உண்மை வழிபாட்டுக்கு அடையாளம்—ஒற்றுமை
“தொழுவத்தில் ஆடுகளைப்போல், . . . நான் அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்.” —மீ. 2:12, திருத்திய மொழிபெயர்ப்பு.
1. படைப்பு கடவுளுடைய ஞானத்திற்கு எவ்வாறு சான்றளிக்கிறது?
“கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது” என்று சங்கீதக்காரன் உணர்ச்சிபொங்கக் கூறினார். (சங். 104:24) பூமியில் லட்சக்கணக்கான தாவர வகைகளும், விலங்கினங்களும், பூச்சியினங்களும், பாக்டீரியா வகைகளும் உள்ளன. இவையெல்லாம் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வது, நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு கடவுளின் ஞானத்திற்கும் சான்றளிக்கின்றன. மேலும், உங்களுடைய உடலில் ஆயிரக்கணக்கான இயக்கங்கள் உள்ளன; பெரிய உறுப்புகள்முதல் செல்களில் உள்ள சின்னஞ்சிறிய மூலக்கூறுகள்வரை இவையெல்லாம் ஒன்றுசேர்ந்து வேலை செய்யும்போதுதான் நீங்கள் ஒரு முழுமையான ஆரோக்கியமான நபராகிறீர்கள்.
2. பக்கம் 13-ல் காட்டப்பட்டுள்ளபடி கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவிய ஒற்றுமை ஏன் ஓர் அற்புதமாகத் தோன்றியிருக்கும்?
2 மனிதர் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டார்கள். மனிதரின் தோற்றமும், சுபாவமும், திறமைகளும் எத்தனை எத்தனையோ விதங்களில் வேறுபட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, கடவுள் முதல் மனிதர்களைப் படைத்தபோது அவர்களுடைய உள்ளத்தில் தம்முடைய குணங்களை விதைத்தார்; இது, அவர்கள் ஒருவரோடொருவர் ஒத்துழைத்து, ஒருவரையொருவர் சார்ந்து வாழ உதவியது. (ஆதி. 1:27; 2:18) இருந்தாலும், பொதுவில் மனிதகுலம் இன்று கடவுளைவிட்டு விலகியிருப்பதால், மனிதரால் இதுவரை ஒன்றுபட்டு செயல்படவே முடியவில்லை. (1 யோ. 5:19) ஆனால், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவச் சபையில் எபேசிய அடிமைகள், பிரபல கிரேக்க பெண்கள், கல்வி பயின்ற யூத ஆண்கள், முன்னர் சிலைகளை வழிபட்டு வந்தவர்கள் என பலதரப்பட்ட மக்கள் இருந்தபோதிலும் அங்கு நிலவிய ஒற்றுமையைப் பற்றி சிந்திக்கையில் அது ஓர் அற்புதமாகத்தான் தோன்றியிருக்கும்.—அப். 13:1; 17:4; 1 தெ. 1:9; 1 தீ. 6:1.
3. கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் ஒற்றுமையை பைபிள் எப்படி விவரிக்கிறது, இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளைச் சிந்திக்கப் போகிறோம்?
3 நம் உடலின் உறுப்புகள் ஒத்திசைவுடன் செயல்படுவது போல உண்மை வழிபாடு, மக்கள் ஒருவருக்கொருவர் ஒத்திசைவுடன் செயல்பட வாய்ப்பளிக்கிறது. (1 கொரிந்தியர் 12:12, 13-ஐ வாசியுங்கள்.) இந்தக் கட்டுரையில் நாம் பின்வரும் கேள்விகளைச் சிந்திக்கப் போகிறோம்: உண்மை வழிபாடு மக்களை எவ்வாறு ஒன்றுபடுத்துகிறது? எல்லாத் தேசத்திலுமுள்ள லட்சக்கணக்கான மக்களை ஏன் யெகோவாவால் மட்டுமே ஒன்றுசேர்க்க முடியும்? ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கிற என்னென்ன தடைகளைத் தாண்ட யெகோவா நமக்கு உதவுகிறார்? ஒற்றுமையைக் குறித்ததில், உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவமண்டலத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
உண்மை வழிபாடு மக்களை ஒன்றுபடுத்தும் விதம்
4. உண்மை வழிபாடு மக்களை எவ்வாறு ஒன்றுபடுத்துகிறது?
4 யெகோவாவே எல்லாவற்றையும் படைத்தவர் என்பதால் அவரே சர்வலோகத்தையும் ஆட்சிசெய்ய உரிமையுள்ளவர் என்பதை உண்மைக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். (வெளி. 4:11) எனவே, அவர்கள் வித்தியாசப்பட்ட சமுதாயங்களிலும், சூழ்நிலைகளிலும் வாழ்கிறபோதிலும், அவர்கள் அனைவரும் கடவுளுடைய சட்டங்களுக்கே கீழ்ப்படிகிறார்கள், எல்லாரும் பைபிள் நியமங்களைப் பின்பற்றியே வாழ்கிறார்கள். அவர்கள் யெகோவாவை ‘தகப்பன்’ என்று பொருத்தமாகவே அழைக்கிறார்கள். (ஏசா. 64:8; மத். 6:9) இதனால், அவர்கள் எல்லாரும் ஆன்மீக ரீதியில் சகோதர சகோதரிகளாக இருக்கிறார்கள்; அதோடு, சங்கீதக்காரன் பின்வருமாறு விவரிக்கிற அருமையான ஒற்றுமையை அவர்களால் அனுபவித்து மகிழ முடிகிறது: “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?”—சங். 133:1.
5. உண்மை வழிபாட்டில் ஒற்றுமைக்குப் பங்களிக்கிற குணம் எது?
5 உண்மைக் கிறிஸ்தவர்கள் அபூரணர்களாக இருக்கிறபோதிலும், அவர்கள் ஒன்றுபட்டு கடவுளை வழிபடுகிறார்கள்; ஏனென்றால், அவர்கள் ஒருவருக்கொருவர் அன்புகாட்ட கற்றிருக்கிறார்கள். வேறு யாராலும் காட்ட முடியாத அன்பை வெளிக்காட்ட யெகோவா அவர்களுக்குக் கற்பிக்கிறார். (1 யோவான் 4:7, 8-ஐ வாசியுங்கள்.) அவருடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “நீங்கள், கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் காட்டுங்கள்; ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்பைக் காட்டுங்கள்; எல்லாரையும் பரிபூரணமாகப் பிணைப்பது அன்பே.” (கொலோ. 3:12-14) எல்லாரையும் பரிபூரணமாகப் பிணைக்கும் இந்த அன்பே, உண்மைக் கிறிஸ்தவர்களை முக்கியமாக அடையாளம் காட்டுகிறது. அப்படியிருக்க, இந்த ஒற்றுமை உண்மை வழிபாட்டின் தனித்தன்மை வாய்ந்த அம்சம் என்பதை நீங்கள் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள் தானே?—யோவா. 13:35.
6. கடவுளுடைய அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை ஒற்றுமையாய் இருக்க நமக்கு எவ்வாறு உதவுகிறது?
6 உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டிருக்க இன்னொரு காரணம், மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கையான கடவுளுடைய அரசாங்கத்தை அவர்கள் எதிர்நோக்கி இருப்பதுதான். இந்த அரசாங்கம் சீக்கிரத்தில் மனித அரசாங்கங்களை ஒழித்துக்கட்டி, கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கு உண்மையான நிலையான சமாதானத்தை அளிக்குமென அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (ஏசா. 11:4-9; தானி. 2:44) அதனால், தம்மைப் பின்பற்றியவர்களைப் பற்றி இயேசு சொன்ன பின்வரும் வார்த்தைகளுக்கு அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்: “நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.” (யோவா. 17:16) உண்மைக் கிறிஸ்தவர்கள் இந்த உலகின் சண்டை சச்சரவுகளில் நடுநிலை வகிக்கிறார்கள்; அதனால்தான், மற்றவர்கள் எல்லாரும் போரில் ஈடுபட்டாலும் இவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிகிறது.
ஆன்மீகப் போதனைக்கு ஒரே ஊற்றுமூலம்
7, 8. பைபிள் போதனை எவ்விதத்தில் நம் ஒற்றுமைக்குப் பங்களிக்கிறது?
7 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாய் இருந்ததற்குக் காரணம், அவர்கள் எல்லாரும் ஒரே ஊற்றுமூலத்திலிருந்து ஊக்குவிப்பு பெற்றதுதான். எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் அடங்கிய ஆளும் குழுவின் மூலமாக இயேசு சபைக்குப் போதனையையும் வழிநடத்துதலையும் அளித்து வந்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். தேவபயமுள்ள இந்த ஆளும் குழுவினர் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் தீர்மானங்களை எடுத்தார்கள்; இவர்களுடைய போதனைகளைப் பயணக் கண்காணிகள் வாயிலாக பல நாடுகளிலுள்ள சபைகளுக்குத் தெரிவித்தார்கள். இப்படிப்பட்ட சில பயணக் கண்காணிகளைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “[அவர்கள்] நகரம் நகரமாகப் போனபோது, எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் தீர்மானித்திருந்த கட்டளைகளை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்து, அவற்றைக் கடைப்பிடிக்கச் சொன்னார்கள்.”—அப். 15:6, 19-22; 16:4.
8 அவ்வாறே, இன்றும் கடவுளுடைய சக்தியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களாலான ஓர் ஆளும் குழு உலகெங்குமுள்ள சபைகளின் ஒற்றுமைக்குப் பங்களிக்கிறது. இந்த ஆளும் குழு, ஆன்மீக ஊக்குவிப்பை அளிக்கிற பிரசுரங்களை அநேக மொழிகளில் பிரசுரிக்கிறது. இந்த ஆன்மீக உணவு கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலானது. அதனால், சபைகளுக்குக் கற்பிக்கப்படுபவை மனிதரிடமிருந்து அல்ல, ஆனால் யெகோவாவிடமிருந்தே வருகின்றன.—ஏசா. 54:13.
9. கடவுள் கொடுத்துள்ள வேலை ஒற்றுமையாய் இருக்க நமக்கு எப்படி உதவுகிறது?
9 கிறிஸ்தவக் கண்காணிகள் பிரசங்க வேலையை முன்நின்று நடத்துவதன் மூலமும் ஒற்றுமையைக் கட்டிக்காக்கிறார்கள். ஒன்றுபட்டு கடவுளுடைய சேவையில் ஈடுபடுகிறவர்களிடையே ஏற்படுகிற நெருங்கிய பிணைப்புக்கும் இந்த உலகில் மற்றவர்கள் அனுபவிக்கிற நட்புக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது. கிறிஸ்தவச் சபை, வெறுமனே ஒருவருக்கொருவர் சகஜமாக பழகுவதற்காக மட்டுமே அல்ல, ஆனால் யெகோவாவைக் கனப்படுத்துவதற்காகவும், நற்செய்தியைப் பிரசங்கிப்பது, சீடராக்குவது, சபையாரைப் பலப்படுத்துவது போன்றவற்றிற்காகவுமே நிறுவப்பட்டது. (ரோ. 1:11, 12; 1 தெ. 5:11; எபி. 10:24, 25) அதனால்தான், அப்போஸ்தலன் பவுலால் கிறிஸ்தவர்களைப் பற்றி இவ்வாறு சொல்ல முடிந்தது: “நீங்கள் ஒரே சிந்தையில் உறுதியோடு இருக்கிறீர்கள் . . . நற்செய்தியின் மீதுள்ள விசுவாசத்திற்காக ஒரே உள்ளத்துடன் தோளோடு தோள் சேர்ந்து பாடுபடுகிறீர்கள்.”—பிலி. 1:27.
10. கடவுளுடைய மக்களாக நாம் என்ன சில வழிகளில் ஒன்றுபட்டிருக்கிறோம்?
10 இவ்வாறாக, யெகோவாவின் மக்களான நாம் அவரை உன்னதப் பேரரசராக ஏற்றுக்கொள்வதாலும், நம் சகோதர சகோதரிகளிடம் அன்பு காட்டுவதாலும், கடவுளுடைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைப்பப்பதாலும், முன்நின்று வழிநடத்த கடவுள் பயன்படுத்துகிறவர்களுக்கு மரியாதை காட்டுவதாலும் ஒன்றுபட்டிருக்கிறோம். நம் அபூரணத்தின் காரணமாக வெளிப்படுகிற சில தவறான மனப்பான்மைகளை விட்டொழிக்க யெகோவா நமக்கு உதவுகிறார்; இல்லையெனில், அப்படிப்பட்ட மனப்பான்மைகள் நம் ஒற்றுமைக்கு ஆபத்தாகிவிடும்.—ரோ. 12:2.
பெருமையையும் பொறாமையையும் துரத்தியடிக்க...
11. பெருமை மற்றவர்களிடமிருந்து மக்களை விலக்கிவிடுவது ஏன், இதை முறியடிக்க யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார்?
11 பெருமை மக்களை மற்றவர்களிடமிருந்து விலக்கிவிடுகிறது. பெருமைபிடித்த ஒருவர் தன்னைப் பற்றி உயர்வாக நினைக்க விரும்புவார்; அதோடு, தம்பட்டமடிப்பது அவருக்கு அவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், இது ஒற்றுமைக்கு ஒரு தடைக்கல். ஒருவர் தம்பட்டமடிப்பதைக் கேட்கும்போது மற்றவர்களுக்கு பெறாமைதான் வரும். சீடராகிய யாக்கோபு நேரடியாகவே நமக்கு இவ்வாறு சொல்கிறார்: “இப்படிப்பட்ட எல்லா விதமான பெருமையும் பொல்லாதது.” (யாக். 4:16) மற்றவர்களைத் தாழ்வாக நடத்துவது அன்பற்ற செயல். ஆனால், யெகோவா மனத்தாழ்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது குறிப்பிடத்தக்க விஷயம்; ஏனென்றால், நம்மைப்போன்ற அபூரண மனிதர்களிடம் அவர் தொடர்புகொள்கிறார். தாவீது இவ்வாறு எழுதினார்: “உம்முடைய [கடவுளுடைய] காருணியம் [அதாவது, மனத்தாழ்மை] என்னைப் பெரியவனாக்கும்.” (2 சா. 22:36) கடவுளுடைய வார்த்தை, சரியாகச் சிந்திக்க நமக்குக் கற்றுத்தருவதன் மூலம் பெருமையை முறியடிக்க உதவுகிறது. பவுல் இவ்வாறு கேட்கத் தூண்டப்பட்டார்: “மற்றவர்களைவிட நீங்கள் எந்த விதத்தில் மேம்பட்டவர்கள்? உங்களிடம் இருக்கிற அனைத்தும் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டதுதானே? நீங்கள் உண்மையில் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கும்போது, நீங்களாகவே பெற்றுக்கொண்டதுபோல் ஏன் பெருமையடிக்கிறீர்கள்?”—1 கொ. 4:7.
12, 13. (அ) நாம் ஏன் எளிதில் பொறாமைப்படுகிறோம்? (ஆ) யெகோவா பார்க்கும் விதமாக மற்றவர்களைப் பார்ப்பதால் வரும் பலன் என்ன?
12 பொதுவாக ஒற்றுமைக்குத் தடைக்கல்லாக இருக்கும் மற்றொரு தீய குணம், பொறாமை. அபூரணம் நம்மில் ஒட்டியிருப்பதால் “பொறாமை குணம்” நம் எல்லாருக்கும் இருக்கிறது; சத்தியத்தில் நீண்ட காலமாக இருக்கிறவர்கள்கூட மற்றவர்களுடைய சூழ்நிலைகள், சொத்துப்பத்துகள், பொறுப்புகள், அல்லது திறமைகளைக் கண்டு அவ்வப்போது பொறாமைப்படலாம். (யாக். 4:5) உதாரணமாக, மனைவி மக்களையுடைய ஒரு சகோதரர் முழுநேர ஊழியம் செய்யும் ஒருவர் பெற்றிருக்கிற விசேஷ பொறுப்புகளைக் குறித்து பொறாமைப்படலாம். ஆனால், இந்த முழுநேர ஊழியரும்கூட பிள்ளைகளை உடைய அந்தச் சகோதரரைப் பார்த்து கொஞ்சம் பொறாமைப்பட்டிருப்பார் என்பதை அவர் உணராதிருக்கலாம். இப்படிப்பட்ட பொறாமை நம் ஒற்றுமையைக் குலைக்காதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?
13 கிறிஸ்தவச் சபையிலுள்ள பரலோக நம்பிக்கையுள்ளவர்களை மனித உடலிலுள்ள உறுப்புகளுக்கு பைபிள் ஒப்பிடுவதை நினைவுபடுத்திப் பார்ப்பது, பொறாமையைத் தவிர்க்க நமக்கு உதவும். (1 கொரிந்தியர் 12:14-18-ஐ வாசியுங்கள்.) உதாரணத்திற்கு, உங்கள் இருதயத்தைவிட கண்கள் மற்றவர்களுக்குப் பளிச்சென தெரிந்தாலும், அவை இரண்டுமே உங்களுக்கு முக்கியமானவை, அல்லவா? அதேபோல், சபையில் சிலர் சில காலத்திற்கு மற்றவர்களைவிட பளிச்சென தெரியலாம்; இருந்தாலும், சபையிலுள்ள எல்லாரையுமே யெகோவா முக்கியமானவர்களாகக் கருதுகிறார். ஆகவே, நம் சகோதரர்களை யெகோவா பார்க்கும் விதமாகப் பார்ப்போமாக. மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுவதற்கு பதிலாக, அவர்கள்மீது கரிசனையும் தனிப்பட்ட அக்கறையும் காட்டலாம். அப்படிச் செய்வதன்மூலம், உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்தவமண்டலத்தாரிடமிருந்து வித்தியாசப்பட்டவர்கள் என்பதைக் காட்டுகிறோம்.
பிரிவினைக்குப் பேர்போன கிறிஸ்தவமண்டலம்
14, 15. விசுவாசதுரோக கிறிஸ்தவத்தில் எவ்வாறு பிளவு ஏற்பட்டது?
14 உண்மைக் கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமை நிலவுகிறது; அதற்கு நேர்மாறாக, கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் சண்டை சச்சரவுகளே நிலவுகின்றன. நான்காம் நூற்றாண்டிற்குள், விசுவாசதுரோகக் கிறிஸ்தவம் எங்கும் பரவியபோது, புறமத ரோம பேரரசர் அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கிறிஸ்தவமண்டலம் தழைக்கக் காரணமானார். அது மேலும் பல பிரிவுகளாகப் பிரியவே, ரோம நாட்டு கிறிஸ்தவத்தைப் பின்பற்றிய தேசங்கள் அதிலிருந்து பிரிந்து தங்கள் நாடுகளுக்கென்று சொந்த சர்ச்சுகளை உருவாக்கின.
15 இந்தத் தேசங்கள் சில நூற்றாண்டுகளாக ஒன்றுக்கொன்று போரிட்டுக்கொண்டன. 17, 18-வது நூற்றாண்டுகளின்போது, அமெரிக்கா, பிரான்சு, மற்றும் பிரிட்டன் நாட்டு மக்கள் தேசபக்திக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததால், தேசப்பற்று ஒரு மதத்தைப் போலவே ஆனது. 19, 20-வது நூற்றாண்டுகளின்போது, தேசப்பற்று பெரும்பாலான மனிதரின் சிந்தனையில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது. போகப்போக, கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் இன்னும் எத்தனை எத்தனையோ பிரிவுகளாகப் பிளவுற்றன; அவற்றில் பெரும்பாலானவை தேசப்பற்றைக் கண்டும்காணாமல் விட்டுவிடுகின்றன. சர்ச்சுக்குச் செல்வோர் மற்றொரு நாட்டிலுள்ள அதே மதப் பிரிவினரோடு போரிடவும் சென்றிருக்கிறார்கள். இன்று, கிறிஸ்தவமண்டலம் பிரிவினை ஏற்படுத்தும் நம்பிக்கைகளினாலும் தேசப்பற்றினாலும் பிளவுபட்டிருக்கிறது.
16. எப்படிப்பட்ட விஷயங்கள் கிறிஸ்தவமண்டல மக்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றன?
16 இருபதாம் நூற்றாண்டில், கிறிஸ்தவமண்டலத்தின் நூற்றுக்கணக்கான பிரிவுகளில் சில, உலகளாவிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியில் இறங்கின. ஆனால், பல பத்தாண்டுகளாக முயற்சி எடுத்த பிறகும் சில சர்ச்சுகளை மட்டுமே ஒன்றுபடுத்த முடிந்தது; என்றாலும், பரிணாமம், கருச்சிதைவு, ஓரினச்சேர்க்கை, பெண்களை பாதிரியாக்குவது சம்பந்தமான கேள்விகள் காரணமாக அவர்களுக்கிடையே இன்னும் பிளவுகள் இருக்கத்தான் செய்கின்றன. கிறிஸ்தவமண்டலத்தின் சில மதத்தொகுதிகளில் உள்ள பாதிரிகள், பிரிவினை ஏற்படுத்தும் கோட்பாடுகளை முக்கியமற்றவையாகக் காட்டுவதன் மூலம் பிற மதப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றுபடுத்த முயலுகிறார்கள். என்றாலும், சில கோட்பாடுகளை அவ்வாறு முக்கியமற்றதாய்க் காட்டுவது, அவர்களுடைய விசுவாசத்தை மழுங்கச் செய்யுமே ஒழிய, கிறிஸ்தவமண்டலத்தில் ஏற்பட்ட பிளவை ஒருபோதும் ஒன்றுசேர்க்காது.
தேசப்பற்றைவிட உயர்ந்து நிற்பது
17. “கடைசி நாட்களில்” உண்மை வழிபாடு மக்களை ஒன்றுபடுத்தும் என எவ்வாறு முன்னறிவிக்கப்பட்டது?
17 இப்போது மனிதகுலம் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு படுபயங்கரமாகப் பிளவுபட்டிருந்தாலும், உண்மைக் கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவுகிற ஒற்றுமை அவர்களை எப்போதும் தனிப்படுத்திக் காட்டுகிறது. கடவுளுடைய தீர்க்கதரிசியான மீகா இவ்வாறு முன்னறிவித்தார்: “தொழுவத்தில் ஆடுகளைப்போல், . . . நான் அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்.” (மீ. 2:12, தி.மொ.) உண்மை வழிபாடு மற்ற எல்லா விதமான வழிபாடுகளிலிருந்தும் (அவை பொய்க் கடவுட்களை வழிபடுவதாக இருந்தாலும் சரி தேசத்தையே ஒரு கடவுளாக வழிபடுவதாக இருந்தாலும் சரி) உயர்ந்து நிற்கும் என மீகா முன்னறிவித்தார். “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்” என்று அவர் எழுதினார்.—மீ. 4:1, 5.
18. உண்மை வழிபாடு என்னென்ன மாற்றங்களைச் செய்ய நமக்கு உதவியிருக்கிறது?
18 உண்மை வழிபாடு முன்னாள் விரோதிகளை எப்படி ஒன்றுபடுத்தும் என்றும் மீகா விவரித்தார். “திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; . . . அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” (மீ. 4:2, 3) மனிதரால் உண்டாக்கப்பட்ட கடவுட்களையோ தேசங்களையோ வழிபடுவதை விட்டுவிட்டு யெகோவாவை வழிபடுபவர்கள் உலகளவிலான ஒற்றுமையை அனுபவித்து மகிழ்கிறார்கள். அன்பின் வழிகளைப் பற்றி கடவுள் அவர்களுக்குப் போதிக்கிறார்.
19. லட்சக்கணக்கானோர் உண்மை வழிபாட்டில் ஒன்றுபடுவது எதற்குத் தெளிவான அத்தாட்சியாக இருக்கிறது?
19 இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கிற உலகளாவிய ஒற்றுமை ஒப்பற்றது; யெகோவா தம் மக்களைத் தமது சக்தியினால் வழிநடத்துகிறார் என்பதற்குத் தெளிவான அத்தாட்சியாகவும் இது இருக்கிறது. சரித்திரம் காணாதளவுக்கு எல்லாத் தேசங்களையும் சேர்ந்த ஆட்கள் பெருமளவில் ஒன்றுசேர்க்கப்படுகிறார்கள். இது வெளிப்படுத்துதல் 7:9, 14-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளின் மாபெரும் நிறைவேற்றமாக இருக்கிறது; அதோடு, சீக்கிரத்தில் கடவுளுடைய தூதர்கள் “காற்றுகளை” கட்டவிழ்த்து விடுகையில், தற்போதைய இந்தப் பொல்லாத உலகம் அழிந்துவிடும் என்றும் அந்த வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. (வெளிப்படுத்துதல் 7:1-4, 9, 10, 14-ஐ வாசியுங்கள்.) அப்படியானால், உலகளாவிய சகோதர கூட்டமாக நாம் ஒன்றுபட்டிருப்பது பெரும் பாக்கியம், அல்லவா? அந்த ஒற்றுமையைக் கட்டிக்காக்க நாம் ஒவ்வொருவரும் எப்படிப் பங்களிக்கலாம்? அடுத்த கட்டுரையில் இதைக் கலந்தாலோசிக்கலாம்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• உண்மை வழிபாடு மக்களை எப்படி ஒன்றுபடுத்துகிறது?
• பொறாமை நம் ஒற்றுமையைக் குலைத்துவிடாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?
• தேசப்பற்று உண்மைக் கிறிஸ்தவர்களை ஏன் பிரிப்பதில்லை?
[பக்கம் 13-ன் படம்]
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள்
[பக்கம் 15-ன் படங்கள்]
ராஜ்ய மன்ற வேலைகளில் நீங்கள் உதவுவது ஒற்றுமைக்கு எப்படிப் பங்களிக்கிறது?