மயன்மார் சூறாவளியில் சிக்கியவர்களுக்கு நிவாரண உதவி
அன்று மே 2, 2008. அந்த நாள் ஒரு கருப்பு நாள். நார்கிஸ் சூறாவளி மயன்மாரைச் சூறையாடிச் சீரழித்த நாள். இந்தச் சூறாவளியைப் பற்றிய செய்தி காட்டுத்தீ போல உலகெங்கும் பரவி, தலைப்புச் செய்தியானது. சூறாவளியினால் பொங்கியெழுந்த ராட்சத அலைகள் ஐராவதி ஆற்றின் கழிமுகப் பகுதியை மூழ்கடித்தன; ஏறக்குறைய 1,40,000 பேர் உயிரிழந்ததாக அல்லது காணாமற்போனதாகச் செய்திகள் வெளியாயின.
ஆனால், அந்தப் பகுதியிலிருந்த யெகோவாவின் சாட்சிகளில் ஒருவருக்குக்கூட உயிர்ச்சேதம் ஏற்படவில்லை, இது அதிசயம் ஆனால் உண்மை. இதற்கு ஒரு முக்கியக் காரணம், உறுதியாகக் கட்டப்பட்டிருந்த அவர்களுடைய ராஜ்ய மன்றங்களில் அவர்கள் தஞ்சம் புகுந்ததுதான். ஓர் இடத்தில், நீர்மட்டம் 15 அடி உயரத்திற்கு ஏற ஏற, அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகள் 20 பேரும் கிராமவாசிகள் 80 பேரும் ராஜ்ய மன்றக் கூரையின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டார்கள்; அதுவும் ஒன்பது மணிநேரத்திற்கு! அவர்கள் அத்தனை பேரும் உயிர்தப்பினார்கள்! ஆனால், அதே கிராமத்தைச் சேர்ந்த 300 பேர் பலியானதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். பல கிராமங்களில், ராஜ்ய மன்றக் கட்டிடங்கள் மட்டுமே சூறாவளியின் சீற்றத்தைத் தாக்குப்பிடித்து நின்றன.
ஐராவதி ஆற்றின் முகத்துவாரப் பகுதியிலுள்ள போத்திங்கோன் சபையாருக்கு உதவி அளிப்பதற்காக யாங்கூன் நகரத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம், சூறாவளி தாக்கி இரண்டு நாட்களுக்குப் பின்பு நிவாரணக் குழு ஒன்றை அனுப்பி வைத்தது. அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் அரிசி, உலர் நூடுல்ஸ், தண்ணீர், மெழுகுவர்த்திகள் ஆகிய பொருள்களை ஏராளமாக ஏற்றிக்கொண்டு போத்திங்கோன் கிராமத்திற்குக் கிளம்பினார்கள்; சூறாவளியினால் சின்னாபின்னமாகியிருந்த பகுதிகள் வழியே பயணித்தார்கள்; அழுகிக்கொண்டிருந்த சடலங்களை வழிநெடுக பார்த்தார்கள்; வழிப்பறிக் கொள்ளையரிடம் சிக்கிக்கொள்ளாமல் ஒருவழியாக அந்தக் கிராமத்தை வந்தடைந்தார்கள். நிவாரணப் பணிக்காக அந்தப் பகுதிக்கு வந்த முதல் குழுவினர் அவர்கள்தான். அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய பின்பு, அவர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக பைபிள் பேச்சுகளைக் கொடுத்தார்கள்; அதுமட்டுமல்ல, அவர்களுடைய உடமைகளையெல்லாம் சூறாவளி சுருட்டிக்கொண்டு போனதால் அவர்களுக்கு பைபிள்களையும் பைபிள் பிரசுரங்களையும் கொடுத்தார்கள்.
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய மனப்பான்மையைப் பாராட்ட வார்த்தைகள் போதாது. சூறாவளி பதம்பார்த்த ஐராவதி பகுதியிலுள்ள ஒரு யெகோவாவின் சாட்சி சொல்கிறார்: “எங்களிடம் இருந்த எல்லாமே போய்விட்டது. எங்கள் வீடுகளெல்லாம் சேதமடைந்துவிட்டது. பயிர்களெல்லாம் நாசமாகிவிட்டது. குடிநீரெல்லாம் அசுத்தமாகிவிட்டது. ஆனாலும், சகோதர சகோதரிகள் மற்றவர்களைப் போலக் கவலைப்படுகிறதில்லை. யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் மலைபோல் நம்பியிருக்கிறார்கள். அமைப்பு என்ன சொன்னாலும், அதை நாங்கள் செய்வோம்; ஒருவேளை இந்தக் கிராமத்திலேயே இருக்க வேண்டியிருந்தாலும்சரி, வேறெங்காவது போக வேண்டியிருந்தாலும்சரி.”
உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை நிவாரணக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இடத்தை நோக்கி, சொத்துசுகங்களையெல்லாம் இழந்திருந்த யெகோவாவின் சாட்சிகள் 30 பேர் பத்து மணிநேரப் பயணத்தை மேற்கொண்டார்கள்; வழியெல்லாம் ராஜ்யப் பாடல்களைச் சந்தோஷமாகப் பாடிக்கொண்டே சென்றார்கள். அந்த இடத்திற்கு அருகே உள்ள ஓர் ஊரில் யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார மாநாடு ஒன்று நடைபெறுவதாக வழியில் அவர்கள் கேள்விப்பட்டார்கள். அதனால், முதலில் ஆன்மீக உணவைப் பெற்று கிறிஸ்தவத் தோழமையை அனுபவிக்கத் தீர்மானித்து, அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.
சூறாவளியின் சீற்றத்தில் சிக்கிய பகுதி முழுவதிலும், யெகோவாவின் சாட்சிகளுடைய 35 வீடுகள் நாசமாயின, 125 வீடுகள் ஓரளவு சேதமடைந்தன, 8 ராஜ்ய மன்றங்கள் சிற்சில சேதங்களை எதிர்ப்பட்டன. நல்ல வேளை, கிளை அலுவலகக் கட்டிடங்களுக்குப் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
சூறாவளிக் காற்று சுழற்றி அடித்ததில் பெரியபெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து அருகிலிருந்த சாலைகளில் விழுந்து கிடந்ததால், ஆரம்பத்தில், யாராலுமே கிளை அலுவலகத்திற்குப் போகவும் முடியவில்லை, அங்கிருந்து வெளியே வரவும் முடியவில்லை. புயல்காற்று அடங்கி சில மணிநேரத்திற்குள்ளேயே, கிளை அலுவலக ஊழியர்கள் 30-க்கும் அதிகமானோர், அந்த மரங்களையெல்லாம் இயந்திரங்களின் உதவியின்றி தாங்களாகவே அப்புறப்படுத்த ஆரம்பித்தார்கள். அப்படி அவர்கள் வேலை செய்துகொண்டிருந்ததை வேடிக்கை பார்த்த மக்கள் அசந்துபோய் நின்றார்கள். யெகோவாவின் சாட்சிகளான பெண்கள் சிலர், கொஞ்ச நேரத்திற்குள் குளிர்பானங்களையும் பழவகைகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள்; வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்கும் அக்கம்பக்கத்திலிருந்த மற்ற ஆட்களுக்கும் அவற்றைக் கொடுத்தார்கள்; அந்த ஆட்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. நடந்துகொண்டிருந்ததைக் கவனித்த பத்திரிகை நிருபர் ஒருவர், “இவ்வளவு ஜோராக வேலை செய்கிற இவர்கள் யார்?” என்று கேட்டார். யாரென்று தெரிந்துகொண்ட பின்பு, “யெகோவாவின் சாட்சிகள் காட்டுகிற இப்படிப்பட்ட ஒற்றுமை உணர்வை மற்றவர்களும் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்றார்.
மயன்மாரில் நிவாரணப் பணியை ஒழுங்கமைப்பதற்காக, யெகோவாவின் சாட்சிகள் காலம் தாழ்த்தாமல் அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு நிவாரணக் குழுக்களை அமைத்தார்கள். இந்தக் குழுக்களில் நூற்றுக்கணக்கான வாலண்டியர்கள் சேவை செய்தார்கள். வீடுகளை இழந்து பரிதவித்துக்கொண்டிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு, ஒருசில நாட்களுக்குள் புதிய வீடுகள் கட்டித்தரப்பட்டன. இந்தக் குழுக்களில் ஒன்று, யெகோவாவின் சாட்சி ஒருவருக்குப் புதிய வீடு கட்டித்தருவதற்காக வந்தபோது, அவருடைய பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்! நடப்பதையெல்லாம் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண்மணி ஆதங்கத்தோடு இவ்வாறு சொன்னார்: “அவள் யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் அவளுடைய சர்ச் ஆட்களே வீடு கட்டித்தருகிறார்கள். ஆனால், புத்த மதத்தைச் சேர்ந்த என் நண்பர்கள் யாருமே இந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. அவள் என்னிடம் பிரசங்கித்தபோதே அதைக் கேட்டு நானும் ஒரு யெகோவாவின் சாட்சி ஆகியிருக்க வேண்டும்!”
கட்டுமானப் பணியாளர்களும் நிவாரணக் குழுவினரும் தன்லின் என்ற ஊரில் ஒரு வீட்டைப் பார்வையிடச் சென்றார்கள்; கிட்டத்தட்ட அந்த வீடு முழுவதுமே நாசமாகியிருந்தது; ஆனால், அந்த வீட்டிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் சொன்ன வார்த்தைகள் அவர்களை நெகிழ வைத்தன: “எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஒரு பிரச்சினையும் இல்லை! எங்கள் வீடு அப்படியொன்றும் சேதமாகிவிடவில்லை. எங்களால் சமாளிக்க முடியும், ஆனால், வீடு வாசல் எதுவும் இல்லாமல் சில யெகோவாவின் சாட்சிகள் தவித்துக்கொண்டிருக்கிறார்களே, முதலில் அவர்களுக்குப் போய் உதவுங்கள்!”
சூறாவளியின்போது, யாங்கூன் நகரத்திலுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த சிலர், அங்கிருந்த ஒரு சர்ச்சில் தஞ்சம் புகுவதற்கு முயன்றார்கள். ஆனால், அந்த சர்ச்சின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஒருவராலும் அதற்குள் நுழைய முடியவில்லை. கோபத்தில் கொதித்தெழுந்த அவர்கள் சர்ச் கதவையே உடைத்துவிட நினைத்தார்கள். இதற்கு நேர்மாறாக, யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ராஜ்ய மன்றங்களில் பலர் தஞ்சம் புகுவதற்கு இடமளித்தார்கள். உதாரணமாக, டாலா என்ற ஊரில் ஒரு தம்பதியர், பாதுகாப்பான இடம் தேடி அங்கு ஓடிவந்திருந்த அக்கம்பக்கத்து ஆட்கள் 20 பேருக்கு அங்கிருந்த ராஜ்ய மன்றத்தில் அடைக்கலம் கொடுத்தார்கள். விடிந்ததும் வீடுதிரும்ப அந்த ஆட்களுக்கு வீடு இருக்கவில்லை, பசி வேறு அவர்களை வாட்டியெடுத்தது. அப்போது, அந்தக் கணவர் அரிசி விற்றுக்கொண்டிருந்த ஓர் ஆளைக் கண்டு, போதுமானளவு அரிசி வாங்கி எல்லாருக்கும் சாப்பாடு போட்டார்.
யாங்கூனில் உள்ள ஒரு குடும்பத்தில், சிலர் யெகோவாவின் சாட்சிகள், மற்றவர்கள் வெவ்வேறு சர்ச்சுக்குச் செல்கிறவர்கள். சூறாவளிக்குப் பிறகு, அந்தக் குடும்பத்தார் எல்லாருமே ராஜ்ய மன்றத்தில் நடந்த ஒரு கூட்டத்திற்கு வந்தார்கள். காரணம்? அவர்களில் ஒருவர் சொல்கிறார்: “சூறாவளிக்குப் பிறகு எங்களை வந்து சந்திப்பதாக எங்கள் சர்ச்சுக்காரர்கள் சொன்னார்கள், ஆனால் வரவே இல்லை. யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் வந்தார்கள். உங்கள் ஆட்கள்தான் எங்களுக்கு அரிசியும் தண்ணீரும் கொடுத்தார்கள். மற்ற சர்ச்சுக்காரர்களுக்கும் உங்கள் ஆட்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்!” யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத அந்தக் குடும்பத்தாருக்கு அன்றைய காவற்கோபுர கட்டுரையின் கலந்தாலோசிப்பு ரொம்பவே பிடித்துப்போனது; அக்கட்டுரையின் தலைப்பு: “உதவிக்காக நாம் கூப்பிடும்போது யெகோவா கேட்கிறார்.” அந்தக் கலந்தாலோசிப்பின்போது, அவர்கள் நிறையப் பதில்களைக்கூடச் சொன்னார்கள்.
யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துக்கொண்டிருந்த ஒரு பெண், சூறாவளி தாக்கிய மறுவாரம், சபைக் கூட்டத்திற்கு வந்தாள். அந்தக் கூட்டத்தில், கிளை அலுவலகத்திடமிருந்து வந்த ஒரு கடிதம் வாசிக்கப்பட்டது; சூறாவளியின்போது அளிக்கப்பட்ட உதவிகளைப் பற்றியும், உயிர்தப்பியவர்களின் அனுபவங்களைப் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் வாசிக்கப்பட்டபோது, அந்தப் பெண் அழ ஆரம்பித்துவிட்டாள். யெகோவாவின் சாட்சிகள் எல்லாருமே கண்டுபிடிக்கப்பட்டுப் பத்திரமாக இருக்கிறார்கள் என்பதைக் கேட்டு ரொம்பவே சந்தோஷப்பட்டாள், மனம் நெகிழ்ந்துபோனாள். கூட்டம் முடிந்தபின், அவளுக்குச் சில அத்தியாவசியப் பொருள்கள் கொடுக்கப்பட்டன, அவளுடைய வீட்டிற்கு அருகிலேயே ஒரு கூடாரமும் போட்டுத் தரப்பட்டது. தன்னை யெகோவாவின் சாட்சிகள் மிகமிக நன்றாகக் கவனித்துக்கொண்டார்களென அவள் தெரிவித்தாள்.
‘ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீடர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்’ என்று இயேசு கூறினார். (யோவான் 13:35) உண்மையான விசுவாசம் நல்ல நல்ல செயல்களில் வெளிப்படும் என்பதை அவருடைய சீடரான யாக்கோபும் குறிப்பிட்டார். (யாக்கோபு 2:14-17) அந்த வார்த்தைகளை யெகோவாவின் சாட்சிகள் உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்கிறார்கள், அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்; இவ்வாறு, அத்தகைய அன்பைக் காட்டக் கடும் முயற்சியெடுக்கிறார்கள். (w09 3/1)
[பக்கம் 27-ன் சிறுகுறிப்பு]
உண்மையான விசுவாசம் நல்ல நல்ல செயல்களில் வெளிப்படும் என்று பைபிள் சொல்கிறது