விழித்திருங்கள்! சாத்தான் உங்களை விழுங்க பார்க்கிறான்
“விழித்திருங்கள். உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிகிறான்.”—1 பே. 5:8.
1. ஒரு தேவதூதன் எப்படி சாத்தானாக மாறினான் என்று சொல்லுங்கள்.
ஆரம்பத்தில் ஒரு தேவதூதன் கடவுளோடு நெருங்கிய பந்தத்தை அனுபவித்தான். அதற்குப் பிறகு தன்னுடைய தகுதிக்கு மிஞ்சிய ஒரு விஷயத்தை அடைய வேண்டும், அதாவது மனிதர்கள் எல்லாரும் தன்னை வணங்க வேண்டும், என்று ஆசைப்பட்டான். அந்த ஆசை அவன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வேர்விட ஆரம்பித்தது. கடைசியில் அவன் கடவுளுக்கு எதிராக பாவம் செய்தான். (யாக். 1:14, 15) அவன் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா? அவன்தான் சாத்தான்! அவன் ‘சத்தியத்தில் நிலைத்திருக்கவில்லை’ என்றும் அவன் யெகோவாவுக்கு விரோதமாக நடந்ததால் ‘பொய்க்குத் தகப்பனாக இருக்கிறான்’ என்றும் பைபிள் சொல்கிறது.—யோவா. 8:44.
2, 3. “சாத்தான்,” “பிசாசு,” ‘பழைய பாம்பு,’ “ராட்சதப் பாம்பு” என்ற பெயர்கள் யெகோவாவுடைய எதிரி எப்படிப்பட்டவன் என்பதைக் காட்டுகின்றன?
2 யெகோவாவை எதிர்த்த சமயத்திலிருந்து சாத்தான் அவருடைய மிகப் பெரிய எதிரியாக ஆனான். யெகோவாவுக்கு மட்டுமில்லை மனிதர்களுக்கும் அவன் எதிரியாக ஆகிவிட்டான். பைபிள் அவனை விவரிக்கிற விதத்தை வைத்து அவன் எவ்வளவு பொல்லாதவனாக இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு, சாத்தான் என்றால் “எதிர்ப்பவன்” என்று அர்த்தம். அவன் கடவுளையும் அவருடைய ஆட்சியையும் வெறித்தனமாக எதிர்ப்பதால் அவனுக்கு இந்த பெயர் வந்தது. யெகோவாவின் ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் அவன் குறியாக இருக்கிறான்.
3 வெளிப்படுத்துதல் 12:9, சாத்தானை பிசாசு என்றும் அழைக்கிறது. பிசாசு என்றால் “பழிதூற்றுபவன்” என்று அர்த்தம். யெகோவா பொய் சொல்பவர் என்று அவர்மீது அபாண்டமாக பழிபோட்டதால் அவனுக்கு இந்தப் பெயர் வந்தது. அதோடு, அவன் ஒரு பாம்பை பயன்படுத்தி ஏவாளை ஏமாற்றியதால் ‘பழைய பாம்பு’ என்றும் அழைக்கப்படுகிறான். அவனுக்கு “ராட்சதப் பாம்பு” என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. அவன் கொடூரமாகவும் ஈவிரக்கம் இல்லாமலும் நடப்பதால் அவனுக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கிறது. யெகோவாவின் நோக்கம் நிறைவேறக் கூடாது... அவருடைய மக்களை அடியோடு அழிக்க வேண்டும்... என்பதில் அவன் குறியாக இருக்கிறான்.
4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்க போகிறோம்?
4 நம் உத்தமத்தை குலைத்துப்போட சாத்தான் எவ்வளவு தீவிரமாக இருக்கிறான் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறதா? அதனால்தான், பைபிள் நம்மை இப்படி எச்சரிக்கிறது: “தெளிந்த புத்தியுடன் இருங்கள், விழித்திருங்கள். உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிகிறான்.” (1 பே. 5:8) இப்போது சாத்தானுடைய மூன்று குணங்களைப் பற்றி பார்க்கலாம். இந்தப் பொல்லாத எதிரியிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை அப்போது புரிந்துகொள்வோம்.
சாத்தான் அதிக சக்தியுள்ளவன்
5, 6. (அ) தேவதூதர்கள் அதிக சக்தியுள்ளவர்கள் என்பதற்கு சில உதாரணங்களை சொல்லுங்கள். (ஆ) எந்த அர்த்தத்தில் சாத்தான் மக்களை ‘மரணத்திற்கு வழிவகுக்கிறான்’?
5 தேவதூதர்களுக்கு அதிக சக்தி இருக்கிறது. (சங். 103:20) மனிதர்களைவிட அவர்கள் அதிக புத்திசாலிகள், பலசாலிகள். தங்களுடைய சக்தியை நல்ல விஷயத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு 1,85,000 அசீரிய படை வீரர்களை ஒரேயொரு தேவதூதர் கொன்றுபோட்டார். சாதாரண ஒரு மனிதனால் இதை நிச்சயம் செய்திருக்க முடியாது. ஒருவேளை, ஒரு பெரிய படையே திரண்டு வந்திருந்தால்கூட இது கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். (2 இரா. 19:35) இன்னொரு சமயம், ஒரு தேவதூதர் தன்னுடைய சக்தியையும் திறமையையும் பயன்படுத்தி இயேசுவின் சீடர்களை சிறையிலிருந்து விடுதலை செய்தார். காவல்காரர்கள் கண் முன்னாடியே தேவதூதர் சிறை கதவுகளின் பூட்டை திறந்து, சீடர்களை வெளியே அழைத்து வந்தார். இருந்தாலும் அதை எல்லாம் அவர்களால் பார்க்க முடியவில்லை.—அப். 5:18-23.
6 தேவதூதர்கள் நல்லது செய்ய அவர்களுடைய சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சாத்தான், மோசமான காரியங்களை செய்வதற்கு அவனுடைய சக்தியைப் பயன்படுத்துகிறான். அதுமட்டும் இல்லாமல், அவனுக்கு அதிக சக்தி இருப்பதால் மனிதர்களை ஆட்டிப்படைக்கிறான். அதனால்தான் பைபிள் அவனை “உலகத்தை ஆளுகிறவன்” என்றும் “இந்த உலகத்தின் கடவுள்” என்றும் அழைக்கிறது. (யோவா. 12:31; 2 கொ. 4:4) அதோடு சாத்தானை, ‘மரணத்திற்கு வழிவகுக்கிறவன்’ என்றும் பைபிள் சொல்கிறது. (எபி. 2:14) அதாவது மக்கள் சாவதற்கு அவன் காரணமாக இருக்கிறான் என்று சொல்கிறது. ஆனால் அவன் மக்கள் எல்லாரையும் நேரடியாக சாகடிக்கிறானா? இல்லை. அப்படியென்றால் அவன் அதை எப்படி செய்கிறான்? (1) இந்த உலகத்தில் இருக்கிற மக்கள் சாத்தானை போலவே இருக்கிறார்கள். அதனால் மூர்க்கமாக, கொடூரமாக நடந்துகொள்கிறார்கள். (2) சாத்தான் சொன்ன பொய்யை ஏவாள் நம்பினாள், ஆதாமும் யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போனான். அதனால்தான் எல்லா மனிதர்களுக்கும் பாவமும் மரணமும் வந்தது. (ரோ. 5:12) இயேசு சொன்ன மாதிரியே சாத்தான் “கொலைகாரனாக” இருக்கிறான். (யோவா. 8:44) அப்படியென்றால், சாத்தானுக்கு எந்தளவு சக்தி இருக்கிறது என்று இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது இல்லையா?
7. பேய்களுக்கு சக்தி இருக்கிறது என்று நாம் எப்படி சொல்லலாம்?
7 நாம் சாத்தானை எதிர்த்து நிற்கும்போது அவனை மட்டுமில்லை, கடவுளுடைய ஆட்சியை எதிர்க்கிறவர்களையும்... அவனுக்கு ஆதரவாக இருக்கிற பேய்களையும்... எதிர்த்து நிற்கிறோம். (வெளி. 12:3, 4) அந்தப் பேய்களுக்கு மனிதர்களைவிட அதிக சக்தி இருக்கிறது. அதனால் மனிதர்களுக்கு தொடர்ந்து கஷ்டத்தையும் வேதனையையும் கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. (மத். 8:28-32; மாற். 5:1-5) அப்படியென்றால், அந்த பேய்களையும் அந்த ‘பேய்களின் தலைவனையும்’ நாம் சாதாரணமாக எடைபோட கூடாது. (மத். 9:34) யெகோவாவுடைய உதவி இல்லாமல் சாத்தானை நம்மால் நிச்சயம் எதிர்த்து நிற்க முடியாது.
சாத்தான் ஈவிரக்கம் இல்லாதவன்
8. (அ) சாத்தானுடைய குறிக்கோள் என்ன? (ஆரம்பப் படம்) (ஆ) இந்த உலகம் சாத்தானை போல் கொடூரமாக இருக்கிறது என்று நீங்கள் எப்படி சொல்வீர்கள்?
8 சாத்தான் ‘கர்ஜிக்கிற சிங்கம்’ போல் இருக்கிறான் என்று பேதுரு சொன்னார். “பசி வெறியில் இருக்கிற ஒரு மிருகம் எழுப்பும் சத்தம்”தான் கர்ஜனை. அப்படியென்றால் சாத்தானை கொடூரமானவன், ஈவிரக்கம் இல்லாதவன் என்று சொல்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! இந்த உலகம் முழுவதும் அவன் கையில் இருந்தாலும், இன்னும் யாரை விழுங்கலாம் என்று அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். (1 யோ. 5:19) முக்கியமாக, பூமியில் இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களையும் ‘வேறே ஆடுகளையும்’ எப்போது விழுங்கலாம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறான். (யோவா. 10:16; வெளி. 12:17) யெகோவாவுடைய மக்கள் எல்லாரையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் அவனுடைய குறிக்கோள். அதனால்தான் அன்றுமுதல் இன்றுவரை கிறிஸ்தவர்களை அவன் சித்திரவதை செய்கிறான்.
9, 10. (அ) சாத்தான் எப்படி இஸ்ரவேல் மக்களை தாக்கினான்? (உதாரணம் கொடுங்கள்.) (ஆ) இஸ்ரவேல் மக்களை சாத்தான் தாக்கியதற்கு ஒரு முக்கிய காரணம் என்ன? (இ) இன்று யெகோவாவை சேவிக்கும் ஒருவர் பாவம் செய்யும்போது சாத்தானுக்கு எப்படி இருக்கும்?
9 சாத்தான் பயங்கர கொடூரமானவன் என்பதை இன்னொரு விதத்திலும் நிரூபித்திருக்கிறான். பசியில் இருக்கிற சிங்கம், அது அடித்து கொல்லப்போகும் மிருகத்தைப் பார்த்து பரிதாபப்படாது, ஈவிரக்கம் இல்லாமல் அதை கொன்று போடும். கொன்ற பிறகும், அதை நினைத்து கொஞ்சம்கூட வருத்தப்படாது. அதேபோலத்தான் சாத்தானும்! அவன் மனிதர்களை கொஞ்சம்கூட ஈவிரக்கம் இல்லாமல் தாக்குகிறான். உதாரணத்திற்கு, இஸ்ரவேலர்கள் ஒவ்வொரு முறையும் ஒழுக்கங்கெட்ட விஷயங்களை செய்தபோது... பேராசையாக நடந்துகொண்டபோது... சாத்தானுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். உதாரணத்திற்கு, சிம்ரியின் ஒழுக்கங்கெட்ட செயலினால் வந்த பாதிப்புகளை பார்த்தபோது சாத்தானுக்கு எவ்வளவு கொண்டாட்டமாக இருந்திருக்கும்? பேராசையினால் கேயாசி கஷ்டப்பட்டதைப் பார்த்தபோது சாத்தானுக்கு எவ்வளவு குஷியாக இருந்திருக்கும்?—எண். 25:6-8, 14, 15; 2 இரா. 5:20-27.
10 இஸ்ரவேலர்களை சாத்தான் தாக்கியதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. இஸ்ரவேல் தேசத்தில்தான் மேசியா பிறக்க போகிறார் என்று சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். அதுமட்டுமில்லாமல், அவர்தான் தன்னை அழிக்க போகிறார், யெகோவாவுடைய ஆட்சிதான் சிறந்தது என்று நிரூபிக்க போகிறார் என்பதும் சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். (ஆதி. 3:15) அதனால், இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு பிடிக்காத காரியங்களை செய்தால் யெகோவாவே அவர்களை ஒதுக்கித் தள்ளிவிடுவார் என்று நினைத்தான். அவர்களைப் பாவம் செய்ய தூண்டுவதற்குத் தன்னாலான எல்லா முயற்சியையும் செய்தான். அப்படியென்றால், தாவீது ஒழுக்கங்கெட்ட விதமாக நடந்துகொண்டதை பார்த்தபோது சாத்தான் கவலைப்பட்டிருப்பான் என்று நினைக்கிறீர்களா? யெகோவா வாக்கு கொடுத்திருந்த தேசத்திற்குள் மோசே போக முடியாமல் போனதை நினைத்து சாத்தான் வருத்தப்பட்டிருப்பான் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை! கடவுளுடைய மக்கள் பெரிய பாவம் செய்யும்போது அதைப் பார்த்து சந்தோஷப்படுகிற முதல் ஆள் சாத்தானாகத்தான் இருப்பான். சொல்லப்போனால், அவர்கள் செய்யும் தப்பை சொல்லிக்காட்டி யெகோவாவையே கேலி செய்வான்.—நீதி. 27:11.
11. சாத்தான் ஏன் சாராள்மீது குறியாக இருந்திருக்கலாம்?
11 மேசியா வரவிருந்த வம்சத்தை தாக்குவதுதான் சாத்தானுடைய குறியாக இருந்தது. உதாரணத்திற்கு, ஆபிரகாமை ‘பெரிய ஜாதியாக’ ஆக்குவேன் என்று யெகோவா வாக்கு கொடுத்த பிறகு என்ன நடந்தது என்று யோசித்துப் பாருங்கள். (ஆதி. 12:1-3) ஆபிரகாமும் சாராளும் எகிப்தில் இருந்தார்கள். அப்போது சாராளை தன்னுடைய மனைவியாக்குவதற்காக பார்வோன் அவளை தன் அரண்மனைக்கு எடுத்துக்கொண்டு போனான். ஆனால், அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து யெகோவா சாராளை காப்பாற்றினார். (ஆதியாகமம் 12:14-20-ஐ வாசியுங்கள்.) ஈசாக்கு பிறப்பதற்கு முன்பு, கேரார் என்ற ஊரிலும் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. (ஆதி. 20:1-7) இதற்கு எல்லாம் சாத்தான்தான் காரணமாக இருந்திருப்பானா? ஊர் தேசத்தில் செல்வ செழிப்பாக வாழ்ந்த சாராள் இப்போது கூடாரத்தில் வாழ்கிறாள். பார்வோன் மற்றும் அபிமெலேக்கின் ஆடம்பரமான மாளிகைகளைக் காட்டி சாத்தான் சாராளை மயக்க நினைத்திருப்பானா? அவளுடைய கணவனுக்கும், ஏன் யெகோவாவுக்கும்கூட நம்பிக்கை துரோகம் செய்துவிடுவாள் என்று சாத்தான் நினைத்திருப்பானா? இதற்கு எல்லாம் பைபிளில் பதில் இல்லை. என்றாலும், அவன் எதிர்பார்த்த மாதிரி சாராள் நடந்திருந்தால் மேசியாவுடைய மூதாதையாக ஆகும் வாய்ப்பை அவள் இழந்திருப்பாள்... அவளுடைய திருமண பந்தம் பாதிக்கப்பட்டிருக்கும்... அவளுக்கு கெட்ட பெயர் வந்திருக்கும்... யெகோவாவோடு அவளுக்கு இருந்த பந்தமும் முறிந்து போயிருக்கும். இதெல்லாம் நடந்திருந்தால் சாத்தான் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பான்! அப்படியென்றால், சாத்தான் ஈவிரக்கமே இல்லாதவன் என்று இது காட்டுகிறது இல்லையா?
12, 13. (அ) இயேசு பிறந்ததற்குப் பிறகும் சாத்தான் எப்படி ஈவிரக்கம் இல்லாமல் நடந்துகொண்டான்? (ஆ) யெகோவாவை நேசிக்கிற, அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிற இளம் பிள்ளைகளைப் பற்றி சாத்தான் என்ன நினைக்கிறான்?
12 ஆபிரகாம் வாழ்ந்து பல நூறு வருடங்களுக்குப் பிறகுதான் இயேசு பிறந்தார். இந்தக் குழந்தை எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சாத்தான் நினைத்திருப்பானா? நிச்சயமாக இல்லை! ஏனென்றால், இந்தக் குழந்தைதான் வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக ஆகப்போகிறது என்று அவனுக்கு தெரியும். ஏனென்றால், இயேசுதான் ஆபிரகாமுடைய சந்ததியின் முக்கிய பாகமாக இருந்தார். அதோடு, அவர்தான் ‘பிசாசின் செயல்களை ஒழிக்க’ இருந்தார். (1 யோ. 3:8) அதனால், குழந்தையாக இருந்த இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்று சாத்தான் நினைத்தான். ஒரு குழந்தையை கொல்வது கொடூரமான விஷயம் என்று அவன் நினைத்தானா? இல்லை. எது சரி, எது தவறு என்றெல்லாம் அவன் யோசிப்பதே கிடையாது. அந்தக் குழந்தையை கொல்வதற்கு அவன் உடனே சதித்திட்டம் போட்டான். எப்படி என்று இப்போது பார்க்கலாம்!
13 “யூதர்களுடைய ராஜா” பிறந்திருக்கிறார் என்பதை வானசாஸ்திரிகள் ஏரோது ராஜாவுக்கு சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஏரோது ராஜாவுக்கு பயங்கர கோபம் வந்தது; அந்தக் குழந்தையை எப்படியாவது கொன்றுபோட வேண்டும் என்று அவன் துடித்தான். (மத். 2:1-3, 13) அதனால், பெத்லகேமிலும் அதன் எல்லாப் பகுதிகளிலும் இருந்த இரண்டு வயதும் அதற்குட்பட்ட வயதுமுள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுபோட சொல்லி கட்டளையிட்டான். (மத்தேயு 2:13-18-ஐ வாசியுங்கள்.) இயேசு இந்தப் படுகொலையிலிருந்து காப்பாற்றப்பட்டார். இதிலிருந்து, சாத்தானைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? மனித உயிரை அவன் கொஞ்சம்கூட மதிப்பது இல்லை. குழந்தைகள் மீதும் அவனுக்கு துளிகூட அக்கறை இல்லை. சாத்தான் உண்மையிலேயே “கர்ஜிக்கிற சிங்கம்”தான். அவன் ஈவிரக்கமே இல்லாதவன் என்பதை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்!
ஏமாற்றுபவன்
14, 15. ‘விசுவாசிகளாக இல்லாதவர்களுடைய மனக்கண்களை’ சாத்தான் எப்படிக் குருடாக்கியிருக்கிறான்?
14 யெகோவாவுக்கு எதிராக மக்களை செயல்பட வைக்க சாத்தான் பயன்படுத்தும் ஒரே வழி அவர்களை ஏமாற்றுவதுதான். (1 யோ. 4:8) “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு” இருக்க வேண்டியதில்லை, அதாவது கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, என்று மக்களை நினைக்க வைக்கிறான். (மத். 5:3) மக்கள் யெகோவாவைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக ‘விசுவாசிகளாக இல்லாத அவர்களுடைய மனக்கண்களை குருடாக்கியிருக்கிறான்.’—2 கொ. 4:4.
15 சாத்தான் மக்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தும் ஒரு வழி பொய்மதம். மக்கள் தம்மை மட்டுமே வணங்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார் என்பது சாத்தானுக்குத் தெரியும். (யாத். 20:5) ஆனால், யெகோவாவை வணங்குவதற்குப் பதிலாக மக்கள் தங்களுடைய முன்னோர்களை... இயற்கையை... மிருகங்களை... எல்லாம் வணங்குவதை பார்க்கும்போது சாத்தானுக்கு எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்! சிலர் கடவுளை சரியான வழியில் வணங்குவதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையில் பொய்மத நம்பிக்கைகளில்தான் ஊறிப்போய் இருக்கிறார்கள். அதோடு வீணான சடங்குகளையும் செய்கிறார்கள். ஆனால், இதை எல்லாம் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நினைக்கும்போது பரிதாபமாக இருக்கிறது. ஏசாயாவின் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களும் இவர்களை போலவே இருந்தார்கள். அதனால் யெகோவா அவர்களிடம் இப்படி சொன்னார்: “நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.”—ஏசா. 55:2.
16, 17. (அ) “விலகிப் போ, சாத்தானே!” என்று இயேசு ஏன் பேதுருவிடம் சொன்னார்? (ஆ) நாம் விழிப்பாக இல்லாதபடி சாத்தான் எப்படி நம்மை ஏமாற்றலாம்?
16 யெகோவாவை முழுமூச்சோடு சேவித்துக்கொண்டிருக்கும் அவருடைய ஊழியர்களைக்கூட சாத்தான் ஏமாற்றுகிறான். உதாரணத்திற்கு, தன்னை சீக்கிரத்தில் கொன்றுவிடுவார்கள் என்று இயேசு தம் சீடர்களிடம் சொன்னபோது பேதுரு அவரிடம், “எஜமானே, இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்! இதெல்லாம் உங்களுக்கு நடக்கவே நடக்காது” என்று சொன்னார். அப்போது இயேசு, “விலகிப் போ, சாத்தானே!” என்று சொன்னார். (மத். 16:22, 23) பேதுருவை “சாத்தான்” என்று இயேசு ஏன் சொன்னார்? சீக்கிரத்தில் தனக்கு என்ன நடக்கப்போகிறது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதாவது, மக்களை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காகத் தன்னுடைய உயிரை பலியாக கொடுக்க வேண்டும்... சாத்தானை ஒரு பொய்யன் என்று நிரூபிக்க வேண்டும்... என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மனித சரித்திரத்திலேயே இது ஒரு முக்கியமான சமயமாக இருந்தது. அந்த சமயத்தில் இயேசு விழிப்பாக இல்லாமல், இந்தக் கஷ்டங்கள் எல்லாம் ‘எனக்கு நடக்கக்கூடாது’ என்று சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? சாத்தானுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்திருக்கும் இல்லையா!
17 நாமும் இயேசுவைப் போல் ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் வாழ்கிறோம். ஏனென்றால், இந்தக் கெட்ட உலகத்திற்கு சீக்கிரத்தில் முடிவு வரப்போகிறது. அதனால், சாத்தான் நம்மையும் ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கிறான். இந்த உலகத்தில் நமக்கு ‘எந்தக் கஷ்டமும் வரக்கூடாது,’ சந்தோஷமாக வாழ வேண்டும், வாழ்க்கையில் கொடிகட்டி பறக்க வேண்டும் என்றெல்லாம் நம்மை நினைக்க வைக்கிறான். நாம் விழிப்பாக இருக்கக் கூடாது... கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டும்... என்று அவன் ஆசைப்படுகிறான். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்காதபடி கவனமாக இருங்கள், “விழிப்புடன் இருங்கள்!” (மத். 24:42) இந்தக் கெட்ட உலகத்திற்கு முடிவு உடனே வராது அல்லது முடிவு வரவே வராது என்று சாத்தான் நம்மை நம்ப வைக்கிறான். சாத்தான் பரப்பிவரும் இந்தப் பொய்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்!
18, 19. (அ) யெகோவாவுடைய அன்புக்கு நாம் தகுதியில்லாதவர்கள் என்று சாத்தான் நம்மை எப்படி நினைக்க வைக்கிறான்? (ஆ) நாம் விழிப்பாக இருப்பதற்கு யெகோவா எப்படி உதவி செய்கிறார்?
18 சாத்தான் நம்மை இன்னொரு விதத்திலும் ஏமாற்றுகிறான். ‘யெகோவாவுடைய அன்பை பெறுவதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை,’ ‘நான் செய்யும் தவறுகளை கடவுள் மன்னிக்கவே மாட்டார்,’ என்றெல்லாம் சாத்தான் நம்மை நினைக்க வைக்கிறான். ஆனால் இதெல்லாம் சுத்தப் பொய், இதை நாம் நம்பிவிடக் கூடாது. உண்மையிலேயே யெகோவாவுடைய அன்புக்கு தகுதியில்லாதவன் சாத்தான்தான்! யெகோவா சாத்தானைத்தான் மன்னிக்கவே மாட்டார்! “உங்களுடைய உழைப்பையும் தமது பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் அல்ல” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 6:10) யெகோவாவை சந்தோஷப்படுத்துவதற்காக நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் யெகோவா உயர்வாக மதிக்கிறார். நாம் அவருக்கு செய்யும் சேவை எப்போதும் வீண்போகாது. (1 கொரிந்தியர் 15:58-ஐ வாசியுங்கள்.) அதனால், சாத்தான் சொல்லும் பொய்களை நம்பி நாம் ஏமாந்துவிட கூடாது.
19 சாத்தான் அதிக சக்தியுள்ளவன், ஈவிரக்கமே இல்லாதவன், மக்களை ஏமாற்றுபவன் என்று நாம் பார்த்தோம். இந்த எதிரியை நம்மால் எப்படி ஜெயிக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? அதற்கு, யெகோவா உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வார். சாத்தானுடைய ஒவ்வொரு சதித்திட்டத்தை பற்றியும் யெகோவா பைபிளில் சொல்லியிருக்கிறார். அதனால், அவனுடைய சதித்திட்டங்கள் எல்லாம் நமக்குத் ‘தெரிந்தவைதான்.’ (2 கொ. 2:11) சாத்தான் எப்படியெல்லாம் நம்மை தாக்குகிறான் என்பதைப் புரிந்துகொண்டால் நாம் எப்போதும் விழிப்பாக இருப்போம். ஆனால், சாத்தானுடைய சதித்திட்டங்களை தெரிந்துவைத்திருந்தால் மட்டும் போதாது, அவனை ‘எதிர்த்து நிற்கவும்’ வேண்டும். “அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 4:7) சாத்தானை எதிர்த்து நிற்பதற்கும் அவனை ஜெயிப்பதற்கும் என்ன மூன்று வழிகள் இருக்கின்றன என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.