இழுத்தடித்த வழக்கும் இனிய வெற்றியும்
இந்த வழக்கு 1995-ல் ஆரம்பித்து 15 வருடங்கள் நீடித்தது. ரஷ்யாவில் மத சுதந்திரத்தை எதிர்த்தவர்கள், இந்தக் காலகட்டம் முழுவதும் அங்கிருந்த உண்மைக் கிறிஸ்தவர்களைத் தாக்கி வந்தார்கள். மாஸ்கோவிலும் ரஷ்யா முழுவதிலும் இருந்த யெகோவாவின் சாட்சிகளைத் தடை செய்வதில் இவர்கள் குறியாக இருந்தார்கள். என்றாலும், ரஷ்யாவிலுள்ள நம் அன்புச் சகோதர சகோதரிகளின் உண்மைத்தன்மைக்குப் பரிசாக யெகோவா இந்த வழக்கில் வெற்றியைத் தேடித் தந்தார். இதெல்லாம் எப்படி நடந்தது?
கடைசியில் விடுதலை!
ரஷ்யாவில் வாழ்ந்த நம் சகோதரர்கள் 1917-ல் மத சுதந்திரத்தை இழந்தார்கள்; ஆனால், 1990-களின் ஆரம்பத்தில் அந்தச் சுதந்திரத்தை மீண்டும் பெற்றார்கள். அன்றைய சோவியத் யூனியன், 1991-ல் அவர்களை அதிகாரப்பூர்வ மதமாகப் பதிவு செய்தது. சோவியத் யூனியன் பிளவுபட்ட பிறகு, ரஷ்யக் கூட்டரசு யெகோவாவின் சாட்சிகளை அதிகாரப்பூர்வ மதமாகப் பதிவு செய்தது. அதுமட்டுமா, அன்றைய அரசாங்கம் மதத்தின் காரணமாகச் சாட்சிகளைத் துன்புறுத்தியது என்பதையும் இந்தக் கூட்டரசு ஏற்றுக்கொண்டது. 1993-ல் மாஸ்கோவின் நீதித்துறை, யெகோவாவின் சாட்சிகளுடைய மாஸ்கோ சமுதாயம் என்ற பெயரில் அவர்களுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்தது. அதே வருடத்தில், மதச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்த ரஷ்யாவின் புதிய சட்டமும் அமலுக்கு வந்தது. “இந்தச் சுதந்திரம் கிடைக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை” என்று ஒரு சகோதரர் சொன்னதில் ஆச்சரியம் ஏதுமில்லை! “இதற்காகத்தான் 50 வருடங்களாகக் காத்துக்கொண்டிருந்தோம்!” என்றும் அவர் சொன்னார்.
ரஷ்யாவிலுள்ள நம் சகோதர சகோதரிகள், இந்த ‘சாதகமான காலத்தை’ நன்கு பயன்படுத்தி ஊழியத்தில் தீவிரமாக ஈடுபட்டார்கள்; அதன் விளைவாக அநேகர் சத்தியத்தைப் படிக்க ஆரம்பித்தார்கள். (2 தீ. 4:2) “மக்களுக்கு மதத்தில் அதிக ஈடுபாடு இருந்தது” என்று ஒருவர் சொன்னார். சீக்கிரத்திலேயே, அங்கிருந்த பிரஸ்தாபிகள் மற்றும் பயனியர்களின் எண்ணிக்கையும், சபைகளின் எண்ணிக்கையும் கிடுகிடுவென அதிகரிக்க ஆரம்பித்தது. ஆம், மாஸ்கோவில் 1990-ல் ஏறக்குறைய 300 சாட்சிகள்தான் இருந்தார்கள், 1995-க்குள் அவர்களுடைய எண்ணிக்கை 5,000-ஐத் தாண்டியது! யெகோவாவின் சாட்சிகளை எதிர்த்தவர்கள் இதைக் கண்டு பயந்து போனார்கள். ஆகவே, 1995 வாக்கில் சட்டத்தின் உதவியோடு தாக்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு ஆரம்பித்த போராட்டம் நான்கு கட்டங்களைத் தாண்டிய பிறகுதான் முடிவுக்கு வந்தது.
குற்றப் புலனாய்வில் ஏற்பட்ட திருப்பம்
இந்தப் போராட்டத்தின் முதல் கட்டம் ஜூன் 1995-ல் துவங்கியது. மாஸ்கோவில் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை ஆதரித்துவந்த ஒரு தொகுதி, நம் சகோதரர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக அவர்களுக்கு எதிராகப் புகாரைப் பதிவுசெய்தது. தங்கள் மணத்துணை அல்லது பிள்ளைகள் யெகோவாவின் சாட்சிகளாக மாறியதை எதிர்த்த குடும்ப அங்கத்தினர்களின் சார்பாக இதைச் செய்வதாய் அந்தத் தொகுதி கூறிக்கொண்டது. ஜூன் 1996-ல் புலன் விசாரணையை ஆரம்பித்தவர்களால் எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும், அதே தொகுதி மற்றொரு புகாரைப் பதிவுசெய்தது; அதிலும் நம் சகோதரர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறியது. மீண்டும் புலன் விசாரணை துவங்கியது, அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யென நிரூபிக்கப்பட்டன. என்றாலும், எதிரிகள் விடுவதாக இல்லை; மூன்றாவது முறையாக அதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மீண்டும் புகார் கொடுத்தார்கள். மாஸ்கோவிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டார்கள்; சாட்சிகளுக்கு எதிராகக் குற்றவியல் வழக்கை ஆரம்பிக்க எந்த ஆதாரமும் இல்லை என்ற முடிவுக்கே அரசு தரப்பு வக்கீல் மீண்டும் வந்தார். எதிரிகளோ அதே குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நான்காவது முறையாக மீண்டும் புகார் கொடுத்தார்கள். இந்த முறையும் எந்த அத்தாட்சியும் கிடைக்கவில்லை. அந்தத் தொகுதியோ மீண்டும் புலன் விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொண்டது. ஆனால், ஏப்ரல் 13, 1998 அன்று அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
“ஆனால் விநோதமான ஒன்று நடந்தது” என்று அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு வக்கீல் கூறினார். ஐந்தாவது புலனாய்வை நடத்திய அரசு தரப்பு பிரதிநிதி ஒருவர், சாட்சிகள் குற்றச்செயலில் ஈடுபட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டாலும் அவர்களுக்கு எதிராக உரிமையியல் வழக்கைத் தொடரலாம் என்ற ஆலோசனை வழங்கினார். யெகோவாவின் சாட்சிகளுடைய மாஸ்கோ சமுதாயம் தேசிய, சர்வதேச சட்டங்களை மீறியதாக அவர் குற்றஞ்சாட்டினார். மாஸ்கோவுடைய வடக்கு நிர்வாக வட்டாரத்தின் அரசு தரப்பு வக்கீல் அதை ஏற்றுக்கொண்டு உரிமையியல் வழக்கைத் தொடுத்தார்.a ஆகவே, செப்டம்பர் 29, 1998-ல் மாஸ்கோவின் கலவின்ஸ்கீ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆரம்பமானது. அப்போது, இரண்டாவது கட்டம் துவங்கியது.
நீதிமன்றத்தில் பைபிள்
வடக்கு மாஸ்கோவிலுள்ள நீதிமன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. எதிர்த்தரப்பு வக்கீலான டாட்யானா கான்ட்ராட்யேவா சாட்சிகளைச் சாட ஆரம்பித்தார்; ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம், யூத மதம், புத்த மதம் ஆகியவையே காலம் காலமாக இருந்துவரும் மதங்கள் என்று 1997-ல் ஏற்கப்பட்ட ஒரு கூட்டரசு சட்டம் சொல்வதைச் சுட்டிக்காட்டினார்.b அந்தச் சட்டம் அமலில் இருப்பதால்தான் மற்ற மதங்களால் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற முடியாமல் போயிருக்கிறது. வெறுப்பைத் தூண்டிவிடும் மதங்களைத் தடைசெய்ய அந்தச் சட்டம் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் வெறுப்பைத் தூண்டிவிட்டு குடும்பங்களைச் சின்னாபின்னமாக்குகிறார்கள் என்று பொய்க் குற்றஞ்சாட்டும்படியும் அந்தச் சட்டத்தின் அடிப்படையில் அவர்களைத் தடைசெய்யும்படியும் எதிர்த்தரப்பு வக்கீல் வாதாடினார்.
“மாஸ்கோ சபையிலுள்ள யார் யார் இந்தச் சட்டத்தை மீறினார்கள் என்று சொல்ல முடியுமா?” என நம் சகோதரர்களின் சார்பாக வாதாடிய வக்கீல் கேட்டார். எதிர்த்தரப்பு வக்கீலால் ஒருவரைக்கூட சுட்டிக்காட்ட முடியவில்லை. இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் மதப் பகைமையைத் தூண்டிவிடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். தான் சொன்னதை நிரூபிக்க அவர் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்தும் இன்னும் பிற பிரசுரங்களிலிருந்தும் வாசித்துக் காண்பித்தார். (மேலே காண்க.) இந்தப் பிரசுரங்கள் எந்த விதத்தில் பகைமையைத் தூண்டிவிடுகின்றன என்று கேட்டபோது, “தாங்கள்தான் உண்மை மதத்தினர் என்று யெகோவாவின் சாட்சிகள் கற்பிக்கிறார்கள்” என்றார்.
வக்கீலாக இருக்கும் நம் சகோதரர்களில் ஒருவர், நீதிபதியிடமும் எதிர்த்தரப்பு வக்கீலிடமும் ஒவ்வொரு பைபிளைக் கொடுத்தார்; பிறகு, “ஒரே எஜமானரும் ஒரே விசுவாசமும் ஒரே ஞானஸ்நானமும் உண்டு” என்று சொல்லும் எபேசியர் 4:5-ஐ வாசித்தார். சிறிது நேரத்தில், நீதிபதி, எதிர்த்தரப்பு வக்கீல், நம் வக்கீல் ஆகிய மூவரும் பைபிளை வைத்துக்கொண்டு யோவான் 17:18, யாக்கோபு 1:27 போன்ற வசனங்களைக் கலந்துபேசினார்கள். “இந்த வசனங்கள் மதப் பகைமையைத் தூண்டிவிடுகின்றனவா?” என்று நீதிபதி கேட்டார். பைபிளைப் பற்றிக் கருத்து சொல்ல தான் ஒரு மேதை இல்லை என்று எதிர்த்தரப்பு வக்கீல் பதிலளித்தார். யெகோவாவின் சாட்சிகளைக் கடுமையாக விமர்சித்த ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பிரசுரங்களைக் காண்பித்து, “இந்தப் பிரசுரங்களிலுள்ள கருத்துகள் சட்டத்தை மீறுகின்றனவா இல்லையா?” என்று நம் வக்கீல் கேட்டார். “சர்ச் குருமார்களின் கூற்றுகள் பற்றிக் கருத்து சொல்லுமளவுக்கு நான் ஒரு மேதை இல்லை” என்று எதிர்த்தரப்பு வக்கீல் பதிலளித்தார்.
ஆட்டங்கண்ட எதிர்த்தரப்பு வாதம்
சாட்சிகள் குடும்பங்களைச் சீர்குலைக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகளை அவர்கள் கொண்டாடுவதில்லை என்று எதிர்த்தரப்பு வக்கீல் குற்றஞ்சாட்டினார். என்றாலும், கட்டாயம் கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டுமென்று ரஷ்ய சட்டம் கூறுவதில்லை என்று பின்னர் ஒப்புக்கொண்டார். இந்த விஷயத்தில், ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் உட்பட ரஷ்யர்கள் அனைவருக்குமே சுயமாக முடிவெடுக்க உரிமை உள்ளது. நம் அமைப்பு, ‘பிள்ளைகளுக்குத் தேவையான ஓய்வையும் சந்தோஷத்தையும் தருவதில்லை’ என்றும் எதிர்த்தரப்பு வக்கீல் குற்றஞ்சாட்டினார். ஆனால், அவரிடம் எதிர்க்கேள்வி கேட்கப்பட்டபோது, சாட்சிகளுடைய பிள்ளைகளிடம் பேசியதே இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு எப்போதாவது போயிருக்கிறாரா என்று நம் வக்கீல்களில் ஒருவர் கேட்டபோது, “அதற்கு அவசியம் ஏற்படவில்லை” என்று பதிலளித்தார்.
எதிர்த்தரப்பு வக்கீல், மனநல மருத்துவர் ஒருவரைச் சாட்சி சொல்வதற்காக அழைத்தார். நம் பிரசுரங்களை வாசிப்பது மனநலக் கோளாறுகளை ஏற்படுத்துவதாக அந்த மருத்துவர் குற்றஞ்சாட்டினார். அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலம், மாஸ்கோவிலுள்ள ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளின் தலைவர்கள் தயாரித்த ஓர் ஆவணத்தைப்போல் இருக்கிறதே என்று நம் வக்கீல்களில் ஒருவர் அவரிடம் கேட்டபோது, சில பகுதிகள் வரிக்கு வரி அதிலிருந்துதான் எடுக்கப்பட்டன என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் குறுக்குவிசாரணை செய்தபோது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவருக்குக்கூட அவர் சிகிச்சை அளித்ததில்லை என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் மற்றொரு மனநல மருத்துவர், மாஸ்கோவிலுள்ள சாட்சிகளில் 100-க்கும் அதிகமானோரிடம் ஆராய்ச்சி நடத்தியதாக சாட்சி சொன்னார். அவர்கள் மனதளவில் ஆரோக்கியமாய் இருப்பதாகவும், சாட்சிகளான பிறகு மற்ற மதத்தினரை இன்னுமதிக மரியாதையோடு நடத்துவதாகவும் கண்டுபிடித்ததாய்க் கூறினார்.
தற்காலிக வெற்றி
மார்ச் 12, 1999-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை ஆராய்ச்சி செய்வதற்காக ஐந்து அறிஞர்களை நீதிபதி நியமித்து விசாரணையை ஒத்திவைத்தார். இந்த விசாரணையோடு சம்பந்தப்படாத ஓர் அறிஞர் குழுவை ஏற்கெனவே ரஷ்யக் கூட்டரசின் நீதி அமைச்சகம் நியமித்து, நம் பிரசுரங்களை ஆராய்ந்து பார்க்கச் சொல்லியிருந்தது. இந்தக் குழு, நம் பிரசுரங்களில் தீங்கான எதுவும் இல்லை என்ற முடிவை ஏப்ரல் 15, 1999-ல் வெளியிட்டது. ஆகவே, ஏப்ரல் 29, 1999-ல் நீதி அமைச்சகம் யெகோவாவின் சாட்சிகளுக்கு மீண்டும் தேசிய அளவில் சட்டப்பூர்வ அங்கீகாரமளித்தது. இந்த ஆராய்ச்சியின் முடிவு வெளியிடப்பட்ட போதிலும், மாஸ்கோ நீதிபதி தான் நியமித்த அந்த ஐந்து பேர் நம் பிரசுரங்களை ஆராய்ந்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் வேடிக்கையான சூழ்நிலை உருவானது—யெகோவாவின் சாட்சிகள் சட்டத்தை மதிக்கும் மதத்தினர் என்று ரஷ்யாவின் நீதி அமைச்சகம் தேசிய அளவில் அங்கீகரித்தது; ஆனால், அவர்கள் சட்டத்தை மீறுபவர்கள் என்று சொல்லி மாஸ்கோவின் நீதித்துறை அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தியது!
சுமார் இரண்டு வருடங்கள் கழித்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது; பிப்ரவரி 23, 2001-ல் நீதிபதி யெலேனா ப்ராஹோரீசேவா தீர்ப்பு வழங்கினார். அவர் நியமித்த குழுவின் முடிவை ஆராய்ந்து பார்த்த பிறகு, “மாஸ்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்பைக் கலைக்கவோ, அவர்களுடைய வேலைக்குத் தடைவிதிக்கவோ எந்த ஆதாரமும் இல்லை” என்ற முடிவிற்கு வந்தார். கடைசியில், நம் சகோதரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பது சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. எதிர்த்தரப்பு வக்கீலோ அந்தத் தீர்ப்பை ஏற்காமல் மாஸ்கோ நகர நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மூன்று மாதங்கள் கழித்து மே 30, 2001-ல் நீதிபதி ப்ராஹோரீசேவா வழங்கிய தீர்ப்பை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே எதிர்த்தரப்பு வக்கீல் வேறொரு நீதிபதியின் முன்னிலையில் இந்த வழக்கை மறுவிசாரணை செய்வதற்கு அது உத்தரவிட்டது. இவ்வாறு, மூன்றாவது கட்டம் ஆரம்பமானது.
தற்காலிகத் தோல்வி
அக்டோபர் 30, 2001-ல் வெரா டூபின்ஸ்காயா என்ற நீதிபதியின் முன்னிலையில் மறுவிசாரணை துவங்கியது.c எதிர்த்தரப்பு வக்கீலான கான்ட்ராட்யேவா, யெகோவாவின் சாட்சிகள் மதப் பகைமையைத் தூண்டிவிடுகிறார்கள் என்ற அதே குற்றச்சாட்டை முன்வைத்தார்; ஆனால், மாஸ்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உரிமைகளைப் பாதுகாக்கவே அவர்களுக்குத் தடைவிதிக்க வேண்டுமென்ற புதிய கதையைச் சேர்த்துக்கொண்டார்! இந்த வேடிக்கையான கருத்தைக் கேட்டதுமே, எதிர்த்தரப்பு வக்கீல் வழங்கும் “பாதுகாப்பு” தங்களுக்குத் தேவையில்லை என மாஸ்கோவிலிருந்த 10,000 சாட்சிகளும் ஒரு மனுவில் கையெழுத்திட்டு நீதிபதியிடம் சமர்ப்பித்தார்கள்.
சாட்சிகள் குற்றவாளிகள் என்பதை நிரூபிக்க எந்த அத்தாட்சியும் கொடுக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்று எதிர்த்தரப்பு வக்கீல் கூறினார். ஏனெனில், சாட்சிகளுடைய பிரசுரங்களையும் அவர்களுடைய நம்பிக்கைகளையும் பற்றித்தான் விசாரணை நடத்தப்பட்டதே தவிர, அவர்களுடைய செயல்களைப் பற்றி அல்ல என்று கூறினார். ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பிரதிநிதி ஒருவரைச் சாட்சி சொல்ல அழைக்கப் போவதாகவும் கூறினார். அவர் அவ்வாறு கூறியது, சாட்சிகளுக்குத் தடைவிதிக்க சர்ச் குருமார் தீவிரமாக முயற்சித்தார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. ஆகவே, யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை அறிஞர்களின் ஒரு குழு மீண்டும் ஆராய வேண்டுமென மே 22, 2003-ல் நீதிபதி கட்டளையிட்டார்.
அறிஞர் குழுவின் அறிக்கையை ஆராய பிப்ரவரி 17, 2004-ல் விசாரணை மீண்டும் துவங்கியது. “திருமண பந்தத்தையும் குடும்ப பந்தத்தையும் கட்டிக்காக்கும்படி” வாசகர்களை நம் பிரசுரங்கள் உற்சாகப்படுத்துகின்றன என்றும், அவை பகைமையைத் தூண்டிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டிற்கு “எந்த ஆதாரமும் இல்லை” என்றும் அந்தக் குழு கூறியது. இதை மற்ற அறிஞர்களும் ஒப்புக்கொண்டார்கள். மதங்களின் சரித்திரத்தை ஆராயும் ஒருவரிடம், “யெகோவாவின் சாட்சிகள் ஏன் பிரசங்கிக்கிறார்கள்?” என்று நீதிபதி கேட்டார். அதற்கு அவர், “ஒவ்வொரு கிறிஸ்தவனும் பிரசங்கித்தே ஆகவேண்டும். ‘போய் எல்லாத் தேசத்தாருக்கும் பிரசங்கியுங்கள்’ என்றுதான் இயேசுவும் தம் சீடர்களுக்குக் கட்டளை கொடுத்தார், சுவிசேஷங்களும் அதையே கூறுகின்றன” என்றார். இவ்வளவு அத்தாட்சிகள் இருந்தபோதிலும், மார்ச் 26, 2004-ல் மாஸ்கோவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு நீதிபதி தடைவிதித்தார். ஜூன் 16, 2004-ல் மாஸ்கோவின் நகர நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை ஆதரித்தது.d அதைக் குறித்து நீண்டகால சாட்சி ஒருவர் இவ்வாறு கூறினார்: “சோவியத் காலத்தில் ரஷ்ய குடிமகன் நாத்திகனாக இருக்க வேண்டியிருந்தது. இன்றோ, அவன் ஆர்த்தடாக்ஸ் மதத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டியிருக்கிறது.”
தடையுத்தரவு வந்தபோது நம் சகோதரர்கள் என்ன செய்தார்கள்? பூர்வகால நெகேமியாவைப் போலவே நடந்துகொண்டார்கள். நெகேமியாவின் காலத்தில், எருசலேமின் மதிற்சுவரைத் திரும்பக் கட்டும் வேலைக்குப் பயங்கர எதிர்ப்பு வந்தது; இருந்தாலும், நெகேமியாவும் அவருடைய மக்களும் எந்தவித எதிர்ப்பையும் கண்டு பின்வாங்கவில்லை; எதிரிகள் தங்களைத் தடுத்து நிறுத்த அவர்கள் அனுமதிக்கவில்லை. மாறாக, அவர்கள் விடாமல் ‘அலங்கத்தைக் கட்டிவந்தார்கள்,’ “வேலை செய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (நெ. 4:1-6) அவர்களைப் போலவே, மாஸ்கோவிலிருந்த நம் சகோதரர்களும் நற்செய்தியை அறிவிக்கும் முக்கியமான வேலையிலிருந்து எதிரிகள் தங்களைத் தடுத்து நிறுத்த அனுமதிக்கவில்லை. (1 பே. 4:12, 16) யெகோவா தங்களுக்கு உதவுவார் என்பதில் முழு நம்பிக்கையோடு இருந்தார்கள்; இழுத்தடித்த இந்த வழக்கின் நான்காவது கட்டத்தைச் சந்திக்கத் தயாராய் இருந்தார்கள்.
தாக்குதல்கள் அதிகரித்தன
ஆகஸ்ட் 25, 2004-ல் அப்போதைய ஜனாதிபதியான விளாடிமிர் புதினுக்கு ஒரு மனுவை நம் சகோதரர்கள் அனுப்பிவைத்தார்கள். 76 தொகுதிகள் கொண்ட அந்த மனுவில் 3,15,000-திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டிருந்தார்கள்; அந்தத் தடையுத்தரவு தங்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். இதற்கிடையில், ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் குருமார்களின் சாயம் வெளுத்துவிட்டது. மாஸ்கோவிலுள்ள ஆர்த்தடாக்ஸ் சர்ச் தலைவர்களின் பிரதிநிதி ஒருவர், “யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை நாங்கள் முற்றிலுமாக எதிர்க்கிறோம்” என்று அறிவித்தார். இந்தத் தடையுத்தரவு “ஒரு மைல்கல், நல்ல செய்தி” என்று இஸ்லாமியத் தலைவர் ஒருவர் கூறினார்.
யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுகளை நம்பிய சில ரஷ்யர்கள் அவர்களைத் தைரியமாகத் தாக்க ஆரம்பித்தார்கள். மாஸ்கோவில் பிரசங்கித்துவந்த சில சாட்சிகளை எதிரிகள் அடித்து உதைத்தார்கள். கோபத்தில் கொதித்த ஒருவன், நம் சகோதரியை ஒரு வீட்டைவிட்டு விரட்டி அவர் முதுகில் மூர்க்கத்தனமாக எட்டி உதைத்தான்; கீழே விழுந்த அவருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்ல வேண்டியிருந்தபோதிலும், அவரைத் தாக்கியவன்மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அவர்கள் மற்ற சாட்சிகளைக் கைதுசெய்து, கைரேகையெடுத்து, புகைப்படம் பிடித்து, இரவு முழுவதும் சிறையிலேயே அடைத்து வைத்தார்கள். சாட்சிகள் வாடகைக்கு எடுத்திருந்த மன்றங்களின் மேனேஜர்களை எதிரிகள் மிரட்டினார்கள்; வேலை பறிபோய்விடும் என்று பயந்த அந்த மேனேஜர்கள் அதன்பின் சாட்சிகளுக்கு மன்றங்களைத் தர மறுத்துவிட்டார்கள். அதன் விளைவாக, அநேக சபைகள் வாடகைக்கு உபயோகித்து வந்த மன்றங்களை இனியும் உபயோகிக்க முடியாமல் போனது. இதனால், நான்கு மன்றங்கள் கொண்ட ஒரு ராஜ்ய மன்ற வளாகத்தை நாற்பது சபைகள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அதில் ஒரு சபை, பொதுப் பேச்சிற்காக காலை ஏழரை மணிக்குக் கூடிவர வேண்டியிருந்தது. “அதற்காக பிரஸ்தாபிகள் காலை ஐந்து மணிக்கே எழுந்திருக்க வேண்டியிருந்தது; இருந்தாலும், முகம் சுளிக்காமல் ஒரு வருடத்திற்கும் மேலாக அவ்வாறே கூடிவந்தார்கள்” என்று பயணக் கண்காணி ஒருவர் கூறினார்.
‘சாட்சி கொடுத்த’ ஒரு வழக்கு
மாஸ்கோ நீதிமன்றம் விதித்த தடையுத்தரவு சட்டவிரோதமானது என்பதை நிரூபிப்பதற்காக டிசம்பர் 2004-ல், நம் வக்கீல்கள் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். (பக்கம் 6-ல் உள்ள, “ரஷ்யாவின் தீர்ப்பு பிரான்சில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டது ஏன்?” என்ற பெட்டியைக் காண்க.) ஆறு வருடங்கள் கழித்து, அதாவது ஜூன் 10, 2010-ல், யெகோவாவின் சாட்சிகள் குற்றமற்றவர்கள் என்ற ஒருமித்த தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கியது.e நமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆராய்ந்து அவை முற்றிலும் ஆதாரமற்றவை என்று அது கூறியது. ரஷ்ய அரசாங்கம் தான் விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும், சாட்சிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய முடிந்தளவு முயல வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.—“நீதிமன்றத்தின் தீர்ப்பு” என்ற பெட்டியைப் பக்கம் 8–ல் காண்க.
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒப்பந்தம் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையைப் பாதுகாக்கிறது என்று ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ரஷ்யா மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளின் மாமன்றத்தில் அங்கம் வகிக்கும் மற்ற 46 நாடுகளும் தலைவணங்க வேண்டும். உலகம் முழுவதிலுமுள்ள அநேக நீதிபதிகளும், சட்ட வல்லுனர்களும், மனித உரிமைகள் பற்றி ஆராய்வோரும் இந்தத் தீர்ப்பில் அக்கறை காட்டுவார்கள். ஏன்? ஏனெனில், ஏற்கெனவே யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட எட்டு தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி ஐரோப்பிய நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. அதோடு, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஐக்கிய அரசு, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளின் உச்ச நீதிமன்றங்களில் யெகோவாவின் சாட்சிகளுக்குக் கிடைத்த ஒன்பது வெற்றிகளையும் அது சுட்டிக்காட்டியது. இப்போது, உலகம் முழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பயன்படுத்தி தங்கள் வணக்கத்தை ஆதரிக்க முடியும்.
“[உங்களை] ஆளுநர்களுக்கும் ராஜாக்களுக்கும் முன்பாக நிறுத்துவார்கள், அப்போது நீங்கள் அவர்களுக்கும் புறதேசத்தாருக்கும் சாட்சி கொடுப்பீர்கள்” என்று இயேசு தம் சீடர்களிடம் கூறினார். (மத். 10:18) கடந்த 15 வருடங்களாக மாஸ்கோவில் நடந்த இந்தப் போராட்டம், அங்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் யெகோவாவின் பெயரை என்றுமில்லாத அளவிற்கு அறிவிக்க நம் சகோதரர்களுக்கு வாய்ப்பை அளித்தது. புலனாய்வுகள், நீதிமன்ற வழக்குகள், ஒரு சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவை இந்த உலகத்தின் கவனத்தை யெகோவாவின் சாட்சிகளிடம் திருப்பின; இது சிறந்த ‘சாட்சியாக’ அமைந்தது; அதோடு “நற்செய்தி பரவுவதற்கு உதவியாக” இருந்தது. (பிலி. 1:12) இன்று மாஸ்கோவிலுள்ள சாட்சிகள் பிரசங்கிக்கும்போது, “உங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது அல்லவா?” என்று அநேகர் ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். அவர்கள் அப்படிக் கேட்பதால், நம் நம்பிக்கைகளைப் பற்றி அவர்களிடம் கூடுதலாகப் பேச நம் சகோதரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. உண்மையில், நாம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிப்பதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்தவே முடியாது. ரஷ்யாவிலுள்ள தைரியமிக்க நம் அன்பு சகோதர சகோதரிகளை யெகோவா தொடர்ந்து பாதுகாத்து ஆசீர்வதிக்கும்படி ஜெபம் செய்கிறோம்.
[அடிக்குறிப்புகள்]
a ஏப்ரல் 20, 1998-ல் இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இரண்டு வாரங்களுக்குப் பின், அதாவது மே 5-ல், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல் அளித்தது.
b “ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் வலுக்கட்டாயத்தால்தான் இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. ரஷ்யாவில் தன் நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முயலும் இந்த சர்ச், யெகோவாவின் சாட்சிகள் தடை செய்யப்படுவதைக் காண ஆவலோடு உள்ளது.”—அசோஸியேடட் பிரஸ், ஜூன் 25, 1999.
c ஆனால், சரியாக அதே தேதியில் பத்து வருடங்களுக்கு முன்பு ரஷ்யா ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது; அதில், சோவியத் அரசு யெகோவாவின் சாட்சிகளை மதத்தின் பெயரில் துன்புறுத்தியதாக அரசாங்கமே ஒப்புக்கொண்டிருந்தது.
d இந்தத் தடை, சட்டப்படி பதிவு செய்திருந்த பெயரில் மாஸ்கோவிலிருந்த சபைகள் இனியும் இயங்க முடியாதபடி செய்தது. இதன் காரணமாக நம் சகோதரர்கள் ஊழியம் செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள் என்று எதிரிகள் நினைத்தார்கள்.
e மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் உயர் குழு இந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று ரஷ்ய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது; ஆனால், நவம்பர் 22, 2010-ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அந்த உயர் குழு அந்த வேண்டுகோளை நிராகரித்தது. ஆகவே, ஜூன் 10, 2010-ல் வழங்கப்பட்ட தீர்ப்பே இறுதியானதும், அமல்படுத்தப்பட வேண்டியதாகவும் ஆனது.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
ரஷ்யாவின் தீர்ப்பு பிரான்சில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டது ஏன்?
பிப்ரவரி 28, 1996-ல் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திட்டது. (மே 5, 1998-ல் ரஷ்யா அதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது.) அதில் கையெழுத்திடுவதன் மூலம், அதன் குடிமக்களுக்குப் பின்வரும் உரிமைகள் இருப்பதாக ரஷ்யா அறிவித்தது:
‘மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், வீட்டிலும் பொது இடங்களிலும் தங்கள் மதத்தைப் பின்பற்றும் உரிமையும், விருப்பப்பட்டால் தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ளும் உரிமையும் இருக்கிறது.’—சட்டப்பிரிவு 9.
‘தாங்கள் நினைப்பதைப் பொறுப்புள்ள விதத்தில் வாயால் சொல்லவும் எழுத்தில் வடிக்கவும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும் உரிமை இருக்கிறது.’—சட்டப்பிரிவு 10.
‘அமைதியான கூட்டங்களில் கலந்துகொள்ளும் உரிமை இருக்கிறது.’—சட்டப்பிரிவு 11.
இந்த ஒப்பந்தம் மீறப்பட்டதால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் அல்லது அமைப்புகள், தங்கள் நாட்டிலுள்ள சட்டப்பூர்வ வழிமுறைகளை எல்லாம் உபயோகித்த பிறகும் நியாயம் கிடைக்காவிட்டால், பிரான்சில் ஸ்ட்ராஸ்பர்க்கிலிருக்கும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டலாம். (இந்த நீதிமன்றம் மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது.) மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் எண்ணிக்கைக்குச் சமமாக 47 நீதிபதிகள் அதில் இருக்கின்றனர். அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அனைத்தும் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
[பக்கம் 8-ன் பெட்டி]
நீதிமன்றத்தின் தீர்ப்பு
நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து எடுக்கப்பட்ட மூன்று சுருக்கமான குறிப்புகளைக் கவனியுங்கள்.
யெகோவாவின் சாட்சிகள் குடும்பங்களைச் சின்னாபின்னமாக்குகிறார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. அது பொய்யென்று நீதிமன்றம் தீர்மானித்தது. அது கூறியதாவது:
“ஒரு மதத்தைத் தேர்ந்தெடுக்கவும் அதைக் கடைப்பிடிக்கவும் மதப் பற்றுள்ளவர்களுக்கு இருக்கிற உரிமையை மதப் பற்றில்லாத அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்கள் எதிர்ப்பதும் மதிக்காதிருப்பதும்தான் பிரச்சினைக்கு மூலகாரணம்.”—பாரா 111.
யெகோவாவின் சாட்சிகள் “மூளை சலவை” செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை என்றும் நீதிமன்றம் கூறியது:
“சாட்சிகளால் வற்புறுத்தப்பட்டுத் தீர்மானம் எடுத்ததற்கு உதாரணமாக ஒருவருடைய பெயரைக்கூட [ரஷ்ய] நீதிமன்றங்கள் கொடுக்கவில்லை என்பது இந்த நீதிமன்றத்திற்கு ஆச்சரியமளிக்கிறது.”—பாரா 129.
யெகோவாவின் சாட்சிகள் இரத்தம் ஏற்றிக்கொள்ளாதிருப்பதால் அதன் அங்கத்தினர்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறார்கள் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டும் பொய்யென நீதிமன்றம் கூறியது:
“குறிப்பிட்ட சிகிச்சை முறையை ஏற்கவோ மறுக்கவோ, அல்லது மாற்று சிகிச்சை முறையைத் தெரிவுசெய்யவோ ஒருவருக்கு இருக்கும் உரிமை சுயமாகத் தீர்மானிக்கும் அவருடைய சுதந்திரத்தை மதிப்பதில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தகுதிவாய்ந்த, வயதுவந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சையையோ மருத்துவ சிகிச்சையையோ ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க உரிமை இருக்கிறது; அதைப் போலவே இரத்தம் ஏற்றிக்கொள்வதைப் பற்றியும் அவர் தீர்மானிக்கலாம்.”—பாரா 136.