யூத நாட்காட்டி எந்தளவுக்கு துல்லியமானது?
யூத நாட்காட்டியின்படி, செப்டம்பர் 16, 1993, வியாழக்கிழமை, ரோஷ் ஹஷோனா என்ற பண்டிகை நாளாக இருந்தது. பாரம்பரியத்தின்படி, புத்தாண்டின் வரவை அறிவிப்பதற்காக ஷோஃபார், அல்லது ஆட்டுக்கடா கொம்பு எக்காளம் அப்போது ஊதப்பட்டது. அந்த வருடம் 5754 (யூத நாட்காட்டி); அது செப்டம்பர் 16, 1993 முதல் செப்டம்பர் 5, 1994 வரையாகச் செல்கிறது.
யூத காலக்கணக்கீட்டிற்கும் மேற்கத்திய, அல்லது தற்போது பொது வழக்கில் இருக்கிற கிரிகோரியன் நாட்காட்டிக்கும் இடையே 3,760 வருட வித்தியாசம் இருப்பதை நாம் உடனடியாகவே கவனிக்கிறோம். ஏன் இந்த வித்தியாசம் இருக்கிறது? மேலும் இந்த யூத நாட்காட்டி எவ்வளவு துல்லியமானதாக இருக்கிறது?
துவக்க முனையை நிர்ணயித்தல்
காலத்தைக் கணக்கிடும் எந்த முறையும் ஒரு குறிப்பிட்ட துவக்க முனையை அல்லது சுட்டு முனையை உடையதாய் இருக்கவேண்டும். உதாரணமாக, இயேசு கிறிஸ்து பிறந்ததாக எண்ணப்பட்டிருக்கிற வருடத்திலிருந்து கிறிஸ்தவமண்டலம் காலத்தைக் கணக்கிடுகிறது. அப்போது முதற்கொண்டுள்ள தேதிகள் கிறிஸ்தவ சகாப்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றன. அவை பெரும்பாலும், கி.பி. (A.D.) என்ற குறியீட்டால் குறிப்பிடப்படுகின்றன; இது “ஆண்டவருடைய வருடத்தில்” என்று அர்த்தங்கொள்ளும் அன்னோ டாமினி என்ற லத்தீன் பதத்திலிருந்து வருகிறது. அந்தக் காலப்பகுதிக்கு முன்னான தேதிகள் கி.மு. (B.C.), “கிறிஸ்துவுக்கு முன்,” என்பதாகக் குறிக்கப்படுகின்றன.a அதேவிதமாக, பாரம்பரிய சீனர்கள், மஞ்சள் இன பேரரசனாகிய பழங்கதை சார்ந்த ஹுவாங்-டி என்பவனுடைய ஆட்சியின் தொடக்கமான பொ.ச.மு. 2698-லிருந்து காலத்தைக் கணக்கிடுகின்றனர். இவ்வாறாக, பிப்ரவரி 10, 1994, சீன சந்திர வருடம் 4692-ன் தொடக்கத்தைக் குறித்தது. ஆனால், யூத நாட்காட்டியைப் பற்றியதென்ன?
தி ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “ஒரு சம்பவத்தின் தேதியைப் பதிவு செய்வதில் யூதர்கள் மத்தியில் தற்போதைய பொது முறை என்னவென்றால், உலக சிருஷ்டிப்பு முதற்கொண்டு கடந்துசென்றிருக்கிற வருடங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுவதாகும்.” யூதர்கள் மத்தியில் சிருஷ்டிப்பின் சகாப்தம் என்றறியப்படும் இந்த முறை, சுமார் பொ.ச. ஒன்பதாம் நூற்றாண்டில் பொது வழக்கிற்கு வந்தது. இவ்வாறாக, யூத நாட்காட்டியிலுள்ள தேதிகளுக்குமுன் பொதுவாக A.M. என்ற குறியீடு காணப்படுகிறது. அது “உலக சிருஷ்டிப்பு முதல்” என்று அர்த்தங்கொள்ளும் அப் கிரியாடியோனி முன்டி என்பதன் சுருக்க வடிவான ஆனோ முன்டியைக் குறிப்பதாக இருக்கிறது. இந்தக் காலக்கணிப்பு முறையின்படி இந்த நடப்பாண்டு A.M. 5754-ஆக இருப்பதால், “உலக சிருஷ்டிப்பு” 5,753 வருடங்களுக்கு முன் சம்பவித்திருப்பதாகக் கருதப்படுகிறது. அந்தக் காலம் எவ்வாறு கணிக்கப்படுகிறது என்று நாம் பார்ப்போம்.
“சிருஷ்டிப்பின் சகாப்தம்”
என்ஸைக்ளோப்பீடியா ஜூடெய்க்கா (1971) இந்த விளக்கத்தை அளிக்கிறது: “பல்வேறு யூத மதக் குருமாரின் கணிப்புகளில், ‘சிருஷ்டிப்பின் சகாப்தம்’ பொ.ச.மு. 3762-க்கும் 3758-க்கும் இடைப்பட்ட வருடங்கள் ஒன்றின் இலையுதிர் காலத்தில் தொடங்கியது. என்றாலும், பொ.ச.மு. 3761-ல் (சரியாகச் சொன்னால், அந்த வருடம் அக்டோபர் 7-ல்) ‘சிருஷ்டிப்பின் சகாப்தம்’ தொடங்கியதாக பொ.ச. 12-ம் நூற்றாண்டு முதற்கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கணிப்பு அம்சங்களிலும் பைபிளுக்குப் பின்வந்த ஆரம்பகால யூத இலக்கியத்தின் கணக்குகளிலும் உள்ள ஒத்த நிகழ்வுகளை இந்தக் கணிப்பு அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது.”
“உலக சிருஷ்டிப்பு” முதல் காலக்கணக்கீடு செய்யும் முறை, முக்கியமாக பைபிள் பதிவைப்பற்றிய யூத மதக் குருக்களுடைய விளக்கங்களின் அடிப்படையிலானவை ஆகும். உலகமும் அதிலுள்ள யாவும் சொல்லர்த்தமான ஆறு 24-மணிநேர நாட்களில் சிருஷ்டிக்கப்பட்டன என்ற அவர்களுடைய நம்பிக்கையின் காரணமாக, யூத மதக் குருவர்க்க அறிஞர்களும் கிறிஸ்தவமண்டல அறிஞர்களும், உலகம் சிருஷ்டிக்கப்பட்ட அதே வருடத்திலேயே முதல் மனிதனாகிய ஆதாமும் சிருஷ்டிக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். ஆயினும், இது துல்லியத்திற்கு மிகவும் அப்பாற்பட்டதாக இருக்கிறது.
ஆதியாகமத்தின் முதல் அதிகாரம் இவ்விதமாகக் குறிப்பிடுவதாய் ஆரம்பிக்கிறது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” பின்னர் அடுத்தடுத்துவந்த ஆறு “நாட்களில்,” பூமியை “ஒழுங்கின்மையும் வெறுமையுமாய்” இருந்த நிலையிலிருந்து மனிதர் குடியிருப்பதற்கு ஏற்ற இடமாக மாற்றியமைக்க கடவுள் என்ன செய்தார் என்பதை விளக்கிக்கொண்டு செல்கிறது. (ஆதியாகமம் 1:1, 2) இந்த இரண்டு படிநிலைகளுக்கும் இடையே லட்சக்கணக்கான வருடங்கள் கடந்துசென்றிருக்கலாம். மேலுமாக, சிருஷ்டிப்பின் நாட்கள் 24-மணிநேர காலப்பகுதிகள் அல்ல; சிருஷ்டிகரின் செயல்கள் அப்படி ஒரு வரம்புக்குக் கட்டுப்பட்டிருந்ததுபோல் அவ்வாறு இருக்கவில்லை. இந்தச் சூழமைவில் ஒரு “நாள்” என்பது 24 மணிநேரத்தைவிட நீண்டதாக இருக்கலாம் என்பது ஆதியாகமம் 2:4-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது; அங்கு சிருஷ்டிப்பின் எல்லா காலப்பகுதிகளையும் ஒரு “நாளிலே” என்பதாகச் சொல்கிறது. முதல் சிருஷ்டிப்பின் நாளுக்கும் ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட ஆறாவதுக்கும் இடையே ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்துசென்றன. ஆதாமுடைய சிருஷ்டிப்பின் காலத்தை இயற்பொருள் சார்ந்த வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட அதே காலமாகக் கணக்கிடுவது வேதப்பூர்வமானதாகவும் இல்லை, அறிவியல்பூர்வமானதாகவும் இல்லை. இருந்தபோதிலும், “சிருஷ்டிப்பின் சகாப்தம்” பொ.ச.மு. 3761-ல் தொடங்கியது என்பதாக எவ்வாறு கணக்கிடப்பட்டது?
காலக்கணக்கிற்கான அடிப்படை
வருந்தத்தக்கவிதத்தில், ஆராய்விலுள்ள கணிப்புகள் ஆதரமாகக் கொண்டிருந்த அநேக யூத இலக்கியங்கள் இப்போது இல்லை. சேடர் ஆலாம் (உலகின் ஒழுங்கு) என்றழைக்கப்பட்ட காலக்கணிப்பு படைப்பு ஒன்றே நிலைத்திருக்கிறது. இது பொ.ச. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தல்மூடிய அறிஞர் யாசே பென் ஹாலாஃப்டாவின் படைப்பென சொல்லப்படுகிறது. (சேடர் ஆலாம் ஸூட்டா என்ற தலைப்பை உடைய இடைநிலைக் கால வரிசைக்கிரம விவரப்பதிவிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும்படி, பின்னர் சேடர் ஆலாம் ராபா என்றழைக்கப்பட்ட) இந்தப் படைப்பு, ஆதாமிலிருந்து தொடங்கி பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் பொய் மேசியாவான பார் காக்பாவின்கீழ் ரோமிற்கு எதிரான யூத எதிர்ப்பு வரையான காலக்கிரம சரித்திரப்பதிவை அளிக்கிறது. அந்த எழுத்தாளர் அப்படிப்பட்ட தகவலை எப்படிப் பெற்றார்?
யாசே பென் ஹாலாஃப்டா பைபிள் பதிவை பின்பற்ற முயன்றபோதிலும், உட்பட்டிருந்த தேதிகளைக் குறித்து அந்த வாசகமானது தெளிவாக இல்லாத இடங்களில் தன் சொந்த விளக்கங்களைச் சேர்த்துக்கொண்டார். “அநேக சம்பவங்களில், . . . அவர் பாரம்பரியத்திற்கேற்ப தேதிகளைக் கொடுத்து, இதைத்தவிர, முன்னிருந்த யூத மதக் குருக்கள் மற்றும் அவருக்கு ஒத்தகாலத்தவர்களின் வாசகங்களையும் ஹாலாகாட்டையும் [பாரம்பரியங்களை] இடையில் சேர்த்தார்,” என்பதாக தி ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. மற்றவர்கள் இன்னும் கடுமையாக மதிப்பிடுகின்றனர். யூத அறிவைப் பற்றிய புத்தகம் (The Book of Jewish Knowledge) உறுதியாகக் கூறுகிறது: “அவர் சிருஷ்டிப்பின் சகாப்தத்திலிருந்து கணக்கிட்டு, அதற்கேற்றபடி, முதல் மனிதனாகிய ஆதாமிலிருந்து மகா அலெக்ஸான்டர் வரையாகச் சம்பவித்ததாக எண்ணப்பட்ட பல்வேறு யூத சம்பவங்களுக்கு ஆதாரமின்றி நம்பப்பட்ட தேதிகளைக் குறித்துக்காட்டியிருக்கிறார்.” ஆனால் அப்படிப்பட்ட விளக்கங்களும் இடைசேர்த்தல்களும் யூத காலக்கணக்கின் துல்லியத்தையும் நம்பகத் தன்மையையும் எப்படி பாதித்தன? நாம் பார்க்கலாம்.
பாரம்பரியங்களும் விளக்கங்களும்
யூத மதக் குருக்களின் பாரம்பரியத்தின்படி, எருசலேமிலுள்ள இரண்டாவது தேவாலயம் மொத்தம் 420 வருடங்களுக்கு நிலைத்திருந்ததாக யாசே பென் ஹாலாஃப்டா கணக்கிட்டார். தானியேல் தீர்க்கதரிசனத்தின் “எழுபது வாரங்கள்,” அல்லது 490 வருடங்களைக் குறித்த யூத மதக் குருக்களின் விளக்கத்தை இது அடிப்படையாகக் கொண்டிருந்தது. (தானியேல் 9:24) இந்தக் காலப்பகுதி, முதல் தேவாலயத்தின் அழிவிற்கும் இரண்டாவதின் அழிவிற்கும் இடைப்பட்ட காலத்திற்குப் பொருத்தப்பட்டது. பாபிலோனிய நாடுகடத்தலுக்கு 70 வருடங்களை வைத்துவிட்டு, இரண்டாம் தேவாலயம் 420 வருடங்கள் நிலைத்திருந்தது என்ற முடிவுக்கு வந்தார் யாசே பென் ஹாலாஃப்டா.
என்றாலும், இந்த விளக்கம் ஒரு சிக்கலான பிரச்சினைக்குள்ளாகிறது. பாபிலோன் வீழ்ச்சியடைந்த வருடமும் (பொ.ச.மு. 539) இரண்டாம் தேவாலய அழிவின் வருடமும் (பொ.ச. 70) அறியப்பட்ட வரலாற்றுக்குரிய தேதிகள். எனவே, இரண்டாம் தேவாலயத்தின் காலப்பகுதி 420 வருடங்களாக இருப்பதற்கு மாறாக 606 வருடங்களாக இருக்கவேண்டும். இந்தக் காலப்பகுதிக்கு 420 வருடங்களை மட்டுமே வரையறுப்பதன்மூலம், யூத காலக்கணக்கு 186 வருடங்களில் குறைவுபடுகிறது.
தானியேலின் தீர்க்கதரிசனம், அந்தத் தேவாலயம் எருசலேமில் எவ்வளவு காலம் நிலைநிற்கும் என்பதைப் பற்றியதல்ல. மாறாக, மேசியா எப்போது தோன்றுவார் என்பதைப் பற்றிய காலத்தை அது முன்னறிவித்தது. “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் [சென்றிருக்கும்]” என்பதாக அந்தத் தீர்க்கதரிசனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. (தானியேல் 9:25, 26) யூதர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையிலிருந்து திரும்பி வந்த இரண்டாம் வருடத்தில் (பொ.ச.மு. 536) தேவாலயத்தின் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தாலும், “அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம்” வரையாக, எருசலேம் நகரைத் திரும்பக் கட்டுவதற்கான “கட்டளை” பிறப்பிக்கப்படவில்லை. (நெகேமியா 2:1-8) துல்லியமான உலக வரலாறு அந்த வருடம் பொ.ச.மு. 455 என்பதாக வரையறுக்கிறது. அதிலிருந்து முன்னோக்கி 69 ‘வாரங்களை’ அல்லது 483 வருடங்களைக் கணக்கிடுகையில், பொ.ச. 29-க்கு நம்மைக் கொண்டுவருகிறது. இயேசுவின் முழுக்காட்டுதலின்போது, மேசியா தோன்றிய காலம் அதுவே.b
யூத மதக் குருக்களின் விளக்கம், யூத காலக்கணக்கில் ஒரு பெரிய முரண்பாட்டில் விளைவடைந்த மற்றொரு குறிப்பு, ஆபிரகாம் பிறந்த காலத்தைக் குறித்ததில் ஆகும். யூத மதக் குருக்கள், ஆதியாகமம் 11:10-26-ல் பதிவுசெய்யப்பட்ட அடுத்தடுத்துவந்த சந்ததிகளின் வருடங்களைக் கூட்டி, ஜலப்பிரளயத்தின் காலப்பகுதியிலிருந்து ஆபிரகாம் (ஆபிராம்) பிறந்தது வரையாக 292 வருடங்கள் என்று குறிப்பிட்டனர். என்றாலும், 26-ம் வசனத்திற்கு யூத மதக் குருமாரின் விளக்கத்திலேயே பிரச்சினை இருக்கிறது; அது இவ்வாறு வாசிக்கிறது: “தேராகு எழுபது வயதான[பிறகு, NW], ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.” இதிலிருந்து, ஆபிராம் பிறந்தபோது தேராகுக்கு 70 வயது என்பதாக யூத பாரம்பரியம் எண்ணுகிறது. என்றாலும், தேராகு 70 வயதில் ஆபிரகாமுக்குத் தகப்பனானார் என்று அந்த வசனம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதற்குப்பதிலாக, அவர் 70 வயதானபின் மூன்று மகன்களுக்குத் தகப்பனானார் என்று மட்டுமே சொல்லுகிறது.
ஆபிரகாம் பிறக்கையில் தேராகின் சரியான வயதைக் கண்டுபிடிக்க நாம் பைபிள் பதிவை வாசித்தால் மட்டுமே போதும். 205 வயதில் தேராகின் மரணத்திற்குப்பின், யெகோவாவின் கட்டளைக்கு இணங்கி ஆபிரகாமும் அவர் குடும்பமும் ஆரானை விட்டுச்சென்றதாக நாம் ஆதியாகமம் 11:32–12:4-லிருந்து அறிகிறோம். அந்தச் சமயத்தில் ஆபிரகாமுக்கு 75 வயது. எனவே, தேராகு 70 வயதாக இருந்திருப்பதற்கு மாறாக 130 வயதாக இருந்தபோது ஆபிரகாம் பிறந்திருக்கவேண்டும். இவ்வாறாக, ஜலப்பிரளயத்திலிருந்து ஆபிரகாமின் பிறப்பு வரையான காலப்பகுதி 292 வருடங்களாக இருப்பதற்கு மாறாக, 352 வருடங்களாக இருந்தது. இங்கு யூத காலக்கணக்கு 60 வருடங்களில் தவறுகிறது.
ஒரு மதச்சார்பான நினைவுச்சின்னம்
சேடர் ஆலாம் ராபாவிலும் மற்ற தல்மூடிய காலக்கணிப்பு படைப்புகளிலுமுள்ள அப்படிப்பட்ட தவறுகளும் முரண்பாடுகளும் யூத அறிஞர்கள் மத்தியில் அதிக குழப்பத்தையும் பெரும் சர்ச்சையையும் உண்டுபண்ணியிருக்கின்றன. இந்தக் காலக்கணக்கை அறியப்பட்ட வரலாற்றுப்பூர்வ உண்மைகளுடன் ஒத்திசைவிப்பதற்கு ஏராளமான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும் அவை முழுமையாக வெற்றியடையவில்லை. ஏன்? “அவர்களுடைய அக்கறை மதச்சார்பானதாக இருந்த அளவிற்கு அறிவுச்சார்பானதாக இருக்கவில்லை,” என்று என்ஸைக்ளோப்பீடியா ஜூடெய்க்கா குறிப்பிடுகிறது. “முக்கியமாக கருத்துவேறுபாடுள்ள பிரிவினரை எதிர்ப்படும்போது, எக்காரணத்தைக் கொண்டும் பாரம்பரியம் ஆதரிக்கப்பட வேண்டும்.” தங்களுடைய பாராம்பரியங்களால் உண்டாக்கப்பட்ட குழப்பத்தை நீக்கிப்போடுவதற்குப் பதிலாக, சில யூத அறிஞர்கள் பைபிள் பதிவுகளில் நம்பிக்கை இழக்கச்செய்ய முயன்றனர். மற்றவர்கள் பாபிலோனிய, எகிப்திய, இந்து புராணக்கதைகளிலும் பாரம்பரியங்களிலும் ஆதாரத்தைக் காண முயன்றனர்.
இதன் விளைவாக, “சிருஷ்டிப்பின் சகாப்தம்” என்பதை வரலாற்றாசிரியர்கள் இனிமேலும் ஒரு நம்பத்தக்க காலக்கணிப்பு படைப்பாக நோக்குவதில்லை. ஒருசில யூத அறிஞர்களே அதை ஆதரிக்க முற்படுவர்; மேலும் தி ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா மற்றும் என்ஸைக்ளோப்பீடியா ஜூடெய்க்கா போன்ற அதிகாரப்பூர்வ ஆய்வு படைப்புகள்கூட அதைக் குறித்துப் பொதுவாக ஒரு எதிர்மறையான நோக்கையே கொண்டிருக்கின்றன. ஆகவே, யெகோவா தேவனின், படிப்படியாக வெளிப்படும் தீர்க்கதரிசன கால அட்டவணையாகிய பைபிள் காலக்கணக்கின் நோக்குநிலையிலிருந்து பார்க்கையில், உலகின் சிருஷ்டிப்பு முதல் காலத்தைக் கணக்கிடும் பாரம்பரிய யூத முறையை துல்லியமானதாகக் கருதமுடியாது.
[அடிக்குறிப்புகள்]
a பைபிள்பூர்வ, சரித்திரப்பூர்வ ஆதாரங்கள் இரண்டுமே இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு கி.மு. 2-ம் வருடத்தைச் சுட்டிக்காண்பிக்கின்றன. ஆகவே, துல்லியத்திற்காக, அநேகர் பொ.ச. (பொது சகாப்தம்) மற்றும் பொ.ச.மு. (பொது சகாப்தத்திற்கு முன்) என்ற குறியீடுகளைப் பயன்படுத்த விரும்புகின்றனர். உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பிரசுரங்களிலும் இந்த விதத்தில்தான் தேதிகள் குறிப்பிடப்படுகின்றன.
b விவரங்களுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (Insight on the Scriptures), தொகுதி 2, பக்கங்கள் 614-16, 900-902; வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது (All Scripture Is Inspired of God and Beneficial), படிப்பு எண் 3, பாரா 18; மேலும் wTL93 4/1 பக்கம் 11, பாரா. 8-11 ஆகியவற்றைப் பார்க்கவும்.