மதத்தின் கடந்தகால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 2: பொ.ச.மு. 2369 -1943 ஒரு வேட்டைக்காரனும் ஒரு கோபுரமும் நீங்களும்!
“மதத்தில் நூற்றுக்கணக்கான மதவேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒரே ஒரு மதம் மாத்திரமே இருக்கிறது.” ஜார்ஜ் பெர்னார்ட் ஷா ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர் (1856 -1950)
மனித சிருஷ்டிப்புன்போதும், நோவாவின் நாளின் ஜலப்பிரளயத்துக்குப் பின்பும் ஒரே ஒரு மதம் மாத்திரமே இருந்தது என்பது உண்மையாகும். ‘அப்படியென்றால் ஏன் இன்று நூற்றுக்கணக்கான—இன்னும் அதிகமான எண்ணிக்கையிலும் மதவேறுபாடுகள் இருக்கின்றன?’ என்பதாக நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம்.
இதைக் கண்டுபிடிக்க நோவாவின் ஒரு கொள்ளுபேரனாகிய நிம்ரோதுவுக்கு நாம் நம்முடைய கவனத்தைத் திருப்புகிறோம். அவனைக் குறித்து பைபிள் சொல்கிறது: “இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். இவன் கர்த்தருக்கு (யெகோவாவுக்கு, NW) முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான் . . . சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தனங்கள். அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப் போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும் காலாகையும் கட்டினான்.”—ஆதியாகமம் 10:8-11.
நிம்ரோது “பூமியிலே தன்னை பராக்கிரமசாலியாக்கிக் கொள்வதில் துவக்கமாக” இருந்தபடியால் அவன் புதிதான ஏதோ ஒன்றை ஆரம்பித்து வைத்தான் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் என்ன? “அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தனங்கள்” என்ற வார்த்தைகள் ஒரு துப்பை நமக்குக் கொடுக்கின்றன. நிம்ரோது ஒரு ராஜ்யத்தையுடையவனாக இருந்தான் என்றால் அவன் ஒரு ராஜாவாக, ஓர் அரசனாக இருந்திருக்க வேண்டும். ஆகவே டாக்டர் ஆகஸ்ட் நோபல் எழுதிய ஜெர்மன் பைபிள் விளக்கவுரை அவனை சரியாகவே, “ஜலப்பிரளயத்துக்கு பின்னான காலத்திய முதல் அரசன்” என்பதாக அழைத்து, அவனைப்போல் வேறு ஒருவன் இதற்கு முன்பாக வாழ்ந்ததில்லை என்பதாக விளக்குகிறது. ஆதலால் தி பைபிள் இன் லிவ்விங் இங்கிலிஷ்-ல் ஆதியாகமம் 10:8 வாசிப்பதாவது: “அவனே பூமியில் ஆளுநராவதற்கு முதலாமவன்.”
மனிதர்கள் தங்களையே ஆண்டுக்கொள்ள வேண்டும் என்பதாக ஒருபோதும் நோக்கங்கொண்டிராத சிருஷ்டிகருக்கு எதிராக நிம்ரோது தன்னை நிறுத்திக்கொண்டான். அவன், “அசூர் புறப்பட்டுப் போனபோது” ஒருவேளை படைபலத்தோடு தன் ஆட்சி எல்லையை விரிவாக்கிக் கொண்டான். அப்படியானால் இது அவனை மிருகங்களை மாத்திரமல்ல, மனிதர்களையும் “வேட்டையாடும் பலத்த வேட்டைக்கார”னாக்கியது.
உண்மையில் நிம்ரோது இருந்தானா, உண்மையில் ஒரு கோபுரமும் இருந்ததா?
“இலக்கிய மேதைகள், நிம்ரோதை, பூர்வ ராஜாக்கள், வீரர்கள் அல்லது கடவுட்களோடு அடையாளங் கண்டுணர முற்பட்டு அதில் தோல்வியடைந்திருக்கிறார்கள். இவர்களில் அசீரிய பாபிலோனிய கடவுள், மெரொதாக் (மார்துக்) வேட்டைக்காரனாகப் பெயர்பெற்ற பாபிலோனிய வீரனான கில்காமெஷ் மற்றும் கிரேக்கப் புராணக் கதைகளில் வரும் வேட்டைக்காரனாகிய ஓரியன் ஆகியோர் அடங்குவர்,” என்பதாக கோலியரின் என்சைக்ளோப்பீடியா சொல்கிறது. ஆகவே, உண்மையில் “அவனைப் பற்றி பைபிள் பதிவு காண்பிப்பதைக் காட்டிலும் வேறு எதையும் அதிகமாக நாம் அறியாதவர்களாக இருக்கிறோம்” என்பதாக ஒரு ஜெர்மன் குறிப்புரை ஏடு குறிப்பிடுகிறது.
இருந்தபோதிலும் நிம்ரோது நிச்சயமாகவே வாழ்ந்தான். அராபிக் பாரம்பரியம் அவனைப் பற்றி குறிப்பிடுகிறது. அவனுடைய பெயர் நிம்ரது அல்லது நிம்ரொது என்பதாக அண்மை கிழக்கு நாடுகளில் இடங்களின் பெயர்களாக வருகின்றன. சுமேரிய அக்காடியன் போதனா செய்யுள்கள் அவனுடைய வீரார்ந்தச் செயல்களைப் பற்றி தெரிவிக்கின்றன. யூத சரித்திராசிரியன் ஜோசிபஸ் அவனைப் பெயரால் குறிப்பிடுகிறான்.
நிம்ரோதுவின் அரசியல் அமைப்பு, மனிதவர்க்கத்தின் மீது சட்டப்படி உரிமையுள்ள கடவுளுடைய ஆட்சியை வேரோடு அகற்றும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இவ்விதமாக இது மதசம்பந்தமான உட்பொருளை எடுத்துக்கொண்டதானது ஜனங்கள் கடவுளுக்கு அல்ல, “[அவர்களுக்கு] பேர் உண்டாக” “வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தைக்” கட்டத் தொடங்கினார்கள்.—ஆதியாகமம் 11:4.
புதைப்பொருள் ஆய்வாளர்கள், நிம்ரோதுவினுடைய பாபேல் கோபுரம் என்பதாக பூர்வ இடிபாடுகளைத் திட்டவட்டமாக அடையாளங் கண்டுக்கொள்ள முடியாதவர்களாக இருந்தபோதிலும், மெசொப்பொத்தாமியாவில் இரண்டு டஜன்களுக்கும் அதிகமாக இதேப் போன்ற கட்டிட அமைப்புகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். உண்மையில் இந்த மாதிரியான கோபுரம் அங்கு ஆலய சிற்பக்கலையின் தனித்தன்மையான அம்சமாக இருந்தது. விசுவாசத்தின் பாதைகள் புத்தகம் பாபிலோனிய ஆலயங்கள் “மேலே கோயிலைக் கொண்டிருந்த கூர்கோபுர கட்டிட அமைப்பாக, படிக்கட்டுகள் போன்ற மாடிகளைக் கொண்ட ஒரு கூம்புவடிவ அமைப்பாக இருந்தன” என்று சொல்கிறது. அது மேலுமாக “எகிப்திலுள்ள கூர்கோபுரங்கள் முதல், இந்தியாவிலுள்ள தூபிகள் அல்லது புத்த உலகிலுள்ள கோபுரங்கள் வரையாக உள்ள மதசம்பந்தமான பெரிய கட்டிடங்களைப் போலவே, கூர்கோபுரங்கள் . . . கூம்புவடிவான சர்ச்சின் நெடுங்காலத்திய முந்திய முன்னோடியாக ஒருவேளை இருந்திருக்கக்கூடும்” என்று சொல்கிறது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புதைப்பொருள் ஆய்வாளர் வால்டர் ஆன்டிரே, 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த இடத்தில், பல பகுதிகளிலும் விரிவாக ஆய்வுக்காக தோண்டினார். கூர் கோபுரத்தின் உச்சியிலிருந்த கோயில், “வானங்களின் கடவுள் தம்முடைய பூமிக்குரிய வாசஸ்தலத்தை அடைவதற்காக இறங்கி வந்த கூர்கோபுர படிகட்டுகளுக்கு வாயிலாக” கருதப்பட்டதாக அவர் எழுதுகிறார். பாபேலின் குடிமக்கள், தங்கள் நகரத்தின் பெயர் “கடவுளின் வாயில்” என்று அர்த்தப்படுத்தியதாக உரிமைப் பாராட்டியது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. பேப் (வாயில்) இலு (கடவுள்) என்பதிலிருந்து இது பெறப்பட்டது.
ஆனால் நிம்ரோதையும் அவனுடைய கோபுரத்தையும் பற்றிய பைபிள் பதிவை சந்தேகியாமலிருப்பதற்கு நாம் பார்க்கப்போகிற விதமாகவே கூடுதலானக் காரணங்கள் இருக்கின்றன.
விளைவுகள் உங்களைப் பாதிக்க சென்றடைகின்றன
மதத்தை அரசியலோடு கலப்பதில் முதலாவதாக இருந்த நிம்ரோது அதற்குப் பின் ஏற்பட்ட இதுபோன்ற உறவுகளுக்கு மாதிரியை வைத்தான். இதற்கு தெய்வீக அங்கீகாரம் இருக்குமா? “நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது” என்பதாக பின்னால் பைபிள் குறிப்பிடப்பட்ட நியமம் பொருத்தப்பட இருந்தது.—மத்தேயு 7:18.
ஆரம்பத்தில், பூமியின் குடிமக்கள் அனைவரும் ஒரே பாஷையையேப் பேசினார்கள்.a ஆனால் நிம்ரோதும் அவனுடைய ஆட்களும் பாபேலில் இந்தக் கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தபோது, கடவுள் தம்முடைய சினத்தைக் காண்பித்தார். நாம் வாசிக்கிறோம்: “அப்படியே கர்த்தர் [யெகோவா, NW] அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் [யெகோவா, NW] அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் [குழப்புவதற்கு என்று பொருள்கொள்ளும் பேலா-விலிருந்து] என்னப்பட்டது.” (ஆதியாகமம் 11:1, 5, 7-9) என்ன சம்பவித்துவிட்டது என்பதைப் பற்றி திடீரென்று கலந்து பேச இயலாதவர்களானபோது கட்டுகிறவர்கள் எத்தனை ஏமாற்றமடைந்திருக்க வேண்டும்! அது ஏன் சம்பவித்தது என்பது குறித்து ஒத்த கருத்துக்கு வருவது குறித்து கேட்கவே வேண்டியதில்லை! அநேக ஊகக் கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டன என்பதில் சந்தேகமில்லை, பல்வேறு மொழி தொகுதியினரால் பேச்சுத் தொடர்புக் கொள்ள இயலாமல் போனதால், வேற்றுமைகள் அதிகமாயின.
இந்தத் தொகுதிகள் பூமியின் பல்வேறு பாகங்களுக்குள்ளும் சிதறிச் சென்றபோது, அவர்கள் இயற்கையாகவே தங்களோடு தங்களின் மத சம்பந்தமான கோட்பாடுகளையும் எடுத்துச் சென்றனர். காலம் சென்றபோது, அடிப்படையில் ஒரே விதமாக இருந்தபோதிலும், இந்தக் கருத்துகள் உள்ளூர் பாரம்பரியத்தினாலும் நிகழ்ச்சிகளினாலும் உருமாறின. “ஒரே ஒரு மதத்திலிருந்து” விரைவில் “நூற்றுக்கணக்கான மத வேறுபாடுகள்” தோன்றின. தெளிவாகவே, மத-அரசியல் நடவடிக்கையில் இந்த முதல் பரிசோதனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.
இதன் விளைவுகள் பல நூற்றாண்டுகளைத் தழுவி இணைந்து உங்களை வந்தடைந்திருக்கின்றன. வேறொரு விசுவாசத்திலுள்ள எவருடனாவது மதத்தைப் பற்றி கலந்தாராய நீங்கள் எப்போதாவது முயற்சி செய்திருப்பீர்களானால் நீங்கள் போற்றக்கூடிய ஓர் உண்மையாக இது இருக்கும். “கடவுள்,” “பாவம்,” “ஆத்துமா,” “மரணம்” போன்ற மதசம்பந்தமான பொது வார்த்தைகளும்கூட வித்தியாசமான ஆட்களுக்கு வித்தியாசமான காரியங்களை அர்த்தப்படுத்துவதாக உள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன்பாக, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிஞர் ஜான் செல்டன் சொன்ன வார்த்தைகள் பொருத்தமாக உள்ளன: “காரியம் நன்றாக ஆராயப்படுமானால், ஒரே மதத்திலுள்ள மூன்று [நபர்கள்] பேர் எல்லாக் கருத்துக்களிலும் ஒத்துப் போவதைப் பார்ப்பது அரிது.” இது மனிதவர்க்கத்தின் பரம்பரை சொத்தாகும். வெகு காலத்துக்கு முன்பாக, சிருஷ்டிகரின் ஆசீர்வாதம் இல்லாததினால் தன்னுடைய கோபுரத்தைக் கட்ட இயலாதவனாக இருந்த பலத்த வேட்டைக்காரனே இவை அனைத்துக்கும் காரணமாவான்.
பாபேல் காலத்திலிருந்து வரும் நவீன காரியங்கள்
“நமக்குத் தெரிந்த எந்த மதத்திலும் சுமேரிய-அசீரிய பாபிலோனிய மதங்களிலிருந்ததுபோல அத்தனை தெய்வங்கள் இல்லை” என்கிறார் நூலாசிரியை பெட்ரா எஸ்லி. அவள் 500 தெய்வங்களைப் பற்றி பேசி, அதிக விரிவான பட்டியல்களில் 2,500 வரையான பெயர்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார். கடைசியாக, காலப்போக்கில், “பாபிலோனிலிருந்த அதிகாரப் பூர்வமான இறையியல் வல்லுநர்கள் கடவுட்களை மும்மூன்றாகப் பிரித்து ஏறக்குறைய திட்டவட்டமாக தெய்வங்களின் தொகுதிகளை நிர்ணயித்தனர்” என்கிறது கட்டுக்கதைகளின் நியு லாரோஸ் என்சைக்ளோப்பீடியா. பிரதான மும்மை தெய்வங்களில் அனு, என்லில் மற்றும் இயா இடம் பெற்றனர். மற்றொன்று, விண்மீன் தெய்வங்களாகிய சின், ஷாமாஷ் மற்றும் இஷ்டார் ஆகியவர்களாலானது. இஸ்டார் தம்முஸின் மனைவியாகிய தாய்-தெய்வமாகிய அஸ்தராத் என்றும் அறியப்பட்டிருந்தது.
பாபிலோனின் மிக முக்கிய தெய்வமாகிய மார்துக் பின்னால் என்லில் அல்லது பெல் என்பதாக அழைக்கப்பட்டது. இது ஒரு போர் தெய்வமாக இருந்தது. “இந்தத் தெய்வங்களுடைய பாபிலோனிய ஊழியர்களின் முன்னீடுபாடு போரில் அதிகமாகி வந்தது என்ற சரித்திர உண்மையை மத சம்பந்தமாக ஏற்றுக்கொண்ட ஒரு விஷயமாக இது இருந்தது” என்பதாக விசுவாசத்தின் பாதைகள் சொல்லுகிறது. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தீங்கிழைத்த நிம்ரோதைப் போன்ற ஒரு பலத்த வேட்டைக்காரன் நியாயமாகவே போரின் கடவுளையே வணங்குவான். பைபிள் “அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன்” என்பதாகக் குறிப்பிடுகிறவரை வணங்க மாட்டான்.—2 கொரிந்தியர் 13:11.
பாபிலோனிய மற்றும் அசீரிய தெய்வங்கள் வியப்பூட்டும் வகையில் “மனிதத் தன்மையுள்ளதாக” மனிதனைப் போன்ற அதே தேவைகளையும் உணர்ச்சிகளையும் கொண்டிருந்தன. இது தெய்வீக ஆரம்பத்தையுடையதாக கருதப்பட முடியாத ஆலய வேசித்தொழில் போன்ற மதசம்பந்தமான சடங்குகளும் பழக்கவழக்கங்களும் தோன்றுவதற்கு வழிநடத்தியது.
பில்லி சூனியமும் பேயோட்டுதலும் சோதிடமும் பாபிலோனிய மதத்தில் உள்ளடங்கியப் பகுதிகளாக இருந்தன. “சூனிய காரியங்களோடு மேற்கத்திய கருத்து வெறி . . . கல்தேய ஆரம்பத்தைக் கொண்டிருப்பது வெகுவாக சாத்தியமானதாகும்” என்பதாக பெட்ரா எஸ்லி கூறுகிறார். பாபிலோனியர்கள், நட்சத்திரங்களில் எதிர்காலத்தைக் கணிக்க முற்படுகையில் வான சாஸ்திரத்தில் வியக்கத்தக்க வகையில் முன்னேறினார்கள்.
மெசொப்பொத்தாமியாவிலிருந்தவர்களும்கூட மனித ஆத்துமாவின் சாவாமையில் நம்பிக்கை வைத்தனர். மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையில் மரித்தவர்கள் பயன்படுத்துவதற்காக அவர்களோடு பொருட்களை புதைத்து வைப்பதன் மூலம் இதை அவர்கள் காண்பித்தனர்.
இப்பொழுது ஒரு கணம் இன்றுள்ள முக்கிய மதங்களில் சிலவற்றைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். மனித ஆத்துமா அழியாமையுள்ளது என்றும் கடவுள் மூன்று தெய்வங்களில் ஒன்றாக இருக்கும் திருத்துவம் என்றும் கற்பித்து தங்கள் உறுப்பினர்கள் மத்தியில் ஒழுக்கக்கேடான நடத்தையை எதிர்த்து கேட்காமல் அதை அனுமதித்து, அரசியலில் தலையிட்டு அல்லது சமாதானத்தின் கடவுளைவிட போர் கடவுளுக்குத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய அதிக மனமுள்ளவர்களாக இருக்கும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எதையாவது நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் நிம்ரோதுவினுடைய கோபுரத்தின் காலம் முதல் இருந்துவரும் மதசம்பந்தமான நம்பிக்கைகளை இன்னும் பரப்பிக்கொண்டுவரும் பாபேலின் நவீன குமாரத்திப் போன்ற அமைப்புகளை நீங்கள் அடையாளங் கண்டு கொண்டுவிட்டீர்கள். பொருத்தமாகவே பைபிளில், “பாபிலோன்” என்ற பெயர் முழு பொய் மத உலகப் பேரரசையும் குறித்துக் காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.—வெளிப்படுத்துதல் அதிகாரம் 17 மற்றும் 18 பார்க்கவும்.
நிச்சயமாகவே ஜலப்பிரளயத்துக்குப் பின்னான காலங்களில் வாழ்ந்த அனைவருமே பாபிலோனிய மத சம்பந்தமான குழப்பத்துக்குள் விழுந்துவிடவில்லை. உதாரணமாக, நோவாவிலிருந்து பத்து தலைமுறைகள் பின்னால் வந்த ஆபிரகாம் மெய் வணக்கத்தைக் காத்துக்கொண்டான். சேமுடைய இந்தச் சந்ததியாரோடு கடவுள் ஓர் உடன்படிக்கையைச் செய்து, ஒரே மெய் மதத்தின் சம்பந்தமாக பூமியிலுள்ள அனைத்துக் குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்பதாக ஆதியாகமம் 22:15-18-ல் வாக்களித்தார். இந்த உடன்படிக்கை பொ.ச.மு. 1943-ல் அமுலுக்கு வந்தது. “ஒரே ஒரு [மெய்] மதத்துக்கும்” பொய் மத “நூறு வேறுபாடுகளுக்குமிடையே” முரண்பாடுகளின் தொகுப்பு இன்னும் அதிக தீவிரமாக இருந்தது என்பதை இது அர்த்தப்படுத்தியது. இரண்டும் விரைவில் ஒன்றையொன்று குறிப்பிடத்தக்க வகையில் நேருக்கு நேர் எதிர்ப்பட இருக்கிறது. இதைப் பற்றி “எகிப்து—கடவுட்களின் போர்க்களம்” என்ற தலைப்பில் மூன்றாம் பகுதியில் எமது அடுத்த விழித்தெழு! பிரதியில் வாசிக்கவும். (g89 1⁄22)
[அடிக்குறிப்புகள்]
a தி நியு என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வதாவது: “மனிதன் கொண்டிருக்க எதிர்பார்க்கக்கூடிய ஒரே மொழி சார்ந்த புதைப் படிவங்களாகிய, எழுத்துருவிலுள்ள மொழியின் முற்காலத்திய பதிவுகள், சுமார் 4,000 அல்லது 5,000 ஆண்டுகளுக்கும் பின்னால் செல்வதில்லை.” இந்த கால அளவு, பைபிள் காலக் கணக்கு ஒத்துக்கொள்வதோடு நேர்த்தியாகப் பொருந்துகிறது.
[பக்கம் 19-ன் பெட்டி]
பைபிள் பதிவை பிரதிபலிக்கும் புராணக் கதைகள்
ஆரம்பத்தில் அனைவருமே “ஒரு பெரிய கிராமத்தில் வாழ்ந்து ஒரே மொழியையே பேசி வந்தார்கள்” என்பதாக வட பர்மாவில் வாழும் மக்கள் நம்புகிறார்கள். பின்னர் அவர்கள் நிலாவை எட்டும் ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள். இது கோபுரத்தில் பல்வேறு மட்டங்களில் வேலை செய்வதை தேவைப்படுத்தியதால், அவர்கள் ஒருவரோடொருவர் தொடர்பை இழந்து போனார்கள். அவர்கள் “படிப்படியாக பல்வேறு நடத்தை முறைகளை, பழக்கவழக்கங்களை, பேச்சு முறைகளைப் பெற்றுக்கொண்டார்கள்.” வட சைபீரியாவைச் சேர்ந்த எனிஸி-ஆஸ்டாக்ஸ், ஒரு ஜலப்பிரளயத்தின்போது மக்கள் மரக்கட்டையின் மீதும் மிதவையின் மீதும் மிதப்பதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் பலமான ஒரு வடக்காற்று, அவர்களை சிதறிப் போகச் செய்ய, “அவர்கள் ஜலப்பிரளயத்துக்குப் பின்பு, பல்வேறு மொழிகளைப் பேசவும் பல்வேறு ஜனமாக அமைத்துக்கொள்ளவும் ஆரம்பித்தார்கள்.”—“அனைத்து இனங்களின் புராணக் கதைகள்.”
அமெரிக்கக் கண்டத்து மெக்ஸிக்கோ பகுதியின் பழங்குடி இனத்தவர், “ஜலப்பிரளயத்துக்குப் பின்பு ஓர் இராட்சதன், மேகங்களை எட்டும் ஒரு செயற்கை மலையைக் கட்ட, இதனால் கோபமடைந்த கடவுட்கள், வானத்திலிருந்து நெருப்பை அல்லது கல்லைக் கீழே எறிந்ததாகக்” கற்பித்தார்கள். தென்கிழக்கு மெக்ஸிக்கோவில் வாழ்ந்துவந்த இந்திய பழங்குடி இனத்தவரின்படி, முதல் மனிதனாகிய வோட்டன், வானங்களுக்குள் சென்றெட்டும் ஒரு மாபெரும் வீட்டைக் கட்ட உதவினான், இதுவே “கடவுள் ஒவ்வொரு கோத்திரத்துக்கும் அதன் குறிப்பிட்ட மொழியைக் கொடுத்த இடமானது.” கலிஃபோர்னியாவிலுள்ள இந்திய பழங்குடியினர் “ஒரு சவ அடக்க நிகழ்ச்சியின்போது [எல்லா மக்களும்] திடீரென்று பல்வேறு மொழிகளைப் பேச ஆரம்பித்தார்கள்” என்று சொல்கிறார்கள்.—“பாபேல் கோபுரத்தின் கட்டிடம்.”
“ஆதியாகமம் 11-ம் அதிகாரம், மற்ற ஜனங்கள் கூறும், இதிலிருந்து வரும் இதோடு சம்பந்தப்பட்ட கதைகளும் உண்மையான சரித்திரத்தின் பழைய நினைவுகளை ஆதாரமாகக் கொண்டிருப்பதற்கு மிக அதிகமான சாத்தியம் இருக்கிறது” என்ற ஆசிரியர் டாக்டர் எர்னஸ்ட் போக்லென்ஸ் கருத்துக்கு இதுபோன்ற புராணக் கதைகள் நம்பிக்கையூட்டும் ஆதாரச் சான்றுகளைக் கொடுக்கின்றன.
[பக்கம் 20-ன் பெட்டி]
சிலுவை பாபிலோனிலிருந்து வந்ததா?
“பாபிலோனியா,” “கல்தேயா,” “மெசொப்பொத்தாமியா” ஆகிய அனைத்துமே இன்று ஈராக்கின் பொது நிலப்பரப்பு பகுதியாக இருக்கும் அதே இடத்தையே குறிக்கின்றன. பெல்ஜியமிலுள்ள கத்தோலிக் டி லெளவேன் லா-நியு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜூலியன் ரைக் இவ்விதமாக எழுதுகிறார்: “மெசொப்பொத்தாமியா [உட்பட] சிலுவை, ஆசியா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் பூர்வ கலாச்சாரங்களில் இடம் பெறுகிறது. மொசாப்பொத்தாமியாவில் இது வானத்துக்கும் அனு என்ற தெய்வத்துக்கும் அடையாளமாக நான்கு சம பக்கங்களைக் கொண்டதாக இருந்தது.” “புதிய ஏற்பாடு சொல் விளக்க அகராதி,” சிலுவை “பூர்வ கல்தேயாவில் ஆரம்பத்தைக் கொண்டிருந்தது, இது தம்முஸ் கடவுளுக்குச் சின்னமாக பயன்படுத்தப்பட்டது என்று சொல்கிறது. (அவனுடைய பெயரின் முதலெழுத்தாகிய மறைப் பொருளுடைய டா-வின் வடிவில் இருந்ததால்)” ஆகவே சிலுவை கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட ஆரம்பத்தைக் கொண்டிருப்பது தெளிவாக இருக்கிறது. டமுசி என்றும்கூட அழைக்கப்படும் தம்முஸ் ஆரம்பத்தில் ஓர் அரசனாக இருந்ததாகவும் அவனுடைய மரணத்துக்குப் பின்பு அவன் தெய்வமாக வழிப்படலானான் என்பதாகவும் சொல்கிறார்கள். உதாரணமாக, “செமிடிக் ஆராய்ச்சிகளின் பத்திரிகை”யில் O.R. குர்னே இவ்விதமாக எழுதுகிறார்: “டமுசி ஆரம்பத்தில் ஒரு மனிதனாக, ஏரேக்கின் அரசனாக இருந்தான்.” இது “பாபேல், ஏரேக் என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தனங்கள்” என்பதாக பைபிள் நிம்ரோதைப் பற்றிச் சொல்லும் காரியத்தை குறிப்பிடுவதாக இருக்குமா? (ஆதியாகமம் 10:10) தற்போது நிச்சயமாக அறிந்துகொள்வதற்கு எந்த வழியுமில்லை.
[பக்கம் 21-ன் படம்]
மெசொப்பொத்தாமியாவிலுள்ள கூர்கோபுரங்களின் அழியா எஞ்சியப் பகுதிகள், பாபேல் கோபுரத்தைப் பற்றிய பைபிள் பதிவை ஆதரிக்கின்றன