ஆத்துமா என்றால் என்ன?
பைபிள் தரும் பதில்
நெஃபெஷ் என்ற எபிரெய வார்த்தையும் சைக்கீ என்ற கிரேக்க வார்த்தையும் பெரும்பாலான பைபிள்களில் “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த எபிரெய வார்த்தையின் நேரடி அர்த்தம், “சுவாசிக்கிற உயிரினம்”; கிரேக்க வார்த்தையின் அர்த்தம், “உயிரோடிருக்கும் ஒன்று.”a அப்படியென்றால், ஆத்துமா என்பது ஒரு முழு உயிரினத்தைக் குறிக்கிறது. சாகும்போது உடலிலிருந்து பிரிந்து தொடர்ந்து உயிர்வாழும் ஏதோ ஒன்றைக் குறிப்பதில்லை. மனித ஆத்துமா என்பது ஒரு முழு நபரைத்தான் குறிக்கிறது என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. அதற்கு ஆதாரமான சில வசனங்களை இப்போது பார்க்கலாம்.
முதல் மனிதனான ஆதாமை யெகோவா படைத்தபோது, அவன் “ஜீவாத்துமாவானான்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 2:7, தமிழ் O.V. பைபிள்) ஆதாமுக்கு ஒரு ஆத்துமா கொடுக்கப்படவில்லை, அவன் ஜீவனுள்ள ஒரு ஆத்துமாவாக ஆனான், அதாவது உயிருள்ள ஒரு நபராக ஆனான்.
ஒரு ஆத்துமாவால் வேலை செய்ய... உணவுக்காக ஆசைப்பட... சாப்பிட... உறுதிமொழி எடுக்க... தாகத்தைத் தணிக்க... முடியும் என்று பைபிள் சொல்கிறது. (யாத்திராகமம் 12:15; லேவியராகமம் 23:30; எண்ணாகமம் 30:2; நீதிமொழிகள் 25:25; மீகா 7:1, O.V. பைபிள்) இந்த எல்லா செயல்களையும் ஒரு முழு நபரால்தான் செய்ய முடியும்.
ஆத்துமா அழியாத ஒன்றா?
இல்லை, ஆத்துமா சாகும். ஆத்துமா சாகக்கூடியது என்பதை நிறைய பைபிள் வசனங்கள் காட்டுகின்றன. சில உதாரணங்களைக் கவனியுங்கள்:
“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.”—எசேக்கியேல் 18:4, 20, O.V. பைபிள்.
பூர்வ இஸ்ரவேலில் யாராவது பெரிய தவறு செய்துவிட்டால், அந்த ஆத்துமா “அறுப்புண்டு போவான்” என்று ஜனங்களுக்குச் சொல்லப்பட்டது. (ஆதியாகமம் 17:14; லேவியராகமம் 7:25; 22:3; எண்ணாகமம் 15:30, O.V. பைபிள்) அந்த நபர் “கொலையுண்கக்கடவன்,” அதாவது அவர் கொல்லப்பட வேண்டும்.—யாத்திராகமம் 31:14, O.V. பைபிள்.
மூல எபிரெய மொழியில், லேவியராகமம் 21:11; எண்ணாகமம் 6:6 போன்ற சில வசனங்களில் ஆத்துமா என்ற அர்த்தத்தைத் தரும் நெஃபெஷ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளில் இந்த வார்த்தை “இறந்தவரின் உடல்,” “பிணம்” அல்லது “பிரேதம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
“ஆத்துமா” என்பதற்கு “உயிர்” என்ற அர்த்தமும் இருக்கிறது
“உயிர்” அல்லது “பிராணன்” என்ற வார்த்தைக்குப் பதிலாகவும் “ஆத்துமா” என்ற வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிறது. உதாரணத்துக்கு, யோபு 33:22-ல் பயன்படுத்தப்பட்டிருக்கிற “ஆத்துமா” என்பதற்கான எபிரெய வார்த்தை (நெஃபெஷ்) “உயிரை” குறிக்கிறது. அதுமட்டுமல்ல, ஒரு நபருடைய ஆத்துமா, அதாவது உயிர், பணயம் வைக்கப்படலாம் அல்லது இழக்கப்படலாம் என்றும் பைபிள் சொல்கிறது.—யாத்திராகமம் 4:19, O.V. பைபிள்; நியாயாதிபதிகள் 9:17; பிலிப்பியர் 2:30.
“ஆத்துமா” என்ற வார்த்தை இந்த விதத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதால், ஆத்துமா ‘பிரிகிறது’ அல்லது ‘போகிறது’ என்று சொல்லப்பட்டிருக்கிற வசனங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. (ஆதியாகமம் 35:18; O.V. பைபிள்) அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிற இந்த வார்த்தைகள், ஒருவருடைய வாழ்க்கை முடியப்போகிறது என்பதைக் காட்டுகின்றன. சில பைபிள் மொழிபெயர்ப்புகள், ஆதியாகமம் 35:18-ல் இருக்கிற இந்த வார்த்தைகளை “அவள் இறுதி மூச்சை விட்டாள்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன.—குட் நியூஸ் டிரான்ஸ்லேஷன்; நியூ ஜெருசலேம் பைபிள்.
ஆத்துமா அழியாது என்ற நம்பிக்கை எங்கிருந்து வந்தது?
நிறைய கிறிஸ்தவ மதப் பிரிவுகளில் ஆத்துமா அழியாது என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், பைபிளில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது, பூர்வ கிரேக்கத் தத்துவத்திலிருந்து வந்தது. “ஆத்துமாவை சுவாசத்தோடு சம்பந்தப்படுத்தித்தான் பைபிள் சொல்கிறது. அதுமட்டுமல்ல, ஆத்துமாவையும் உடலையும் பைபிள் வேறுபடுத்திக் காட்டுவதில்லை. கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கிற உடல் வேறு, ஆத்துமா வேறு என்ற நம்பிக்கை பூர்வ கால கிரேக்கர்களிடமிருந்து வந்தது” என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது.
ஆத்துமா அழியாது என்ற நம்பிக்கை, மனித தத்துவங்களின் அடிப்படையில் ஆனது. அப்படிப்பட்ட தத்துவங்களைத் தன்னுடைய போதனைகளோடு கலப்பதைக் கடவுள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். “தத்துவங்கள் மூலமாகவும் வஞ்சனையான வீண் கருத்துகள் மூலமாகவும் ஒருவனும் உங்களை அடிமையாக பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—கொலோசெயர் 2:8.
a த நியூ ப்ரௌன், ட்ரைவர், பிரிக்ஸ்-ஜெசனியஸ் ஹீப்ரூ அண்ட் இங்லிஷ் லெக்ஸிகன் ஆஃப் தி ஓல்ட் டெஸ்டமென்ட், பக்கம் 659 மற்றும் லெக்ஸிகன் இன் விட்டேரிஸ் டெஸ்டமென்டி லீப்ரோஸ், பக்கம் 627-ஐப் பாருங்கள். நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளில் நெஃபெஷ் மற்றும் சைக்கீ என்ற வார்த்தைகள், சூழமைவைப் பொறுத்து, “ஆத்துமா,” “உயிர்,” “நபர்,” “உயிரினம்,” அல்லது “உடல்” என்றெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.