ஆபிரகாம் ‘என் நண்பன்’
“என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே.”—ஏசா. 41:8.
1, 2. (அ) மனிதர்கள் கடவுளுடைய நண்பராக முடியும் என்று எப்படி சொல்லலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
அன்புக்காக ஏங்காதவர்கள் யாருமே இல்லை! பிறந்ததிலிருந்து சாகும்வரை நாம் எல்லாருமே அன்புக்காக ஏங்குகிறோம். அன்பு காட்டும் நண்பர்கள் வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வேறு யாரையும்விட யெகோவாவோடு நண்பராக இருப்பதுதான் ரொம்ப முக்கியம். ஆனால், யெகோவாவுடைய நண்பராக முடியும் என்று சொன்னால் அதை நிறையப் பேரால் நம்ப முடிவதில்லை. ஏனென்றால், ‘கடவுளுக்கு நிறைய சக்தி இருக்கு, அவரை நம்மால பார்க்க முடியாது’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், யெகோவாவுடைய நண்பராக முடியும் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
2 மனிதர்கள் சிலர் கடவுளுடைய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. அவர்களை பற்றி யோசித்துப் பார்ப்பது ரொம்ப முக்கியம். ஏனென்றால், கடவுளுடைய நண்பராக வேண்டும் என்பதுதான் நம் எல்லாருடைய ஆசையாக இருக்கிறது. கடவுளுடைய நண்பராக இருந்த ஆபிரகாமைப் பற்றி இப்போது பார்க்கலாம். (யாக்கோபு 2:23-ஐ வாசியுங்கள்.) அவர் எப்படி கடவுளுடைய நண்பராக ஆனார்? கடவுள்மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத விசுவாசமே அதற்கு காரணம். அதனால்தான், ‘கடவுள்மீது விசுவாசம் வைக்கிற அனைவருக்கும் அவர் தகப்பன்’ என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 4:11) ஆபிரகாமைப் பற்றி பார்க்கும்போது உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் எப்படி ஆபிரகாமை போல விசுவாசம் காட்டலாம்? யெகோவாவோட இருக்குற நட்பை நான் எப்படி பலப்படுத்தலாம்?’
ஆபிரகாம் யெகோவாவுடைய நண்பரானார்
3, 4. (அ) ஆபிரகாமுக்கு வந்த பெரிய சோதனையைப் பற்றி சொல்லுங்கள். (ஆ) ஈசாக்கை பலியாக கொடுக்க ஆபிரகாம் ஏன் தயாராக இருந்தார்?
3 வயதான ஆபிரகாம் மலைமேல் மெதுவாக ஏறுவதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.[1] (பின்குறிப்பு) அவரிடம் ஒரு கத்தியும் நெருப்பு மூட்டுவதற்கு தேவையான பொருள்களும் இருக்கிறது. அவருடைய மகன் ஈசாக்கு விறகுகளை எடுத்துக்கொண்டு அவர் பின்னால் போகிறார். அவருக்கு சுமார் 25 வயது இருக்கும். ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது ஆபிரகாமுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும். அதற்கு முதிர்வயது காரணம் அல்ல. ஏனென்றால், அப்போது ஆபிரகாமுக்கு சுமார் 125 வயது இருந்தாலும் அவர் திடகாத்திரமாக இருக்கிறார். அப்படியென்றால், அவர் எதற்காக மலைக்கு போகிறார்? அவருடைய மகனை யெகோவாவுக்கு பலியாகக் கொடுப்பதற்காகப் போகிறார். அப்படிக் கொடுக்கும்படி யெகோவாதான் அவரிடம் சொன்னார்.—ஆதி. 22:1-8.
4 தன்னுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்கு இதைவிட ஒரு பெரிய சோதனை ஆபிரகாமுக்கு வந்திருக்காது. சிலர் இந்தப் பதிவை படித்துவிட்டு, ‘கடவுள் எவ்வளவு கொடூரமானவர்’ என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர், ‘ஆபிரகாமுக்கு அவரோட மகன் மேல அன்பே இல்ல, அதனாலதான் மகனையே பலியா கொடுக்க துணிஞ்சார்’ என்று சொல்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படி சொல்கிறார்கள்? அவர்களுக்கு கடவுள்மீது விசுவாசம் இல்லை; அதோடு உண்மையான விசுவாசம் என்றால் என்ன, அதை ஒருவர் எப்படி செயலில் காட்டுவார் என்றும் அவர்களுக்குத் தெரிவதில்லை. (1 கொ. 2:14-16) ஆனால், ஆபிரகாம் கண்மூடித்தனமாக கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவருக்கு உண்மையான விசுவாசம் இருந்ததால்தான் கீழ்ப்படிந்தார். தன்னால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றை செய்யும்படி யெகோவா ஒருநாளும் சொல்ல மாட்டார் என்று ஆபிரகாமுக்கு நன்றாகத் தெரியும். யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால் தன்னையும் தன்னுடைய அன்பு மகனையும் அவர் ஆசீர்வதிப்பார் என்றும் ஆபிரகாமுக்குத் தெரியும். ஆனால், ஆபிரகாமுக்கு எப்படி இந்தளவு பலமான விசுவாசம் இருந்தது? (1) அவர் யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார்; (2) வாழ்க்கையில் கிடைத்த அனுபவமும் அவருக்கு உதவியது.
5. யெகோவாவைப் பற்றி ஆபிரகாம் எப்படிக் கற்றுக்கொண்டிருக்கலாம்? என்ன செய்ய அது ஆபிரகாமுக்கு உதவியது?
5 யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டார். ஊர் என்ற நகரத்தில் ஆபிரகாம் வாழ்ந்தார். அங்கிருந்த ஜனங்கள் பொய் மதத்தில் ஊறிப்போயிருந்தார்கள். ஆபிரகாமுடைய அப்பாவும் சிலைகளை வணங்கினார். (யோசு. 24:2) அப்படியென்றால், ஆபிரகாம் எப்படி யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டார்? நோவாவின் மகன் சேமின் வம்சத்தில் ஆபிரகாம் வந்தார் என்று பைபிள் சொல்கிறது. ஆபிரகாமுக்கு 150 வயது இருக்கும் வரை சேம் உயிரோடு இருந்தார். சேமுக்கு யெகோவாமீது அசைக்க முடியாத விசுவாசம் இருந்தது. தன்னுடைய சொந்தபந்தங்களிடம் யெகோவாவைப் பற்றி அவர் நிச்சயம் பேசியிருப்பார். ஒருவேளை இந்த விதத்தில் ஆபிரகாம் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டிருக்கலாம். அதனால் ஆபிரகாமுக்கு யெகோவாமீது இருந்த அன்பு அதிகமானது. அதோடு, அவர்மீது இருந்த விசுவாசமும் பலமானது.
6, 7. ஆபிரகாமின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவருடைய விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தியது?
6 வாழ்க்கையில் கிடைத்த அனுபவம். ஆபிரகாமுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் யெகோவாமீது விசுவாசம் வைக்க அவருக்கு எப்படி உதவியது? யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்ட விஷயங்களை ஆபிரகாம் யோசித்துப் பார்த்தார். ‘வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய உன்னதமான தேவன்’ யெகோவாதான் என்பதைப் புரிந்துகொண்டார். (ஆதி. 14:23) அதனால் யெகோவாமீது அவருக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் அதிகமானது. இந்த மரியாதையைத்தான் பைபிள், “பயபக்தி” என்று சொல்கிறது. (எபி. 5:7) நாமும் யெகோவாவோடு நெருங்கிய நண்பராக இருக்க வேண்டுமென்றால் அவர்மீது நமக்கும் பயபக்தி இருக்க வேண்டும். (சங். 25:14) யெகோவாமீது பயபக்தி இருந்ததால்தான் ஆபிரகாம் அவருக்குக் கீழ்ப்படிந்தார்.
7 வயதான ஆபிரகாமையும் சாராளையும் முன்பின் தெரியாத ஓர் இடத்துக்கு போகும்படி யெகோவா சொன்னார். அவர்கள் வாழ்நாளெல்லாம் கூடாரத்தில் இருக்க வேண்டியிருக்கும்... அதனால் நிறைய ஆபத்துகள் வரும்... என்று ஆபிரகாமுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், யெகோவாவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதில் ஆபிரகாம் உறுதியாக இருந்தார். அதற்காக யெகோவா அவரை ஆசீர்வதித்தார், பத்திரமாகப் பாதுகாத்தார். உதாரணத்துக்கு, சாராளின் அழகில் மயங்கிய ஒரு ராஜா அவளை அடைய முயற்சி செய்தார், அதனால் ஆபிரகாமுடைய உயிரும் ஆபத்தில் இருந்தது. ஆனால், இரண்டு முறை யெகோவா அவர்களை அற்புதமாகக் காப்பாற்றினார். (ஆதி. 12:10-20; 20:2-7, 10-12, 17, 18) இதெல்லாம் ஆபிரகாமின் விசுவாசத்தை இன்னும் பலப்படுத்தியது!
8. நாம் எப்படி யெகோவாவுடைய நண்பராக முடியும்?
8 நம்மால் யெகோவாவுடைய நெருங்கிய நண்பராக இருக்க முடியுமா? நிச்சயம் முடியும்! அதற்கு ஆபிரகாமைப் போலவே நாமும் யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில் கிடைக்கிற அனுபவமும் நமக்கு உதவும். ஆபிரகாமிடம் பைபிள் இல்லை, ஆனால் நம்மிடம் முழு பைபிளும் இருக்கிறது. (தானி. 12:4; ரோ. 11:33) “வானத்தையும் பூமியையும்” படைத்தவரைப் பற்றி நிறைய விஷயங்கள் அதில் இருக்கிறது. அதைப் படிக்கும்போது யெகோவாவை நாம் இன்னும் அதிகமாக நேசிப்போம், அவர்மீது இருக்கும் மரியாதையும் அதிகமாகும். அப்போது அவருக்குக் கீழ்ப்படிய ஆசைப்படுவோம். அப்படிக் கீழ்ப்படிந்தால் யெகோவா நம்மை எப்படிப் பாதுகாக்கிறார், ஆசீர்வதிக்கிறார் என்பதை நம் அனுபவத்தில் புரிந்துகொள்வோம். அது நம் விசுவாசத்தை பலப்படுத்தும். அதோடு, யெகோவாவுக்கு முழு மனதோடு சேவை செய்யும்போது வாழ்க்கையில் திருப்தியும் சந்தோஷமும் சமாதானமும் கிடைக்கும். (சங். 34:8; நீதி. 10:22) நாம் யெகோவாவைப் பற்றி இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ளும்போது... வாழ்க்கையில் நிறைய அனுபவம் கிடைக்கும்போது... அவரிடம் இன்னும் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்வோம்.
யெகோவாவோடு இருந்த நட்பை பலப்படுத்தினார்
9, 10. (அ) நட்பை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்? (ஆ) யெகோவாவோடு இருந்த நட்பை ஆபிரகாம் தொடர்ந்து பலப்படுத்தினார் என்று எப்படிச் சொல்லலாம்?
9 நல்ல நட்பை விலைமதிக்க முடியாத பொக்கிஷத்துக்கு ஒப்பிடலாம். (நீதிமொழிகள் 17:17-ஐ வாசியுங்கள்.) இருந்தாலும் அந்த நட்பு விலையுயர்ந்த ஒரு அலங்கார பொருளைப் போல் இல்லை. அது உயிருள்ள ஒரு பூச்செடியைப் போல் இருக்கிறது. ஒரு செடி செழிப்பாக வளர, அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். அதேபோல் நட்பையும் நாம் தொடர்ந்து பலப்படுத்தி, பாதுகாக்க வேண்டும். யெகோவாவோடு இருந்த நட்பை ஆபிரகாம் அப்படித்தான் பாதுகாத்தார், அதை உயர்வாக மதித்தார். அதை அவர் எப்படி செய்தார் என்று பார்க்கலாம்.
10 ஆபிரகாம் யெகோவாவுக்கு தொடர்ந்து கீழ்ப்படிந்தார், எப்போதும் பயபக்தியோடு நடந்தார். உதாரணத்துக்கு, தன் குடும்பத்தையும் வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டு கானான் தேசத்துக்கு அவர் பயணம் செய்தார். அந்தச் சமயத்தில் சின்னச் சின்ன விஷயங்களில்கூட அவர் யெகோவாவுக்கு பிடித்த மாதிரிதான் தீர்மானம் எடுத்தார். ஈசாக்கு பிறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு, ஆபிரகாம் 99 வயதாக இருந்தபோது அவர் வீட்டில் இருந்த எல்லா ஆண்களும் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று யெகோவா சொன்னார். ஏன், எதற்கு என்று அவர் கேள்வி கேட்கவில்லை; அதை செய்யாமல் இருக்க சாக்குப்போக்கும் சொல்லவில்லை. யெகோவா சொன்னதை ‘அதேநாளில்’ செய்தார், அவரையே முழுமையாக நம்பியிருந்தார்.—ஆதி. 17:10-14, 23.
11. சோதோம் கொமோராவை அழிக்கப்போவதாக சொன்னபோது ஆபிரகாம் எதை நினைத்து கவலைப்பட்டார், யெகோவா அவருக்கு எப்படி உதவி செய்தார்?
11 சின்ன விஷயத்திலும் ஆபிரகாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார். அதனால்தான் யெகோவாவுக்கும் அவருக்கும் இருந்த நட்பு பலமாக இருந்தது. யெகோவாவிடம் மனம் திறந்து பேச அவர் தயங்கவில்லை. அவருடைய மனதைக் குடைந்துகொண்டிருந்த கேள்விகளை அவர் யெகோவாவிடம் கேட்டார். உதாரணத்துக்கு, சோதோம் கொமோராவை அழிக்கப்போவதாக யெகோவா சொன்னபோது ஆபிரகாமுக்கு ரொம்ப கவலையாக இருந்தது. ஏனென்றால், கெட்டவர்களோடு சேர்ந்து நல்லவர்களும் அழிந்துவிடுவார்கள் என்று அவர் பயந்தார். ஒருவேளை சோதோமிலிருந்த அவருடைய அண்ணன் மகன் லோத்துவின் குடும்பத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் ‘சர்வலோக நியாயாதிபதியான’ யெகோவாமீது ஆபிரகாமுக்கு முழு நம்பிக்கை இருந்தது. அதனால், அதைப் பற்றி யெகோவாவிடம் மரியாதையோடு கேட்டார். யெகோவா அவருடைய நண்பனுக்கு பொறுமையாக பதில் சொன்னார். அவர் எவ்வளவு இரக்கமுள்ள கடவுள் என்பதையும் காட்டினார். கெட்டவர்களை அழித்தாலும் நல்லவர்களை நிச்சயம் காப்பாற்றுவதாக சொன்னார்.—ஆதி. 18:22-33.
12, 13. (அ) யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்ட விஷயங்களும், வாழ்க்கையில் கிடைத்த அனுபவமும் ஆபிரகாமுக்கு என்ன செய்ய உதவியது? (ஆ) யெகோவாமீது ஆபிரகாமுக்கு நம்பிக்கை இருந்ததென்று எப்படிச் சொல்லலாம்?
12 யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்ட விஷயங்களும், வாழ்க்கையில் கிடைத்த அனுபவமும் யெகோவாவோடு இருந்த நட்பை பலப்படுத்த ஆபிரகாமுக்கு உதவியது. அதனால்தான் அவருடைய மகனையே பலியாகக் கொடுக்கும்படி யெகோவா கேட்டபோது அவர் தயங்கவே இல்லை. யெகோவா எந்தளவு பொறுமையானவர், இரக்கமுள்ளவர், நம்பகமானவர் என்பதையும் தன்னை எப்படியெல்லாம் பாதுகாத்தார் என்பதையும் ஆபிரகாம் யோசித்துப் பார்த்திருப்பார். அதனால், அன்பான கடவுள் இப்படி திடீரென்று கொடூரமானவராக மாற மாட்டார் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதை எப்படி சொல்லலாம்?
13 மகனை பலியாகக் கொடுக்கப்போன சமயத்தில் ஆபிரகாம் வேலைக்காரர்களிடம், “நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம்” என்றார். (ஆதி. 22:5) அவர் ஏன் அப்படி சொன்னார்? திரும்பவும் மகனோடு வருவதாக பொய் சொன்னாரா? இல்லை. ஈசாக்கைத் திரும்பவும் உயிரோடு எழுப்பும் சக்தி யெகோவாவுக்கு இருக்கிறது என்பதில் ஆபிரகாமுக்கு எந்த சந்தேகமும் இல்லை. (எபிரெயர் 11:19-ஐ வாசியுங்கள்.) ஏனென்றால், அவருக்கும் சாராளுக்கும் வயதான பிறகும்கூட ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் சக்தியை யெகோவா கொடுத்திருந்தார். (எபி. 11:11, 12, 18) யெகோவா தேவனால் முடியாத காரியம் எதுவுமில்லை என்பதை ஆபிரகாம் இதிலிருந்து புரிந்துகொண்டார். அன்று என்ன நடக்கும் என்று ஆபிரகாமுக்குத் தெரியாது. இருந்தாலும், யெகோவா அவருடைய வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவதற்காக ஈசாக்கை உயிரோடு எழுப்புவார் என்று மட்டும் உறுதியாக நம்பினார். அதனால்தான் ஆபிரகாமை, ‘கடவுள்மீது விசுவாசம் வைக்கிற அனைவருக்கும் தகப்பன்’ என்று பைபிள் சொல்கிறது.
14. யெகோவாவை சேவிப்பதால் நீங்கள் எப்படிப்பட்ட சவால்களை அனுபவிக்கிறீர்கள், ஆபிரகாமின் உதாரணம் உங்களுக்கு எப்படி உதவும்?
14 இன்று யெகோவா நம் குழந்தைகளைப் பலியாகக் கொடுக்கும்படி கேட்பதில்லை. ஆனால், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படி கேட்கிறார். சில கட்டளைகளை அவர் ஏன் கொடுத்தார் என்று நமக்குத் தெரியாது. சிலசமயம் அவருக்குக் கீழ்ப்படிவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். நீங்கள் எப்போதாவது அப்படி உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை பள்ளியிலும் வேலை செய்யும் இடத்திலும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அல்லது பிரசங்க வேலை செய்ய நீங்கள் பயப்படலாம். முன்பின் தெரியாதவர்களிடம் பேச தயங்குவதால் நீங்கள் அப்படி உணரலாம். (யாத். 23:2; 1 தெ. 2:2) அந்த மாதிரி சமயத்தில் ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசத்தையும் தைரியத்தையும் யோசித்துப் பாருங்கள். அவரைப் போன்ற விசுவாசமுள்ள ஆண்களையும் பெண்களையும் பற்றி யோசித்துப் பார்க்கும்போது அவர்களைப் போல நடக்க நாம் ஆசைப்படுவோம், யெகோவாவுடைய நெருங்கிய நண்பராகவும் இருப்போம்.—எபி. 12:1, 2.
நட்பினால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
15. யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததை நினைத்து ஆபிரகாம் வருத்தப்பட்டாரா?
15 யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததை நினைத்து ஆபிரகாம் ஒருநாளும் வருத்தப்படவில்லை. அதனால்தான் அவர், ‘நீண்ட திருப்தியான வாழ்க்கை வாழ்ந்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 25:8, ஈஸி டு ரீட் வர்ஷன்) சாகும்போது ஆபிரகாமுக்கு 175 வயது. அந்த சமயத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்திருப்பார், அதை நினைத்து ரொம்ப திருப்தியோடு இருந்திருப்பார். ஏனென்றால், அவர் எப்போதுமே யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தார், யெகோவாவோடு இருந்த நட்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், அவர் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்ததால் எதிர்காலத்தில் திரும்பவும் வாழவேண்டும் என்ற ஆசை அவருக்கு இல்லை என்று சொல்ல முடியாது.
16. பூஞ்சோலை பூமியில் ஆபிரகாம் எதையெல்லாம் நினைத்து சந்தோஷப்படுவார்?
16 “கடவுளே கட்டியமைத்த உறுதியான அஸ்திவாரங்கள் உள்ள நகரத்திற்காக அவர் [ஆபிரகாம்] காத்திருந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 11:10) அந்த ‘நகரத்தில்’ வாழ, அதாவது கடவுளுடைய ஆட்சியில் வாழ, ஆபிரகாம் ஆசை ஆசையாக காத்துக்கொண்டிருந்தார். அவர் நிச்சயம் அதில் வாழப்போகிறார். பூஞ்சோலை பூமியில் ஆபிரகாம் எவ்வளவு சந்தோஷமாக இருப்பார், யெகோவாவோடு இன்னும் எந்தளவு நெருங்கிய நண்பராக இருப்பார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அன்று அவர் காட்டிய விசுவாசம் இன்றுவரை யெகோவாவுடைய மக்களை பலப்படுத்தியிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளும்போது அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்! அதுமட்டுமல்ல, அவர் தன் மகனை பலியாகக் கொடுத்தது ஒரு முக்கியமான சம்பவத்துக்கு “அடையாளமாக இருந்தது” என்பதையும் தெரிந்துகொள்வார். (எபி. 11:19) யெகோவா தன் மகனை பலியாகக் கொடுத்த சமயத்தில் எந்தளவு துடிதுடித்துப் போயிருப்பார் என்பதை புரிந்துகொள்ள ஆபிரகாமின் பதிவு நமக்கு உதவியது என்பதை அவர் தெரிந்துகொள்வார். (யோவா. 3:16) மீட்புப் பலிக்காக யெகோவாவுக்கு நாம் இன்னும் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! இப்படிப்பட்ட அன்பை யாருமே காட்டியிருக்க மாட்டார்கள்!
17. என்ன செய்ய நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள், அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
17 ஆபிரகாமைப் போல விசுவாசம் காட்ட நாம் தீர்மானமாக இருக்க வேண்டும். யெகோவாவைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்ளும்போது அவருக்குக் கீழ்ப்படிவோம். அப்போது அவர் நம்மை எப்படியெல்லாம் ஆசீர்வதிக்கிறார் என்பதை நம் சொந்த அனுபவத்தில் பார்ப்போம். (எபிரெயர் 6:10-12-ஐ வாசியுங்கள்.) யெகோவாதான் எப்போதுமே நம் நண்பராக இருக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்க வேண்டும். யெகோவாவுடைய நண்பராக இருந்த மூன்று பேரைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
^ [1] (பாரா 3) ஆபிராம், சாராய் என்ற இவர்களுடைய சொந்தப் பெயரை ஆபிரகாம், சாராள் என்று யெகோவா மாற்றினார். இந்த கட்டுரையில் இவர்களை ஆபிரகாம், சாராள் என்றே அழைப்போம்.