நல்ல அரசாங்கத்தைத் தேடி
“உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலை சகஜமாகி வருகிறது. இதன் காரணமாக பூகோள பிரச்சினைகள் பல எழுந்த வண்ணம் இருக்கின்றன. இவற்றை தனி நாடுகளால் தீர்க்கவே முடிவதில்லை. உலகளவில் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே மனிதர்கள் எதிர்ப்படும் கணக்குவழக்கில்லா அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சமாளிக்க முடியும்.”—குலாம் ஊமார், பாகிஸ்தானிய அரசியல் ஆய்வாளர்.
இன்றைய உலகில் எதிரும் புதிருமான விஷயங்கள் சர்வசாதாரணமாக காணப்படுகின்றன. சுற்றிமுற்றிப் பார்த்தால் பொருள் வளங்களுக்கு குறைச்சலே இல்லை, ஆனால் அநேகரோ வயிற்றுப்பிழைப்புக்கான திண்டாட்டத்தில் விழிபிதுங்கிதான் நிற்கிறார்கள். எக்காலத்தவரையும்விட இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்பவர்களே மிகச் சிறந்த கல்விமான்களாகவும் அறிவுஜீவிகளாகவும் ஜொலிக்கிறார்கள், ஆனால் நிரந்தர வேலை கிடைக்காமல் அங்குமிங்குமாய் அலைந்து திரிகிற அதிகமதிகமானோரும் இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தவர்தான். முன்பு எப்போதையும்விட இப்போது மனிதர்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பது போல தோன்றினாலும், உண்மையில் பயமும் அநிச்சயமுமான சூழலில்தான் ஏராளமானோர் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மனதை சுண்டியிழுக்கும் ஏராளமான வசதிவாய்ப்புகள் நாம் திரும்பின பக்கமெல்லாம் குவிந்து கிடப்பதாக தோன்றலாம், ஆனால் சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் ஊடுருவியிருக்கிற ஊழலாலும் அக்கிரமத்தாலும் அநேகர் நம்பிக்கையிழந்துதான் போயிருக்கிறார்கள்.
மனிதவர்க்கத்தை திணறடிக்கச் செய்யும் பிரச்சினைகளைப் பார்க்கும்போது, எந்தவொரு தனி தேசமானாலும் சரி, பல தேசங்கள் சேர்ந்தாலும் சரி, ஒன்றுமே செய்ய முடியாதளவுக்கு நிலைமை கைமீறிப் போயிருக்கிறது என்றே சொல்லலாம். எனவே, உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும் உண்மையில் அனுபவிக்க வேண்டுமானால், எல்லா தேசங்களும் ஒரேவொரு அரசாங்கத்தின் கீழ் ஒன்றுபட வேண்டுமென்ற முடிவுக்கு அநேகர் வந்திருக்கின்றனர். உதாரணத்திற்கு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இது போன்ற ஒரு கருத்தைத்தான் வெகு காலமாக பேசி வந்தார். “இவ்வுலகிலுள்ள பெரும்பாலோர் சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழவே விரும்புவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும் . . . ஒரே உலக அரசாங்கத்தை ஏற்படுத்துவதன் மூலமே சமாதானத்திற்கான மனிதனின் ஆசையை நிறைவேற்ற முடியும்” என 1946-ல் அவர் ஆணித்தரமாக கூறினார்.
இதை அவர் சொல்லி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டிருந்தாலும், அந்த அதிமுக்கிய தேவை இன்னும் நிறைவேறின பாடில்லை. பிரான்சிலுள்ள பாரிஸ் நகரின் லா மான்ட் என்ற செய்தித்தாளில் வெளிவந்த ஒரு கருத்துரை, 21-ம் நூற்றாண்டின் சவால்களை பட்டியலிட்டு இவ்வாறு குறிப்பிட்டது: “உலகின் எந்த மூலை முடுக்கில் இனப் படுகொலைகள் நடந்தாலும் உடனடியாக அந்த விவகாரத்தில் தலையிட்டு அதை சரிசெய்யும் திறமைமிக்க நீதித்துறையையும் நிர்வாகத்துறையையும் அரசியலமைப்பையும் கொண்ட ஒரு சர்வதேச அரசாங்கத்தை அமைப்பது மிக மிக அவசியமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த முழு பூமியும் ஒரே நாடுதான் என்ற எண்ணத்தை இன்றிலிருந்து மனதார ஏற்றுக்கொள்வதும் அவசியமாக இருக்கிறது.” மனிதகுலம் எதிர்காலத்தில் சமாதானத்தோடு வாழ்வதற்காக இப்படிப்பட்ட ஒன்றை சாதிக்க யாருக்கு அல்லது எதற்கு வல்லமையும் திறமையும் இருக்கிறது?
ஐக்கிய நாட்டு சபையினால் முடியுமா?
ஐக்கிய நாட்டு சபை கட்டாயம் உலக சமாதானத்தை கொண்டு வருமென அநேகர் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அப்படியானால், ஐநா தான் உலகிற்கு உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வரப்போகிற அரசாங்கமா? காதுகளுக்கு இனிமையாக ஒலிக்கிற எக்கச்சக்கமான அரசியல் பேச்சுகள் உத்வேகத்தை அளிப்பதுடன் நம்பிக்கையூட்டுபவையாகவும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக, ஐக்கிய நாடுகளின் பொதுப் பேரவை 2000-ம் ஆண்டில், தனது “ஆயிர வருட உறுதிமொழி”யில் பின்வரும் முக்கிய தீர்மானத்தை அறிவித்தது: “கடந்த பத்து ஆண்டுகளில் உள்நாட்டு, வெளிநாட்டுப் போர்களால் 50 லட்சத்திற்கும் அதிகமான உயிர்கள் பலியாகியிருக்கின்றன; போர் எனும் இந்த அவலத்திலிருந்து எங்கள் மக்களை விடுவிப்பதற்காக முடிந்தமட்டும் உழைப்போம்.” இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டதன் காரணமாக, ஐநா சபைக்கு பலதரப்பிலிருந்து பாராட்டும், புகழாரமும் கிடைத்திருக்கின்றன, அதுமட்டுமா, சமாதானத்திற்காக 2001-ம் வருடத்தில் நோபல் பரிசும் அதற்கு கிடைத்திருக்கிறது. “ஐக்கிய நாடுகளின் மூலமாகத்தான் உலகளாவிய சமாதானத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட முடியும்” என்று ஐநா சபையை கௌரவிக்கும் விதத்தில் நார்வேஜியன் நோபல் கமிட்டி அறிவித்தது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, 1945-ல் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய நாட்டு சபை நிஜமான, நிலையான உலக சமாதானத்தை நிறுவ முடிந்த ஓர் அரசாங்கமென நிரூபித்திருக்கிறதா? இல்லை; ஏனென்றால், அதன் உறுப்பு நாடுகளின் சுயநலமும் தேசப்பற்றுமிக்க நாட்டங்களும் அதன் ஏராளமான முயற்சிகளை முறியடித்திருக்கின்றன. ஐநா என்பது “உலக மக்களின் கருத்துகளை மதிப்பிட்டுக் காட்டும் வெறும் ஓர் அளவுகோல்; அதன் பேச்சு வார்த்தைக்கான நிகழ்ச்சிப் பட்டியல் முழுவதிலும், பல ஆண்டுகளாக வாதாடப்பட்டு இதுவரை தீர்வுகாணாத பிரச்சினைகளே இடம்பெறுகின்றன” என்று ஒரு செய்தித்தாளின் பதிப்பாசிரியர் சொன்னார்; ஐநா பற்றிய பொது மக்களின் கருத்து என்னவென்று இதிலிருந்து தெரிய வருகிறது. எனவே, பின்வரும் கேள்வி இன்னமும் பதிலளிக்கப்பட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது: என்றாவது ஒருநாள் உலக தேசங்கள் அனைத்தும் நிஜமாகவே ஒன்றிணையுமா?
ஆம், உலக தேசமெல்லாம் சீக்கிரத்தில் ஒன்றிணையப் போகிறதென பைபிள் வெளிப்படுத்துகிறது. அது எவ்வாறு நடந்தேறும்? எந்த அரசாங்கம் அதை சாத்தியமாக்கும்? பதில்களை தெரிந்துகொள்ள தயவுசெய்து அடுத்த கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.
[பக்கம் 3-ன் படம்]
ஓர் உலக அரசாங்கத்திற்கான தேவையைப் பற்றி ஐன்ஸ்டீன் பேசினார்
[படத்திற்கான நன்றி]
ஐன்ஸ்டீன்: U.S. National Archives photo