யெகோவாவின் வழிகளில் தைரியமாய் நடங்கள்
“யெகோவாவுக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிற ஒவ்வொருவனும் சந்தோஷமுள்ளவன்.”—சங்கீதம் 128:1, NW.
1, 2. யெகோவாவின் பூர்வ சாட்சிகளும் வார்த்தைகளும் செயல்களும் அடங்கிய பைபிள் பதிவு எந்த வழியில் உதவியாய் இருக்கிறது?
யெகோவாவின் பரிசுத்த வார்த்தை அவருடைய உண்மைதவறாத ஊழியர்களின் சோதனைகள், சந்தோஷங்கள் சம்பந்தமான பதிவுகளால் நிறைந்திருக்கிறது. நோவா, ஆபிரகாம், சாராள், யோசுவா, தெபொராள், பாராக், தாவீது, மேலும் மற்றவர்களின் அனுபவப் பதிவுகள் மிகச் சிறந்தவையாகவும் உயிர்ச்சித்திரங்களாயும் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் உண்மையில் உயிர்வாழ்ந்த மக்களாக இருந்தார்கள், விசேஷித்த ஒன்றைப் பொதுவில் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் கடவுளில் விசுவாசம்வைத்து, அவருடைய வழிகளில் தைரியமாய் நடந்தார்கள்.
2 நாம் கடவுளின் வழிகளில் நடக்க முயற்சிசெய்யும்போது, யெகோவாவின் பூர்வ சாட்சிகளின் வார்த்தைகளும் செயல்களும் நமக்கு உற்சாகமூட்டுவதாய் இருக்கலாம். மேலுமாக, கடவுளுக்குப் பயபக்தியையும் அவரைப் பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற ஆரோக்கியமான பயமும் காட்டினால் நாம் சந்தோஷமாய் இருப்போம். வாழ்க்கையில் சோதனைகளை எதிர்ப்பட்டாலும் இது உண்மையாய் இருக்கிறது; ஏனென்றால் ஆவியினால் ஏவப்பட்ட சங்கீதக்காரன் பாடினார்: “யெகோவாவுக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிற ஒவ்வொருவனும் சந்தோஷமுள்ளவன்.”—சங்கீதம் 128:1, NW.
தைரியம் என்பது என்ன
3. தைரியம் என்றால் என்ன?
3 யெகோவாவின் வழிகளில் நடப்பதற்கு நாம் தைரியமுள்ளவராக இருக்கவேண்டும். உண்மையில், கடவுளுடைய மக்கள் இந்தக் குணத்தைக் காட்டும்படி வேதாகமம் கட்டளையிடுகிறது. உதாரணமாக, சங்கீதக்காரன் தாவீது பாடினார்: “யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் தைரியமாயிருங்கள், உங்கள் இருதயம் ஸ்திரப்படட்டும்.” (சங்கீதம் 31:24, NW) தைரியம், “ஆபத்து, பயம், அல்லது கஷ்டத்தை எதிர்த்துச் சமாளித்தல், துணிவு, விடாமுயற்சி ஆகியவற்றிற்குத் தேவையான மன அல்லது ஒழுக்கநெறி பலம்” ஆகும். (வெப்ஸ்டரின் ஒன்பதாம் புதிய கல்லூரி அகராதி [Webster’s Ninth New Collegiate Dictionary]) ஒரு தைரியமுள்ள ஆள், பலம், துணிவு, வீரமிக்கவராக இருக்கிறார். யெகோவா தம்முடைய ஊழியர்களுக்குத் தைரியமூட்டுகிறார் என்பது அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய உடன் வேலையாளாகிய தீமோத்தேயுவுக்கு எழுதின இந்த வார்த்தைகளிலிருந்து தெளிவாய் இருக்கிறது: “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.”—2 தீமோத்தேயு 1:7.
4. தைரியத்தை அடைய ஒரு வழி என்ன?
4 கடவுள் கொடுத்த தைரியத்தை அடைய ஒரு வழி, யெகோவாவின் வார்த்தையாகிய பைபிளுக்கு ஜெப சிந்தையோடு கவனம்செலுத்துவதாகும். வேதாகமத்தில் காணப்படும் பல பதிவுகள் நாம் அதிக தைரியமாய் இருக்கும்படி உதவிசெய்யலாம். எனவே, யெகோவாவின் வழிகளில் தைரியமாய் நடந்த சிலரைப் பற்றிய எபிரெய வேதாகமப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை முதலில் சிந்திக்கலாம்.
கடவுளின் செய்தியை அறிவிக்க தைரியம்
5. ஏனோக்கின் தைரியம் யெகோவாவின் இன்றைய ஊழியர்களுக்கு எப்படிப் பயனுள்ளதாயிருக்கலாம்?
5 கடவுளுடைய செய்தியைத் தைரியமாகப் பேசும்படி, யெகோவாவின் இன்றைய ஊழியர்களுக்கு ஏனோக்கின் தைரியம் உதவிசெய்யும். ஏனோக்குப் பிறப்பதற்கு முன்பு “யெகோவாவின் பெயரின்பேரில் கூப்பிடுதல் ஆரம்பிக்கப்பட்டது.” யெகோவாவின் பெயரை மனிதர்கள் “இழிவாக” கூப்பிட “ஆரம்பித்தார்கள்” என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். (ஆதியாகமம் 4:25, 26, NW; 5:3, 6) இந்தத் தெய்வீக பெயர் மனிதர்களுக்கும் அல்லது விக்கிரகங்களுக்கும்கூட பயன்படுத்தப்பட்டிருக்கலாம். எனவே, ஏனோக்கு பொ.ச.மு. 3404-ல் பிறந்தபோது, பொய் மதம் செழித்தோங்கிக் கொண்டிருந்தது. உண்மையில், அவர் ஒருவரே யெகோவாவின் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தோடு ஒத்துப்போகும் ஒரு நீதியான போக்கை நாடித்தேடும் வகையில் ‘கடவுளோடு நடந்துகொண்டு’ இருந்தவராகத் தோன்றுகிறது.—ஆதியாகமம் 5:18, 24.
6. (அ) ஏனோக்கு அறிவித்த காரமான செய்தி என்ன? (ஆ) என்ன நம்பிக்கையை நாம் கொண்டிருக்கலாம்?
6 ஏனோக்கு கடவுளுடைய செய்தியைப் பெரும்பாலும் பிரசங்கத்தின்மூலம் தைரியமாக வெளிப்படுத்தினார். (எபிரெயர் 11:5; ஒப்பிடுக 2 பேதுரு 2:5.) இந்தத் தனி சாட்சி அறிவித்தார், “இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் [யெகோவா, NW] வருகிறார்.” (யூதா 14, 15) அவபக்தியுள்ளவர்களைக் குற்றம்சாட்டும் செய்தியைத் தெரிவிக்கும்போது ஏனோக்கு யெகோவாவின் பெயரைப் பயன்படுத்துவதற்குத் தைரியம் உடையவராக இருந்தார். அந்தக் காரமான செய்தியை அறிவிப்பதற்கு ஏனோக்குக்குத் தைரியத்தை யெகோவா கொடுத்ததுபோல, தம்முடைய இன்றைய சாட்சிகளும் தம்முடைய வார்த்தையை ஊழியத்தில், பள்ளியில், மற்ற இடங்களிலும் துணிவோடு பேசுவதற்கு யெகோவா அதிகாரமளித்திருக்கிறார்.—அப்போஸ்தலர் 4:29-31-ஐ ஒப்பிடுக.
சோதனையின் மத்தியில் தைரியம்
7. நோவா தைரியத்தின் என்ன முன்மாதிரியைக் காண்பிக்கிறார்?
7 நாம் சோதனையின் மத்தியில் இருக்கும்போது, நீதியான செயல்களைச் செய்வதற்குத் தைரியமாய் இருப்பதற்கு நோவாவின் முன்மாதிரி நமக்கு உதவிசெய்யும். ஒரு பூகோள ஜலப்பிரளயம் பற்றிய தெய்வீக எச்சரிப்புக்குத் தைரியத்தோடும் விசுவாசத்தோடும் அவர் கீழ்ப்படிந்து நடந்து, ‘தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினார்.’ விசுவாசமற்ற உலகத்தை அதன் பொல்லாத செயல்களுக்காக நோவா கீழ்ப்படிதலினாலும், நீதியான செயல்களினாலும் கண்டனம்செய்து, அது அழிக்கப்படவேண்டியதுதான் என நிரூபித்தார். (எபிரெயர் 11:7; ஆதியாகமம் 6:13-22; 7:16) நோவாவின் போக்கின்மீது தியானிப்பது கடவுளின் நவீனநாளைய ஊழியர்கள், கிறிஸ்தவ ஊழியம் போன்ற நீதியான செயல்களில் தைரியமாய்ப் பங்கெடுப்பதற்கு உதவிசெய்கிறது.
8. (அ) தைரியத்துடன் ‘நீதியைப் பிரசங்கித்தவராக’ நோவா எதை எதிர்ப்பட்டார்? (ஆ) நாம் நீதியைத் தைரியமாகப் பிரசங்கிப்பவர்களாக இருந்தால், யெகோவா நமக்கு என்ன செய்வார்?
8 நாம் ஒரு நீதியான போக்கைத் தொடரும்போது, ஒருவித சோதனையை எப்படிக் கையாளுவது என்று அறியாமல் இருந்தால், அதை மேற்கொள்வதற்கு ஞானத்திற்காக நாம் ஜெபிப்போமாக. (யாக்கோபு 1:5-8) சோதனையின் மத்தியிலும் நோவா உண்மைமாறாத தன்மையைக் காட்டியது, சோதனைகளைத் தைரியத்தோடும் உண்மைத்தன்மையோடும் எதிர்ப்படமுடியும் என்பதைக் காட்டுகிறது. அவர் ஒரு பொல்லாத உலகத்திலிருந்தும் மாம்ச உடல்களில் வந்த தூதர்களிடமிருந்தும் அவர்களுடைய கலப்புச் சந்ததியிடமிருந்தும் வந்த அழுத்தத்தை மேற்கொண்டார். ஆம், அழிவை நோக்கிச் சென்ற ‘பூர்வ உலகத்திற்கு’ தைரியமாக ‘நீதியைப் பிரசங்கித்தவராக’ நோவா இருந்தார். (2 பேதுரு 2:4, 5; ஆதியாகமம் 6:1-9) ஜலப்பிரளயத்திற்கு முன்பு வாழ்ந்தவர்களிடம் அவர், கடவுளுடைய எச்சரிப்புச் செய்தியைத் தைரியமாக முன்னறிவித்தபோதிலும், “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்.” (மத்தேயு 24:36-39) ஆனால் துன்புறுத்துதல், இன்றுள்ள அநேக மக்கள் நம்முடைய பைபிள் அடிப்படையிலான செய்தியை மறுத்தல் போன்றவற்றிற்கு மத்தியிலும் நாம் அப்படிப்பட்ட விசுவாசத்தையும் தைரியத்தையும் நீதியைப் பிரசங்கிப்பவர்களாகக் காண்பித்தோம் என்றால் யெகோவா நோவாவுக்கு ஆதரவளித்ததுபோல, நமக்கும் ஆதரவளிப்பார் என்பதை நினைவில் கொள்வோமாக.
கடவுளுக்குக் கீழ்ப்படிய தைரியம்
9, 10. ஆபிரகாம், சாராள், ஈசாக்கு ஆகியோர் தைரியமிக்க கீழ்ப்படிதலை எந்த வழிகளில் காண்பித்தனர்?
9 “யெகோவாவின் நண்பன்” ஆபிரகாம், தைரியமாகக் கடவுளுக்குக் கீழ்ப்படிவதற்கு ஒரு நல்ல முன்மாதிரி. (யாக்கோபு 2:23, NW) யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, பொருள்சம்பந்தமாக முற்றிலும் செழிப்பாயிருந்த நகரமாகிய கல்தேயரின் ஊர் என்ற பட்டணத்தை விட்டுவிட்டுப் போவதற்கு ஆபிரகாமுக்கு விசுவாசமும் தைரியமும் தேவையாய் இருந்தன. அவர், “பூமியிலுள்ள வம்சங்களெல்லாம்” அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு அவருடைய சந்ததிக்கு ஒரு தேசம் கொடுக்கப்படும் என்ற கடவுளின் வாக்குறுதியை நம்பினார். (ஆதியாகமம் 12:1-9; 15:18-21) விசுவாசத்தினால் ஆபிரகாம் “வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து,” “[உண்மையான, NW] அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு”—கடவுளுடைய பரலோக ராஜ்யத்திற்கு காத்திருந்தார்; அந்த ராஜ்யத்தில் பூமியில் உயிர்வாழும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்.—எபிரெயர் 11:8-16.
10 ஆபிரகாமின் மனைவி சாராள், தன் கணவனோடு சேர்ந்து ஊர் என்ற பட்டணத்தை விட்டு அந்நிய தேசத்திற்குப் போவதற்கும் எதிர்ப்படும் எந்தவித கஷ்டங்களையும் சகிப்பதற்கும் தேவையான விசுவாசத்தையும் தைரியத்தையும் உடையவளாக இருந்தாள். மேலும் கடவுளுக்கு அவளுடைய தைரியமான கீழ்ப்படிதலுக்காக அவள் எவ்வளவாக ஆசீர்வதிக்கப்பட்டாள்! ஏறக்குறைய 90 வருடங்களாக மலடியாக “வயது சென்றவளாயிருந்தும்,” சாராள் ‘வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணியதால், கர்ப்பந்தரிக்க’ பெலன் கொடுக்கப்பட்டாள். இறுதியில், ஈசாக்கைப் பெற்றெடுத்தாள். (எபிரெயர் 11:11, 12; ஆதியாகமம் 17:15-17; 18:11; 21:1-7) ஆண்டுகள் சென்றபிறகும் ஆபிரகாம் தைரியமாகக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, ‘ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்.’ ஒரு தேவதூதனால் தடுத்து நிறுத்தப்பட்டு, அந்த முற்பிதா தன்னுடைய தைரியமான, கீழ்ப்படிதலுள்ள மகனை மரணத்திலிருந்து “பாவனையாக” திரும்பவும் பெற்றுக்கொண்டார். எனவே அவரும் ஈசாக்கும், யெகோவா தேவன் தம்முடைய மகன் இயேசு கிறிஸ்துவின்மீது விசுவாசம் வைப்பவர்கள் நித்திய ஜீவனைப் பெறும்படிக்கு அவரைக் கிரய பலியாகக் கொடுப்பார் என்பதைத் தீர்க்கதரிசனமாக சித்தரித்தனர். (எபிரெயர் 11:17-19; ஆதியாகமம் 22:1-19; யோவான் 3:16) நிச்சயமாகவே ஆபிரகாம், சாராள், ஈசாக்கு ஆகியோரின் தைரியமான கீழ்ப்படிதல், நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, எப்பொழுதும் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு நம்மைத் தூண்டவேண்டும்.
கடவுளின் மக்களோடு நிலைநிற்கை எடுப்பதற்குத் தைரியம்
11, 12. (அ) யெகோவாவின் மக்கள் சார்பில் மோசே எவ்வாறு தைரியத்தைக் காண்பித்தார்? (ஆ) மோசேயின் தைரியத்தைக் கவனிக்கையில், என்ன கேள்வி கேட்கப்படலாம்?
11 மோசே, கடவுளின் அடக்கியாளப்பட்ட மக்களோடு தன் நிலைநிற்கையைத் தைரியமாக எடுத்தார். பொ.ச.மு. 16-ம் நூற்றாண்டில், மோசேயின் பெற்றோர்தாமே தைரியத்தைக் காண்பித்தனர். பிறக்கும் எபிரெய ஆண்பிள்ளைகளைக் கொன்றுபோடவேண்டும் என்ற அரசனின் கட்டளைக்குப் பயப்படாமல், மோசேயை மறைத்து, பின்பு அவரை ஒரு பெட்டியிலே வைத்து, நைல் நதியோரமாய் நாணலுக்குள்ளே மிதக்கவிட்டனர். பார்வோனின் மகளால் கண்டெடுக்கப்பட்டு, அவளுடைய சொந்த மகன்போல அவர் வளர்க்கப்பட்டார்; ஆனாலும் ஆரம்பத்தில் ஆவிக்குரிய பயிற்சியைத் தன்னுடைய பெற்றோரின் வீட்டில் பெற்றார். பார்வோன் குடும்பத்தின் சார்பில், மோசே “எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு,” ‘வாக்கிலும் செய்கையிலும் வல்லவராகி,’ மனது மற்றும் சரீர திறமைகளில் வல்லவராக ஆனார்.—அப்போஸ்தலர் 7:20-22; யாத்திராகமம் 2:1-10; 6:20.
12 அரசருக்குரிய வீட்டில் வாழ்க்கையின் பொருளாதார அனுகூலங்கள் அதிகம் இருந்தாலும், எகிப்தியர்களால் அடிமைத்தனத்தில் வைக்கப்பட்டிருக்கும் யெகோவாவின் வணக்கத்தாரோடு நிலைநிற்கை எடுப்பதை மோசே தைரியமாய் தெரிந்தெடுத்தார். ஓர் இஸ்ரவேலனுக்குச் சாதகமாக ஓர் எகிப்தியனைக் கொன்றுவிட்டு, மீதியானுக்கு ஓடிப்போனார். (யாத்திராகமம் 2:11-15) ஏறக்குறைய 40 ஆண்டுகள் கழித்து, கடவுள் இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, வழிநடத்துவதற்கு மோசேயைப் பயன்படுத்தினார். பின்பு மோசே, இஸ்ரவேலரின் சார்பாக யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காகக் கொல்லப்படுவார் என்று அவரை மிரட்டிய ‘ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனார்.’ மோசே ‘காணப்படமுடியாதவராகிய’ யெகோவா தேவனைக் கண்டதுபோல் உறுதியாய் பின்பற்றினார். (எபிரெயர் 11:23-29; யாத்திராகமம் 10:28) கஷ்டம், துன்புறுத்தல் மத்தியிலும் யெகோவா மற்றும் அவருடைய மக்களோடு பற்றிக் கொண்டிருப்பதற்கு அப்படிப்பட்ட விசுவாசமும் தைரியமும் உங்களுக்கு இருக்கிறதா?
‘யெகோவாவை முழுமையாகப் பின்பற்ற’ தைரியம்
13. யோசுவாவும் காலேபும் தைரியத்திற்கு எவ்வாறு முன்மாதிரிகளை வகித்தனர்?
13 தைரியமிக்க யோசுவாவும் காலேபும் கடவுளின் வழிகளில் நாம் நடக்கமுடியும் என்பதற்குச் சான்று கொடுத்தனர். அவர்கள் “யெகோவாவை முழுமையாகப் பின்பற்றினர்.” (எண்ணாகமம் 32:12, NW) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை உளவு பார்க்க அனுப்பப்பட்ட 12 மனிதர்களில் யோசுவாவும் காலேபும் இருந்தனர். அதன் குடிமக்களைக் கண்டு பயந்து, பத்து உளவாளிகள் கானான் தேசத்துக்குள் இஸ்ரவேலர் போகாதிருக்க மனமாறும்படி செய்ய முயற்சிசெய்தனர். எனினும், யோசுவாவும் காலேபும் தைரியமாய் இவ்வாறு சொன்னார்கள்: “கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்தத் தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்.” (எண்ணாகமம் 14:8, 9) விசுவாசத்தையும் தைரியத்தையும் இழந்ததால், இஸ்ரவேலரின் அந்தத் தலைமுறை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை ஒருபோதும் அடையவில்லை. ஆனால் யோசுவாவும் காலேபும், ஒரு புதிய தலைமுறையோடு அதனுள் புகுந்தனர்.
14, 15. (அ) யோசுவா 1:7, 8-ல் உள்ள வார்த்தைகளை யோசுவா பின்பற்றியதால், அவரும் இஸ்ரவேலரும் என்ன அனுபவித்தனர்? (ஆ) யோசுவா மற்றும் காலேபிடம் இருந்து தைரியம் சம்பந்தமான எந்தப் பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?
14 கடவுள் யோசுவாவிடம் சொன்னார்: “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு [தைரியமாயிரு, NW]; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்தகொள்ளுவாய்.”—யோசுவா 1:7, 8.
15 இந்த வார்த்தைகளை யோசுவா பின்பற்றினபோது, எரிகோவும் மற்ற நகரங்களும் இஸ்ரவேலரிடம் தோற்றுப்போயின. கிபியோனில் இஸ்ரவேலர் வெற்றியடையும்வரை பிரகாசிக்கச் செய்வதற்காகக் கடவுள் சூரியனையும்கூட அசையாது நிற்கச் செய்தார். (யோசுவா 10:6-14) “கடற்கரை மணலைப்போல் ஏராளமான திரண்ட” ஐக்கியப்பட்ட எதிரி சேனைகளினால் இன்னலுக்குட்படுத்தப்பட்டபோது, யோசுவா தைரியமாகச் செயல்பட்டார், கடவுள் மறுபடியும் இஸ்ரவேலை வெற்றியடையச் செய்தார். (யோசுவா 11:1-9) நாம் அபூரண மனிதர்களாக இருந்தாலும், யோசுவா மற்றும் காலேப் போல, நாம் யெகோவாவை முழுமையாய் பின்பற்றலாம், மேலும் கடவுளுடைய வழிகளில் நாம் தைரியமாய் நடப்பதற்கு அவர் நமக்கு அதிகாரமளிக்கக்கூடும்.
கடவுளின்மீது நம்பிக்கைகொள்ள தைரியம்
16. என்ன வழிகளில் தெபொராள், பாராக், யாகேல் ஆகியோர் தைரியத்தைக் காண்பித்தனர்?
16 இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வந்த நாள்களில் நடந்த சம்பவங்கள் காண்பிக்கிறபடி, கடவுள்மீது தைரியமான நம்பிக்கை பலனளிக்கப்படுகிறது. (ரூத் 1:1) உதாரணமாக, நியாயாதிபதி பாராக்கும் தீர்க்கதரிசினி தெபொராளும் தைரியமாகக் கடவுள்மீது நம்பிக்கை வைத்தனர். தெபொராள், பாராக்கை தாபோர் மலையில் 10,000 மனிதர்களைக் கூட்டிச் சேர்க்கத் தூண்டும்படி யெகோவா செய்தபோது, கானானிய ராஜா யாபீன் இஸ்ரவேலரை 20 ஆண்டுகளாக அடிமைப்படுத்தியிருந்தான். யாபீனின் ராணுவத் தளபதி சிசெரா, கீசோன் பள்ளத்தாக்கிற்கு விரைந்தான். அவனுடைய படையோடும், சக்கரங்களில் இரும்பு அரிவாள்களைக் கொண்டிருக்கும் அந்தப் படையின் 900 யுத்த ரதங்களோடும் ஒப்பிட்டால் இந்தச் சமநில களத்தில் இஸ்ரவேல் மனிதர்கள் ஒன்றுமேயில்லை என்று நிச்சயமாயிருந்தான். இஸ்ரவேலர் பள்ளத்தாக்கின் சமநிலப் பகுதிக்குள் வந்தபோது, கடவுள் அவர்கள் சார்பாகச் செயல்பட்டார்; ஒரு திடீர் வெள்ளம் போர்க்களத்தை ஒரு சகதி மையமாக மாற்றி, சிசெராவின் ரதங்கள் நகர முடியாதபடி செய்தது. பாராக்கின் மனிதர் மேற்கொண்டனர், இதனால் “சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது.” சிசெரா யாகேலின் கூடாரத்திற்கு ஓடிப்போனான்; ஆனால் அங்கு அவன் தூங்கினபோது, அவள் அவனுடைய நெற்றியில் கூடார ஆணி ஒன்றை உருவ அடித்து அவனைக் கொல்வதற்குத் தைரியத்தைக் கொண்டிருந்தாள். பாராக்கிடம் தெபொராள் சொன்ன தீர்க்கதரிசன வாக்கியத்தின்படியே, வெற்றியின் “மேன்மை” ஒரு பெண்ணுக்குச் சென்றது. தெபொராள், பாராக், யாகேல் ஆகியோர் தைரியமாகக் கடவுள்மீது நம்பிக்கை வைத்ததால், இஸ்ரவேல் தேசம் “நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.”—நியாயாதிபதிகள் 4:1-22; 5:31.
17. யெகோவாமீது தைரியமான நம்பிக்கை வைப்பதற்கு நியாயாதிபதி கிதியோனால் என்ன முன்மாதிரி அளிக்கப்பட்டது?
17 மீதியானியர்களும் மற்றவர்களும் இஸ்ரவேலர்மீது படையெடுத்தபோது நியாயாதிபதி கிதியோன் தைரியமாக யெகோவா தேவன்மீது நம்பிக்கை வைத்திருந்தார். இஸ்ரவேலரின் 32,000 யுத்த மனிதர்கள் ஏறக்குறைய 1,35,000 படையெடுத்து வந்த வீரர்களால் எண்ணிக்கையில் சிறிதளவாக்கப்பட்டிருந்தாலும், கடவுள் கொடுக்கும் வெற்றியைத் தங்களுடைய சொந்த வீரதீரத்திற்கு உரித்தாக எண்ணும் மனச்சாய்வை இன்னும் கொண்டிருந்திருக்கக்கூடும். எனவே, யெகோவாவின் வழிநடத்துதலின்கீழ், கிதியோன் தன் படைபலங்களை 100 மனிதர்கள் உள்ள மூன்று படைத்தொகுதிகளாகச் சிறியதாக்கினார். (நியாயாதிபதிகள் 7:1-7, 16; 8:10) அந்த 300 பேர் மீதியானியரின் படைக் கூடாரத்தை இரவிலே சுற்றிவளைத்துக் கொண்டபோது, அவர்கள் ஒவ்வொருவரும் ஓர் எக்காளத்தையும் ஒரு தண்ணீர்ப் பானையையும் அதற்குள் ஒரு தீவட்டியையும் வைத்திருந்தனர். சைகை கொடுக்கப்பட்டபோது, அவர்கள் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, பிரகாசமாக எரிந்த தீவட்டிகளை உயர்த்தி இவ்வாறு சத்தமிட்டனர்: “யெகோவாவினுடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம்”! (நியாயாதிபதிகள் 7:20, NW) பயமுறுத்தப்பட்ட மீதியானியோர் ஓட ஆரம்பித்தனர்; ஆனால் பிடிபட்டனர். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள், கடவுளின்மீது வைக்கப்பட்ட தைரியமிக்க நம்பிக்கை இன்றும் பலனளிக்கிறது என்பதை நாம் நம்பும்படிச் செய்ய வேண்டும்.
யெகோவாவைக் கனம்பண்ணவும் தூய வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கும் தைரியம்
18. தாவீது கோலியாத்தை வீழ்த்தியபோது அவர் தைரியமாகச் செய்தது என்ன?
18 சில பைபிள் முன்மாதிரிகள், யெகோவாவைக் கனம்பண்ணவும் தூய வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கும் தைரியமாக இருக்கும்படி பலப்படுத்துகின்றன. தன்னுடைய அப்பாவின் செம்மறியாட்டைத் துணிவுடன் காப்பாற்றிய இளம் தாவீது, பெலிஸ்த இராட்சதனாகிய கோலியாத்துக்கு முன் தைரியமுள்ளவராக நிரூபித்தார். தாவீது சொன்னார், ‘நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றைய தினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையைத் தனியே வெட்டியெடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும். யுத்தம் கர்த்தருடையது.’ (1 சாமுவேல் 17:32-37, 45-47) தெய்வீக உதவியோடு தாவீது யெகோவாவைத் தைரியமாகக் கனப்படுத்தினார்; கோலியாத்தை வீழ்த்தினார்; இதனால் தூய வணக்கத்திற்கு பயமுறுத்தலாய் இருந்த ஒரு பெலிஸ்தனை ஒழித்துக்கட்டுவதில் முக்கிய பாகத்தைச் செய்தார்.
19. என்ன திட்டப்பணிக்குச் சாலொமோனுக்குத் தைரியம் தேவைப்பட்டது, மேலும் அவருடைய அணுகுமுறை நம் நாளில் எப்படிப் பயன்படுத்தப்படலாம்?
19 தாவீது ராஜாவின் மகன் சாலொமோன் கடவுளுடைய ஆலயத்தைக் கட்டப்போனபோது, அவருடைய முதிர்வயதான அப்பா அவனை இவ்வாறு ஊக்குவித்தார்: “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், கைவிடவுமாட்டார்.” (1 நாளாகமம் 28:20) தைரியமாகச் செயல்படுவதன்மூலம் சாலொமோன் ஆலயத்தை வெற்றிகரமாகக் கட்டிமுடித்தார். இன்று தேவராஜ்ய கட்டும் திட்டம் ஒரு சவாலாக இருக்கும்போது, நாம் தாவீதின் வார்த்தைகளை ஞாபகத்தில் வைப்போமாக: “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி.” யெகோவாவைக் கனம்பண்ணவும் தூய வணக்கத்தை ஆதரித்து உயர்த்தவும் என்னே ஒரு சிறந்த வழி!
20. என்ன வழியில் ஆசா ராஜா தைரியமாய் இருந்தார்?
20 யெகோவாவைக் கனம்பண்ணவும் தூய வணக்கத்தை ஆதரித்து உயர்த்த ஆசா ராஜா கொண்டிருந்த ஆசையினாலும், அவர் யூதாவில் இருந்த விக்கிரகங்களையும் ஆலயத்தின் ஆண் விபச்சாரர்களையும் நீக்கினார். அவர் பொய் வணக்கத்தாளாகிய தன் பாட்டியை அவளுடைய உயர்ந்த ஸ்தானத்திலிருந்து நீக்கி, அவளுடைய “அருவருப்பான விக்கிரகத்தை” எரித்துப்போட்டார். (1 இராஜாக்கள் 15:11-13) ஆம், ஆசா ‘திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா, பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்தும் அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருந்த கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்தார்.’ (2 நாளாகமம் 15:8) நீங்களும் பொய்ப் போதகத்தைத் தைரியமாக மறுத்து, தூய வணக்கத்தை ஆதரித்து உயர்த்துகிறீர்களா? இராஜ்ய அக்கறைகளை விஸ்தரிப்பதற்கு நீங்கள் உங்களுடைய பொருளாதார ஏதுக்களைப் பயன்படுத்துகிறீர்களா? இராஜ்ய செய்தியை அறிவிப்பதில் ஒழுங்காகப் பங்கெடுப்பதன்மூலம் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக நீங்கள் அவரைக் கனம்பண்ண நாடுகிறீர்களா?
21. (அ) கிறிஸ்தவத்துக்கு முன்பிருந்த உத்தமத்தைக் காத்துக்கொண்டவர்களின் பதிவுகள் எப்படி நமக்கு உதவிசெய்யலாம்? (ஆ) அடுத்தக் கட்டுரையில் என்ன கலந்தாலோசிக்கப்படும்?
21 கிறிஸ்தவத்துக்கு முன்பிருந்த தைரியமிக்க உத்தமத்தைக் காத்துக்கொண்டவர்களைப் பற்றிய வேதாகமப் பதிவுகளைக் கடவுள் பாதுகாத்து வைத்ததற்கு நாம் எவ்வளவு நன்றியுணர்வுள்ளவர்களாக இருக்கிறோம்! நிச்சயமாகவே, அவர்களின் நல்ல முன்மாதிரிகள் யெகோவாவுக்குத் தைரியத்தோடும் தேவபயத்தோடும் பக்தியோடும் பரிசுத்த சேவையைச் செய்வதற்கு நமக்கு உதவிசெய்யும். (எபிரெயர் 12:28) ஆனால் கிறிஸ்தவக் கிரேக்க வேதாகமமும் செயலில் தெய்வீக தைரியத்திற்கு முன்மாதிரிகளை உடையதாக இருக்கிறது. இந்தப் பதிவுகளில் சில, யெகோவாவின் வழிகளில் தைரியமாக நடக்க நமக்கு எப்படி உதவிசெய்யும்?
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
◻ தைரியம் என்றால் என்ன?
◻ ஏனோக்கும் நோவாவும் எப்படித் தைரியத்தைக் காண்பித்தனர்?
◻ என்ன வழிகளில் ஆபிரகாம், சாராள், ஈசாக்கு ஆகியோர் தைரியமாய் நடந்துகொண்டனர்?
◻ மோசே, யோசுவா, காலேப் ஆகியோரால் என்ன தைரியமிக்க முன்மாதிரிகள் வைக்கப்பட்டன?
◻ கடவுளில் நம்பிக்கை வைக்கத் தைரியத்தை உடையவர்களாக இருந்தனர் என்று மற்றவர்கள் எப்படிக் காண்பித்தனர்?
[பக்கம் 15-ன் படம்]
கிதியோனும் அவருடைய சிறிய படையும் யெகோவாவில் தைரியமாய் நம்பிக்கை வைத்தனர்