கடவுளுடைய நித்திய நோக்கத்தை உட்படுத்தும் உடன்படிக்கைகள்
“யெகோவா . . . தாம் செய்த உடன்படிக்கையையும் ஆயிரந் தலைமுறைக்கென்று தாம் கட்டளையிட்ட வாக்கையும் . . . என்றென்றும் மறவாமலிருக்கிறார்.”—சங்கீதம் 105:7, 8.
1, 2. நம்மில் பெரும்பாலோர் ஓர் உடன்படிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று ஏன் சொல்லலாம்?
ஓர்உடன்படிக்கை பெரும்பாலும் உங்களைப் பாதித்திருக்கக்கூடும்—உங்கள் கடந்த காலத்தை, தற்காலத்தை, எதிர்காலத்தை. ‘என்ன உடன்படிக்கை?’ என்று நீங்கள் யோசிக்கக்கூடும். இந்த விஷயத்தில் இது விவாகமாக இருக்கிறது, ஏனென்றால் நம்மில் பெரும்பாலோர் ஒரு விவாகத்தில் பிறந்த பிள்ளைகளாக இருக்கிறோம், மற்றும் நம்மில் பலர் விவாகமானவர்களாயும் இருக்கிறோம். விவாகமாகாமலிருப்பவர்கள்கூட எதிர்காலத்தில் மகிழ்ச்சியுள்ள விவாகத்தின் ஆசீர்வாதங்களைக் குறித்து யோசிக்கக்கூடும்.
2 நூற்றாண்டுகளுக்கு முன்பு எபிரெய தீர்க்கதரிசியாகிய மல்கியா “உன் இளவயதின் மனைவி,” “உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவி” குறித்து எழுதினான். (மல்கியா 2:14-16) அவன் விவாகத்தை ஓர் உடன்படிக்கை என்று அழைக்கக்கூடியவனாயிருந்தான். ஏனென்றால் அது ஓர் ஒப்பந்தம் அல்லது முறைப்படியான இணக்கம், ஏதோ ஒரு காரியத்தை ஒன்றுசேர்ந்து செய்வதற்காக இரு சாராருக்கிடையிலான ஓர் ஏற்பாடு. விவாக ஒப்பந்தம் ஓர் ஈரிடையான உடன்படிக்கை, இதில் இரு சாராரும் கணவன் மனைவியாக இருப்பதற்கு ஒப்புக்கொள்கின்றனர். ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளை ஏற்று நிலையான நன்மைகளை எதிர்நோக்குகின்றனர்.
3. மற்ற உடன்படிக்கைகள் விவாகத்தைக் காட்டிலும் நம்மை ஏன் அதிகமாக பாதிக்கக்கூடும்?
3 விவாகம் மிகப் பெரிய தனிப்பட்ட பிணைப்பை நம்மில் ஏற்படுத்தும் ஓர் உடன்படிக்கையாகக் காணப்படலாம், என்றாலும் பைபிள் அதிக பரந்தளவில் முக்கியத்துவமுடைய உடன்படிக்கைளைக் குறித்து பேசுகிறது. பைபிள் உடன்படிக்கைளை பைபிள் சாராத மதங்களின் உடன்படிக்கைகளுடன் முரண்படுத்திப் பார்க்கும்போது, ஓர் என்ஸைக்ளோபீடியா குறிப்பிடுவதாவது, பைபிளில் மட்டும்தானே, “கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையிலிருக்கும் இந்த உறவு முறை எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியதான எல்லாவற்றையும் உட்படுத்திய ஒரு முறையாகும்.” ஆம், அந்த உடன்படிக்கைகள் நம்முடைய அன்பான சிருஷ்டிகரின் நித்திய நோக்கத்தை உட்படுத்துகிறது. சொல்ல முடியாதளவுக்கு நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவது இந்த உடன்படிக்கைகளுடன் இணைக்கப்பட்டவையாயிருப்பதை நீங்கள் காண்பீர்கள். ‘ஆனால் அது எப்படியிருக்கும்?’ என்று நீங்கள் கேட்பதற்கு உங்களுக்குக் காரணம் உண்டு.
4. என்ன ஆரம்ப உடன்படிக்கை கடவுளுடைய நித்திய நோக்கத்தைக் குறிப்பிடுவதாயிருக்கிறது?
4 ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய அதிகாரத்தை ஏற்க மறுத்தபோது ஏற்பட்ட கவலைக்குரிய விளைவுகளை நீங்கள் நன்றாகவே அறிந்திருக்கிறீர்கள். அவர்களிடமிருந்து நாம் அபூரணத்தைச் சுதந்தரித்தோம். நாம் வேதனைப்பட்டிருக்கும் நோய்க்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மை அது. அதுதானே மரணத்துக்கும் வழிநடத்துகிறது. (ஆதியாகமம் 3:1-6, 14-19) என்றபோதிலும், நிலையான ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கும் உண்மை வணக்கத்தாரால் இந்தப் பூமி நிரப்பப்படுவது குறித்த கடவுளுடைய நோக்கத்தை அவர்களுடைய பாவச் செயல் முறியடித்திட முடியவில்லை என்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கலாம். இது சம்பந்தமாக, யெகோவா அந்த உடன்படிக்கையை ஆதியாகமம் 3:15-ல் பதிவு செய்திருக்கிறார்: “உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன், அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” என்றபோதிலும் இந்தக் கூற்று சுருக்கமாக இருப்பதும் அடையாள அர்த்தம் கொண்ட மொழி நடையில் இருப்பதும் அநேக கேள்விகளுக்கு விடையளிக்காமல் இருந்துவிட்டது. இந்த உடன்படிக்கை வாக்குறுதியை யெகோவா எப்படி நிறைவேற்றுவார்?
5, 6. (எ) தம்முடைய நோக்கத்தைச் செயல்படுத்திட கடவுள் என்ன வழிமுறையைப் பயன்படுத்த தீர்மானித்தார்? (பி) இந்தக் காரியத்தைச் செய்வதற்கான கடவுளுடைய வழிமுறையில் நாம் ஏன் அக்கறையாயிருக்க வேண்டும்?
5 மேலும் கடவுள் ஒரு குறிப்பிட்ட தொடர்ச்சியான தெய்வீக உடன்படிக்கைகளை ஏற்பாடு செய்ய தீர்மானித்தார். அவை ஏதேனிய உடன்படிக்கை உட்பட மொத்தத்தில் ஏழு உடன்படிக்கைகளாகும். நித்திய ஆசீர்வாதங்களை அனுபவிக்க எதிர்பார்த்திருக்கும் நாம் ஒவ்வொருவரும் இந்த உடன்படிக்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவை எப்பொழுது, எப்படி செய்யப்பட்டது, உட்பட்டிருந்தவர்கள் யார், அவற்றின் நோக்கங்கள் அல்லது விதிமுறைகள் என்னவாயிருந்தன, கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தை நித்திய ஜீவனால் ஆசீர்வதிப்பதற்கான கடவுளுடைய நோக்கத்தில் அந்த உடன்படிக்கைகள் எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவையாயிருக்கின்றன ஆகியவற்றை அறிந்திருப்பதையும் இது உட்படுத்துகிறது. இந்த உடன்படிக்கைகளை விமர்சிப்பதற்கு இது தகுந்த ஒரு சமயம், ஏனென்றால் ஏப்ரல் 10, 1990-ல் கிறிஸ்தவர்களின் சபைகள் கர்த்தருடைய இரா போஜனத்தின் நினைவு ஆசரிப்பை ஏற்பாடு செய்வார்கள். இது இந்த உடன்படிக்கைகளை நேரடியாக உட்படுத்துகிறது.
6 உண்மைதான், சிலருக்கு உடன்படிக்கைகள் என்ற எண்ணம் மனித அக்கறைக்குரியதாயில்லாத, சுவையற்ற, சட்டத் தொனியுடையதாகத் தொனிக்கக்கூடும். என்றாலும் பழைய ஏற்பாட்டின் இறைமையியல் அகராதி என்ன சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள்: “பூர்வ கீழ்த்தேசங்களிலும் கிரேக்க மற்றும் ரோம உலகிலும் . . . ‘உடன்படிக்கை’க்கான விதிமுறைகள் இரண்டு சொற்பொருள் ஆய்வியல் வகைப்படி பிரிக்கப்படுகின்றன: ஒரு பட்சத்தில் ஆணையும், நிபந்தனையும், மறுபட்சத்தில் அன்பும் நட்பும்.” யெகோவாவின் உடன்படிக்கைகளின் மையக்கூறாக நாம் இரண்டு அம்சங்களையும் பார்க்க முடிகிறது—ஆணையும் நட்பும்.
ஆபிரகாமிய உடன்படிக்கை—நித்திய ஆசீர்வாதங்களுக்கான ஆதாரம்
7, 8. யெகோவா ஆபிரகாமுடன் என்ன விதமான உடன்படிக்கையை பண்ணினார்? (1 நாளாகமம் 16:15, 16)
7 “விசுவாசிக்கிற யாவருக்கும் . . . தகப்பனாயிருக்கும்” முற்பிதாவாகிய ஆபிரகாம் “யெகோவாவின் சிநேகிதனாக” இருந்தான். (ரோமர் 4:11; யாக்கோபு 2:21-23) கடவுள் ஓர் ஆணையின் மூலம் அவனுக்கு வாக்களித்தபோது நாம் நித்திய ஆசீர்வாதங்களை அடைவதற்கு அடிப்படையான ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.—எபிரெயர் 6:13-18.
8 ஆபிரகாம் ஊர் என்ற தேசத்தில் இருந்தபோது யெகோவா அவனை இன்னொரு தேசத்துக்குப் போகும்படிச் சொன்னார், அந்தத் தேசம் கானான் தேசமாக இருந்தது. அந்தச் சமயத்தில் யெகோவா ஆபிரகாமிடம் வாக்குக் கொடுத்ததாவது: “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், . . . பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்.”a (ஆதியாகமம் 12:1-3) அதற்குப் பின்பு ஆபிரகாமிய உடன்படிக்கை என்று நாம் சரியாகக் குறிப்பிடும் உடன்படிக்கைக்குக் கடவுள் படிப்படியாக விவரங்களைக் கூட்டினார்: ஆபிரகாமின் வித்து, அல்லது சந்ததி, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்; அவனுடைய வித்து எண்ணிக்கையற்ற பிள்ளைகளுக்கு வழிநடத்திச் செல்லும்; ஆபிரகாமும் சாராளும் ராஜாக்களுக்கு மூலக்காரணராயிருப்பார்கள்.—ஆதியாகமம் 13:14-17; 15:4-6; 17:1-8, 16; சங்கீதம் 105:8-10.
9. ஆபிரகாமிய உடன்படிக்கையில் நாம் உட்படுத்தப்படக்கூடும் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
9 கடவுள் அதை “உனக்கும் [ஆபிரகாம்] எனக்கும் நடுவாக என் உடன்படிக்கை” என்று அழைக்கிறார். (ஆதியாகமம் 17:2) ஆனால் நம்முடைய வாழ்க்கை உட்பட்டிருக்கிறது என்பதை நாம் நிச்சயமாகவே உணரவேண்டும். ஏனென்றால் கடவுள் அந்த உடன்படிக்கையை விரிவாக்குபவராகப் பின்வருமாறு சொன்னார்: “நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும் உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் . . . உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” (ஆதியாகமம் 22:17, 18) நாம் அந்த ஜாதிகளின் அல்லது தேசங்களின் பாகமாக இருக்கிறோம்; ஆசீர்வாதங்கள் நமக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.
10. ஆபிரகாமுடன் பண்ணின உடன்படிக்கையில் நமக்கு என்ன உட்கருத்துகள் கிடைக்கின்றன?
10 ஆபிரகாமிய உடன்படிக்கையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதைச் சற்று பார்ப்போம். இதற்கு முன்னதாக ஏதேனிய உடன்படிக்கையைப் போல், இது வருகின்ற ஒரு “வித்தைக்” குறிப்பிடுகிறது. இப்படியாக அந்த வித்து ஒரு மனித வம்சாவழியைக் கொண்டிருக்கும் என்பதைக் குறிப்பிடுவதாயிருக்கிறது. (ஆதியாகமம் 3:15) அது சேம் முதல் ஆபிரகாமின் வழியாய் அவனுடைய மகன் ஈசாக்கின் மூலமானது. இந்த வம்சாவழி ராஜரீகத்தை உட்படுத்தும், மற்றும் இது ஒரு குடும்பத்தின் ஆசீர்வாதத்துக்கு அல்ல, ஆனால் எல்லாத் தேசங்களிலுமுள்ள மனிதரின் ஆசீர்வாதத்துக்கு இடமளிக்கும். அந்த உடன்படிக்கை எவ்விதம் நிறைவேறியது?
11. ஆபிரகாமிய உடன்படிக்கை எப்படி ஒரு சொல்லர்த்தமான நிறைவேற்றத்தைக் கண்டது?
11 யாக்கோபு அல்லது இஸ்ரவேலின் வழி வந்த ஆபிரகாமின் சந்ததியார் ஒரு பெரிய தேசமாகுமளவுக்குப் பெருகினர். ஆபிரகாமின் எண்ணிக்கையற்ற சொல்லர்த்தமான வித்தாக அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனுடைய தூய்மையான வணக்கத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களாயிருந்தனர். (ஆதியாகமம் 28:13; யாத்திராகமம் 3:6, 15; 6:3; அப்போஸ்தலர் 3:13) இஸ்ரவேலர் அநேக சமயங்களில் தூய வணக்கத்திலிருந்து விலகினர், என்றபோதிலும் “யெகோவா அவர்களுக்கு இரங்கினார்; ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடு தாம் செய்த உடன்படிக்கையினிமித்தம் அவர்கள் மேல் மனதுருகி அவர்கள் முகமாய்த் திரும்பினர். அவர்களை அழிக்க அவருக்கு மனமில்லை.” (2 இராஜாக்கள் 13:23; யாத்திராகமம் 2:24; லேவியராகமம் 26:42-45) கடவுள் கிறிஸ்தவ சபையைத் தம்முடைய ஜனமாக ஏற்றுக்கொண்டதற்குப் பின்புங்கூட ஆபிரகாமின் சொல்லர்த்தமான வித்தாயிருந்த ஜனத்தாராய் இஸ்ரவேலருக்கு அவர் கொஞ்ச காலத்துக்குத் தொடர்ந்து விசேஷ தயை காண்பித்தார்.—தானியேல் 9:27.
ஆபிரகாமின் ஆவிக்குரிய வித்து
12, 13. ஆபிரகாமிய உடன்படிக்கையின் ஆவிக்குரிய நிறைவேற்றத்தில் இயேசு எப்படி அந்த வித்தின் பிரதான பாகமாய் நிரூபித்தார்?
12 ஆபிரகாமிய உடன்படிக்கை மற்றொரு நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தது, ஓர் ஆவிக்குரிய நிறைவேற்றம். இந்தப் பெரிய நிறைவேற்றம் இயேசுவானவரின் காலத்துக்கு முன்பு இருந்திருக்க முடியாது என்பது தெளிவாயிருக்கிறது, ஆனால், அது நம்முடைய காலத்தில் தெளிவாயிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடையலாம். அதன் நிறைவேற்றம் சம்பந்தமான விளக்கத்தை நாம் கடவுளுடைய வார்த்தையில் கொண்டிருக்கிறோம். பவுல் எழுதுகிறான்: “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் [வித்துக்கும், NW] வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன. சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல் உன் சந்ததிக்கு [வித்துக்கு, NW] என்று ஒருவனைக் குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.”—கலாத்தியர் 3:16.
13 ஆம், அந்த வித்து ஒரு வம்சத்தில் அல்லது குடும்பத்தில் வரும். இது இயேசுவின் விஷயத்தில் உண்மையாக இருந்தது. அவர் இயற்கையில் யூதனாகப் பிறந்தார், ஆபிரகாமின் சொல்லர்த்தமான சந்ததியாராக இருந்தார். (மத்தேயு 1:1-16; லூக்கா 3:23-34) மேலும் அவர் பெரிய ஆபிரகாமின் குடும்பத்தின் ஒரு பாகமாக இருந்தார். ஆழ்ந்த விசுவாசமுடையவனாய் முற்பிதாவாகிய ஆபிரகாம், கடவுள் கேட்கும் பட்சத்தில் தம்முடைய ஒரே-பேறான மகனை பலியிட மனமுள்ளவனாய் இருந்தான். (ஆதியாகமம் 22:1-18; எபிரெயர் 11:17-19) அதுபோல விசுவாசிக்கும் மனிதவர்க்கத்துக்குத் தம்முடைய ஒரே பேறான குமாரனை ஒரு மீட்கும் பொருளாய் பலியாக மரிப்பதற்கு அனுப்பினார். (ரோமர் 5:8; 8:32) எனவே பவுல் இயேசு கிறிஸ்துவை இந்த உடன்படிக்கையின்படி ஆபிரகாமின் வித்தின் பிரதான பாகமாக அடையாளங்காட்டுவது ஏன் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
14. ஆபிரகாமின் வித்தின் இரண்டாவது பாகம் என்ன? இது மேலும் என்ன காரியத்தைச் சிந்திப்பதற்கு வழிவகுக்கிறது?
14 ஆவிக்குரிய நிறைவேற்றத்தில் கடவுள் ‘ஆபிரகாமின் வித்தைப் பெருகப்பண்ணுவார்’ என்பதைப் பவுல் தொடர்ந்து குறிப்பிடக்கூடியவனாயிருந்தான். அவன் எழுதியதாவது: “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும் [வித்து, NW] வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.” (ஆதியாகமம் 22:17; கலாத்தியர் 3:29) அவர்கள்தான் ஆபிரகாமின் வித்தின் இரண்டாவது பாகமாகும், பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களாகிய 1,44,000 பேர். அவர்கள் வித்தின் பிரதான பாகமாயிருப்பவருக்கு எதிர்ப்பாக இல்லை, ஆனால் “கிறிஸ்துவினுடையவர்கள்.” (1 கொரிந்தியர் 1:2; 15:23) இவர்களில் பலர் ஆபிரகாமின் வம்சத்தில் வந்தவர்கள் என்று தங்களுடைய வம்சாவழியைக் .குறிப்பிட்டுக் காண்பிக்க முடியாது. ஏனென்றால் யூதரல்லாத தேசத்தாரிலிருந்து வந்தவர்கள். என்றபோதிலும் முக்கியமாக ஆவிக்குரிய நிறைவேற்றத்தில் இவர்கள் இயல்பாகவே பெரிய ஆபிரகாமாகிய யெகோவாவின் குடும்பத்தின் பாகமானவர்கள் அல்ல; மாறாக, பாவம் செய்த ஆதாமின் அபூரண குடும்பத்திலிருந்து வருகிறார்கள். எனவே இவர்கள் “ஆபிரகாமின் வித்தின்” பாகமாக ஆவதற்குத் தங்களை எப்படித் தகுதியாக்கிக்கொள்ளலாம் என்பதை பின்னால் ஏற்பட்ட உடன்படிக்கைகளிலிருந்து நாம் பார்க்க வேண்டும்.
நியாயப்பிரமாண உடன்படிக்கை தற்காலிகமாகச் சேர்க்கப்படுகிறது
15-17. (எ) ஏன் நியாயப்பிரமாண உடன்படிக்கை ஆபிரகாமிய உடன்படிக்கையுடன்கூட சேர்க்கப்பட்டது? (பி) நியாயப்பிரமாணம் இந்த நோக்கங்களை எப்படி நிறைவேற்றியது?
15 தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதனிடமாய் ஓர் அடிப்படை படியாகக் கடவுள் ஆபிரகாமிய உடன்படிக்கையை ஏற்படுத்திய பின்பு. அவர் தோன்றும்வரை அந்த வித்து வரவேண்டிய வம்சவழி கெட்டுவிடாதபடிக்கு அல்லது நிர்மூலமாகாதபடிக்கு அது எவ்வாறு பாதுகாக்கப்படும்? வித்து வந்தச் சமயத்தில், உண்மை வணக்கத்தார் அவரை எப்படி அடையாளங் காணக்கூடும்? நியாயப்பிரமாண உடன்படிக்கையைத் தற்காலிகமாகச் சேர்ப்பதில் கடவுளுடைய ஞானத்தைக் குறிப்பிட்டுக் காண்பிப்பதன் மூலம் பவுல் அப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். அப்போஸ்தலன் பின்வருமாறு எழுதுகிறான்:
16 “அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி [வித்து, NW] வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக் கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது. . . . இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.”—கலாத்தியர் 3:19, 24.
17 சீனாய் மலையில் யெகோவா தமக்கும் இஸ்ரவேலருக்குமிடையே தனித்தன்மைவாய்ந்த ஒரு தேசிய உடன்படிக்கையை—மோசேயை மத்தியஸ்தராக கொண்ட நியாயப்பிரமாணத்தை—ஏற்படுத்தினார்.b (கலாத்தியர் 4:24, 25) மக்கள் இந்த உடன்படிக்கைக்குள் வர ஒப்புக்கொண்டார்கள், அது காளை மற்றும் ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. (யாத்திராகமம் 24:3-8; எபிரெயர் 9:19, 20) அது இஸ்ரவேலுக்குத் தேவாட்சிப் பிரமாணங்களையும் நீதியான ஓர் அரசாங்கத்துக்கான முக்கிய கூறுகளையும் அளித்தது. புறமதத்தாரை விவாகம்பண்ணுவதை அல்லது ஒழுக்கங்கெட்ட மற்றும் பொய் மத பழக்க வழக்கங்களிலும் பங்குகொள்வதை அந்த உடன்படிக்கை தடைசெய்தது. இப்படியாக அது இஸ்ரவேலரைப் பாதுகாத்தது, மற்றும் வித்தின் வம்சாவழி கெட்டுவிடாதபடிக்கு அதைப் பாதுகாக்கும் சக்தியாக இருந்தது. (யாத்திராகமம் 20:4-6; 34:12-16) ஆனால் அபூரண இஸ்ரவேலரில் எவரும் நியாயப்பிரமாணத்தை முழுமையாகக் கைக்கொள்ளவில்லையென்றாலும், அது பாவத்தை வெளிப்படுத்துவதாயிருந்தது. (கலாத்தியர் 3:19) அது ஒரு பரிபூரண, நிரந்தர ஆசாரியருக்கான தேவையையும் ஆண்டுதோறும் செலுத்துவதற்கு அவசியமிராத ஒரு பலிக்கான தேவையையும் குறிப்பிட்டுக் காண்பித்தது. ஒரு பிள்ளையை தேவைப்பட்ட போதகராகிய மேசியா அல்லது கிறிஸ்துவினிடம் வழிநடத்திய உபாத்தியைப்போல நியாயப்பிரமாணம் இருந்தது. (எபிரெயர் 7:26-28; 9:9, 16-22; 10:1-4, 11) தன் நோக்கத்தை நிறைவேற்றிய பின்பு அந்த நியாயப்பிரமாணம் முடிவுக்கு வரும்.—கலாத்தியர் 3:24, 25; ரோமர் 7:6; “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பக்கம் 32 பார்க்கவும்.
18. நியாயப்பிரமாணத்தில் வேறு என்ன எதிர்பார்ப்பும் உட்படுத்தப்பட்டது? ஆனால் இதைப் புரிந்துகொள்வது ஏன் கடினமாயிருந்தது?
18 இந்தத் தற்காலிக உடன்படிக்கையை ஏற்படுத்தும்போது, கடவுள் இந்தக் கிளர்ச்சியூட்டும் நோக்கத்தைக் குறிப்பிட்டார்: “இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள் . . . நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.” (யாத்திராகமம் 19:5, 6) என்னே ஓர் எதிர்பார்ப்பு! ஒரு ராஜ-ஆசாரிய தேசம். என்றாலும் அது எப்படி ஆக்கக்கூடும்? நியாயப்பிரமாணம் பின்னால் குறிப்பாகத் தெரிவித்தபடி ஆளும் கோத்திரம் (யூதா) மற்றும் ஆசாரிய கோத்திரம் (லேவி) வெவ்வேறு பொறுப்புகள் அளிக்கப்பட்டது. (ஆதியாகமம் 49:10; யாத்திராகமம் 28:43; எண்ணாகமம் 3:5-13) எந்த ஒரு மனிதனும் அரசனாகவும் ஆசாரியனாகவும் இருக்க முடியாது. இருந்தாலும் யாத்திராகமம் 19:5, 6-லுள்ள கடவுளுடைய வார்த்தைகள், நியாயப்பிரமாண உடன்படிக்கையிலிருப்பவர்கள் ஓர் ‘ஆசாரிய ராஜ்யத்தின் பரிசுத்த ஜாதியின்’ அங்கத்தினர்களை அளித்திடும் வாய்ப்பைக் கொண்டிருப்பார்கள் என்பதை நம்புவதற்கான காரணத்தை அளித்தது.
தாவீதிய ராஜ்ய உடன்படிக்கை
19. உடன்படிக்கைகளில் ராஜரீகம் எப்படி குறிப்பிடப்பட்டது?
19 நம்முடைய நித்திய நன்மைக்காகத் தம்முடைய நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றுவார் என்பதை இன்னும் அதிகமாக விளக்கிட காலப்போக்கில் யெகோவா இன்னொரு உடன்படிக்கையைச் சேர்த்தார். ஆபிரகாமிய உடன்படிக்கை, ஆபிரகாமின் சொல்லர்த்தமான வித்துக்குள் ராஜரீகத்தைக் குறிப்பிட்டுக் காட்டினது என்று நாம் கவனித்தோம். (ஆதியாகமம் 17:6) நியாயப்பிரமாணம் கடவுளுடைய மக்கள் மத்தியில் ராஜாக்களை எதிர்பார்த்த நிலையிலிருந்தது, ஏனென்றால் மோசே இஸ்ரவேலரிடம் பின்வருமாறு சொன்னான்: “[வாக்குப்பண்ணப்பட்ட] தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்பாயானால், உன் தேவனாகிய யெகோவா தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய். . . . அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது.” (உபாகமம் 17:14, 15) கடவுள் அப்படிப்பட்ட ஒரு ராஜரீகத்தை எப்படி ஏற்பாடு செய்வார்? அது ஆபிரகாமிய உடன்படிக்கையுடன் எப்படி சம்பந்தப்படுகிறது?
20. தாவீதும் அவனுடைய வம்சாவழியும் காட்சியில் இடம்பெற்றது எப்படி?
20 இஸ்ரவேலின் முதல் அரசன் பென்யமீன் கோத்திரத்தானாகிய சவுலாக இருந்தபோதிலும், அவனைத் தொடர்ந்து யூதாவைச் சேர்ந்த தைரியமும் உண்மைத் தவறாதவனுமாகிய தாவீது ஆட்சிக்கு வந்தான். (1 சாமுவேல் 8:5; 9:1, 2; 10:1; 16:1, 13) தாவீது அரசனின் ஆட்சியின்போது யெகோவா தாவீதுடன் ஓர் உடன்படிக்கை செய்ய தீர்மானித்தார். முதலில் அவர் சொன்னதாவது: “நான் உனக்குப் பின் உன் கர்ப்பப் பிறப்பாகிய உன் சந்ததியை [வித்து, NW] எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். அவன் என் நாமத்துக்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.” (2 சாமுவேல் 7:12, 13) அதில் குறிப்பிடப்பட்டபடி, தாவீதின் மகன் சாலொமோன் அடுத்த அரசனானான். அவன் எருசலேமில் கடவுளுக்கு ஒரு வீட்டை அல்லது ஆலயத்தைக் கட்ட பயன்படுத்தப்பட்டான். என்றாலும் இன்னும் அதிகம் இருந்தது.
21. தாவீதிய ராஜ்ய உடன்படிக்கை எதற்கு ஏற்பாடு செய்வதாயிருந்தது?
21 யெகோவா தாவீதுடன் தொடர்ந்து இந்த உடன்படிக்கையைச் செய்தார்: “உன் வீடும் உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.” (2 சாமுவேல் 7:16) தெளிவாகவே கடவுள் இஸ்ரவேலருக்குத் தாவீதின் குடும்பத்தில் ஒரு ராஜ மரபை ஸ்தாபிக்கக்கூடியவராயிருந்தார். அது தாவீதிய அரசர்கள் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஆட்சிக்கு வருவதாய் இருக்கவில்லை. கடைசியில் தாவீதின் வம்சாவழியில் ஒருவர் “என்றென்றைக்கும்” ஆட்சி செய்ய வருவார், “அவர் சிங்காசனம் சூரியனைப் போல் [கடவுளுக்கு] முன்பாக நிற்கும்.”—சங்கீதம் 89:20, 29, 34-36; ஏசாயா 55:3, 4.
22 தாவீதிய உடன்படிக்கை வித்தின் வம்சாவழியை மேலும் வரையறுப்பதாயிந்தது. மேசியா தாவீதின் சந்ததியில் வரவேண்டும் என்பதை முதல் நூற்றாண்டு யூதர்களும் உணர்ந்தனர். (யோவான் 7:41, 42) ஆபிரகாமிய உடன்படிக்கையின் பிரதான பாகமாயிருக்கும் இயேசு கிறிஸ்து, ஒரு தேவதூதன் சாட்சியம் பகர்ந்ததற்கேற்ப, இந்தத் தாவீதிய ராஜ்யத்தின் நிரந்தர சுதந்தரவாளியாக இருக்க தகுதியுள்ளவரானார். (லூக்கா 1:31-33) இப்படியாக இயேசு, தாவீது அரசாண்ட பூமிக்குரிய பிரதேசமாகிய வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் மீது ஆளுகை செய்யும் உரிமையைப் பெற்றார். இது இயேசுவில் நம்முடைய நம்பிக்கையை அதிகரித்திட வேண்டும்; அவர் சட்டத்துக்கு விரோமாக ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் ஆட்சி செய்யவில்லை, ஆனால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான ஏற்பாட்டின் மூலம் ஒரு தெய்வீக உடன்படிக்கையின் மூலம் ஆட்சி செய்கிறார்.
23. இன்னும் தீர்க்கப்பட இருக்கும் கேள்விகளும் விஷயங்களும் என்ன?
23 மனிதவர்க்கத்துக்கு நித்திய ஆசீர்வதங்களைக் கொண்டுவருவதாகிய தம்முடைய நோக்கத்தைக் கடவுள் எப்படி ஏற்பாடு செய்தார் என்பதைக் குறித்திடும் நான்கு தெய்வீக உடன்படிக்கைகளைக் கவனித்தோம். விவரம் முழுமையடையாதிருப்பதை நீங்கள் காணக்கூடும். இருக்கும் கேள்விகள் பின்வருமாறு: மனிதர் தொடர்ந்து அபூரணராயிருந்ததால், அதை எந்த ஆசாரியன் அல்லது பலி மாற்றக்கூடும்? ஆபிரகாமிய வித்தின் பாகமாக ஆவதற்கு மனிதர் எப்படி தகுதி பெறுவர்? பூமியை ஆளும் உரிமை வெறும் பூமியென்னும் பிராந்தியத்தைக் காட்டிலும் பெருகும் என்பதை நம்புவதற்குக் காரணம் உண்டா? பிரதானமானதும் இரண்டாவதுமான பாகங்களையுடைய ஆபிரகாமின் வித்து நாம் ஒவ்வொருவரும் உட்பட எப்படி “பூமியின் எல்லாத் தேசங்களுக்கும்” ஆசீர்வாதத்தைக் கொண்டுவரக்கூடும்? பார்க்கலாம். (w89 2/1)
[அடிக்குறிப்புகள்]
a இது ஒரு பக்க உடன்படிக்கை, ஏனென்றால் அதன் விதிமுறைகளை ஒருசாரார் (கடவுள்) மட்டுமே நிறைவேற்றும் நிபந்தனைக்குட்படுகிறார்.
b “உடன்படிக்கை என்ற எண்ணம் இஸ்ரவேலரின் மதத்தில் ஒரு விசேஷ அம்சமாயிருந்தது. தனிப்பட்ட உத்தமத் தன்மையைக் கேட்பதாயும், மற்ற மதங்களில் அனுமதிக்கப்பட்ட இரட்டை அல்லது பலருக்கான உண்மைத் தவறாமைகளுக்கான சாத்தியத்தைத் தவிர்ப்பதாயும் இருக்கும் ஒரே காரியமாகும்.”—பழைய ஏற்பாட்டின் இறைமையியல் அகராதி, புத்தகம் II, பக்கம் 278.
உங்கள் விடை என்ன?
◻ நித்திய ஆசீர்வாதங்களை நாம் பெறுவதற்கான ஆதாரத்தை ஆபிரகாமிய உடன்படிக்கை எப்படி போட்டது?
◻ ஆபிரகாமின் சொல்லர்த்தமான மாம்சப்பிரகாரமான வித்து என்ன? அடையாள அர்த்தமுள்ள வித்து என்ன?
◻ நியாயப்பிரமாண உடன்படிக்கை ஏன் ஆபிரகாமிய உடன்படிக்கையுடன்கூட சேர்க்கப்பட்டது?
◻ தாவீதிய ராஜ்ய உடன்படிக்கை எவ்விதத்தில் கடவுளுடைய நோக்கத்தை முன்னேற்றுவித்தது?
22. தாவீதுடன் செய்யப்பட்ட உடன்படிக்கை வித்தின் வம்சாவழியுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டிருந்தது? என்ன விளைவுடன்?
[பக்கம் 13-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஏதேனிய உடன்படிக்கை ஆதியாகமம் 3:15
ஆபிரகாமிய உடன்படிக்கை
பிரதான வித்து
இரண்டாவது பாக வித்து
நித்திய ஆசீர்வாதங்கள்
[பக்கம் 14-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்))
ஏதேனிய உடன்படிக்கை ஆதியாகமம் 3:15
ஆபிரகாமிய உடன்படிக்கை
நியாயப்பிரமாண உடன்படிக்கை
தாவீதிய ராஜ்ய உடன்படிக்கை
பிரதான வித்து
இரண்டாவது பாக வித்து
நித்திய ஆசீர்வாதங்கள்
[பக்கம் 10-ன் படம்]
மனிதவர்க்கத்தின் சார்பில் தம்முடைய நோக்கத்தைச் செயல்படுத்திட, கடவுள் விசுவாசமுள்ள ஆபிரகாமிடம் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தினார்