பரதீஸுக்குச் செல்வதற்கான வழி திறக்கப்படுகிறது
“இயேசு அவனை நோக்கி: ‘மெய்யாகவே இன்று நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்.’”—லூக்கா 23:43, NW.
1, 2. (எ) “பரதீஸ்” எதை அர்த்தப்படுத்துகிறது? ஏதேன் தோட்டம் எதைப்போன்று இருந்திருக்க வேண்டும்? (பி) “தோட்டம்” என்பதற்குரிய எபிரெய வார்த்தை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது?
மனித குடும்பம் அதன் ஆரம்பத்தைப் பரதீஸில் கொண்டிருந்தது. மனிதன் சிருஷ்டிக்கப்பட்டதைக் குறித்து நாம் பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகத்தில் இப்படியாக வாசிக்கிறோம்: “தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.” (ஆதியாகமம் 2:7, 8) “ஏதேன்” என்ற பெயருக்கு “இன்பம்” என்பது பொருள், எனவே ஏதேன் தோட்டம் அநேக வித்தியாசமான அழகிய அம்சங்களைக் கொண்ட இன்பமான ஒரு பரந்த பூங்காவனமாயிருந்தது.
2 பரதீஸ் என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து எடுக்கப்படுகிறது, அந்த மொழியில் அது பூங்கா போன்ற ஒரு தோட்டத்தை அர்த்தப்படுத்துகிறது. “தோட்டம்” என்று பொருள்படும் எபிரெய பெயர்ச்சொல் கான் (gan) என்ற வார்த்தையை மொழிபெயர்க்கப் பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தை பரதீஸாஸ் (pa-raʹdei-ʹsos). மத்தேயு முதல் வெளிப்படுத்துதல் வரையான வேத எழுத்துக்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன. பொ.ச. 33-ம் ஆண்டு நைசான் 14 அன்று கல்வாரியில் ஒரு கழு மரத்தின்மீது மரண தண்டனையின் வேதனையில் இருக்கும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளைப் பதிவு செய்த போது இந்த வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டது.
ஒரு தீயோனிடம் பரதீஸ் பற்றி இயேசு கொடுத்த வாக்குறுதி
3. (எ) பரிவிரக்கம் கொண்ட ஒரு தீயோன் இயேசுவிடம் என்ன கேட்டான்? (பி) அந்தத் தீயோன் வேண்டிக்கொண்டது, இயேசுவைப் பற்றிய அவனுடைய நம்பிக்கை குறித்து என்ன காண்பித்தது?
3 அந்தச் சமயத்தில் இயேசுவோடுகூட கழுமரங்களில் இரண்டு தீயவர்கள் அறையப்பட்டிருந்தார்கள். இயேசுவுக்கு மறுபக்கத்தில் அறையப்பட்டிருந்த குற்றவாளி அவரை இகழ்ந்துகொண்டிருந்தவிதமாக தொடர்ந்து இகழ்ச்சி செய்வதை ஒருவன் நிறுத்திவிட்டான். இயேசுவின் பேரில் பரிவிரக்கம் காண்பித்த அந்தக் குற்றவாளி அவரைப் பார்த்து, “இயேசுவே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்,” என்றான். இப்படியாக அவன், இயேசு தனக்கு அருகில் தொங்கிக்கொண்டிருந்த போதிலும், அவர் வரும் ராஜ்யத்தை சுதந்தரிப்பார் என்ற விசுவாசத்தை வெளிக்காட்டினான். (லூக்கா 23:42; மாற்கு 15:32) ஆண்டவராகிய இயேசுவின் இருதயத்தை அது எவ்வளவாகத் தொட்டிருக்கும்! இயேசு கிறிஸ்து குற்றவாளி அல்ல என்றும், பொதுப்படையாக அவமானப்படுத்தப்படுமளவுக்குக் கழுமரத்தில் அறையப்படுவது போன்ற ஒரு கடுமையான தண்டனைக்குரியவர் அல்ல என்றும் நட்புடைய அந்தக் குற்றவாளி நம்பினான். (லூக்கா 23:41) இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவார் என்றும், ஒரு ராஜ்யத்திற்குள் வருவார் என்றும் தான் நம்பியதைத் தன்னுடைய வேண்டுகோளின் மூலம் அவன் வெளிப்படுத்தினான். தனக்கும் உயிர்த்தெழுதல் இருக்கக்கூடும், தன்னை மரணத்திலிருந்து எழுப்பி பூமியில் புதிய வாழ்க்கையை அருளிச்செய்கிறவர் இயேசுவே என்பதைத் தான் விசுவாசித்ததையும் வெளிக்காட்டினான்.
4. அந்தத் தீயோனின் வேண்டுகோளுக்கு இயேசு எவ்விதமாக பதில் சொன்னார்? எதைச் சுட்டிக்காட்டினார்?
4 “மெய்யாகவே இன்று நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்,” என்று இயேசு அவனிடம் சொன்ன போது, தன்பேரில் பரிவிரக்கம் காண்பித்த தீயோன் உயிர்த்தெழுப்பப்படுவான் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். விசுவாசம் காண்பித்த அந்தக் குற்றவாளிக்கு அது ஓர் உண்மையான ஆறுதலாக இருந்திருக்கும். அந்த மனிதனின் உயிர்த்தெழுதல் நடைபெற வேண்டுமானால், இயேசு முதலாவதாக உயிர்த்தெழுப்பப்பட வேண்டியதாயிருந்தது. அப்பொழுது, கடவுளிடமிருந்து தாம் பெற்ற உயிர்த்தெழுப்பும் வல்லமையைப் பயன்படுத்துகிறவராய், மனிதவர்க்க உலகத்தை உயிர்த்தெழுப்பும் அந்த நாளில் அந்தத் தீயோனை மரித்தோரிலிருந்து அழைத்திடுவார்.—லூக்கா 23:43; யோவான் 5:28, 29; 1 கொரிந்தியர் 15:20, 23; எபிரெயர் 9:15.
5, 6. (எ) கழுமரத்தில் அறையப்பட்ட இயேசுவுக்கு மேல் அதிபதியாகிய பொந்தியு பிலாத்து என்ன எழுதும்படிச் செய்தான்? (பி) இயேசு அந்தத் தீயோனிடம் எந்த மொழியில் பேசினார்?
5 இயேசு எந்த மொழியில் அந்த வாக்கைக் கொடுத்தார்? அந்தச் சமயத்தில் வழக்கத்தில் அநேக மொழிகள் இருந்துவந்தன. கழுமரத்தில் அறையப்பட்ட இயேசுவை அந்த வழியாய் செல்பவர்கள் அடையாளங்கண்டு கொள்வதற்காக அதிபதியாகிய பொந்தியு பிலாத்து அவர் தலைக்கு மேலே எழுதும்படியாகச் செய்த வார்த்தைகளிலிருந்து அது தெரிகிறது. யோவான் 19:19, 20-லுள்ள பதிவு கூறுவதாவது: “பிலாத்து மேலே ஒரு வாசகத்தை எழுதி, கழுமரத்தின்மேல் போடுவித்தான். அதில், ‘நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா,’ என்று எழுதப்பட்டிருந்தது. இயேசு கழுமரத்தில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த வாசகத்தை வாசித்தார்கள். அது எபிரெயு, கிரேக்கு, லத்தீன் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.”
6 பெத்லகேமில் தம்முடைய கன்னித் தாயாகிய மரியாளுக்குப் பிறப்பதன் மூலம், இயேசு ஒரு யூதனாக அல்லது ஓர் எபிரெயனாகப் பிறந்தார். இதன்படி, தாம் பிறந்த தேசத்தில் மூன்றரை ஆண்டுகளாகப் பிரசங்கித்தபோது, அப்பொழுதிருந்த எபிரெய அல்லது யூத மொழியில் அவர் பிரசங்கித்தார் என்பது தெளிவாயிருக்கிறது. எனவே, பரிவிரக்கங்கொண்ட அந்தத் தீயோனிடம் உறுதியளிப்பவராய்த் தம்முடைய கூற்றை எபிரெயுவில் கூறியிருக்க வேண்டும். எனவே பரதீஸைக் குறிப்பிடும் போது அவர் கான் என்ற எபிரெயு வார்த்தையை—ஆதியாகமம் 2:8-ல் காணப்படும் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். அந்த இடத்தில் பரிசுத்த வேதாகமத்தின் கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு கான் என்ற மூல வார்த்தையை மொழிபெயர்க்கும்போது, பரதீஸாஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது.
7. இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டபோது அவர் எவ்விதம் மகிமைப்படுத்தப்பட்டார்?
7 இயேசு கழுமரத்தில் அறையப்பட்டதைத் தொடர்ந்து மூன்றாம் நாள், அல்லது எபிரெயு நாள்காட்டியில் நைசான் 16-ம் நாள் உயிர்த்தெழுப்பப்பட்டார். நாற்பது நாட்களுக்குப் பின்பு அவர் தம்முடைய ஆதி வீடாகிய பரலோகத்துக்கு அதிக மேன்மையான நிலையில் திரும்பினார். (அப்போஸ்தலர் 5:30, 31; பிலிப்பியர் 2:9) அவருக்கு இப்பொழுது அழியாமை தரிக்கப்பட்டது. இது தம்முடைய பரம பிதாவுடன் பங்குடைய ஒரு தன்மையாக இருந்தது. இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை, நைசான் 16-ம் நாள் வரை யெகோவா தேவன் மட்டுமே அழியாமையுடையவராய் இருந்தார்.—ரோமர் 6:9; 1 தீமோத்தேயு 6:15, 16.
மீட்கும் பொருள் வழியைத் திறந்து வைக்கிறது
8. பூமியைக் குறித்த யெகோவாவின் ஆதி நோக்கம் என்னவாயிருந்தது? அவர் அந்த நோக்கத்தை விட்டுவிடவில்லை என்பதை எது காட்டுகிறது?
8 இவை அனைத்தும் பூமி முழுவதையும் பரதீஸிய அழகினால் உடுத்துவிப்பதற்கான, ஆம், ஒரு பூகோளப் பரதீஸாக ஆக்குவதற்கான கடவுளுடைய நோக்கத்திற்குட்பட்ட படிகளாகும். (ஆதியாகமம் 1:28; ஏசாயா 55:10, 11) பவுல் அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 15:45-ல் இயேசுவைக் “கடைசி ஆதாம்” என்று குறிப்பிடுகிறான். பூமியைக் குறித்ததில் தம்முடைய ஆதி நோக்கத்தைக் கடவுள் மனதில் கொண்டிருக்கிறார் என்பதையும், முதல் ஆதாம் நிறைவேற்றத் தவறிய நோக்கத்தை ஒருவர் நிறைவேற்றுவார் என்பதையும் இது குறிப்பிடுவதாயிருக்கிறது.
9. பரதீஸுக்குத் திரும்ப வழியைத் திறக்க இயேசு அளித்தது என்ன?
9 அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுகிறபடி, இயேசு “ஈடான மீட்கும் பொருளாகத்” தம்மை ஒப்புக்கொடுத்தார். (1 தீமோத்தேயு 2:6) இயேசு கிறிஸ்துதாமே பின்வருமாறு கூறினார்: “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் நித்திய ஜீவன் அடைவதை இது கூடிய காரியமாக்கியது.—மத்தேயு 20:28; யோவான் 3:16.
10. (எ) தம்முடைய தயவைப் பெற்ற ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர் குறித்து கடவுள் தீர்மானித்தது என்ன? (பி) “சிறு மந்தை”யைத் தெரிந்தெடுத்தல் எப்பொழுது ஆரம்பித்தது? யாரால்?
10 இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு பரலோகத்திற்கு ஏறிச் சென்றபோது, தம்முடைய மீட்கும் பொருளின் கிரயத்தை மனிதவர்க்கத்தின் சார்பில் கடவுளிடம் செலுத்த முடிந்தது. என்றபோதிலும், பூமியின் தேசங்களிலிருந்து “தம்முடைய நாமத்துக்கென்று ஒரு ஜனத்தைத்” தெரிந்துகொள்வது அவருடைய பரம பிதாவாகிய யெகோவா தேவனின் நோக்கமாயிருந்தது. (அப்போஸ்தலர் 15:14) வெளிப்படுத்துதல் 7:4 மற்றும் 14:1–4-ன் படி, இவர்கள் வெறுமென 1,44,000 தனிப்பட்ட ஆட்களாக, கடவுளுடைய பரலோக ராஜ்யத்திற்கு அழைக்கப்படும் “சிறு மந்தையாக” இருக்கிறார்கள். (லூக்கா 12:32) யெகோவா தேவனின் விசேஷ தயவைப் பெற்ற இவர்களுடைய தெரிந்தெடுப்பு, இயேசு கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்களின் தெரிந்தெடுப்புடன் துவங்கியது. (மத்தேயு 10:2–4; அப்போஸ்தலர் 1:23–26) தம்முடைய சபையின் அஸ்திபார உறுப்பினர்களிடத்தில் இயேசு பின்வருமாறு சொன்னார்: “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்.” (யோவான் 15:16) ராஜ்ய ஆட்சியின் கீழ் வரவிருக்கும் பூகோளப் பரதீஸைப் பற்றிய செய்தியை அறிவிக்கும் வேலையை இவர்கள் முன்நின்று செய்வார்கள்.
ராஜ்யத்தின் வருகை
11. மேசியானிய ராஜ்யம் எப்பொழுது ஸ்தாபிக்கப்படுவதாயிருந்தது?
11 இன்று நாம் யெகோவாவின் ராஜ்யம் வருவதற்காக அவரிடம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருக்கிறோம். (மத்தேயு 6:9, 10; யோவான் 14:13, 14) மேசியானிய ராஜ்யம் “தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்களின்,” முடிவில் ஸ்தாபிக்கப்படுவதாயிருந்தது. (லூக்கா 21:24, NW) அந்தப் புறஜாதியாரின் காலங்கள் 1914-ம் ஆண்டில் நிறைவேறின.a
12. தம்முடைய காணக்கூடாத பிரசன்னத்தை அடையாளங்காட்டிடும் குறிப்பிடத்தக்க காரியங்களடங்கிய இயேசுவின் தீர்க்கதரிசனத்துக்கு இசைவாக 1914-ல் என்ன ஏற்பட்டது?
12 அந்த ஆண்டு மனித சரித்திரத்தின் முதல் உலக மகா யுத்தத்தால் குறிக்கப்பட்டது. இது பூமியின் மேல் ராஜ்ய வல்லமையில் காணக்கூடாத தம்முடைய பிரசன்னத்தை அடையாளங்காட்டிடும் குறிப்பிடத்தக்கக் காரியங்களைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனத்துக்கு இசைவாக இருந்தது. அவருடைய சீஷர்கள் அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்கள்: “இந்தக் காரியங்கள் எப்பொழுது சம்பவிக்கும், நீர் வந்திருப்பதற்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்? எங்களுக்குச் சொல்லும்.” இதற்கு விடையளிப்பவராக இயேசு பின்வருமாறு சொன்னார்: “தேசத்துக்கு விரோதமாய் தேசமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; உணவு குறைபாடுகளும் பூமியதிர்ச்சிகளும் பஞ்சங்களும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் எல்லாத் தேசங்களிலும் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:3, 7, 8, 14; மாற்கு 13:10.
13. (எ) கடவுளுடைய ராஜ்ய செய்தியைப் பிரசங்கித்தல் எவ்விதத்தில் நற்செய்தியாக இருக்கிறது? (பி) கடவுளுடைய ராஜ்யம் வரவேண்டும் என்ற ஜெபங்கள் எவ்வளவு காலமாக செய்யப்பட்டுவருகிறது? பூமியிலிருக்கும் அவருடைய சாட்சிகள் அந்த ஜெபத்தைச் செய்துவருவதில் சோர்வடையவில்லையா?
13 யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி இப்பொழுது 200-க்கும் அதிகமான தேசங்களில் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது, இன்னும் கூடுதலான பிராந்தியங்களில் அதை எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அது வரவிருக்கும் ஓர் உலக அரசாங்கத்தைப் பற்றிய செய்தி அல்ல, ஆனால் இப்பொழுது அதிகாரம் செலுத்திக்கொண்டிருக்கும், ஏற்கெனவே ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கும் ஓர் உலக அரசாங்கத்தைப் பற்றிய செய்தியாகும். அந்த ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டது. 1,900 ஆண்டுகளுக்கு முன்னதாக இயேசு குறிப்பிட்ட ஜெபத்திற்கு விடையளிப்பதற்குரிய சூழலை அமைத்தது. அந்த அரசாங்கத்திற்கு அரசராயிருக்கப்போகிறவர் அதற்காக ஜெபிக்கும்படியாகக் கற்றுக்கொடுத்தது முதல் அந்த ஜெபம் ராஜ்யத்தின் ஸ்தாபகரிடமாக ஏறெடுக்கப்பட்டுவருகிறது. எனவே அந்த ராஜ்யத்தின் ஸ்தாபகர் அந்த விண்ணப்பத்தை வெகு காலமாகக் கேட்டுவந்திருக்கிறார். பூமியில் இருக்கும் அவருடைய சாட்சிகள் அந்த ஜெபத்தைக் காலமெல்லாம் செய்துவந்தது குறித்து அவர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார், ஏனென்றால் அந்த ராஜ்யத்தின் வருகையில் அவர்களுக்கு விசுவாசம் இருப்பது இந்தவிதத்தில் வெளிக்காட்டப்பட்டது. “பரலோகங்களிலிருக்கும் பிதா”விடமாக அந்த ஜெபத்தை ஏறெடுப்பதில் அவர்கள் சோர்ந்துவிடவில்லை, அது அவர்களுக்குப் பழையதாகிவிடவில்லை.—மத்தேயு 6:9, 10.
14. கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதை யெகோவாவின் சாட்சிகள் ஏன் தொடர்ந்து செய்துவருகின்றனர்?
14 அந்த ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை யெகோவாவின் சாட்சிகள் நம்பி அறிக்கை செய்கிறவர்களாக, அவர்கள் ராஜ்யத்தின் நற்செய்தியை தொடர்ந்து பிரசங்கித்துவருகிறார்கள். அவர்கள் அப்படிச் செய்வதற்குக் காரணம், ஸ்தாபிக்கப்பட்ட அந்த ராஜ்யம் பூமியை முழுவதுமாய்த் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவில்லை என்பதே. ஆனால் இந்த உலக ராஜ்யங்கள் மனிதவர்க்கத்தின் எல்லாக் கோத்திரம் மற்றும் இனத்தவர் மீது தங்களுடைய அதிகாரத்தைத் தொடர்ந்து செலுத்துவதற்கு அது அனுமதித்திருக்கிறது. (ரோமர் 13:1) எனவே அது முழு கருத்தில் வரவேண்டியதாயிருக்கிறது, அதாவது, பூமி முழுவதையும் ஆளும் தனிப்பட்ட அரசாங்கமாக இருக்குமளவில் வரவேண்டியதாயிருக்கிறது.—தானியேல் 2:44.
15. இஸ்ரவேல் அரசர்கள் அபிஷேகம்பண்ணப்பட்டதை விட அதிக மகத்தான அளவில் பொ. ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாள் முதல் என்ன நடந்துவந்திருக்கிறது?
15 அந்த ராஜ்யத்தின் அரசராக அவர் நியமிக்கப்பட்டிருந்தாலும், இயேசு தனித்து ஆளுவதில்லை. மேசியானிய ராஜ்யத்தில் உடன் சுதந்தரவாளிகளாக இருப்பதற்கு, யெகோவா தேவன், தம்முடைய ராஜ குமாரனின் 1,44,000 சீஷர்களை நியமித்திருக்கிறார். (தானியேல் 7:27) பூர்வகாலங்களில் இஸ்ரவேல் அரசர்கள் பிரதான ஆசாரியரால் பரிசுத்த அபிஷேக தைலம் கொண்டு அபிஷேகம்பண்ணப்பட்டது போல, பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாள் முதல் யெகோவா தேவன் இயேசு கிறிஸ்துவின் 1,44,000 உடன் சுதந்தரவாளிகளைத் தம்முடைய பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்துவந்திருக்கிறார்; பரலோகங்களில் “ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவு”மாய் இருப்பவருடன் ஆவியின் சரீரத்தில் வாழ்வதற்காக அவர்களைப் பிறப்பித்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 19:16; 1 இராஜாக்கள் 1:39 ஒப்பிடவும்.
பரதீஸ் ‘கடைசி ஆதாமால்’ திரும்ப நிலைநாட்டப்படும்
16. இயேசு கழுமரத்தில் அறையப்பட்ட சமயத்தில் ராஜ்யத்தின் எதிர்ப்பார்ப்பு என்னவாயிருந்தது? ஆனால் ஏன் அவர் தவறான செய்தியின் அறிவிப்பாளராக இருக்கவில்லை?
16 பொ.ச. 33-ல் இயேசு கழுமரத்தில் அறையப்பட்டபோது அவர் ஒரு ராஜ்யத்தைக் கொண்டிருப்பது கூடாத காரியமாகத் தோன்றியது. ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கம் செய்த அவர் தவறான செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டில்லை. தாம் கழுமரத்தில் அறையப்பட்டு மூன்றாம் நாளிலே, இயேசுவின் சீஷர்கள், கூடாததாயிருக்கும் ஓர் அரசாங்கத்துக்காக ஜெபித்துக்கொண்டிராதபடி அந்த ராஜ்யத்தின் ஸ்தாபகர் அதை நிச்சயப்படுத்தினார். ஜெபிக்கப்பட்ட ராஜ்யத்தில் தம்மைப் பிரதிநிதித்துவம் செய்யப்போகிறவரை யெகோவா உயிர்த்தெழுப்பி, அவருக்கு அழியாமையைத் தரித்தார்.
17, 18. (எ) இயேசு “கடைசி ஆதாம்” என்று அழைக்கப்பட்டதன் விசேஷம் என்ன? (பி) 1914 முதல் நடந்துவரும் உலக சம்பவங்கள் குறிப்பிட்டுக் காட்டுவது என்ன?
17 பூமியில் முதல் பரதீஸை உண்டாக்கியவர் பரதீஸைத் திரும்பப் புதுப்பித்து அந்தப் பூகோளப் பூங்காவை மக்களால் நிரப்பும் உத்தரவாதத்தை தமக்குக் கொடுப்பார் என்பதை இயேசு அறிந்திருந்தார். நாம் 1 கொரிந்தியர் 15:45, 47-ல் இப்படியாக வாசிக்கிறோம்: “அப்படியே, முதல் மனுஷன் ஆதாம் உயிருள்ள ஆத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; கடைசி ஆதாமோ உயிர்ப்பிக்கிற ஆவியானார். முதல் மனுஷன் பூமிக்குரிய மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் பரலோகத்திற்குரியவர்.” இரண்டாம் ஆதாம் பரலோகத்திலிருந்து வந்தார். இந்தப் பூமியில் பரதீஸைத் திரும்ப நிலைநாட்டுவதற்கு யெகோவா பயன்படுத்துகிறவரும் அவரே. இந்த அடிப்படையில்தானே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிவிரக்கம் காண்பித்த அந்தத் தீயோனிடம், “நீ என்னுடனேகூட பரதீஸிலிருப்பாய்” என்று சொன்னார். (லூக்கா 23:43) ‘கடைசி ஆதாமாகிய’ மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் கரங்களிலிருக்கும் பரலோக ராஜ்யத்தின் கீழ் பூமியில் பரதீஸ் ஸ்தாபிக்கப்படும் என்பதை இந்தச் சம்பாஷணை திரும்பவும் தெளிவுபடுத்துகிறது.
18 1914 முதல் நடந்துவரும் உலக சம்பவங்கள் இயேசு கிறிஸ்துவால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களுக்கு இசைவாக இருக்கிறது, இப்படியாக இயேசு அதுமுதல் அரச வல்லமையில் இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. இப்பொழுது ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு மேல் கடந்திருக்க, 1914 முதல் வாழ்ந்து வரும் இந்த 20-வது நூற்றாண்டு தலைமுறையின் மக்கள் மத்தேயு 24-ல் காணப்படும் இயேசுவின் தீர்க்கதரிசனத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சம்பவங்களின் நிறைவேற்றத்தைக் கண்டுவந்திருக்கின்றனர். எனவே, இந்தக் காலப் பகுதி அதின் முடிவை நெருங்கிவிட்டிருக்கிறது, பூமியில் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுதல் மிகவும் சமீபமாயிருக்கிறது.—மத்தேயு 24:32–35; சங்கீதம் 90:10.
கிளர்ச்சியூட்டும் ஒரு புதிய உலக சகாப்தம் சற்றே முன்னால் இருக்கிறது
19, 20. (எ) அர்மகெதோனுக்குப் பின்பு, யெகோவா தம்மை நேசிப்பவர்களை எதற்குள் கொண்டுசெல்வார்? (பி) அர்மகெதோனைத் தொடர்ந்து என்ன செய்யப்படவேண்டியதாயிருக்கும்?
19 எவ்வித ஐயப்பாட்டிற்கும் இடமின்றி, அர்மகெதோன் போர்க்களத்தில் தம்முடைய சர்வலோக அரசுரிமையை நிலைநாட்டிய பின்பு தம்மை நேசிப்பவர்களுக்கு யெகோவா அறிமுகப்படுத்தும் ஒழுங்குமுறை சலிப்புத்தட்டும் கவர்ச்சியற்ற ஒன்றாயிராது. தேவனுடைய குமாரனும் மேசியானிய அரசருமான இயேசுவின் முழுநிறைவான ஆட்சியின் கீழ் மனிதவர்க்கத்துக்குக் காத்திருக்கும் அந்தச் சகாப்தம் கிளர்ச்சி மிகுந்த ஒன்றாயிருக்கும். ஆ, நன்மை தரும் வகையில் அப்பொழுது செய்வதற்கு எவ்வளவு இருக்கும்! யெகோவாவின் பரலோக சேனைக்கும் தீய சக்தி படைத்த சேனைக்கும் இடையிலான பூகோள அளவான போராட்டத்தின் பலனாக ஏற்பட்டிருக்கும் எந்த ஒரு வடுவும், ஏன், எல்லா வடுக்களுமே பூமியின் முகத்திலிருந்து நீக்கப்பட்டுவிடும். அந்த வடுக்கள் இருந்த இடம் அறியாமற்போய்விடும்.
20 ஆனால் தேசங்கள் பின்னால் விட்டுச்செல்லக்கூடிய எல்லா யுத்தத் தளவாடங்களைப் பற்றியதென்ன? அவற்றின் எரிக்கவல்ல பகுதிகளை அழித்திட அடையாளப்பூர்வமாக எடுக்கும் காலப்பகுதியை நோக்குமிடத்து, அவற்றின் அளவு ஏராளமாக இருக்கும் என்பது தெரிகிறது. (எசேக்கியேல் 39:8–10) போர்த்தளவாடங்களின் எஞ்சியிருக்கும் பகுதிகளை அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் பயனுள்ள நோக்கத்திற்காகப் பயன்படுத்தக்கூடியவர்களாயிருப்பார்கள்.—ஏசாயா 2:2–4.
21. ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தவர்களின் அனுபவத்திற்கு ஒப்பாக, அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் என்ன நிலைமையை எதிர்ப்படுவார்கள்? ஆனால் என்ன பெரிய வித்தியாசம் இருக்கும்?
21 நோவாவின் நாளில் பூகோள அளவான ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்த நோவாவின் குடும்பம் எதிர்ப்பட்ட அதே நிலைமையைத்தான் அவர்களுக்கு இணையான ஆசீர்வதிக்கப்பட்ட தற்கால குடும்பம் எதிர்ப்படும். என்றபோதிலும், பிசாசாகிய சாத்தானும் அவனுடைய பிசாசு சேனைகளும் பூமியைச் சூழ இருக்கும் காணக்கூடாத வானங்களை இனிமேலும் வாதிக்க மாட்டா, ஆனால் பத்து நூற்றாண்டுகளுக்கு அவை முற்றிலும் செயலற்ற நிலைக்குள்ளாக்கப்படும். (வெளிப்படுத்துதல் 20:1–3) அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள், “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளைக்” கடந்திருக்கும் ஒரு பூமியைக் கீழ்ப்படுத்தும் ஒரு சவால் மிகுந்த வேலையைக் கொண்டிருப்பர். அப்பொழுது, அந்த மகா நாள் இந்தக் கோளத்தின் மீது விட்டுச் சென்றிருக்கும் பாதிப்புகள் என்னவாயிருப்பினும் அவற்றைச் சந்திப்பவர்களாயிருப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 16:14.
22. அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் பூமி முழுவதும் பரதீஸை விஸ்தரிக்கும் அந்தச் சவாலுக்கு எவ்விதம் பிரதிபலிப்பார்கள்?
22 அர்மகெதோன் யுத்தத்தைத் தப்பிப்பிழைப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், பூமி முழுவதையும் பரதீஸாக விஸ்தரிக்கும் மிகப் பெரிய உத்தரவாதமளிக்கப்படும்போது, அவர்கள் அதைக் குறித்து அச்சம் கொள்ளக்கூடும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படலாம். ஆனால் மாறாக, மிகவும் கிளர்ச்சியுற்றவர்களாக, அவர்கள் தைரியமாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் அதைத் தொடங்குகிறவர்களாயிருப்பார்கள். இந்தப் பூமி கடவுளுடைய அடையாளப்பூர்வ பாதபடி என்பதை அவர்கள் முழுவதுமாய் உணர்ந்து, அவருடைய பாதங்கள் இதில் படிவதற்குத் தகுதியாக இந்த இன்பக் கோளத்தை எழில் மிகுந்த கவர்ச்சியான நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற உள்ளான ஆர்வம் கொண்டவர்களாயிருப்பார்கள்.
23. அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் பரதீஸைத் திரும்ப நிலைநாட்டுவதன் சம்பந்தமாகத் தங்களுடைய வேலை வெற்றிபெறும் என்பதற்கு என்ன நிச்சயத்தைக் கொண்டிருப்பார்கள்?
23 இந்தப் பூமியைக் குறித்ததில், அந்தத் தெய்வீக உத்தரவாதத்தின் நிறைவேற்றமாக இந்த மகிழ்ச்சியுள்ள சேவையை ஏற்று நடத்துவதில் அவர்கள் உதவியின்றி தனிமையில் விடப்படமாட்டார்கள் என்பதை அறிவது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. (ஏசாயா 65:17, 21–24 ஒப்பிடவும்.) பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுவது குறித்த வாக்குறுதியை அளித்தவரும், தாம் பரலோகத்திற்கு ஏறிச்செல்வதற்கு முன்னால், “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது,” என்று சொன்னவருடைய முழு ஆதரவும் அவர்களுக்கு இருக்கும். (மத்தேயு 28:18) அவர் அந்த அதிகாரத்தை இன்னும் உடையவராயிருக்கிறார், மற்றும் அந்தப் பரிவிரக்கம் காண்பித்த தீயோனிடம் தாம் கூறிய குறிப்பிடத்தக்க வாக்கை அவர் நிறைவேற்றவல்லவராயும் இருக்கிறார். இதை நாம் அடுத்த கட்டுரையில் சிந்திப்போம். (w89 8/15)
[அடிக்குறிப்புகள்]
a விவரங்களுக்கு உவாட்ச் டவர் பைபிள் சொஸையிட்டி பிரசுரித்திருக்கும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” புத்தகத்தில் பக்கங்கள் 152–7-ஐ பார்க்கவும். மற்றும் எசேக்கியேல் 21:27-யும் பார்க்கவும்.
விமர்சனக் கேள்விகள்
◻ இயேசு கல்வாரியில் கொடுத்த வாக்கு மனிதவர்க்கத்துக்கும் அந்தக் குற்றவாளிகளில் ஒருவனுக்கும் என்ன உறுதியை அளிக்கிறது?
◻ பரதீஸுக்குச் செல்வதற்கான வழி திறக்கப்படுவதற்கு அடிப்படை என்ன?
◻ முதல் ஆதாம் எதைச் செய்ய தவறி விட்டான்? ஆனால் “கடைசி ஆதாம்” எதைச் சாதிப்பார்?
◻ அர்மகெதோனுக்குப் பின்பு, தம்மை நேசிப்பவர்களை யெகோவா எப்படிப்பட்ட காரிய ஒழுங்குமுறைக்குள் கொண்டுசெல்வார்?
[பக்கம் 13-ன் படம்]
“1914-ல் அனைத்து ராஜ்யங்களின் முடிவு” என்ற கட்டுரை ஆகஸ்ட் 30, 1914 தேதியிட்ட “தி உவர்ல்டு மாகஸீன்” என்ற பத்திரிகையில் வெளிவந்தது