யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற அவரை நம்புங்கள்
“நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29.
1. மனிதர்களுக்காகவும் இந்தப் பூமிக்காகவும் யெகோவாவின் நோக்கம் என்ன?
யெகோவா நம் முதல் பெற்றோரை, ஆதாம் ஏவாளைப் படைத்தபோது, அவர்களைப் பரிபூரணர்களாக உண்டாக்கினார். அவருடைய சட்டங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடந்தால், இந்தப் பூமியில் என்றும் வாழமுடியும்படி அவர்களைப் படைத்தார். (ஆதியாகமம் 1:26, 27; 2:17) மேலும், அவர்களைப் பரதீஸிய சூழ்நிலைகளில் கடவுள் வைத்தார். (ஆதியாகமம் 2:8, 9) யெகோவா அவர்களிடம் சொன்னார்: ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள்.’ (ஆதியாகமம் 1:28) இவ்வாறாக, அவர்களுடைய சந்ததி இறுதியில் பூமி முழுவதும் பரவும்; இந்தக் கிரகம் ஒரு பரிபூரண மகிழ்ச்சிகரமான மனிதகுலத்தினால் நிரப்பப்பட்ட ஒரு பரதீஸாக மாறும். என்னே ஓர் அருமையான ஆரம்பத்தை மனித குடும்பம் பெற்றிருந்தது! “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.”—ஆதியாகமம் 1:31.
2. மனித நடவடிக்கைகளின் நிலைமை என்ன கேள்விகளை எழுப்புகிறது?
2 எனினும், ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்திருக்கிற மனித நடவடிக்கைகளின் நிலைமை, கடவுளுடைய ஆதி நோக்கத்திற்கு ஒத்ததாக இல்லை. மனிதகுலம் பரிபூரணத்திலிருந்து அதிகமாக விலக்கப்பட்ட நிலையில் இருக்கிறது, மகிழ்ச்சியே இல்லாமலும் இருக்கிறது. உலக நிலைமைகள் மனச்சோர்வு அளிப்பதாய் இருந்துவருகின்றன, முன்னறிவிக்கப்பட்டதுபோல நம் காலத்தில் அவை திடீர் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1-5, 13) எனவே, மனிதர்களுக்கான கடவுளுடைய நோக்கம் சமீப எதிர்காலத்தில் நடந்தேறும் என்று நாம் எப்படி நம்பிக்கையோடு இருக்கலாம்? தொடர்ச்சியான சோர்வுதரும் நிலைமைகளுடன் கூடுதலான நீண்டகாலப் பகுதி கடந்துபோகுமோ?
என்ன தவறு ஏற்பட்டுவிட்டது?
3. மனிதகுலத்தின் கலகத்தனத்தை யெகோவா ஏன் உடனே முடிவிற்கு கொண்டுவரவில்லை?
3 பூமியில் இந்த மோசமான நிலைமைகளை ஏன் யெகோவா அனுமதித்திருக்கிறார் என்று கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் திருத்தமான அறிவைப் பெற்றிருப்பவர்கள் அறிந்திருக்கின்றனர். அவற்றைக் குறித்து அவர் என்ன செய்வார் என்பதையும் அறிந்திருக்கின்றனர். பைபிளின் பதிவிலிருந்து, கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்திருந்த சுயதெரிவுசெய்யும் அற்புதகரமான வரத்தை நம் முதல் பெற்றோர் தவறாகப் பயன்படுத்தினார்கள் என்று கற்றிருக்கின்றனர். (1 பேதுரு 2:16-ஐ ஒப்பிடவும்.) கடவுளிடமிருந்து தனித்தியங்கும் போக்கைத் தவறாக அவர்கள் தெரிந்தெடுத்தார்கள். (ஆதியாகமம், அதிகாரங்கள் 2 மற்றும் 3) அவர்களுடைய கலகத்தனம் பெரும் கேள்விகளை எழுப்பியது, உதாரணமாக: மனிதர்களின்மேல் ஆட்சிசெய்வதற்கு சர்வலோகப் பேரரசர் உரிமையுடையவராய் இருக்கிறாரா? அவருடைய ஆட்சி அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கிறதா? கடவுளுடைய மேற்பார்வையில்லாமல் மனித ஆட்சி வெற்றியடையுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலைக் கண்டுபிடிக்கும் நிச்சயமான வழி, மனித ஆட்சியின் நூற்றாண்டுகளைக் கடந்துபோக அனுமதிப்பதாகும். மனிதர்கள் தங்களை உண்டாக்கினவரை விட்டுவிட்டு தனிமையில் வெற்றிபெற்றவர்களாக இருக்கமுடியுமா என்பதை எந்தவிதச் சந்தேகமுமின்றி விளைவுகள் காண்பிக்கும்.
4, 5. (அ) மனிதர்கள் கடவுளுடைய ஆட்சியை ஏற்க மறுப்பதன் விளைவு என்னவாக இருந்திருக்கிறது? (ஆ) காலம் கடந்துசெல்லுதல் எந்தவிதச் சந்தேகமின்றி எதை தெளிவாக்கியிருக்கிறது?
4 ஆதாமும் ஏவாளும் கடவுளை விட்டுவிட்டபோது, அவர்கள் பரிபூரணத்தில் இருக்கும்படி இனிமேலும் அவர் ஆதரிக்கவில்லை. அவருடைய ஆதரவின்றி அவர்கள் சீரழிந்தனர். முடிவு, அபூரணம், முதிர் வயது, இறுதியில் மரணம். மரபு வழி சட்டங்கள் வழியாக, நம் முதல் பெற்றோர், நாம் உட்பட, அவர்களுடைய எல்லா பரம்பரையினருக்கும் அந்தத் தீங்குவிளைவிக்கும் குணங்களைக் கடத்தினர். (ரோமர் 5:12) மேலும், ஆயிரக்கணக்கான வருட மனித ஆட்சியின் விளைவைப் பற்றியென்ன? அது பேரழிவாய் இருந்திருக்கிறது, பிரசங்கி 8:9 உண்மையோடு சொல்வதுபோலவே: “ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.”
5 மனிதர்கள் சிருஷ்டிகரை விட்டுவிட்டு தாமாகவே தங்களுடைய நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்தும் திறமை அவர்களிடமில்லை என்பதை எந்தவிதச் சந்தேகமின்றி காலம் கடந்துசெல்லுதல் காண்பித்திருக்கிறது. ஏவப்பட்ட பைபிள் எழுத்தாளர் எரேமியா அறிவித்தார்: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.”—எரேமியா 10:23; உபாகமம் 32:4, 5; பிரசங்கி 7:29.
கடவுளுடைய நோக்கம் மாறியில்லை
6, 7. (அ) ஆயிரக்கணக்கான வருடங்களின் வரலாறு யெகோவாவின் நோக்கத்தை மாற்றிவிட்டிருக்கிறதா? (ஆ) யெகோவாவின் நோக்கத்தில் என்ன உட்பட்டிருக்கிறது?
6 ஆயிரக்கணக்கான வருடங்களின் மனித வரலாறு—அவ்வளவு பொல்லாப்பினாலும் துன்பத்தினாலும் நிரப்பப்பட்டதாய்—கடந்துசென்றிருப்பது கடவுளுடைய நோக்கத்தை மாற்றிவிட்டிருக்கிறதா? அவருடைய வார்த்தைக் குறிப்பிடுகிறது: ‘வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லியிருக்கிறார்.’ (ஏசாயா 45:18) எனவே, மனிதர்களால் குடியிருக்கப்படுவதற்காகப் பூமியைக் கடவுள் வடிவமைத்தார். மேலும் அது இன்னும் அவருடைய நோக்கமாயிருக்கிறது.
7 யெகோவா பூமியை உண்டாக்கியது அது குடியிருக்கப்படுவதற்காக மட்டுமல்ல, பரிபூரண, மகிழ்ச்சியான மக்களால் அனுபவிக்கப்படும் ஒரு பரதீஸாக மாறவேண்டும் என்றும் அவர் நோக்கம் கொண்டிருந்தார். அதனால்தான் “நீதி வாசமாயிருக்கும் . . . ஒரு புதிய பூமி,” புதிய மனித சமுதாயம் ஒன்று இருக்கும் என்று பைபிள் முன்னுரைத்தது. (2 பேதுரு 3:13, NW) மேலும் வெளிப்படுத்துதல் 21:4-ல், தேவன் தம்முடைய புதிய உலகத்தில் ‘[மனிதகுலத்தின்] கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை,’ என்று கடவுளுடைய வார்த்தை நமக்குச் சொல்கிறது. இப்படிப்பட்ட காரணங்களுக்காகவே இயேசு, பூமியில் வரப்போகும் அந்தப் புதிய உலகத்தை, ஒரு ‘பரதீஸாக’ குறிப்பிட்டார்.—லூக்கா 23:43.
8. யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார் என்று நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?
8 யெகோவா சர்வலோகத்தின் சகல வல்லமையுடைய, சகல ஞானமுடைய சிருஷ்டிகராக இருப்பதால், அவருடைய நோக்கத்தை யாருமே குறுக்கிட முடியாது. “நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.” (ஏசாயா 14:24) எனவே, இந்தப் பூமியைப் பரிபூரண மக்களால் சுதந்தரிக்கப்படும் ஒரு பரதீஸாக ஆக்குவார் என்று கடவுள் சொல்லும்போது, அதுவே நடந்தேறும். இயேசு சொன்னார்: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.” (மத்தேயு 5:5; ஒப்பிடவும் சங்கீதம் 37:29.) அந்த வாக்குறுதியின் நிறைவேற்றத்தை நம்பி அதன்படி வாழலாம். உண்மையில், நம்முடைய வாழ்க்கையை அதற்காக அர்ப்பணிக்கலாம்.
அவர்கள் யெகோவாவை நம்பினார்கள்
9. யெகோவாவில் தன்னுடைய நம்பிக்கையை வைத்திருந்தார் என்பதைக் காண்பித்த எதை ஆபிரகாம் செய்தார்?
9 சரித்திரமெங்கும் கடவுள் பயமுள்ள மக்கள் பலர், பூமி சம்பந்தமான கடவுளுடைய நோக்கத்திற்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஏனென்றால் அவர் அதை நிறைவேற்றுவார் என்று அவர்கள் நிச்சயமாய் இருந்தனர். அவர்களுடைய அறிவு ஒருவேளை வரம்புக்குட்பட்டதாய் இருந்தாலும், அவர்கள் கடவுளை நம்பினர், அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு இசைவாகத் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர். உதாரணமாக, இயேசு பூமியில் வாழ்ந்ததற்கு ஏறக்குறைய 2,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் ஆபிரகாம்—பைபிள் எழுதப்பட ஆரம்பிக்கப்படுவதற்கு வெகுமுன்பே. யெகோவா தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று அவர் நம்பினார். பெரும்பாலும், ஆபிரகாம் அந்தச் சிருஷ்டிகரைப் பற்றி நோவாவால் கற்பிக்கப்பட்ட, தன்னுடைய உண்மையுள்ள மூதாதையராகிய சேம்மிடமிருந்து கற்று அறிந்திருக்கலாம். எனவே, கடவுள் ஆபிரகாமைக் கல்தேயர்களின் செழிப்பான ஊர் என்னும் தேசத்திலிருந்து அறிமுகமில்லாத ஆபத்தான கானான் தேசத்திற்கு போகும்படி சொன்னபோது, அந்த முற்பிதா தாம் யெகோவாவை நம்பலாம் என்று அறிந்திருந்தார். அதனால் அவர் போனார். (எபிரெயர் 11:8) காலப்போக்கில், யெகோவா அவரிடம் சொன்னார்: “உன்னிலிருந்து ஒரு பெரிய ஜாதியை உருவாக்குவேன்.”—ஆதியாகமம் 12:2, NW.
10, 11. ஆபிரகாம் தன்னுடைய ஒரே பேறான குமாரனாகிய ஈசாக்கைப் பலியாகக் கொடுக்க ஏன் மனமுள்ளவராயிருந்தார்?
10 ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தபின்பு என்ன நடந்தது? ஈசாக்கு மூலமாக அவருடைய வம்சாவழிகள் ஒரு பெரிய ஜாதியாகப் பெருகுவர் என்று ஆபிரகாமுக்கு யெகோவா குறிப்பிட்டிருந்தார். (ஆதியாகமம் 21:12) எனவே, யெகோவா ஆபிரகாமின் விசுவாசத்திற்குச் சோதனையாக ஆபிரகாமிடம் அவருடைய குமாரன் ஈசாக்கை பலியாகக் கொடுக்கும்படி சொன்னபோது, முற்றிலும் எதிர்மாறானதாக தோன்றியிருக்க வேண்டும். (ஆதியாகமம் 22:2) எனினும், யெகோவாவில் முழு நம்பிக்கையோடு, ஆபிரகாம் செய்யவேண்டிய காரியங்களையெல்லாம் செய்தார், ஈசாக்கை வெட்டுவதற்கு தன்னுடைய கத்தியை உண்மையில் எடுத்துவிட்டார். அந்தக் கடைசி தருணத்தில், ஆபிரகாமைத் தடுப்பதற்கு கடவுள் ஒரு தேவதூதனை அனுப்பினார்.—ஆதியாகமம் 22:9-14.
11 ஆபிரகாம் ஏன் அவ்வளவு கீழ்ப்படிதலுள்ளவராய் இருந்தார்? எபிரெயர் 11:17-19 வெளிப்படுத்துகிறது: “விசுவாசத்தினாலே, ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரே பேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.” ரோமர் 4:20, 21 இதைப்போலவே குறிப்பிடுகிறது: ‘தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து ஆபிரகாம் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பினார்.’
12. ஆபிரகாம் தன்னுடைய விசுவாசத்திற்கு எவ்வாறு பலனளிக்கப்பட்டார்?
12 ஈசாக்கை பலியாகாமல் விட்டுவிடுவதன்மூலமும் அவர்மூலமாக ஒரு “பெரிய ஜாதியை” வரும்படி செய்வதன்மூலமும் மட்டுமல்ல, மற்றொரு வகையிலும் ஆபிரகாம் தன்னுடைய விசுவாசத்திற்கு பலனளிக்கப்பட்டார். கடவுள் ஆபிரகாமிடம் சொன்னார்: “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” (ஆதியாகமம் 22:18) எப்படி? ஆபிரகாமின் வம்சாவழியில் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜா வருவார். சாத்தானின் ஆதிக்கத்திலுள்ள இந்தப் பொல்லாத உலகம் இருப்பதை அந்த ராஜ்யம் துடைத்தழித்துவிடும். (தானியேல் 2:44; ரோமர் 16:20; வெளிப்படுத்துதல் 19:11-21) பின்பு, ராஜ்ய ஆட்சியின்கீழ் ஒரு சுத்தப்படுத்தப்பட்ட பூமியில், பரதீஸ் உலகளாவிய அளவில் உருவாக்கப்படும், மேலும் ‘சகல ஜாதிகளிலிருந்தும்’ கடவுளுடைய சித்தத்தைச் செய்யும் மக்கள் பரிபூரண உடல்நலத்தை அனுபவித்து, என்றென்றைக்கும் வாழ்வர். (1 யோவான் 2:15-17) மேலும் ஆபிரகாம் ராஜ்யத்தைப் பற்றிய வரம்புக்குட்பட்ட அறிவையே பெற்றிருந்தாலும், அவர் கடவுளை நம்பி, அது நிலைநாட்டப்படுவதை எதிர்நோக்கியிருந்தார்.—எபிரெயர் 11:10.
13, 14. யோபு ஏன் கடவுள்மீது நம்பிக்கைவைத்தார்?
13 பல நூற்றாண்டுகள் கழிந்தபின், பொ.ச.மு. 17 மற்றும் 16-வது நூற்றாண்டுகளின் மத்தியில், தற்போது அரேபியா என்றழைக்கப்படும் இடத்தில் யோபு என்பவர் வாழ்ந்தார். அவரும்கூட பைபிள் எழுதப்பட ஆரம்பிக்கப்படுவதற்கு முன் வாழ்ந்தார். யோபு, ‘உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தார்.’ (யோபு 1:1) சாத்தான் ஓர் அருவருக்கத்தக்க, வலிமிக்க நோயை யோபுவின்மேல் வரும்படிச் செய்தபோது, அந்த உண்மையுள்ள மனிதர், தன் கஷ்ட காலம் முழுவதும் “ஒரு பாவமான வார்த்தையையும் சொல்லவில்லை.” (யோபு 2:10, தி நியூ இங்கிலிஷ் பைபிள்) யோபு கடவுள்மீது நம்பிக்கைவைத்தார். தான் ஏன் அவ்வளவு துன்பத்திற்குள்ளாகியிருந்தார் என்பதை அறியாதிருந்தபோதிலும், அவர் கடவுளுக்கும் அவருடைய வாக்குறுதிகளுக்கும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
14 யோபு, தான் இறந்தாலும் கடவுளால் ஒரு நாள் தன்னை உயிர்த்தெழுதல்மூலம் உயிருக்குக் கொண்டுவர முடியும் என்று அறிந்திருந்தார். யெகோவா தேவனிடம் இவ்வாறு சொன்னபோது இந்த நம்பிக்கையை குறிப்பிட்டார்: “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, . . . என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? . . . என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்.” (யோபு 14:13-15) கடும்வேதனையில் இருந்தாலும், யோபு யெகோவாவின் பேரரசாட்சியில் விசுவாசத்தைக் காட்டினார்: “நான் சாகும்வரை, என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கவேமாட்டேன்!”—யோபு 27:5, NW.
15. தாவீது எவ்வாறு யெகோவாவின் நோக்கத்தில் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்?
15 யோபு வாழ்ந்து ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு பின்பும், இயேசு பூமியில் வருவதற்கு ஏறக்குறைய ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், தாவீது ஒரு புதிய உலகத்தின்மீது தம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்தினார். சங்கீதங்களில் இவ்வாறு அவர் சொன்னார்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” அவருடைய அசைக்கமுடியாத நம்பிக்கையினாலே, தாவீது இவ்வாறு ஊக்கப்படுத்தினார்: ‘கர்த்தரை நம்பு; கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.’—சங்கீதம் 37:3, 4, 9-11, 29.
16. ‘மேகம்போன்ற திரளான சாட்சிகள்’ என்ன நம்பிக்கையை உடையவர்களாய் இருந்தனர்?
16 நூற்றாண்டுகளினூடே, விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் பூமியில் என்றும் வாழும் இதே நம்பிக்கையை உடையவர்களாக இருந்தனர். உண்மையில், அவர்கள் ‘மேகம்போன்ற திரளான சாட்சிகளால்’ உருவாக்கப்பட்டிருந்தனர். சொல்லர்த்தமாகவே தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவின் வாக்குறுதிகளுக்காக அர்ப்பணித்தனர். யெகோவாவின் அந்தப் பூர்வீக சாட்சிகளில் பலர் தங்களுடைய விசுவாசத்தின் காரணமாக, ‘மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு’ துன்புறுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்டனர். அது எப்படி? புதிய உலகத்தில், கடவுள் அவர்களுக்கு மேன்மையான உயிர்த்தெழுதலையும் நித்திய ஜீவ எதிர்பார்ப்பையும் கொடுப்பதன்மூலமும் பலனளிப்பார்.—யோவான் 5:28, 29; எபிரெயர் 11:35; 12:1.
கிறிஸ்தவச் சாட்சிகள் கடவுளில் நம்பிக்கை வைக்கின்றனர்
17. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எவ்வளவு உறுதியாக யெகோவாவை நம்பினர்?
17 பொ.ச. முதல் நூற்றாண்டில் புதிதாக நிறுவப்பட்ட கிறிஸ்தவச் சபைக்கு, ராஜ்யத்தைப் பற்றியும் பூமியின் மீதான அதனுடைய ஆட்சியைப் பற்றியும் கூடுதலான தகவல்களை யெகோவா வெளிப்படுத்தினார். உதாரணமாக, பரலோக ராஜ்யத்தில் இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்தவர்களாக இருக்கப்போகிறவர்கள் 1,44,000 பேர் என்று எழுதும்படி அப்போஸ்தலன் யோவானை அவருடைய ஆவி ஏவியது. இவர்கள், “மனிதகுலத்தின் மத்தியிலிருந்து வாங்கப்பட்ட” கடவுளின் உண்மையுள்ள ஊழியர்களாக இருப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:4; 14:1-4, NW) அவர்கள் பரலோகத்தில் கிறிஸ்துவோடு ‘அரசர்களாக’ பூமியின்மீது ஆட்சிசெய்வார்கள். (வெளிப்படுத்துதல் 20:4-6) அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், பரலோக ராஜ்யத்திற்கும் அதனுடைய பூமிக்குரிய ஆட்சிப்பகுதிக்கும் சம்பந்தமான தம்முடைய நோக்கத்தை யெகோவா நிறைவேற்றுவார் என்று அவ்வளவு உறுதியாக நம்பியதால், தங்களுடைய விசுவாசத்தின் நிமித்தம் மரிப்பதற்கும் தயாராய் இருந்தனர். அவர்களில் பலர் அதையேத்தான் செய்தார்கள்.
18. இன்று யெகோவாவின் சாட்சிகள் எப்படித் தங்களைப்போன்று முற்காலத்தில் வாழ்ந்தவர்களை பின்பற்றுகின்றனர்?
18 அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்களைப்போன்று வாழ்ந்தவர்களைப்போல, இன்று, கிட்டத்தட்ட 50 லட்சம் யெகோவாவின் சாட்சிகள் அதேபோல நம்பிக்கையைக் கடவுளின்மீது வைத்திருக்கிறார்கள். கடவுளின் வாக்குறுதிகளுக்காக இந்தத் தற்கால சாட்சிகள் தங்களுடைய உயிர்களையும் பணயம்வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அவரிடம் ஒப்புக்கொடுத்திருக்கின்றனர், தங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த முழு பைபிளையும் கொண்டிருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:14-17) இந்த நவீன நாளைய யெகோவாவின் சாட்சிகள், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனையே ஆட்சியாளராகக் கொண்டு கீழ்ப்படிவோம்” என்று சொன்ன முதல் நூற்றாண்டிலிருந்த இயேசுவின் சீஷர்களைப் பின்பற்றினோரை பின்பற்றுகிறார்கள். (அப்போஸ்தலர் 5:29, NW) இந்த நூற்றாண்டில் இந்தக் கிறிஸ்தவச் சாட்சிகளில் பலர் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு வந்திருக்கின்றனர். சிலர் தங்களுடைய விசுவாசத்தின் நிமித்தமும் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள், நோய், விபத்து, அல்லது முதிர்வயது போன்ற காரணத்தால் மரித்திருக்கின்றனர். எனினும், கடந்த கால உண்மையுள்ள சாட்சிகள் போல, அவர்கள் கடவுளை நம்பியிருந்தனர். ஏனென்றால் அவர்களை உயிர்த்தெழுதலின்மூலமாக அவருடைய புதிய உலகத்தில் அவர் உயிருக்குக் கொண்டுவருவார் என்று அறிந்திருந்தனர்.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 20:12, 13.
19, 20. நம் நாளுக்குரிய பைபிள் தீர்க்கதரிசனத்தைப் பற்றி நாம் என்ன உணர்கிறோம்?
19 யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் சகல தேசங்களிலிருந்து ஒரு பூகோள சகோதரத்துவமாகக் கொண்டுவரப்படுவது பைபிள் தீர்க்கதரிசனத்தில் நீண்டகாலத்திற்கு முன்பு முன்னறிவிக்கப்பட்டது என்பதைப் போற்றுகிறார்கள். (ஏசாயா 2:2-4; வெளிப்படுத்துதல் 7:4, 9-17) மேலும் யெகோவா தம்முடைய தயவுக்குள்ளும் பாதுகாப்புக்குள்ளும் இன்னும் மற்ற நேர்மை இருதயமுள்ளோரைக் கூட்டிச்சேர்ப்பதற்கு ஓர் உலகளாவிய பிரசங்க வேலையை அவர்கள் செய்யும்படி செய்துவருகிறார். (நீதிமொழிகள் 18:10; மத்தேயு 24:14; ரோமர் 10:13) யெகோவா சீக்கிரத்தில் தம்முடைய மலைக்கவைக்கும் புதிய உலகிற்கு வழிநடத்துவார் என்று அறிந்தவர்களாக இவர்களெல்லாரும் தங்களுடைய முழு நம்பிக்கையையும் அவர்மேல் வைத்திருக்கின்றனர்.—ஒப்பிடவும் 1 கொரிந்தியர் 15:58; எபிரெயர் 6:10.
20 மைய வருடம் 1914-லிருந்து கிட்டத்தட்ட 80 வருடங்களாக இப்போது, சாத்தானுடைய உலகம் தன்னுடைய இறுதி நாள்களில் இருந்துவருகிறது என்று பைபிள் தீர்க்கதரிசனங்கள் குறிப்பிடுகின்றன. இந்த உலகம் அதன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. (ரோமர் 16:20; 2 கொரிந்தியர் 4:4; 2 தீமோத்தேயு 3:1-5) எனவே யெகோவாவின் சாட்சிகள் மனவுறுதியுடன் இருக்கின்றனர். ஏனென்றால் கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்தில் பூமியின் எல்லா நடவடிக்கைகளின்மீதும் முழு கட்டுப்பாட்டை ஏற்கும் என்று அவர்கள் உணர்கின்றனர். இந்தத் தற்கால கெட்ட உலகத்தை ஒரு முடிவிற்கு வரச்செய்து, அவருடைய நீதியான புதிய உலகைக் கொண்டுவருவதன் மூலம் கடவுள் இவ்வளவு நூற்றாண்டுகளாக பூமியில் இருந்துவந்த மோசமான நிலையை முற்றிலுமாகத் துடைத்தழித்துவிடுவார்.—நீதிமொழிகள் 2:21, 22.
21. தற்கால கஷ்டங்களின் மத்தியிலும் நாம் ஏன் சந்தோஷமாய் இருக்கமுடியும்?
21 பின்பு, நித்தியகாலம் முழுவதும், கடவுள் நம்மைத் தம்முடைய மகத்தான கவனிப்பில் வைப்பார். கடந்த காலத்தில் நாம் பெற்ற எந்த வேதனையையும் ஈடாக்குவதற்கும் அதிக மேலான அளவிற்கு ஆசீர்வாதங்களைப் பொழிவதன் மூலம் இதைச் செய்வார். நம்முடைய முந்தைய கஷ்டங்களெல்லாம் நினைவிலிருந்து மறையுமளவிற்கு, அவ்வளவு நல்ல காரியங்கள் புதிய உலகில் நமக்கு நடக்கும். யெகோவா அப்பொழுது ‘தமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குவார்’ என்று அறிவது எவ்வளவு ஆறுதல் தருவதாய் இருக்கும்.—சங்கீதம் 145:16; ஏசாயா 65:17, 18.
22. நாம் ஏன் யெகோவாமீது நம் நம்பிக்கையை வைக்கவேண்டும்?
22 புதிய உலகத்தில் உண்மையாயிருந்த மனிதகுலம் ரோமர் 8:20-ன் நிறைவேற்றத்தைக் காணும்: “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.” இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குச் சொல்லிக்கொடுத்த இந்த ஜெபத்தின் நிறைவேற்றத்தை அவர்கள் காண்பார்கள்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) எனவே உங்களுடைய முழு நம்பிக்கையையும் யெகோவாமீது வையுங்கள், ஏனென்றால் அவருடைய தவறாத வாக்குறுதியானது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29.
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
◻ மனிதர்களுக்காகவும் இந்தப் பூமிக்காகவும் யெகோவாவின் நோக்கம் என்ன?
◻ கடவுள் ஏன் மோசமான நிலைமைகளைப் பூமியில் அனுமதித்திருக்கிறார்?
◻ பூர்வ காலத்தின் உண்மையுள்ள மக்கள் தங்களுடைய நம்பிக்கை யெகோவாவில் இருந்தது என்பதை எப்படிக் காண்பித்தார்கள்?
◻ இன்றுள்ள கடவுளின் ஊழியர்கள் ஏன் யெகோவாவில் நம்பிக்கை வைக்கின்றனர்?
[பக்கம் 16-ன் படம்]
ஒரு பரதீஸ் பூமியில் சந்தோஷமாக என்றும் வாழ்வதற்கு மனிதர்களைக் கடவுள் படைத்தார்
[பக்கம் 18-ன் படம்]
மரித்தோரை உயிர்த்தெழுப்பும் யெகோவாவின் வல்லமையின்மீது ஆபிரகாம் தன்னுடைய நம்பிக்கையை வைத்தார்