அதிகாரம் 3
புராணக்கதைகளில் இழையோடும் ஒரேவித கருத்துகள்
‘புராணக்கதைகளைப் பற்றி இப்போது ஏன் சிந்திக்க வேண்டும்? அவையெல்லாம் பழங்கால கட்டுக்கதைகள்தானே?’ என்று நாம் நினைக்கலாம். புராணங்களில் பெரும்பாலானவை கட்டுக்கதைகளின் அடிப்படையில் புனையப்பட்டிருந்தாலும், மற்றவை உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு உதாரணமாக, பைபிள் விவரிக்கும் நிஜ சம்பவமான உலகளாவிய ஜலப்பிரளயத்தை, அதாவது பெருவெள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட அநேக புராணக்கதைகளையும் பழங்கதைகளையும் சொல்லலாம்.
2 புராணக்கதைகளைச் சிந்திப்பதற்கு ஒரு காரணம், இன்றைய மதங்களில் காணப்படும் நம்பிக்கைகளும் சடங்குகளும் அவற்றை அடிப்படையாக கொண்டிருப்பதுதான். உதாரணத்திற்கு, ஆத்மா அழியாமை என்ற கோட்பாடு பண்டைய அசீரிய-பாபிலோனிய கட்டுக்கதைகளிலிருந்தும், எகிப்திய, கிரேக்க, ரோம புராணக்கதைகளிலிருந்தும் கிறிஸ்தவமண்டலத்திற்குள் நுழைந்து அதன் இறையியலில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. கடவுட்களையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் தேடி ஆதி மனிதன் அலைந்து கொண்டிருந்தான் என்பதற்கு புராணக்கதைகளே சான்று. உலகின் முக்கிய கலாச்சாரங்களிலுள்ள புராணக்கதைகளில் காணப்படும் பொதுவான சில கருத்துகளைப் பற்றி இந்த அதிகாரத்தில் நாம் சுருக்கமாக கவனிப்போம். இந்தப் புராணக்கதைகளை புரட்டிப் பார்க்கையில், படைப்பு, ஜலப்பிரளயம், தெய்வங்கள், அரைதெய்வங்கள், ஆத்மா அழியாமை, சூரிய வழிபாடு ஆகியவை ஓர் ஆடையில் இழையோடும் ஒரேமாதிரியான நூலிழைகளைப் போல் திரும்பத் திரும்ப வருவதை கவனிப்போம். ஆனால் அவை ஏன் அப்படி வருகின்றன?
3 அநேக சமயங்களில், ஒரு வரலாற்று உண்மையோ ஒரு நபரின் வாழ்க்கையோ ஒரு சம்பவமோ காலம் செல்லச் செல்ல மிகைப்படுத்தப்பட்டு அல்லது உருமாற்றப்பட்டு ஒரு புராணக்கதையாக உருவாகிவிடுகிறது. அத்தகைய வரலாற்று உண்மைகளில் ஒன்று பைபிளிலுள்ள படைப்பைப் பற்றிய பதிவாகும்.a
படைப்பு பற்றிய உண்மையும் கட்டுக்கதையும்
4 படைப்பு பற்றிய புராணக்கதைகளுக்கு குறைவே இல்லை, ஆனால் பைபிள் பதிவில் இருப்பதைப் போன்ற நியாயமான, எளிய விளக்கம் அவை எதிலுமில்லை. (ஆதியாகமம், அதிகாரங்கள் 1, 2) உதாரணமாக, கிரேக்க புராணக்கதைகளில் உள்ள பதிவு காட்டுத்தனமாய் தொனிக்கிறது. ஹெஸியாடு என்பவரே புராணக்கதைகளை முறைப்படி எழுத்தில் வடித்த முதல் கிரேக்கர்; இவர் பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டில் இறைமரபு காவியம் (ஆங்கிலம்) என்ற நூலை எழுதினார். தெய்வங்களும் உலகமும் தோன்றியது எப்படி என்பதை அதில் விளக்கினார். காயே, அதாவது காயா (பூமி) என்ற தேவதை யுரேனஸை (வானத்தை) ஈன்றெடுத்ததாக சொல்லி தன் நூலை ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதை தி ஆக்ஸ்ஃபர்டு ஹிஸ்டரி ஆஃப் த கிளாசிக்கல் உவர்ல்டு என்ற நூலில் அறிஞர் ஜேஸ்பர் க்ரிஃபின் பின்வருமாறு விளக்கினார்:
5 “வான் கடவுட்கள் அடுத்தடுத்து அதிகாரம் பெற்றதைப் பற்றி ஹோமர் அறிந்திருந்த கதையை ஹெஸியாடு சொன்னார். முதலில் யுரேனஸ் உன்னத நிலையில் இருந்தான், ஆனால் அவன் தன்னுடைய பிள்ளைகளை மிகவும் ஒடுக்கினான்; ஆகவே அவனுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அவனுடைய மகன் குரோனஸை காயா தூண்டினாள். ஆனால் குரோனஸ் தன் சொந்த பிள்ளைகளை விழுங்கிக்கொண்டே இருந்தான்; இறுதியில் அவனுடைய மனைவி ரியா, ஸீயஸுக்குப் பதிலாக ஒரு கல்லை அவனுக்கு விழுங்கக் கொடுத்தாள். கிரேத்தாவில் வளர்க்கப்பட்ட குழந்தை ஸீயஸ் தன் உடன்பிறந்தாரை கக்கிவிடும்படி தன் தந்தையை வற்புறுத்தினான். பின்னர் உடன்பிறந்தாரின் உதவியோடும் பிற உதவியோடும், குரோனஸையும் அவனை சேர்ந்த இராட்சதர்களையும் தோற்கடித்து அவர்களை டார்டரஸுக்குள் எறிந்தான்.”
6 இந்த வினோதமான புராணக்கதையை கிரேக்கர் எங்கிருந்து பெற்றனர்? அதே நூலாசிரியர் பதிலளிக்கிறார்: “அது அடிப்படையில் சுமேரியரிடமிருந்து வந்ததாக தோன்றுகிறது. இந்தக் கிழக்கத்திய கதைகளில் கடவுட்கள் அடுத்தடுத்து அதிகாரம் பெறுவதைப் பற்றி வாசிக்கிறோம். அதோடு, ஆண்மை நீக்கம் செய்தல், விழுங்குதல், கல் போன்ற மைய கருத்துகள் அடிக்கடி வருவதையும் கவனிக்கிறோம்; அவை வித்தியாசமான விதங்களில் வந்தாலும், ஹெஸியாடு சொல்வதுடன் ஒத்திருக்கின்றன; இது தற்செயலாக ஏற்பட்டிருக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது.” ஆக, மற்ற கலாச்சாரங்களில் ஊடுருவியிருக்கும் அநேக புராணக்கதைகள், பண்டைய மெசபடோமியாவிலும் பாபிலோனிலும் இருந்தே வந்திருக்க வேண்டும் என்று இதிலிருந்து தெரிகிறது.
7 சீனர்களின் மதத்தைப் பற்றிய பண்டைய புராணக்கதைகளை தெளிவாக கூறுவது அவ்வளவு எளிதல்ல, ஏனென்றால் எழுத்துவடிவில் இருந்த அநேக பதிவுகள் பொ.ச.மு. 213-191 காலப்பகுதியில் அழிந்துபோய்விட்டன.b ஆனாலும், சில பதிவுகள் அழியாது இருக்கின்றன; அவற்றில் ஒன்று, பூமி எப்படி உருவானது என்பதை விவரிக்கும் கதை. கீழைநாட்டு கலைப் பேராசிரியர் ஆன்டனி கிறிஸ்டி இவ்வாறு எழுதுகிறார்: “கேயாஸ், ஒரு கோழி முட்டைப்போல் இருந்ததை தெரிந்துகொள்கிறோம். அப்போது வானமோ பூமியோ இருக்கவில்லை. அந்த முட்டையிலிருந்து பஅன்-கூ பிறந்தான்; அந்த முட்டையின் கனமான மூலப்பொருட்களிலிருந்து பூமி உண்டானது, அதன் இலேசான மூலப்பொருட்களிலிருந்து ஆகாயம் உண்டானது. கரடித்தோலால் அல்லது இலைகளால் ஆன ஆடையை அணிந்த ஒரு குள்ளனாக பஅன்-கூ சித்தரிக்கப்படுகிறான். பூமிக்கும் ஆகாயத்துக்கும் உள்ள இடைவெளி ஒரு நாளைக்கு பத்து அடி விகிதமாக 18,000 ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது; பஅன்-கூவும் அதே வேகத்தில் வளர்ந்ததால் அவனுடைய உடல் அந்த இடைவெளியை நிரப்பிற்று. அவன் மரித்தபோது அவனுடைய உடலின் பல்வேறு பாகங்கள் பல்வேறு இயற்கை மூலப்பொருட்களாக மாறின. . . . அவனுடைய உடலிலிருந்த உண்ணிகள் மனித இனமாக மாறின.”
8 தென் அமெரிக்காவின் இன்கா மக்களது பழங்கதை, படைப்பாளர் ஒருவர் எவ்வாறு ஒவ்வொரு தேசத்துக்கும் அதனதன் மொழியைக் கொடுத்தார் என்பதை விளக்குகிறது. “அவர் ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு மொழியைக் கொடுத்தார் . . . ஆண்கள், பெண்கள் என ஒவ்வொருவருக்குமே உயிரையும் ஆத்மாவையும் கொடுத்தார், பிறகு ஒவ்வொரு தேசமும் பூமியின் கீழ் புதைந்துபோகும்படி கட்டளையிட்டார். இதனால் ஒவ்வொரு தேசமும் நிலத்திற்கடியில் சென்று, மறுபடியும் அவற்றிற்கென கடவுள் நியமித்திருந்த இடங்களில் மேலே எழும்பின.” (தென் அமெரிக்க புராணக்கதைகள் [ஆங்கிலம்] என்ற நூலிலுள்ள இந்த மேற்கோள், குஸ்கோவைச் சேர்ந்த கிறிஸ்டோபெல் டி மோலினா எழுதிய இன்கா மக்களின் பழங்கதைகளும் சமய சடங்குகளும் [ஆங்கிலம்] என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது) பாபேல் என்ற இடத்தில் மொழிகள் குழப்பப்பட்டதைப் பற்றிய பைபிளின் நிஜ பதிவை அடிப்படையாகக் கொண்டே இந்த இன்கா புராணக்கதை உருவாகியிருப்பது போல தெரிகிறது. (ஆதியாகமம் 11:1-9) இப்பொழுது, பைபிளில் ஆதியாகமம் 7:17-24-ல் விவரிக்கப்பட்டுள்ள ஜலப்பிரளயப் பதிவின் மீது நம் கவனத்தைத் திருப்புவோம்.
ஜலப்பிரளயம்—உண்மையா கட்டுக்கதையா?
9 சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன், அதாவது ஏறக்குறைய பொ.ச.மு. 2500-ம் ஆண்டில், கடவுளுடைய ஆவி-குமாரர்கள் கலகம் செய்து, மனித உருவெடுத்து பூமிக்கு வந்து, “தங்களுக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள்” என பைபிள் சொல்கிறது. இயற்கைக்கு மாறான இந்த உறவினால் மூர்க்கத்தனமுள்ள நெபிலிம்கள், அதாவது “பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்”கள் பிறந்தார்கள். அப்போதைய உலகம் அவர்களது மோசமான நடத்தையால் மிகவும் சீரழிந்தது. ஆகவே, யெகோவா தேவன் இவ்வாறு சொன்னார்: “நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், . . . நிக்கிரகம் பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது.” ஆனால் “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.” நோவா தன்னையும் தன் குடும்பத்தையும் பல்வகை மிருகங்களையும் ஜலப்பிரளயத்திலிருந்து பாதுகாக்க திட்டவட்டமான, நடைமுறையான படிகளை எடுக்க வேண்டியிருந்தது எனவும் அந்தப் பதிவு தொடர்ந்து விளக்குகிறது.—ஆதியாகமம் 6:1-8, ஆதியாகமம் 6:13–8:22; 1 பேதுரு 3:19, 20; 2 பேதுரு 2:4; யூதா 6.
10 ஜலப்பிரளயத்திற்கு முன்னான சம்பவங்களைப் பற்றிய ஆதியாகம பதிவு வெறும் ஒரு புராணக்கதை என்று நவீன நாளைய விமர்சகர்கள் முத்திரை குத்துகிறார்கள். என்றபோதிலும், ஏசாயா, எசேக்கியேல், இயேசு கிறிஸ்து, அப்போஸ்தலர்களாகிய பேதுரு, பவுல் போன்ற விசுவாசமுள்ள மனிதர்கள் நோவாவின் வரலாற்றை உண்மையென்று நம்பி ஏற்றுக்கொண்டார்கள். அதுமட்டுமல்ல, அஸ்தெக்கு, இன்கா, மாயா ஆகிய இனத்தோரின் பழங்கதைகள், பண்டைய கில்காமேஷ் காப்பியம், சீனாவின் பழங்கதைகள் உட்பட, உலகம் முழுவதிலும் அநேக புராணக்கதைகளில் ஜலப்பிரளயத்தைப் பற்றிய பதிவு காணப்படுவதால் இது உண்மையில் நடந்த ஒரு சம்பவமே என்பது ஊர்ஜிதமாகிறது. பைபிள் பதிவை மனதிற்கொண்டு, அசீரிய-பாபிலோனிய புராணக்கதையையும் ஜலப்பிரளயத்தைப் பற்றி அதில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகளையும் இப்பொழுது சிந்திக்கலாம்.c—ஏசாயா 54:9; எசேக்கியேல் 14:20; மத்தேயு 24:37; எபிரெயர் 11:7.
ஜலப்பிரளயமும் மனித-கடவுளாகிய கில்காமேஷும்
11 வரலாற்றில் சுமார் 4,000 ஆண்டுகள் பின்னோக்கி சென்றால், அக்காடிய இனத்தவரின் கில்காமேஷ் காப்பியம் என்று அழைக்கப்படும் பிரபலமான புராணக்கதையை எதிர்ப்படுவோம். பண்டைய நினிவேயில் பொ.ச.மு. 668 முதல் 627 வரை ஆட்சி செய்த அசூர்பானிபால் என்பவரின் நூலகத்திலிருந்த ஆப்புவடிவ எழுத்துக்களின் பதிவிலிருந்தே முக்கியமாக இந்தப் புராணக்கதையைப் பற்றி அறிய வருகிறோம்.
12 மூன்றில் இரண்டு பங்கு கடவுளாகவும் ஒரு பங்கு மனிதனாகவும், அதாவது அரைதெய்வமாக வர்ணிக்கப்படும் கில்காமேஷின் வீரச்செயல்களைப் பற்றிய கதைதான் இக்காப்பியம். இதன் ஒரு மொழிபெயர்ப்பு இவ்வாறு சொல்கிறது: “உருக் என்ற நகரில் மதில்களையும், மிகப் பெரிய ஒரு அரணையும் [கில்காமேஷ்] கட்டினான்; அதோடு, வான் தெய்வமான அனுவுக்காகவும் காதல் தேவியாகிய, அதாவது காதல் மற்றும் போர் தேவியாகிய இஷ்டாருக்காகவும் . . . , புனித இயன்னாவின் ஆலயத்தை கட்டினான்.” (அசீரிய-பாபிலோனிய தெய்வ தேவியரின் பெயர்களை அறிய பக்கம் 45-ல் உள்ள பெட்டியைக் காண்க.) என்றபோதிலும், கில்காமேஷ் இனியவனாக இல்லை. உருக் நகரவாசிகள் தங்கள் தெய்வங்களிடம் இவ்வாறு முறையிட்டார்கள்: “எந்தக் கன்னியையும் அவளுடைய காதலனுக்காக விட்டுவைக்காத அளவுக்கு அவன் அத்தனை காமவெறி பிடித்தவன். போர்வீரரின் மகளாகட்டும், இளவரசரின் மனைவியாகட்டும், எந்தப் பெண்ணையும் அவன் விட்டுவைப்பதில்லை.”
13 நகரவாசிகளின் முறையீட்டைக் கேட்ட தெய்வங்கள் என்ன நடவடிக்கை எடுத்தன? அருரு என்ற தேவதை, என்கிடு என்பவனை கில்காமேஷின் மனித எதிரியாகப் படைத்தாள். ஆனால் அவர்கள் இருவரும் எதிரிகளாக இருப்பதற்கு மாறாக உற்ற நண்பர்கள் ஆனார்கள். பிற்பாடு என்கிடு இறந்துவிடுவதாய் காப்பியம் சொல்கிறது. மனம் உடைந்துபோன கில்காமேஷ், “நான் இறந்துபோனால் என்கிடுவைப் போல ஆகிவிடுவேனே, என் அடிவயிறு கலங்குகிறது, மரணத்துக்கு பயந்து சமவெளிப் பகுதிகளில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்” என்று புலம்பினான். சாவாமைக்கான இரகசியத்தை அவன் அறிந்துகொள்ள விரும்பினான்; ஆகவே, ஜலப்பிரளயத்தில் தப்பிப்பிழைத்தவனும் தெய்வங்களைப் போல் சாகா வரம் பெற்றவனுமான உட்னாபிஷ்டிமை தேடிச் சென்றான்.
14 ஒருவழியாக உட்னாபிஷ்டிமை கில்காமேஷ் கண்டுபிடித்ததும் அவனிடமிருந்து ஜலப்பிரளய கதையை கேட்டறிந்தான். ஜலப்பிரளய கற்பலகை என்று அழைக்கப்படும் XI-ம் காப்பிய கற்பலகையில் காணப்படுகிறபடி, ஜலப்பிரளயத்தின் சம்பந்தமாக தனக்கு கொடுக்கப்பட்ட பின்வரும் கட்டளைகளை உட்னாபிஷ்டிம் கூறினான்: “(இந்த) வீட்டை இடித்துப்போட்டு ஒரு கப்பலைக் கட்டு! செல்வங்களைத் துறந்து ஜீவனைத் தேடு. . . . எல்லா உயிரினங்களின் வித்தையும் உன்னுடன் கப்பலுக்குள் எடுத்துச் செல்.” இது நோவாவையும் ஜலப்பிரளயத்தையும் பற்றிய பைபிளின் பதிவோடு ஒத்திருப்பதுபோல் தெரிகிறது அல்லவா? ஆனால் சாகா வரம் பெற உட்னாபிஷ்டிமால் கில்காமேஷுக்கு உதவ முடியவில்லை. கில்காமேஷ் ஏமாற்றத்தோடு உருக் நகருக்கு திரும்பினான். பின்னர் மரணமடைந்தான். இத்துடன் இந்தப் பதிவு முற்றுப்பெறுகிறது. மரணத்தினாலும் அதற்கு பின்னான வாழ்க்கையினாலும் உண்டாகிற துயரமும் விரக்தியுமே இக்காப்பியத்தின் ஒட்டுமொத்த செய்தி. சத்தியம் மற்றும் நம்பிக்கையின் கடவுளை அந்தப் பழங்காலத்து மக்கள் கண்டுபிடிக்கவில்லை. என்றாலும், ஜலப்பிரளயத்திற்கு முன்னான சகாப்தத்தைப் பற்றிய பைபிளின் எளிய பதிவிற்கும் இந்தக் காப்பியத்திற்கும் தொடர்பு இருப்பது தெளிவாக உள்ளது. இப்பொழுது மற்ற பழங்கதைகளில் காணப்படும் ஜலப்பிரளய பதிவுக்கு நம்முடைய கவனத்தை திருப்புவோம்.
மற்ற கலாச்சாரங்களில் ஜலப்பிரளய பழங்கதை
15 கில்காமேஷ் காப்பியத்திற்கு முன்னரே சுமேரியரின் புராணக்கதை ஒன்று இருந்தது. அது, “பைபிளில் சொல்லப்பட்டுள்ள நோவாவுக்கு இணையாக ஷியுசூத்ரா என்பவரை குறிப்பிடுகிறது. அவர் பக்தியுள்ள, தேவபயமுள்ள ஒரு ராஜாவாக விவரிக்கப்படுகிறார்; சொப்பனங்களில் அல்லது மந்திரங்களில் தனக்கு தெய்வீக வெளிப்படுத்துதல் கிடைக்குமென அவர் எப்பொழுதும் காத்துக்கொண்டிருந்தார்.” (பழைய ஏற்பாட்டோடு தொடர்புடைய பண்டைய கிழக்கத்திய வாசகங்கள்) “சுமேரியரின் இலக்கியங்களில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே” இந்தப் புராணக்கதைதான், “பைபிளில் காணப்படும் தகவலோடு மிக குறிப்பிடத்தக்க விதத்தில் ஒத்திருக்கிறது” எனவும் அப்புத்தகம் கூறுகிறது. இந்த சுமேரிய நாகரிகம் பிற்பாடு தோன்றிய பாபிலோனிய மற்றும் அசீரிய நாகரிகங்கள் மீது செல்வாக்கு செலுத்தியது.
16 யூ என்பவர் சீனாவின் பூர்வீக அரசர்களில் ஒருவர், இவர் “மகா ஜலப்பிரளயத்தை வென்றவர். தன்னுடைய மக்களை மீண்டும் குடியேற்றுவதற்காக ஜலப்பிரளயத்தின் தண்ணீரை ஆறுகளுக்குள்ளும் சமுத்திரங்களுக்குள்ளும் திருப்பிவிட்டவர்” என சீனா—கலையில் ஒரு வரலாறு (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்கிறது. புராணவியல் நிபுணர் ஜோசஃப் கேம்பெல், சீனர்களின் “பத்துப் பேரரசர்கள் காலம்” பற்றி இவ்வாறு எழுதினார்: “ஆரம்ப செள-காலத்திய புராணவியலின்படி, அந்த முக்கிய யுகத்தில்—ஜலப்பிரளயத்தோடு முடிந்த அந்த யுகத்தில்—பத்து பேரரசர்கள் நியமிக்கப்பட்டனர். ஆகவே, பண்டைய சுமேரிய அரச பட்டியல்களைத்தான் சில மாற்றங்களோடு நாம் இங்கே காண்பதாக தோன்றுகிறது.” பிறகு, “மெசபடோமியாவிலிருந்தே ஜலப்பிரளயத்தைப் பற்றிய பதிவு வந்திருக்க வேண்டும் என்ற விவாதத்தை உறுதி செய்வதாக” தோன்றிய சீன பழங்கதைகளின் மற்ற குறிப்புகளையும் கேம்பெல் மேற்கோள் காண்பித்தார். ஆம், அநேக புராணக்கதைகள் தோன்றிய அதே இடத்திலிருந்துதான் ஜலப்பிரளய புராணக்கதைகளும் தோன்றியிருக்க வேண்டும் என்பது புரிகிறது. என்றபோதிலும், ஜலப்பிரளயத்தின் கதை அமெரிக்க கண்டத்திலும் காணப்படுகிறது. உதாரணமாக, பொ.ச. 15-ம், 16-ம் நூற்றாண்டுகளில் மெக்சிகோவில் வாழ்ந்த அஸ்தெக்குகள் காலத்தில் காணப்படுகிறது.
17 முடிந்துவிட்ட நான்கு யுகங்களைப் பற்றி அஸ்தெக்கு புராணவியல் குறிப்பிட்டது; முதல் யுகத்தின்போது பூமியில் இராட்சதர்கள் இருந்தார்கள் என்று அது கூறுகிறது. (இது பைபிளில் ஆதியாகமம் 6:4-ல் குறிப்பிடப்பட்டுள்ள இராட்சத பிறவிகளான நெபிலிம்களை நினைப்பூட்டுகிறது.) அதில் பூர்வகால ஜலப்பிரளய பழங்கதை ஒன்றும் இருந்தது. “மேலேயும் கீழேயும் இருந்த தண்ணீர் ஒன்று சேர்ந்தன; இதனால் தொடுவானம் மறைந்துபோனது, எல்லாமே கால வரம்பற்ற சர்வலோக பெருங்கடலானது” என்று சொல்லப்பட்டிருக்கிறது. லாலோக்கு என்பவரே மழையையும் தண்ணீரையும் கட்டுப்படுத்திய கடவுள். என்றபோதிலும், அவரிடமிருந்து மழையை பெற்றுக்கொள்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அந்த மழை, “பலிசெலுத்தப்பட்ட ஆட்களின் இரத்தத்திற்கு மாற்றீடாகவே கிடைத்தது; பலியாட்கள் வடித்த கண்ணீர் மழைக்கு ஒப்பாக இருந்து, மழை பெய்வதை தூண்டுவித்தது.” (புராணங்கள்—பட விளக்கங்கள் கொண்ட என்ஸைக்ளோப்பீடியா) நான்காவது யுகம் தண்ணீர் தேவியாகிய சால்சியுட்லிகுவால் ஆளப்பட்டது என்றும் அவளுடைய உலகம் ஒரு ஜலப்பிரளயத்தால் அழிந்துபோனது என்றும் மற்றொரு பழங்கதை கூறுகிறது. அந்தச் சமயத்தில் மனிதர்கள் மீன்களாக உருமாறியதன் மூலம் தப்பித்துக்கொண்டனராம்!
18 அதைப் போலவே, இன்கா மக்கள் மத்தியிலும் ஜலப்பிரளய பழங்கதைகள் வழக்கில் இருந்தன. ஆங்கிலேய எழுத்தாளர் ஹெரால்ட் ஆஸ்போர்ன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தென் அமெரிக்க புராணத்தில் மிகவும் பரவலாக காணப்படுபவை ஜலப்பிரளயத்தைப் பற்றிய கதைகளே என தோன்றுகிறது . . . மேட்டுநிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியிலும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் இனத்தவர் மத்தியிலும் ஜலப்பிரளயத்தைப் பற்றிய புராணக்கதைகள் மிகப் பரவலாக காணப்படுகின்றன. ஜலப்பிரளயம் பொதுவாக படைப்போடும், சிருஷ்டிகரான கடவுளின் வெளிக்காட்டுதலோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது. . . . ஒரு புதிய மனித சமுதாயம் தோன்றுவதற்காக அப்போதிருந்த மனித சமுதாயத்தை துடைத்தழித்த ஒரு தெய்வீக தண்டனையாக இது சில சமயங்களில் கருதப்படுகிறது.”
19 அதே விதமாக, மெக்சிகோவிலும் மத்திய அமெரிக்காவிலும் வாழ்ந்த மாயா பழங்குடியினரிடமும் ஜலப்பிரளய பழங்கதை இருந்தது; உலகெங்கிலும் ஏற்பட்ட ஒரு பெருவெள்ளத்தை ஹையோகோகேப் என அது குறிப்பிடுகிறது. “பூமியை நிரப்பிய தண்ணீர்” என்பது இதன் அர்த்தம். குவாதமாலா இந்தியர்களைப் பற்றி கத்தோலிக்க பிஷப் லாஸ் காஸாஸ் இவ்வாறு எழுதினார்: “அவர்கள் ஜலப்பிரளயத்தை பூட்டிக் என்றழைத்தார்கள்; இந்த வார்த்தை திரளான தண்ணீரின் பிரளயத்தையும் முடிவான நியாயத்தீர்ப்பையும் அர்த்தப்படுத்துகிறது. ஆகவே மற்றொரு பூட்டிக், அதாவது மற்றொரு பிரளயமும் நியாயத்தீர்ப்பும் வரும் என்றும், ஆனால் அது நீரினால் அல்ல நெருப்பினால் வரும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.” இன்னும் அநேக ஜலப்பிரளய பழங்கதைகள் உலகெங்கிலும் வலம் வருகின்றன. என்றாலும், ஆதியாகம புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சரித்திர சம்பவம்தான் இப்பழங்கதைகளின் மையக் கரு என்பதை உறுதி செய்துகொள்ள மேற்கூறப்பட்ட சில உதாரணங்களே போதுமானவை.
ஆத்மா அழியாமை—பரவலான நம்பிக்கை
20 என்றபோதிலும், எல்லா புராணக்கதைகளுமே பைபிளின் அடிப்படையிலும் இல்லை, வேறெந்த உண்மையின் அடிப்படையிலும் இல்லை. கடவுளைத் தேடும் முயற்சியில், சாவாமை என்ற மாயையில் மயங்கி வீணானவற்றில் மனிதன் நம்பிக்கை வைத்திருக்கிறான். இப்புத்தகம் முழுவதிலும் நாம் பார்க்கப் போகிற விதமாக, ஆத்மா அழியாது என்ற நம்பிக்கை அல்லது அது சார்ந்த நம்பிக்கைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடைய முன்னோர்களிடமிருந்து வழிவழியாய் வந்துள்ளன. பண்டைய அசீரிய-பாபிலோனிய கலாச்சாரத்தில் வாழ்ந்துவந்த மக்கள் மறுமையில் நம்பிக்கை வைத்திருந்தனர். நியூ லாரோஸி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் மித்தாலஜி இவ்வாறு விளக்குகிறது: “மரணத்துக்குப் பின் மனிதர்கள் செல்லும் கீழுலகம் என்ற ஒன்று உள்ளது; அது பூமிக்கு கீழே, [நன்னீர் நிறைந்ததும் பூமியை சூழ்ந்திருப்பதுமான] அப்சுவினுடைய அபிஸுக்கு மறுபுறத்தில் உள்ளது. அது, ‘சென்றவர் திரும்பிவர முடியாத தேசம்,’ . . . நித்தியமாக இருண்டிருக்கும் அந்த இடங்களில் மரித்தோரின் ஆத்மாக்கள்—அதாவது, எடிமு—‘பறவைகளைப் போல இறக்கைகளை உடையாக உடுத்தி’ கும்பலாய் கிடக்கின்றன.” இந்தக் கீழுலகை “மகா பூமியின் இளவரசி”யான எரெஷ்கிகால் தேவதை ஆண்டு வந்ததாக புராணக்கதை சொல்கிறது.
21 ஆத்மா அழியாது என்ற நம்பிக்கை எகிப்தியருக்கும் இருந்தது. அவர்களுடைய நம்பிக்கையின்படி, மாத் என்ற தேவதை சத்தியத்துக்கும் நீதிக்கும் தேவதை; சத்தியமெனும் இறகு இவளது அடையாளம்; ஓர் ஆத்மா ஆனந்தமான புகலிடத்தை அடைவதற்கு முன் இவளுடன் தராசில் நிறுத்துப் பார்க்கப்படும்; இதற்கு நரித் தலையுடைய அனுபிஸ் என்ற தெய்வமோ ஹோரஸ் என்ற இராசாளியோ உதவி செய்யும்; ஓசைரிஸ் சம்மதம் தெரிவித்துவிட்டால் அந்த ஆத்மா கடவுட்களோடு பேரானந்தத்தை அனுபவிக்க சென்றுவிடும். (பக்கம் 50-ல் உள்ள படத்தைக் காண்க.) ஆத்மா அழியாது என்ற பாபிலோனிய மையக் கருத்து மக்களின் மதத்திலும் வாழ்க்கையிலும் செயல்களிலும் இழையோடுவதை இங்கேயும் காண்கிறோம்.
22 மரணத்துக்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கையும், மூதாதையரை சந்தோஷப்படுத்துவது அவசியம் என்ற நம்பிக்கையும் பண்டைய சீன புராணக்கதைகளில் காணப்படுகின்றன. மூதாதையர் “சக்தியுள்ள ஆவி ஆட்கள், உயிரோடிருக்கும் தங்கள் சந்ததியாரின் நலனில் அக்கறை உள்ளவர்கள், ஆனால் மனம் புண்படும்படி நடந்துகொண்டால் கோபங்கொண்டு தண்டிக்கும் இயல்புடையவர்கள் என கருதப்பட்டார்கள்.” ஆகவே, இறந்தவர்களுக்கு எல்லா உதவியும் அளிக்கப்பட வேண்டியிருந்தது, ஏன், அவர்களுக்கு துணையாக தோழர்கள்கூட அளிக்கப்பட்டனர். ஆக, “ஷாங் அரசர்களில் சிலருடைய சவ அடக்கத்தின்போது . . . மறுமையில் அவர்களுடைய பணியாட்களாக இருப்பதற்கு நூறு முதல் முன்னூறு ஆட்களைக் கொன்று அவர்களுடன் சேர்த்து அடக்கம் செய்தனர். (எகிப்து, ஆப்பிரிக்கா, ஜப்பான் போன்ற இடங்களோடு பண்டைய சீனாவுக்கு தொடர்பு இருந்ததை இந்தப் பழக்கம் காட்டுகிறது; இதேபோன்ற பலிகள் அங்கும் செலுத்தப்பட்டன.)” (ஜான் பி. நாஸ் எழுதிய மனிதனின் மதங்கள்) ஆத்மா அழியாது என்ற நம்பிக்கை இருந்ததால்தான் அவ்வாறு நரபலிகள் செலுத்தப்பட்டன.—வேறுபடுத்திக் காண்க: பிரசங்கி 9:5, 10; ஏசாயா 38:18, 19.
23 தங்கள் புராணக்கதைகளில் அநேக கடவுட்களை உருவாக்கியிருந்த கிரேக்கரும்கூட இறந்தவர்கள் பேரிலும் அவர்கள் சென்றடையும் இடத்தின் பேரிலும் ஆர்வம் காட்டினர். அவர்களுடைய புராணக்கதைகளின்படி, ஸீயஸ் மற்றும் பாசைடான் என்ற கடவுட்களின் சகோதரனும் குரோனஸின் மகனுமான ஹேடீஸ் அந்தக் காரிருள் பகுதிக்கு பொறுப்பாளன் ஆவான். அவனது பெயரே அவன் ஆட்சி செய்த இடத்துக்கும் வழங்கப்பட்டது. இறந்தவர்களுடைய ஆத்மாக்கள் ஹேடீஸை எவ்வாறு சென்றடைந்தன?d
24 எழுத்தாளர் எலன் சுவிட்சர் இவ்வாறு விளக்குகிறார்: “கீழுலகில் பயங்கரமான உயிரினங்கள் . . . இருந்தன. சமீபத்தில் இறந்தவர்களை உயிருள்ளோரின் தேசத்திலிருந்து கீழுலகுக்கு கொண்டு செல்லும் படகை ஷாரோன் ஓட்டினான். [ஸ்டைக்ஸ் ஆற்றை] கடந்து செல்ல அவன் கட்டணமும் பெற்றுக்கொண்டான். ஆகவே, போதிய கட்டணத்தை இறந்தவர்கள் செலுத்துவதற்கு ஏதுவாக அவர்களுடைய நாவின்கீழ் ஒரு நாணயத்தை வைத்து கிரேக்கர்கள் அடக்கம் செய்தனர். அப்படி பணம் செலுத்த முடியாத ஆத்மாக்கள் ஆற்றைக் கடக்காமலேயே கேட்பாரற்ற நிலத்தில் விடப்பட்டன; அவை உயிருள்ளோரை தொந்தரவு செய்ய திரும்பி வரலாம் என கருதப்பட்டது.”e
25 ஆத்மாவைப் பற்றிய கிரேக்க புராணக்கதை ரோமர்கள் மீது செல்வாக்கு செலுத்தியது; ஆரம்ப காலத்தில் விசுவாச துரோகிகளான கிறிஸ்தவ சிந்தனையாளர்கள் மீது பிளேட்டோ (ஏறக்குறைய பொ.ச.மு. 427-347) போன்ற கிரேக்க தத்துவஞானிகள் பலமான செல்வாக்கு செலுத்தியதால் ஆத்மா அழியாமை பற்றிய போதனையை அவர்கள் தங்களுடைய மத நம்பிக்கையாக ஏற்றனர்; அந்தப் போதனை பைபிளில் இல்லாதபோதிலும் அதை ஏற்றுக்கொண்டனர்.
26 அஸ்தெக்கு, இன்கா, மாயா ஆகிய இனத்தாரும்கூட ஆத்மா அழியாது என்று நம்பினர். மற்ற நாகரிகத்தாரைப் போல அவர்களுக்கும் மரணம் என்பது புரியாப் புதிராகவே இருந்தது. மரணத்தோடு ஒப்புரவாவதற்கு தங்களுடைய சமய சடங்குகளும் நம்பிக்கைகளும் உதவுவதாக கருதினார்கள். அமெரிக்க கண்டத்தின் பண்டைய சூரிய ராஜ்யங்கள் என்ற தன் நூலில் தொல்லியல் வரலாற்றாசிரியர் விக்டர் டபிள்யூ. வான் ஹேகன் இவ்வாறு விளக்குகிறார்: “மரித்தோர் உண்மையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் வெறுமனே ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறிச் சென்றுவிட்டிருக்கிறார்கள்; அவர்களைப் பார்க்க முடியாது, தொட்டுணர முடியாது, அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது. இறந்தவர்கள் . . . அவ்வம்சத்தின் கண்ணுக்குப் புலப்படாத அங்கத்தினர்களாக ஆகிவிட்டார்கள்.”—வேறுபடுத்திக் காண்க: நியாயாதிபதிகள் 16:30; எசேக்கியேல் 18:4, 20.
27 “[இன்கா] இந்தியன் அழியாமையில் நம்பிக்கை வைத்திருந்தான்; உண்மையில் எவரும் சாவதேயில்லை என அவன் நம்பினான், . . . செத்த உடல் மறுபடியும் உயிர் பெற்று காணக்கூடாத சக்திகளின் வல்லமையைப் பெற்றுக்கொண்டதாக நம்பினான்” என அதே நூல் சொல்கிறது. ஆத்மாக்கள், 13 பரலோகங்கள், 9 நரகங்கள் ஆகியவை இருந்ததாக மாயா மக்கள்கூட நம்பினர். இவ்வாறாக, உலகின் எப்பகுதியை எடுத்துக்கொண்டாலும்சரி, மரணம் என்ற நிஜத்தை ஏற்க மக்கள் மனமில்லாமல்தான் இருந்திருக்கின்றனர்; ஆகவே அழியாத ஆத்மா என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஓர் ஊன்றுகோலைப் போல் ஆகியிருக்கிறது.—ஏசாயா 38:18; யாக்கோபு 5:20.
28 அதேவிதமாக, ஆப்பிரிக்க புராணக்கதைகளில் மரணத்துக்குப் பின் உயிர்வாழும் ஆத்மாவைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அநேக ஆப்பிரிக்க மக்கள் மரித்தோரின் ஆத்மாக்களைப் பற்றிய பயத்தில் வாழ்கின்றனர். நியூ லாரோஸி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் மித்தாலஜி இவ்வாறு சொல்கிறது: “இந்த நம்பிக்கை, மரணத்துக்குப் பின் ஆத்மா வாழ்கிறது என்ற மற்றொரு நம்பிக்கையோடு பிணைந்திருக்கிறது. மந்திரவாதிகள் இந்த ஆத்மாக்களை அழைத்து சக்தி பெற முடிகிறது. மரித்தோரின் ஆத்மாக்கள் அநேகமாக விலங்குகளின் உடலுக்குள் செல்கின்றன அல்லது தாவரங்களாய் மறுபிறவி எடுக்கின்றன.” இதன் காரணமாக, உறவினரின் ஆவிகள் என தாங்கள் நம்பும் சில வகை பாம்புகளை ஜூலு இனத்தவர் கொல்ல மாட்டார்கள்.
29 தென்கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள மசாய் இனத்தவர் நேய் (’Ng ai) என்றழைக்கப்படும் படைப்பாளர் மீது நம்பிக்கை வைக்கின்றனர். ஒவ்வொரு மசாயுக்கும் ஒரு காவல் தூதனை அவர் நியமித்திருப்பதாக நம்புகின்றனர். மரணத்தின்போது ஒரு போர்வீரனின் ஆத்மாவை அந்தத் தூதன் மறுமைக்கு கொண்டு செல்கிறான். மேற்குறிப்பிடப்பட்ட லாரோஸி என்ஸைக்ளோப்பீடியா மரணத்தைப் பற்றிய ஜூலுக்களின் பழங்கதையைக் குறித்து சொல்கிறது; இதில் முதல் மனிதனான உன்குலுன்குலு உன்னத கடவுளாக காட்டப்படுகிறான். “மனிதன் சாவதில்லை!” என மானிடரிடம் சொல்வதற்காக அவன் ஒரு பச்சோந்தியை அனுப்பினான். பச்சோந்தியோ மெதுவாக சென்றது, வழியில் அதன் கவனமும் சிதறியது. ஆகவே, “மனிதன் சாவான்!” என்ற வேறொரு செய்தியை ஒரு பல்லியின் மூலம் உன்குலுன்குலு சொல்லி அனுப்பினான். பல்லியே முதலில் சென்றதால், “அப்போது முதற்கொண்டு எந்த மனிதனும் மரணத்திலிருந்து விடுபடவே இல்லை.” சில வேறுபாடுகளுடன் இதே பழங்கதை பெக்குவானா, பாசுட்டோ, மற்றும் பரோங்கா பழங்குடியினர் மத்தியிலும் காணப்படுகிறது.
30 கடவுளைத் தேடி மனிதன் எப்படியெல்லாம் அலைந்திருக்கிறான் என்பதை ஒவ்வொரு அதிகாரமாக படிக்கப் படிக்க, ஆத்மா அழியாது என்ற கட்டுக்கதைக்கு அவன் எத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான், அதற்கு இன்னமும் எத்தனை முக்கியத்துவம் கொடுத்து வருகிறான் என்பதை நாம் காண்போம்.
சூரிய வழிபாடும் நரபலிகளும்
31 எகிப்திய புராணக்கதைகளில் ஏராளமான தெய்வங்களும் தேவிகளும் காணப்படுகின்றன. பூர்வகால சமுதாயத்தினர் அநேகரைப் போலவே எகிப்தியர்களும் கடவுளைத் தேடுகையில், அன்றாட வாழ்க்கையில் தங்களைக் காத்துவந்த சூரியனை வழிபடும்படி ஈர்க்கப்பட்டனர். இவ்விதமாக அவர்கள் ரா (ஆமன்-ரா) என்ற பெயரில் ஆகாயத்துப் பேரரசனை வழிபட்டனர்; அவர் ஒவ்வொரு நாளும் கிழக்கிலிருந்து மேற்கிற்கு படகு சவாரி செய்தார் என்றும், இரவு வந்தபோதோ கீழுலகத்தின் வழியே ஓர் ஆபத்தான பாதையில் பயணித்தார் என்றும் அவர்கள் நம்பினர்.
32 அஸ்தெக்கு, இன்கா, மாயா ஆகிய இனத்தாரின் சூரிய வழிபாட்டில் நரபலி செலுத்துவது வழக்கமான ஓர் அம்சமாக இருந்தது. அஸ்தெக்குகள் ஒன்று மாற்றி ஒன்றாக எப்போதும் மத விழாக்களைக் கொண்டாடி வந்தனர். விழாக்களின்போது தங்களுடைய பல்வேறு தெய்வங்களுக்கு, விசேஷமாக சூரிய கடவுள் டெஸ்காட்லிபோகாவுக்கு நரபலிகளைச் செலுத்தினர். மேலும், அக்கினி தெய்வமாகிய ஸியுச்டேகூட்லிக்கு (ஹூய்ஹூய்டியோடலுக்கு) எடுக்கப்பட்ட விழாவில், “போர்க் கைதிகள் தங்களைச் சிறைபிடித்து வந்தவர்களோடு சேர்ந்து நடனமாடினர் . . . பின்பு அந்தக் கைதிகள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் மேலே வேகமாக சுழற்றப்பட்டனர்; பிறகு கங்குகளுக்குள் வீசியெறியப்பட்டு, பின் குற்றுயிரும் குறையுயிருமாக அவதியுறும் நிலையில் வெளியே எடுக்கப்பட்டனர்; துடித்துக்கொண்டிருக்கும் அவர்களுடைய இருதயம் வெட்டியெடுக்கப்பட்டு தெய்வங்களுக்கு படைக்கப்பட்டது.”—அமெரிக்க கண்டத்தின் பண்டைய சூரிய ராஜ்யங்கள்.
33 இன்னும் தெற்கே, இன்கா மதத்தில்கூட பலிகளும் புராணங்களும் இருந்தன. பண்டைய இன்கா வழிபாட்டில், இன்டி என்ற சூரிய கடவுளுக்கும் வீராகோச்சா என்ற படைப்பாளருக்கும் பிள்ளைகளும் மிருகங்களும் பலியாக செலுத்தப்பட்டன.
புராணக்கதைகளின் தெய்வங்களும் தேவிகளும்
34 எகிப்தில் முக்கடவுட்கள் வணங்கப்பட்டன. அவற்றில் பிரபலமானது: தெய்வீக தாய்மைக்கு அடையாளமான ஐசிஸ், அவளுடைய சகோதரனும் கணவனுமான ஓசைரிஸ், ஒரு இராசாளியாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகிற அவர்களுடைய மகனான ஹோரஸ். ஐசிஸ் தன் குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற சில எகிப்திய உருவச்சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன; இது, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின் வந்த கிறிஸ்தவமண்டலத்தின் கன்னி மாதா-குழந்தை இயேசு உருவச்சிலைகளையும் ஓவியங்களையும் உடனே நம் நினைவுக்கு கொண்டு வருகிறது. ஐசிஸின் கணவன் ஓசைரிஸ், மரித்தோரின் ஆத்மாக்களுக்கு மறுமையில் நித்திய மகிழ்ச்சியாக வாழும் எதிர்பார்ப்பை அளித்ததாக நம்பப்பட்டதால் மரித்தோரின் தெய்வமாக காலப்போக்கில் அவன் பிரசித்தி பெற்றான்.
35 எகிப்தில் வணங்கப்பட்ட ஹாத்தோர், காதல், மகிழ்ச்சி, இசை, நடனம் ஆகியவற்றின் தேவியாக இருந்தாள். அவள் மரித்தோருக்கு அரசியானாள். அவர்கள் பரலோகம் சென்றடைவதற்காக அவள் ஏணி ஒன்றைக் கொடுத்து உதவியதாய் நம்பப்பட்டது. நியூ லாரோஸி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் மித்தாலஜி விளக்குகிறபடி, அவளுக்கு ஆடம்பரமான விழாக்கள் எடுக்கப்பட்டன; “அவற்றில் மிகக் கோலாகலமானது புத்தாண்டு தின விழா, அதுவே அவளது பிறந்தநாளும்கூட. விடிவதற்கு முன்பே பெண் பூசாரிகள், ஹாத்தோரின் உருவச்சிலை மீது சூரியனின் கதிர்கள் படுவதற்காக அதை மாடிக்கு எடுத்துப் போவார்கள். அதைத் தொடர்ந்து, களிகூரும் சாக்கில் கேளிக்கை கொண்டாட்டம் நடைபெறும்; பாடலோடும் குடி மயக்கத்தோடு அந்த நாள் முடிவுறும்.” ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பும் புத்தாண்டு தின கொண்டாட்டங்களில் பெரியதாக மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்ன?
36 எகிப்தியர் அநேக மிருக தெய்வங்களையும் தேவிகளையும் வணங்கி வந்தனர்; உதாரணமாக ஏபிஸ் என்ற எருது, பெனாடெட் என்ற ஆட்டுக்கடா, ஹெக்ட் என்ற தவளை, ஹாத்தோர் என்ற பசு, சேபேக்கு என்ற முதலை ஆகியவற்றை வணங்கி வந்தனர். (ரோமர் 1:21-23) இப்படிப்பட்ட மதச் சூழலில்தான் பொ.ச.மு. 16-வது நூற்றாண்டில் இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். அவர்களை பார்வோனின் கோரப் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு, இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா எகிப்தின் மீது பத்து வாதைகளை கொண்டு வந்தார். (யாத்திராகமம் 7:14–12:36) அவை எகிப்தின் புராணத் தெய்வங்களுக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தின.—பக்கம் 62-ல் உள்ள பெட்டியைக் காண்க.
37 இப்பொழுது பண்டைய கிரேக்க மற்றும் ரோம கடவுட்கள் மீது கவனத்தை திருப்புவோம். பண்டைய கிரீஸின் அநேக கடவுட்கள் ரோமில் ஏற்றுக்கொள்ளப்பட்டன—அவற்றின் நற்குணங்களோடும் துர்குணங்களோடும். (பக்கங்கள் 43 மற்றும் 66-ல் உள்ள பெட்டிகளைக் காண்க.) உதாரணமாக, வீனஸும் ஃப்ளோராவும் வெட்கங்கெட்ட விலைமாதராக இருந்தனர்; பாக்கஸ் ஒரு குடிகாரனாகவும் களியாட்டக்காரனாகவும் இருந்தான்; மெர்க்குரி வழிப்பறி கொள்ளைக்காரனாக இருந்தான்; அப்பொல்லோ பெண்களைக் கற்பழிப்பவனாக இருந்தான். கடவுட்களின் தந்தையாகிய ஜூப்பிட்டர் சுமார் 59 பெண்களோடு வேசித்தனத்தில் அல்லது தகாப்புணர்ச்சியில் ஈடுபட்டானாம்! (ஜலப்பிரளயத்திற்கு முன்பு பெண்களோடு கூடிவாழ்ந்த கலகக்கார தேவதூதர்களை இது எவ்வளவாய் நினைப்பூட்டுகிறது!) தெய்வங்கள் எப்படியோ அப்படியே அவற்றின் பக்தர்களும் இருந்தனர். ஆகவே டைபீரியஸ், நீரோ, கலிகூலா போன்ற ரோம பேரரசர்கள் விபச்சாரக்காரர்களாகவும், வேசித்தனக்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும் வாழ்ந்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
38 பல பாரம்பரியங்களைச் சேர்ந்த கடவுட்களை ரோமர்கள் வழிபட ஆரம்பித்தனர். உதாரணமாக, பெர்சியர்களுடைய ஒளியின் கடவுளாகிய மித்ராஸை தங்கள் சூரிய கடவுளாக ஏற்றுக்கொண்டு உற்சாகத்தோடு வணங்கினர்; (பக்கங்கள் 60-1-ல் உள்ள பெட்டியைக் காண்க.) சீரியரின் தேவியான அதர்காட்டிஸையும் (இஷ்டார்) ஏற்றுக்கொண்டனர். கிரேக்க வேட்டைக்காரி ஆர்ட்டிமிஸை டயானாவாக மாற்றினர்; எகிப்திய ஐசிஸை வித்தியாசமான உருவங்களில் வணங்கினர். கெல்டிக் இனத்தாரின் கருவள முக்கடவுட்களான தேவிகளையும்கூட அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.—அப்போஸ்தலர் 19:23-28.
39 நூற்றுக்கணக்கான கோவில்களிலும் வழிபாட்டு தலங்களிலும் பொது வழிபாட்டை நடத்துவதற்காக வித்தியாசமான மத குருமார் இருந்தனர்; இவர்கள் அனைவரும், “தேசிய மதத் தலைவராக இருந்த பான்டிஃபெக்ஸ் மாக்சிமஸ்ஸின் [உன்னத தலைமைக் குருவின்] அதிகாரத்தின் கீழ் செயல்பட்டனர்.” (ரோம உலகின் அட்லஸ் [ஆங்கிலம்]) ரோமர்கள் கடைப்பிடித்து வந்த சடங்குகளில் ஒன்று டௌரோபோலியம் என்பதாகும்; அந்தச் சடங்கின்போது, “ஒரு குழியில் பக்தன் நின்றுகொண்டிருக்க, பலிசெலுத்தப்பட்ட எருதின் இரத்தம் அவன்மேல் ஊற்றப்பட்டது. சடங்கின் முடிவில் அவன் புனிதமடைந்து மாசற்ற நிலையில் வெளியே வந்தான்” எனவும் அந்த அட்லஸ் புத்தகம் குறிப்பிடுகிறது.
கிறிஸ்தவத்தில் புராணங்களும் பழங்கதைகளுமா?
40 கிறிஸ்தவத்திலும்கூட புராணங்களும் பழங்கதைகளும் இருப்பதாக நவீனகால விமர்சகர்கள் சிலர் கூறுகின்றனர். அது உண்மையா? இயேசு ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தது, அவர் அற்புதங்கள் செய்தது, உயிர்த்தெழுப்பப்பட்டது போன்றவை எல்லாம் கட்டுக்கதைகளே என அநேக மேதைகள் சொல்கின்றனர். அவர் ஒருபோதும் வாழ்ந்ததே இல்லை என்றும், அவரைப் பற்றிய கட்டுக்கதை மிகப் பழமையான புராணக்கதையிலிருந்தும் சூரிய வழிபாட்டிலிருந்துமே எடுக்கப்பட்டது என்றும் சிலர் சொல்கின்றனர். புராணவியல் நிபுணர் ஜோசஃப் கேம்பெல் இவ்வாறு எழுதினார்: “யோவான் [ஸ்நானன்] என்றோ இயேசு என்றோ எவருமே ஒருபோதும் இருந்ததில்லை, மாறாக ஒரு நீர்க் கடவுளும் ஒரு சூரியக் கடவுளுமே இருந்தனர் என்பது அநேக மேதைகளின் கருத்து.” ஆனால் இந்த மேதைகளில் பலர் உண்மையில் நாத்திகர்கள், அதாவது கடவுளில் எந்த நம்பிக்கையும் வைக்காதவர்கள் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.
41 இருப்பினும், சரித்திரப்பூர்வ அத்தாட்சியின் முன் இந்த சந்தேகங்கள் எல்லாம் அடிபட்டுப் போய்விடுகின்றன. உதாரணமாக, யூத சரித்திராசிரியர் ஜொசிஃபஸ் (சுமார் பொ.ச. 37-100) இவ்வாறு எழுதினார்: “சில யூதர்களின் கருத்துப்படி, ஏரோதின் படை அழிக்கப்பட்டதற்குக் காரணம் தெய்வ தண்டனையே. அது நீதியுள்ள தண்டனை; ஏனென்றால் யோவான் ஸ்நானனை நடத்திய விதத்திற்காக ஏரோது தண்டிக்கப்பட்டான். அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தபோதிலும் ஏரோது அவரைக் கொன்றுபோட்டான்.”—மாற்கு 1:14; 6:14-29.
42 இயேசு கிறிஸ்து உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கும்கூட இதே சரித்திராசிரியர் அத்தாட்சி அளித்துள்ளார். “இயேசு என்ற ஒருவர் தோன்றினார்; அவரை மனிதன் என்றழைப்பது முறையாக இருக்குமானால், மனிதர்களிலேயே மாமனிதர் எனலாம். . . . அவருடைய சீஷர்கள் அவரைக் கடவுளின் குமாரன் என அழைத்தனர்” என்று எழுதினார். அவர் தொடர்ந்து சொன்னதாவது: “பிலாத்து அவருக்கு மரண தண்டனை விதித்தான் . . . இன்றுகூட அவருடைய பெயரால் அழைக்கப்படும் ‘மேசியானிஸ்ட்டுகள்’ எனும் இனத்தவர் இருக்கத்தான் செய்கிறார்கள்.”f—மாற்கு 15:1-5, 22-26; அப்போஸ்தலர் 11:26.
43 ஆகவே, இயேசு மறுரூபமானதைக் கண்கூடாக கண்ட கிறிஸ்தவ அப்போஸ்தலன் பேதுரு முழு உறுதியோடு இவ்வாறு எழுத முடிந்தது: “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் [கிரேக்கில், மைத்தோஸ்] பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.”—2 பேதுரு 1:16-18.g
44 மனிதனின் “நிபுணத்துவ” கருத்துக்கும் கடவுளுடைய வார்த்தைக்கும் இடையே முரண்பாடு இருக்கையில், பின்வரும் நியமத்தை நாம் பொருத்த வேண்டும்: “சிலர் விசுவாசியாமற் போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? அப்படியாக்க மாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.”—ரோமர் 3:3, 4.
ஒரேவித கருத்துகள்
45 உலக புராணக்கதைகள் சிலவற்றை லேசாக புரட்டிப் பார்த்தது அவற்றில் ஒரேமாதிரியான சில அம்சங்கள் இழையோடுவதை சுட்டிக்காட்டியிருக்கிறது. அவற்றில் அநேகம் பாபிலோனிலிருந்தே, அதாவது பெரும்பாலான மதங்களுக்கு தொட்டிலாக விளங்கிய மெசபடோமியாவிலிருந்தே வந்திருக்கின்றன. படைப்பு பற்றிய விவரங்களிலும் சரி, அரைதெய்வங்களும் இராட்சதர்களும் பூமியில் குடியிருந்தபோது ஜலப்பிரளயம் துன்மார்க்கரை அழித்துப் போட்டதாக சொல்கிற பதிவுகளிலும் சரி, சூரிய வழிபாட்டையும் அழியாத ஆத்மாவையும் பற்றிய அடிப்படை மத கருத்துகளிலும் சரி, ஒரேவித விஷயங்கள் இழையோடுவதைக் காணலாம்.
46 இப்படி ஒரேவிதமான கருத்துகள் இழையோடுவதற்குரிய காரணத்தை பைபிளின் நோக்குநிலையிலிருந்து விளக்க முடியும். 4,200-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு கடவுளுடைய செயலால், மெசபடோமியாவிலிருந்த பாபேலிலிருந்து மனிதர் நாலா புறமும் சிதறிச் சென்றனர். அவர்கள் பிரிந்து சென்று, வித்தியாசப்பட்ட மொழிகளின் அடிப்படையில் குடும்பங்களாகவும் கோத்திரங்களாகவும் வாழ்ந்தபோதிலும், அடிப்படையில் அவர்கள் அறிந்திருந்த வரலாறும் மத கருத்துகளும் ஒன்றாகத்தான் இருந்தன. (ஆதியாகமம் 11:1-9) நூற்றாண்டுகள் கடந்து செல்லச் செல்ல இந்த அடிப்படை கருத்துகள் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் திரிக்கப்பட்டு மெருகூட்டப்பட்டதன் விளைவாக அவை அநேக கற்பனைக் கதைகளாகவும் பழங்கதைகளாகவும் புராணக்கதைகளாகவும் இன்று நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. பைபிள் சத்தியத்திலிருந்து வேறுபட்ட இந்தப் புராணக்கதைகள் மனிதவர்க்கத்தை உண்மையான கடவுளிடம் வழிநடத்த தவறியிருக்கின்றன.
47 இருப்பினும், வேறுபல வழிகளிலும் மனிதன் தன் மத உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறான். உதாரணமாக, ஆவியுலகத் தொடர்பு, பில்லிசூனியம், மாயமந்திரம், மூதாதையர் வழிபாடு போன்றவற்றில் ஈடுபட்டிருக்கிறான். மனிதவர்க்கம் கடவுளைத் தேடியதைப் பற்றி அவை ஏதாவது வெளிக்காட்டுகின்றனவா?
[அடிக்குறிப்புகள்]
a படைப்பை பற்றிய விரிவான விளக்கத்திற்கு யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டுள்ள உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தைக் காண்க.
b புத்த மதம், தாவோ மதம், கன்பூசிய மதம் ஆகியவற்றின் செல்வாக்கினால் உருவான சமீபகால சீன புராணக்கதைகளைப் பற்றி இப்புத்தகத்தில் 6-ம், 7-ம் அதிகாரங்களில் காணலாம்.
c ஜலப்பிரளயம் வரலாற்றுப்பூர்வ உண்மை என்பதை சான்றுகளோடு விளக்கமாக தெரிந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டுள்ள வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொகுதி 1, பக்கங்கள் 327-8, 609-12-ஐக் காண்க.
d கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் “ஹேடீஸ்” பத்து தடவை குறிப்பிடப்படுகிறது; புராணக்கதைகளில் வரும் கதாபாத்திரமாக அல்ல, ஆனால் மனிதவர்க்கத்தின் பொது பிரேதக்குழியாக குறிப்பிடப்படுகிறது. இது, எபிரெயு மொழியில் ஷியோல் என்பதற்கு சமமான கிரேக்க பதம்.—ஒப்பிடுக: சங்கீதம் 16:10; அப்போஸ்தலர் 2:27, கிங்டம் இன்டர்லீனியர்.—யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொகுதி 1, பக்கங்கள் 1015-16-ஐக் காண்க.
e சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கில்காமேஷ் காப்பியத்தின் கதாநாயகன் உட்னாபிஷ்டிமுக்கு, ஊர்ஷாநாபி என்ற படகோட்டி இருந்தான். ஜலப்பிரளயத்தில் தப்பித்தவனை சந்திப்பதற்காக அவன் மரண தண்ணீரைக் கடந்து கில்காமேஷை அழைத்துச் சென்றான்.
f ஹார்வர்ட் பல்கலைக்கழக வெளியீடு, தொகுப்பு IX, பக்கம் 48-ல் காணப்படும் ஜொசிஃபஸின் பாரம்பரிய வாசகத்தின் அடிக்குறிப்பின்படி.
g கிறிஸ்தவ மதத்தைப் பற்றி கூடுதலான தகவலுக்கு அதிகாரம் 10-ஐக் காண்க.
[கேள்விகள்]
1-3. (அ) புராணக்கதைகளைப் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? (ஆ) இந்த அதிகாரத்தில் எதைப் பற்றி சிந்திக்கப் போகிறோம்?
4, 5. கிரேக்க புராணக்கதைகளிலுள்ள சில நம்பிக்கைகள் யாவை?
6. ஜேஸ்பர் க்ரிஃபின் கூறுகிறபடி, பெரும்பாலான கிரேக்க புராணக்கதைகள் எங்கிருந்து வந்திருக்கலாம்?
7. (அ) பண்டைய சீன புராணக்கதைகளைப் பற்றி தகவல் பெறுவது ஏன் எளிதல்ல? (ஆ) பூமியும் மனிதனும் படைக்கப்பட்டதைப் பற்றி சீனர்களுடைய புராணக்கதை ஒன்று என்ன சொல்கிறது? (ஒப்பிடுக: ஆதியாகமம் 1:27; 2:7.)
8. இன்கா புராணக்கதையின்படி மொழிகள் எவ்வாறு தோன்றின?
9. (அ) ஜலப்பிரளயத்துக்கு முன்னால் பூமியிலிருந்த நிலைமைகளைப் பற்றி பைபிள் நமக்கு என்ன சொல்கிறது? (ஆ) ஜலப்பிரளயத்திலிருந்து தப்பிக்க நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் என்ன செய்ய வேண்டியிருந்தது?
10. ஜலப்பிரளயத்தைப் பற்றிய பைபிள் பதிவை வெறும் ஒரு புராணக்கதையாக ஏன் கருத முடியாது?
11. கில்காமேஷ் காப்பியத்தைப் பற்றி எதிலிருந்து அறிய வருகிறோம்?
12. கில்காமேஷ் யார், அவனை ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை? (ஆதியாகமம் 6:1, 2-ஐ ஒப்பிடுக.)
13. (அ) தெய்வங்கள் என்ன நடவடிக்கை எடுத்தன? கில்காமேஷ் என்ன செய்தான்? (ஆ) உட்னாபிஷ்டிம் யார்?
14. (அ) என்ன செய்யும்படி உட்னாபிஷ்டிமிடம் சொல்லப்பட்டது? (ஆதியாகமம் 6:13-16-ஐ ஒப்பிடுக.) (ஆ) கில்காமேஷுடைய பயணக் கதையின் முடிவு என்ன?
15. சுமேரியரின் ஜலப்பிரளய பழங்கதை நமக்கு ஏன் ஆர்வத்திற்குரியது?
16. ஜலப்பிரளயத்தைப் பற்றிய சீன பழங்கதைகள் எங்கிருந்து வந்திருக்கலாம்?
17. அஸ்தெக்குகளுடைய ஜலப்பிரளய பழங்கதைகள் யாவை?
18. தென் அமெரிக்க புராணத்தில் என்ன பதிவுகள் பரவலாக காணப்படுகின்றன? (ஒப்பிடுக: ஆதியாகமம் 6:7, 8; 2 பேதுரு 2:5.)
19. மாயா பழங்குடியினரின் ஜலப்பிரளய பழங்கதையை விவரிக்கவும்.
20. மறுமையைப் பற்றிய அசீரிய-பாபிலோனிய நம்பிக்கை என்ன?
21. மரித்தோருக்கு என்ன நேர்ந்ததாக எகிப்தியர் நம்பினர்?
22. மரித்தோரைப் பற்றி சீனர்களுடைய கருத்து என்ன, மரித்தவர்களுக்கு உதவ என்ன செய்யப்பட்டது?
23. (அ) கிரேக்க புராணக்கதைகளின்படி, யார் மற்றும் எது ஹேடீஸ்? (ஆ) பைபிளின்படி ஹேடீஸ் என்பது என்ன?
24. (அ) கிரேக்க புராணக்கதையின்படி, கீழுலகில் என்ன நடந்தது? (ஆ) கில்காமேஷ் காப்பியத்தோடு கிரேக்க புராணக்கதை எவ்வாறு ஒத்திருந்தது?
25. ஆத்மாவைப் பற்றிய கிரேக்க சிந்தனை யார் மீது செல்வாக்கு செலுத்தியது?
26, 27. அஸ்தெக்கு, இன்கா, மாயா இனத்தவர் மரணத்தை எவ்வாறு கருதினர்?
28. ஆப்பிரிக்காவில் பொதுவாய் நிலவும் சில நம்பிக்கைகள் யாவை?
29. சில தெற்கத்திய ஆப்பிரிக்க பழங்குடியினரின் புராணங்களை விவரிக்கவும். (ஒப்பிடுக: ஆதியாகமம் 2:15-17; 3:1-5.)
30. இந்தப் புத்தகத்தில் ஆத்மாவைப் பற்றி கூடுதலாக நாம் என்ன காண்போம்?
31. (அ) ரா என்ற சூரிய கடவுளைப் பற்றி எகிப்தியர் என்ன நம்பினர்? (ஆ) பைபிள் சொல்வதற்கு இது எவ்வாறு நேர்மாறாக உள்ளது? (சங்கீதம் 19:4-6)
32. ஸியுச்டேகூட்லி (ஹூய்ஹூய்டியோடல்) என்ற அக்கினி தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட ஒரு விழாவை விவரிக்கவும்.
33. (அ) இன்கா வழிபாட்டில் என்ன உட்பட்டிருந்தது? (ஆ) நரபலிகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (ஒப்பிடுக: 2 இராஜாக்கள் 23:5, 11; எரேமியா 32:35; எசேக்கியேல் 8:16.)
34. எகிப்தியர் வணங்கிய முக்கடவுட்களில் பிரபலமானது எது, அவற்றின் ஸ்தானங்கள் என்னென்ன?
35. ஹாத்தோர் யார், ஆண்டுதோறும் அவளுக்கு எடுக்கப்பட்ட முக்கியமான விழா என்ன?
36. (அ) பொ.ச.மு. 16-ம் நூற்றாண்டில் இஸ்ரவேலர் எப்படிப்பட்ட மதச் சூழலில் இருந்தனர்? (ஆ) பத்து வாதைகள் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்ன?
37. (அ) சில ரோம கடவுட்களின் குணங்கள் யாவை? (ஆ) கடவுட்களின் நடத்தை அவர்களுடைய பக்தர்களை எவ்வாறு பாதித்தது? (இ) பவுலும் பர்னபாவும் லீஸ்திராவில் என்ன அனுபவத்தைப் பெற்றனர்?
38. (அ) ரோமில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிபாட்டு முறையை விவரிக்கவும். (ஆ) ரோம போர்வீரன் மீது மதம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது?
39. (அ) ரோம பூசாரிகள் யாருடைய தலைமையில் செயல்பட்டார்கள்? (ஆ) ரோம மத சடங்குகளில் ஒன்றை விவரிக்கவும்.
40. ஆரம்பகால கிறிஸ்தவத்தோடு சம்பந்தப்பட்ட சில சம்பவங்களை அநேக மேதைகள் எவ்வாறு கருதுகின்றனர்?
41, 42. ஆரம்பகால கிறிஸ்தவத்தின் சரித்திரப்பூர்வ உண்மையை ஆதரிப்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
43. கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்க அப்போஸ்தலன் பேதுருவுக்கு என்ன ஆதாரமிருந்தது?
44. மனித கருத்துகளுக்கும் கடவுளுடைய வார்த்தைக்கும் இடையே முரண்பாடு இருந்தால் எந்த பைபிள் நியமத்தைப் பொருத்த வேண்டும்?
45. உலக புராணக்கதைகளில் இழையோடும் ஒரேவித கருத்துகள் யாவை?
46, 47. (அ) புராணக்கதைகள் ஒரே இடத்திலிருந்து ஆரம்பமானதற்கும் அவற்றில் ஒரேவித கருத்துகள் இழையோடுவதற்கும் என்ன பைபிள்பூர்வ விளக்கத்தை நாம் அளிக்க முடியும்? (ஆ) பண்டைய வழிபாட்டு முறை சம்பந்தமாக வேறென்ன அம்சங்களையும் நாம் சிந்திக்க இருக்கிறோம்?
[பக்கம் 43-ன் பெட்டி]
கிரேக்க மற்றும் ரோம கடவுட்கள்
கிரேக்க புராணக்கதைகளில் வரும் அநேக தெய்வங்களும் தேவிகளும் ரோம புராணக்கதைகளிலும் அதேபோன்ற ஸ்தானங்களை வகித்தன. சில உதாரணங்களை பின்வரும் பட்டியலில் காணலாம்.
கிரேக்க கடவுட்கள் ரோம கடவுட்கள் ஸ்தானம்
அப்பொல்லோ அப்பொல்லோ ஒளி, மருத்துவம், கவிதை
ஆகியவற்றின் தெய்வம்
அஃப்ரொடைட் வீனஸ் காதல் தேவி
அதேனா மினெர்வா கலைகளுக்கும் போருக்கும்
ஞானத்திற்கும் தேவி
அஸ்க்லிபியஸ் அஸ்குலேபியஸ் குணப்படுத்தும் தெய்வம்
ஆர்ட்டிமிஸ் டயானா வேட்டைக்கும் மகப்பேறுக்கும் தேவி
ஈராஸ் க்யூப்பிட் காதல் தெய்வம்
ஏரஸ் மார்ஸ் யுத்த தெய்வம்
காயா டெர்ரா பூமியின் சின்னம், யுரேனஸின்
தாயும் மனைவியும்
குரோனஸ் சாட்டர்ன் கிரேக்கருக்கு இராட்சதர்களின் அரசர்;
ஸீயஸின் தந்தை. ரோம புராணங்களில்
வேளாண்மை தெய்வமும்கூட
டமட்டர் சையரஸ் வளர்பொருட்களின் தேவி
டயோனிசஸ் பாக்கஸ் மதுவுக்கும் கருவளத்திற்கும்
காட்டுமிராண்டித்தன நடத்தைக்கும் தெய்வம்
பாசைடான் நெப்டியூன் சமுத்திர தெய்வம்.
கிரேக்க புராணக்கதைகளில், நிலநடுக்கம்
மற்றும் திரைகளின் தெய்வமும்கூட
புளூட்டோ, ஹேடீஸ் புளூட்டோ கீழுலக தெய்வம்
யுரேனஸ் யுரேனஸ் காயேவின் மகனும் கணவனும்
இராட்சதர்களின் தகப்பனும்கூட
ரியா ஓப்ஸ் குரோனஸின் மனைவியும் சகோதரியும்
ஸீயஸ் ஜூப்பிட்டர் தெய்வங்களின் அரசன்
ஹிப்னாஸ் சோம்னஸ் நித்திரை தெய்வம்
ஹிரா ஜூனோ திருமணம் மற்றும் பெண்களின் பாதுகாவலர்;
கிரேக்கருக்கு ஸீயஸின் சகோதரியும் மனைவியும்;
ரோமர்களுக்கு ஜூப்பிட்டரின் மனைவி
ஹெபேயிஸ்டஸ் வல்கன் தெய்வங்களின் கொல்லனும், அக்கினி
மற்றும் உலோகத் தொழிலின் தெய்வமும்
ஹெர்மிஸ் மெர்க்குரி தெய்வங்களின் தூதுவர்; வர்த்தகம்,
அறிவியலின் தெய்வம்; பயணிகள்,
திருடர்கள், நாடோடிகள்
ஆகியோரின் பாதுகாவலர்
ஹெஸ்டியா வெஸ்டா அடுப்படியின் தேவி
ஆதாரம்: த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா, 1987, தொகுதி 13.
[பக்கம் 45-ன் பெட்டி]
அசீரிய-பாபிலோனிய தெய்வங்களும் தேவிகளும்
அனு—உன்னத தெய்வம், வானுலகை ஆளுபவர்; இஷ்டாரின் தந்தை
அஸூர்—அசீரியர்களின் தேசிய போர் தெய்வம்; கருவள தெய்வமும்கூட
இஷ்டார்—வீனஸ் கோளத்தின் தெய்வீக வடிவு; புனித விலைமாதர் தொழில் அவளுடைய வழிபாட்டின் பாகம். பெனிக்கியாவில் அவள் அஸ்டார்ட், சிரியாவில் அதர்காட்டிஸ், பைபிளில் அஸ்தரோத் (1 இராஜாக்கள் 11:5, 33), கிரீஸில் அஃப்ரொடைட், ரோமில் வீனஸ்
ஈயா—தண்ணீர் தெய்வம். மார்டுக்கின் தந்தை. ஜலப்பிரளயத்தைக் குறித்து உட்னாபிஷ்டிமை எச்சரித்தவர்
என்லில் (பெல்)—வாயு தெய்வம்; பிற்பாடு கிரேக்க புராணங்களில் ஸீயஸாக வணங்கப்பட்டார். மார்டுக் (பெல்) என்ற பெயரில் பாபிலோனியர் வணங்கினர்
சின்—சந்திர கடவுள்; முக்கடவுட்களில் ஓர் அங்கம், அதில் மற்ற இரு அங்கங்கள் ஷமாஷ் (சூரியன்) மற்றும் இஷ்டார் (வீனஸ் கோளம்)
தம்மூஸ் (டுமுஸி)—அறுவடை தெய்வம். இஷ்டாரின் காதலன்
மார்டுக்—முதல் பாபிலோனிய தெய்வம்; “எல்லா தெய்வங்களின் உருவாக அவற்றின் பல்வேறு கடமைகளையும் ஏற்றுக்கொண்டவர்.” இஸ்ரவேலர் மெரொதாக் என்று அழைத்தனர்
ஷமாஷ்—சூரிய கடவுள்; ஒளி மற்றும் நீதியின் கடவுள். கிரேக்க அப்பொல்லோவின் முன்னோடி
(ஆதாரம்: நியூ லாரோஸி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் மித்தாலஜி)
[பக்கம் 60, 61-ன் பெட்டி/படங்கள்]
ரோம போர்வீரனின் கடவுட்கள்
படையை கட்டுக்கோப்பாக வைத்திருந்ததற்கு ரோம் பெயர் பெற்றிருந்தது. இராணுவ அணியின் மனபலமும் திறமையுமே அந்தப் பேரரசின் ஒற்றுமைக்கு அடிப்படை காரணம். அதற்கு மதம் பங்களித்ததா? ஆம்; நமக்கு பயனளிக்கும் விதத்தில் நெடுஞ்சாலைகள், அரண்கள், கால்வாய்ப் பாலங்கள், அரங்கங்கள், ஆலயங்கள் ஆகியவற்றை ரோமர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள், இவை அவர்களுடைய பணிக்குத் தெளிவான அத்தாட்சியாக உள்ளன. உதாரணமாக, வட இங்கிலாந்திலுள்ள நார்த்தம்பிரியாவில் சுமார் பொ.ச. 122-ல் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற ஹேட்ரியன் சுவர் (Hadrian’s Wall) இதற்கு ஓர் அத்தாட்சியாகும். ரோம காவற்படையின் நடவடிக்கைகள் குறித்தும் மதத்தின் பங்கு குறித்தும் அகழாய்வுகள் என்ன வெளிப்படுத்தி இருக்கின்றன?
ஹேட்ரியன் சுவருக்கு அருகே ரோம காவற்படை கோட்டையின் இடிபாடுகள் உள்ளன. அதனருகே அமைக்கப்பட்டுள்ள ஹௌஸ்டெட்ஸ் அருங்காட்சியகத்தில் ஒரு பொருளின் மீது காணப்படும் வாசகம் இவ்வாறு கூறுகிறது: “ஒரு ரோம போர்வீரனின் ஆன்மீக வாழ்க்கை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதலாவதாக . . . பேரரசர்களை தெய்வங்களாக வழிபடுவதும், ஜூப்பிட்டர், விக்டரி, மார்ஸ் போன்ற ரோமர்களின் காவல் தெய்வங்களை வழிபடுவதும் இடம்பெற்றது. ஒவ்வொரு கோட்டையின் அணிவகுப்பு மைதானத்திலும் ஜூப்பிட்டருக்காக ஆண்டுதோறும் ஒரு பலிபீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தெய்வங்களாக வழிபடப்பட்ட பேரரசர்களின் பிறந்த நாட்களையும், பதவியேற்பு நாட்களையும், வெற்றிகளையும் கொண்டாடியபோது அதில் அனைத்து போர்வீரர்களும் கலந்துகொள்ளும்படி எதிர்பார்க்கப்பட்டனர்.” மதகுருக்கள், பீடங்கள், கொடிகள் ஆகியவை இராணுவ வழிபாட்டின் முக்கிய அங்கங்களாக இருந்தன; இன்றைய இராணுவ சம்பிரதாயங்களுடன் இவை எவ்வளவாய் ஒத்திருக்கின்றன!
ஆனால், ரோம போர்வீரனுடைய ஆன்மீக வாழ்க்கையின் இரண்டாவது அம்சம் என்ன? காவல் தெய்வங்களையும், அவர்களது குறிப்பிட்ட இராணுவ பிரிவின் காவல் ஆவியையும், “அவர்களுடைய சொந்த நாட்டிலிருந்து கொண்டு வந்த தெய்வங்களையும்” வழிபடுவதாகும்.
“கடைசி அம்சத்தில், தனிப்பட்டவருடைய வழிபாட்டு முறைகளும் இடம்பெற்றன. அதிகாரப்பூர்வமான வழிபாட்டு முறைகளை ஒரு போர்வீரன் கடைப்பிடித்த பிறகே, தான் விரும்பிய எந்தக் கடவுளையும் வணங்க அனுமதி இருந்தது.” போர் வீரர்களுக்கு அதிக மத சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்ததைப் போல் தோன்றினாலும், “சில விதிவிலக்குகள் இருந்தன. உதாரணமாக, மனிதநேயமற்ற பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதாக கருதப்பட்ட பண்டைய கெல்டிக் இனத்தவரின் மதத்தையும், தேசப்பற்று இல்லாததாக சந்தேகிக்கப்பட்ட கிறிஸ்தவம் போன்ற மதங்களையும் தழுவ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.”—ஒப்பிடுக: லூக்கா 20:21-25; 23:1, 2; அப்போஸ்தலர் 10:1, 2, 22.
1949-ல், மித்ராஸுக்கு கட்டப்பட்ட ஓர் ஆலயம் ஹேட்ரியன் சுவருக்கு மிக அருகே காரோபர்க்கிலுள்ள ஒரு சதுப்பு நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதானது ஆர்வத்திற்குரிய விஷயம். (புகைப்படத்தைக் காண்க.) அது சுமார் பொ.ச. 205-ல் கட்டப்பட்டதென புதைபொருள் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அந்த ஆலயத்தில் சூரியக் கடவுளின் உருவமும், பலிபீடங்களும், “வெல்ல முடியாத தெய்வமான மித்ராஸுக்கு” என்ற லத்தீன் எழுத்து பொறிப்பும் காணப்படுகின்றன.
[பக்கம் 62-ன் பெட்டி]
எகிப்தியரின் தெய்வங்களும் பத்து வாதைகளும்
பத்து வாதைகளால் எகிப்தியரின் வலிமையற்ற தெய்வங்கள் மீது யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றினார்.—யாத்திராகமம் 7:14–12:32.
வாதை விளக்கம்
1 நைல் நதியும் மற்ற நீர்நிலைகளும் இரத்தமாக மாறுதல்.
நைல்-தெய்வம் ஹாப்பிக்கு அவமானம்
2 தவளைகள். ஹெக்ட் என்ற தவளை தேவிக்கு அதைத் தடுக்க திராணியிருக்கவில்லை
3 பூமியின் புழுதி பேன்களாய் மாறுதல். தோத் என்ற மாயமந்திர தெய்வத்தால் எகிப்திய
மந்திரவாதிகளுக்கு உதவ முடியவில்லை
4 எகிப்து தேசம் முழுவதும் வண்டுகள். இஸ்ரவேலர் குடியிருந்த கோசேன் நாடு மட்டுமே
இதற்கு விதிவிலக்கு. எந்தத் தெய்வத்தாலும் அதைத் தடுக்க முடியவில்லை; ட்டா என்ற பிரபஞ்சத்தின்
படைப்பாளரால் அல்லது தோத் என்ற மாயமந்திர தெய்வத்தால்கூட அதைத் தடுக்க முடியவில்லை
5 மிருக ஜீவன்கள் மீது கொள்ளைநோய். ஹாத்தோர் என்ற புனித பசு தேவியால் அல்லது
ஏபிஸ் என்ற எருது தெய்வத்தால்கூட இந்தக் கொள்ளைநோயை தடுக்க முடியவில்லை
6 கொப்புளங்கள். குணப்படுத்தும் தெய்வங்களாகிய தோத், ஐசிஸ், ட்டா
ஆகியவற்றால்கூட உதவ முடியவில்லை
7 இடிமுழக்கமும் கல்மழையும். மின்னலை கட்டுப்படுத்தும் ரேஷ்பூ,
மழைக்கும் இடிமுழக்கத்துக்குமுரிய தெய்வம் தோத் ஆகியவற்றின்
இயலாமையை வெளிப்படுத்தியது
8 வெட்டுக்கிளிகள். பயிர்களின் பாதுகாவலனும்
கருவள தெய்வமுமான மின்னுக்கு இது பேரடி
9 மூன்று நாட்களுக்கு காரிருள். முக்கியமான சூரியக் கடவுள் ராவுக்கும் மற்றொரு
சூரியக் கடவுளான ஹோரஸுக்கும் அவமானம்
10 தலைப்பிள்ளைகளின் மரணம், தெய்வ அவதாரமாக கருதப்பட்ட
பார்வோனுடைய பிள்ளையும் விதிவிலக்கல்ல.
சில சமயங்களில் ஆட்டுக்கடாவாக பிரதிநிதித்துவம் செய்யப்படும் ரா (ஆமன்-ரா)
என்ற சூரியக் கடவுளாலும் இதைத் தடுக்க முடியவில்லை
[பக்கம் 66-ன் பெட்டி]
புராணக்கதைகளும் கிறிஸ்தவமும்
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதம் தோன்றியபோது பண்டைய கிரீஸிலும் ரோமிலும், புராண தெய்வங்களின் வழிபாடு மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆசியா மைனரில் இன்னமும் கிரேக்கப் பெயர்களே வழக்கில் இருந்து வந்தன. கிறிஸ்தவர்களான பவுலும் பர்னபாவும் சுகப்படுத்தியபோது லீஸ்திராவின் (தற்கால துருக்கி) மக்கள் அவர்களை ஹெர்மிஸ், ஸீயஸ் என்ற “தெய்வங்களாக” அழைத்ததிலிருந்து இதை தெரிந்துகொள்ளலாம். மெர்க்குரி, ஜூப்பிட்டர் என்று ரோம கடவுட்களின் பெயர்களில் அவர்களை அழைக்கவில்லை. “பட்டணத்துக்கு எதிரிலிருந்த ஸீயஸ் கோவில் பூஜாரி காளைகளையும் பூமாலைகளையும் வாயிலுக்கு கொண்டுவந்து, ஜனங்களோடே சேர்ந்து பலியிட விரும்பினான்” என பதிவு சொல்கிறது. (அப்போஸ்தலர் 14:8-18, NW) ஜனங்கள் தங்களுக்கு பலி செலுத்துவதை தடுக்க பவுலும் பர்னபாவும் பெரும்பாடுபட்டனர். அக்காலத்தில், புராணக்கதைகளுக்கு மக்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதை இது காட்டுகிறது.
[பக்கம் 42-ன் படம்]
தெய்வங்களின் வாழிடமாக கருதப்படும் ஒலிம்பஸ் மலை, கிரீஸ்
[பக்கம் 47-ன் படம்]
கில்காமேஷ் காப்பியத்தின் ஒரு பகுதியை ஆப்புவடிவ எழுத்தில் கொண்டுள்ள களிமண் பலகை
[பக்கம் 50-ன் படம்]
இடது பக்க தராசில் இருதய-ஆன்மாவையும் வலது பக்க தராசில் ஒரு இறகையும் வைத்து எடைபோடும் அனுபிஸ் எனும் நரித்தலை தெய்வம்; இந்த இறகு, சத்தியம் மற்றும் நீதி தேவியான மாத்தை அடையாளப்படுத்துகிறது; முடிவை ஓசைரிஸுக்கு அறிவிப்பதற்கு முன்பு, தோத் அதை ஒரு பலகையில் எழுதுகிறார்
[பக்கம் 55-ன் படங்கள்]
அஸ்தெக்குகளின் நன்னீர் தேவதை சால்சியுட்லிகு; ஆந்தை வடிவ பாத்திரத்தில் ஒரு சிறிய குழிவு உள்ளது; பலிசெலுத்தப்பட்டோரின் இதயங்கள் அங்கு வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது
[பக்கம் 57-ன் படம்]
எகிப்திய முக்கடவுட்கள்: இடமிருந்து, ஹோரஸ், ஓசைரிஸ், ஐசிஸ்
[பக்கம் 58-ன் படங்கள்]
பெருவிலுள்ள மச்சு பிச்சுவில், இன்கா சூரிய வழிபாடு பின்பற்றப்பட்டது
உள் படம்: இன்டிஹுடானா, சூரியன் “கட்டி வைக்கப்பட்ட ஸ்தூபி,” மச்சு பிச்சுவில் சூரிய வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்
[பக்கம் 63-ன் படங்கள்]
ஹோரஸ் என்ற இராசாளி, ஏபிஸ் என்ற எருது, ஹெக்ட் என்ற தவளை ஆகியவற்றின் உருவங்கள். நைல் நதி இரத்தமாக மாறியது உட்பட யெகோவா அனுப்பிய வாதைகளை எகிப்திய தெய்வங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை
[பக்கம் 64-ன் படங்கள்]
கிரேக்க கடவுட்கள், இடமிருந்து: அஃப்ரொடைட்; தெய்வங்களுக்கு மது பரிமாறும் கணிமீட் என்பவரை ஸீயஸ் தூக்கிக் கொண்டிருக்கிறார்; ஆர்ட்டிமிஸ்