எசேக்கியேல்
8 ஆறாம் வருஷம்,* ஆறாம் மாதம், ஐந்தாம் நாள் நான் என்னுடைய வீட்டில் உட்கார்ந்திருந்தேன். யூதாவின் பெரியோர்கள்* என்முன் வந்து உட்கார்ந்திருந்தார்கள். அப்போது, உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சக்தியால் நான் நிரப்பப்பட்டேன்.* 2 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, நெருப்புபோல் ஒருவர் தெரிந்தார். அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகத்துக்குக் கீழாக நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.+ அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகத்துக்கு மேலாக, வெள்ளியும் தங்கமும் கலந்த உலோகத்தைப் போலப் பிரகாசமாக இருந்தது.+ 3 கைபோல் தெரிந்த ஒன்றை அவர் நீட்டி, என்னுடைய தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினார். கடவுள் காட்டிய தரிசனத்தில் ஒரு சக்தி என்னை வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தூக்கிக்கொண்டு போய், எருசலேம் ஆலயத்தில் வடதிசைக்கு எதிராக இருந்த உள்வாசலில் விட்டது.+ அங்கே கடவுளுக்கு எரிச்சல் மூட்டுகிற சிலை வைக்கப்பட்டிருந்தது.+ 4 இஸ்ரவேலின் கடவுளுடைய மகிமை அங்கே தெரிந்தது.+ நான் சமவெளியில் பார்த்த மகிமையைப் போலவே அது இருந்தது.+
5 அப்போது அவர் என்னிடம், “மனிதகுமாரனே, தயவுசெய்து வடக்கே பார்” என்று சொன்னார். நானும் வடக்கே பார்த்தேன். கடவுளுக்கு எரிச்சல் மூட்டுகிற அந்தச் சிலை பலிபீடத்தின் வடக்கிலுள்ள நுழைவாசலில் இருந்தது. 6 அப்போது அவர், “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்கள் எப்படிப்பட்ட மோசமான காரியங்களை அங்கே செய்கிறார்கள் என்று பார்த்தாயா?+ நான் என்னுடைய ஆலயத்தைவிட்டுத் தூரமாகப் போகுமளவுக்கு அருவருப்பான காரியங்களை அவர்கள் செய்கிறார்கள்.+ ஆனால், இதைவிட அருவருப்பான காரியங்களை நீ பார்க்கப்போகிறாய்” என்று சொன்னார்.
7 பின்பு, ஆலயப் பிரகார வாசலுக்கு என்னைக் கொண்டுபோனார். அங்கே இருந்த சுவரில் நான் ஒரு ஓட்டையைப் பார்த்தேன். 8 அப்போது அவர், “மனிதகுமாரனே, தயவுசெய்து அந்த ஓட்டையைப் பெரிதாக்கு” என்றார். நான் அதைப் பெரிதாக்கியபோது, ஒரு நுழைவாசல் தெரிந்தது. 9 அவர் என்னிடம், “உள்ளே போய், அவர்கள் செய்கிற அக்கிரமங்களையும் அருவருப்பான காரியங்களையும் பார்” என்று சொன்னார். 10 நானும் உள்ளே போய்ப் பார்த்தேன். ஊரும் பிராணிகளின் உருவங்களும், அருவருப்பான மிருகங்களின்+ உருவங்களும், இஸ்ரவேல் ஜனங்களுடைய எல்லா அருவருப்பான* சிலைகளும்+ சுவரெங்கும் செதுக்கப்பட்டிருந்தன. 11 இஸ்ரவேல் ஜனங்களின் பெரியோர்களில் 70 பேர் அவற்றுக்குமுன் நின்றுகொண்டிருந்தார்கள். சாப்பானின்+ மகனான யசினியாவும் அங்கு இருந்தான். ஒவ்வொருவரும் ஒரு தூபக்கரண்டியைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். தூபத்தின் புகை மேலே எழும்பிக்கொண்டிருந்தது.+ 12 அப்போது அவர், “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்களின் பெரியோர்கள் ஒவ்வொருவரும் சிலைகளை வைத்திருக்கிற இருட்டான உள்ளறைகளில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தாயா? ‘யெகோவா நம்மைப் பார்ப்பதில்லை. யெகோவா இந்தத் தேசத்தைக் கைவிட்டுவிட்டார்’+ என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார்.
13 பின்பு என்னிடம், “அவர்கள் இதைவிட மிகவும் அருவருப்பான காரியங்கள் செய்வதை நீ பார்க்கப்போகிறாய்” என்று சொன்னார். 14 யெகோவாவுடைய ஆலயத்தின் வடக்கு நுழைவாசலுக்கு அவர் என்னைக் கொண்டுபோனார். அங்கே பெண்கள் உட்கார்ந்து தம்மூஸ் தெய்வத்துக்காக அழுதுகொண்டிருந்தார்கள்.
15 அப்போது அவர், “மனிதகுமாரனே, இதைப் பார்த்தாயா? ஆனால், இதைவிட அதிக அருவருப்பான காரியங்களை நீ பார்க்கப்போகிறாய்”+ என்றார். 16 பின்பு, யெகோவாவுடைய ஆலயத்தின் உட்பிரகாரத்துக்கு என்னைக் கொண்டுபோனார்.+ யெகோவாவுடைய ஆலய வாசலிலே, நுழைவு மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட 25 ஆண்கள் இருந்தார்கள். யெகோவாவுடைய ஆலயத்தின் பக்கம் முதுகைத் திருப்பிக்கொண்டு, கிழக்கே பார்த்து சூரியனைக் கும்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.+
17 அப்போது அவர், “மனிதகுமாரனே, இதைப் பார்த்தாயா? யூதா ஜனங்கள் இந்த அருவருப்பான காரியங்களைச் செய்து, தேசத்தை வன்முறையால் நிரப்பி,+ என் கோபத்தைக் கிளறுவது சின்ன விஷயமா? இதோ, என் மூக்குக்கு நேராகவே கிளையை* நீட்டுகிறார்கள். 18 அதனால், நான் கோபத்தில் கொதித்தெழுவேன். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட மாட்டேன். அவர்கள்மேல் கரிசனை காட்ட மாட்டேன்.+ அவர்கள் எவ்வளவுதான் சத்தமாக அழுதாலும் நான் கேட்க மாட்டேன்”+ என்று சொன்னார்.