மனிதன் பரதீஸில் வாழ்க்கையை அனுபவிப்பது கடவுளுடைய நோக்கம்
“தேவனாகிய கர்த்தர் (யெகோவா, NW) மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.”—ஆதியாகமம் 2:15.
1. கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் சம்பந்தமாக சிருஷ்டிகரின் ஆதிநோக்கம் என்னவாக இருந்தது?
கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் ஒருபோதும் முதுமையடையாத வாழ்க்கையை, எப்போதும் பொங்கி வழியும் இளமைக்குரிய சுறுசுறுப்போடு, எல்லாச் சலிப்பிலிருந்தும் விடுபட்டவர்களாய், எப்போதும் நிறைவேற்ற ஒரு பயனுள்ள நோக்கத்தைக் கொண்டவர்களாய், மெய்யான சுயநலமற்ற வழியில் நேசிக்கின்ற மற்றும் நேசிக்கப்படுகின்றதுமான வாழ்க்கையைப் பரிபூரணமாக ஒரு பரதீஸில் அனுபவிக்க வேண்டும் என்பது சிருஷ்டிகரின் ஆதி நோக்கமாக இருந்தது, இன்னும் அதுவே அவருடைய நோக்கமாக இருக்கிறது!—ஆதியாகமம் 2:8; லூக்கா 23:42, 43-ஐ ஒப்பிடவும்.
2. (எ) முதல் மனிதன் உணர்வு நிலையைப் பெற்றபோது என்ன சம்பவித்திருக்க வேண்டும்? (பி) முதல் மனிதன் எப்போது சிருஷ்டிக்கப்பட்டான்? எங்கே? ஆண்டின் எந்தச் சமயத்தில்?
2 அதை அறிந்துகொள்ள புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட ஆதாம், முதல் முதலாக உணர்வு நிலையைப் பெற்றுக் கொண்ட சமயத்தை, அவன் தன்னுடைய சொந்த உடலையும், அவனைச் சுற்றி அவன் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் உணர்ந்தவற்றையும் ஆராய்ந்த சமயத்தை, அவன் உயிரோடிருப்பதை ஒரு திடீர் ஆச்சரியத்தோடு வியந்த சமயத்தைப் பின்னோக்கிப் பாருங்கள்! இது பரிசுத்த பைபிளில் கொடுக்கப்பட்ட கால கணக்கின்படி, சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பாக, நம்முடைய பொது சகாப்தத்துக்கு முன்பாக 4,026-ம் ஆண்டில் சம்பவித்தது. இது இன்று துருக்கி எனப்படும் தேசமிருக்கும் இடத்தில் அல்லது இப்பொழுது ஆசியா என்றழைக்கப்படுவதன் தென்மேற்குப் பகுதியில் ஐபிராத்து மற்றும் டைகிரிஸ் நதியின் சுற்றுப்புறத்தில், ஆகவே நம்முடைய பூமி கோளத்தின் வடக்குப் பாதியில் சம்பவித்தது. அது அக்டோபர் 1-ஆக இருந்திருக்கும், ஏனென்றால் மனிதவர்க்கத்தின் பெரும்பாலான பூர்வ நாட்காட்டிகள் காலத்தை ஏறக்குறைய அந்தத் தேதியிலிருந்தே கணக்கிட்டன.
3. (எ) என்ன நிலையில் முதல் மனிதன் உயிர்ப்பெற்றான்? (பி) முதல் மனிதனுடையப் பெயர் என்னவாயிருந்தது? அதன் பொருள் என்ன?
3 முதல் மனிதன் முழு வளர்ச்சியடைந்தவனாய், முழுநிறைவான தோற்றமுடையவனாய், முழுநிறைவான உடல் ஆரோக்கியத்தோடு, முழுநிறைவாய் ஒழுக்கமுள்ளவனாய் உயிர்ப்பெற்று வந்தான். பைபிள் பதிவில் திரும்பத் திரும்ப அவனுக்குக் கொடுக்கப்பட்ட பெயர், அவன் எந்த மூலப்பொருளிலிருந்து உருவாக்கப்பட்டான் என்பதற்கு நம்முடைய கவனத்தைத் திருப்புகிறது. அவனுடைய பெயர் அதாம் என்று இருந்தது.a அவனை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட பூமி அல்லது மண் அதாமா என்றழைக்கப்பட்டது. ஆகவே அவனுடைய பெயர் “மனுபுத்திரன்” என்று பொருள்படுவதாகச் சொல்லலாம். இது இந்த முதல் மனிதனின் தனிப்பட்ட பெயரானது—ஆதாம். அவன் உயிர்ப்பெற்று, உணர்வுள்ள புத்திக்கூர்மையுள்ள ஆளானபோது ஆதாமுக்கு அது எப்பேர்ப்பட்ட ஒரு கிளர்ச்சியாக இருந்திருக்க வேண்டும்!
4. என்ன விநோதமான உணர்வுகளோடு முதல் மனிதன் உயிர் பெற்றுவரவில்லை? ஆகவே அவன் யாருடைய மகன் இல்லை?
4 இந்த முதல் மனிதனாகிய ஆதாம் உயிர்ப்பெற்று புத்திக்கூர்மையுள்ள உணர்வு நிலைக்கு விழித்துக் கொண்டு அவனுடைய கண்களை திறந்து பார்த்த போது, தான் முடியால் மூடிய மார்பில் கிடப்பதை, ஏதோ வாலில்லா குரங்கு இனத்தைச் சேர்ந்த ஓர் உயிரினத்தினுடைய நீண்ட வலிமையான கரங்களின் அணைப்பிலிருப்பதை, அவளைப் பற்றிக் கொண்டு அவளுடைய கண்களைப் பார்த்து, மென்மையான பாசத்தோடு அவளை அம்மா என்றழைக்கும் நிலையில் தன்னைக் காணவில்லை. முதல் மனிதனாகிய ஆதாம், இப்பேர்ப்பட்ட விநோதமான உணர்வுகளோடு உயிர்ப்பெற்று வரவில்லை. வாலில்லா குரங்கு இனத்தில் ஒன்றை அவன் பின்னால் முதல்முறையாக பார்த்தபோதுகூட அதோடு எந்த ஒரு மாம்சப்பிரகாரமான உறவும் இருப்பதாக அவன் உணரவில்லை. அவன் சிருஷ்டிக்கப்பட்ட நாளில், அவன் ஒரு வாலில்லாக் குரங்கின் அல்லது அதுபோன்ற ஓர் உயிரினத்தின் சந்ததியான, தூரத்து உறவு மகன் என்பதாக மறைமுகமாக குறிப்பிட எதுவுமிருக்கவில்லை. என்றபோதிலும் முதல் மனிதனாகிய ஆதாம், அவன் எவ்விதமாக வந்தான் என்பது பற்றி குழப்பத்திலேயே இருக்க வேண்டுமா? இல்லை.
5. தன்னுடைய பூங்காப் போன்ற தோட்டத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் ஆதாம் திட்டவட்டமாக எதை அறிந்திருந்தான்?
5 அவன் பார்த்துக்கொண்டிருந்த எல்லா அழகிய காரியங்களும் எவ்விதமாக வந்தன என்பது குறித்து அவன் குழம்பியிருந்தது புரிந்துகொள்ளப்படக்கூடியதே. அவன் தான் சொந்தமாக வடிவமைக்காத, உருவாக்காத, மற்றும் தன்னேற்பாடாக இல்லாத ஒரு பூங்காப் போன்ற தோட்டமாகிய ஒரு பரதீஸில் தன்னைக் கண்டான். இது எவ்விதமாக வந்தது? பரிபூரண புத்திக்கூர்மையுள்ள பகுத்தறிவுள்ள ஒரு மனிதனாக அவன் இதைத் தெரிந்துகொள்ள விரும்புவான். அவனுக்கு முன் அனுபவம் எதுவுமில்லை. அவன் தானே தன்னை ஆக்கிக் கொண்டவனாக, தானாகவே வளர்ந்துவிட்டவனாக இருக்கவில்லை. அவன் தன் சொந்த முயற்சியால் இந்நிலைக்கு உயர்ந்துவிடவில்லை.—சங்கீதம் 100:3; 139:14-ஐ ஒப்பிடவும்.
6. பரிபூரணமான பூமிக்குரிய வீட்டில் உயிரோடிருக்கையில் ஆதாம் எவ்விதமாக பிரதிபலித்திருக்கக்கூடும்?
6 முதல் மனிதனாகிய ஆதாம், தான் எங்கிருந்து வந்தான், ஏன் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு, பரிபூரணமான பூமிக்குரிய வீட்டில் சந்தோஷத்தோடே உயிரோடிருக்கும் இந்த முதல் அனுபவத்தில் வெகுவாக கிளர்ச்சியடைந்தவனாய் ஆரம்பத்தில் இருந்திருக்க வேண்டும். அவனால் மகிழ்ச்சியாக கூக்குரலிடாமல் இருந்திருக்க முடியாது. அவன் தன் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவருவதைக் கண்டான். அவன் மனிதனின் பாஷையில், அழகானவையாக அவன் கண்ட மற்றும் கேட்ட காரியங்களைக் குறித்து பேசுகிறவனாய்த் தன்னைக் கண்டான். இந்தப் பரதீஸியத் தோட்டத்தில் இங்கே உயிருடனிருப்பது எத்தனை இன்பமளிப்பதாயிருந்தது! ஆனால் எல்லாக் காட்சிகளையும், சப்தங்களையும், வாசனைகளையும் காரியங்களையும் தொட்டறியும் உணர்வின் மூலம் கிடைக்கும் தகவல்களினால் தன்னைத்தானே களிப்போடு நிறைத்து கொண்டிருந்தபோது, அவன் சற்று சிந்திக்கத் தூண்டப்படுவான். நமக்கு, நாம் அவனுடைய சூழ்நிலைமையில் வைக்கப்பட்டிருந்தால் அனைத்துக் காரியங்களைப் பற்றியும் ஒரு குழப்பத்திலும், நாமாகவே இந்தக் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள இயலாதவர்களாயுமிருந்திருப்போம்.
மனித வாழ்வு பற்றி எந்தக் குழப்பமுமில்லை
7. உயிருடனும் ஒரு பரதீஸிய தோட்டத்திலும் தன்னைக் கண்டது பற்றி ஆதாம் ஏன் வெகு காலமாக குழம்பிய நிலையில் இருக்கவில்லை?
7 முதல் மனிதனாகிய ஆதாம் உயிருடனும், பரதீஸியத் தோட்டத்தில் தன்னைப் போல கண்களுக்குத் தெரியும் எவரும் இல்லாமல் தனிமையின் அந்த நிலைமையைக் குறித்து வெகு காலமாக குழம்பிய நிலையில் இல்லை. அவன் ஒரு குரலை, எவரோ ஒருவர் பேசுவதைக் கேட்டான். அந்த மனிதன் அதைப் புரிந்து கொண்டான். ஆனால் பேசியவர் எங்கே? எவரும் பேசுவதை அந்த மனிதன் பார்க்கவில்லை. குரல் கண்ணுக்குப் புலப்படாத காணப்படாத ஓர் இடத்திலிருந்து வந்தது, அது அவனிடமாகப் பேசியது. அது மனிதனை உண்டு பண்ணினவராகிய அவனுடைய சிருஷ்டிகரின் குரல்! அந்த மனிதனால் அதேவிதமான பேச்சில் அவருக்குப் பதிலளிக்க முடிந்தது. அவன், கடவுளோடு, சிருஷ்டிகரோடு தான் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். தெய்வீகக் குரலைக் கேட்பதற்கு மனிதனுக்கு எந்த ஒரு நவீன விஞ்ஞான வானொலி ஒலிவாங்கியும் அவசியமாயிருக்கவில்லை. கடவுள் தம்முடைய சிருஷ்டியாகிய அவனிடம் நேரடியாகப் பேசினார்.
8, 9. (எ) என்ன கேள்விகளுக்கு ஆதாம் பதில்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்? தகப்பனுக்குரிய எந்தக் கவனிப்பும் அக்கறையும் அவனுக்குக் காண்பிக்கப்பட்டது? (பி) ஆதாம் தன்னுடைய பரலோகத் தகப்பனிடமிருந்து என்ன பதிலைப் பெற்றுக் கொண்டான்?
8 மனிதன் இப்பொழுது தான் தனிமையில் இல்லை என்பதை அறிந்துகொண்டான். இதன் காரணமாக அவன் முன்னிலும் மேம்பட்டு உணர்ந்திருக்க வேண்டும். அவனுடைய மனது கேள்விகளால் நிறைந்திருந்தது. தன்னிடம் பேசிக் கொண்டிருந்த அந்தக் காணக்கூடாதவரிடம் அவன் அவைகளைக் கேட்க முடியும். அவனையும் இந்த இன்பத் தோட்டத்தையும் உண்டாக்கியது யார்? அவன் ஏன் அங்கு வைக்கப்பட்டான்? அவன் தன்னுடைய வாழ்க்கையை வைத்து என்ன செய்ய வேண்டும்? வாழ்வதில் ஏதாவது நோக்கமுண்டா? தகப்பனுக்குரிய கவனிப்பும் அக்கறையும் இந்த முதல் மனிதனாகிய ஆதாமுக்குக் காண்பிக்கப்பட்டது. ஏனென்றால் அவனுடைய கேள்விகளுக்கு அவனுடைய ஆர்வமுள்ள மனதுக்கு திருப்தியளித்த பதில்கள் கொடுக்கப்பட்டன. அந்த மனிதன், பேச ஆரம்பிப்பதையும், அவனுடைய முதல் வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்பதும், அவனை உண்டுபண்ணினவரும், அவனுக்கு ஜீவனை அளித்தவரும், அவனுடைய பரலோகத் தகப்பனுமாயிருந்தவருக்கு என்னே இன்பமாயிருந்திருக்கும்! பரலோகத் தகப்பனுக்குத் தம்முடைய மகன் தம்மோடு பேசுவதைக் கேட்பது எத்தனை மகிழ்ச்சியை அளித்தது! இயல்பான முதல் கேள்வி, “நான் எப்படி வந்தேன்?” என்பதாக இருந்திருக்கும். பரலோகத் தகப்பன் இதற்கு பதிலளிப்பதில் மகிழ்ச்சியடைந்து, இப்படியாக இந்த முதல் மனிதன் தம்முடைய குமாரன் என்பதாக ஒப்புக்கொண்டார். அவன் “தேவனுடைய குமாரன்.” (லூக்கா 3:38) யெகோவா, இந்த முதல் மனிதனாகிய ஆதாமின் தகப்பனாகத் தம்மை அடையாளப்படுத்தினார். பரலோகத் தகப்பனிடமிருந்து தன்னுடைய கேள்விக்கு, ஆதாம் பெற்றுக் கொண்டு தன்னுடைய சந்ததிக்குக் கடத்திய பதிலின் சுருக்கம் இதோ:
9 “தேவனாகிய யெகோவா மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய யெகோவா, பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.”—ஆதியாகமம் 2:7–10.b
10, 11. (எ) என்ன உண்மைகளை ஆதாம் தெளிவாகக் கற்றுக் கொண்டான்? ஆனால் வேறு என்ன கேள்விகளுக்கு அவன் பதில்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியவனாக இருந்தான்? (பி) பரலோகத் தகப்பன் என்ன பதில்களை ஆதாமுக்குக் கொடுத்தார்?
10 ஆதாமின் அறிவுகூர்மையுள்ள சுறுசுறுப்பான மனது, திருப்தியளிக்கும் இந்தத் தகவலை ஆர்வத்தோடு உட்கொண்டது. இப்பொழுது அவனுடன் பேசிய, அவனை உண்டுபண்ணினவரும் உருவாக்கினவரும் இருக்கும் இடமாகிய அந்தக் காணக்கூடாத இடத்திலிருந்து தான் வரவில்லை என்பதை அறிந்திருந்தான். மாறாக, அவன் வாழ்ந்துகொண்டிருந்த பூமியிலிருந்துதானே உருவாக்கப்பட்டான். ஆகவே அவன் மண்ணுக்குரியவனாக இருந்தான். யெகோவா தேவனே அவனுக்கு ஜீவனைக் கொடுத்தவரும் தகப்பனுமாயிருந்தார். அவன் “உயிருள்ள ஆத்துமா”வாக இருந்தான். யெகோவா தேவனிடமிருந்து தன்னுடைய ஜீவனைப் பெற்றுக் கொண்டதால் அவன் “கடவுளுடைய குமாரனாக” இருந்தான். ஏதேன் தோட்டத்தில் அவனைச் சுற்றியிருந்த மரங்கள் அவன் சாப்பிடுவதற்கும் உயிருள்ள ஆத்துமாவாக தொடர்ந்திருப்பதற்கும் உணவுக்கு உகந்ததாயிருந்த கனிகளைக் கொடுத்தன. என்றபோதிலும் அவன் ஏன் தொடர்ந்து உயிருடன் இருக்க வேண்டும், அவன் ஏன் பூமியில், இந்த ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்டான்? அவன் புத்திக்கூர்மையுடனும், உடல் சம்பந்தமான திறமைகளுடனுமிருந்த முழுமையாக வளர்ந்த மனிதனாக இருந்தான், இதைத் தெரிந்துகொள்ள தகுதியுடையவனுமாயிருந்தான். மற்றபடி அவன் எவ்விதமாகத் தன் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றி, இவ்விதமாக தெய்வீக சித்தத்தைச் செய்வதன் மூலம் தன்னை உண்டாக்கினவரையும் தன் தகப்பனையும் மகிழ்விக்க முடியும்? நேர்மையான இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் பின்வரும் தகவலில் கொடுக்கப்பட்டது:
11 “தேவனாகிய யெகோவா மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய யெகோவா மனுஷனை நோக்கி: ‘நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்’ என்று கட்டளையிட்டார்.”—ஆதியாகமம் 2:15–17.
12. எதற்காக ஆதாம் தன்னுடைய சிருஷ்டிகருக்கு நன்றி செலுத்தியிருக்க வேண்டும்? மனிதன் எவ்விதமாக கடவுளை மகிமைப்படுத்த முடியும்?
12 ஆதாம், இந்த அழகிய ஏதேன் தோட்டத்தில், பிரயோஜனமான வழியில் நேரத்தைச் செலவழிப்பதற்கு, ஏதோ ஒரு வேலை கொடுக்கப்பட்டதற்காகத் தன் சிருஷ்டிகருக்கு நன்றி செலுத்தியிருக்க வேண்டும். இப்பொழுது அவன் தன்னுடைய சிருஷ்டிகரின் சித்தத்தை அறிந்தவனாயிருக்க, அவருக்காகப் பூமியில் அவன் எதையாவது செய்யக்கூடும். இப்பொழுது ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தி பராமரிக்கும் உத்தரவாதம் அவன் மீது தங்கியிருந்தது, ஆனால் அது செய்வதற்கு ஓர் இன்பமான காரியமாக இருக்கும். இதைச் செய்வதன் மூலம், அவன் ஏதேன் தோட்டத்தைப் பார்ப்பதற்கு, அதை உண்டுபண்ணினவராகிய யெகோவா தேவனுக்கு மகிமையையும் துதியையும் கொண்டுவரும் வகையில் வைத்துக் கொள்ளலாம். வேலை செய்வதனால் ஆதாமுக்குப் பசியுண்டாகும்போதெல்லாம், அவன் தோட்டத்திலிருந்த விருட்சங்களிலிருந்து திருப்தியாகச் சாப்பிடலாம். இவ்விதமாக அவன் தன்னுடைய பெலத்தைப் புதுப்பித்துக் கொண்டு குறையாது தன்னுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையை வரையறையின்றி முடிவில்லாமல் காத்துக் கொள்ளலாம்.—பிரசங்கி 3:10–13-ஐ ஒப்பிடவும்.
நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பு
13. முதல் மனிதனுக்கு என்ன எதிர்பார்ப்பு இருந்தது? ஏன் அப்படி?
13 முடிவில்லாமலா? அந்தப் பரிபூரணமான மனிதனுக்கு இது என்னே ஒரு நம்பமுடியாத எண்ணமாக இருந்திருக்க வேண்டும்! ஆனால் ஏன் முடியாது? அவனுடைய சிருஷ்டிகருக்கு, தனித்திறமையோடு வடிவமைக்கப்பட்ட இந்த ஏதேன் தோட்டத்தை அழிக்கும் எண்ணமோ அல்லது நோக்கமோ இருக்கவில்லை. அவருடைய சொந்த கைவேலைப்பாடு அத்தனை நல்லதாகவும் அவருடைய கலையுணர்வுள்ள படைப்பாற்றலை வெளிப்படுத்துவதாகவும் இருக்கையில், அதை ஏன் அவர் அழிக்க வேண்டும்? நியாயமாகவே அவர் அதைச் செய்ய நினைக்கமாட்டார். (ஏசாயா 45:18) ஈடில்லாத இந்தத் தோட்டம் தொடர்ந்து பண்படுத்தப்பட இருந்ததால், அதற்கு பரிபூரண மனிதனாகிய ஆதாம் போன்ற ஒரு பண்படுத்துபவனும் பொறுப்பாளனும் தேவையாக இருக்கும். பொறுப்பாளனாக இருந்த மனிதன், விலக்கப்பட்டிருந்த “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை” ஒருபோதும் புசியாதிருந்தால், அவன் ஒருபோதும் சாகமாட்டான். பரிபூரண மனிதன் என்றுமாக வாழமுடியும்!
14. ஆதாம் எவ்விதமாக பரதீஸில் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கக்கூடும்?
14 பரதீஸான ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கு முன்பாக நித்திய ஜீவன் வைக்கப்பட்டிருந்தது! அவன் தன்னுடைய சிருஷ்டிகருக்குப் பரிபூரணமாக கீழ்ப்படிதலுடன் நிலைத்திருந்து, மனிதனுடைய சிருஷ்டிகரால் விலக்கப்பட்டிருந்த கனியை ஒருபோதும் புசியாதிருந்தால், அது நித்தியமாக அனுபவிக்கப்படமுடியும். பரிபூரண மனிதன் கீழ்ப்படிதலுடன் இருந்து நித்தியமாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது. “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனி” விலக்கப்பட்டதுதானே மரணத்துக்கேதுவானதாக இருக்கவில்லை. அது தன்னுடைய தகப்பனுக்கு மனிதனின் பரிபூரண கீழ்ப்படிதலின் ஒரு பரீட்சையாக மாத்திரமே இருந்தது. அது, சிருஷ்டிகராகிய கடவுளுக்குத் தன்னுடைய அன்பை நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பை மனிதனுக்கு அளித்தது.
15. ஆதாம் ஏன் சிருஷ்டிகரின் கரங்களிலிருந்து நன்மை அனுபவிக்கும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கலாம்?
15 அவன் திட்டமிடப்படாது ஏற்பட்ட ஒரு விபத்தின் விளைவாக இருக்காமல் ஒரு பரலோகத் தகப்பனையுடையவனாய் இருந்ததால் ஏற்பட்ட இருதய நிறைவினாலும், வாழ்க்கையில் தன்னுடைய நோக்கத்தைப் பற்றிய புரிந்து கொள்ளுதலால் மனத்தெளிவடைந்தவனாக இருந்ததாலும், பரதீஸில் நித்திய ஜீவனைக் குறிக்கோளாகக் கொண்டிருந்ததாலும் பரிபூரண மனிதன் பிரகாசமான ஓர் எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கலாம். உண்பதற்கு நலமானதாக இருந்த விருட்சங்களிலிருந்து சாப்பிட்டு “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை” தவிர்த்தான். தன்னுடைய சிருஷ்டிகரின் கரங்களிலிருந்து நன்மையை அனுபவிக்க அவன் விரும்பினான். அழிவுண்டாக்கும் வகையான வேலை அல்ல, ஆனால் ஏதேன் தோட்டத்தை பண்படுத்தும் வேலை நல்லதாக இருந்தது, பரிபூரண மனிதன் வேலை செய்தான்.
காரியங்களை விளக்க வேண்டிய அவசியம் உணரப்படவில்லை
16-18. புரியாப் புதிர் என்றழைக்கப்படும் எவற்றிற்கு விடைகாண வேண்டிய அவசியத்தை ஆதாம் உணரவில்லை? ஏன்?
16 பகல் வெளிச்சம் படிப்படியாகக் குறைகையில், பகலின் பெரிய சுடர் வானில் குறுக்காக சென்று மறைவதை அவனால் பார்க்க முடிந்தது. இரவில் இருள் இறங்கியது, சந்திரனை அவனால் காணமுடிந்தது. அச்ச உணர்வு அவனை ஆட்கொள்ளவில்லை; இரவை ஆண்டுக் கொள்ளும் சிறிய சுடராக அது இருந்தது. (ஆதியாகமம் 1:14–18) மின்மினிப் பூச்சுகள் தோட்டத்தைச் சுற்றி சிறிய தீபம் போல இடையிடையே குளிர்ச்சியான ஒளியை வீசிக்கொண்டு பறந்தன.
17 இரவு வந்து, தன்னைச் சுற்றி இருள் மூடிக் கொண்ட போது, சுற்றியிருந்த மிருகங்களைப்போல் நித்திரைப் பண்ணுவதற்குரிய தேவையை அவன் உணர்ந்தான். விழித்துக் கொண்ட போது, அவனுக்குப் பசியுண்டாக, காலையுணவு என்றழைக்கப்படுவதை கொண்டிருப்பதற்காக, அவன் அனுமதிக்கப்பட்டிருந்த விருட்சங்களின் பழங்களை நல்ல பசியார்வத்தோடு சாப்பிட்டான்.
18 இரவில் பெற்றுக்கொண்ட ஓய்வினால், புது பெலனும் நல்ல புத்துயிரும் பெற்று அவன் அந்நாளின் வேலைக்குத் தன் கவனத்தை திருப்பினான். தன்னைச் சுற்றி அவன் பசுமையான எல்லாச் செடிகொடிகளையும் பார்த்தபோது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் மனிதர்கள் ஒளிச்சேர்க்கை என்றழைத்த இந்தப் புரியாப் புதிருக்குள் குடைந்து பார்க்க வேண்டும் என்று உணரவில்லை, அதாவது தாவரங்களிலுள்ள நிறப் பொருளான அவைகளின் பாசியம் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உணவை அளிப்பதற்காக சூரிய ஒளியின் ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டு, அதே சமயத்தில் மனிதனும் மிருகமும் வெளியிடும் கரிய மில வாயுவை எடுத்துக் கொண்டு அவை சுவாசிக்க பிராணவாயுவை வெளியிடும் இந்த விசித்திரமான செயல்முறையை ஆராய வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. ஒரு மனிதன் அதைப் புரியாப் புதிர் என்று அழைக்கக்கூடும். ஆனால் அதற்கு விடைகாண வேண்டிய அவசியம் ஆதாமுக்கு இல்லை. அது மனித சிருஷ்டிகரின் ஓர் அற்புதமாக இருந்தது. அதை அவன் புரிந்துகொண்டான், பூமியிலுள்ள உயிரினங்களின் நன்மைக்காக அதைச் செயல்படச் செய்தான். ஆகவே, சிருஷ்டிகராகிய கடவுள் காரியங்களை வளரச் செய்கிறார் என்பதும், கடவுள் மனிதனுக்குக் கொடுத்த வேலை ஏதேன் தோட்டத்தில் இந்தத் தாவர உயிர்கள் வளருவதைக் கவனித்து வருவதே என்பதும் முதல் மனிதனின் பரிபூரண புத்திக்கூர்மைக்குப் போதுமானதாக இருந்தது.—ஆதியாகமம் 1:12 பார்க்கவும்.
தனிமையில்—ஆனால் சந்தோஷத்தில் குறைவில்லை
19. பூமியில் தன்னைப் போன்று வேறொருவன் இல்லாமல் தனிமையில் இருப்பதை உணர்ந்த போதிலும் ஆதாம் என்ன செய்யவில்லை?
19 தன்னுடைய பரலோகத் தகப்பனின் கைகளில், மனிதனின் கல்வி இன்னும் முற்றுப்பெறவில்லை. மனிதன் பூமியில் அவனைப் போன்ற ஒருவனோடு இணைந்தோ அல்லது ஒருவனின் உதவியோ இல்லாமல் ஏதேன் தோட்டத்தைப் பராமரித்து வந்தான். அவனுடைய ஜாதியான மனுஷ ஜாதியைப் பொறுத்தவரையில் அவன் தனிமையில் இருந்தான். பூமிக்குரிய வகையில் தோழமைக் கொள்வதற்கு தன்னைப் போன்ற ஒருவனை அவன் தேடிக்கொண்டுச் செல்லவில்லை. அவன் தன்னுடைய பரலோகத் தகப்பனாகிய கடவுளிடம் தனக்கு ஒரு சகோதரனை அல்லது சகோதரியைத் தரும்படியாகக் கேட்கவில்லை. மனிதனாக அவனுடையத் தனிமை, கடைசியாக புத்தி பேதலிக்கும் நிலைமைக்குத் துரத்தவோ, உயிரோடிருந்து உழைப்பதால் வரும் சந்தோஷத்தை எடுத்துப்போடவோ இல்லை. அவன் கடவுளோடு தோழமைக் கொண்டிருந்தான்.—சங்கீதம் 27:4 ஒப்பிடவும்.
20. (எ) ஆதாமினுடைய சந்தோஷம் மற்றும் இன்பத்தின் உச்சக்கட்டம் எதுவாக இருந்தது? (பி) இந்த வாழ்க்கை முறையில் தொடர்ந்திருப்பது ஆதாமுக்கு ஏன் கொல்லுகிற துன்பமாக இராது? (சி) அடுத்தக் கட்டுரை எதைச் சிந்திக்க இருக்கிறது?
20 ஆதாம் தானும் தன்னுடைய வேலையும் தன்னுடைய பரலோகத் தகப்பனின் மேற்பார்வையின் கீழிருப்பதை அறிந்திருந்தான். அவனுடைய இன்பத்தின் உச்சக்கட்டம், அவனுடைய கடவுளும் சிருஷ்டிகருமானவரை மகிழ்விப்பதிலிருந்தது. இவருடைய மகத்துவம், மனிதனைச் சுற்றியிருந்த எல்லா அழகான சிருஷ்டிப்பின் கிரியைகளிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. (வெளிப்படுத்துதல் 15:3 ஒப்பிடவும்.) இந்த வாழ்க்கை முறையில் தொடர்ந்திருப்பது, தன்னுடைய கடவுளோடு பேச்சுத்தொடர்புக் கொள்ளமுடிந்த நிலையிலிருந்த பரிபூரண சமநிலையிலுள்ள இந்த மனிதனுக்குக் கொல்லுகின்ற துன்பமாகவோ அல்லது சலிப்பூட்டும் வேலையாகவோ இருக்காது. மேலுமாகக் கடவுள் ஆதாமுக்கு முன்பாக அதிகமான திருப்தியையும் இன்பத்தையும் கொண்டுவரக்கூடிய சுவாரசியமான வேலையை, கவர்ச்சியான வேலையை வைத்திருந்தார். அடுத்தக் கட்டுரை ஆதாம் அவனுடைய அன்புள்ள சிருஷ்டிகரின் கரங்களில் அனுபவித்த பரதீஸிய ஆசீர்வாதங்களையும் எதிர்பார்ப்புகளையும் பற்றி அதிகத்தைச் சொல்லும். (w 89 8/1)
[அடிக்குறிப்புகள்]
a பரிசுத்த பைபிளிலுள்ள சிருஷ்டிப்புப் பதிவின் மூல பாஷையின் வார்த்தை இதுவே.—ஆதியாகமம் 1:26, புதிய உலக மொழி பெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிள் (ஆங்கிலம்), அடிகுறிப்பு.
b நம்முடைய பொது சகாப்தத்துக்கு முன் 16-ம் நூற்றாண்டில் ஆதியாகமம் புத்தகத்திலுள்ள தகவலைப் பதிவு செய்த தீர்க்கதரிசியாகிய மோசே, அவனுடைய நாளில் அறியப்பட்டிருந்த பிரகாரம், இந்த ஏதேனிய நதியைப் பற்றி பின்வரும் தகவலைச் சேர்த்தான்:
“முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதக்கல்லும் உண்டு. இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.”—ஆதியாகமம் 2:11–14.
உங்களுடைய விடைகள் என்ன?
◻ ஆதாம் ஏன் நீண்ட காலமாக தன் வாழ்வைக் குறித்து குழப்பத்திலிருக்கவில்லை?
◻ கடவுள் ஆதாமுக்கு என்ன வேலையைக் கொடுத்தார்? அவன் எவ்விதமாகப் பிரதிபலித்திருக்க வேண்டும்?
◻ என்ன எதிர்பார்ப்பை பரிபூரண மனிதன் அனுபவித்தான்? ஏன்?
◻ புரியாப் புதிர்களுக்கு விடைக் காண்பதை ஆதாம் ஏன் தன்னுடைய வாழ்க்கையில் வேலையாகக் கொள்ளவில்லை?
◻ ஒரு மனிதனாக ஆதாம் தனிமையிலிருந்தது, ஏன் வாழ்க்கையின் சந்தோஷத்தை எடுத்துப் போடவில்லை?