மரணத்திற்கு பின் வாழ்க்கை—பைபிள் கூறுவதென்ன?
“நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.”—ஆதியாகமம் 3:19.
1, 2. (அ) மரணத்திற்கு பின் வாழ்க்கையைப் பற்றிய என்ன வித்தியாசமான கருத்துகள் நிலவுகின்றன? (ஆ) மனிதனுடைய உண்மையான நிலையைப் பற்றி பைபிள் போதிப்பதை அறிய நாம் எதை ஆராய வேண்டும்?
“நித்தியகால துன்பம் என்ற கோட்பாடு, சிருஷ்டிகளிடம் கடவுள் அன்புகூருகிறார் என்ற நம்பிக்கையோடு முரண்படுகிறது. . . . ஆன்மா, ஏதோ சில வருடங்கள் செய்த தவறுகளுக்காக, திருந்துவதற்கு வாய்ப்பே கொடுக்காமல் நித்தியகாலத்திற்கும் தண்டிப்பதென்பது நியாயத்தன்மைக்கு முற்றிலும் எதிரானது” என இந்துமத தத்துவஞானி நிகிலானந்தா கூறினார்.
2 நிகிலானந்தாவைப் போலவே இன்று அநேகர் நித்திய வாதனை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய் உணருகின்றனர். அதைப்போலவே மற்றவர்கள், நிர்வாணா நிலையை அடைவது, இயற்கையோடு கலப்பது போன்ற கருத்துகளை புரிந்துகொள்வதையும் கடினமாக காண்கின்றனர். தங்கள் நம்பிக்கைகள் பைபிள் அடிப்படையிலானவை என உரிமைபாராட்டுபவர்கள் மத்தியிலும்கூட மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறான், மரித்த பிறகு அவனுக்கு என்ன ஏற்படுகிறது என்பதைப் பற்றிய வேறுபடும் கருத்துகள் நிலவுகின்றன. ஆனால் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? இதற்கான பதிலைக் கண்டுபிடிக்க, “ஆத்துமா” என பைபிளில் சில சமயங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய, கிரேக்க வார்த்தைகளின் அர்த்தங்களை நாம் ஆராயலாமா?
பைபிளின்படி ஆத்துமா
3. (அ) எபிரெய வேதாகமத்தில் பெரும்பாலும் “ஆத்துமா” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை எது, அதன் அடிப்படை அர்த்தம் என்ன? (ஆ) “ஆத்துமா” என்ற வார்த்தை முழு மனிதனையும் குறிக்கலாம் என்பதை ஆதியாகமம் 2:7 எவ்வாறு உறுதிப்படுத்துகிறது?
3 “ஆத்துமா” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை நேஃபெஷ் என்பதாகும்; அது எபிரெய வேதாகமத்தில் 754 தடவை வருகிறது. நேஃபெஷ் என்றால் என்ன? ஆங்கில பைபிள் மற்றும் மத அகராதியின்படி, அது “பொதுவாக முழு ஜீவராசியை, ஒரு தனி மனிதனைக் குறிக்கிறது.” அவன் எவ்வாறு படைக்கப்பட்டான் என பைபிள் கூறும் எளிய விவரிப்பு இதை ஆதரிக்கிறது. பைபிளின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம் 2:7-ல் அது இவ்வாறு கூறுகிறது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” முதல் மனிதன் ஒரு ஆத்துமா ‘ஆனான்’ என்பதைக் கவனியுங்கள். ஆகவே, “ஆத்துமா” என்ற வார்த்தை இங்கே ஒரு முழு மனிதனை குறிக்கிறது.
4. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் “ஆத்துமா” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை எது, அதன் அடிப்படை அர்த்தம் என்ன?
4 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் “ஆத்துமா” என அநேக சமயங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை சைக்கி ஆகும். நேஃபெஷ் என்ற வார்த்தையைப் போலவே அடிக்கடி இது ஒரு முழு மனிதனையே குறிப்பிடுகிறது. அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள தயவுசெய்து பின்வரும் வசனங்களை கவனியுங்கள்: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.” (லூக்கா 1:46) “என் ஆத்துமா கலங்குகிறது.” (யோவான் 12:27) “அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது.” (எபிரெயர் 10:38) “உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ . . . சுகமாயிரு.” (3 யோவான் 2) “உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின.” (வெளிப்படுத்துதல் 18:14) தெளிவாகவே, நேஃபெஷைப் போல சைக்கியும் ஒரு முழு ஆளைக் குறிக்கிறது. இந்த வார்த்தை, “மனிதனுக்கே உரிய இயல்பை, ஒரு நபரை, கடவுளுடைய ரூவாக் [உயிர் சக்தி] உள்ளுக்குள் செலுத்தப்பட்ட சரீரத்தைக் குறிக்கிறது. . . . ஒரு முழு நபரையே அது குறிக்கிறது” என வல்லுநர் நைஜல் டர்னர் கூறுகிறார்.
5. ஆத்துமா என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய, கிரேக்க வார்த்தைகள் வேறு எதையும் குறிக்கலாம்?
5 பைபிளில் “ஆத்துமா” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய, கிரேக்க வார்த்தைகள் மனிதனை மட்டுமல்ல மிருகங்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன என்பது அக்கறைக்குரிய விஷயம். உதாரணமாக, கடல்வாழ் உயிரினங்களின் படைப்பை விவரிக்கையில், கடவுள் இவ்வாறு கட்டளையிட்டதாக ஆதியாகமம் 1:20 கூறுகிறது: “நீந்தும் ஜீவஜந்துக்களை [எபிரெயு, நேஃபெஷ்] . . . ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது.” அடுத்த சிருஷ்டிப்பு நாளில் கடவுள் இவ்வாறு கூறினார்: “பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய [எபிரெயு, நேஃபெஷ்] நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது.”—ஆதியாகமம் 1:24.
6. “ஆத்துமா” என அநேக சமயங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தையை பைபிள் உபயோகிக்கும் விதத்தைப் பற்றி என்ன சொல்லலாம்?
6 ஆகவே பைபிள், மனிதனை ஆத்துமா என விவரிக்கிறது; ஒரு மனிதனை அல்லது மிருகத்தை அல்லது மனிதனுக்கோ மிருகத்துக்கோ இருக்கும் உயிரைக் குறிப்பிடவும் மூல மொழிகளில் இதே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (மேலே உள்ள பெட்டியைக் காண்க.) மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதைப் பற்றிய பைபிளின் விவரிப்பு மிகவும் எளியதும், முரண்படாததும், மனிதர்களின் சிக்கலான தத்துவங்களாலும் மூடநம்பிக்கைகளாலும் நெருக்கப்படாததுமாய் இருக்கிறது. ஆகவே இப்போது முக்கியமான கேள்வி, மரிக்கையில் மனிதனுக்கு என்ன சம்பவிக்கிறது என பைபிள் கூறுகிறது?
மரித்தவர்கள் உணர்வற்றவர்கள்
7, 8. (அ) மரித்தோரின் நிலையைப் பற்றி பைபிள் எதை வெளிப்படுத்துகிறது? (ஆ) ஒரு மனிதனின் அல்லது உயிரினத்தின் ஏதோவொரு பகுதி மரணத்திற்கு பிறகும் தொடர்ந்து உயிர்வாழ்கிறது என பைபிள் சுட்டிக்காட்டுகிறதா?
7 பிரசங்கி 9:5, 10-ல் (மொஃபெட்) மரித்தவர்களின் நிலை தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அங்கே இவ்வாறு வாசிக்கிறோம்: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . பிரேதக்குழிக்குள் எந்த வேலையும், திட்டமும், அறிவும் புத்திக்கூர்மையும் இல்லை.” ஆகவே மரணம் என்றால், இல்லாத ஒரு நிலை. ஒரு மனிதன் மரிக்கையில், “அவன்தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்” என சங்கீதக்காரன் எழுதுகிறார். (சங்கீதம் 146:4) ஆகவே, மரித்தவர்கள் உணர்வற்றவர்கள், செயலற்றவர்கள்.
8 ஆதாமுக்கு தண்டனைத் தீர்ப்பளிக்கையில் கடவுள் அவனிடம், “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்று சொன்னார். (ஆதியாகமம் 3:19) கடவுள், ஆதாமை மண்ணிலிருந்து படைத்து அவனுக்கு உயிர் கொடுப்பதற்கு முன்பு அவன் இல்லை. மரித்த பிறகு அவன் மறுபடியும் இல்லாமல் போனான். மற்றொரு பகுதிக்கு மாறிச்செல்வதல்ல, மரணமே அவனுக்கு கிடைத்த தண்டனை. அவனில் ஏதோ ஒரு பகுதி தொடர்ந்து உயிர்வாழ்ந்ததா? இல்லை. ஏனென்றால் ஒருவர் மரிக்கையில் அவர் முற்றிலும் மரித்துப்போகிறார் என்றே பைபிள் கூறுகிறது. தொடர்ந்து உயிர்வாழும் அழியாமையுள்ள ஏதோவொன்று உயிரினங்களுக்குள் இருக்கிறது என அது போதிப்பதில்லை. அழியாமையுள்ள ஆத்துமாவை நம்பும் ஒருவருக்கு இது வினோதமாக தொனிக்கலாம். ஆனாலும், மரணத்தின்போது அந்த முழு உயிரினமோ மனிதனோ மரிக்கிறான், எதுவுமே உயிர் வாழ்வதில்லை என்பதே உண்மை.
9. ராகேலுடைய ‘ஆத்துமா பிரியும்போது’ என்று பைபிள் கூறுகையில் எதை அர்த்தப்படுத்துகிறது?
9 ஆதியாகமம் 35:18-ல் சொல்லப்பட்டிருக்கும் வாக்கியத்தைப் பற்றியென்ன? ராகேல், தன் இரண்டாவது மகனைப் பெற்றெடுக்கையில் பரிதாபகரமாக மரித்ததைப் பற்றி அங்கு வாசிக்கிறோம்: ‘மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.’ ராகேலுடைய மரணத்தின்போது அவளிடமிருந்து பிரிந்துசென்ற ஏதோவொன்று அவளுக்குள் இருந்ததென்பதை இது அர்த்தப்படுத்துமா? இல்லவே இல்லை. “ஆத்துமா” என்ற வார்த்தை ஒரு நபருக்கிருக்கும் உயிரையும் குறிக்கும் என்பதை நினைவில் வையுங்கள். ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தில் ராகேலுடைய “ஆத்துமா” என்பது வெறுமனே அவளுடைய “உயிரை” அர்த்தப்படுத்துகிறது. இதனால்தான் மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகள், “அவள் ஆத்துமா பிரியும்போது” என்ற வாக்கியத்தை பின்வருமாறு மொழிபெயர்க்கின்றன: “அவளுடைய உயிர் பிரிந்துகொண்டிருந்தது” (க்னாக்ஸ்), “அவள் கடைசி மூச்சுவிட்டாள்” (JB), “அவள் உயிர் அவளைவிட்டு பிரிந்தது” (பைபிள் இன் பேசிக் இங்கிலீஷ்). ராகேலிடமிருந்த நிழலுருவமான ஏதோவொரு பகுதி மரணத்தை தப்பித்தது என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை.
10. விதவையின் மகன் உயிர்த்தெழுப்பப்பட்டபோது அவனுடைய ஆத்துமா எப்படி ‘அவனுக்குள் திரும்பிவந்தது’?
10 1 இராஜாக்கள் 17-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விதவையின் மகனுடைய உயிர்த்தெழுதல் விஷயத்திலும் இதுவே உண்மை. அந்தப் பையனுக்காக எலியா ஜெபம்செய்தார் என்று வசனம் 22-ல் வாசிக்கிறோம். அப்போது, ‘கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.’ இங்கேயும் “ஆத்துமா” என்ற வார்த்தை ‘உயிரைக்’ குறிக்கிறது. அதனால்தான், நியூ அமெரிக்கன் ஸ்டான்டர்ட் பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அந்தப் பிள்ளையின் உயிர் திரும்பிவந்தது, அவன் உயிரடைந்தான்.” ஆம், அந்தப் பையனின் உயிர்தான் திரும்பியது, நிழலுருவமான ஏதோ ஒன்றல்ல. இது, அந்தப் பையனுடைய அம்மாவிடம் எலியா சொன்னதற்கு இசைவாகவே இருக்கிறது: “பார் உன் பிள்ளை [அந்த முழு நபர்] உயிரோடிருக்கிறான்.”—1 இராஜாக்கள் 17:23.
ஆவியைப் பற்றியென்ன?
11. பைபிளில் “ஆவி” என்ற வார்த்தை ஒருவருடைய சரீரத்திலிருந்து பிரிந்து, மரிக்காமல் வாழும் ஏதோ ஒரு பகுதியை ஏன் குறிக்க முடியாது?
11 ஒருவர் மரிக்கையில், ‘அவனுடைய ஆவி பிரியும், அவன்தன் மண்ணுக்குத் திரும்புவான்’ என்று பைபிள் கூறுகிறது. (சங்கீதம் 146:4) அப்படியென்றால், ஒருவருடைய மரணத்திற்கு பிறகு உடலற்ற ஓர் ஆவி சொல்லர்த்தமாகவே பிரிந்துசென்று தொடர்ந்து வாழ்கிறது என்று அர்த்தமா? அப்படி இருக்கமுடியாது, ஏனென்றால் சங்கீதக்காரன் தொடர்ந்து கூறுகிறார், “அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம் [“அவனுடைய எண்ணங்கள் எல்லாம் முடிவுக்கு வரும்,” த நியூ இங்கிலீஷ் பைபிள்].” அப்படியென்றால், ஆவி என்பது என்ன? ஒருவருடைய மரணத்தின்போது அது எவ்வாறு ‘பிரிந்துசெல்கிறது?’
12. பைபிளில் “ஆவி” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய, கிரேக்க வார்த்தைகள் எதை சுட்டிக்காட்டுகின்றன?
12 பைபிளில் ஆவி (எபிரெயுவில் ரூவாக்; கிரேக்கில் நியூமா) என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் அடிப்படையில் “மூச்சு” என அர்த்தப்படும். ஆகவே, ‘அவனுடைய ஆவி பிரியும்’ என்று சொல்வதற்கு மாறாக ஆர். ஏ. க்னாக்ஸின் மொழிபெயர்ப்பு, “அவனுடைய மூச்சு பிரியும்” என்று மொழிபெயர்க்கிறது. (சங்கீதம் 146:4, க்னாக்ஸ்) ஆனால் ஆவி என்ற வார்த்தை வெறுமனே மூச்சுவிடுவதை மட்டும் குறிக்கவில்லை. உதாரணமாக, உலகளாவிய ஜலப்பிரளயத்தின்போது மனித உயிரும் மிருக உயிரும் அழிக்கப்பட்டதை குறிப்பிடுகையில் ஆதியாகமம் 7:22 இவ்வாறு சொல்கிறது: “வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசம் [“உயிர் சக்தியின் (அல்லது ஆவி; எபிரெயு, ரூவாக்) மூச்சு,” NW] உள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.” ஆகவே ஆவி என்பது மனிதன், மிருகம் உட்பட எல்லா உயிரினங்களிலும் இருக்கும் உயிர் சக்தியை குறிக்கலாம்; மூச்சுவிடுவதால் அந்தச் சக்தி தொடருகிறது.
13. பைபிள் கூறும் ஆவி என்பது, ஒருவர் மரிக்கையில் எவ்வாறு கடவுளிடம் திரும்பி போகிறது?
13 அப்படியானால், ஒருவர் மரிக்கையில், ‘ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகிறது’ என பிரசங்கி 12:7 சொல்வதன் அர்த்தம் என்ன? ஓர் ஆவி சொல்லர்த்தமாகவே விண்வெளியில் பயணம்செய்து கடவுளிடம் போகிறது என்று அர்த்தமாகுமா? அப்படி அர்த்தமாகாது. பைபிளில் சொல்லப்பட்டுள்ள ஆவி உயிர் சக்தியாக இருப்பதால், அந்த மனிதன் எதிர்காலத்தில் மறுபடியும் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு இப்போது முழுமையாக கடவுளிடத்திலேயே இருக்கிறது என்ற அர்த்தத்தில் அது “தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும்” போகிறது. ஓர் உயிரினம் மீண்டும் உயிர் பெற, கடவுள் மட்டுமே அந்த ஆவியை அல்லது உயிர்சக்தியை மறுபடியும் கொடுக்க முடியும். (சங்கீதம் 104:30) ஆனால் அவ்வாறு செய்ய கடவுள் நோக்கம் கொண்டிருக்கிறாரா?
‘அவன் உயிர்த்தெழுந்திருப்பான்’
14. லாசருவை இழந்த அவன் சகோதரிகளுக்கு ஆறுதலளிக்க இயேசு என்ன சொன்னார், என்ன செய்தார்?
14 பெத்தானியா என்ற சிறிய பட்டணம் எருசலேமிற்கு கிழக்கே மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. அங்கு மார்த்தாளும் மரியாளும் தங்கள் சகோதரன் லாசரு அகால மரணமடைந்ததால் துக்கித்துக்கொண்டிருந்தனர். லாசருவிடமும் அவன் சகோதரிகளிடமும் இயேசுவுக்கு பாசம் இருந்ததால் அவரும் அவர்களோடு துக்கித்தார். அவன் சகோதரிகளுக்கு இயேசு எவ்வாறு ஆறுதலளிக்க முடியும்? அவர்களிடம் ஏதோ சிக்கலான கதையை கூறுவதனால் அல்ல, ஆனால் சத்தியத்தைக் கூறுவதனாலேயே. “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்று மட்டுமே இயேசு கூறினார். அதற்கு பிறகு இயேசு கல்லறைக்கு சென்று லாசருவை உயிர்த்தெழுப்பினார். நான்கு நாட்கள் மரித்திருந்த ஒரு மனிதனுக்கு மறுபடியும் உயிர் கொடுத்தார்!—யோவான் 11:18-23, 38-44.
15. இயேசு சொன்னதற்கும் செய்ததற்கும் மார்த்தாள் எவ்வாறு பிரதிபலித்தாள்?
15 லாசரு “உயிர்த்தெழுந்திருப்பான்” என்று இயேசு சொன்னபோது மார்த்தாள் ஆச்சரியப்பட்டாளா? இல்லை; ஏனென்றால், “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்” என அவள் கூறினாள். உயிர்த்தெழுதல் வாக்குறுதியில் அவளுக்கு ஏற்கெனவே நம்பிக்கை இருந்தது. பின்னர் இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” என்று கூறினார். (யோவான் 11:23-25) லாசரு அற்புதகரமாக உயிர்பெற்றது அவளுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தியது, மற்றவர்களிலும் விசுவாசம் துளிர்விட உதவியது. (யோவான் 11:45) ஆனால், “உயிர்த்தெழுதல்” என்ற வார்த்தையின் சரியான அர்த்தம்தான் என்ன?
16. “உயிர்த்தெழுதல்” என்ற வார்த்தையின் அர்த்தமென்ன?
16 “உயிர்த்தெழுதல்” என்ற வார்த்தை அனாஸ்டாஸிஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; அதன் நேரடியான அர்த்தம் “மறுபடியும் எழுந்து நிற்பது.” கிரேக்கிலிருந்து எபிரெயுவிற்கு மொழிபெயர்த்தவர்கள் அனாஸ்டாஸிஸ்-ஐ, “மரித்தோர் மறுபடியும் உயிர்பெறுதல்” (எபிரெயுவில் டெக்கீயாத் ஹாம்மெத்தீம்) என்று அர்த்தப்படும் சொற்றொடராக மொழிபெயர்த்திருக்கின்றனர். a ஆகவே உயிர்த்தெழுதல் என்பது உயிரற்ற, மரித்த நிலையிலிருக்கும் ஒருவரை மீண்டும் உயிர்பெற செய்வது. அந்த தனிநபரின் வாழ்க்கைப்போக்கை மீண்டும் ஆரம்பித்து தொடரச் செய்வது.
17. (அ) தனிநபர்களை உயிர்த்தெழுப்புவது யெகோவா தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் ஏன் கடினமாக இருக்காது? (ஆ) ஞாபகார்த்த கல்லறையில் இருப்பவர்களைப் பற்றி இயேசு என்ன வாக்குறுதி கொடுத்தார்?
17 எல்லையற்ற ஞானமும் பரிபூரண நினைவாற்றலும் உள்ள யெகோவா தேவன் ஒருவரை எளிதில் உயிர்த்தெழுப்ப முடியும். மரித்தோரின் ஆள்தன்மைகள், தனிப்பட்ட விவரங்கள், தனித்தன்மைகள் உட்பட அவர்களுடைய வாழ்க்கைப்போக்கை நினைவில் வைத்திருப்பது அவருக்கு கடினமல்ல. (யோபு 12:13; ஏசாயா 40:26-ஐ ஒப்பிடுக.) அதுமட்டுமல்ல, லாசருவின் அனுபவம் காட்டுகிறபடி மரித்தோரை உயிர்த்தெழுப்ப இயேசுவுக்கு விருப்பமும் உண்டு, சக்தியும் உண்டு. (லூக்கா 7:11-17; 8:40-56-ஐ ஒப்பிடுக.) “ஞாபகார்த்த கல்லறைகளிலுள்ள அனைவரும் அவருடைய [இயேசுவுடைய] சத்தத்தைக் கேட்டு வெளியே வரும் அந்தச் சமயம் வருகிறது” என இயேசு கிறிஸ்து கூறினார். (யோவான் 5:28, 29, NW) ஆம், யெகோவாவின் நினைவில் இருக்கும் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என இயேசு கிறிஸ்து வாக்குறுதி அளித்தார். ஆகவே பைபிளின்படி, மரணத்தின்போது அழியாமையுள்ள எந்தப் பகுதியும் தொடர்ந்து உயிர்வாழ்வதில்லை; மாறாக மரணத்திற்கான தீர்வு உயிர்த்தெழுதலே. ஆனால் கோடானுகோடி மக்கள் வாழ்ந்து மரித்திருக்கின்றனரே. அவர்களுள் யார், உயிர்த்தெழுதல் பெறும் நம்பிக்கையோடு கடவுளுடைய நினைவில் இருக்கின்றனர்?
18. யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?
18 யெகோவாவின் ஊழியர்களாக நீதியுள்ள பாதையில் நடந்த அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். ஆனால், கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களுக்கு கீழ்ப்படிவார்களா இல்லையா என்பதைக் காட்டாமலேயே அநேக கோடிக்கணக்கான மக்கள் மரித்திருக்கின்றனர். அவர்கள் யெகோவாவின் தராதரங்களை அறியாதவர்களாக அல்லது தேவையான மாற்றங்களை செய்ய போதிய அவகாசம் இல்லாதவர்களாக மரித்திருக்கலாம். இவர்களும்கூட கடவுளுடைய நினைவில் இருப்பதால் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். ஏனென்றால் பைபிள் இவ்வாறு உறுதியளிக்கிறது: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்”பார்கள்.—அப்போஸ்தலர் 24:15.
19. (அ) உயிர்த்தெழுதலைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் என்ன தரிசனம் பெற்றார்? (ஆ) “அக்கினிக்கடலிலே” தள்ளப்படுவது எது, அந்த சொற்றொடரின் அர்த்தம் என்ன?
19 உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் கடவுளுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கும் ஒரு கிளர்ச்சியூட்டும் தரிசனத்தை அப்போஸ்தலன் யோவான் கண்டார். அதை விவரிப்பவராய் அவர் எழுதினார்: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.” (வெளிப்படுத்துதல் 20:12-14) அதை சற்று சிந்தித்து பாருங்கள்! கடவுளுடைய நினைவில் இருக்கும் மரித்தோர் அனைவரும் மனிதனின் பிரேதக்குழியான ஷியோல் அல்லது ஹேடீஸிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். (சங்கீதம் 16:10; அப்போஸ்தலர் 2:31) பிறகு, “மரணமும் பாதாளமும்” முழுமையான அழிவை அர்த்தப்படுத்தும் “அக்கினிக்கடலிலே” போடப்படும். மனிதனின் பிரேதக்குழி இனி இல்லாமல் போய்விடும்.
தனிச்சிறப்பு வாய்ந்த எதிர்பார்ப்பு!
20. இப்போது மரித்திருக்கும் கோடிக்கணக்கானோர் உயிர்த்தெழுப்பப்படுகையில் எப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருக்கும்?
20 கோடிக்கணக்கானோர் உயிர்த்தெழுப்பப்படும்போது இந்தப் பூமி வெறுமையாக இருக்காது. (ஏசாயா 45:18) கண்ணைக் கவரும் ரம்மியமான சூழ்நிலைகளும் வசதியான வீடுகள், உடை, ஏராளமான உணவு ஆகியவையும் அவர்களுக்காக தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு பூமியில்தான் அவர்கள் உயிரோடே எழுந்திருப்பார்கள். (சங்கீதம் 67:6; 72:16; ஏசாயா 65:21, 22) இவற்றையெல்லாம் யார் ஏற்பாடு செய்வர்? பூமியில் உயிர்த்தெழுதல் ஆரம்பிப்பதற்கு முன்பே புதிய உலகில் மக்கள் இருக்கவேண்டும் என்பது தெளிவாய் இருக்கிறது. ஆனால் யார் இருப்பர்?
21, 22. “கடைசி நாட்களில்” வாழ்பவர்களுக்கு என்ன தனிச்சிறப்பு வாய்ந்த எதிர்பார்ப்பு இருக்கிறது?
21 நிறைவேறி வரும் பைபிள் தீர்க்கதரிசனங்கள், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்கிறோம் என சுட்டிக்காட்டுகின்றன. b (2 தீமோத்தேயு 3:1) சீக்கிரத்திலேயே, யெகோவா தேவன் மனித விவகாரங்களில் தலையிட்டு துன்மார்க்கத்தை பூமியிலிருந்து சுவடுதெரியாமல் துடைத்தழிப்பார். (சங்கீதம் 37:10, 11; நீதிமொழிகள் 2:21, 22) அந்தச் சமயம் கடவுளை உண்மையோடு சேவிப்போருக்கு என்ன நிகழும்?
22 யெகோவா, துன்மார்க்கரோடு சேர்த்து நீதிமான்களையும் அழிக்கமாட்டார். (சங்கீதம் 145:20) அப்படிப்பட்ட காரியத்தை அவர் ஒருபோதும் செய்ததில்லை; துன்மார்க்கத்தை பூமியிலிருந்து துடைத்தழிக்கையிலும் அவ்வாறு செய்யமாட்டார். (ஆதியாகமம் 18:22, 23, 26-ஐ ஒப்பிடுக.) ஏன், “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்” “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பித்து வருவதைப் பற்றி பைபிளின் கடைசி புத்தகம் குறிப்பிடுகிறதே! (வெளிப்படுத்துதல் 7:9-14) ஆம், இப்போதைய பொல்லாத உலகத்தை முடிவுக்கு கொண்டுவரும் அந்த மிகுந்த உபத்திரவத்தில் ஒரு பெரும் திரள் கூட்டமாகிய மக்கள் தப்பிப்பிழைப்பர்; அவர்களே கடவுளுடைய புதிய உலகிற்குள் நுழைவர். அப்போது, மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்கான கடவுளுடைய மகத்தான ஏற்பாடுகளிலிருந்து கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் முழுமையாக பயனடைவர். (வெளிப்படுத்துதல் 22:1, 2) இப்படியாக, அந்தத் ‘திரள் கூட்டம்’ மரணத்தை ருசிபார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. எப்பேர்ப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த எதிர்பார்ப்பு!
மரணம் இல்லாத வாழ்க்கை
23, 24. பூமியில் பரதீஸில் மரணமே இல்லாத வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?
23 திகைப்பூட்டும் இந்த எதிர்பார்ப்பில் நாம் நம்பிக்கை வைக்க முடியுமா? நிச்சயமாக வைக்கலாம்! ஜனங்கள் மரிக்காமலேயே வாழும் ஓர் காலம் வருகிறது என இயேசு கிறிஸ்து தாமே கூறியிருந்தாரே. அவருடைய நண்பன் லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு முன்பு இயேசு மார்த்தாளிடம் கூறினார்: “உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.”—யோவான் 11:26.
24 பூமியில் பூங்காவனம் போன்ற பரதீஸில் என்றுமாக வாழ நீங்கள் விரும்புகிறீர்களா? மரித்த அன்பானவர்களை மறுபடியும் பார்க்க விரும்புகிறீர்களா? “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என அப்போஸ்தலன் யோவான் கூறுகிறார். (1 யோவான் 2:17) கடவுளுடைய சித்தம் என்ன என்பதை கற்றுக்கொள்வதற்கும் அதற்கு இசைவாக வாழ உறுதியான தீர்மானம் எடுப்பதற்கும் இதுவே சமயம். அப்போது நீங்கள், கடவுளுடைய சித்தத்தை ஏற்கெனவே செய்துவருகிற லட்சக்கணக்கானோரோடு சேர்ந்து பூமியில் பரதீஸில் என்றென்றும் வாழலாம்.
[அடிக்குறிப்புகள்]
a “உயிர்த்தெழுதல்” என்ற வார்த்தை எபிரெய வேதாகமத்தில் காணப்படுவதில்லை என்றாலும், யோபு 14:13, தானியேல் 12:13, ஓசியா 13:14 போன்ற வசனங்களில் உயிர்த்தெழுதல் நம்பிக்கை தெளிவாக சுட்டிக்காட்டப்படுகிறது.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் பக்கங்கள் 98-107-ஐக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ “ஆத்துமா” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூலமொழி வார்த்தைகளின் அடிப்படை அர்த்தம் என்ன?
◻ மரணத்தின்போது மனிதனுக்கு என்ன ஏற்படுகிறது?
◻ பைபிளின்படி மரணத்திற்கான தீர்வு என்ன?
◻ இன்றுள்ள உண்மையுள்ளோருக்கு இருக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த எதிர்பார்ப்பு என்ன?
[பக்கம் 15-ன் பெட்டி]
“ஆத்துமா”—ஓர் உயிரினத்தின் உயிர்
சில சமயங்களில் “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அதே எபிரெய வார்த்தை, ஒரு மனிதனுக்கு அல்லது மிருகத்திற்கு இருக்கும் உயிரையும் குறிக்கும். ஆத்துமா என சில சமயங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தையை உபயோகிக்கையில் பைபிள் எழுத்தாளர்களின் மனதிலிருந்ததை இது மாற்றிவிடுவது கிடையாது. உயிருள்ள ஒரு முழு நபரை குறிக்க நேஃபெஷ் அல்லது சைக்கி என்ற வார்த்தைகளை பைபிள் எழுத்தாளர்கள் உபயோகித்தபோது அது பொதுவாக ஆத்துமா என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; ஆகவே அந்த நபர் ஓர் ஆத்துமா என்று சொல்லப்படலாம். இருந்தாலும் அந்த நபர் உயிரோடு இருக்கும்போது நேஃபெஷ், சைக்கி என்ற அதே வார்த்தைகள் அவருக்கிருக்கும் உயிரைக் குறிக்கவும் உபயோகிக்கப்படலாம். இவ்வாறு இருக்கையில் பொதுவாக ஜீவன் என்ற வார்த்தையாக அவை மொழிபெயர்க்கப்படுகின்றன.
உதாரணமாக, கிபியோனியர் யோசுவாவிடம் இவ்வாறு கூறினர்: ‘நாங்கள் எங்கள் ஜீவன் (எபிரெயுவில் நேஃபெஷ்; கிரேக்கில் சைக்கி) நிமித்தம் உங்களுக்கு மிகவும் பயந்தோம்.’ தெளிவாகவே, தங்கள் உயிரை இழந்துவிடுவர் என கிபியோனியர் பயந்தனர். (யோசுவா 9:24; நீதிமொழிகள் 12:10-ஐ ஒப்பிடுக.) ‘மனுஷகுமாரனும் அநேகரை மீட்கும்பொருளாக தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்’ என்று இயேசு சொன்னபோது அந்த வார்த்தையை இதே அர்த்தத்தில்தான் உபயோகித்தார். (மத்தேயு 20:28) இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே நேஃபெஷ், சைக்கி என்ற வார்த்தைகள், “உயிர்” என்று அர்த்தப்படும் “ஜீவன்” என்றே மொழிபெயர்க்கப்படுகின்றன.
[பக்கம் 15-ன் படங்கள்]
இவையெல்லாமே பைபிளில் ஒரே வார்த்தையினால் விவரிக்கப்படுகின்றன
[படத்திற்கான நன்றி]
ஹம்மிங் பறவை: U.S. Fish and Wildlife Service, Washington, D.C./Dean Biggins
[பக்கம் 17-ன் படம்]
மரணத்திற்கான தீர்வு உயிர்த்தெழுதலே என இயேசு செய்துகாண்பித்தார்
[பக்கம் 18-ன் படம்]
“உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.” —யோவான் 11:26