இரத்தக்கறை படிந்த உலகில் நடுநிலை வகிக்கும் கிறிஸ்தவர்கள்
“மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.”—ஆதியாகமம் 9:6.
1914 முதற்கொண்டு, யுத்தங்களில் 1,000 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் இரத்தம் சமுத்திரங்கள் அளவாக சிந்தப்பட்டிருக்கின்றது. எதிர்காலத்துக்கான எதிர்பார்ப்பைப் பற்றி என்ன? 1945-ல் இரண்டு ஜப்பானிய நகரங்கள் பாழாக்கப்பட்டபோது, 2,00,000 பேர் உயிரிழந்தார்கள். இது வல்லரசுகள் இறுதியாக விளக்கிய புதிய அரசியல் தத்துவ கோட்பாட்டுக்கு வழிநடத்தியிருக்கிறது. இது பொருத்தமாகவே ஆங்கிலத்தில் “MAD” என்பதாக அழைக்கப்பட்டிருக்கிறது. (Mutually Assured Destruction, பரஸ்பரமாக உறுதிசெய்து கொள்ளப்பட்ட அழிவு.) இது நம்முடைய பூமிக்கும் மேல் பல மடங்குக்கு அழிவைக் கொண்டுவரக்கூடிய அணு ஆயுதக் குவியலின் மீது உருவாக்கப்பட்ட திகிலின் சமநிலைக்கு ஆதாரமாகிவிட்டிருக்கிறது. நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தப் பயங்கரமான கருவிகளை சமுத்திரத்துக்குள் கொண்டு சென்றிருக்கின்றன. அண்மை கால விண்வெளி யுத்த அச்சுறுத்தல் அபாயத்தை அதிகரித்துவிட்டிருக்கிறது. திகிலின் சமநிலையுங்கூட இப்பொழுது அடிவரை ஆட்டங்கொண்டுவிட்டது. இந்த பயித்திய நிலையிலிருந்து வெளியேற ஏதாவது வழியிருக்கிறதா?
2 .ஆம், இருக்கிறது. ஆனால் அது தேசங்களின் தெரிவாக இருக்காது. அவைகளின் தற்கால இரண்டக நிலையைக் குறித்து இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின் மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.” அந்த தீர்க்கதரிசனத்தின் முடிவாக, “விழித்திருக்கும்” கிறிஸ்தவர்கள் “இனிச் சம்பவிக்கப் போகிற” இவைகளையெல்லாம் தப்பித்துக் கொள்ள முடியும் என்பதாக இயேசு உறுதியளித்தார்.—லூக்கா 21:25, 26, 36.
கடவுளோடு சமாதானத்தை நாடுதல்
3 .தேசங்கள், விசேஷமாக அணு ஆயுத போர்த்தளவாடங்களை சேகரித்து வைத்துள்ள தேசங்கள், உலக ஆதிக்கத்துக்காக போட்டிப் போட்டுக் கொண்டிருக்கையில், தெளிவாக கற்பனை செய்ய முடிகிறபடி இது உலகம் பூண்டோடொழிக்கப்படுவதில் விளைவடையக்கூடும். இது “இந்த உலகின் தேவனுடைய” நோக்கம் ஈடேற உதவுவதாக இருக்கிறது. தேசங்கள், “யெகோவாவுக்கு விரோதமாகவும்” இப்பொழுது பரலோகங்களில் சிங்காசனத்திலேற்றப்பட்டிருக்கும் “அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும் . . . ஏகமாய் ஆலோசனைப்” பண்ணியிருக்கின்றன. யெகோவா கட்டளையை கொடுக்கும்போது, கிறிஸ்து அந்த தேசங்களை, இருப்புக் கோலால் நொறுக்குவது போல நொறுக்கிவிடுவார். அப்பொழுது பின்வரும் இந்த வாக்கு நிறைவேற்றமடையும்: “சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்.”—2 கொரிந்தியர் 4:4, சங்கீதம் 2:2, 6-9; ரோமர் 16:20.
4 .நாம் நம்முடைய பங்கில் கடவுளோடு சமாதானத்தை நாட விரும்ப வேண்டும். எவ்விதமாக அதை நாம் செய்யக்கூடும்? ஒரு காரியமானது, மனித உயிரின் பரிசுத்த தன்மையைக் குறித்ததிலும், நம்முடைய இரத்தக் குழாய்களிலும் நாளங்களிலும் ஓடும் விலைமதிப்புள்ள உயிர் இரத்தத்தைக் குறித்ததிலும் கடவுளுடைய நோக்குநிலையை நாம் கொண்டிருக்க விருப்பமுள்ளவர்களாயிருக்க வேண்டும்.
5 மனிதனை சிருஷ்டித்தவர் யெகோவா மனித உடலுக்கு ஊட்டச்சத்தை எடுத்துச் சென்று இவ்விதமாக நம்மை உயிரோடே வைக்கும் மகத்தான இரத்த ஓட்டத்தைச் சிருஷ்டித்தவரும் அவரே. பொறுப்புணர்ச்சியின்றி மனித இரத்தம் சிந்தப்படுவது, ஒருபோதும் கடவுளுடைய நோக்கமாக இருக்கவில்லை. காயீன் முதல் கொலையை செய்த பின்பு, ஆபேலின் இரத்தத்தின் சத்தம், பழிவாங்கப்படுவதற்காக தம்மை நோக்கி கூப்பிடுவதாக யெகோவா சொன்னார். பின்னால் காயீன் வம்சத்தில் வந்த லாமேக்கு, ஒரு மனுஷனைக் கொன்றுவிட்டான். இதற்காக தான் கொல்லப்பட வேண்டும் என்றும் இரத்தப்பழிக்கு தான் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவன் கவிநயம்பட குறிப்பிட்டான். காலப்போக்கில், ஒழுக்கங்கெட்ட ஒரு உலகம் வன்முறையினால் நிறைந்ததானது, யெகோவா மனிதவர்க்கத்தின் முதல் உலகத்தை அழிக்க ஒரு ஜலப்பிரளயத்தை அனுப்பினார். நோவா என்ற பெரின் அர்த்தம் “இளைப்பாறுதல்” என்பதாகும். சமாதானமுள்ள நோவாவினுடைய குடும்பம் மாத்திரமே தப்பிப் பிழைத்தது.—ஆதியாகமம் 4:8-12, 23, 24; 6:13; 7:1.
6 யெகோவா பின்பு இரத்தத்தைக் குறித்ததில் தம்முடைய தெளிவான நோக்கத்தை நோவாவுக்குத் தெரியப்படுத்தினார். இதன் உச்சக்கட்டமாக அவர் இவ்விதமாகச் சொன்னார்: “மனுஷன் தேவ சாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்ததப்படக்கடவது.” (ஆதியாகமம் 9:3-6) இன்றுள்ள மனிதவர்க்கம் முழுவதும் நோவாவின் சந்ததியாக இருக்கிறது; ஆகவே உயிருக்கு மரியாதையை வலியுறுத்தும் இந்தத் தெய்வீக சட்டம் கடவுளுடைய அங்கீகராத்தைப் பெற விரும்பும் அனைவருக்கும் பொருந்துவதாக இருக்கிறது. பத்துக் கற்பனைகளில் ஆறாவது கற்பனையுங்கூட “கொலை செய்யாதிருப்பாயாக” என்பதாகச் சொன்னது. இரத்தப்பழி, தகுந்த நடவடிக்கையையும், ஈடுசெய்வதையும் தேவைப்படுத்துகிறது.—யாத்திராகமம் 20:13; 21:12; உபாகமம் 21:1-9; எபிரெயர் 10:30.
7 இரத்தஞ் சிந்துதல் இத்தனைத் தெளிவாகத் தடை செய்யப்பட்டிருந்ததன் காரணமாக, யெகோவா இஸ்ரவேல் தேசத்தை யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதித்ததற்கும் கட்டளையிட்டதற்குங்கூட காரணம் என்ன? இவை பூமி அனைத்துக்கும் நியாயாதிபதியாக இருக்கும் யெகோவா, பேய்களை வணங்கிய தேசங்களை அடியோடு அழித்திட கருவியாக பயன்படுத்திய தூய்மைப்படுத்தும் போர் நடவடிக்கையாக இருந்தன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். உதாரணமாக கானானியர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் தங்கியிருந்தார்கள். இவர்கள் பேய்த்தனமான ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். இது கடவுளுடைய பரிசுத்தமான ஜனத்துக்கு ஆபத்தாக இருக்குமென்பதால் யெகோவா தேவராஜ்ய யுத்தத்தின் மூலமாக அங்கு வாழ்ந்துவந்த மோசமான ஜனங்களை தேசம் “கக்கிப்”போடும்படியாகச் செய்தார். (லேவியராகமம் 18:1-30; உபாகமம் 7:1-6, 24) இது இன்று கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய போராட்டத்தை நியாயமானதாக காண்பிக்கிறது.—2 கொரிந்தியர் 10:3-5; எபேசியர் 6:11-18.
8 என்றபோதிலும் வரைமுறையின்றி இரத்தத்தைச் சிந்துவதை யெகோவா அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாகவே, யூதாவின் ராஜாவைக் குறித்து இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது: “மனாசே எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பபத்தக்கதாய் குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.” மனாசே பின்னால் மனந்திரும்பி, யெகோவாவுக்கு முன்பாகத் தன்னை தாழ்த்திக் கொண்டபோதிலும் இரத்தப்பழி அவன் மீதும் அவனுடைய வம்சத்தின் மீதும் தங்கியிருந்தது. மனாசேயின் கடவுள் பயமுள்ள பேரனாகிய யோசியா ராஜா தேசத்தை சுத்திகரிக்கவும் மெய் வணக்கத்தை திரும்ப நிலைநாட்டவும் உறுதியாகச் செயல்பட்டான். ஆனால் அவனால் அந்த இரத்தப்பழியை நீக்கிவிட முடியவில்லை. யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீமின் ஆட்சி காலத்தின்போது, அந்த தேசத்தின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு யெகோவா நேபுகாத்நேச்சாரை அவர்களுக்கு எதிராக வரப்பண்ணினார். “மனாசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவை தமது சமூகத்தைவிட்டு அகற்றும்படி யெகோவாவுடைய கட்டளையினால் அப்படி நடந்தது. அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமை குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் யெகோவா மன்னிக்கச் சிந்தமில்லாதிருந்தார்.”—2 இராஜாக்கள் 21:16; 24:1-4; 2 நாளாகமம் 33:10-13.
கிறிஸ்தவர்களுக்கான நியமம்
9 கிறிஸ்தவத்தின் ஸ்தாபகரான இயேசு, இரத்தத்தைச் சிந்துவதன் சம்பந்தமாக கிறிஸ்தவர்களுக்கு ஒரு நியமத்தை வைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். அவர் அவ்விதமாகச் செய்தாரா? ஆம், தம்முடைய மரணத்தின் ஞாபகார்த்தத்தை ஏற்படுத்தி வைத்தப் பின் சிறிது நேரத்துக்குள் அவருடைய சீஷர்கள் அவர்களிடம் இரண்டு பட்டயங்களை வைத்திருப்பதற்கு அவர் ஏற்பாடு செய்தார். எதற்காக? கிறிஸ்தவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டியதாக இருக்கும் இன்றிமையாத ஒரு நியமத்தை உறுதி செய்வதற்காக. போர்ச் சேவகரின் கூட்டம், இயேசுவை கெத்செமனேவில் கைது செய்ய வந்தபோது, எளிதில் உணர்ச்சிவசப்படும் சுபாவமுள்ள பேதுரு தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனான மல்குஸின் வலது காதை வெட்டினான். இவ்விதமாக தேவனுடைய குமாரனின் சார்பாக போராடுவது ஒரு மெச்சத்தக்க காரியமாக இருக்கவில்லையா? இயேசு அவ்விதமாக நினைக்கவில்லை. இயேசு வேலைக்காரனுடைய காதைக் குணப்படுத்தி தம்முடைய பரம தகப்பனால் தமக்கு உதவி செய்ய பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை அனுப்ப இயலும் என்பதை பேதுருவுக்கு நினைவுபடுத்தினார். அங்கே இயேசு அடிப்படையான ஒரு நியமத்தை உறுதியாக கூறினார்: “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.”—மத்தேயு 26:51-53; லூக்கா 22:36, 38, 49-51; யோவான் 18:10, 11.
10 இயேசு யெகோவாவிடம் செய்த ஊக்கமான ஜெபத்தில் தம்முடைய சீஷர்களைக் குறித்து பின்வருமாறு சொன்னதை அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நினைவுகூர்ந்திருப்பார்கள். “நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல.” பொந்தியு பிலாத்துவுக்கு அவர் கொடுத்த விளக்கமான பதிலை அவர்கள் நினைவுகூருவார்கள்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.” (யோவான் 17:14, 16; 18:36) அந்தக் காலத்தில் யூத பிரிவுகள், வாய்வார்த்தையின் மூலமாயும், இரத்தஞ் சிந்துவதன் மூலமாயும் ஒருவரோடொருவர் யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இயேசுவின் சீஷர்களோ அந்தப் புரட்சிகரமான போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. சுமார் 30 வருடங்களாக அவர்கள் எருசலேமில் காத்திருந்தார்கள். பின்பு அவர்கள் “மலைகளுக்கு ஓடிப்”போவதன் மூலம் இயேசுவின் தீர்க்கதரிசன அடையாளத்துக்கு கீழ்ப்படிந்தார்கள். அவர்களுடைய நடுநிலை வகிப்பும் அவர்களுடைய ஓட்டமும் அவர்கள் இரட்சிக்கப்படுவதில் விளைவடைந்தது.—மத்தேயு 24:15, 16.
11 ‘நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியுவையும் சீப்புருவில் அதிபதியாக இருந்த செர்கியுபவுலையும் பற்றி என்ன?’ என்பதாக சிலர் கேட்கலாம். ‘இந்த மனிதர்கள் இராணுவத்தில் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கவில்லையா?’ ஆம், கிறிஸ்தவ செய்தியை ஏற்றுக்கொண்ட சமயத்தில் அவர்கள் அவ்விதமாகவே இருந்தார்கள். மதம் மாறிய பின்பு கொர்நேலியுவும் மற்றவர்களும் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி வேதவசனங்கள் நமக்குச் சொல்வதில்லை. செர்கியுபவுல் “விவேகமுள்ள மனுஷனாகவும்” “யெகோவாவுடைய உபதேசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டவனாகவும்” இருந்தபடியால், விரைவில், புதிதாக அறியவந்த விசுவாசத்தின் வெளிச்சத்தில் அவன் தன்னுடைய உலகப் பிரகாரமான பதவியை ஆராய்ந்து சரியான தீர்மானத்தைச் செய்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. கொர்நெலியுவுங்கூட அதே விதமாகச் செய்திருப்பான். (அப்போஸ்தலர் 10:1, 2, 44-48; 13:7, 12) அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்து சீஷர்கள் அவர்களுக்குச் சொன்னதாக எந்தப் பதிவும் இல்லை. கடவுளுடைய வார்த்தையைச் சொந்தமாக படித்ததன் மூலம் அவர்கள் அதை தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.—ஏசாயா 2:2-4; மீகா 4:3.
12 அதேவிதமாகவே கிறிஸ்தவ நடுநிலை வகிப்பு பிரச்னையின் சம்பந்தமாக, என்ன நிலைநிற்கையை எடுக்கவேண்டும் என்பது குறித்து கிறிஸ்தவர்கள் இன்று மற்றவர்களுக்கு தனிப்பட்ட விதமாக அறிவுரைகளைச் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. ஒவ்வொருவரும் பைபிள் நியமங்களை புரிந்து கொண்டிருப்பதன் அடிப்படையில் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு சொந்த தீர்மானங்களைச் செய்யவேண்டும்.—கலாத்தியர் 6:4, 5.
நவீன காலங்களில்
13 1914-ல் தானே முழு வலிமை ஈடுபாட்டு போர் உலக காட்சியினுள் முதன்முதலாக நுழைந்தது. தேசங்களின் ஆள்பலம் உட்பட, அவர்களுடைய மொத்த வள ஆதாரமும் போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் பைபிள் மாணாக்கர்கள் என்பதாக அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் இரத்தப்ழியைத் தவிர்க்க பாராட்டத்தக்க வகையில் முயற்சித்தார்கள். இயேசு சொல்லியிருந்த விதமாகவே அவர்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள்.—யோவான் 15:17-20.
14 மறுபடியுமாக, 1939-ல் உலகப் போர் ஆரம்பமானபோது யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு தெளிவான வழிநடத்துதல் வழங்கினார். யுத்தம் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளேயே 1939, நவம்பர் 1, காவற்கோபுரத்தில், “நடுநிலைமை” என்ற தலைப்பைக் கொண்ட பைபிள் படிப்புக் கட்டுரையின் வடிவில் இந்த அறிவுரைகள் வந்தன. அதன் கடைசி வாக்கியம் இவ்விதமாக இருந்தது: “போர் செய்யும் தேசங்களின் சம்பந்தமாக, கர்த்தருடைய பக்கத்திலுள்ள அனைவரும் நடுநிலையை வகிப்பார்கள். அவர்கள் முழுமையாகவும் மொத்தமாகவும் பெரிய அரசருக்காகவும் அவருடைய ராஜாவுக்காகவும் இருப்பார்கள்.”
15 இதன் விளைவு என்னவாக இருந்தது? உலகளாவிய ஒரு சகோதரத்துவமாக, யெகோவாவின் சாட்சிகள் மற்ற தேசங்களிலுள்ள தங்களுடைய சகோதரர்களுடையது உட்பட, அப்பாவி மக்களின் இரத்தத்தை சிந்தாதபடிக்கு உறுதியாக அதிலிருந்து விலகியிருந்தார்கள். கத்தோலிக்கர்களும், புராட்டஸ்டாண்டினரும், புத்த மதத்தினரும் மற்றவர்களும் ஒருவரையொருவர் கொலை செய்துகொண்டிருந்தபோது இயேசுவின் மெய்யான சீஷர்கள் அவருடைய புதிய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து கொண்டிருந்தார்கள்: “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்.”—யோவர் 13:34.
16 அந்தக் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து இராயனுக்குரியதை இராயனுக்குச் செலுத்தி வந்தார்கள். நேர்மையான குடிமக்களாக அவர்கள் தேசத்தின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்திருந்தார்கள். (மத்தேயு 22:17-21 ரோமர் 13:1-7) ஆனால் அதிக முக்கியமாக அவர்களுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கை மற்றும் கிறிஸ்தவ வணக்கம் உட்பட தேவனுக்குரியதை தேவனுக்குச் செலுத்தினார்கள். ஆகவே இராயன் தேவனுக்குரிய காரியங்களை வற்புறுத்தியபோது அவர்கள் அப்போஸ்தலர் 4:19 மற்றும் 5:29-ல் சொல்லப்பட்ட நியமங்களுக்கு இசைவாக செயல்பட்டார்கள். பிரச்னை இரத்தஞ்சிந்துவதாகவோ, படைத்துறை சாராத இராணுவ வேலையாகவோ, மாற்றுவகைப் பணியாகவோ அல்லது தேசீய கொடி போன்ற ஒருசொரூபத்தை வணங்குவதாகவோ, எதுவாக இருந்தாலுஞ்சரி, இடைநிலையாக இல்லாத ஒரு நிலைநிற்கையையே உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் எடுத்தார்கள். இந்த நிலைநிற்கைக்காக சிலர் கொல்லப்பட்டார்கள்.—மத்தேயு 24:9; வெளிப்படுத்தின விசேஷம் 2:10.
அவர்கள் ஒத்திணங்கிப் போகவில்லை.
17 சமீபத்தில் கடவுட்களையும் மனிதர்களையும்பற்றி என்ற தலைப்புள்ள புத்தகம், ஹிட்லரின் மூன்றாவது நாஸியர் ஆட்சியின்போது, மதத்தொகுதிகளில் “மிகுதியாக கடுமையான எதிர்ப்பை” அனுபவித்தது யெகோவாவின் சாட்சிகளே என்பதாக குறிப்பிட்டிருந்தது. யெகோவாவின் சாட்சிகள் ஒத்திணங்கிப் போகவில்லை. ஜெர்மனியிலிருந்த மற்ற மதத்தினர் அவர்களுடைய இராணுவ தனிமத குருக்களின் பின்சென்று இவ்விதமாக ஜெர்மன் அரசுக்கு தங்களுடைய மத ஆராதனையைச் செய்து, அரசியல் மூர்க்க மிருகத்தினுடைய “முத்திரையை” “தங்கள் வலது கைகளிலாவது நெற்றிகளிலாவது” பெற்றுக்கொண்டார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 13:16) இவர்கள் ஜெர்மானிய அரசியல் அமைப்பை சுறுசுறுப்பாக ஆதரித்து ஹிட்லரை வணங்கி வரவேற்று சுவஸ்திகை கொடியை வணங்குவதன் மூலம் தங்களுடைய நிலைநிற்கை தெளிவாக காணப்படும்படி செய்தார்கள்.
18 அங்கே மெய் கிறிஸ்தவர்கள் என்ன நிலைநிற்கையை எடுத்தார்கள்? மேல் சொல்லப்பட்ட புத்தகம் இவ்விதமாகச் சொல்லுகிறது: “யெகோவாவின் சாட்சிகள் மாத்திரமே ஆட்சி முறைக்குப் பணிய மறுத்தார்கள், அவர்கள் முழு மூச்சுடன் எதிர்த்துப் போராடினார்கள். அதன் விளைவாக அவர்களில் பாதிபேர் சிறையில் வைக்கப்பட்டார்கள். கால்வாசிப் பேர் கொலை செய்யப்பட்டார்கள். . . . [மற்ற மதங்களிலிருந்து] வேறுபட்டவர்களாய் அவர்கள் இந்த உலகின் அங்கீகாரத்தை அல்லது வெகுமதியை அடைய நாடாமலும் அதன் அங்கத்தினர்களாக தங்களை கருதாதவர்களாகவும் இருக்கும் அர்த்தத்தில் அவர்கள் உலகப்பிரகாரமான ஆட்களைப் போல் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மற்றொரு உலகிற்குரியவர்களாக—கடவுளுடைய உலகிற்குரியவர்களாக ஏற்கெனவே இருப்பதன் காரணமாக, அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகிக்கிறார்கள். . . . அவர்கள் ஒத்திணங்கிப்போக நாடவோ அல்லது முன்வருவதோ இல்லை . . . இராணுவத்தில் பணிபுரிவது, வாக்களிப்பது அல்லது ஹிட்லரை வணங்குவது கடவுளுடைய தகுதிகளுக்கு மேம்பட்டதாக இந்த உலகின் தகுதிகளை ஏற்றுக்கொள்வதாக இருந்திருக்கும். யெகோவாவின் சாட்சிகள் சமாதானத்தை நாடுவதும், அஹிம்சையை கடைபிடிப்பதும் கான்சன்ட்ரேஷன் முகாம்களிலுங்கூட கவனிக்கப்பட்டது. எவ்விதமாக? “உயிரைப் போக்க வல்ல சவரக்கத்தியை பயன்படுத்தி வாயிற்காவலர்களுக்கு சவரம் செய்ய யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். ஏனென்றால் கொலை செய்ய மாட்டார்கள் என்பதாக அவர்களைக் குறித்து மட்டுமே நம்பிக்கையாக இருக்க முடியும்.”
19 இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், கிறிஸ்தவ நடுநிலை வகிப்புக்கு யெகோவாவின் சாட்சிகள் குறிப்பிடத்தக்க முன்மாதிரிகளானார்கள். ஒரே விதமாக பூமி முழுவதிலும் “உலகத்தின் பாகமாக” இல்லாதிருப்பதில் இயேசுவின் முன்மாதிரியை அவர்கள் தைரியமாகப் பின்பற்றினார்கள். இயேசு செய்திருந்த விதமாகவே அவர்கள் இரத்தப் பழி குற்றமுள்ள இந்த உலகை அவர்கள் ஜெயித்தார்கள்.—யோவான் 17:16; 16:33; 1 யோவான் 5:4.
இரத்தப்பழியிலிருந்து அடைக்கலத்தை கண்டடைதல்
20 சிலுவைப் போர்களிலும், “பரிசுத்த” போர்களிலும் விசாரணைகளின் சமயத்திலும் குற்றமில்லாத இரத்தத்தை சிந்துவதன் மூலம் மத அமைப்புகள் சரித்திரத்தின் பக்கங்களை சிவப்பாக்கிவிட்டிருக்கின்றன. இரத்த தாகமுள்ள சர்வாதிகாரிகளோடு அவர்கள் உடன்படிக்கை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் சர்வாதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளை சிறைச்சாலைகளுக்குள்ளும், கான்சன்ட்ரேஷன் முகாம்களுக்குள்ளும் எறிந்தபோது, அவர்கள் அதற்கு ஒப்புதலளித்திருக்கிறார்கள். இந்த இடங்களில் சாட்சிகள் அநேகர் மரித்துப் போனார்கள். சுடுவதன் மூலமும் தூக்கிலிடுவதன் மூலமும் சாட்சிகளுக்கு தண்டனைகளைக் கொடுத்த தலைவர்களை அவர்கள் மனமுவந்து ஆதரித்தார்கள். இந்த மத அமைப்புகள், யெகோவாவின் நீதியான நியாயத்தீர்ப்பை தப்பித்துக்கொள்ள முடியாது. அது தாமதிக்காது. இரத்தக் கறைப்படிந்த மகா பாபிலோனிலிருந்து வெளி வந்து, கடவுளுடைய அமைப்பில் அடைக்கலத்தை நாடுவதற்கு நீதியை நேசிக்கும் எவரும் தாமதிக்கக்கூடாது.—வெளிப்படுத்தின விசேஷம் 18:2, 4, 21, 24.
21 நம்மில் அநேகர் நாம் கடவுளுடைய வார்த்தையை படிப்பதற்கு முன்பாக, மனித இரத்தத்தைச் சிந்தியிருக்கலாம். அல்லது இரத்தப்பழி குற்றமுள்ள மத அல்லது அரசியல் அமைப்புகளில் அங்கத்தினர்களாக இருந்திருக்கலாம். இந்த விஷயத்தில் இஸ்ரவேலில் கைப்பிசகாய் கொலை செய்த மனுஷனுக்கு நாம் ஒப்பிடப்படலாம். குறிக்கப்பட்ட ஆறு பட்டணங்களில் ஒன்றுக்குள் அவன் அடைக்கலமாக ஓடிப்போய், கடைசியாக இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன் மரிக்கும் சமயத்தில் விடுதலை பெறக்கூடும். இன்று, அது கடவுளுடைய பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்துவின் சுறுசுறுப்பான ஊழியத்தின் நன்மைகளை ஏற்றுக்கொள்வதையும் அதில் நிலைத்திருப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. கடவுளுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட ஜனங்களின் கூட்டுறவில் அங்கு நிலைத்திருப்பதன் மூலம், நவீன நாளில் “பழி வாங்குகிறவராக” இருக்கும் கிறிஸ்து இயேசு இரத்தப்பழியுள்ளவர்களின்மீது கடவுளின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது நாம் தப்பிப் பிழைக்கக்கூடும். கடவுளுடைய அமைப்புக்குள் இப்பொழுது ஓடிவரும் “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” கிறிஸ்து தம்முடைய மீட்பின் வேலையை முடிப்பதன் சம்பந்தமாக “பிரதான ஆசாரியனாக” அவருடைய ஸ்தானத்தில் அவர் ‘மரிக்கும்’ வரையாக அந்த அடைக்கலத்தில் தங்கியிருக்க வேண்டும்.—எண்ணாகமம் 35:6-8, 15, 22-25; 1 கொரிந்தியர் 15:22-26; வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 14.
22 அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள நியு யார்க்கின் ஐ.நா. ப்ளாசாவின் மதிலில் ஏசாயா 2:4-ன் அடிப்படையிலுள்ள பின்வரும் வார்த்தைகளை நீங்கள் வாசிக்கக்கூடும்: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” ஆனால் இன்று அந்த வார்த்தைகளுக்கு இசைவாக செயல்படுவது யார்? ஐக்கிய நாடுகள் என்றழைக்கப்படுகிற அமைப்பின் ஒரு உறுப்பினரும் இல்லை. இரத்தக் கறைப்படிந்த உலகில் எவ்விதமாக கிறிஸ்தவ நடுநிலைமை காத்துக்கொள்ளப்பட முடியும் என்பதை தெளிவாக காண்பித்திருக்கும் முப்பது லட்சத்துக்கும் அதிகமான சாட்சிகளுள்ள சமாதானத்தை நாடும் உலகளாவிய “தேசமே” இதைச் செய்திருக்கிறது. (w86 9/1)
விமர்சன கேள்விகள்
◻ நாம் எவ்விதமாக கடவுளோடு சமாதானத்தை நாடலாம்?
◻ பொறுப்புணர்ச்சியின்றி சிந்தப்படும் இரத்தத்தை யெகோவா எவ்விதமாக கருதுகிறார்?
◻ கிறிஸ்தவ நடுநிலைமை என்பதன் பொருள் என்ன?
◻ உத்தமத்தின் என்ன சிறப்பான முன்மாதிரிகள் இருக்கின்றன?
◻ இரட்சிப்புக்காக நாம் எவ்விதமாக அடைக்கலத்தை கண்டடைய முடியும்?
[கேள்விகள்]
1. 1914 முதற்கொண்டு உலகில் நடந்துவரும் என்ன காரியங்களைக் குறித்து நாம் கவலைகொள்கிறோம்?
2. இந்தக் காலங்களைக் குறித்து இயேசு என்ன தீர்க்கதரிசனம் சொன்னார்?
3. (எ) தேசங்கள் எவ்விதத்தில் “இந்த உலகின் தேவனுடைய அக்கறைகளை நிறைவேற்றி வருகின்றன? (பி) யெகோவா எப்படி இந்தப் பிரச்னையைத் தீர்ப்பார்?
4. கடவுளோடு நாம் எவ்வாறு சமாதானத்தை நாடிட வேண்டும்,
5. பொறுப்புணர்ச்சியின்றி இரத்தம் சிந்துதலுக்கு யெகோவா பழிவாங்குகிறார் என்பதைக் காண்பிக்கும் உதாரணங்கள் யாவை?
6. இரத்தத்தின்பேரில் கடவுளுடைய சட்டம் என்ன? இதற்குக் கட்டுப்பட்டிருப்பது யார்?
7. யுத்தத்திற்கு செல்லும்படியாக யெகோவா இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளை ஏன் சரியானது? இன்று கிறிஸ்தவர்கள் ஈடுபடும் யுத்தம் என்ன?
8. குற்றமற்ற இரத்தம் சிந்துதலைக் கடவுள் அங்கீகரிப்பதில்லை என்பதை எது காட்டுகிறது?
9. இரத்தம் சிந்துதல் குறித்து கிறிஸ்தவர்களுக்கு இயேசு வைத்த தராதரம் என்ன?
10. (எ) யோவான் 17:14, 16 மற்றும் 18:36-ல் என்ன முக்கியமான நியமம் உறுதிசெய்யப்படுகிறது? (பி) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எடுத்த எந்த நடவடிக்கை அவர்களுக்கு மீட்பை அளித்தது?
11, 12. (எ) கொர்நேலியுவும் செர்கியுபவுலும் விசுவாசிகளானபோது என்ன தீர்மானம் எடுக்கவேண்டியதாயிருந்தது? (பி) சரியான தீர்மானத்தைச் செய்ய அவர்கள் எங்கிருந்து உதவிபெறுவர்? (சி) இது இன்று நமக்கு எதைக் குறிக்கிறது?
13. முதல் உலக மகா யுத்தத்தின்போது இரத்தப்பழிக்கு நீங்கியிருக்க பைபிள் மாணாக்கர் என்ன செய்தனர்?
14, 15. (எ) இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது யெகோவா எப்படி வழிநடத்துதலை வழங்கினார்? (பி) அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ன தெளிவான நிலைநிற்கையை எடுத்தனர்? (சி) உலகப் பிரகாரமான மதங்களோடு ஒப்பிடுகையில் இது எப்படி முரண்பட்டிருந்தது?
16. (எ) யெகோவாவின் சாட்சிகள் எப்படி தங்களை நேர்மையான குடிமக்களாகக் காண்பித்தனர்? (பி) தேவனுடையதை தேவனுக்குச் செலுத்துவதில் சாட்சிகள் எப்படி உறுதியாயிருந்தனர்? சில சமயங்களில் என்ன விளைவுகளுடன்?
17. (எ) ஒரு புத்தகப் பதிவின்படி, யெகோவாவின் சாட்சிகள் நாஸியரால் எவ்விதமாகத் துன்புறுத்தப்பட்டனர்? (பி) அந்தச் சவாலை எதிர்ப்படும் விஷயத்தில் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் யெகோவாவின் சாட்சிகள் எப்படி வித்தியாசப்பட்டவர்களாயிருந்தனர்?
18. (எ) யெகோவாவின் சாட்சிகள் “அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகித்தார்கள்” என்று எந்தப் பதிவு காண்பிக்கிறது? (பி) இந்தச் சரித்திரப் பதிவு நம்மைத் தனிப்பட்ட விதத்தில் எவ்விதமாக பாதிக்க வேண்டும்?
19. யெகோவாவின் சாட்சிகள் எப்படி இயேசுவின் தைரியமான முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கின்றனர்? என்ன பலனுடன்?
20. (எ) பொய் மதத்திலிருந்து வெளியேறுவது ஏன் அவசரத்தன்மை வாய்ந்தது? (பி) உண்மையான அடைக்கலத்தை எங்கு மட்டுமே காணமுடியும்?
21. கடவுள் செய்திருந்த அடைக்கலப்பட்டண ஏற்பாடு எதற்குப் படமாக இருக்கிறது.?
22. ஏசாயா 2:4-ஐக் குறித்ததில், ஐ.நா.-வின் உறுப்பு தேசங்கள் எவ்விதத்தில் கடவுளுடைய பரிசுத்த தேசத்திற்கு வித்தியாசப்பட்டிருக்கின்றனர்?
[பக்கம் 14-ன் பெட்டி]
விசுவாசம், தைரியம் மற்றும் உத்தமத்தின் பதிவு
புதிய மத இயக்கங்கள்: சமுதாயத்தைப் புரிந்துகொள்வதற்கு ஒரு காட்சி என்ற புத்தகம், நாஸி துன்புறுத்தலை எதிர்படுகையில், யெகோவாவின் சாட்சிகளுடைய உத்தமத்தைக் குறித்து கூடுதலாக பின்வரும் குறிப்புகளைத் தருகிறது:
“ஒத்திணங்கிப் போக மறுப்பதில், யெகோவாவின் சாட்சிகள் புதிய சமுதாயத்தின் சர்வாதிபத்திய ஆட்சிக்கு சவாலாக இருந்தார்கள். இந்தச் சவாலும், அது தொடர்ந்து உறுதியாக நிலைத்திருப்பதும் புதிய ஒழுங்கின் சிற்பிகளின் மன அமைதியை வெளிப்படையாக குலைத்தது. சாட்சிகள் அதிகதிகமாக துன்புறுத்தப்பட்டபோது அவர்கள் அதிகதிகமாக உண்மையாக கொள்கையில் உறுதியாக நிலைத்திருந்து சவாலாக இருந்தார்கள். காலத்தால் மதிக்கப்பட்ட துன்புறுத்தல் முறைகள், சித்திரவதை சிறைவாசம் மற்றும் ஏளனம் ஆகியவற்றின் விளைவாக சாட்சிகள் எவரும் நாஸிக்களின் பக்கமாக மனம் மாறவில்லை. உண்மையில் அதை பின்நின்று தூண்டிவிட்டவர்கள் மீதே அது வந்து தாக்கியது. முன் அறிந்துகொள்ள முடியாத இந்த பிரதிபலிப்பில் நாஸிக்கள் கலவரமடைந்தார்கள்.
வித்தியாசமான பற்றுறுதிகளில் எதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்த இந்த இருசாராரிடையே போராட்டம் விறுவிறுப்பாக இருந்தது. ஏனென்றால் சரீர பலமுள்ளவர்களாக இருந்த நாஸிக்கள் அநேக விதங்களில், முன்னிலும் குறைவாக நிச்சயமுள்ளவர்களாக, தங்களுடைய சொந்த நம்பிக்கையில் முன்னிலும் குறைவான ஆழமே வேர் கொண்டவர்களாக, அவர்களுடைய 1,000 வருட நாஸியர் ஆட்சி நீடித்திருப்பதைக் குறித்து முன்னிலும் குறைவாகவே உறுதியுள்ளவர்களாக இருந்தார்கள். சாட்சிகள் அவர்களுடைய சொந்த தோற்றத்தைக் குறித்து சந்தேகத்தில் இருக்கவில்லை. ஏனென்றால் ஆபேலின் காலம் முதற்கொண்ட அவர்களுடைய விசுவாகம் தெளிவாக இருக்கிறது. நாஸிக்கள் எதிர்ப்பை அடக்கி, கிறிஸ்தவ மதப் பிரிவுகளின் மொழி நடையையும் இலக்கிய அணியையும் பயன்படுத்தி தங்களுடைய ஆதரவாளர்களை நம்ப வைக்க வேண்டிய நிலையிலிருந்தபோது சாட்சிகள் மரணம் வரையாகவுங்கூட தங்களுடைய உறுப்பினர்கள் முழுமையாகவும் விட்டுக்கொடாமலும் பற்று மாறாமலும் இருப்பார்கள் என்பதைக் குறித்து நிச்சயமாயிருந்தார்கள்.”
கிறிஸ்தவ பற்றுமாறாமையினால் இந்த வெற்றி முற்றுப் பெறும்போது அது நிச்சயமாகவே மகிழ்ச்சியான ஒரு நாளாக இருக்கும். (ரோமர் 8:35-39) பின்னர், மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவாகிய “சமாதானப் பிரபு”வின் ராஜ்ய ஆட்சியின் கீழ் “அவருடைய கார்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவிராது.”—ஏசாயா 9:6, 7.
[பக்கம் 15-ன் பெட்டி]
உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் இளைஞர்கள்
ஐரோப்பிய தேசமொன்றில், கருத்தறிவிக்கும் ஒரு நபர் சமீபத்தில் ஒரு குறிப்பேட்டிலிருந்து பின்வருவதை மேற்கோள் காட்டி அதை வெளியிட்டிருக்கிறார். இளமைப் பருவத்திலுள்ள சாட்சிகள் எவ்விதமாக தைரியமாக “உலகத்தின் பாகமாக இல்லா”மலிருக்கும் பிரச்னையை எதிர்ப்பட்டிருக்கிறார்கள் என்பதை இது காண்பிக்கிறது.—யோவான் 17:14.
1945 மார்ச் 12: போர்கால சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இரண்டு இளம் யெகோவாவின் சாட்சிகள் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்கள். குற்றச்சாட்டு: (அவர்களின் மத கருத்துப் பிரகாரம்) இராணுவ சேவை மறுப்பு. இன்னும் 20 வயதை அடையாத இளைஞன் சீர்திருத்தச் சிறையில் 15 மாதங்கள் தீர்ப்பளிக்கப்பட்டான். ஆனால் மூத்தவனுக்கோ மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களை பயங்கொள்ளச் செய்வதற்காக, யாவரறிய தூக்கிலிடப்படுவதற்கு அவன் உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டான். அவன் அங்கு 14-வது பலியாளாக இருக்கிறான். அவன் சாந்தியடையட்டும். இது என்னை மிகவும் ஆழமாக பாதித்துவிட்டிருக்கிறது. யெகோவா கூட்டத்தாருக்கு எதிராக நீங்கள் இவ்விதமாக நடந்து கொள்ளக்கூடாது, அவன் ஒரு எச்சரிப்பான மாதிரியாக அல்ல. ஆனால் ஒரு உயிர்த்தியாகியாகவே இருந்தான். அவன் ஆரோக்கியமுள்ள ஒரு பையன். அவனுக்காக நான் விசனப்படுகிறேன்.
‘மதிய வேளையில் இந்த இளைஞன் தூக்கிலிடப்பட்ட விவரங்களை அறிந்து கொண்டோம். சந்தை வெளியில் அநேக ஆட்களுக்கு முன்பாக இது நடந்தது. இராணுவ அரண் தளவரிசையில் நின்றுகொண்டிருந்த போர் வீரர்களில் ஒருவன் அவனை தூக்கிலிடுவதற்கு முன்பாக தன்னைச் சுட்டுக் கொண்டான். இவன் தூக்கிலிடுபவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதாக படைத்தலைவன் விரும்பியதே இதற்குக் காரணமாக இருந்தது. ஆனால் அவ்விதமாகச் செய்ய அவன் விரும்பவில்லை. இதற்குப் பதிலாக தன்னுடைய சொந்த வாழ்க்கையையே அவன் முடித்துக் கொண்டான் இளைஞன் தானேயும் தைரியமாக மரித்தான், அவன் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
யெகோவாவின் புதிய ஒழுங்குமுறையில் ஒரு இடத்தை பறிகொடுப்பதற்கு பதிலாக மரண வேதனையை அனுபவிக்க தெரிந்துகொண்டதற்காக, உயிர்த்தெழுதலில் இதுபோன்ற இளைஞர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள்!—ஓசியா 13:14-ஐ ஒப்பிடவும்.