தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் நியு யார்க்கில்
சில வருடங்களுக்கு முன்பு சீசரும் ரோசியோவும் கலிபோர்னியாவில் ரொம்ப வசதியாக வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு இருந்தது. அவர் ஏசி, வென்டிலேஷன், ஹீட்டிங் துறையில் வேலை செய்துகொண்டு இருந்தார். ரோசியோ ஒரு டாக்டரிடம் ‘பார்ட்-டைம்’ வேலை செய்துகொண்டு இருந்தார். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. சமீபத்தில் நடந்த ஒரு விஷயம் அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அது என்னவென்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா?
அக்டோபர் 2009-ல் அமெரிக்காவில் இருக்கிற கிளை அலுவலகம், அந்த நாட்டில் இருந்த எல்லா சபைகளுக்கும் ஒரு கடிதம் எழுதியது. நியு யார்க் நகரில், வால்கில் (Wallkill) என்ற இடத்தில் இருக்கிற நம்முடைய கிளை அலுவலகக் கட்டடங்களை விரிவாக்கப் போவதாக அந்த கடிதத்தில் சொல்லி இருந்தார்கள். வால்கில்லில் தற்காலிகமாக பெத்தேல் சேவை செய்ய யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வரலாம் என்று சொல்லி இருந்தார்கள். முக்கியமாக, கட்டிடம் சம்பந்தப்பட்ட வேலைகளில் திறமைசாலிகளாக இருக்கிறவர்கள் வரலாம் என்று சொல்லி இருந்தார்கள். பெத்தேலுக்கு விண்ணப்பிக்கிற வயதை தாண்டியவர்களும் அங்கு வரலாம் என்று அந்த கடிதத்தில் சொல்லி இருந்தார்கள். இதைக் கேட்டதும் சீசரும் ரோசியோவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். “இந்த மாதிரி ஒரு வாய்ப்பு இனி எப்பவுமே எங்களுக்கு கிடைக்காது. ஏன்னா, பெத்தேல்ல சேவை செய்ற வயசை எல்லாம் நாங்க தாண்டிட்டோம். அதனால இந்த சேவைய செய்றதுக்காக நாங்க எதை வேணும்னாலும் இழக்க தயாரா இருந்தோம்” என்று அவர்கள் சொன்னார்கள். சீசரும் ரோசியோவும் அங்கு வேலை செய்வதற்காக உடனே விண்ணப்பத்தை அனுப்பினார்கள்.
ஆனால், ஒரு வருடமாகியும் கிளை அலுவலகத்தில் இருந்து அவர்களுக்கு எந்த பதிலும் வரவில்லை. இருந்தாலும் அவர்கள் சோர்ந்து போய்விடவில்லை. அவர்களுடைய குறிக்கோளை அடைய நிறைய மாற்றங்களை செய்தார்கள். முக்கியமாக, அவர்களுடைய வாழ்க்கையை எளிமை ஆக்கினார்கள். அதைப் பற்றி இப்படி சொல்கிறார்கள்: “கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடிதான் நாங்க 2,200 சதுர அடில (சுமார் 5 சென்ட்) ஒரு வீட்டை கட்டுனோம். ஆனா, நாங்க ஆசையா கட்டுன அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்துட்டு, எங்களோட கார் ஷெட்டையே (car shed) ஒரு வீடா மாத்தி, அங்க நாங்க தங்குனோம். அது வெறும் 270 சதுர அடிதான் (சுமார் அரை சென்ட்). பெத்தேல்ல இருந்து எப்போ கூப்பிட்டாலும் உடனே போறதுக்காகத்தான் இப்படி செஞ்சோம். நாங்க குடிமாறி போன அடுத்த மாசமே வால்கில்ல தற்காலிகமா சேவை செய்ய எங்களை கூப்பிட்டாங்க. நாங்க வாழ்க்கையை எளிமையாக்கின உடனேயே யெகோவா எங்களை ஆசீர்வதிச்சார்.”
பலமடங்கு ஆசீர்வாதங்கள்
சீசர்-ரோசியோவை போல் நிறைய சகோதர சகோதரிகள் நியு யார்க்கில் நடக்கிற கட்டுமான வேலைக்காக நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் வால்கில்லில் சேவை செய்கிறார்கள், மீதி பேர் வார்விக்கில் (Warwick) கட்டிக்கொண்டு இருக்கிற தலைமை அலுவலகத்தில் சேவை செய்கிறார்கள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) கல்யாணம் ஆன நிறையப் பேர் அவர்களுடைய வசதியான வீட்டை, நல்ல வேலையை, செல்ல பிராணிகளை எல்லாம் விட்டுவிட்டு யெகோவாவுக்கு சேவை செய்ய வந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் யெகோவா ஆசீர்வதித்து இருக்கிறாரா? நிச்சயமாக ஆசீர்வதித்து இருக்கிறார்!
உதாரணத்திற்கு எலக்ட்ரீஷியனாக (Electrician) இருக்கிற வே என்ற சகோதரரையும் அவருடைய மனைவி டெபோராவையும் யெகோவா எப்படி ஆசீர்வதித்தார் என்று பார்க்கலாம். அவர்கள் இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட 60 வயது இருக்கும். கான்சாஸ்ஸில் இருந்த அவர்களுடைய வீட்டையும் பொருள்களையும் விற்று வால்கில்லுக்கு குடிமாறி வந்துவிட்டார்கள். இப்போது பெத்தேலில் நடக்கிற கட்டுமான வேலையை செய்கிறார்கள்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இதற்காக அவர்கள் நிறைய மாற்றங்களை செய்தார்கள். அதனால் அவர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களுக்கு அளவே இல்லை. பெத்தேலில் கட்டட வேலை செய்வதை பற்றி டெபோரா இப்படி சொல்கிறார்: “புதிய உலகத்துல கட்டட வேலை செய்ற மாதிரி படங்களை நம்ம பத்திரிகையிலதான் பார்த்திருப்போம். ஆனா, இங்க வேலை செய்றது எனக்கு நிஜமாவே புதிய உலகத்துல வேலை செய்ற மாதிரி இருக்கு.”
வார்விக்கில் சேவை செய்வதற்காக மெல்வினும் ஷாரனும் தெற்கு கரோலினாவில் இருந்த அவர்களுடைய வீட்டையும் பொருள்களையும் விற்றார்கள். இது அவர்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் முக்கியமான இந்த வேலையை செய்வதை பெரிய பாக்கியமாக நினைக்கிறார்கள். அதைப் பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்: “நாங்க செய்ற வேலையால நம்மளோட அமைப்பு நன்மை அடையுதுனு நினைக்கும்போது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
வேலையில் இருந்து ஓய்வுபெற்ற கென்னத், கட்டடங்கள் கட்டும் வேலை செய்துகொண்டு இருந்தார். அவரும் அவருடைய மனைவி மாரீனும் 50 வயதை கடந்துவிட்டார். வார்விக்கில் வேலை செய்வதற்காக இவர்கள் கலிபோர்னியாவில் இருந்து வந்திருந்தார்கள். சபையில் இருந்த ஒரு சகோதரியிடம் அவர்களுடைய வீட்டை கவனிக்க சொல்லி கேட்டுக்கொண்டார்கள். அவருடைய வயதான அப்பாவை கவனித்துக்கொள்ள சொல்லி கென்னத் தன்னுடைய பிள்ளைகளிடமும் அண்ணனிடமும் கேட்டுக்கொண்டார். பெத்தேல் சேவைக்காக இவ்வளவு தியாகம் செய்ததை நினைத்து அவர்கள் வருத்தப்பட்டார்களா? இல்லவே இல்லை! அதைப் பற்றி அவர்கள் இப்படி சொல்கிறார்கள்: “இதனால எங்களுக்கு கிடைச்ச ஆசீர்வாதங்களுக்கு அளவே இல்லை. சில விஷயங்கள் எங்களுக்கு சவாலாதான் இருந்துச்சு. இருந்தாலும் நாங்க ரொம்ப திருப்தியான, சந்தோஷமான வாழ்க்கை வாழ்றோம். பெத்தேல் சேவை செய்ய சொல்லி மத்தவங்களையும் உற்சாகப்படுத்துறோம்.”
சவால்களை எப்படி சமாளித்தார்கள்?
இப்படி சேவை செய்ய வந்தவர்களில் நிறையப் பேர் பல சவால்களை எதிர்ப்பட்டார்கள். 60 வயதை தாண்டிய வில்லியமையும் சான்ட்ராவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பென்ஸில்வேனியாவில் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு கம்பெனி இருந்தது. (மெஷின்களுடைய உதிரி பாகங்களை செய்கிற கம்பெனி.) அந்த கம்பெனி நன்றாக ஓடிக்கொண்டு இருந்தது. அதில் 17 பேர் வேலை செய்தார்கள். வில்லியமும் சான்ட்ராவும் சின்ன வயதில் இருந்தே ஒரே சபையில்தான் இருந்தார்கள். அவர்களுடைய சொந்தக்காரர்கள் எல்லாரும் வீட்டிற்கு பக்கத்தில்தான் இருந்தார்கள். ஆனால், வால்கில்லில் சேவை செய்கிற வாய்ப்பு கிடைத்தால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு வர வேண்டுமென்று அவர்களுக்கு தெரியும். “சபை, வீடு, சொந்தக்காரங்கனு எல்லாரையும் விட்டுவிட்டு வர்றதுதான் எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என்று வில்லியம் சொல்கிறார். இதைப் பற்றி அவர்கள் யெகோவாவிடம் நன்றாக ஜெபம் செய்தார்கள், வால்கில்லுக்கு போக வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். எடுத்த முடிவை நினைத்து அவர்கள் துளியும் கவலைப்படவில்லை. வில்லியம் சொல்கிறார்: “பெத்தேல் குடும்பத்தோட சேர்ந்து வால்கில்ல வேலை செய்றப்போ கிடைக்கிற சந்தோஷத்தை எதோடும் ஒப்பிட முடியாது. முன்னாடி இருந்ததைவிட இப்பதான் நாங்க ரெண்டுபேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்!”
ஹவாய் தீவில் இருந்த ரிக்கி கட்டுமான வேலையில் புராஜக்ட் மேனேஜராக இருந்தார். வார்விக்கில் வேலை செய்ய ரிக்கிக்கு கிளை அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர் அங்கு போய் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய மனைவி கேன்ரா ஆசைப்பட்டார். ஆனால், அவர்களுடைய 11 வயது மகனை நினைத்துத்தான் ரொம்ப கவலைப்பட்டார்கள். நியு யார்க்கிற்கு குடிமாறி போவது சரியாக இருக்குமா, அங்கு அவர்களுடைய மகன் ஜேக்கப் சந்தோஷமாக இருப்பானா என்று யோசித்தார்கள்.
“கடவுளுடைய சேவையில் சுறுசுறுப்பாக இருக்கிற பிள்ளைகளோடுதான் ஜேக்கப் பழக வேண்டுமென்று ஆசைப்பட்டோம். அந்த மாதிரி பையன்கள் இருக்கிற ஒரு சபைக்கு போக நினைச்சோம்” என்று ரிக்கி சொல்கிறார். ஆனால், அவர்கள் நினைத்த மாதிரி நடக்கவில்லை. அவர்கள் போன சபையில், சின்ன பிள்ளைகள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள், ஆனால், பெத்தேலில் வேலை செய்கிறவர்கள்தான் நிறையப் பேர் இருந்தார்கள். ரிக்கி சொல்கிறார்: “நாங்க முதல் முறையா கூட்டங்களுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் ஜேக்கப்கிட்ட, ‘உன் வயசுல இருக்கிற பசங்க யாரும் இந்த சபையில இல்லயே, பரவாயில்லையா’ என்று கேட்டோம். அதற்கு ஜேக்கப், ‘கவலைப்படாதீங்க அப்பா, அங்கதான் பெத்தேல்ல வேலை செய்ற நிறைய அண்ணன்கள் இருக்காங்களே’னு சொன்னான்.”
ஜேக்கப் சொன்ன மாதிரியே சபையில் இருந்த இளம் பெத்தேல் சகோதரர்கள் அவனுக்கு ஃபிரெண்ட்ஸ் ஆனார்கள். அதனால் ஜேக்கப் நன்றாக முன்னேற்றம் செய்தான். ரிக்கி சொல்கிறார்: “ஒருநாள் ராத்திரி நான் அவன் ரூம் பக்கம் போனப்போ லைட் இன்னும் எரிஞ்சுக்கிட்டு இருந்ததை பார்த்தேன். ஏதாவது வீடியோ கேம்ஸ்தான் விளையாடிட்டு இருப்பான்னு நினைச்சு ரூமுக்குள்ள போனா அவன் பைபிள் படிச்சுட்டு இருந்தான்! என்ன செஞ்சுட்டு இருக்கேன்னு கேட்டப்போ ஜேக்கப் சொன்னான்: ‘அப்பா, நானும் ஒரு பெத்தெலைட்! அவங்கள மாதிரியே ஒரே வருஷத்துல முழு பைபிளையும் படிச்சு முடிக்க போறேன்’னு சொன்னான்.” அதை கேட்டு ரிக்கிக்கும் கேன்ராவுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் இப்படி குடிமாறி வந்ததால்தான் ரிக்கியால் வார்விக்கில் வேலை செய்ய முடிந்தது. அவர்களுடைய மகனும் யெகோவாவிடம் நெருங்கிப் போக முடிந்தது. அதை நினைத்து ரிக்கியும் கேன்ராவும் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள்.—நீதி. 22:6.
எதிர்காலத்தை நினைத்து அவர்கள் கவலைப்படவில்லை
வார்விக்கிலும் வால்கில்லிலும் நடக்கிற வேலை சில வருடங்களில் முடிந்துவிடும். அங்கு வேலை செய்ய வந்தவர்களுக்கும் அவர்களுடைய வேலை கொஞ்ச நாளுக்குத்தான் என்று நன்றாகத் தெரியும். ஆனால், அதற்கு பிறகு என்ன செய்வோம் என்று நினைத்து அவர்கள் கவலைப்படுகிறார்களா? நிச்சயமாக இல்லை! ப்ளோரிடாவில் இருந்து வந்த இரண்டு தம்பதிகள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். வார்விக்கில் கட்டுமான வேலையில் மேனேஜராக இருக்கிற ஜானும் அவருடைய மனைவி கார்மெனும் சொல்வதை கவனியுங்கள்: “எங்களோட தேவைகளை எல்லாம் யெகோவா இன்னைக்கு வரைக்கும் கவனிச்சுக்கிறார். அவரோட வேலையை செய்றதுக்குத்தான் எங்களை கூட்டிட்டு வந்திருக்கார். வேலை முடிஞ்சதும் எங்களை அப்படியே ‘அம்போ’னு விட்டுட மாட்டார்.” (சங். 119:116) வால்கில் கட்டடங்களில் நெருப்பு அணைக்கிற கருவிகளை வடிவமைக்கிற வேலையை லூயீசும் அவருடைய மனைவி கீன்யாவும் செய்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள்: “எங்களுக்கு தேவையானதை எல்லாம் யெகோவா தாராளமா கொடுக்குறார். இங்க வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் என்ன செய்வோம், எங்க போவோம்னு எல்லாம் எங்களுக்கு தெரியாது. ஆனா, யெகோவா எங்களை கவனிச்சுக்குவார்னு மட்டும் நல்லா தெரியும்.” இவர்களைப் போலத்தான் நிறையப் பேர் நினைக்கிறார்கள்.—சங். 34:10; 37:25.
‘இடம்கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோ’
நியு யார்க்கில் கட்டுமான வேலைக்காக வந்த நிறையப் பேர் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி இங்கு வராமலேயே இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. அவர்கள் செய்கிற தியாகங்களை யெகோவா ஆசீர்வதிப்பாரா இல்லையா என்று அவர்கள் சோதித்துப் பார்த்தார்கள். அப்படி சோதித்து பார்க்க வேண்டுமென்று மல்கியா 3:10-ல் யெகோவாவே சொல்லி இருக்கிறார்: ‘நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடம்கொள்ளாமல் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோ என்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்.’
நீங்களும் யெகோவாவை சோதித்துப் பார்ப்பீர்களா? அவர் கொடுக்கிற ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்களா? அப்படியென்றால், பிரம்மாண்டமான இந்தக் கட்டுமான வேலையில் கலந்துக்கொள்ள உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசித்துப் பாருங்கள், அதற்காக ஜெபம் செய்யுங்கள். நியு யார்க்கில் இல்லாவிட்டாலும் மற்ற இடங்களில் நடக்கும் கட்டுமான வேலையில் கலந்துகொள்ள முடியுமா என்று பாருங்கள். அப்படி செய்யும்போது, யெகோவா உங்களை எப்படியெல்லாம் ஆசீர்வதிப்பார் என்று தெரிந்துகொள்வீர்கள்.—மாற். 10:29, 30.
சிவில் இன்ஜினியராக வேலை செய்கிற டேலும் கேத்தியும் அலபாமாவில் இருந்து வந்திருக்கிறார்கள். இப்போது வால்கில்லில் சேவை செய்கிறார்கள். இந்த சேவையை செய்ய சொல்லி மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகிறார்கள். “இப்ப நாம அனுபவிக்கிற வசதிகளை எல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி வைச்சாலே போதும். யெகோவா நமக்கு உதவி செய்றதை நம்மால பார்க்க முடியும்” என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? டேல் சொல்கிறார்: “எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு உங்க வாழ்க்கையை எளிமையாக்குங்க. அதுக்காக நீங்க ஒருநாளும் வருத்தப்பட மாட்டீங்க!” வடக்கு கரோலினாவில் இருந்து வந்த கேரி என்ற சகோதரருக்கு கட்டுமான துறையில் 30 வருட அனுபவம் இருக்கிறது. அவருடைய மனைவி மொரீனோடு சேர்ந்து அவர் வார்விக்கில் சேவை செய்கிறார். “பல வருடங்களாக பெத்தேலில் சேவை செய்கிற சகோதர சகோதரிகளோடு பழகுவதும் அவர்களோடு சேர்ந்து வேலை செய்வதும்தான்” அவர்களுக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம் என்று கேரியும் மொரீனும் சொல்கிறார்கள். “பெத்தேல்ல சேவை செய்யணும்னா நீங்க ரொம்ப எளிமையா வாழணும். இந்த பொல்லாத உலகத்துல அப்படி எளிமையா வாழ்றதுதான் ரொம்ப நல்லது” என்று கேரி சொல்கிறார். எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டரிடம் வேலை செய்த ஜேசனும் அவருடைய மனைவி ஜெனிபரும் இல்லினாய்ஸில் இருந்து வந்திருக்கிறார்கள். வால்கில்லில் வேலை செய்வது “புதிய உலகத்துலேயே வேலை செய்ற மாதிரி இருக்கு” என்று சொல்கிறார்கள். ஜெனிபரும் இப்படி சொல்கிறார்: “நாம இங்க செய்ற ஒவ்வொரு வேலையையும் யெகோவா உயர்வா மதிக்கிறார். அது எல்லாத்துக்கும் நிச்சயமா பலன் கொடுப்பார். நாம நினைச்சு பார்க்காத அளவுக்கு நம்மள ஆசீர்வதிப்பார்.”
a 2014 இயர்புக்கில் (ஆங்கிலம்) பக்கங்கள் 12-13-ஐ பாருங்கள்.
b இவர்கள், பெத்தேலில் பார்ட்-டைம் கம்யூட்டராக (Part-time commuter Bethelite) சேவை செய்கிறார்கள். பார்ட்-டைம் கம்யூட்டராக சேவை செய்கிறவர்கள் பெத்தேலில் தங்க மாட்டார்கள். அவர்கள் வீட்டில் இருந்தே பெத்தேலுக்கு வருவார்கள். அவர்களுடைய செலவை எல்லாம் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். இவர்கள் வாரத்தில் ஓரிரண்டு நாட்களோ அதற்கும் அதிகமாகவோ பெத்தேலுக்கு வந்து சேவை செய்வார்கள்.