அதிகாரம் 20
‘ஞானமுள்ளவர்’—ஆனாலும் மனத்தாழ்மையுள்ளவர்
1-3. யெகோவா மனத்தாழ்மை உள்ளவர் என்பதில் நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
அப்பா தன் சிறு பிள்ளைக்கு ஒரு முக்கிய பாடத்தைக் கற்பிக்க விரும்புகிறார். இருதயத்தை எட்டும் விதத்தில் கற்பிக்க ஆவலாக இருக்கிறார். அப்படியென்றால் அவர் எந்த விதத்தில் கற்பிக்க வேண்டும்? பிள்ளையை பயமுறுத்தும் விதத்தில் உயர நின்றுகொண்டு கடுகடுப்பாக பேச வேண்டுமா? அல்லது பிள்ளையின் உயரத்திற்கு தாழக் குனிந்து, சாந்தமாகவும் அன்பாகவும் பேச வேண்டுமா? ஞானமும் மனத்தாழ்மையும் உள்ள தகப்பன் நிச்சயமாகவே சாந்தமாகத்தான் பேசுவார்.
2 யெகோவா எப்படிப்பட்ட தகப்பன்—கர்வமானவரா அல்லது மனத்தாழ்மையானவரா, கடுகடுப்பானவரா அல்லது சாந்தமானவரா? யெகோவா சகல அறிவும் சகல ஞானமும் பெற்றவர். இருந்தாலும் அறிவும் புத்திசாலித்தனமும் இருப்பதுதானே ஒருவரை மனத்தாழ்மையுள்ளவராக ஆக்குவதில்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா? பைபிள் சொல்கிறபடி, “அறிவு தலைக்கனத்தை உண்டாக்குகிறது.” (1 கொரிந்தியர் 3:19; 8:1) ஆனால் ‘ஞானமுள்ளவராக’ இருக்கும் யெகோவா மனத்தாழ்மையுள்ளவரும்கூட. (யோபு 9:4) யெகோவா தாழ்ந்த ஸ்தானத்தில் இருப்பதாகவோ மகிமையில் குறைவுபடுவதாகவோ இது அர்த்தப்படுத்தாது, மாறாக அவர் கர்வம் இல்லாதவராக இருக்கிறார். ஏன் அப்படி?
3 யெகோவா பரிசுத்தமானவர். ஆகவே கறைப்படுத்தும் பண்பாகிய கர்வம் அவரிடம் இல்லை. (மாற்கு 7:20-22) மேலும், தீர்க்கதரிசியாகிய எரேமியா யெகோவாவிடம் என்ன சொன்னார் என கவனியுங்கள்: “நீங்கள் கண்டிப்பாக என்னை நினைத்துப் பார்ப்பீர்கள், இறங்கி வந்து எனக்கு உதவுவீர்கள்” என்றார்.a (புலம்பல் 3:20) சற்று கற்பனை செய்து பாருங்கள்! உன்னதப் பேரரசராகிய யெகோவா ‘இறங்கி வந்து உதவ’ மனமுள்ளவராக இருந்தார்; அதாவது குறையுள்ள மனிதராகிய எரேமியாவிற்கு தயவு காண்பிப்பதற்காக அவருடைய நிலைக்கு இறங்கி வந்தார். (சங்கீதம் 113:7) ஆம், யெகோவா மனத்தாழ்மை உள்ளவர். ஆனால் அவருடைய மனத்தாழ்மையில் என்ன உட்பட்டிருக்கிறது? அது எப்படி ஞானத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது? அது ஏன் நமக்கு முக்கியமானது?
யெகோவா எவ்விதத்தில் மனத்தாழ்மை உள்ளவர்
4, 5. (அ) மனத்தாழ்மை என்பது என்ன, அது எப்படி வெளிக்காட்டப்படுகிறது, அதை ஏன் பலவீனம் அல்லது பயம் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது? (ஆ) தாவீதோடு செயல்பட்ட விதங்களில் யெகோவா எவ்வாறு மனத்தாழ்மையை வெளிக்காட்டினார், யெகோவாவின் மனத்தாழ்மை நமக்கு ஏன் முக்கியமானது?
4 மனத்தாழ்மை என்பது ஆணவமோ அகம்பாவமோ இல்லாத பணிவைக் குறிக்கிறது. அது இருதயத்தில் மறைந்திருக்கும் குணம்; சாந்தம், பொறுமை, நியாயத்தன்மை போன்ற பண்புகளில் வெளிப்படுகிறது. (கலாத்தியர் 5:22, 23) இருந்தாலும் இந்தத் தெய்வீக குணங்களை ஒருபோதும் பலவீனம் என்றோ பயம் என்றோ தவறுதலாக நினைத்துக்கொள்ளக் கூடாது. யெகோவாவின் நீதியுள்ள கோபத்தோடு அல்லது அழிக்கும் வல்லமையோடு அவை முரண்படுவது இல்லை. மாறாக, யெகோவாவின் மனத்தாழ்மையும் சாந்தமும் அவரது மகா பலத்தின் வெளிக்காட்டுகள்; அதாவது, பரிபூரண விதத்தில் தம்மையே கட்டுப்படுத்துவதற்கு அவருக்கிருக்கும் வல்லமையின் வெளிக்காட்டுகள். (ஏசாயா 42:14) மனத்தாழ்மை எவ்வாறு ஞானத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது? பைபிள் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “மனத்தாழ்மை என்பது சுயநலமில்லாத தன்மை என்றும் எல்லா ஞானத்திற்கும் இன்றியமையாத அடிப்படை பண்பு . . . என்றும் முடிவாக வரையறுக்கப்படுகிறது.” ஆகவே மனத்தாழ்மை இல்லையேல் உண்மையான ஞானம் இல்லை. யெகோவாவின் மனத்தாழ்மை நமக்கு எப்படி பயனளிக்கிறது?
ஞானமுள்ள தகப்பன் தன் பிள்ளைகளை மனத்தாழ்மையோடு சாந்தமாக நடத்துகிறார்
5 தாவீது ராஜா யெகோவாவிடம் இவ்வாறு பாடினார்: “உங்களுடைய மீட்பின் கேடயத்தை எனக்குக் கொடுக்கிறீர்கள். உங்கள் வலது கையால் என்னைத் தாங்குகிறீர்கள். உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்.” (சங்கீதம் 18:35) இந்த குறையுள்ள மனிதனின் சார்பாக செயல்பட்டு, அவரை அனுதினமும் பேணிப் பாதுகாப்பதற்காக யெகோவா இறங்கி வந்து உதவினார் என சொல்லலாம். இவ்விதத்தில் யெகோவா மனத்தாழ்மையை காட்ட மனமுள்ளவராக இருப்பதால்தான், தன்னால் காப்பாற்றப்படவும் ராஜாவாக உயர்ந்த நிலையை இறுதியில் அடையவும் முடியும் என்பதை தாவீது உணர்ந்தார். சொல்லப்போனால், யெகோவா மட்டும் மனத்தாழ்மை உள்ளவராக இல்லையென்றால், அதாவது சாந்தமும் அன்பும் நிறைந்த தகப்பனாக நம்மை நடத்துவதற்கு இறங்கி வர மனமுள்ளவராக இல்லையென்றால், நம்மில் யாருக்குத்தான் எதிர்கால நம்பிக்கை இருக்கும்?
6, 7. (அ) பைபிள் ஏன் யெகோவாவை அடக்கமானவர் என ஒருபோதும் குறிப்பிடுவதில்லை? (ஆ) சாந்தத்திற்கும் ஞானத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன, இந்த விஷயத்தில் தலைசிறந்த முன்மாதிரி வகிப்பது யார்?
6 மனத்தாழ்மைக்கும் அடக்கத்திற்கும் வித்தியாசம் இருப்பது கவனிக்கத்தக்கது. விசுவாசமுள்ள மனிதர்கள் வளர்க்க வேண்டிய அழகிய பண்பே அடக்கம். மனத்தாழ்மையைப் போல் இதுவும் ஞானத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, “அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும்” என நீதிமொழிகள் 11:2 சொல்கிறது. இருந்தாலும் யெகோவா அடக்கமுள்ளவராக இருக்கிறார் என பைபிள் ஒருபோதும் குறிப்பிடுவதில்லை. ஏன்? பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறபடி அடக்கம் என்பது சொந்த வரம்புகளை சரியாக உணர்ந்திருக்கும் கருத்தைக் கொடுக்கிறது. சர்வவல்லமையுள்ளவருக்கோ, தமது நீதியுள்ள தராதரங்களின் காரணமாக தாமாகவே சுமத்திக்கொள்ளும் வரம்புகளைத் தவிர வேறெந்த வரம்புகளும் கிடையாது. (மாற்கு 10:27; தீத்து 1:3) மேலும், உன்னதக் கடவுளாக இருப்பதால் அவர் யாருக்கும் கீழ்ப்பட்டு இல்லை. ஆகவே அடக்கம் என்ற பண்பு யெகோவாவிற்கு கொஞ்சமும் பொருந்துவதில்லை.
7 இருந்தாலும் யெகோவா மனத்தாழ்மையும் சாந்தமும் உள்ளவர். உண்மையான ஞானத்திற்கு சாந்தம் அவசியம் என தம் ஊழியர்களுக்கு அவர் கற்றுக்கொடுக்கிறார். ‘ஞானத்தால் வருகிற சாந்தத்தை’ பற்றி அவரது வார்த்தை பேசுகிறது.b (யாக்கோபு 3:13) இந்த விஷயத்தில் யெகோவாவின் உதாரணத்தை கவனியுங்கள்.
யெகோவா மனத்தாழ்மையோடு பொறுப்புகளை பகிர்ந்தளிக்கிறார், செவிகொடுக்கிறார்
8-10. (அ) பொறுப்புகளை பகிர்ந்தளிக்கவும் செவிகொடுத்துக் கேட்கவும் யெகோவா மனமுள்ளவராக இருப்பது ஏன் குறிப்பிடத்தக்கது? (ஆ) சர்வவல்லமையுள்ளவர் எவ்வாறு தமது தேவதூதர்களை நடத்தும் விதத்தில் மனத்தாழ்மையைக் காட்டியிருக்கிறார்?
8 யெகோவாவின் மனத்தாழ்மைக்கு மனதைத் தொடும் அத்தாட்சி, அவர் பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதிலும் செவிகொடுப்பதிலும் வெளிக்காட்டப்படுகிறது. அவர் உண்மையிலேயே செவிகொடுத்துக் கேட்கிறார் என்பது வியக்கத்தக்கது; யெகோவாவிற்கு உதவியோ ஆலோசனையோ தேவையே இல்லை. (ஏசாயா 40:13, 14; ரோமர் 11:34, 35) இருந்தாலும் அவர் இவ்விதங்களில் தம்மைத் தாழ்த்துவதாக பைபிள் திரும்பத் திரும்பக் காட்டுகிறது.
9 உதாரணத்திற்கு, ஆபிரகாமின் வாழ்க்கையில் நடந்த சிறப்பு வாய்ந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆபிரகாமை மூன்று பேர் சந்தித்தனர்; அவர்களில் ஒருவரை அவர் “யெகோவா” என அழைத்தார். வந்திருந்தவர்கள் உண்மையில் தேவதூதர்கள், ஆனால் ஒருவர் யெகோவாவின் பெயரில் வந்து அந்தப் பெயரின் சார்பாக செயல்பட்டார். அந்தத் தூதன் பேசியபோதும் செயல்பட்டபோதும் உண்மையில் யெகோவாவே பேசினார் அல்லது செயல்பட்டார் என சொல்லலாம். ‘சோதோமிலும் கொமோராவிலும் இருக்கிற ஜனங்களுக்கு எதிராக மற்றவர்கள் பயங்கரமாகப் புலம்புவதை’ கேட்டதாக இவ்விதத்தில் யெகோவா ஆபிரகாமிடம் சொன்னார். “மற்றவர்கள் புலம்புவதுபோல், அந்த ஜனங்கள் உண்மையிலேயே மோசமாக நடக்கிறார்களா என்று நான் இறங்கிப் போய்ப் பார்க்கப்போகிறேன்” என்றும் யெகோவா குறிப்பிட்டார். (ஆதியாகமம் 18:3, 20, 21) சர்வவல்லமையுள்ளவர் நிஜமாகவே ‘இறங்கிப் போவார்’ என இவ்வார்த்தைகள் அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, தம் சார்பாக அவர் மறுபடியும் தேவதூதர்களை அனுப்பினார். (ஆதியாகமம் 19:1) ஏன்? சகலத்தையும் காணும் யெகோவாவால் அந்தப் பகுதியின் உண்மையான நிலைமையை தாமே ‘பார்த்து’ அறிய முடியவில்லையா? நிச்சயம் முடிந்தது. ஆனால் நிலைமையை கண்டறிந்து, சோதோமிலிருந்த லோத்துவையும் அவரது குடும்பத்தையும் சென்று சந்திக்கும் நியமிப்பை யெகோவா மனத்தாழ்மையோடு அந்தத் தூதர்களுக்கு கொடுத்தார்.
10 அதுமட்டுமின்றி யெகோவா செவிகொடுக்கிறார். பொல்லாத அரசனாகிய ஆகாபை வீழ்த்துவதற்கு பல்வேறு ஆலோசனைகளை தரும்படி அவர் ஒருமுறை தேவதூதர்களை கேட்டார். யெகோவாவிற்கு அப்படிப்பட்ட உதவி தேவைப்படவில்லை. இருந்தாலும் ஒரு தேவதூதனுடைய ஆலோசனையை ஏற்று, அதை நிறைவேற்றும்படி பணித்தார். (1 இராஜாக்கள் 22:19-22) இது அவரது மனத்தாழ்மையை காட்டவில்லையா?
11, 12. யெகோவாவின் மனத்தாழ்மையை ஆபிரகாம் எவ்வாறு புரிந்துகொண்டார்?
11 தங்கள் கவலைகளை சொல்ல விரும்பும் குறையுள்ள மனிதர்களுக்கு செவிகொடுக்கவும் யெகோவா மனமுள்ளவராக இருக்கிறார். உதாரணத்திற்கு சோதோமையும் கொமோராவையும் அழிக்க தீர்மானித்திருப்பதாக யெகோவா முதலில் ஆபிரகாமிடம் சொன்னபோது விசுவாசமுள்ள அவர் கலக்கமடைந்தார். இதை “உங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே! . . . இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர் நியாயமாக நடக்காமல் இருப்பாரா?” என ஆபிரகாம் கேட்டார். அந்த நகரங்களில் 50 நீதிமான்கள் இருந்தால் அவற்றை யெகோவா அழிக்காமல் விட்டுவிடுவாரா என கேட்டார். ஆம் என யெகோவா அவருக்கு உறுதியளித்தார். ஆனால் எண்ணிக்கையை 45, 40 என்று குறைத்துக்கொண்டே மீண்டும் மீண்டும் ஆபிரகாம் அதே கேள்வியைக் கேட்டார். யெகோவா தொடர்ந்து உறுதியளித்தபோதும் ஆபிரகாம் அந்த எண்ணிக்கையை 10 வரை குறைத்தார். யெகோவா எவ்வளவு இரக்கமுள்ளவர் என ஆபிரகாம் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என தெரிகிறது. ஆனாலும் யெகோவா தமது நண்பரும் ஊழியருமாகிய ஆபிரகாம் இவ்விதத்தில் தம் கவலைகளை தெரிவிக்க பொறுமையோடும் மனத்தாழ்மையோடும் அனுமதித்தார்.—ஆதியாகமம் 18:23-33.
12 புத்திக்கூர்மையுள்ள, படிப்பறிவுள்ள எத்தனை பேர் தங்களைவிட அறிவில் மிகவும் குறைவுபடும் ஒருவர் சொல்வதை அவ்வளவு பொறுமையாக கேட்பர்?c நம் கடவுளுக்கு எப்பேர்ப்பட்ட மனத்தாழ்மை! அதே உரையாடலின்போது, யெகோவா “சீக்கிரத்தில் கோபப்படாதவர்” என்பதை ஆபிரகாம் புரிந்துகொண்டார். (யாத்திராகமம் 34:6) உன்னதமானவரின் செயல்களைக் குறித்து கேள்வி கேட்க தனக்கு உரிமையில்லை என்பதை ஆபிரகாம் உணர்ந்திருக்கலாம்; ஆகவே, “யெகோவாவே, தயவுசெய்து என்மேல் கோபப்படாதீர்கள்” என இருமுறை மன்றாடினார். (ஆதியாகமம் 18:30, 32) நிச்சயமாகவே யெகோவா கோபப்படவில்லை. அவர் ‘ஞானத்தால் வருகிற சாந்தத்தை’ உண்மையில் பெற்றிருக்கிறார்.
யெகோவா நியாயத்தன்மை உள்ளவர்
13. பைபிளில் “நியாயத்தன்மை” என்று கூறப்படும் வார்த்தையின் அர்த்தம் என்ன, இவ்வார்த்தை ஏன் யெகோவாவிற்கு பொருந்துகிறது?
13 யெகோவாவின் மனத்தாழ்மை, மற்றொரு அழகிய பண்பாகிய நியாயத்தன்மையில் வெளிப்படுகிறது. இப்பண்பு குறையுள்ள மனிதர்களிடம் குறைவுபடுவது வருத்தமான விஷயம். யெகோவா புத்திக்கூர்மையுள்ள தமது படைப்புகளுக்கு செவிகொடுக்க மனமுள்ளவராக இருப்பது மட்டுமல்லாமல், நீதியுள்ள நியமங்களோடு முரண்படாத வரை இணங்கிப்போகவும் மனமுள்ளவராக இருக்கிறார். பைபிளில் “நியாயத்தன்மை” என்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை சொல்லர்த்தமாக “வளைந்துகொடுப்பது” என அர்த்தப்படுத்துகிறது. இப்பண்பும் தெய்வீக ஞானத்திற்கு அடையாளம். ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் நியாயமானது’ என யாக்கோபு 3:17 சொல்கிறது. சகல ஞானமும் படைத்த யெகோவா எந்த விதத்தில் நியாயத்தன்மை உள்ளவராக இருக்கிறார்? ஒன்று அவர் தேவைக்கு ஏற்ப மாறுபவராக இருக்கிறார். யெகோவா தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆகிறார் என அவரது பெயரே கற்பிக்கிறது என்பதை நினைவுகூருங்கள். (யாத்திராகமம் 3:14) இது அவர் தேவைக்கு ஏற்ப மாறுபவராக, நியாயத்தன்மை உள்ளவராக இருப்பதை சுட்டிக்காட்டவில்லையா?
14, 15. யெகோவாவின் பரலோக ரதத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனம், அவரது அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றி நமக்கு எதை கற்பிக்கிறது, அது எப்படி மனித அமைப்புகளிலிருந்து வித்தியாசப்படுகிறது?
14 தேவைக்கு ஏற்ப மாறும் யெகோவாவின் பண்பை புரிந்துகொள்ள ஆரம்பிப்பதற்கு, பைபிளில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க பதிவு உதவும். ஆவி சிருஷ்டிகள் அடங்கிய யெகோவாவின் அமைப்பின் பரலோக பாகத்தைக் குறித்த ஒரு தரிசனத்தை தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் பெற்றார். பிரமிக்கத்தக்க அளவுள்ள ஒரு ரதத்தை அவர் பார்த்தார், அது யெகோவாவிற்கே சொந்தமான “வாகனம்,” எப்போதும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்று. அது நகர்ந்த விதம்தான் மிகவும் ஆர்வத்திற்குரியது. அதன் மாபெரும் சக்கரங்களுக்கு நான்கு முகங்கள் இருந்தன, அவை கண்களால் நிறைந்திருந்தன; ஆகவே அவற்றால் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது, நிற்காமலோ திரும்பாமலோ உடனடியாக திசையை மாற்றிக்கொள்ளவும் முடிந்தது. இந்த மகா ரதம், மனிதனின் கனரக வாகனத்தைப் போல் ஊர்ந்து செல்லவில்லை. மின்னல் வேகத்தில் ஓடவும், செங்குத்தான கோணத்தில் திரும்பவும்கூட அதனால் முடிந்தது! (எசேக்கியேல் 1:1, 14-28) ஆம், யெகோவாவின் அமைப்பு, அதைக் கட்டுப்படுத்தும் உன்னத பேரரசரைப் போலவே தேவைக்கு ஏற்ப மாறும் அபார தன்மை பெற்றுள்ளது; எப்போதும் மாறும் சூழ்நிலைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப இணங்கிச் செல்கிறது.
15 சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் அப்படிப்பட்ட பரிபூரண உதாரணத்தை பின்பற்ற மனிதர்களால் முயற்சிதான் செய்ய முடியும். சொல்லப்போனால் மனிதர்கள் வளைந்துகொடுப்பதற்கு பதிலாக அதிக கறாராகவும் நியாயத்தன்மையின்றியுமே பெரும்பாலும் செயல்படுகின்றனர், அவர்களுடைய அமைப்புகளும் அப்படித்தான். உதாரணத்திற்கு, ஒரு எண்ணெய்க் கப்பல் அல்லது சரக்கு ரயில் அளவிலும் பலத்திலும் பிரமிக்கத்தக்கதாக இருக்கலாம். ஆனால் சூழ்நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களுக்கு வளைந்துகொடுக்குமா? சரக்கு ரயில் செல்லுகையில் தண்டவாளத்தில் திடீரென ஏதேனும் இடைஞ்சல் வந்தால் அதை திருப்புவதற்கு வாய்ப்பே இல்லை. திடீரென நிறுத்துவதும் எளிதல்ல. சரக்குகள் நிறைந்த ரயில், பிரேக் போட்ட பிறகு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்றே நிற்கும்! அதேவிதமாக, எண்ணெய்க் கப்பலின் எஞ்சின்களை ஆஃப் செய்த பிறகு அது சுமார் 8 கிலோமீட்டர் தூரம் செல்லும். எஞ்சின்களை பின்னோக்கி செலுத்தினாலும் அந்தக் கப்பல் 3 கிலோமீட்டர் தூரம் சென்றுதான் நிற்கும்! நியாயத்தன்மையின்றி கெடுபிடியாக நடந்துகொள்ளும் மனித அமைப்புகளைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை. பெருமையின் காரணமாக மனிதர்கள், மாறுகிற தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள மறுக்கின்றனர். அப்படிப்பட்ட கண்டிப்பினால் நிறுவனங்கள் திவாலாகியிருக்கின்றன, அரசாங்கங்கள் கவிழ்ந்திருக்கின்றன. (நீதிமொழிகள் 16:18) யெகோவாவும் அவரது அமைப்பும் கொஞ்சமும் இப்படி இல்லாததற்காக நாம் எவ்வளவு சந்தோஷப்படலாம்!
யெகோவா நியாயத்தன்மையைக் காட்டும் விதம்
16. சோதோம் கொமோராவின் அழிவுக்கு முன்பு யெகோவா எவ்வாறு லோத்துவிடம் நியாயத்தன்மையைக் காட்டினார்?
16 சோதோம் கொமோராவின் அழிவைக் குறித்து மறுபடியும் சிந்தித்துப் பாருங்கள். “மலைப்பகுதிக்குத் தப்பித்து ஓடு!” என்ற தெளிவான கட்டளையை லோத்துவிற்கும் அவரது குடும்பத்திற்கும் யெகோவாவின் தூதன் கொடுத்தார். இருந்தாலும் லோத்துவிற்கு இது சரியென படவில்லை. “யெகோவாவே, தயவுசெய்து அங்கே போகச் சொல்லாதீர்கள்!” என கெஞ்சினார். மலைக்கு ஓடிப்போனால் கண்டிப்பாக சாக வேண்டியிருக்கும் என நினைத்து, அருகேயிருந்த சோவார் என்னும் ஊருக்கு தானும் தன் குடும்பத்தாரும் ஓடிப்போக அனுமதிக்குமாறு லோத்து மன்றாடினார். யெகோவாவோ அந்நகரத்தை அழிக்க தீர்மானித்திருந்தார். அதோடு லோத்து பயப்பட்டதில் நியாயமே இருக்கவில்லை. யெகோவாவால் லோத்துவை மலைகளில் கண்டிப்பாக காப்பாற்ற முடிந்திருக்கும்! இருந்தாலும் லோத்துவின் வேண்டுகோளுக்கு யெகோவா இணங்கி, சோவார் நகரை அழிக்காமல் விட்டுவிட்டார். “சரி, இந்த விஷயத்திலும் உனக்குக் கருணை காட்டுகிறேன், நீ சொல்கிற ஊரை அழிக்காமல் விடுகிறேன்” என தூதன் லோத்துவிடம் சொன்னார். (ஆதியாகமம் 19:17-22) யெகோவா எப்பேர்ப்பட்ட நியாயத்தன்மை காட்டுகிறார் பாருங்கள்!
17, 18. நினிவே மக்களை யெகோவா எவ்வாறு நியாயத்தன்மையோடு நடத்தினார்?
17 யெகோவா இருதயப்பூர்வ மனந்திரும்புதலையும் ஏற்று, எப்போதும் இரக்கமாகவும் நியாயமாகவும் நடந்துகொள்கிறார். பொல்லாப்பும் வன்முறையும் நிறைந்த நகரமாகிய நினிவேக்கு தீர்க்கதரிசியாகிய யோனா அனுப்பப்பட்டபோது என்ன நடந்ததென கவனியுங்கள். நினிவேயின் தெருக்களில் யோனா நடந்துசென்று அறிவித்த தெய்வீக செய்தி வெகு எளிமையானதாக இருந்தது; அந்த மகா நகரம் 40 நாட்களில் அழிக்கப்படும் என அவர் அறிவித்தார். இருந்தாலும் சூழ்நிலை தலைகீழாக மாறிவிட்டது. நினிவே மக்கள் மனந்திரும்பினர்!—யோனா, அதிகாரம் 3.
18 சூழ்நிலையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு யெகோவா நடந்துகொண்ட விதத்தையும் யோனா நடந்துகொண்ட விதத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அறிவொளியூட்டுவதாக இருக்கும். இந்தச் சந்தர்ப்பத்தில் யெகோவா தம்மை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு, ‘ஒரு மாவீரராக’ இருப்பதற்கு பதிலாக பாவங்களை மன்னிப்பவராக ஆனார்.d (யாத்திராகமம் 15:3) மறுபட்சத்தில் யோனா இணங்காதவராக, இரக்கமில்லாதவராக நடந்துகொண்டார். யெகோவாவின் நியாயத்தன்மையைக் குறித்து சிந்திப்பதற்குப் பதிலாக, முன்பு குறிப்பிடப்பட்ட சரக்கு ரயிலை அல்லது எண்ணெய்க் கப்பலைப் போல் நடந்துகொண்டார். அவர் அழிவை முன்னறிவித்திருந்தார், ஆகவே அழிவு வந்தே ஆக வேண்டுமென நினைத்தார்! இருந்தாலும் பொறுமையற்ற தீர்க்கதரிசிக்கு, நியாயத்தன்மையையும் இரக்கத்தையும் குறித்த மறக்க முடியாத பாடத்தை யெகோவா பொறுமையோடு கற்பித்தார்.—யோனா, அதிகாரம் 4.
19. (அ) யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கும் விஷயங்களில் நியாயத்தன்மையை காட்டுகிறார் என ஏன் நிச்சயமாக இருக்கலாம்? (ஆ) யெகோவா ‘நல்லவரும் நியாயமுள்ளவருமான’ எஜமானர் என்றும் மனத்தாழ்மையின் சிகரம் என்றும் நீதிமொழிகள் 19:17 எவ்வாறு காட்டுகிறது?
19 இறுதியில், நம்மிடம் எதிர்பார்க்கும் விஷயங்களில் யெகோவா நியாயத்தன்மையை காட்டுகிறார். “நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை அவர் நன்றாக அறிந்திருக்கிறார். நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்” என தாவீது ராஜா சொன்னார். (சங்கீதம் 103:14) யெகோவா நம் வரம்புகளையும் குறைகளையும் நம்மைவிட நன்கு அறிந்திருக்கிறார். நம் சக்திக்கு மிஞ்சியதை நம்மிடமிருந்து அவர் எதிர்பார்ப்பதே இல்லை. “நல்லவர்களாகவும் நியாயமானவர்களாகவும் இருக்கிற” மனித எஜமானர்களையும் “பிரியப்படுத்தக் கடினமானவர்களாக இருக்கிற” எஜமானர்களையும் பைபிள் வேறுபடுத்திக் காட்டுகிறது. (1 பேதுரு 2:18) யெகோவா எப்படிப்பட்ட எஜமானர்? “ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான்” என நீதிமொழிகள் 19:17 சொல்வதைக் கவனியுங்கள். நல்லவரும் நியாயமுள்ளவருமான எஜமானர் மட்டும்தான், எளியவர்களின் சார்பாக செய்யப்படும் அன்பான செயல்கள் ஒவ்வொன்றையும் கவனிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அதைவிட, சர்வலோகத்தையே படைத்தவர், இப்படிப்பட்ட இரக்கமிக்க செயல்களை செய்யும் சாதாரண மனிதர்களுக்கு கடன்பட்டிருப்பதுபோல் உணருவதாக இந்த வசனம் காட்டுகிறது! மனத்தாழ்மையின் சிகரமல்லவோ அவர்.
20. யெகோவா நம் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?
20 யெகோவா தமது ஊழியர்களை இன்று நடத்தும் விதத்திலும் மிக சாந்தமாகவும் நியாயத்தன்மையோடும் இருக்கிறார். நாம் விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது அவர் செவிகொடுத்துக் கேட்கிறார். நம்மிடம் பேசுவதற்கு அவர் தேவதூதர்களை அனுப்புவதில்லை என்பதற்காக, அவர் நம் ஜெபங்களை கேட்பதில்லை என நாம் முடிவு செய்துவிடக் கூடாது. பவுல், தனக்கு சிறையிலிருந்து விடுதலை கிடைக்க ‘தொடர்ந்து ஜெபம் செய்யும்படி’ உடன் விசுவாசிகளை கேட்டுக்கொண்டபோது, “நான் சீக்கிரத்தில் உங்களிடம் வருவதற்காக” என்றும் குறிப்பிட்டார். (எபிரெயர் 13:18, 19) ஆகவே நம் ஜெபங்கள், யெகோவா அதுவரை செய்யத் தீர்மானிக்காததை செய்யும்படி அவரை உண்மையில் தூண்டலாம்!—யாக்கோபு 5:16.
21. யெகோவாவின் மனத்தாழ்மையைக் குறித்து நாம் என்ன முடிவுக்கு வரவே கூடாது, மாறாக அவரைப் பற்றி எதை புரிந்துகொள்ள வேண்டும்?
21 யெகோவாவுடைய மனத்தாழ்மையின் இந்த வெளிக்காட்டுகள் எதுவும்—சாந்தம், செவிகொடுப்பதற்கான விருப்பம், பொறுமை, நியாயத்தன்மை ஆகிய எதுவும்—அவர் தமது நீதியுள்ள நியமங்களை விட்டுக்கொடுப்பதாக அர்த்தப்படுத்தாது. கிறிஸ்தவமண்டல குருமார், யெகோவாவுடைய ஒழுக்க தராதரங்களின் மதிப்பைத் தணிப்பதன் மூலம் மந்தைகளின் காதுகளுக்கு இனிமையாய் இருக்கும் விஷயங்களை சொல்வதன் மூலம் தாங்கள் நியாயத்தன்மையை காட்டுவதாக நினைத்துக் கொள்ளலாம். (2 தீமோத்தேயு 4:3) ஆனால் தற்போதைய சௌகரியத்திற்காக எதையும் விட்டுக்கொடுக்கும் மனித இயல்புக்கும் தெய்வீக நியாயத்தன்மைக்கும் சம்பந்தமே இல்லை. யெகோவா பரிசுத்தர்; அவர் ஒருபோதும் தமது நியாயமான தராதரங்களை கறைப்படுத்த மாட்டார். (லேவியராகமம் 11:44) எனவே, யெகோவாவின் நியாயத்தன்மை அவரது மனத்தாழ்மைக்கு அத்தாட்சியாக இருப்பதாலேயே நாம் அதை நேசிப்போமாக. சர்வலோகத்திலேயே மிக ஞானமானவராகிய யெகோவா தேவன், மனத்தாழ்மையே உருவானவராகவும் இருக்கிறார் என்பதை சிந்திக்கையில் நீங்கள் பூரிப்படையவில்லையா? பிரமிக்கத்தக்க, அதேசமயத்தில் சாந்தமும் பொறுமையும் நியாயத்தன்மையும் உருவான இந்தக் கடவுளிடம் நெருங்கிச் செல்வது எத்தனை இன்பமானது!
a சோஃபெரிம் என்றழைக்கப்பட்ட பூர்வகால வேதபாரகர்கள் இந்த வசனத்தை மாற்றியமைத்தனர்; யெகோவா அல்ல ஆனால் எரேமியாவே இறங்கி வருவதுபோல் சொல்லப்படுவதாக அதை மாற்றினர். அப்படிப்பட்ட மனத்தாழ்மையான செயல் கடவுளுக்கு பொருந்தாது என அவர்கள் நினைத்துக் கொண்டனர். இதன் காரணமாக அநேக மொழிபெயர்ப்புகள் இந்த அழகிய வசனத்தின் கருத்தை தவறவிட்டிருக்கின்றன. இருந்தாலும், கடவுளிடம் எரேமியா இப்படி சொல்வதாக த நியூ இங்லிஷ் பைபிள் திருத்தமாக மொழிபெயர்த்திருக்கிறது: “நினைவுகூரும், நினைவுகூரும், என்னிடம் இறங்கி வாருங்கள்.”
b மற்ற மொழிபெயர்ப்புகள், ‘ஞானம் தரும் பணிவு’ என்றும் ‘ஞானத்திற்கு அடையாளமான மென்மை’ என்றும் சொல்கின்றன.
c பொறுமை, பெருமையிலிருந்து முரண்படுவதாக பைபிள் காட்டுவது சுவாரஸ்யமான விஷயம். (பிரசங்கி 7:8) யெகோவாவின் பொறுமை, அவரது மனத்தாழ்மைக்கு மேலுமான அத்தாட்சியைக் கொடுக்கிறது.—2 பேதுரு 3:9.
d யெகோவா “நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என சங்கீதம் 86:5 சொல்கிறது. அந்தச் சங்கீதம் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது, “மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என்பது, எபியிகிஸ் (e·pi·ei·kesˈ) அல்லது “நியாயத்தன்மை உள்ளவர்” என குறிப்பிடப்பட்டது.