கடவுளுடைய சக்தி —படைப்பில்!
“கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வ சேனையும் உண்டாக்கப்பட்டது.”—சங். 33:6.
1, 2. (அ) காலம் செல்லச் செல்ல அண்டத்தையும் பூமியையும் பற்றிய மனிதனின் அறிவு எப்படி அதிகரித்திருக்கிறது? (ஆ) எந்தக் கேள்விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டும்?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1905-ஆம் ஆண்டில் சிறப்பு சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார். அப்போது, இந்த அண்டத்தில் ஒரேவொரு நட்சத்திர மண்டலமே—பால்வீதி மண்டலமே—இருப்பதாக அவரும் வேறுபல விஞ்ஞானிகளும் நம்பினார்கள். இந்த அண்டத்தின் அளவை எவ்வளவு குறைவாக கணித்துவிட்டார்கள்! ஆனால் இப்போது, இந்த அண்டத்தில் 10,000 கோடிக்கும் அதிகமான நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாகவும் அதிலும் சிலவற்றில் கோடானுகோடி விண்மீன்கள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பூமியில் அதிநவீன தொலைநோக்கிகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த ஆரம்பித்தபோது அல்லது பூமியின் வட்டப்பாதையில் சுற்றிவரச் செய்தபோது, நட்சத்திர மண்டலங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிக்கொண்டே போவதைக் காண்கிறார்கள்.
2 1905-ஆம் ஆண்டில் விண்வெளியைப் பற்றிய அறிவு மட்டுப்பட்டதாக இருந்ததைப் போலவே, பூமியைப் பற்றிய அறிவும் மட்டுப்பட்டதாக இருந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அவர்களுடைய முன்னோர்களைவிட நிறைய விஷயங்களைத் தெரிந்திருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் உயிரினங்களின் அழகை... சிக்கலான தன்மையை... அவற்றைக் காத்துவருகிற பூமியை... பற்றி அன்றைய மக்களைவிட இன்று நாம் இன்னும் நன்றாக அறிந்திருக்கிறோம். அதோடு, வரப்போகிற காலங்களில் இந்தப் பூமியைப் பற்றியும் அண்டத்தைப் பற்றியும் இன்னும் அதிகமாய்க் கற்றுக்கொள்வோம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கேள்வி என்னவென்றால், இவையெல்லாம் முதன்முதலில் எப்படி வந்தன? இந்தக் கேள்விக்குரிய பதிலைப் படைப்பாளர் பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருப்பதால்தான் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.
படைப்பின் அதிசயம்
3, 4. கடவுள் இந்த அண்டத்தை எப்படிப் படைத்தார், அவருடைய படைப்புகள் அவரை எப்படி மகிமைப்படுத்துகின்றன?
3 இந்த அண்டம் எப்படி வந்தது என்பதைப் பற்றி பைபிளின் ஆரம்ப வரிகள் விளக்குகின்றன; “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று சொல்கின்றன. (ஆதி. 1:1) ஆரம்பத்தில் எந்தவொரு சடப்பொருளும் இல்லாதபோதே இந்த அண்டத்தையும் அதிலுள்ள அனைத்தையும் கடவுள் தமது வலிமைமிக்க சக்தியினால் உண்டாக்கினார். ஒரு கைவினைஞன் பொருட்களை உண்டாக்குவதற்கு தனது கைகளையும் கருவிகளையும் பயன்படுத்துகிறான், ஆனால் கடவுள் தமது மகா பிரமாண்டமான வேலைகளுக்கு தமது சக்தியைப் பயன்படுத்துகிறார்.
4 கடவுளுடைய சக்தியை அவரது ‘விரல்’ என பைபிள் அடையாள மொழியில் குறிப்பிடுகிறது. (லூக். 11:20, அடிக்குறிப்பு; மத். 12:28) “அவருடைய கரங்களின் கிரியை,” அதாவது யெகோவா தமது சக்தியால் படைத்தவை, அவருக்கு மாபெரும் மகிமை சேர்க்கிறது. “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” என்று சங்கீதக்காரன் தாவீது பாடினார். (சங். 19:1) ஆம், கடவுளுடைய படைப்புகள் அவருடைய சக்திக்கு இருக்கும் மகா வல்லமையைப் பறைசாற்றுகின்றன. (ரோ. 1:20) எப்படி?
கடவுளின் எல்லையற்ற வல்லமை
5. யெகோவாவுடைய சக்திக்கு இருக்கும் வல்லமையை உதாரணத்துடன் விளக்குங்கள்.
5 நம் கற்பனையை மிஞ்சும் பரந்துவிரிந்த இந்த அண்டம் யெகோவாவின் எல்லையற்ற வல்லமைக்கும் ஆற்றலுக்கும் அத்தாட்சியாய் விளங்குகிறது. (ஏசாயா 40:26-ஐ வாசியுங்கள்.) பொருளை ஆற்றலாகவும் ஆற்றலை பொருளாகவும் மாற்ற முடியும் என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. பொருளை ஆற்றலாக மாற்ற முடியும் என்பதற்கு சூரியன், நட்சத்திரம் இவையெல்லாம் உதாரணங்கள். ஒவ்வொரு வினாடியும் சூரியன் சுமார் 40 லட்சம் டன் பொருளை ஒளியாக... வேறுவகை ஆற்றலாக... மாற்றுகிறது. அந்த ஆற்றலில் கடுகளவுதான் பூமியை வந்தடைகிறது, பூமியிலுள்ள உயிர்களைக் காப்பதற்கு அதுவே போதுமானது. அப்படியென்றால், இந்தச் சூரியனையும் கோடானுகோடி மற்ற நட்சத்திரங்களையும் படைப்பதற்கு அளவற்ற வல்லமையும் ஆற்றலும் தேவைப்பட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது. தேவையான எல்லா ஆற்றலும், ஏன், அதற்கும் அதிகமாகவும் யெகோவாவிடம் இருக்கிறது.
6, 7 (அ) கடவுள் தமது சக்தியால் படைத்த ஒவ்வொன்றிலும் ஓர் ஒழுங்கு இருக்கிறதென எப்படிச் சொல்லலாம்? (ஆ) இந்த அண்டம் தற்செயலாய் உண்டாகவில்லை என்பதை எது காட்டுகிறது?
6 கடவுள் தமது சக்தியைப் பயன்படுத்தி படைத்த ஒவ்வொன்றிலும் ஓர் ஒழுங்கைப் பார்க்க முடிகிறது; இதற்கான அத்தாட்சிகள் நம்மைச் சுற்றிலும் குவிந்து கிடக்கின்றன. உதாரணமாக, வண்ண வண்ண பந்துகள் ஒரு பெட்டியில் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, எல்லா நிற பந்துகளும் நன்றாகக் கலப்பதற்காக அந்தப் பெட்டியைக் குலுக்குகிறீர்கள். பிறகு, அவை எல்லாவற்றையும் அப்படியே தரையில் கொட்டுகிறீர்கள். அப்போது, அந்தந்த நிற பந்துகளெல்லாம் தானாக ஒன்றுசேர்ந்துவிடும் என எதிர்பார்ப்பீர்களா, அதாவது நீல நிற பந்துகள் எல்லாம் ஒன்றாகவும், மஞ்சள் நிற பந்துகள் எல்லாம் ஒன்றாகவும் இருக்குமென எதிர்பார்ப்பீர்களா? நிச்சயம் அப்படி எதிர்பார்க்க மாட்டீர்கள்! ஒழுங்கின்றி செய்யப்படும் செயல்கள் எப்போதும் தாறுமாறாகவே இருக்கும். இதுதான் இயற்கை நியதி.a
7 நாம் தொலைநோக்கியில் ஊடுருவிப் பார்க்கும்போது எதைக் காண்கிறோம்? பிரமாண்டமான விதத்திலும் மிக ஒழுங்கான முறையிலும் அமைக்கப்பட்ட நட்சத்திர மண்டலங்களை... விண்மீன்களை... கோள்களை... காண்கிறோம், அதுவும் மிக மிகத் துல்லியமாய் இயங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இவையெல்லாம் தற்செயலாக உண்டாயிருக்க முடியாது. ஆகவே, நாம் இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ஒழுங்கான முறையில் இயங்கிவரும் இந்த அண்டம் எந்தச் சக்தியினால் உருவாக்கப்பட்டது? அந்தச் சக்தி எது என்பதை விஞ்ஞான அறிவினாலோ பரிசோதனையினாலோ அறிந்துகொள்ள முடியாது. ஆனால், அதுதான் கடவுளுடைய சக்தி என்று பைபிள் வெளிப்படுத்துகிறது; அதுதான் இந்த அண்டத்திலேயே மிகவும் வலிமையான சக்தி. “கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் [அதாவது, சக்தியினால்] அவைகளின் சர்வ சேனையும் உண்டாக்கப்பட்டது” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங். 33:6) இரவுநேர வானை ‘கண்நோக்கியில்’ ஆய்வு செய்தால், அந்த நட்சத்திர ‘சேனையில்’ ஒரு சிறு பகுதியையே பார்க்க முடியும்!
கடவுளுடைய சக்தியும் இந்தப் பூமியும்
8. யெகோவாவின் செயல்களைப் பற்றி நமக்கு உண்மையில் எந்தளவு தெரியும்?
8 இயற்கையைப் பற்றி நாம் அறிந்திருப்பதெல்லாம் கடுகளவுதான்; தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களோ கடலளவு. அதனால்தான், கடவுளுடைய படைப்புகளைப் பற்றிய நம் அறிவெல்லையைக் குறித்து யோபு இப்படிச் சொன்னார்: “இதோ, இவையெல்லாம் அவர் செயலின் கடை ஓரமே; நம் செவிப்படுவது சிறு மெல்லோசையே.” (யோபு 26:14, திருத்திய மொழிபெயர்ப்பு) பல நூற்றாண்டுகளுக்குப் பின், யெகோவாவின் படைப்புகளைக் கூர்ந்து கவனித்த சாலொமோன் ராஜா இவ்வாறு சொன்னார்: “[கடவுள்] யாவற்றையும் அதினதின் காலத்திலே அழகாகச் செய்திருக்கிறார்; நித்தியகால நினைவையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; என்றாலும் கடவுள் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுணரான்.”—பிரசங்கி 3:11, தி.மொ.; 8:17.
9, 10. கடவுள் இந்தப் பூமியைப் படைக்க எந்தச் சக்தியைப் பயன்படுத்தினார், படைப்பின் முதல் மூன்று நாட்களில் எவையெல்லாம் உண்டாயின?
9 இருந்தாலும், யெகோவா தம்முடைய செயல்களைப் பற்றி நமக்குத் தேவையான விவரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். உதாரணத்திற்கு, யுகா யுகங்களுக்கு முன் கடவுளுடைய சக்தி இந்தப் பூமியின் மீது செயல்பட்டுக் கொண்டிருந்ததாக பைபிள் தெரிவிக்கிறது. (ஆதியாகமம் 1:2-ஐ வாசியுங்கள்.) அப்போது, பூமியில் வெட்டாந்தரையும் இல்லை, வெளிச்சமும் இல்லை, சுவாசிக்க காற்றும் இல்லை.
10 படைப்பு நாட்களில் ஒன்றன்பின் ஒன்றாக கடவுள் என்ன செய்தார் என்பதை பைபிள் தொடர்ந்து விவரிக்கிறது. படைப்பு நாட்கள் என்பது வெறுமனே 24 மணிநேரங்களைக் கொண்ட நாட்களைக் குறிப்பதில்லை, நீண்ட காலப்பகுதியைக் குறிக்கின்றன. முதல் படைப்பு நாளில், பூமியில் வெளிச்சம் உண்டாகும்படி செய்தார். ஆனாலும், பிற்பாடுதான் பூமியிலிருந்து சூரியனும் சந்திரனும் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தன. (ஆதி. 1:3, 14) இரண்டாம் நாளில், வளிமண்டலம் உருவாகத் தொடங்கியது. (ஆதி. 1:6) அப்போது, பூமியில் தண்ணீரும் வெளிச்சமும் காற்றும் இருந்தன, ஆனால் வெட்டாந்தரை இல்லை. மூன்றாம் படைப்பு நாளின் ஆரம்பத்தில், கடவுள் தமது சக்தியால் வெட்டாந்தரையை உண்டாக்கினார்; ஒருவேளை சக்திவாய்ந்த புவியியல் விசைகளைப் பயன்படுத்தி கடலிலிருந்து கண்டங்களை மேலே எழும்பச் செய்திருக்கலாம். (ஆதி. 1:9) படைப்பின் மூன்றாம் நாளிலும் பிற்பாடும் வியக்கவைக்கும் இன்னும் சில நிகழ்வுகள் நடந்தன.
கடவுளுடைய சக்தியும் உயிரினங்களும்
11. உயிரினங்களின் சிக்கலான அமைப்பு... சமச்சீர் அமைப்பு... கொள்ளை அழகு... எதைப் பறைசாற்றுகின்றன?
11 கடவுள் தமது சக்தியினால் பூமியில் மிகவும் ஒழுங்கான முறையில் உயிரினங்களையும் உண்டாக்கினார். படைப்பின் மூன்றாம் நாள் தொடங்கி ஆறாம் நாள்வரை, பிரமிக்க வைக்கும் பல்வகை தாவரங்களையும் விலங்குகளையும் தமது சக்தியினால் படைத்தார். (ஆதி. 1:11, 20-25) சிக்கலான அமைப்புக்கு... சமச்சீர் அமைப்புக்கு... கொள்ளை அழகுக்கு... உதாரணங்களாகத் திகழும் இந்தப் பல்வகை உயிரினங்கள் உன்னத வடிவமைப்பைப் பறைசாற்றுகின்றன.
12. (அ) டிஎன்ஏ எப்படிச் செயல்படுகிறது? (ஆ) டிஎன்ஏ மாறாமல் தொடர்ந்து செயல்படுவதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
12 டிஎன்ஏ-வை (டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம்) பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இது, ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபியல் பண்புகளைக் கடத்தும் ரசாயன அமைப்பு ஆகும். நுண்ணுயிரிகள், புற்கள், யானைகள், நீலத் திமிங்கலங்கள், மனிதர்கள் என அனைத்து உயிரினங்களும் இந்த டிஎன்ஏ-வைப் பயன்படுத்தியே இனப்பெருக்கம் செய்கின்றன. பூமியிலுள்ள உயிரினங்கள் ஒன்றுக்கொன்று பெரிதும் வேறுபட்டாலும், அவற்றின் மரபியல் பண்புகளைக் கட்டுப்படுத்தும் டிஎன்ஏ குறியீடுகள் மாறுவதே இல்லை; பல்வகை உயிரினங்களுக்குரிய அடிப்படை வித்தியாசத்தைக் காலங்காலமாகக் காத்துவருவது இதுதான். யெகோவா தேவனுடைய நோக்கத்தின்படி, ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருக்கும் வாழ்க்கை சூழலில் உயிரினங்கள் அதனதன் வேலைகளைத் தொடர்ந்து செய்துவருகின்றன. (சங். 139:16) இவையெல்லாம் எந்தளவு திறம்படவும், ஒழுங்காகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன! படைப்புகள் அனைத்தும் கடவுளுடைய ‘விரலின்,’ அதாவது அவருடைய சக்தியின் கைவண்ணம் என்பதற்கு இது மேலுமான ஓர் அத்தாட்சி.
பூமிக்குரிய படைப்பின் உச்சக்கட்டம்
13. மனிதனைக் கடவுள் எப்படிப் படைத்தார்?
13 பல யுகங்கள் கடந்துவிட்டன, உயிருள்ளவற்றையும் உயிரில்லாதவற்றையும் கடவுள் படைத்துவிட்டார், இனிமேலும் பூமி ஒழுங்கில்லாமலும் வெறுமையாயும் இல்லை. இருந்தாலும், யெகோவா தம்முடைய சக்தியைப் பயன்படுத்தி படைப்பு வேலைகளைச் செய்வதை நிறுத்திவிடவில்லை. பூமிக்குரிய படைப்பிலேயே மணிமகுடமாக விளங்கும் ஒன்றை அவர் படைப்பதற்குத் தயாரானார். ஆம், படைப்பின் ஆறாம் நாளின் முடிவில், மனிதனைப் படைத்தார். எப்படிப் படைத்தார்? தமது சக்தியையும் பூமியிலுள்ள மூலக்கூறுகளையும் பயன்படுத்திப் படைத்தார்.—ஆதி. 2:7.
14. மனிதரின் மூளை எவ்விதத்தில் மிருகங்களின் மூளையிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது?
14 ஆதியாகமம் 1:27 இவ்வாறு குறிப்பிடுகிறது: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” தேவசாயலாக சிருஷ்டித்தார் என்பதன் அர்த்தம் என்ன? அன்பு காட்டுகிற... சுயமாய்த் தீர்மானிக்கிற... படைப்பாளருடன் நட்புறவு கொள்கிற... திறமையுடன் யெகோவா நம்மைப் படைத்தார். ஆகவே, நம்முடைய மூளைக்கும் மிருகங்களின் மூளைக்கும் இடையே உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தம்மைப் பற்றியும் தம்முடைய படைப்புகளைப் பற்றியும் காலமெல்லாம் சலிப்பின்றி சந்தோஷமாக கற்றுக்கொள்ளும் திறமையுடன்தான் மனித மூளையை யெகோவா வடிவமைத்தார்.
15. ஆதாம் ஏவாளுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருந்தது?
15 ஆதி மனிதர் ஆதாம் ஏவாளைப் படைத்து, வளங்கொழிக்கும் பூமியை அவர்கள் வசம் கடவுள் ஒப்படைத்தார்; அதிலுள்ள அற்புதப் படைப்புகளைத் துருவி ஆராயவும் அனுபவித்து மகிழவும் செய்தார். (ஆதி. 1:28) அவர்களுக்கு வகைவகையான உணவுப்பொருள்களை வாரி வழங்கி, சிங்காரத் தோட்டத்தில் குடியமர்த்தினார். பரிபூரணத்துடன் பிறக்கப்போகும் கோடானுகோடி பிள்ளைகளுக்கு பாசமுள்ள பெற்றோராக விளங்குகிற... சாகாமல் சதாகாலம் வாழ்கிற... அரிய வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால், எல்லாம் நினைத்தபடி நடக்கவில்லை.
கடவுளுடைய சக்தி வகிக்கும் பங்கு
16. முதல் பெற்றோர் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனாலும் நமக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
16 ஆதாமும் ஏவாளும் படைப்பாளருக்குக் கீழ்ப்படிந்து நன்றியோடு இருப்பதற்குப் பதிலாக அடங்காமல் போனார்கள். அதனால், அவர்களுக்குப் பிறந்த அபூரண பிள்ளைகள் அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், நம்முடைய முதல் பெற்றோர் விட்டுச்சென்ற பாவத்தின் சுவடுகளையெல்லாம் கடவுள் எப்படித் துடைத்தழிப்பார் என்பதை பைபிள் விளக்குகிறது. யெகோவா தமது ஆதி நோக்கத்தை எப்படி நிறைவேற்றுவார் என்றும் அது விளக்குகிறது. அப்போது, பூமி ஒரு பூஞ்சோலையாய் மாறும்; அதில் மக்கள் ஆனந்தமாயும் ஆரோக்கியமாயும் ஆண்டாண்டு காலம் வாழ்வார்கள். (ஆதி. 3:15) இதயத்திற்கு இதமளிக்கும் இந்த இனிய எதிர்கால வாழ்க்கைமீது விசுவாசம் வைக்க கடவுளுடைய சக்தியின் உதவி நமக்குத் தேவை.
17. எப்படிப்பட்ட சிந்தையை நாம் தவிர்க்க வேண்டும்?
17 யெகோவாவுடைய சக்திக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும். (லூக். 11:13) அப்படிச் செய்யும்போது படைப்புகளெல்லாம் கடவுளுடைய கைவண்ணம் என்பதில் நம் நம்பிக்கை உறுதிப்படும். எந்தவித அஸ்திவாரமோ ஆதாரமோ இல்லாத நாத்திகக் கொள்கையும் பரிணாமக் கொள்கையும் இன்று மக்கள் மத்தியில் புரையோடிக் கிடக்கின்றன. வெள்ளம் போல் பெருக்கெடுத்து வரும் இப்படிப்பட்ட தவறான கொள்கைகள் நம் சிந்தையை குழப்பவோ ஆட்கொள்ளவோ அனுமதிக்கக் கூடாது. இப்படிப்பட்ட பயங்கரத் தாக்குதல்களையும் அதோடு கைகோர்த்து வருகிற சகாக்களின் தொல்லையையும் எதிர்த்து நிற்க கிறிஸ்தவர்கள் எல்லாரும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.—கொலோசெயர் 2:8-ஐ வாசியுங்கள்.
18. இந்த அண்டமும் மனிதகுலமும் எப்படித் தோன்றின என்பதைச் சிந்திக்கையில், புத்திக்கூர்மையுள்ள படைப்பாளரைப் புறக்கணித்துவிடுவது ஏன் ஒரு குறுகிய கண்ணோட்டமாக இருக்கும்?
18 படைப்புக்குரிய அத்தாட்சிகளை நியாயமாக ஆராய்ந்து பார்க்கும்போது, கடவுள் மீதும் பைபிள் மீதும் நம் விசுவாசம் நங்கூரம்போல் உறுதிப்படும். இந்த அண்டமும் மனிதகுலமும் எப்படித் தோன்றின என்பதைப் பற்றிச் சிந்திக்கையில், விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்படாத எதையும் அநேகர் நம்ப மறுக்கிறார்கள். அப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் நாம் பார்ப்போமானால், எல்லா அத்தாட்சிகளையும் நியாயமாய் ஆராய்கிறவர்களாய் இருக்க மாட்டோம். அதுமட்டுல்ல, “எண்ணிறந்த” படைப்புகளில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிற ஒழுங்கையும் நோக்கத்தையும் நாம் ஒதுக்கித் தள்ளிவிடுவோம். (யோபு 9:10; சங். 104:25) யெகோவா தமது சக்தியினாலேயே... புத்திக்கூர்மையுள்ள வழிநடத்துதலினாலேயே... எல்லாவற்றையும் படைத்தார் என்பதைக் கிறிஸ்தவர்களாகிய நாம் உறுதியாக நம்புகிறோம்.
கடவுளுடைய சக்தியும் அவர் மீதுள்ள நம் விசுவாசமும்
19. கடவுள் இருக்கிறார் என்பதற்கும் அவருடைய சக்தி செயல்படுகிறது என்பதற்கும் என்ன அத்தாட்சிகளை நாம் காண்கிறோம்?
19 கடவுள்மீது விசுவாசம் வைக்க... அவர்மீது அன்பும் ஆழ்ந்த பக்தியும் காட்ட... படைப்பைப் பற்றி அத்துப்படியாக அறிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. உதாரணமாக, ஒரு மனிதரிடம் நட்புகொள்வதற்கு அவரைப் பற்றி அத்துப்படியாக அறிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதே சமயத்தில், அவரைப் பற்றி சில விஷயங்களை மட்டுமே அறிந்திருந்தால் அவரோடு நண்பராக முடியாது; நெருங்கிய நட்பு மலருவதற்கு அவரோடு நன்கு பழக வேண்டும். கடவுள்மீது விசுவாசம் வைப்பதற்கும் அதுவே தேவை. ஆம், அவரைப் பற்றி நன்கு அறிய அறிய அவர்மீதுள்ள விசுவாசம் அதிகமாகும். நம் ஜெபங்களுக்கு அவர் பதிலளிக்கையில்... அவருடைய நியமங்களைக் கடைப்பிடிக்கும்போது வரும் பலன்களைக் காண்கையில்... அவர் நிஜமாகவே இருக்கிறார் என்ற உண்மை நம் மனதில் அச்சாய் பதிந்துவிடுகிறது. கடவுள் நம்மைக் கண்ணும்கருத்துமாய் வழிநடத்துகிறார்... நமக்குப் பக்கத்துணையாய் இருக்கிறார்... அவருடைய சேவையில் நாம் எடுக்கும் முயற்சிகள்மீது ஆசீர்வாதத்தைப் பொழிகிறார்... நமக்குத் தேவையான அனைத்தையும் அருளுகிறார்... என்பதற்கு மலைபோல் குவிந்திருக்கும் அத்தாட்சிகளைப் பார்க்கும்போது நாம் யெகோவாவிடம் இன்னும் அதிகமாய் நெருங்கி வருகிறோம். இவையாவும் கடவுள் இருக்கிறார் என்பதற்கும் அவருடைய சக்தி செயல்படுகிறது என்பதற்கும் வலிமையான அத்தாட்சிகள்.
20. (அ) இந்த அண்டத்தையும் மனிதரையும் கடவுள் ஏன் படைத்தார்? (ஆ) கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலை நாம் தொடர்ந்து பின்பற்றினால் என்ன பலன் கிடைக்கும்?
20 யெகோவா தமது சக்தியைப் பயன்படுத்துகிறார் என்பதற்கு பைபிள் ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு; ஏனென்றால், பைபிள் எழுத்தாளர்கள் “கடவுள் அருளிய வார்த்தைகளை அவருடைய சக்தியினால் உந்துவிக்கப்பட்டே சொன்னார்கள்.” (2 பே. 1:21) பைபிளைக் கருத்தூன்றி படிக்கும்போது சகலத்தையும் படைத்த கடவுள்மீது நம் விசுவாசம் பலப்படும். (வெளி. 4:11) அன்பெனும் அருமையான குணத்தை வெளிக்காட்டியதாலேயே யெகோவா படைப்பாளரானார். (1 யோ. 4:8) ஆகவே, நம் பாசமுள்ள பரம தகப்பனை... நண்பரை... பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள உதவுவதற்கு எல்லா முயற்சியும் எடுப்போமாக. நாமும்கூட கடவுளுடைய சக்தியினால் தொடர்ந்து வழிநடத்தப்படும்போது காலமெல்லாம் அவரைப் பற்றிக் கற்றுக்கொள்ளும் பாக்கியத்தைப் பெறுவோம். (கலா. 5:16, 25) யெகோவாவையும் அவருடைய மகா செயல்களையும் பற்றி நாம் தொடர்ந்து கற்றுக்கொள்வோமாக; அண்டத்தையும் பூமியையும் மனிதரையும் படைப்பதற்குத் தம் சக்தியைப் பயன்படுத்தியபோது அவர் காட்டிய அளவற்ற அன்பை நம் வாழ்க்கையில் கண்ணாடி போல் பிரதிபலிப்போமாக.
[அடிக்குறிப்பு]
a உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற ஆங்கில புத்தகத்தில் 24, 25 பக்கங்களைக் காண்க.
விளக்க முடியுமா?
• கடவுளுடைய சக்தியைப் பற்றி வானமும் பூமியும் நமக்கு எதைத் தெரிவிக்கிறது?
• நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் நமக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
• படைப்புக்குரிய அத்தாட்சியை நாம் ஏன் ஆராய்ந்து பார்க்க வேண்டும்?
• யெகோவாவோடு நாம் எவ்விதங்களில் நெருங்கி வரலாம்?
[பக்கம் 7-ன் படம்]
இந்த அண்டத்தில் காணப்படும் ஒழுங்கு படைப்பைப் பற்றி நமக்கு என்ன தெரிவிக்கிறது?
[படத்திற்கான நன்றி]
விண்மீன்கள்: Anglo-Australian Observatory/David Malin Images
[பக்கம் 8-ன் படங்கள்]
இவை அனைத்திற்கும் டிஎன்ஏ அடிப்படையாய் இருப்பது எப்படி?
[பக்கம் 10-ன் படம்]
உங்களுடைய நம்பிக்கையைக் குறித்துப் பேச நீங்கள் தயாரா?