“சரியான மனப்பான்மையுடையவர்கள்” செவிசாய்க்கிறார்கள்
“நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் [“முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற சரியான மனப்பான்மையுடையவர்கள்,” NW] எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.”—அப்போஸ்தலர் 13:48.
1, 2. பூமியிலுள்ள சகல தேசத்தாருக்கும் நற்செய்தி பிரசங்கிக்கப்படும் என்ற இயேசுவின் தீர்க்கதரிசனத்திற்கு ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் எவ்வாறு கீழ்ப்படிந்தார்கள்?
ராஜ்யத்தின் நற்செய்தி பூமியிலுள்ள சகல தேசத்தாருக்கும் பிரசங்கிக்கப்படும் என்று இயேசு தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்; பிரசங்கிக்கும்படியான கட்டளைக்கு ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் எவ்வாறு கீழ்ப்படிந்தார்கள் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிற விவரம் பைபிளில் அப்போஸ்தலர் புத்தகத்தில் காணப்படுகிறது. (மத். 24:14) பிரசங்கிப்பதில் அவர்கள் முழுமூச்சாக ஈடுபட்டார்கள். இதன்மூலம், அவர்களைப் பின்பற்றுகிற நம் அனைவருக்குமே நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்கள். இயேசுவின் சீஷர்கள் உள்ளார்வத்தோடு எருசலேமில் பிரசங்கித்ததால், ‘ஆசாரியர்களில் அநேகர்’ உட்பட ஆயிரக்கணக்கானோர் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர் ஆனார்கள்.—அப். 2:41; 4:4; 6:7.
2 முதல் நூற்றாண்டில் இருந்த மிஷனரிகள், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள அநேகருக்கு உதவினார்கள். உதாரணமாக, சமாரியாவுக்கு பிலிப்பு சென்று பிரசங்கித்தபோது, அநேகர் அவர் சொன்னவற்றைக் கூர்ந்து கவனித்தார்கள். (அப்போஸ்தலர் 8:5-8) பவுல் வெவ்வேறு நண்பர்களுடன் பல இடங்களுக்கு நீண்டதூரம் பயணித்தார்; சீப்புரு (சைப்ரஸ்), ஆசியா மைனரிலுள்ள பகுதிகள், மாசிடோனியா, கிரீஸ், இத்தாலி ஆகிய இடங்களில் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அவர் பிரசங்கித்த நகரங்களிலிருந்த யூதர்களிலும் கிரேக்கர்களிலும் ஏராளமானோர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். (அப். 14:1; 16:5; 17:4) கிரேத்தா தீவில் தீத்து ஊழியம் செய்தார். (தீத். 1:5) பேதுரு மும்முரமாக பாபிலோனில் ஊழியம் செய்து வந்தார்; சுமார் பொ.ச. 62-64-வாக்கில் தன்னுடைய முதல் கடிதத்தை அவர் எழுதிய சமயத்திற்குள்ளாக, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய இடங்களில் கிறிஸ்தவ ஊழியத்தைப்பற்றி அநேகர் அறிந்திருந்தார்கள். (1 பே. 1:1; 5:13) அது உண்மையில் உற்சாகமூட்டும் சம்பவங்கள் நிறைந்த காலமாய் இருந்தது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஊழியத்தில் அந்தளவு சுறுசுறுப்பாக ஈடுபட்டு வந்ததால், அவர்கள் ‘உலகத்தையே கலக்கிவிட்டதாக’ அவர்களுடைய எதிரிகள் சொன்னார்கள்.—அப். 17:6; 28:22.
3. ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள், ஊழியத்தில் என்ன பலன்களைப் பெற்றிருக்கிறார்கள், அது குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
3 இன்றும்கூட கிறிஸ்தவ சபையின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரித்திருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர அறிக்கையில் உலகெங்கும் கிடைத்திருக்கிற பலன்களைப்பற்றி வாசிக்கும்போது நீங்கள் உற்சாகமடையவில்லையா? 2007 ஊழிய ஆண்டில் ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் 60 லட்சத்திற்கும் அதிகமான பைபிள் படிப்புகளை நடத்தியிருப்பதை அறிகையில் நீங்கள் சந்தோஷப்படவில்லையா? மேலுமாக, கடந்த வருடம் இயேசு கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையைக் கவனிக்கும்போது, அதில் சுமார் ஒரு கோடி பேர் யெகோவாவின் சாட்சிகள் அல்ல என்பது தெரிகிறது. நற்செய்தியிடம் ஓரளவு ஆர்வம் இருந்ததால்தான் இந்த முக்கியமான ஆசரிப்பில் அவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் பெருமளவு ஊழியம் செய்ய வேண்டியிருப்பதை இது காட்டுகிறது.
4. யார் ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள்?
4 முதல் நூற்றாண்டில் இருந்தவர்களைப்போலவே இன்றும், “முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற சரியான மனப்பான்மையுடையவர்கள்” சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். (அப். 13:48, NW) இப்படிப்பட்டவர்களை தம்முடைய அமைப்பிற்குள் யெகோவா சேர்த்துக்கொண்டிருக்கிறார். (ஆகாய் 2:7-ஐ வாசிக்கவும்.) இந்தக் கூட்டிச் சேர்க்கும் வேலையில் முழுமையாக ஒத்துழைப்பதற்கு கிறிஸ்தவ ஊழியத்திடம் எத்தகைய மனப்பான்மை நமக்குத் தேவை?
பாரபட்சமின்றி பிரசங்கியுங்கள்
5. எத்தகையவர்கள் யெகோவாவுடன் நல்லுறவை வைத்திருக்கிறார்கள்?
5 “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல . . . எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்” என்று முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தார்கள். (அப். 10:34, 35) யெகோவாவுடன் நல்லுறவை வைத்துக்கொள்ள விரும்புகிற எவரும் இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைக்க வேண்டும். (யோவா. 3:16, 36) “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” யெகோவா விரும்புகிறார்.—1 தீ. 2:3, 4.
6. ராஜ்ய அறிவிப்பாளர்கள் என்ன செய்யக்கூடாது, ஏன்?
6 நற்செய்தியை அறிவிப்பவர்கள் இனம், சமுதாய அந்தஸ்து, தோற்றம், மதப் பின்னணி ஆகியவற்றைப் பார்த்தோ வேறெந்த காரியங்களை வைத்தோ மக்களைத் தவறாக எடைபோடவே கூடாது. இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: உங்களிடம் பாரபட்சம் காட்டாமல் பைபிள் சத்தியத்தை முதன்முதலாக உங்களிடம் ஒருவர் சொன்னதற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இல்லையா? அதனால், செவிகொடுக்கும் அனைவரிடமும் இந்த உயிர் காக்கும் செய்தியை நாம் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும்?—மத்தேயு 7:12-ஐ வாசிக்கவும்.
7. நாம் பிரசங்கிக்கும் ஆட்களைப்பற்றி தீர்ப்பு செய்வதை ஏன் தவிர்க்க வேண்டும்?
7 யெகோவா, இயேசுவை நியாயாதிபதியாக நியமித்திருக்கிறார்; எனவே, யாரையும் தீர்ப்பு செய்ய நமக்கு உரிமையில்லை. நம்மால் “[நமது] கண் கண்டபடி,” அல்லது “[நமது] காது கேட்டபடி” மட்டுமே தீர்ப்பு செய்ய முடியும். ஆனால், இயேசு அப்படியல்ல, அவர் உள்ளெண்ணங்களையும், இருதயத்தின் யோசனைகளையும் அறிந்திருக்கிறார்.—ஏசா. 11:1-5; 2 தீ. 4:1.
8, 9. (அ) கிறிஸ்தவராக ஆவதற்கு முன்னால் சவுல் எப்படிப்பட்டவராய் இருந்தார்? (ஆ) அப்போஸ்தலன் பவுலுடைய அனுபவத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
8 எல்லா விதமான மக்களும் யெகோவாவின் ஊழியர்களாக ஆகியிருக்கிறார்கள். தர்சு பட்டணத்தைச் சேர்ந்த சவுலை இதற்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்; இவர் பிற்பாடு அப்போஸ்தலன் பவுலாக மாறினார். இவர் ஒரு பரிசேயர்; கிறிஸ்தவர்களைக் கடுமையாக எதிர்த்தவர். இவர்கள் மெய் வணக்கத்தார் அல்லவென்று உறுதியாக நம்பியதால் கிறிஸ்தவ சபையில் இருந்தவர்களைத் துன்புறுத்தி வந்தார். (கலா. 1:13) மனித கண்ணோட்டத்தில், இவர் ஒரு கிறிஸ்தவராக மாறவே மாட்டாரெனத் தோன்றியிருக்கலாம். ஆனால், சவுலுடைய இருதயத்தில் இருந்த ஏதோவொரு நல்ல அம்சத்தை இயேசு பார்த்தார்; ஒரு விசேஷ பொறுப்பை நிறைவேற்ற இவரைத் தேர்ந்தெடுத்தார். அதன் காரணமாக, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் இருந்த சுறுசுறுப்பும் பக்திவைராக்கியமுமுள்ள கிறிஸ்தவர்களில் சவுலும் ஒருவரானார்.
9 அப்போஸ்தலன் பவுலுடைய அனுபவத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? நம்முடைய பிராந்தியத்திலும் நாம் சொல்கிற செய்தியை எதிர்க்கும் தொகுதியினர் இருக்கலாம். அவர்களில் யாரும் உண்மைக் கிறிஸ்தவர்களாய் ஆக மாட்டார்கள் என நாம் நினைக்கலாம். ஆனாலும், அவர்களிடம் நியாயம்காட்டிப் பேச தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். சிலசமயங்களில், ‘இவர் நிச்சயம் ஆர்வம் காட்ட மாட்டார்’ என்று நாம் சிலரைக் குறித்து முடிவுக்கு வந்திருப்போம். ஆனால், அதே ஆட்கள் ஆர்வத்தோடு சத்தியத்தைக் கேட்பார்கள். ஆகவே, எல்லாருக்கும் “இடைவிடாமல்” பிரசங்கிப்பதுதான் நம்முடைய வேலை.—அப்போஸ்தலர் 5:42-ஐ வாசிக்கவும்.
“இடைவிடாமல்” பிரசங்கிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆசீர்வாதங்கள்
10. பார்க்க முரட்டுத்தனமாய் தெரிகிறவருக்குப் பிரசங்கிக்க நாம் ஏன் தயங்கக்கூடாது? உள்ளூர் அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்கள்.
10 வெளித்தோற்றத்தைப் பார்த்து நாம் தவறான முடிவுக்கு வந்துவிடலாம். உதாரணமாக, ஈக்னாஸ்யோa என்பவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்; அப்போது இவர் தென் அமெரிக்க நாடு ஒன்றின் சிறைச்சாலையில் இருந்தார். இவர் முரட்டுத்தனமாய் நடந்துகொண்டதால் மக்கள் இவரைக் கண்டு பயந்தார்கள். சிறைக் கைதிகள் சிலர் பொருள்களைத் தயாரித்து அவற்றை சக கைதிகளிடம் விற்பார்கள். பொருளை வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தைத் தராமல் இழுத்தடித்தவர்களை மிரட்டுவதற்காக ஈக்னாஸ்யோவை அவர்கள் அனுப்புவார்கள். என்றாலும், இவர் பைபிளைப் படிப்பில் முன்னேற்றம் செய்து, கற்றவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். இந்தக் காட்டுத்தனமான மனிதர் கனிவானவராக மாறினார். இப்போது பணம் வசூலிக்க யாரும் அவரை அனுப்புவதில்லை. பைபிள் சத்தியங்களும் கடவுளுடைய பரிசுத்த ஆவியும் தன்னுடைய சுபாவத்தை அடியோடு மாற்றிவிட்டதை எண்ணி அவர் சந்தோஷப்படுகிறார். மேலும், எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் தனக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்கு முயற்சி எடுத்த ராஜ்ய அறிவிப்பாளர்களுக்கு அவர் நன்றியுள்ளவராய் இருக்கிறார்.
11. நாம் ஏன் மக்களை மறுபடியும் மறுபடியும் போய்ச் சந்திக்கிறோம்?
11 ஏற்கெனவே நற்செய்தியைக் கேட்டவர்களை நாம் மறுபடியும் மறுபடியும் போய்ச் சந்திக்கிறோம்; அவர்களுடைய சூழ்நிலைகளும் மனப்பான்மைகளும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது, அப்படி மாறியும் இருக்கின்றன என்பது இதற்கு ஒரு காரணமாகும். நாம் கடந்த முறை சந்தித்த பிறகு, அவர்கள் மோசமாக வியாதிப்பட்டிருக்கலாம், வேலையை இழந்திருக்கலாம், அன்பானவரை மரணத்தில் பறிகொடுத்திருக்கலாம். (பிரசங்கி 9:11-ஐ வாசிக்கவும்.) உலகிலுள்ள பிரச்சினைகளைப் பார்த்து, மக்கள் தங்களுடைய எதிர்காலத்தைப்பற்றி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்திருக்கலாம். இதனால், முன்பு அலட்சியமாக இருந்த, ஏன் எதிர்த்த ஒருவரும்கூட இப்போது நற்செய்திக்குச் செவிசாய்க்கலாம். எனவே, தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும்போது மற்றவர்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளத் தயங்கக் கூடாது.
12. நாம் பிரசங்கிக்கும் ஆட்களை என்ன கண்ணோட்டத்தில் நாம் பார்க்க வேண்டும், ஏன்?
12 பாகுபாடு பார்ப்பது, தீர்ப்பு செய்வது மனிதர்களின் மனப்பான்மையாக இருக்கிறது. எனினும், யெகோவா மக்களைத் தனி நபர்களாக பார்க்கிறார். நம்மிடமுள்ள நற்பண்புகளை அவர் கவனிக்கிறார். (1 சாமுவேல் 16:7-ஐ வாசிக்கவும்.) நம்முடைய ஊழியத்திலும் நாம் அதைத்தான் செய்ய வேண்டும். நாம் பிரசங்கிக்கும் அனைவரையும் நல்ல கண்ணோட்டத்தில் பார்ப்பது சிறந்த பலன்கள் தந்திருப்பதை அநேக அனுபவங்கள் காட்டுகின்றன.
13, 14. (அ) ஊழியத்தில் சந்தித்த ஒரு பெண்மணியிடம் ஒரு பயனியர் ஏன் அந்தளவு அக்கறை காட்டவில்லை? (ஆ) இந்த அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
13 கரீபியன் தீவு ஒன்றில், சாண்ட்ரா என்ற பயனியர் சகோதரி வீட்டுக்குவீடு ஊழியம் செய்தபோது ரூத் என்ற பெண்மணியைச் சந்தித்தார்; அந்தப் பெண்மணி கார்னிவல் என்ற பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடி வந்தவர். தேசிய கார்னிவல் ராணியாக அவர் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சாண்ட்ரா சொன்னதை அவர் அதிக ஆர்வத்தோடு கேட்டார். எனவே, அவருக்கு பைபிள் படிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு நடந்ததை சாண்ட்ரா இவ்வாறு சொல்கிறார்: “அவருடைய வீட்டுக்குள் நுழைந்தபோது, கார்னிவலின் போது உடுத்தும் ஆடம்பர உடையில் ரூத் இருக்கும் பெரிய புகைப்படத்தைப் பார்த்தேன். அவர் பெற்றிருந்த பரிசுகளையும் பார்த்தேன். இந்தளவுக்குப் பிரபலமாகவும், கார்னிவல் கொண்டாட்டங்களில் அதிக ஈடுபாடும் காட்டுகிற இந்தப் பெண்மணி சத்தியத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்ட மாட்டார் எனத் தப்புக்கணக்குப் போட்டுவிட்டேன். அதனால் அவருக்குப் படிப்பு நடத்துவதை நிறுத்திக்கொண்டேன்.”
14 கொஞ்ச காலத்திற்குப் பிறகு, ஒருநாள் ராஜ்ய மன்றத்திற்கு ரூத் வந்தார்; கூட்டம் முடிந்த பிறகு, “ஏன் எனக்குப் படிப்பு நடத்த வருவதில்லை” என்று சாண்ட்ராவிடம் கேட்டார். சாண்ட்ரா மன்னிப்புக் கேட்டுவிட்டு, தொடர்ந்து படிப்பை நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். ரூத் படிப்பில் வேகமாக முன்னேற்றம் செய்தார், கார்னிவல் புகைப்படங்களை வீட்டிலிருந்து அகற்றினார்; சபை காரியங்கள் அனைத்திலும் கலந்துகொண்டார், தன்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தார். தான் ஆரம்பத்தில் நினைத்தது தவறு என்பதை பிற்பாடு சாண்ட்ரா உணர்ந்தார்.
15, 16. (அ) தன்னுடைய உறவினரிடம் சாட்சி கொடுத்ததால் ஒரு பிரஸ்தாபிக்கு என்ன பலன் கிடைத்தது? (ஆ) உறவினரின் பின்னணி அவருக்கு சாட்சிகொடுப்பதை தடுத்து நிறுத்த ஏன் அனுமதிக்கக் கூடாது?
15 சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரிடம் சாட்சி கொடுத்ததில் அநேகருக்கு நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. அதுவும், சத்தியத்தைக் கேட்கவே மாட்டார்களென தோன்றியபோதிலும், அப்படிப்பட்ட உறவினர்களிடம் சாட்சி கொடுத்து பலன்களைக் கண்டிருக்கிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவிலுள்ள ஜாய்ஸ் என்ற சகோதரியின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இவருடைய தங்கையின் கணவர், வாலிப வயதிலிருந்தே சிறைச்சாலைக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். “அவர் ஒன்றுக்கும் லாயக்கற்றவர் என்று மக்கள் சொன்னார்கள்; ஏனென்றால், அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகவும், திருடனாகவும் இருந்தார், இன்னும் ஏகப்பட்ட கெட்ட பழக்கங்கள் அவருக்கு இருந்தன. இத்தகைய மோசமான சூழ்நிலைமையிலும் 37 வருடங்களாக அவருக்குச் சத்தியத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே வந்தேன்” என்று ஜாய்ஸ் கூறுகிறார். பொறுமையாய் தன் உறவினருக்கு உதவ அவர் எடுத்த முயற்சிகள் நல்ல பலன்களைத் தந்தன; இறுதியில் அவர் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்; தன்னுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தார். சமீபத்தில், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் நடந்த மாவட்ட மாநாட்டில் அவர் தனது 50-வது வயதில் முழுக்காட்டுதல் பெற்றார். “நான் ஆனந்தக் கண்ணீர் விட்டேன். நம்பிக்கை இழக்காமல் அவருக்கு சத்தியத்தைச் சொன்னதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்று ஜாய்ஸ் சொல்கிறார்.
16 உங்களுடைய உறவினர்களின் பின்னணி மோசமாக இருப்பதால் அவர்களிடம் பைபிள் சத்தியத்தைப்பற்றிப் பேச நீங்கள் தயங்கலாம். எனினும், இதன் காரணமாக, தன்னுடைய தங்கையின் கணவரிடம் சத்தியத்தைப் பற்றி பேச ஜாய்ஸ் தயக்கம் காட்டவில்லை. ஒருவருடைய இருதயத்தில் என்ன இருக்கிறதென நமக்கு எப்படித் தெரியும்? அவர் நிஜமாகவே உண்மை மதத்தைத் தேடிக்கொண்டிருக்கலாம். எனவே, அதைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுங்கள். இவ்விஷயத்தில் தயக்கம் காட்டாதீர்கள்.—நீதிமொழிகள் 3:27-ஐ வாசிக்கவும்.
பலன்தரும் பைபிள் படிப்பு கருவி
17, 18. (அ) உலகெங்குமிருந்து வரும் அறிக்கைகள் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தின் மதிப்பைப்பற்றி என்ன சொல்கின்றன? (ஆ) இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி என்ன உற்சாகம் தரும் அனுபவங்களைப் பெற்றிருக்கிறீர்கள்?
17 பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகம் பைபிள் படிப்பு நடத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது நல்மனமுள்ள அநேகர், சத்தியத்தை ஏற்றுக்கொள்ள உதவியிருக்கிறது என்பதை உலகெங்குமிருந்து வரும் அறிக்கைகள் காட்டுகின்றன. அமெரிக்காவிலுள்ள பெனீ என்ற பயனியர் சகோதரி இந்தப் புத்தகத்திலிருந்து அநேகருக்கு பைபிள் படிப்புகளை நடத்தினார். அவர்களில் இருவர் முதியவர்களுடன் இருந்தார்கள்; அவர்கள் சர்ச்சில் அதிக ஈடுபாடுள்ளவர்களாயிருந்தார்கள். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலுள்ள வேதப்பூர்வ சத்தியங்களுக்கு அவர்கள் எப்படிப் பிரதிபலிப்பார்களோவென பெனீக்கு சந்தேகமாக இருந்தது. என்றாலும், “தகவல் தெளிவாக, நியாயமாக, சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருப்பதால் இதுதான் சத்தியம் என்று உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள், அவர்கள் வாக்குவாதம் செய்யவோ கோபப்படவோ இல்லை” என்று அவர் எழுதுகிறார்.
18 பிரிட்டனில் வாழும் பாட் என்ற சகோதரி, ஆசிய நாடு ஒன்றிலிருந்து அகதியாக வந்த ஒரு பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்தினார். அந்தப் பெண்ணுடைய கணவரையும் மகன்களையும் கலகக்காரப் படையினர் இழுத்துச் சென்றுவிட்ட பிறகு, அவர் அந்த நாட்டை விட்டே வெளியேற வேண்டியதாயிற்று; பிறகு, அவர்களை அவர் பார்க்கவே இல்லை. உயிருக்குப் பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடைய வீடு தீக்கிரையானது; ஒரு கும்பலால் அவர் கற்பழிக்கப்பட்டார். இனி வாழ்ந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவருக்குப் பலமுறை ஏற்பட்டது. ஆனால், பைபிள் படிக்க ஆரம்பித்ததும் அவர் மனதில் நம்பிக்கை பிறந்தது. “பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள எளிய விளக்கங்களும் படங்களும் அவர் மனதைத் தொட்டன” என்று பாட் சொல்கிறார். அவர் வெகு விரைவில் முன்னேற்றம் செய்தார், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஆவதற்குத் தகுதி பெற்றார், அதன் பிறகு வந்த மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற விருப்பம் தெரிவித்தார். பைபிள் தரும் நம்பிக்கையைப் புரிந்துகொள்ள நல்மனமுள்ளவர்களுக்கு உதவுவது எவ்வளவு சந்தோஷம் தருகிறது!
“நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக”
19. பிரசங்க வேலை செய்வது ஏன் மிக அவசரமானது?
19 ஒவ்வொரு நாளும் கடந்துபோகையில், பிரசங்கித்து சீஷராக்கும் வேலையில் இன்னும் அவசரமாய் ஈடுபட வேண்டியிருக்கிறது. சரியான மனப்பான்மையுள்ள ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு வருடமும் நாம் பிரசங்கிக்கிற செய்தியை ஏற்றுக்கொண்டு சத்தியத்திற்கு வருகிறார்கள். இன்னும் ஆன்மீக இருளில் இருப்பவர்கள் ‘கொலையுண்ணப் போகிறார்கள்.’ ஏனெனில், ‘யெகோவாவின் மகாநாள் சமீபமாயிருக்கிறது.’—செப். 1:14, NW; நீதி. 24:11.
20. நாம் என்ன செய்யத் தீர்மானமாய் இருக்க வேண்டும்?
20 அப்படிப்பட்டவர்களுக்கு உதவ நமக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. அப்படி உதவுவதற்கு, ‘இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்த’ முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவது அவசியம். (அப். 5:42) எதிர்ப்புகள் மத்தியிலும் விடாமுயற்சியோடு இருப்பது, உங்களுடைய ‘கற்பிக்கும் திறமையை’ வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது, பாரபட்சமின்றி எல்லாருக்கும் பிரசங்கிப்பது ஆகியவற்றின்மூலம் அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல்” இருப்போமாக. ஏனெனில், நாம் தொடர்ந்து நன்மை செய்தால், கடவுளின் அங்கீகாரத்தையும், அளவில்லா ஆசீர்வாதங்களையும் பெறுவோம்.—2 தீ. 4:2; கலாத்தியர் 6:9-ஐ வாசிக்கவும்.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• நற்செய்தியை யாரெல்லாம் ஏற்றுக்கொள்கிறார்கள்?
• நம் செய்தியைக் கேட்பவர்களை நாம் ஏன் தவறாக எடைபோடக் கூடாது?
• பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தினால் என்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன?
[பக்கம் 13-ன் படங்கள்]
நல்மனமுள்ள ஆயிரக்கணக்கானோர் சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்
[பக்கம் 15-ன் படங்கள்]
அப்போஸ்தலன் பவுல் செய்த மாற்றங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 16-ன் படம்]
நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்கள் மக்களைத் தவறாக எடைபோடக் கூடாது