அதிகாரம் 6
அழிக்கும் வல்லமை—“யெகோவா ஒரு மாவீரர்!”
1-3. (அ) இஸ்ரவேலர்கள் எகிப்தியர்களால் எவ்வாறு அச்சுறுத்தப்பட்டனர்? (ஆ) யெகோவா எவ்வாறு தம் மக்களுக்காக போரிட்டார்?
இஸ்ரவேலர்கள், அச்சுறுத்தும் செங்குத்தான மலைப்பாறைகளுக்கும் கடக்க முடியாத கடலுக்கும் இடையே வசமாக சிக்கிக்கொண்டார்கள். ஈவிரக்கமற்ற கொலை வெறிபிடித்த எகிப்திய சேனை அவர்களை எப்படியும் தீர்த்துக்கட்ட வேண்டுமென்ற உறுதியோடு தீவிரமாக துரத்திக்கொண்டு வந்தது.a இருந்தாலும், நம்பிக்கை இழந்துவிடாதிருக்கும்படி கடவுளுடைய மக்களை மோசே தூண்டினார். “உங்களுக்காக யெகோவாவே போர் செய்வார்” என அவர்களுக்கு உறுதியளித்தார்.—யாத்திராகமம் 14:14.
2 என்றாலும், மோசே யெகோவாவிடம் முறையிட்டதாக தெரிகிறது; அதற்கு அவர், “ஏன் என்னிடம் கெஞ்சுகிறாய்? . . . நீ உன்னுடைய கோலை எடுத்து கடலுக்கு நேராக நீட்டு. அப்போது கடல் இரண்டாகப் பிளக்கும்” என்றார். (யாத்திராகமம் 14:15, 16) நடந்த சம்பவங்களை சற்று கற்பனை செய்து பாருங்கள். யெகோவா உடனடியாக தம் தூதனுக்குக் கட்டளையிடுகிறார், மேக ஸ்தம்பம் இஸ்ரவேலரின் பின்புறத்திற்கு நகர்ந்து, ஒருவேளை ஒரு சுவர்போல் படர்ந்து நின்று, எகிப்தியர்களின் தாக்குதலை தடைசெய்கிறது. (யாத்திராகமம் 14:19, 20; சங்கீதம் 105:39) மோசே தன் கையை நீட்டுகிறார். பலத்த காற்று அடித்து கடலை இரண்டாக பிளக்கிறது. தண்ணீர் எப்படியோ உறைந்து சுவர்கள்போல் எழும்பி நிற்கிறது. முழு தேசத்தினரே நடந்து செல்லும் அளவுக்கு விசாலமான பாதை உருவாகிறது!—யாத்திராகமம் 14:21; 15:8.
3 இப்பேர்ப்பட்ட வல்லமையின் வெளிக்காட்டுகளை கண்ட பிறகு படைகளை பின்வாங்கும்படி பார்வோன் ஆணையிட வேண்டும். மாறாக, ஆணவமிக்க பார்வோன் தாக்கும்படி கட்டளையிடுகிறான். (யாத்திராகமம் 14:23) எகிப்தியர்கள் சிறிதும் யோசிக்காமல் கடற்படுகையில் பாய்கிறார்கள், ஆனால் அவர்களது ரதங்களின் சக்கரங்கள் கழன்று விழவே, ஆக்ரோஷ தாக்குதலுக்கு பதிலாக பெருங்குழப்பம் ஏற்படுகிறது. இஸ்ரவேலர்கள் பத்திரமாக கரை சேர்ந்தவுடன் யெகோவா மோசேக்கு இவ்வாறு கட்டளையிடுகிறார்: “கடலுக்கு நேராக உன் கையை நீட்டு. தண்ணீர் பாய்ந்து வந்து எகிப்தியர்களையும் அவர்களுடைய போர் ரதங்களையும் குதிரைப்படைகளையும் மூழ்கடிக்கட்டும்.” மதில்களாய் நிற்கும் தண்ணீர் மீண்டும் திரும்பி வந்து பார்வோனையும் அவனது சேனைகளையும் மூழ்கடிக்கிறது!—யாத்திராகமம் 14:24-28; சங்கீதம் 136:15.
4. (அ) செங்கடலில் யெகோவா என்னவாக ஆனார்? (ஆ) யெகோவாவை பற்றிய இந்த வர்ணனை சிலரை எவ்வாறு பாதிக்கலாம்?
4 செங்கடலில் இஸ்ரவேல் தேசத்தாரை கடவுள் விடுவித்தது, மனிதவர்க்கத்தோடு அவர் தொடர்புகொண்ட, வரலாற்றிலேயே பெருஞ்சிறப்பு மிக்க சம்பவமாக இருந்தது. அப்போது யெகோவா ‘ஒரு மாவீரராக’ ஆனார். (யாத்திராகமம் 15:3) ஆனால், யெகோவாவை பற்றிய இந்த வர்ணனை உங்களை எவ்வாறு பாதிக்கிறது? போரால் மனிதவர்க்கத்திற்கு மிகுந்த வேதனையும் துயரமும் ஏற்பட்டிருப்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. ஆகவே கடவுள் தமது அழிக்கும் வல்லமையை பயன்படுத்துவது, அவரிடம் நெருங்கிச் செல்ல உங்களை உந்துவிப்பதற்கு பதிலாக அவரிடமிருந்து விலகிச் செல்ல ஒருவேளை காரணமாக இருக்கிறதா?
செங்கடலில் யெகோவா ‘ஒரு மாவீரராக’ நிரூபித்தார்
கடவுளுடைய யுத்தங்களும் மனித சண்டைகளும்
5, 6. (அ) கடவுள் ஏன் “பரலோகப் படைகளின் யெகோவா” என பொருத்தமாகவே அழைக்கப்படுகிறார்? (ஆ) கடவுளுடைய யுத்தம் எவ்வாறு மனித யுத்தத்திலிருந்து வித்தியாசப்படுகிறது?
5 மூல மொழி பைபிள்களில், எபிரெய வேதாகமத்தில் கிட்டத்தட்ட இருநூற்று அறுபது தடவையும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இரண்டு தடவையும் கடவுள் “பரலோகப் படைகளின் யெகோவா” என அழைக்கப்படுகிறார். (1 சாமுவேல் 1:11) உன்னதப் பேரரசராக, யெகோவா தேவதூதர்களின் பெரிய படைக்கு தலைவராக இருக்கிறார். (யோசுவா 5:13-15; 1 இராஜாக்கள் 22:19) இந்த சேனையின் அழிக்கும் வல்லமை பிரமிக்கத்தக்கது. (ஏசாயா 37:36) மனிதர்கள் அழிவதைப் பற்றி சிந்திப்பது இனிமையானதல்ல. என்றாலும் கடவுளுடைய யுத்தங்கள் அற்ப மனித சண்டைகளைப் போன்றவை அல்ல என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். ராணுவ தலைவர்களும் அரசியல் அதிகாரிகளும் உயர்ந்த இலட்சியங்களுக்காக போரிடுவதுபோல் காட்டிக்கொள்ள முயலலாம். ஆனால் மனித யுத்தத்திற்கு எப்போதும் அடிப்படையாக இருப்பது பேராசையும் சுயநலமுமே.
6 யெகோவாவோ, உணர்ச்சிவசப்பட்டு கண்மூடித்தனமாக செயல்படுவதில்லை. உபாகமம் 32:4 சொல்கிறபடி, “அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை. அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை. அவர் நம்பகமான கடவுள், அநியாயமே செய்யாதவர். அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.” கட்டற்ற கோபத்தையும் கொடூரத்தையும் வன்முறையையும் கடவுளுடைய வார்த்தை கண்டனம் செய்கிறது. (ஆதியாகமம் 49:7; சங்கீதம் 11:5) ஆகவே யெகோவா ஒருபோதும் காரணமில்லாமல் செயல்படுவதில்லை. தமது அழிக்கும் வல்லமையை அவர் மிதமாகவே, அதுவும் வேறு வழி இல்லாதபோது மட்டுமே பயன்படுத்துகிறார். தமது தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் வாயிலாக அவர் குறிப்பிட்டபடி, “‘பொல்லாதவன் சாக வேண்டும் என்றா நான் ஆசைப்படுகிறேன்? அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி உயிர்வாழ வேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறேன்?’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”—எசேக்கியேல் 18:23.
7, 8. (அ) யோபு தன் துன்பங்களை குறித்ததில் என்ன தவறான முடிவுக்கு வந்தார்? (ஆ) இந்த விஷயத்தில் யோபுவின் சிந்தனையை எலிகூ எவ்வாறு திருத்தினார்? (இ) யோபுவின் அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடம் கற்கலாம்?
7 அப்படியென்றால் யெகோவா ஏன் அழிக்கும் வல்லமையை பயன்படுத்துகிறார்? இதற்கு பதிலளிப்பதற்கு முன் நீதிமானாகிய யோபுவைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம். யோபு சோதனையின்கீழ் உத்தமத்தை காத்துக்கொள்வானோ என சாத்தான் சவால்விட்டான்; அந்தச் சவால் உண்மையில் மனிதர் ஒவ்வொருவரையும் உட்படுத்துகிறது. யோபுவின் உத்தமத்தை சோதித்துப் பார்க்க சாத்தானை அனுமதிப்பதன் மூலம் யெகோவா அந்த சவாலிற்கு பதிலளித்தார். இதன் காரணமாக, யோபு நோய்வாய்ப்பட்டார், செல்வத்தை இழந்தார், பிள்ளைகளையும் பறிகொடுத்தார். (யோபு 1:1–2:8) உட்பட்டிருந்த விவாதங்களை அறியாதவராக, கடவுள் நியாயமில்லாமல் தண்டித்ததாலேயே தனக்கு துயரங்கள் வந்ததாக யோபு தவறாக நினைத்துக்கொண்டார். கடவுள் தன்னை ஒரு “குறியாக,” “எதிரியாக” ஆக்கியது ஏன் என அவரிடமே கேட்டார்.—யோபு 7:20; 13:24.
8 வயதில் இளையவராகிய எலிகூ, யோபுவின் சிந்தனையில் தவறு இருந்ததை சுட்டிக்காட்டி, “‘கடவுளைவிட நான் நீதியுள்ளவன்’ என்று சொல்கிறீர்களே, உங்கள்மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?” என்றார். (யோபு 35:2) ஆம், நமக்கு கடவுளைவிட அதிகம் தெரியும் என்று நினைப்பதோ கடவுள் அநீதியாக நடந்துகொண்டிருக்கிறார் என்று ஊகிப்பதோ ஞானமற்ற காரியம். “உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்” என எலிகூ அறிவித்தார். மேலும், “சர்வவல்லமையுள்ளவரை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. அவர் மகா வல்லமை உள்ளவர். அவர் ஒருபோதும் நியாயத்தைப் புரட்ட மாட்டார்; எப்போதும் நீதியாக நடந்துகொள்வார்” என்றும் சொன்னார். (யோபு 34:10; 36:22, 23; 37:23) கடவுள் நியாயமான காரணத்தோடுதான் போரிடுவார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம். இதை மனதில் வைத்து, சமாதானத்தின் தேவன் ஏன் சிலசமயங்களில் போர் வீரரின் ஸ்தானத்தை ஏற்கிறார் என்பதற்கான சில காரணங்களை ஆராயலாம்.—1 கொரிந்தியர் 14:33.
சமாதானத்தின் தேவனுக்கு போரிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன்
9. பரிசுத்தத்தின் தேவன் ஏன் போரிடுகிறார்?
9 “ஒரு மாவீரர்” என கடவுளை துதித்த பிறகு, மோசே இவ்வாறு அறிவித்தார்: “யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா? பரிசுத்தத்தின் சிகரமே, யார் உங்களுக்கு ஈடாக முடியும்?” (யாத்திராகமம் 15:11) அதேபோல் தீர்க்கதரிசியாகிய ஆபகூக்கும் இப்படி எழுதினார்: “மிகவும் பரிசுத்தமான உங்களுடைய கண்கள் தீமையைப் பார்த்து ரசிக்காதே! அக்கிரமங்களை உங்களால் சகிக்க முடியாதே!” (ஆபகூக் 1:13) யெகோவா அன்பின் தேவன் என்றாலும், பரிசுத்தத்தின் தேவனாகவும் நீதியின் தேவனாகவும்கூட இருக்கிறார். அப்படிப்பட்ட பண்புகளின் காரணமாக, சிலசமயங்களில் தமது அழிக்கும் வல்லமையை பயன்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார். (ஏசாயா 59:15-19; லூக்கா 18:7) ஆகவே கடவுள் போர் செய்கையில் தமது பரிசுத்தத்தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. மாறாக, அவர் பரிசுத்தமாக இருப்பதன் காரணமாகவே போரிடுகிறார்.—யாத்திராகமம் 39:30.
10. ஆதியாகமம் 3:15-ல் முன்னறிவிக்கப்பட்ட பகை எப்படி மட்டுமே தீர்க்கப்படும், அதனால் நீதியுள்ள மனிதவர்க்கத்திற்கு என்ன நன்மைகள் உண்டாகும்?
10 முதல் மனித ஜோடியாகிய ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு எதிராக கலகம் செய்த பிறகு எழுந்த சூழ்நிலையை சிந்தித்துப் பாருங்கள். (ஆதியாகமம் 3:1-6) அவர்களது அநீதியை அவர் சகித்திருந்தால், சர்வலோகப் பேரரசர் என்ற தம் ஸ்தானத்தின் மதிப்பைக் குறைத்திருப்பார். நீதியுள்ள கடவுளாக, அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அவர் உணர்ந்தார். (ரோமர் 6:23) முதல் பைபிள் தீர்க்கதரிசனத்தில், தமது ஊழியர்களுக்கும் “பாம்பாகிய” சாத்தானை பின்பற்றுபவர்களுக்கும் பகை உண்டாகும் என முன்னறிவித்தார். (வெளிப்படுத்துதல் 12:9; ஆதியாகமம் 3:15) இறுதியில், சாத்தானை நசுக்குவதன் மூலமாக மட்டுமே இந்தப் பகையை தீர்க்க முடியும். (ரோமர் 16:20) ஆனால் அந்த நியாயத்தீர்ப்பு நடவடிக்கை, நீதியுள்ள மனிதவர்க்கத்திற்கு பெருமளவு ஆசீர்வாதங்களை அளிக்கும்; சாத்தானுடைய செல்வாக்கை பூமியிலிருந்து அகற்றி பூமியை பூஞ்சோலையாக மாற்றுவார். (மத்தேயு 19:28) அதுவரைக்கும், சாத்தானை ஆதரிப்பவர்கள் கடவுளுடைய மக்களின் சரீர மற்றும் ஆன்மீக நலனுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாய் இருப்பார்கள். அவ்வப்போது யெகோவா தலையிட வேண்டியிருக்கும்.
துன்மார்க்கத்தை போக்க கடவுள் நடவடிக்கை எடுக்கிறார்
11. பெருவெள்ளத்தைக் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்தை யெகோவா ஏன் உணர்ந்தார்?
11 நோவாவின் நாளைய பெருவெள்ளம் யெகோவாவின் தலையீட்டிற்கு ஓர் உதாரணம். ஆதியாகமம் 6:11, 12 இவ்வாறு சொல்கிறது: “பூமி சீரழிந்து கிடந்ததை உண்மைக் கடவுள் பார்த்தார். பூமியெங்கும் வன்முறை நடந்தது. கடவுள் பூமியைப் பார்த்தபோது, அது சீரழிந்து கிடந்தது. பூமியில் மனிதர்கள் எல்லாருடைய நடத்தையும் படுமோசமாக இருந்தது.” பூமியிலிருந்த கொஞ்சநஞ்ச ஒழுக்கத்தையும் குலைத்துப்போட துன்மார்க்கரை யெகோவா அனுமதிப்பாரா? மாட்டார். வன்முறையிலும் ஒழுக்கக்கேட்டிலும் ஊறிப்போயிருந்தவர்களை பூமியிலிருந்து நீக்கிப்போடுவதற்கு ஒரு பெருவெள்ளத்தைக் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்தை யெகோவா உணர்ந்தார்.
12. (அ) ஆபிரகாமின் ‘சந்ததியை’ பற்றி யெகோவா எதை முன்னறிவித்தார்? (ஆ) எமோரியர்கள் ஏன் அழிக்கப்படவிருந்தனர்?
12 கானானியர்களுக்கு எதிராக கடவுள் நியாயத்தீர்ப்பு வழங்கிய சமயத்திலும் இதுவே உண்மையாக இருந்தது. ஆபிரகாமின் மூலம் ஒரு சந்ததி வரும் என்றும் அந்த சந்ததியால் பூமியிலுள்ள எல்லா குடும்பத்தாரும் தங்களை ஆசீர்வதித்துக் கொள்வார்கள் என யெகோவா வெளிப்படுத்தினார். அந்த நோக்கத்திற்கு இசைவாக, ஆபிரகாமின் வம்சத்திற்கு கானான் தேசம் கொடுக்கப்படும் என கடவுள் அறிவித்தார்; அத்தேசத்தில் எமோரியர்கள் குடியிருந்தார்கள். அந்த ஜனங்களை வலுக்கட்டாயமாக அவர்களது தேசத்திலிருந்து கடவுள் வெளியேற்றுவது எந்த விதத்தில் நியாயம்? சுமார் 400 வருடங்களுக்கு பிறகுதான்—“எமோரியர்களை தண்டிக்க வேண்டிய நேரம்” வந்த பின்புதான்—வெளியேற்றப்படுவார்கள் என யெகோவா முன்னறிவித்தார்.b (ஆதியாகமம் 12:1-3; 13:14, 15; 15:13, 16; 22:18) அந்தக் காலப்பகுதியில் எமோரியர்கள் ஒழுக்கக்கேட்டில் மேன்மேலும் அமிழ்ந்து கொண்டிருந்தார்கள். சிலை வணக்கம், இரத்தம் சிந்துதல், சீர்கெட்ட பாலுறவு பழக்கங்கள் ஆகியவற்றிற்கு கானான் தேசம் பெயர் பெற்றது. (யாத்திராகமம் 23:24; 34:12, 13; எண்ணாகமம் 33:52) அத்தேசத்தினர் தங்கள் பிள்ளைகளைக்கூட நெருப்பில் பலி கொடுத்தார்கள். பரிசுத்த கடவுள் தம் மக்களை அப்படிப்பட்ட துன்மார்க்க சூழலுக்கு ஆளாக்குவாரா? மாட்டார்! “அவர்களுடைய தேசம் அசுத்தமாக இருக்கிறது. அந்தத் தேசத்தின் குற்றத்துக்காக நான் அதைத் தண்டிப்பேன், அந்தத் தேசத்தின் ஜனங்கள் துரத்தியடிக்கப்படுவார்கள்” என்று அவர் அறிவித்தார். (லேவியராகமம் 18:21-25) என்றாலும் யெகோவா அந்த மக்களை கண்மூடித்தனமாக கொன்றுபோடவில்லை. ராகாப், கிபியோனியர்கள் போன்ற, சரியான மனப்பான்மையைக் காட்டிய கானானியர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.—யோசுவா 6:25; 9:3-27.
தம் பெயருக்காக போரிடுதல்
13, 14. (அ) யெகோவா தமது பெயரைப் பரிசுத்தப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏன் உணர்ந்தார்? (ஆ) யெகோவா எவ்வாறு தமது பெயருக்கு ஏற்பட்ட இழுக்கை போக்கினார்?
13 யெகோவா பரிசுத்தர், ஆகவே அவருடைய பெயரும் பரிசுத்தமுள்ளது. (லேவியராகமம் 22:32) “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என ஜெபிக்கும்படி இயேசு தம் சீஷர்களுக்கு கற்பித்தார். (மத்தேயு 6:9) ஏதேனில் நடந்த கலகம் கடவுளுடைய பெயருக்கு நிந்தையை வருவித்தது, கடவுளுடைய நற்குணத்தையும் அவர் ஆளும் முறையையும் கேள்விக்குரியதாக்கியது. அப்படிப்பட்ட அவதூறையும் கலகத்தையும் யெகோவாவால் கண்டுகொள்ளாமல் இருக்கவே முடியவில்லை. தமது பெயருக்கு ஏற்பட்ட இழுக்கை போக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.—ஏசாயா 48:11.
14 மீண்டும் இஸ்ரவேலர்களை பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த வரைக்கும், ஆபிரகாமின் சந்ததியின் மூலம் பூமியிலுள்ள குடும்பத்தார் அனைவரும் தங்களை ஆசீர்வதித்துக் கொள்வார்கள் என்ற கடவுளுடைய வாக்குறுதி பலிக்கப்போவதில்லை என தோன்றியது. ஆனால் அவர்களை விடுவித்து ஒரு தேசமாக ஸ்தாபிப்பதன் மூலம் யெகோவா தம் பெயருக்கு ஏற்பட்ட இழுக்கை போக்கினார். ஆகவே, “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, உங்களுடைய கைபலத்தால் உங்கள் ஜனங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து . . . உங்கள் பெயருக்குப் புகழ் சேர்த்திருக்கிறீர்கள்” என தீர்க்கதரிசியாகிய தானியேல் ஜெபித்தார்.—தானியேல் 9:15.
15. யெகோவா ஏன் யூதர்களை பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுவித்தார்?
15 யெகோவா தம் பெயரின் நிமித்தம் மறுபடியும் செயல்பட வேண்டியது யூதர்களுக்கு அவசியமாக இருந்த ஒரு சமயத்தில் தானியேல் அவ்வாறு ஜெபம் செய்தது சுவாரஸ்யமான விஷயம். கீழ்ப்படியாத யூதர்கள் இம்முறை பாபிலோனிய சிறையிருப்பில் இருந்தார்கள். அவர்களது சொந்த தலைநகரமாகிய எருசலேம் பாழாய் கிடந்தது. யூதர்களை தாயகத்திற்கு திரும்பச் செய்வது யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்தும் என்பதை தானியேல் அறிந்திருந்தார். ஆகவே இவ்வாறு ஜெபம் செய்தார்: “யெகோவாவே, எங்களை மன்னியுங்கள். யெகோவாவே, எங்களைக் கண்ணோக்கிப் பார்த்து எங்களுக்கு உதவுங்கள். என் கடவுளே, உங்கள் நகரமும் உங்கள் ஜனங்களும் உங்களுடைய பெயரைத் தாங்கியிருப்பதால் அந்தப் பெயரின் மகிமைக்காக நீங்கள் தாமதிக்காமல் உதவி செய்யுங்கள்.”—தானியேல் 9:18, 19.
தம் மக்களுக்காக போரிடுதல்
16. யெகோவா தம் பெயரை தற்காப்பதில் அக்கறை காட்டுவது, அவர் இறுகிய மனம்படைத்த சுயநலக்காரர் என ஏன் அர்த்தப்படுத்துவதில்லை என்பதை விளக்குக.
16 யெகோவா தம் பெயரை தற்காப்பதில் அக்கறை காட்டுவது, அவர் இறுகிய மனம்படைத்த சுயநலக்காரர் என அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, அவர் தமது பரிசுத்தத்திற்கும் நீதியின் மேலுள்ள நேசத்திற்கும் இசைவாக செயல்படுவது அவரது மக்களை பாதுகாக்கிறது. ஆதியாகமம் 14-ஆம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். படையெடுத்து வந்த நான்கு ராஜாக்கள், ஆபிரகாமின் சகோதரன் மகனான லோத்துவையும் அவன் குடும்பத்தாரையும் சிறைபிடித்துச் சென்றதைப் பற்றி அங்கே வாசிக்கிறோம். கடவுளுடைய உதவியோடு, ஆபிரகாம் அந்த மாபெரும் பலம்படைத்த சேனைகளை ஆச்சரியமான விதத்தில் வீழ்த்தினார்! இந்த வெற்றியைப் பற்றிய பதிவே ‘யெகோவாவின் போர்கள் என்ற புத்தகத்தில்’—பைபிளில் குறிப்பிடப்படாத சில ராணுவ நடவடிக்கைகளைப் பற்றிய பதிவுகளும் அடங்கிய புத்தகத்தில்—இடம்பெற்ற முதல் பதிவாக இருந்திருக்கும். (எண்ணாகமம் 21:14) இதுபோன்ற இன்னும் அநேக வெற்றிகளை கடவுள் அளிக்கவிருந்தார்.
17. கானான் தேசத்திற்குள் நுழைந்த பிற்பாடு இஸ்ரவேலர்களுக்காக யெகோவா போரிட்டார் என்பதை எது காட்டுகிறது? உதாரணங்கள் தருக.
17 இஸ்ரவேலர்கள் கானான் தேசத்திற்குள் நுழைவதற்கு சற்று முன், மோசே இவ்வாறு அவர்களுக்கு உறுதியளித்தார்: “உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முன்னால் போய், உங்கள் கண்ணெதிரே எகிப்தியர்களோடு போர் செய்தது போல இப்போதும் உங்களுக்காகப் போர் செய்வார்.” (உபாகமம் 1:30; 20:1) மோசேக்கு பின் பொறுப்பேற்ற யோசுவாவின் காலத்திலும் நியாயாதிபதிகளின் காலத்திலும் யூதாவின் உண்மையுள்ள ராஜாக்களின் காலத்திலும் யெகோவா தம் மக்களுக்காக போரிட்டு எதிரிகளின்மீது மாபெரும் வெற்றிகளை அளித்தார்.—யோசுவா 10:1-14; நியாயாதிபதிகள் 4:12-17; 2 சாமுவேல் 5:17-21.
18. (அ) யெகோவா மாறாததற்கு நாம் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்? (ஆ) ஆதியாகமம் 3:15-ல் விவரிக்கப்பட்டிருக்கும் பகை உச்சக்கட்டத்தை எட்டும்போது என்ன நடக்கும்?
18 யெகோவா மாறவில்லை; இக்கிரகத்தை சமாதானமுள்ள பரதீஸாக மாற்றும் அவரது நோக்கமும் மாறவில்லை. (ஆதியாகமம் 1:27, 28) கடவுள் இன்னும் துன்மார்க்கத்தை வெறுக்கிறார். அதேசமயத்தில் தமது மக்களை மிகவும் நேசிக்கிறார், அவர்கள் சார்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பார். (சங்கீதம் 11:7) சொல்லப்போனால், ஆதியாகமம் 3:15-ல் விவரிக்கப்பட்டிருக்கும் பகை வெகு சீக்கிரத்தில் ஆச்சரியப்படத்தக்க, பயங்கரமான திருப்புமுனையை எட்டவிருக்கிறது. தமது பெயரை பரிசுத்தப்படுத்தி, தமது மக்களை பாதுகாப்பதற்காக யெகோவா மறுபடியும் ‘ஒரு மாவீரராக’ ஆகப்போகிறார்!—சகரியா 14:3; வெளிப்படுத்துதல் 16:14, 16.
19. (அ) அழிக்கும் வல்லமையை கடவுள் பயன்படுத்துவது, ஏன் நம்மை அவரிடம் நெருங்க வைக்கும் என்பதை உதாரணத்துடன் விளக்குக. (ஆ) கடவுள் போரிட மனமுள்ளவராக இருப்பது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
19 ஓர் உதாரணத்தை கவனியுங்கள்: ஒருவருடைய குடும்பத்தாரை மூர்க்க மிருகம் ஒன்று தாக்குவதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் பாய்ந்து சென்று சண்டையிட்டு அந்த மூர்க்க மிருகத்தை கொன்று போடுகிறார். அவரது மனைவியும் பிள்ளைகளும் இப்படிச் செய்ததற்காக அவரை வெறுப்பார்களா? மாறாக, அவருடைய சுயநலமற்ற அன்பை பார்த்து அவர்கள் நெகிழ்ந்துபோகும்படி தானே நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அதேபோல், அழிக்கும் வல்லமையை கடவுள் பயன்படுத்துவதால் நாம் அவரை வெறுக்கக்கூடாது. நம்மை பாதுகாப்பதற்காக அவர் போரிட மனமுள்ளவராக இருப்பது, அவர்மீதுள்ள நம் அன்பை அதிகரிக்க வேண்டும். அவரது எல்லையற்ற வல்லமைக்கான நம் மதிப்பையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு, நாம் “பயத்தோடும் பக்தியோடும் கடவுளுக்குப் பிரியமாகப் பரிசுத்த சேவை” செய்ய முடியும்.—எபிரெயர் 12:28.
‘மாவீரரிடம்’ நெருங்கி வாருங்கள்
20. தெய்வீக போரை பற்றிய பைபிள் பதிவுகள் நமக்கு முழுமையாக புரியாவிட்டால் என்ன செய்வது, ஏன்?
20 தெய்வீக போரை பற்றிய யெகோவாவின் தீர்மானங்களைக் குறித்து பைபிள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அனைத்து விவரங்களையும் அளித்து விளக்குவதில்லை என்பது உண்மைதான். ஆனால் இதைக் குறித்து நாம் எப்போதும் நிச்சயமாக இருக்கலாம்: யெகோவா தமது அழிக்கும் வல்லமையை அநீதியான, கெடுதலான, கொடூரமான விதத்தில் ஒருபோதும் வெளிக்காட்டுவதில்லை. ஒரு பைபிள் பதிவின் சூழமைவை அல்லது பின்னணி தகவலை கவனிப்பது, காரியங்களை சரியான கண்ணோட்டத்தில் நோக்க பெரும்பாலும் நமக்கு உதவும். (நீதிமொழிகள் 18:13) நம்மிடம் எல்லா விவரங்களும் இல்லாவிட்டாலும், யெகோவாவைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்வதும் அவரது அருமையான குணங்களை பற்றி தியானிப்பதுமே எந்த சந்தேகங்களையும் போக்க நமக்கு உதவும். நாம் இதைச் செய்கையில், நம் கடவுளாகிய யெகோவாவின்மீது நம்பிக்கை வைக்க போதிய காரணம் இருப்பதை புரிந்துகொள்வோம்.—யோபு 34:12.
21. யெகோவா சிலசமயங்களில் ‘மாவீரராக’ செயலாற்றுகிறபோதும் அடிப்படையில் எப்படிப்பட்டவராக இருக்கிறார்?
21 சூழ்நிலை தேவைப்படுத்தும்போது யெகோவா ‘மாவீரராக’ செயலாற்றுகிறார் என்றாலும் அவர் அடிப்படையில் யுத்தவெறியராக இருப்பதை அர்த்தப்படுத்தாது. பரலோக ரதத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்தில் யெகோவா தம் எதிரிகளோடு போரிட தயாராக இருப்பதாய் காட்டப்படுகிறார். இருந்தாலும் கடவுளை சுற்றி வானவில்லை—சமாதானத்தின் அடையாளத்தை—எசேக்கியேல் பார்த்தார். (ஆதியாகமம் 9:13; எசேக்கியேல் 1:28; வெளிப்படுத்துதல் 4:3) யெகோவா அமைதிக்கும் சமாதானத்திற்கும் இலக்கணமாக திகழ்வது தெளிவாக தெரிகிறது. “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். (1 யோவான் 4:8) யெகோவா தம் குணங்கள் அனைத்தையும் பரிபூரண சமநிலையோடு வெளிக்காட்டுகிறார். ஆகவே அப்படிப்பட்ட வல்லமைமிக்க, ஆனால் அன்புமிக்க கடவுளிடம் நெருங்கிச் செல்ல முடிவதற்கு நாம் எவ்வளவு பாக்கியம் பெற்றிருக்கிறோம்!
a எபிரெயர்களை “600 ரதங்களும் 50,000 குதிரைப்படை வீரர்களும் பலத்த ஆயுதங்கள் தரித்த 2,00,000 காலாட் படை வீரர்களும் துரத்தினர்” என யூத சரித்திராசிரியரான ஜொஸிஃபஸ் குறிப்பிடுகிறார்.—ஜூயிஷ் ஆன்ட்டிக்குவிட்டீஸ், II, 324 [xv, 3].
b இங்கே ‘எமோரியர்கள்’ என்ற வார்த்தை கானானியர்கள் அனைவரையும் உட்படுத்துவதாக தெரிகிறது.—உபாகமம் 1:6-8, 19-21, 27; யோசுவா 24:15, 18.