யெகோவாவுக்குத் தம் மக்களை விடுவிக்க வழி தெரியும்
“தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிக்க . . . யெகோவா அறிந்திருக்கிறார்.” —2 பே. 2:9.
பின்வரும் விஷயங்களில் நாம் ஏன் யெகோவாமீது நம்பிக்கை வைக்கலாம்:
தமது நோக்கம் நிறைவேறுவதற்கு எல்லாக் காரியங்களும் குறித்த நேரத்தில் நடக்கும்படி பார்த்துக்கொள்கிறார் என்பதில்.
தம் மக்களைக் காப்பாற்ற தமது வல்லமையைப் பயன்படுத்துவார் என்பதில்.
மிகுந்த உபத்திரவத்தின்போது சம்பவங்கள் ஒவ்வொன்றும் நடந்தேறும் விதத்தை அறிந்திருக்கிறார் என்பதில்.
1. “மிகுந்த உபத்திரவம்” ஆரம்பமாகையில் என்ன நடக்கும்?
சாத்தானுடைய உலகிற்கு வரும் அழிவு யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென ஆரம்பமாகும். (1 தெ. 5:2, 3) ‘யெகோவாவுடைய பெரிய நாள்’ ஆரம்பமாகும் அந்தச் சமயத்தில் மனிதகுலம் குழப்பத்தில் தத்தளிக்கும். (செப். 1:14-17) அப்போது துன்ப துயரங்களும் பற்றாக்குறைகளும் எங்கும் காணப்படும். ‘உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்திராத’ வேதனைமிக்க காலமாக அது இருக்கும்.—மத்தேயு 24:21, 22-ஐ வாசியுங்கள்.
2, 3. (அ) ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ கடவுளுடைய மக்கள் எதை எதிர்ப்படுவார்கள்? (ஆ) சாத்தானின் தாக்குதலைச் சந்திக்க எது நம்மைப் பலப்படுத்தும்?
2 “மிகுந்த உபத்திரவம்” அதன் உச்சக்கட்டத்தை நெருங்குகையில் “மாகோகு தேசத்தானான கோகு” கடவுளுடைய மக்களை முழுவீச்சோடு தாக்க ஆரம்பிப்பான். இந்தத் தாக்குதலில், ‘தேசத்தைக் கார்மேகம் மூடுவதுபோல்’ கடவுளுடைய மக்களுக்கு எதிராக “திரளான சேனை” வந்து சூழ்ந்துகொள்ளும். (எசே. 38:2, 14-16) அப்போது அவர்களைப் பாதுகாக்க எந்த மனித அமைப்புகளும் முன்வராது. மீட்பு பெற அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களைப் பூண்டோடு அழித்துப்போட எதிரிகள் வருகையில் அவர்கள் என்ன செய்வார்கள்?
3 நீங்கள் யெகோவாவை வணங்குபவரா? அப்படியென்றால், மிகுந்த உபத்திரவத்திலிருந்து அவரால் தம் மக்களைக் காப்பாற்ற முடியும்... நிச்சயம் காப்பாற்றுவார்... என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? “தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிக்கவும், அநீதிமான்களை நியாயத்தீர்ப்பு நாளில் அழிப்பதற்கென்று விட்டுவைக்கவும் யெகோவா அறிந்திருக்கிறார்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (2 பே. 2:9) கடந்த காலங்களில் யெகோவா தம் மக்களை விடுவித்த விதங்களைப் பற்றித் தியானித்துப் பார்த்தால்... தம் மக்களை விடுவிக்க அவரால் முடியும் என்பதில் நம் நம்பிக்கை பலப்படும். அதற்கு இப்போது மூன்று உதாரணங்களைச் சிந்திப்போம்.
ஜலப்பிரளயத்திலிருந்து பாதுகாத்தார்
4. பெருவெள்ளம் வருவதற்கு முன் என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டியிருந்தது?
4 முதலாவதாக நாம் சிந்திக்கப்போகிற உதாரணம், நோவாவின் காலத்தில் வந்த பெருவெள்ளத்தைப் பற்றியது. யெகோவாவின் சித்தம் குறித்த காலத்தில் நிறைவேற வேண்டியிருந்தது. பெருவெள்ளம் வருவதற்கு முன்பு பேழையைக் கட்டும் பிரமாண்டமான பணி முடிந்திருக்க வேண்டும்; அதோடு மிருகங்களைப் பத்திரமாக உள்ளே ஏற்றி முடித்திருக்கவும் வேண்டும். ஆதியாகமப் பதிவு சொல்கிறபடி, பேழை கட்டி முடிக்கப்படும்வரை காத்திருந்து பின்னர் பெருமழை பெய்வதற்கான தேதியை யெகோவா தீர்மானிக்கவில்லை; பேழை கட்டி முடிக்கத் தாமதமானால் அதற்கேற்ப பெருமழை பெய்வதற்கான தேதியை மாற்றிக்கொள்ளலாம் என்றும் அவர் நினைக்கவில்லை. மாறாக, பேழையைக் கட்டும்படி நோவாவிடம் சொல்வதற்கு வெகு காலம் முன்பே, பெருமழை பெய்ய வேண்டிய தேதியை அவர் தீர்மானித்துவிட்டார். அது நமக்கு எப்படித் தெரியும்?
5. ஆதியாகமம் 6:3-ல் எதைப் பற்றிய அறிவிப்பு உள்ளது, அந்த அறிவிப்பு எப்போது செய்யப்பட்டது?
5 பரலோகத்தில் யெகோவா ஓர் அறிவிப்பைச் செய்ததாக பைபிள் சொல்கிறது. ஆதியாகமம் 6:3-ன்படி (NW), “மனிதன் பாவத்திற்கு மேல் பாவம் செய்கிறான். அதனால் அவனை என்றென்றும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அவன் இன்னும் நூற்றிருபது வருடங்கள்தான் இருக்கப்போகிறான்” என்று அவர் சொன்னார். இந்த வசனம் மனிதனின் சராசரி வாழ்நாள் காலத்தைப் பற்றிச் சொல்வதில்லை. மாறாக, தேவபக்தியற்ற மக்களைப் பூமியிலிருந்து நீக்குவதற்குக் கடவுள் தீர்மானித்திருந்த காலத்தைப் பற்றிச் சொல்கிறது.a கி.மு. 2370-ல் பெருவெள்ளம் வந்ததால் கி.மு. 2490-ல் கடவுள் இந்த அறிவிப்பைச் செய்திருக்க வேண்டும். அந்தச் சமயத்தில், நோவாவுக்கு 480 வயது. (ஆதி. 7:6) சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு, கி.மு. 2470-ல் நோவாவுக்குப் பிள்ளைகள் பிறக்க ஆரம்பித்தார்கள். (ஆதி. 5:32) பெருவெள்ளம் வர சுமார் நூறு வருடங்கள் இருந்தன; என்றாலும், நோவாவைப் பயன்படுத்தியே மனிதகுலத்தைப் பாதுகாக்க தாம் தீர்மானித்திருந்ததை யெகோவா இன்னும் அவரிடம் சொல்லாதிருந்தார். நோவாவிடம் அதைச் சொல்ல அவர் எவ்வளவு காலம் காத்திருந்தார்?
6. பேழையைக் கட்டும்படி நோவாவிடம் யெகோவா எப்போது கட்டளையிட்டார்?
6 யெகோவா தாம் என்ன செய்யப் போகிறார் என்பதை நோவாவிடம் தெரிவிப்பதற்கு முன்பு பல பத்தாண்டுகள் காத்திருந்தார் எனத் தெரிகிறது. எப்படிச் சொல்கிறோம்? நோவாவிடம் யெகோவா பேழையைக் கட்ட சொன்ன சமயத்தில் அவருடைய மகன்கள் வளர்ந்து, பெரியவர்களாகி, திருமணமும் செய்திருந்தார்கள் என பைபிள் சொல்கிறது. “உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்” என்று நோவாவிடம் யெகோவா சொன்னார். (ஆதி. 6:9-18) எனவே, பேழையைக் கட்டுவதற்கான கட்டளையை நோவா பெற்றபோது பெருவெள்ளம் வருவதற்கு இன்னும் 40 அல்லது 50 ஆண்டுகளே இருந்திருக்க வேண்டும்.
7. (அ) நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் எப்படி விசுவாசத்தைக் காட்டினார்கள்? (ஆ) பெருவெள்ளம் எப்போது வரும் என்று நோவாவிடம் யெகோவா சொன்னார்?
7 பேழை கட்டும் வேலை நடந்துகொண்டிருந்தபோது... பெருவெள்ளத்தை யெகோவா எப்படிக் கொண்டுவருவார், எப்போது கொண்டுவருவார் என்று நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் யோசித்திருக்கலாம். அது குறித்து எந்த விவரமும் அவர்களுக்குத் தெரியாதிருந்தபோதிலும் பேழையைக் கட்டுவதை அவர்கள் நிறுத்திவிடவில்லை. “கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 6:22, பொது மொழிபெயர்ப்பு) பெருமழை வருவதற்கு ஏழு நாட்கள் இருந்தபோது... மிருகங்களைப் பேழைக்குள் ஏற்றுவதற்கு நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் போதுமான நேரம் இருந்தபோது... பெருவெள்ளம் திட்டவட்டமாக எப்போது வரும் என்று நோவாவிடம் யெகோவா சொன்னார். “நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே” வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டபோது எல்லா வேலையும் முடிந்திருந்தது.—ஆதி. 7:1-5, 11.
8. யெகோவாவுக்குத் தம் மக்களை விடுவிக்க வழி தெரியும் என்பதை பெருவெள்ளப் பதிவு எப்படி உறுதிப்படுத்துகிறது?
8 யெகோவா எப்போதும் சரியான சமயத்தில், சிறந்த வழியில் தம் மக்களைக் காப்பாற்றுவார் என்பதைப் பெருவெள்ளப் பதிவு உறுதிப்படுத்துகிறது. இந்தப் பொல்லாத உலகத்திற்கான முடிவு நெருங்கி வருகையில், யெகோவாவின் நோக்கங்கள் எல்லாமே அவர் குறித்திருக்கும் ‘அந்த நாளில், அந்த நேரத்தில்’ நிச்சயம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.—மத். 24:36; ஆபகூக் 2:3-ஐ வாசியுங்கள்.
செங்கடலிலிருந்து விடுவித்தார்
9, 10. எகிப்திய படைவீரர்களைப் பொறியில் சிக்க வைக்க யெகோவா எப்படித் தம் மக்களையே பயன்படுத்தினார்?
9 தம்முடைய நோக்கம் நிறைவேறுவதற்கு எல்லாக் காரியங்களும் குறித்த நேரத்தில் நடக்கும்படி யெகோவா பார்த்துக்கொள்கிறார் என்பதைப் பெருவெள்ளப் பதிவிலிருந்து தெரிந்துகொண்டோம். யெகோவா தம் மக்களை விடுவிக்க வழி செய்வார் என்பதில் நம்பிக்கை வைக்க நமக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. நாம் சிந்திக்கப் போகிற இரண்டாவது உதாரணம், யெகோவா தமது சித்தத்தை நிறைவேற்ற தம்மிடமுள்ள அளவிலா வல்லமையைப் பயன்படுத்துவார் என்பதைச் சிறப்பித்துக் காட்டும். அவர் தம் மக்களை விடுவிப்பார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. என்றாலும், தமது எதிரிகளைப் பொறியில் சிக்க வைப்பதற்குச் சில சமயங்களில் ஆபத்தான சூழ்நிலையைச் சந்திக்க அவர்களை அனுமதிக்கிறார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை அவர் விடுவித்த சமயத்தில் அதுதான் நடந்தது.
10 எகிப்திலிருந்து சுமார் முப்பது லட்சம் இஸ்ரவேலர் புறப்பட்டு வந்திருக்கலாம். அவர்கள் வழிதப்பித் திரிகிறார்கள் என்று பார்வோன் நினைக்கும் விதத்தில் மோசே அவர்களை வழிநடத்தும்படி யெகோவா செய்தார். (யாத்திராகமம் 14:1-4-ஐ வாசியுங்கள்.) தன் முன்னாள் அடிமைகளைச் செங்கடல் அருகே வளைத்துப் பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் பார்வோன் தன் படைவீரர்களுடன் ஆசையாய்ப் புறப்பட்டான். இஸ்ரவேலர் வசமாக மாட்டிக்கொண்டதைப் போல் அவனுக்குத் தோன்றியது. (யாத். 14:5-10) ஆனால், உண்மையில் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஏனென்றால், யெகோவா அவர்களைக் காப்பாற்ற தயாராய் இருந்தார்.
11, 12. (அ) யெகோவா தம் மக்களை எப்படிக் காப்பாற்றினார்? (ஆ) அதன் விளைவு என்ன, இந்தப் பதிவிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?
11 இஸ்ரவேலரை முன்னிருந்து வழிநடத்திச் சென்ற ‘மேக ஸ்தம்பம்,’ விலகி அவர்கள் பின்பக்கம் வந்து நின்றது. பார்வோனின் படைவீரர்கள் இஸ்ரவேலரை நெருங்க விடாதபடி அது இருளை உண்டுபண்ணியது. இஸ்ரவேலருக்கு மட்டும் அற்புதமாய் அது இரவில் வெளிச்சத்தைத் தந்தது. (யாத்திராகமம் 14:19, 20-ஐ வாசியுங்கள்.) யெகோவா பலத்த கீழ்க்காற்றை வீசச் செய்தபோது தண்ணீர் பிளந்து பிரிந்து கடல் ‘வறண்டுபோனது.’ இதற்கு நிச்சயம் அதிக நேரமெடுத்திருக்கும். ஏனென்றால், ‘இராமுழுதும்’ பலத்த காற்று வீசியதாகவும் அதன் பிறகு ‘இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனதாகவும்’ பைபிள் சொல்கிறது. பார்வோனின் போர் ரதங்களின் வேகத்துடன் ஒப்பிட, இஸ்ரவேலர் மெதுவாகவே நடந்துபோனார்கள். ஆனாலும், இஸ்ரவேலருக்காக யெகோவா போரிட்டதால் எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து வந்து பிடிக்க முடியவில்லை. யெகோவா எகிப்தியரின் “அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்துபோகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று.”—யாத். 14:21-25; பொ.மொ.
12 இஸ்ரவேலர் எல்லாரும் பத்திரமாகக் கடலின் மறுபக்கத்தை அடைந்த பிறகு யெகோவா மோசேயை நோக்கி, “ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு” என்றார். மதில்போல் நின்ற தண்ணீர் திடீரென புரண்டோடி வந்ததைப் பார்த்த படைவீரர்கள் தப்பியோட முயன்றார்கள். ஆனால், ‘யெகோவா அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.’ அவர்கள் தப்பிக்க வழியே இல்லை. “அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.” (யாத். 14:26-28) இப்படியாக... எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தம் மக்களை விடுவிக்க தமக்கு வல்லமை இருப்பதை யெகோவா காட்டினார்.
எருசலேமின் அழிவிலிருந்து விடுவித்தார்
13. இயேசு என்ன அறிவுரைகளைக் கொடுத்தார், அவரது சீடர்கள் எதைக் குறித்து யோசித்திருப்பார்கள்?
13 தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்குச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் எப்படிச் சரியாக நடந்தேறும் என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். நாம் சிந்திக்கப் போகிற மூன்றாவது உதாரணம் இதைச் சிறப்பித்துக் காட்டும். அது... முதல் நூற்றாண்டில் எருசலேமின் முற்றுகையைப் பற்றியது. கி.பி. 70-ல் எருசலேம் நகரம் அழிக்கப்படுவதற்கு முன் அந்த நகரத்திலும் யூதேயாவிலும் இருந்த கிறிஸ்தவர்கள் தப்பிப்பிழைப்பதற்குத் தமது மகன் மூலம் யெகோவா அறிவுரைகளைக் கொடுத்தார். “தானியேல் தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டபடி, ‘பாழாக்கும் அருவருப்பு’ பரிசுத்தமான இடத்தில் நிற்பதை நீங்கள் பார்க்கும்போது . . . யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டும்” என்று இயேசு சொல்லியிருந்தார். (மத். 24:15, 16) ஆனால், இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை இயேசுவின் சீடர்கள் எப்போது புரிந்துகொள்வார்கள்?
14. இயேசு கொடுத்த அறிவுரைகளின் அர்த்தத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள என்ன சம்பவங்கள் உதவின?
14 சம்பவங்கள் ஒவ்வொன்றாக நடந்தேறியபோது இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் தெளிவாகப் புரிந்தது. யூதர்களின் கலகத்தை அடக்க, கி.பி. 66-ல் செஸ்டியஸ் காலஸ் என்பவரின் தலைமையில் ரோமப் படைகள் எருசலேமுக்கு வந்தன. ஸெலட்டுகள் என்று அழைக்கப்பட்ட யூதப் போராளிகள் ஆலயத்திற்குப் பக்கத்திலிருந்த அரணுக்குள் அடைக்கலம் புகுந்தபோது ரோமப் படைவீரர்கள் ஆலய மதிற் சுவரின்கீழ் குழிதோண்டி அதை வலுவிழக்கச் செய்தார்கள். விழிப்புடன் இருந்த கிறிஸ்தவர்களுக்குத் தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பது தெளிவாகத் தெரிந்தது: புறமதப் படைவீரர்கள் தங்கள் வழிபாட்டுக்குரிய உருவச் சின்னங்களுடன் (“பாழாக்கும் அருவருப்பு”) ஆலய மதிற்சுவருக்கு மிக அருகில் (‘பரிசுத்தமான இடம்’) நின்றுகொண்டிருந்தார்கள். இயேசுவின் சீடர்கள் ‘மலைகளுக்குத் தப்பியோட வேண்டிய’ நேரம் வந்துவிட்டது. ஆனால், முற்றுகையிடப்பட்ட நகரத்திலிருந்து அவர்களால் எப்படி வெளியேற முடியும்? எதிர்பாராத சம்பவங்கள் நடக்கவிருந்தன.
15, 16. (அ) திட்டவட்டமான என்ன அறிவுரையை இயேசு கொடுத்திருந்தார், அதற்கு அவரது சீடர்கள் கீழ்ப்படிவது ஏன் அவசியமாய் இருந்தது? (ஆ) எதைச் செய்தால் மட்டுமே நாம் விடுவிக்கப்படுவோம்?
15 எந்தக் காரணமும் இல்லாமல் செஸ்டியஸ் காலஸும் அவரது படைவீரர்களும் எருசலேமை விட்டுத் திரும்பிச் சென்றார்கள். யூதப் போராளிகள் அவர்களைத் துரத்திச் சென்றார்கள். ரோமப் படையினரும் யூதப் போராளிகளும் இல்லாதிருந்த இந்தச் சமயத்தில் அங்கிருந்து ஓடிப்போக இயேசுவின் சீடர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புக் கிடைத்தது. தங்கள் சொத்துப்பத்துகளை விட்டுவிட்டு உடனடியாக வெளியேறும்படி இயேசு அவர்களுக்குத் திட்டவட்டமான அறிவுரையைக் கொடுத்திருந்தார். (மத்தேயு 24:17, 18-ஐ வாசியுங்கள்.) அவர்கள் அப்படி உடனடியாக வெளியேற வேண்டிய அவசியம் இருந்ததா? அதற்கான பதில் சீக்கிரத்திலேயே கிடைத்துவிட்டது. சில நாட்களுக்குள் யூதப் போராளிகள் திரும்பி வந்தார்கள்; கலகத்தில் தங்களுடன் சேர்ந்துகொள்ளும்படி எருசலேமிலும் யூதேயாவிலும் குடியிருந்தவர்களை வற்புறுத்தினார்கள். பிளவுப்பட்டிருந்த யூதப் போராளிகள் அதிகாரத்தைக் கைப்பற்ற தங்களுக்குள்ளேயே போராடிக் கொண்டிருந்ததால் நகரத்தின் நிலைமை சீரழிய ஆரம்பித்தது. அங்கிருந்து தப்பி ஓடுவது நாளுக்குநாள் கஷ்டமாகிவிட்டது. கி.பி. 70-ல் ரோமப் படை திரும்பி வந்தபோதோ ஓடிப் போகவே முடியாத நிலை ஏற்பட்டது. (லூக். 19:43) இருமனதாய் இருந்தவர்கள் நகரத்தினுள் வசமாக மாட்டிக்கொண்டார்கள்! இயேசுவின் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து மலைகளுக்குத் தப்பி ஓடியவர்கள் உயிர் பிழைத்தார்கள். தம் மக்களை விடுவிக்க யெகோவாவுக்கு வழி தெரியும் என்பதைக் கண்ணாரக் கண்டார்கள். இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
16 மிகுந்த உபத்திரவத்தின்போது சம்பவங்கள் ஒவ்வொன்றாக நடந்தேறுகையில், கடவுளுடைய வார்த்தையும் அமைப்பும் கொடுக்கிற அறிவுரைகளுக்குக் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிய வேண்டும். உதாரணத்திற்கு, ‘மலைகளுக்குத் தப்பியோடும்படி’ இயேசு கொடுத்த கட்டளை இன்று நமக்கும் பொருந்தும். ஆனால், எந்த விதத்தில் நாம் ஓடிப்போக வேண்டும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.b என்றாலும், அந்த அறிவுரைகளுக்கு நாம் கீழ்ப்படிவதற்கான வேளை வரும்போது அவற்றை யெகோவா நமக்குத் தெளிவுபடுத்துவார் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கலாம். யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால் மட்டுமே விடுவிக்கப்படுவோம் என்பதால் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இன்று யெகோவா கொடுக்கும் அறிவுரைகளைக் கேட்கும்போது நான் என்ன செய்கிறேன்? உடனடியாகக் கீழ்ப்படிகிறேனா அல்லது தாமதிக்கிறேனா?’—யாக். 3:17.
எதிர்காலத்தைச் சந்திக்க பலம் பெறுதல்
17. கடவுளுடைய மக்கள் எதிர்ப்படவிருக்கும் தாக்குதலைப் புரிந்துகொள்ள ஆபகூக் தீர்க்கதரிசனம் எப்படி உதவுகிறது?
17 ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கோகின் முழுவீச்சு தாக்குதலைப் பற்றிய விஷயத்திற்கு மீண்டும் வருவோம். அதனுடன் சம்பந்தப்பட்ட மற்றொரு தீர்க்கதரிசனத்தில் ஆபகூக் இவ்வாறு சொன்னார்: “நான் கேட்கும்போது என் வயிறு கலங்குகிறது; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடிக்கின்றன; என் எலும்புகள் உளுத்துப் போகின்றன; நிற்கும் இடத்திலேயே நடுங்குகிறேன்; ஆனாலும் மக்களுக்கு [எதிரி படைகளுக்கு] இக்கட்டு நாளில் அவர் [கடவுள்] அழிவைக் கொண்டு வரும்வரை நான் அமைதியாய்க் காத்திருக்க வேண்டும்.” (ஆப. 3:16, NW) கடவுளுடைய மக்கள் எதிர்ப்படவிருந்த தாக்குதலைப் பற்றிக் கேள்விப்பட்டபோதே அந்தத் தீர்க்கதரிசியின் வயிறு கலங்கியது, உதடுகள் துடித்தன, பலம் வற்றிப்போனது. ஆபகூக்கின் பிரதிபலிப்பைப் படிக்கும்போது... நமக்கு எதிராக கோகுவின் படை புயலெனப் புறப்பட்டு வருகையில் நம்முடைய நிலைமை அதைவிட மோசமாக இருக்குமெனத் தோன்றலாம். என்றாலும், யெகோவா தம் மக்களை விடுவிப்பார் என்ற நம்பிக்கையோடு அவரது மகா நாளுக்காக ஆபகூக் தீர்க்கதரிசி அமைதியாய்க் காத்திருந்தார். நாமும் அதே நம்பிக்கையோடு இருப்போமாக.—ஆப. 3:18, 19.
18. (அ) வரவிருக்கும் தாக்குதலைக் குறித்து நாம் ஏன் பயப்படத் தேவையில்லை? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திக்கப் போகிறோம்?
18 நாம் இதுவரை சிந்தித்த மூன்று உதாரணங்களும்... யெகோவாவுக்குத் தம் மக்களை விடுவிக்க வழி தெரியும் என்பதையே மெய்ப்பித்துக் காட்டுகின்றன. அவரது நோக்கம் ஒருபோதும் தோல்வியடையாது; அவர் தம் எதிரிகளை அழித்து நிச்சயம் வெற்றி பெறுவார். அந்த மகத்தான வெற்றியில் நாமும் பங்கெடுப்பதற்கு, முடிவுவரை உண்மையாய் நிலைத்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார்? பதில் அடுத்த கட்டுரையில்...
[அடிக்குறிப்புகள்]
a டிசம்பர் 15, 2010 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 30-31-ஐப் பாருங்கள்.
b மே 1, 1999 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 18, 19-ஐப் பாருங்கள்.
[பக்கம் 24-ன் படங்கள்]
பார்வோனின் படையினரால் இஸ்ரவேலருக்கு உண்மையிலேயே ஏதாவது ஆபத்து இருந்ததா?