யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
ஆதியாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—I
இந்தப் பிரபஞ்சம் எப்படி தோன்றியது, மனிதன் வாழ்வதற்கு ஏற்றவாறு இந்தப் பூமி எப்படி தயார்படுத்தப்பட்டது, இங்கு மனிதரின் வாழ்க்கை எப்படி ஆரம்பமானது என்பதையெல்லாம் ஆதியாகம புத்தகம் விரிவாக விளக்குகிறது. சீனாய் வனாந்தரத்தில் மோசே இப்புத்தகத்தை எழுதினார்; பொ.ச.மு. 1513-ல் அதை அவர் எழுதி முடித்திருக்கலாம்.
ஜலப்பிரளயத்திற்கு முன்னான உலகத்தைப் பற்றியும், அதற்கு பின்னான யுகம் ஆரம்பமானதும் என்ன நடந்தது என்பதைப் பற்றியும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியோரிடம் யெகோவா தேவன் எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பற்றியும் ஆதியாகம புத்தகம் சொல்கிறது. இக்கட்டுரை ஆதியாகமம் 1:1–11:9 வரையுள்ள பகுதியின் சிறப்பு குறிப்புகளை கலந்தாலோசிக்கிறது; முக்கியமாக முற்பிதாவாகிய ஆபிரகாமுடன் யெகோவா தொடர்புகொள்ள ஆரம்பித்த காலப்பகுதி வரையில் கலந்தாலோசிக்கிறது.
ஜலப்பிரளயத்திற்கு முன்னான உலகம்
ஆதியாகம புத்தகத்தில், “ஆதியிலே” என ஆரம்பிக்கும் வார்த்தை நம் அறிவுக்கு எட்டாத கோடானுகோடி ஆண்டுகளுக்கு முன்னான காலத்தைக் குறிக்கிறது. சிருஷ்டிப்பின் ஆறு ‘நாட்களில்,’ அதாவது சிருஷ்டிப்பின் அந்த ஆறு விசேஷ காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்கள், பூமியில் ஒரு மனிதன் இருந்திருந்தால் அவன் கண்களுக்கு எவ்வாறு தென்பட்டிருக்குமோ அதுபோல் விவரிக்கப்பட்டுள்ளன. ஆறாம் நாளின் முடிவிலே மனிதனை கடவுள் படைத்தார். மனிதனுடைய கீழ்ப்படியாமையால் பரதீஸ் சீக்கிரத்திலேயே இழக்கப்பட்டுப் போனாலும், யெகோவா நம்பிக்கையை அளிக்கிறார். பைபிளின் முதல் தீர்க்கதரிசனம் ஒரு ‘வித்துவைப்’ பற்றி பேசுகிறது. அந்த வித்துவானவர் பாவத்தின் விளைவுகளை எல்லாம் நீக்கி, சாத்தானின் தலையை நசுக்கிப் போடுவார்.
தொடர்ந்து வரும் 16 நூற்றாண்டுகளில், உண்மையுள்ளோர் சிலரைத் தவிர—ஆபேல், ஏனோக்கு, நோவா போன்ற சிலரைத் தவிர—எல்லாரையுமே கடவுளிடமிருந்து திருப்பி விடுவதில் சாத்தான் வெற்றி காண்கிறான். உதாரணத்திற்கு, நீதிமானாகிய தன் சகோதரன் ஆபேலை காயீன் கொலை செய்கிறான். சொல்லப்போனால், அப்போது ஜனங்கள் அவபக்தியான விதத்தில் ‘யெகோவாவின் பெயரை தொழுதுகொள்ள ஆரம்பித்ததாக’ தோன்றுகிறது. அந்நாளைய மக்களின் மூர்க்க குணத்தை வெளிப்படுத்தும் வண்ணம் லாமேக்கு ஒரு கவிதையை இயற்றுகிறார்; தற்காப்பு என்ற பெயரில் ஒரு வாலிபனை தான் கொலை செய்ததைப் பற்றி அதில் குறிப்பிடுகிறார். கடவுளுக்கு கீழ்ப்படியாத தேவதூதர்கள் பூமியிலுள்ள பெண்களை மணந்து நெஃபிலிம் என அழைக்கப்பட்ட மூர்க்கமான அரக்கர்களை பெற்றெடுக்கிறபோது நிலைமை சீர்கெட்டுப் போகிறது. ஆனால், விசுவாசமுள்ள நோவா ஒரு பேழையை கட்டுகிறார், ஜலப்பிரளயம் வரப்போவதைப் பற்றி தைரியமாக மற்றவர்களுக்கு எச்சரிக்கிறார்; அது மட்டுமல்ல, அந்தப் பேரழிவிலிருந்து குடும்பமாக தப்பிப்பிழைக்கிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
1:16—நான்காம் நாள் வரையிலும் சுடர்கள் உண்டாக்கப்படாதபோது, முதலாம் நாளில் கடவுள் எப்படி வெளிச்சத்தை வரச் செய்ய முடிந்தது? ஆதியாகமம் 1-ஆம் அதிகாரம் 16-ஆம் வசனத்தில் ‘உண்டாக்கு’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தைக்கும் 1, 21, 27 வசனங்களில் ‘சிருஷ்டி’ என பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைக்கும் வித்தியாசம் உள்ளது. “முதலாம் நாள்” ஆரம்பிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே சுடர்கள் அடங்கிய ‘வானம்’ சிருஷ்டிக்கப்பட்டது. ஆனால் அவற்றின் வெளிச்சம் பூமியின் மேற்பரப்பை வந்தடையவில்லை. முதலாம் நாளில் மங்கலான வெளிச்சம் மேகப் படலங்களை ஊடுருவியதால் “வெளிச்சம் உண்டாயிற்று,” பூமியில் தெளிவாக தெரியவும் ஆரம்பித்தது. இதன் காரணமாக பூமியின் சுழற்சியால் இரவும் பகலும் மாறி மாறி உண்டானது. (ஆதியாகமம் 1:1-3, 5) ஆனால் அந்த வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்பதை பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை இருந்து வந்தது. என்றாலும், சிருஷ்டிப்பின் நான்காவது காலக்கட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ‘பூமியின்மேல் பிரகாசிக்கும்படி’ செய்யப்பட்டன. (ஆதியாகமம் 1:17) ஆகவே கடவுள் அவற்றை “உண்டாக்கினார்” என்று சொல்லும்போது, அதுமுதல் பூமியிலிருந்து அவற்றை பார்க்க முடிந்தது என்றே அர்த்தம்.
3:8—ஆதாமிடம் கடவுள் நேரடியாக பேசினாரா? கடவுள் மனிதரிடம் பெரும்பாலும் தேவதூதர்கள் மூலம் பேசியதாக பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 16:7-11; 18:1-3, 22-26; 19:1; நியாயாதிபதிகள் 2:1-4; 6:11-16, 22; 13:15-22) கடவுள் சார்பாக பேசுவோரில் பிரதானமானவர், “வார்த்தை” என அழைக்கப்படும் அவருடைய முதற்பேறான குமாரனே. (யோவான் 1:1) ஆதாம் ஏவாளிடம் “அந்த வார்த்தை” மூலமாகவே கடவுள் பேசியிருக்க வேண்டும்.—ஆதியாகமம் 1:26-28; 2:16; 3:8-13.
3:17—எந்த விதத்தில் நிலம் சபிக்கப்பட்டது, எவ்வளவு காலத்திற்கு? பயிரிடுவது அதிக கடினமாக இருக்கும் என்பதையே நிலத்திற்கு கொடுக்கப்பட்ட சாபம் அர்த்தப்படுத்தியது. முட்செடிகளும் முட்புதர்களும் வளர்ந்திருந்த சபிக்கப்பட்ட அந்த நிலத்தின் பாதிப்புகளை ஆதாமின் சந்ததியினரால் நன்கு உணர முடிந்தது; அதனால்தான், ‘யெகோவா நிலத்தை சபித்ததால் கைகளுக்கு உண்டான வலியை’ பற்றி நோவாவின் தகப்பன் லாமேக்கு சொன்னார். (ஆதியாகமம் 5:29, NW) ஜலப்பிரளயத்திற்கு பிறகு, நோவாவையும் அவருடைய மகன்களையும் யெகோவா ஆசீர்வதித்து அவர்கள் பூமியில் பலுகிப் பெருக வேண்டுமென்ற தம் நோக்கத்தைத் தெரிவித்தார். (ஆதியாகமம் 9:1) அதன் பிறகு நிலத்திற்கு கொடுத்த சாபத்தையும் கடவுள் நீக்கிவிட்டதாக தெரிகிறது.—ஆதியாகமம் 13:10.
4:15—‘காயீன் மேல் [யெகோவா] ஒரு அடையாளத்தைப் போட்டது’ எப்படி? காயீனுடைய சரீரத்தில் எந்தவொரு அடையாளமோ குறியோ போடப்பட்டதாக பைபிள் சொல்வதில்லை. ஆனால் அந்த அடையாளம் மற்றவர்கள் அறிந்து, கடைப்பிடித்த ஒரு கட்டளையாக இருந்திருக்கலாம்; பழிவாங்கும் நோக்கத்தில் அவரை கொலை செய்வதை தடுக்கவே அது கொடுக்கப்பட்டது.
4:17—காயீனுக்கு மனைவி எங்கிருந்து கிடைத்தாள்? ஆதாமுக்கு ‘குமாரரும் குமாரத்திகளும்’ பிறந்தனர். (ஆதியாகமம் 5:4) ஆகவே காயீன் தன் சகோதரிகளில் ஒருத்தியை அல்லது ஒருவேளை தன் உடன்பிறந்தாரின் மகளை மனைவியாக தேர்ந்தெடுத்திருக்கலாம். பிற்பாடு இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டம் சொந்த சகோதரனை, சகோதரியை மணம் செய்வதை தடை செய்தது.—லேவியராகமம் 18:9.
5:24—எந்த விதத்தில் கடவுள் ‘ஏனோக்கை எடுத்துக்கொண்டார்’? ஏனோக்கின் உயிர் ஆபத்தில் இருந்ததாக தெரிகிறது, ஆனால் எதிரிகளின் கையில் அவர் சிக்கித் தவிக்க கடவுள் அனுமதிக்கவில்லை. “ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 11:5) பரலோகத்தில் என்றும் வாழ்வதற்காக ஏனோக்கை கடவுள் எடுத்துக் கொண்டார் என இது அர்த்தப்படுத்துவதில்லை. ஏனெனில் முதன்முதலில் பரலோகத்திற்கு சென்றவர் இயேசுவே. (யோவான் 3:13; எபிரெயர் 6:19, 20) ஏனோக்கு ‘மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்’ என்பது, ஒரு தீர்க்கதரிசன காட்சியை மெய்மறந்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அவருடைய ஆயுளை கடவுள் முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதை அர்த்தப்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலைகளில், அவர் எதிரிகளின் கையில் துன்புறவில்லை, அல்லது ‘மரணத்தைக் காணவில்லை.’
6:6—மனுஷனை உண்டாக்கினதற்காக என்ன கருத்தில் யெகோவா “மனஸ்தாபப்பட்டார்” என்று சொல்லலாம்? “மனஸ்தாபப்பட்டார்” என இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை மனநிலையில் அல்லது நோக்கத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தோடு தொடர்புடையது. யெகோவா பரிபூரணர், ஆகவே மனிதனை சிருஷ்டித்ததில் எந்தத் தவறும் இல்லை. என்றாலும், ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த துன்மார்க்க சந்ததியைக் குறித்ததில் அவருடைய மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. மனிதரை படைத்தவர் என்ற அவருடைய மனநிலை, மனிதரை அழிப்பவர் என மாறியது; அந்த ஜனங்களின் துன்மார்க்க செயல்களை அவர் வெறுத்ததே அப்படிப்பட்ட மன மாற்றத்திற்குக் காரணம். சில மனிதரை அவர் காப்பாற்றியதானது, துன்மார்க்கராக மாறியிருந்த ஜனங்களிடம் மட்டுமே அவர் மனஸ்தாபப்பட்டார் என்பதைக் காட்டுகிறது.—2 பேதுரு 2:5, 9.
7:2—சுத்தமான மிருகங்கள், சுத்தமல்லாத மிருகங்கள் என எதன் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டன? எந்தெந்த மிருகங்களை சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது என்பதன் அடிப்படையில் அல்ல, ஆனால் வழிபாட்டு காரியங்களில் பலி செலுத்துவதற்கு பயன்படும் மிருகங்கள் எவை என்பதன் அடிப்படையிலேயே அவை பிரிக்கப்பட்டன. ஜலப்பிரளயத்திற்கு முன்பு மனிதர் இறைச்சியை சாப்பிடவில்லை. உணவைப் பொருத்ததில் ‘சுத்தமான’ மிருகங்கள், ‘அசுத்தமான’ மிருகங்கள் என்ற விவரம் நியாயப்பிரமாண சட்டத்தில் மட்டுமே காணப்பட்டன. அந்தச் சட்டம் நீக்கப்பட்டதும் அந்தக் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன. (அப்போஸ்தலர் 10:9-16; எபேசியர் 2:15) யெகோவாவுக்கு பலி செலுத்த ஏற்ற மிருகம் எது என்பதை நோவா அறிந்திருந்ததாக தெரிகிறது. ஆகவேதான், பேழையை விட்டு அவர் வெளியே வந்ததும் ‘யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டார்.’—ஆதியாகமம் 8:20.
7:11—பூகோள ஜலப்பிரளயம் ஏற்பட்டபோது அந்தத் தண்ணீர் எங்கிருந்து வந்தது? சிருஷ்டிப்பின் இரண்டாம் காலக்கட்டத்தில், அல்லது ‘நாளில்,’ பூமியின் வளிமண்டலமாகிய “ஆகாயவிரிவு” உருவானபோது ‘ஆகாயவிரிவுக்குக் கீழேயும்’ ‘ஆகாயவிரிவுக்கு மேலேயும்’ தண்ணீர் இருந்தது. (ஆதியாகமம் 1:6, 7) ‘ஆகாயவிரிவுக்கு கீழே’ இருந்த தண்ணீர் என்பது பூமியில் ஏற்கெனவே இருந்த தண்ணீர் ஆகும். பூமிக்கு வெகு உயரத்தில் ‘மகா ஆழமாக’ இருந்த பிரமாண்டமான ஈரப் படலமே ‘ஆகாயவிரிவுக்கு மேலே’ இருந்த தண்ணீர் ஆகும். அந்தத் தண்ணீரே நோவாவின் காலத்தில் பூமியின் மீது பொழிந்தது.
நமக்குப் பாடம்:
1:26. கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதருக்கு அவருடைய பண்புகளைப் பிரதிபலிக்கும் திறமை இருக்கிறது. ஆகவே, நம்மை உண்டாக்கியவரை பிரதிபலிக்கும் வண்ணம் அன்பு, இரக்கம், தயவு, நற்குணம், பொறுமை போன்ற பண்புகளை வளர்க்க நாம் கண்டிப்பாக முயல வேண்டும்.
2:22-24. திருமணம் கடவுளின் ஏற்பாடு. திருமண பந்தம் நிலையானது, புனிதமானது; கணவரே அந்தக் குடும்பத்திற்கு தலைவர்.
3:1-5, 16-23. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யெகோவாவின் பேரரசுரிமையை அங்கீகரிப்பதைப் பொறுத்தே மகிழ்ச்சி கிடைக்கிறது.
3:18, 19; 5:5; 6:7; 7:23. யெகோவாவின் வார்த்தை எப்போதுமே நிறைவேறும்.
4:3-7. ஆபேலின் காணிக்கையை யெகோவா ஏற்றுக்கொண்டதற்கு காரணம், அவர் விசுவாசமுள்ள ஒரு நீதிமானாக இருந்தார். (எபிரெயர் 11:4) ஆனால் காயீனோ விசுவாசமற்றவனாக இருந்தான்; அவனுடைய செயல்கள் அதைச் சுட்டிக்காட்டின. பொறாமை, பகைமை, கொலை என அவனது செயல்கள் பொல்லாதவையாய் இருந்தன. (1 யோவான் 3:12) அதுமட்டுமல்ல, அவன் தன் காணிக்கைக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காமல் ஏதோ கடமைக்காக அதை செலுத்தியிருக்கலாம். நாம் யெகோவாவுக்கு துதியின் பலிகளை முழு இருதயத்தோடு செலுத்துவதுடன் சரியான மனநிலையையும் சிறந்த நடத்தையையும் காத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?
6:22. பேழையைக் கட்டுவதற்கு பல ஆண்டுகள் எடுத்தபோதிலும் கடவுள் கட்டளையிட்டதை நோவா அப்படியே செய்தார். ஆகவே, நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் ஜலப்பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். எழுதப்பட்ட தமது வார்த்தையின் மூலம் யெகோவா நம்மிடம் பேசுகிறார், அதோடு தமது அமைப்பின் வாயிலாக வழிநடத்துதலை அளிக்கிறார். ஆகவே அவருக்கு செவிசாய்த்து கீழ்ப்படிவதால் நமக்குத்தான் நன்மை.
7:21-24. துன்மார்க்கனுடன் சேர்த்து நீதிமானையும் யெகோவா அழிப்பதில்லை.
ஒரு புதிய யுகத்திற்குள் மனிதகுலம் அடியெடுத்து வைக்கிறது
ஜலப்பிரளயத்திற்கு முன்னான உலகம் கடந்துபோயிற்று. இப்போது மனிதகுலம் ஒரு புதிய யுகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது. இறைச்சியை சாப்பிட மனிதருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, ஆனால் இரத்தத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற கட்டளையும் கொடுக்கப்படுகிறது. கொலை குற்றத்துக்கு மரண தண்டனை அளிக்க யெகோவா அனுமதி அளிக்கிறார்; இனி ஜலப்பிரளயத்தைக் கொண்டு வருவதில்லை என்பதை உறுதிப்படுத்த வானவில் உடன்படிக்கையை செய்கிறார். நோவாவின் மூன்று குமாரர்கள் இந்த முழு மனிதகுலத்திற்கும் முன்னோர் ஆகிறார்கள். ஆனால் அவருடைய கொள்ளுப் பேரனாகிய நிம்ரோது ‘யெகோவாவுக்கு எதிராக பலத்த வேட்டைக்காரன்’ (NW) ஆகிறான். மனிதர்கள் நாலாபுறமும் பரவிச் சென்று பூமியை நிரப்புவதற்கு பதிலாக, பாபேல் எனும் நகரத்தையும் தங்களுக்கு பேர் உண்டாக அதில் ஒரு கோபுரத்தையும் கட்ட தீர்மானிக்கிறார்கள். அவர்களது பாஷையை யெகோவா தாறுமாறாக்கி பூமியெங்கும் சிதறிப்போகும்படி செய்கிறபோது அவர்களுடைய திட்டமெல்லாம் பலிக்காமல் போகிறது.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
8:11—ஜலப்பிரளயத்தில் மரங்கள் எல்லாம் அழிந்து போயிருக்குமே, அப்படியானால் புறாவுக்கு ஒலிவ இலை எங்கிருந்து கிடைத்தது? அதற்கு இரண்டு சாத்தியங்கள் உள்ளன. ஒலிவ மரம் மிகவும் வலுவானதால், ஜலப்பிரளயத்தின்போது சில மாதங்கள் தண்ணீருக்கடியில் தாக்குப்பிடித்து இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒலிவ மரம் ஒன்று சுற்றியுள்ள நீர் வற்றிப் போகப்போக மறுபடியும் துளிர்க்க ஆரம்பித்திருக்கலாம். நோவாவிடத்தில் புறா கொண்டு வந்த ஒலிவ இலை, நீர் மட்டம் குறைந்த பிறகு புதிதாக முளைத்த செடியிலிருந்து வந்ததாகவும் இருந்திருக்கலாம்.
9:20-25—கானானை நோவா ஏன் சபித்தார்? கானான் தன் தாத்தாவாகிய நோவாவுக்கு விரோதமாக ஒரு கெட்ட காரியம் செய்திருக்கலாம். கானானின் தகப்பனான காம் அதைப் பார்த்தும் அதைத் தடுப்பதற்கு ஒன்றும் செய்யாமல், அந்த விஷயத்தை மற்றவர்களிடம் பரப்பியதாக தெரிகிறது. என்றாலும், நோவாவின் மற்ற இரண்டு குமாரர்களாகிய சேமும் யாப்பேத்துமோ தங்களுடைய அப்பாவை போர்த்தி விட்டார்கள். இதனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள், ஆனால் கானானோ சபிக்கப்பட்டான்; தன் மகனுக்கு உண்டான அவமானம் காமையும் பாதித்தது.
10:25—பேலேகுவின் காலத்தில் பூமி எப்படி “பகுக்கப்பட்டது”? பொ.ச.மு. 2269 முதல் பொ.ச.மு. 2030 வரையிலான காலப்பகுதியில் பேலேகு வாழ்ந்தார். அவருடைய ‘நாட்களில்தான்’ யெகோவா பூமியில் ஒரு பெரும் பிரிவை ஏற்படுத்தினார். எப்படியெனில், பாபேலை கட்டியவர்களின் பாஷையை தாறுமாறாக்கி, அவர்களை பூமியெங்கும் சிதறிப்போகும்படி செய்ததன் மூலம் பூமியை பகுத்தார். (ஆதியாகமம் 11:9) இவ்வாறு, பேலேகுவின் நாட்களில் “பூமி [அல்லது, பூமியிலுள்ள ஜனம்] பகுக்கப்பட்டது.”
நமக்குப் பாடம்:
9:1; 11:9. யெகோவாவின் நோக்கத்தை மனிதனுடைய எந்த திட்டமோ முயற்சியோ தடுத்து நிறுத்த முடியாது.
10:1-32. ஜலப்பிரளயத்திற்கு முன்னான காலத்தையும் பின்னான காலத்தையும் சேர்ந்த வம்ச வரலாறுகள் 5-ம் 10-ம் அதிகாரங்களில் காணப்படுகின்றன. இவை நோவாவின் மூன்று குமாரர்கள் வழியாக மனிதகுலம் முழுவதையும் முதல் மனிதனான ஆதாமோடு இணைக்கின்றன. அசீரியர், கல்தேயர், எபிரெயர், சீரியர், சில அரபிய இனத்தார் ஆகிய எல்லாரும் சேமுடைய சந்ததியார். எத்தியோப்பியர், எகிப்தியர், கானானியர், ஆப்பிரிக்க, அரபிய இனத்தார் சிலர் காமின் சந்ததியார். இந்திய-ஐரோப்பியர் யாப்பேத்தின் சந்ததியார். ஆக, மனிதர் எல்லாருமே உறவினர்கள், எல்லாரும் கடவுளுக்கு முன்பாக சமம். (அப்போஸ்தலர் 17:26) இந்த உண்மை, பிறரை நாம் எப்படிப் பார்க்கிறோம், நடத்துகிறோம் என்பதை பாதிக்க வேண்டும்.
கடவுளுடைய வார்த்தை வல்லமையுள்ளது
ஆதியாகம புத்தகத்தின் முதல் பகுதியில் காணப்படும் விவரமே ஆரம்பகால மனித சரித்திரத்தின் ஒரே துல்லியமான பதிவு ஆகும். மனிதனை பூமியில் படைத்ததற்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய நுட்ப விவரத்தை இந்தப் பகுதியிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். நிம்ரோது எடுத்த முயற்சியைப் போன்ற எந்தவொரு மனித முயற்சியும் கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதை தடுக்க முடியாது என்பது நமக்கு எவ்வளவாய் ஆறுதலளிக்கிறது!
தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் அட்டவணையில் வரும் வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதியை தயாரிக்கையில், “வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்” என்ற பகுதியை ஆராய்வது, கடினமான சில பைபிள் வசனங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். “நமக்குப் பாடம்” என்ற தலைப்பின் கீழுள்ள குறிப்புகள் வாராந்தர பைபிள் வாசிப்பிலிருந்து நாம் எப்படி பயனடையலாம் என்பதைக் காட்டும். பொருத்தமாக இருந்தால், ஊழியக் கூட்டத்தில் ‘சபை தேவைகள்’ என்ற பகுதியை நடத்துவதற்கு இந்த விஷயங்களை பயன்படுத்தலாம். உண்மையிலேயே யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது, நம் வாழ்க்கையில் வல்லமை செலுத்துகிறது.—எபிரெயர் 4:12.