“என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”
‘யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்’
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதும் கற்பிப்பதுமே இயேசுவின் பிரதான வேலையாக இருந்தது. (மாற்கு 1:14; லூக்கா 8:1 ) கிறிஸ்துவின் சீஷர்கள் அவரைப் பின்பற்ற ஆசைப்படுவதால், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய பைபிள் செய்தியை போதிப்பதை தங்களுடைய வாழ்க்கையில் முதன்மையாக கருதுகிறார்கள். (லூக்கா 6:40 ) இயேசு பூமியில் வாழ்ந்தபோது ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அது நிரந்தர புத்துணர்ச்சியைத் தந்ததைப் போலவே இன்றும் ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்பவர்களுக்கு அது நிரந்தர புத்துணர்ச்சி அளிப்பதை காண்பது யெகோவாவின் சாட்சிகளின் இதயத்திற்கு உண்மையில் இதமளிக்கிறது.—மத்தேயு 11:28-30.
கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பதைத் தவிர, வியாதியஸ்தரை குணப்படுத்துவது, பசியில் வாடுவோருக்கு உணவளிப்பது போன்ற வேறுசில நற்கிரியைகளையும் இயேசு செய்தார். (மத்தேயு 14:14-21 ) அது போலவே, பைபிளைப் போதிப்பதோடு, கஷ்டப்படுவோருக்கு உதவிகளையும் யெகோவாவின் சாட்சிகள் செய்கின்றனர். சொல்லப்போனால், வேதவசனங்கள் ‘எந்த நற்கிரியையுஞ் செய்ய’ கிறிஸ்தவர்களைத் தயார்படுத்தி, ‘யாவருக்கும் நன்மை செய்ய’ அவர்களை உந்துவிக்கின்றன.—2 தீமோத்தேயு 3:16, 17; கலாத்தியர் 6:10.
‘நமது சகோதரர்கள் அங்கே இருந்தார்கள்’
செப்டம்பர் 1999-ல் தைவானை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. சில மாதங்களுக்குப்பின், அடைமழையும் பனிப்பாறை சரிவும் வெனிசுவேலாவின் சரித்திரத்திலேயே மிகவும் மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றை ஏற்படுத்தியது. மிக சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்குகள் மொஸாம்பிக் நாட்டை சின்னாபின்னமாக்கின. இந்த மூன்று சம்பவங்களிலும், பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வதற்கு, உணவு, தண்ணீர், மருந்து, துணிமணிகள், கூடாரங்கள், சமையல் கருவிகள் ஆகியவற்றுடன் யெகோவாவின் சாட்சிகள் அங்கு விரைவில் வந்துசேர்ந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உதவி புரியும் தொண்டர்கள் தற்காலிக ‘கிளினிக்கை’ நிறுவினார்கள்; கட்டுமான பணி தொண்டர்கள் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக் கொடுத்தார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் பெற்ற காலத்திற்கேற்ற உதவியால் மனம் நெகிழ்ந்து போனார்கள். “நாங்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்திருந்த சமயத்தில் நம்முடைய சகோதரர்கள் அங்கே இருந்தார்கள்” என மால்யோரி சொல்கிறார்; வெனிசுவேலாவில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு இவருடைய வீட்டை தரைமட்டமாக்கியிருந்தது. அவருடைய குடும்பத்திற்காக புத்தம் புதிய வீட்டை தொண்டர்கள் கட்டிக்கொடுத்த பிறகு, மால்யோரி இவ்வாறு வியந்து கூறினார்: “யெகோவா எங்களுக்கு செய்திருக்கிற அனைத்திற்கும் நாங்கள் ஒருபோதும் கைமாறு செய்ய முடியாது!” வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக கட்டப்பட்ட தங்களுடைய வீடுகளுக்குரிய சாவிகளை பெற்றுக்கொண்டபோது, அந்த முழுக் கூட்டத்தாரும் “யெகோவா நம் அடைக்கலம்” என்ற ராஜ்ய பாடலை உணர்ச்சி பொங்க பாடத் தொடங்கினார்கள். a
கஷ்டப்படுவோருக்கு உதவி செய்தது தொண்டர்களுக்கும் புத்துணர்ச்சி தந்தது. “மிகவும் பாதிக்கப்பட்டிருந்த இந்த சகோதரர்களுக்கு உதவி செய்ய முடிந்ததைக் குறித்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்” என மார்சிலோ குறிப்பிட்டார்; இவர் மொஸாம்பிக் அகதிகள் முகாமில் நர்ஸாக பணிபுரிந்தவர். தைவானைச் சேர்ந்த ஹ்வாங் என்ற தொண்டர் இவ்வாறு கூறினார்: “கஷ்டத்திலிருந்த சகோதரர்களுக்கு உணவு வழங்குவதிலும் கூடாரங்கள் அமைத்துக் கொடுப்பதிலும் பங்குகொண்டது அதிக சந்தோஷத்தை தந்தது. அது விசுவாசத்தைப் பலப்படுத்தியது.”
பலன்தரும் தொண்டர் திட்டம்
இந்தத் தொண்டர் சேவை உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான சிறைக் கைதிகளுக்கும் ஆன்மீக புத்துணர்ச்சியை தந்திருக்கிறது. எப்படி? சமீப ஆண்டுகளில், ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே சுமார் 4,000 சிறைகளில் உள்ள 30,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் பைபிள் பிரசுரங்களை அளித்திருக்கிறார்கள். அதோடு, சாத்தியமான இடங்களில், சாட்சிகள் தனிப்பட்ட விதமாக சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு பைபிள் படிப்புகளையும் கிறிஸ்தவ கூட்டங்களையும் நடத்துகிறார்கள். கைதிகள் பயனடைகிறார்களா?
பைபிள் படிக்கும் கைதிகள் சிலர் சக கைதிகளுடன் கடவுளுடைய வார்த்தையின் புத்துணர்ச்சியூட்டும் போதனைகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்கிறார்கள். அதனால், யெகோவாவை ஒன்றுசேர்ந்து வணங்கும் கைதிகளின் தொகுதிகள் இப்பொழுது உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற சிறைச்சாலைகளில் இருக்கின்றன. அ.ஐ.மா., ஆரிகானிலுள்ள ஒரு கைதி “எங்களுடைய தொகுதி செழித்தோங்கி வருகிறது” என 2001-ல் அறிவித்தார். “ராஜ்ய பிரஸ்தாபிகள் நாங்கள் 7 பேர் இருக்கிறோம், 38 பைபிள் படிப்புகள் நடத்துகிறோம். 25-க்கும் அதிகமானோர் பொதுப் பேச்சுக்கும் காவற்கோபுர படிப்புக்கும் ஆஜராகிறார்கள், [கிறிஸ்துவின் மரண ] நினைவு ஆசரிப்பில் 39 பேர் கலந்துகொண்டார்கள். இன்னும் மூவர் சீக்கிரத்தில் முழுக்காட்டுதல் எடுப்பார்கள்!”
பயன்களும் சந்தோஷங்களும்
இந்தத் தொண்டர் திட்டம் பலன் தருவதை சிறை அதிகாரிகள் கவனித்திருக்கிறார்கள். அதிகாரிகளை மிகவும் கவருவது என்னவென்றால், இந்தத் தொண்டர் சேவை திட்டத்தால் வரும் நீடித்த பயனே. ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “பத்து ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இத்திட்டத்தில், யெகோவாவின் சாட்சியாக சிறையில் முழுக்காட்டப்பட்டு விடுதலை பெற்ற சிறைக்கைதி ஒருவர்கூட மீண்டும் சிறைக்கு வரவில்லை—மற்ற தொகுதிகளைச் சேர்ந்தவர்களில் 50-60 சதவீதத்தினர் மீண்டும் சிறைவாசம் பெற்றிருக்கிறார்கள்.” சாட்சி தொண்டர்கள் அடைந்த இந்தப் பலன்களை கண்டு மனம் கவரப்பட்ட இடாஹோவைச் சேர்ந்த சிறை மதகுரு ஒருவர் யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறினார்: “நான் தனிப்பட்ட விதமாக உங்களுடைய மத நம்பிக்கைகளோடு ஒத்துப்போகாவிட்டாலும், உங்களுடைய அமைப்பு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.”
சிறையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது தொண்டர்களுக்கும் பலனளிக்கிறது. முதன்முறையாக ராஜ்ய பாடலை பாடிய கைதிகளின் தொகுதிக்கு கூட்டம் நடத்திய பிறகு, தொண்டர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “யெகோவாவுக்குத் துதி பாடுவதில் 28 பேர் சேர்ந்து கொண்டதைக் காண்பது உற்சாகமூட்டியது. அவர்கள் சத்தமாக பாடினார்கள்! இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் ஆஜராயிருந்தது எப்பேர்ப்பட்ட ஒரு பாக்கியம்!” அரிஜோனாவிலுள்ள சிறைச்சாலைகளை சந்திக்கும் தொண்டர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “இந்த விசேஷித்த வேலையில் பங்குகொண்டது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!”
உலகமுழுவதிலும் உள்ள சாட்சி தொண்டர்கள், “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளை உடனடியாக ஆமோதிக்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:35 ) எல்லாருக்கும் நன்மை செய்யும்படி சொல்லும் பைபிளின் புத்திமதியைப் பின்பற்றுவது உண்மையிலேயே புத்துணர்ச்சி அளிக்கிறது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.—நீதிமொழிகள் 11:25.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட, யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் என்ற பாட்டுப் புத்தகத்தில் 85-ம் பாடலை காண்க.
[பக்கம் 8-ன் படம்]
வெனிசுவேலா
[பக்கம் 8-ன் படம்]
தைவான்
[பக்கம் 8-ன் படம்]
மொஸாம்பிக்