விசுவாசமாயிருப்பது பற்றிய இவ்வுலகின் தவறான கண்ணோட்டம்
இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ்வில் கதகதப்பான ஒரு வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதில் நைட் கிளப்பிற்கு வெளியில் காத்திருந்த சில இளைஞரோடு ஓர் இளம் மனிதன் சேர்ந்துகொண்டான். சில விநாடிகளில் அந்தக் கூட்டத்தார் மத்தியில் படுபயங்கரமான வெடி ஒன்று வெடித்தது.
மற்றொரு மனித வெடிகுண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டதோடு இன்னும் 19 இளைஞரின் உயிர்களையும் கொடூரமாக மாய்த்துவிட்டது. “நாலா புறமும் உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்தன, அனைவருமே வாலிபர்கள், மிகவும் சிறியவர்கள்; இத்தனை பயங்கரமான கோரக் காட்சியை நான் இதுவரை பார்த்ததேயில்லை” என்று மருத்துவ உதவியாளர் ஒருவர் பின்னர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
“விசுவாசமாயிருப்பது . . . போன்ற அனைவரும் போற்றும் குணங்களே, யுத்தங்கள் வெடிப்பதை அதிக சாத்தியமாகவும் அவற்றை நிறுத்துவதை அதிக கடினமாகவும் ஆக்குகின்றன” என்று தர்ஸ்டன் புரூயன் என்பவர் லேன்ஸெட்-ல் எழுதினார். ஆம், கிறிஸ்தவமண்டலத்தின் சிலுவைப் போர்கள் முதல் நாசி ஜெர்மனியின் படுகொலைகள் வரை விசுவாசமாயிருத்தல் என்ற பெயரில் கொல்லப்பட்டவர்களின் ரத்தம் மனித சரித்திரத்தை கறைப்படுத்தியிருக்கிறது.
விசுவாச துரோகத்திற்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
வெறித்தனத்துடன் விசுவாசமாயிருப்பது அழிவுக்கு வழிநடத்தலாம், ஆனால் விசுவாச துரோகமோ சமுதாயத்தை சீர்குலைக்கலாம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. விசுவாசமாயிருப்பது என்றால், ஒரு நபரிடம் அல்லது குறிக்கோளிடம் உண்மையாய் இருப்பதையும், விட்டு விலக அல்லது துரோகம் செய்ய தூண்டுதல் எழுந்தாலும் அவரை அல்லது அதை உறுதியாக பற்றியிருப்பதையும் உட்படுத்துகிறது. இத்தகைய விசுவாசத்தை மதிப்பதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர்; ஆனால் சமுதாயத்தின் அடிப்படை அமைப்பாகிய குடும்ப வட்டாரத்தில் விசுவாசம் பெருமளவு குறைவுபடுகிறது. விவாகரத்து எண்ணிக்கை கிடுகிடுவென பெருகியிருக்கிறது. சுயதிருப்திக்கு முக்கியத்துவம் கொடுத்தல், அன்றாட வாழ்க்கையின் பிக்கல் பிடுங்கல்கள், அநேகர் கற்பை காக்க தவறுவதன் விளைவுகள் போன்றவை இதன் வேகத்தை முடுக்கிவிட்டிருக்கின்றன. இதற்கு, டெல் அவிவ் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களைப் போல பெரும்பாலும் இளைஞரே அப்பாவி பலிகடாக்கள் ஆகிறார்கள்.
“விவாகரத்து, பிரிந்து வாழ்தல், ஒற்றைப் பெற்றோர் போன்ற நிலையற்ற குடும்ப சூழ்நிலைகளால் ஒரு பிள்ளையின் படிப்பு அடிக்கடி பெரிதும் பாதிக்கப்படுகிறது” என்று ஓர் அறிக்கை கூறுகிறது. தாய் மட்டுமே உள்ள குடும்பங்களில் வளரும் பையன்கள், சரிவர படிக்காதிருப்பது, தற்கொலை, சிறார் குற்றச்செயல் போன்றவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஒவ்வொரு வருடமும், ஐக்கிய மாகாணங்களிலுள்ள பத்து லட்சம் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் விவாகரத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வருடத்தை எடுத்துக்கொண்டால், அந்நாட்டிலுள்ள மணமுடித்த பெற்றோருக்கு பிறக்கும் பிள்ளைகளில் பாதிப்பேர் 18 வயதாவதற்குள் பெற்றோரின் விவாகரத்தால் பாதிக்கப்படலாம். உலகின் பிற பகுதிகளிலுள்ள அநேக இளைஞரின் எதிர்காலமும் இதேயளவு நெஞ்சைப் பிழிவதாய் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
விசுவாசமாயிருப்பது—எட்ட முடியாத தராதரமா?
சமீப காலங்களில் பாரம்பரிய மரபுகள் தகர்ந்து வருவதால் தாவீது ராஜாவின் பின்வரும் வார்த்தைகள் இக்காலத்திற்கே அதிகம் பொருந்துவதாக தோன்றுகிறது: “இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.” (சங்கீதம் 12:1) விசுவாச துரோகம் பரவலாக காணப்பட காரணம் என்ன? ராஜர் ரோஸன்பளாட் என்பவர் டைம் பத்திரிகைக்கு எழுதுகையில், “விசுவாசமாயிருப்பது ஓர் உயர்ந்த தராதரம் என்றாலும், அளவுக்கதிகமான பயம், தன்னம்பிக்கை இல்லாமை, சந்தர்ப்பவாதம், பேராசை போன்றவை நம் இரத்தத்தில் ஊறிப்போயிருப்பதால் ஒழுக்கத்தில் பலவீனமாக உள்ள நம்மிடம் அந்தத் தராதரத்தை எதிர்பார்க்க முடியாது” என்று குறிப்பிடுகிறார். நம் நாட்களை விவரிக்கையில், “மனுஷர்கள் தற்பிரியராயும், . . . பரிசுத்தமில்லாதவர்களாயும் [“உண்மையில்லாதவர்களாயும்,” NW] சுபாவ அன்பில்லாதவர்களாயும்” இருப்பார்கள் என பைபிள் வெளிப்படையாக கூறுகிறது.—2 தீமோத்தேயு 3:1-5.
விசுவாசமாயிருப்பது அல்லது விசுவாச துரோகம் ஒருவரின் சிந்தனையிலும் செயல்களிலும் இந்தளவுக்கு செல்வாக்கு செலுத்த முடிவதால், ‘நாம் யாருக்கு விசுவாசமாயிருக்க வேண்டும்?’ என்ற கேள்வி எழும்புகிறது. இந்தக் கேள்விக்கு அடுத்த கட்டுரை எப்படி பதிலளிக்கிறது என்பதை கவனியுங்கள்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
மேலே உள்ள படம்: © AFP/CORBIS