிய உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,*+ 30 ‘எனக்குப் பிறகு உன்னுடைய மகன் சாலொமோன்தான் ராஜாவாக இருப்பான். அவன்தான் என்னுடைய சிம்மாசனத்தில் உட்காருவான்’ என்று இஸ்ரவேலின் கடவுளான யெகோவாமீது உனக்குச் சத்தியம் செய்து கொடுத்திருந்தேனே. அதை இன்று நிறைவேற்றப்போகிறேன்” என்று சொன்னார். 31 அதைக் கேட்டதும் பத்சேபாள் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கி, “தாவீது ராஜாவே, என் எஜமானே, நீங்கள் என்றென்றும் வாழ்க!” என்று சொன்னாள்.
32 உடனே தாவீது ராஜா, “குருவாகிய சாதோக்கையும் நாத்தான் தீர்க்கதரிசியையும் யோய்தாவின் மகன்+ பெனாயாவையும்+ கூப்பிடுங்கள்” என்று சொன்னார். அவர்கள் ராஜா முன்னால் வந்தார்கள். 33 ராஜா அவர்களிடம், “என் மகன் சாலொமோனை என்னுடைய கோவேறு கழுதைமேல்*+ உட்கார வைத்து கீகோனுக்குக்+ கூட்டிக்கொண்டு போங்கள். மற்ற ஊழியர்களும் உங்களோடு வரட்டும். 34 அங்கே குருவாகிய சாதோக்கும் நாத்தான் தீர்க்கதரிசியும் அவனை இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக அபிஷேகம் செய்ய வேண்டும்.+ பின்பு, ஊதுகொம்பை ஊதி, ‘சாலொமோன் ராஜா பல்லாண்டு வாழ்க!’ என்று முழங்குங்கள்.+ 35 அதன் பின்பு, அவனைத் திரும்பக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அவன் வந்து என் சிம்மாசனத்தில் உட்காருவான். எனக்குப் பதிலாக அவன் ராஜாவாக இருப்பான். அவனை இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் தலைவனாக நியமிப்பேன்” என்று சொன்னார். 36 உடனே யோய்தாவின் மகன் பெனாயா, “ஆமென்!* என்னுடைய எஜமானின் கடவுளான யெகோவாவின் விருப்பமும் அதுவாகவே இருக்கட்டும். 37 ராஜாவே, என் எஜமானே, யெகோவா உங்களோடு இருந்ததுபோல், சாலொமோனோடும் இருக்கட்டும்.+ என் எஜமானாகிய தாவீது ராஜாவின் சிம்மாசனத்தைவிட அவருடைய சிம்மாசனத்தை உயர்த்தட்டும்”+ என்று ராஜாவிடம் சொன்னார்.
38 பின்பு, குருவாகிய சாதோக்கும் நாத்தான் தீர்க்கதரிசியும் யோய்தாவின் மகன் பெனாயாவும்+ கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ புறப்பட்டுப் போய், தாவீது ராஜாவுடைய கோவேறு கழுதையின் மேல் சாலொமோனை உட்கார வைத்து கீகோனுக்குக்+ கூட்டிக்கொண்டு போனார்கள்.+ 39 குருவாகிய சாதோக் எண்ணெய் நிரப்பப்பட்ட கொம்பைக்+ கூடாரத்திலிருந்து+ எடுத்து வந்திருந்தார்; அந்த எண்ணெயை ஊற்றி சாலொமோனை அபிஷேகம் செய்தார்.+ அப்போது, அவருடன் இருந்தவர்கள் ஊதுகொம்பை ஊதினார்கள். மக்கள் எல்லாரும், “சாலொமோன் ராஜா பல்லாண்டு வாழ்க!” என்று ஆரவாரம் செய்தார்கள். 40 பின்பு, எல்லாரும் அவர் பின்னால் புல்லாங்குழல்களை ஊதிக்கொண்டும், சந்தோஷமாக ஆரவாரம் செய்துகொண்டும் போனார்கள். பூமியே அதிரும் அளவுக்கு ஆரவாரம் செய்தார்கள்.+
41 அதோனியாவும் அவனுடைய விருந்தாளிகளும் சாப்பிட்டு முடித்தபோது அந்த ஆரவாரத்தைக் கேட்டார்கள்.+ ஊதுகொம்பின் சத்தம் கேட்டதும், “ஊருக்குள் ஒரே அமளியாக இருக்கிறதே, என்ன விஷயம்?” என்று யோவாப் கேட்டார். 42 அதே நேரத்தில், குருவாகிய அபியத்தாரின் மகன் யோனத்தான்+ அங்கே வந்தார். அதோனியா அவரிடம், “உள்ளே வா, நீ நல்லவன். நல்ல செய்தியோடுதான் வந்திருப்பாய்” என்று சொன்னான். 43 அதற்கு யோனத்தான், “இல்லை! நம் எஜமானாகிய தாவீது ராஜா, சாலொமோனை ராஜாவாக்கிவிட்டார். 44 குருவாகிய சாதோக்கையும் நாத்தான் தீர்க்கதரிசியையும் யோய்தாவின் மகன் பெனாயாவையும் கிரேத்தியர்களையும் பிலேத்தியர்களையும் சாலொமோனோடு அனுப்பினார். அவர்கள் ராஜாவுடைய கோவேறு கழுதையின் மேல் சாலொமோனை உட்கார வைத்து கூட்டிக்கொண்டு போனார்கள்.+ 45 பின்பு, குருவாகிய சாதோக்கும் நாத்தான் தீர்க்கதரிசியும் கீகோனில் அவரை ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள். அங்கிருந்து சந்தோஷமாகத் திரும்பி வந்தார்கள். அதனால்தான், ஊருக்குள் ஒரே அமளியாக இருக்கிறது. அந்தச் சத்தத்தைத்தான் நீங்கள் கேட்டீர்கள். 46 அதோடு, சாலொமோன் இப்போது ராஜாவின் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். 47 அரசு ஊழியர்கள் நம்முடைய எஜமானாகிய தாவீதுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தார்கள். ‘உங்களுடைய பெயரைவிட சாலொமோனுடைய பெயருக்குக் கடவுள் இன்னும் அதிக புகழைக் கொடுக்கட்டும். உங்களுடைய சிம்மாசனத்தைவிட அவருடைய சிம்மாசனத்தை உயர்த்தட்டும்!’ என்று வாழ்த்தினார்கள். அதைக் கேட்டு ராஜா தன் படுக்கையில் இருந்தபடியே தலைவணங்கினார். 48 பின்பு ராஜா, ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்! என் வாரிசை சிம்மாசனத்தில் உட்கார வைத்து, அதைப் பார்க்கும் பாக்கியத்தை இன்று எனக்குக் கொடுத்திருக்கிறார்’ என்று சொன்னார்” என்றார்.
49 அதைக் கேட்டதும் அதோனியாவின் விருந்தாளிகள் எல்லாரும் கதிகலங்கிப்போனார்கள். உடனே அங்கிருந்து எழுந்து அவரவர் வழியில் போய்விட்டார்கள். 50 சாலொமோனை நினைத்து அதோனியா பயந்தான். அதனால், அங்கிருந்து புறப்பட்டுப் போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.+ 51 “சாலொமோன் ராஜாவை நினைத்து அதோனியா பயந்துபோயிருக்கிறான். பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறான். ‘அடியேனைக் கொல்லப்போவதில்லை என்று முதலில் சாலொமோன் ராஜா சத்தியம் செய்து தரட்டும்’ என்று சொல்கிறான்” என்ற விஷயம் சாலொமோனுக்குத் தெரிவிக்கப்பட்டது. 52 அதற்கு சாலொமோன், “அவன் ஒழுங்காக நடந்துகொண்டால், அவன் தலையில் இருக்கிற ஒரு முடிகூட கீழே விழாது. ஆனால், அவன் ஏதாவது கெட்டது செய்தால், மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது”+ என்று சொன்னார். 53 பலிபீடத்திலிருந்து அவனைக் கூட்டிக்கொண்டுவர சாலொமோன் ராஜா தன்னுடைய ஆட்களை அனுப்பினார்; பின்பு, அவன் வந்து சாலொமோன் ராஜா முன்னால் தலைவணங்கினான். அப்போது ராஜா, “நீ உன் வீட்டுக்குப் போ” என்று சொன்னார்.