‘முறுமுறுப்பதை’ தவிருங்கள்
‘எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமல் . . . செய்யுங்கள்.’—பிலிப்பியர் 2:16.
1, 2. பிலிப்பியிலும், கொரிந்துவிலும் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் என்ன அறிவுரை கொடுத்தார், ஏன்?
தேவாவியால் தூண்டப்பட்டு முதல் நூற்றாண்டு பிலிப்பி சபைக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தில் அங்கிருந்த சக விசுவாசிகளை வெகுவாக பாராட்டினார். தாராள குணத்தையும், பக்திவைராக்கியத்தையும் காண்பித்ததற்காக அவர்களைப் பாராட்டினார். அவர்களுடைய நற்செயல்களைக் கண்டு தான் சந்தோஷப்படுவதாகவும் எழுதினார். என்றாலும், ‘எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமல் . . . செய்யுங்கள்’ என்று பவுல் அவர்களுக்கு நினைப்பூட்டினார். (பிலிப்பியர் 2:16) அவர் ஏன் இவ்வாறு அறிவுறுத்தினார்?
2 முறுமுறுப்பதால் வரும் விளைவுகளை பவுல் அறிந்திருந்தார். முறுமுறுப்பது மிகவும் ஆபத்தானது என்று சில வருடங்களுக்கு முன்பு கொரிந்து சபைக்கு அவர் நினைவுபடுத்தியிருந்தார். இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருந்தபோது அடிக்கடி யெகோவாவை கோபப்படுத்தியதை அப்போது சுட்டிக்காட்டினார். எப்படிக் கோபப்படுத்தினார்கள்? தீமையானவற்றை விரும்பினார்கள்; விக்கிரகாராதனையிலும் ஒழுக்கக்கேட்டிலும் ஈடுபட்டார்கள்; யெகோவாவை சோதித்தார்கள்; முறுமுறுத்தார்கள்; இப்படியாக அவரைக் கோபப்படுத்தினார்கள். இந்த உதாரணத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும்படி கொரிந்தியர்களை பவுல் ஊக்குவித்தார். “அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்” என்று அவர் எழுதினார்.—1 கொரிந்தியர் 10:6-11.
3. முறுமுறுப்பதைப் பற்றி சிந்திப்பது இன்று நமக்கு ஏன் முக்கியமானது?
3 பிலிப்பி சபையார் காட்டியதைப் போன்ற மனப்பான்மையை யெகோவாவின் நவீன நாளைய ஊழியர்களான நாமும் காட்டுகிறோம். நாம் நற்காரியங்களை பக்திவைராக்கியத்துடன் செய்கிறோம்; ஒருவரிலொருவர் அன்புகூருகிறோம். (யோவான் 13:34, 35) என்றாலும், முறுமுறுத்ததால் கடவுளுடைய ஜனங்களுக்கு வந்த தீங்கை நினைத்துப் பார்க்கும்போது, ‘எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமல் . . . செய்யுங்கள்’ என்ற அறிவுரைக்கு செவிகொடுக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பது புரிகிறது. முதலாவது, முறுமுறுத்தவர்களைப் பற்றிய சில பைபிள் பதிவுகளை நாம் சிந்திக்கலாம். அதன் பிறகு, முறுமுறுப்பதன் மூலம் ஆபத்தில் சிக்கிக்கொள்வதை தவிர்க்க இன்று நமக்கு உதவும் சில காரியங்களைச் சிந்திக்கலாம்.
பொல்லாத சபையார் யெகோவாவுக்கு விரோதமாக முறுமுறுக்கிறார்கள்
4. இஸ்ரவேலர் வனாந்தரத்தில் எப்படி முறுமுறுத்தார்கள்?
4 ‘முறுமுறுப்பது, குறைசொல்வது’ ஆகியவற்றைக் குறிக்கும் எபிரெய சொல், இஸ்ரவேலர் 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் செலவழித்த காலப்பகுதியில் நடந்த சம்பவங்களை விவரிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சமயத்தில், இஸ்ரவேலர் தங்களுடைய சூழ்நிலைகளைக் குறித்து அதிருப்தி அடைந்ததால் முறுமுறுத்தார்கள். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சில வாரங்கள் ஆனதுமே ‘இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள்.’ உணவு விஷயத்தில் இஸ்ரவேலர் இவ்வாறு குறைகூறினார்கள்: “நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்து வந்தீர்களே.”—யாத்திராகமம் 16:1-3.
5. இஸ்ரவேலர் குறைகூறியபோது உண்மையில் யாருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்?
5 உண்மையை சொன்னால், அவர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது யெகோவா அவர்களுக்கு உணவு, தண்ணீர் எல்லாம் கொடுத்து அன்போடு ஆதரித்தார். வனாந்தரத்தில் பட்டினி கிடந்து சாக வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவே இல்லை. அப்படியிருந்தும், திருப்தியற்றவர்களாக தங்களுடைய கஷ்டங்களை பெரிதுபடுத்தி முறுமுறுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தாலும்கூட, அவர்கள் தம்மைக் குறைகூறுவதாகவே யெகோவா கருதினார். அதனால், இஸ்ரவேலரிடம் மோசே இவ்வாறு கூறினார்: “கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது.”—யாத்திராகமம் 16:4-8.
6, 7. எண்ணாகமம் 14:1-3 காட்டுகிறபடி, இஸ்ரவேலரின் மனப்பான்மை எவ்வாறு மாறியது?
6 அதற்குப்பின் கொஞ்ச காலத்திற்குள் இஸ்ரவேலர் மீண்டும் முறுமுறுத்தார்கள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வேவு பார்க்க 12 பேரை மோசே அனுப்பிய சந்தர்ப்பத்தில் இது நடந்தது. திரும்பிவந்த வேவுகாரர்களில் பத்து பேர் மோசமான அறிக்கையை கொடுத்தார்கள். அதன் விளைவு? “இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் [கானானுக்கு] கொண்டுவந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்.”—எண்ணாகமம் 14:1-3.
7 இஸ்ரவேலர் எப்படி மாறிவிட்டார்கள் பாருங்கள்! எகிப்திலிருந்து விடுதலையாகி சிவந்த சமுத்திரத்தை பத்திரமாக கடந்தபோது அவர்கள் இருதயம் நன்றியால் நிரம்பி வழிந்தது. அதனால் யெகோவாவைத் துதித்துப் பாடினார்கள். (யாத்திராகமம் 15:1-21) வனாந்தரத்தில் எதிர்ப்பட்ட அசௌகரியங்களாலும் கானானியர்களைப் பற்றிய பயத்தாலும் கடவுளுடைய மக்களின் மனதிலிருந்த நன்றியுணர்வு மறைந்துபோனது, அதற்குப் பதிலாக அதிருப்தி குடிகொண்டது. தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்திற்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக, தாங்கள் கஷ்டப்படுவதாக நினைத்துக்கொண்டு அவரைக் குறைகூறினார்கள். இவ்வாறு முறுமுறுத்தது யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு சரியான நன்றியுணர்வு இல்லாததையே வெளிக்காட்டியது. ஆக, “எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்?” என்று அவர் கேட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.—எண்ணாகமம் 14:27; 21:5.
முதல் நூற்றாண்டில் முறுமுறுப்பு
8, 9. முறுமுறுத்ததைக் குறித்து கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சில உதாரணங்களைக் குறிப்பிடுங்கள்.
8 தங்களுடைய அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்த ஜனங்களைப் பற்றி இதுவரை பார்த்தோம். ஆனால், பொ.ச. 32-ல் கூடாரப் பண்டிகைக்காக இயேசு கிறிஸ்து எருசலேமில் இருந்த சமயத்தில், ‘ஜனங்களுக்குள்ளே அவரைக் குறித்து முறுமுறுப்புண்டாயிற்று [“கிசுகிசுப்புண்டாயிற்று,” NW]’ என பைபிள் சொல்கிறது. (யோவான் 7:12, 13, 32) தெளிவாகச் சொன்னால், சிலர் அவரை நல்லவர் என்றும், இன்னும் சிலர் அவரைக் கெட்டவர் என்றும் கிசுகிசுக்கவே செய்தார்கள்.
9 மற்றொரு சந்தர்ப்பத்தில், இயேசுவும் அவரது சீஷர்களும் வரிவசூலிப்பவராகிய லேவி என்ற மத்தேயுவின் வீட்டில் விருந்திற்காக சென்றிருந்தனர். “வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.” (லூக்கா 5:27-30) பிற்பாடு கலிலேயாவில், ‘நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் [இயேசு] சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்தார்கள்.’ இயேசுவின் சீஷர்கள் சிலரும்கூட அவர் சொன்னதைக் கேட்டு அதிருப்தியடைந்து முறுமுறுக்க ஆரம்பித்தார்கள்.—யோவான் 6:41, 60, 61.
10, 11. கிரேக்க மொழி பேசிய யூதர்கள் ஏன் முறுமுறுத்தார்கள், அந்தப் பிரச்சினை கையாளப்பட்ட விதத்திலிருந்து கிறிஸ்தவ மூப்பர்கள் எவ்வாறு பயனடையலாம்?
10 பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளுக்கு சற்று பிறகு சில சீஷர்களுடைய முறுமுறுப்பால் நல்ல விளைவுகள் ஏற்பட்டன. மதம் மாறிய புதிய சீஷர்கள் பலர் இஸ்ரவேலுக்கு வெளியே இருந்த நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். யூதேயாவிலிருந்த சக விசுவாசிகள் அவர்களை உபசரித்தார்கள். ஆனால் அவர்களிடம் இருந்ததை பகிர்ந்தளிப்பதில் பிரச்சினைகள் எழுந்தன. “கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்” என்பதாக பதிவு கூறுகிறது.—அப்போஸ்தலர் 6:1.
11 இப்படி முறுமுறுத்தவர்கள் வனாந்தரத்தில் இருந்த இஸ்ரவேலரைப் போலிருக்கவில்லை. கிரேக்கு மொழி பேசிய யூதர்கள் தங்கள் சூழ்நிலையைக் குறித்து சுயநலத்துடன் புலம்பவில்லை. விதவைகள் சிலருடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படாததையே சுட்டிக்காட்டினார்கள். அவர்கள் பிரச்சினை உண்டாக்குபவர்களாகவோ யெகோவாவை குறைசொல்பவர்களாகவோ இருக்கவில்லை. மாறாக, தங்கள் வருத்தத்தை நேரடியாக அப்போஸ்தலர்களிடம் முறையிட்டார்கள். அது நியாயமானதாக இருந்ததால் அப்போஸ்தலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தார்கள். இன்றுள்ள கிறிஸ்தவ மூப்பர்களுக்கு அந்த அப்போஸ்தலர்கள் எப்பேர்ப்பட்ட முன்மாதிரி! ‘ஏழையின் கூக்குரலுக்குத் தங்கள் செவியை அடைத்துக்கொள்ளாமல்’ இருப்பதற்கு அவர்கள் கவனமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.—நீதிமொழிகள் 21:13; அப்போஸ்தலர் 6:2-6.
முறுமுறுத்தல்—அதன் அரித்துப்போடும் பாதிப்புக்கு எச்சரிக்கையாயிருங்கள்
12, 13. (அ) முறுமுறுப்பதால் வரும் விளைவுகளை உதாரணத்துடன் விளக்குங்கள். (ஆ) ஒரு நபரை எது முறுமுறுக்கத் தூண்டலாம்?
12 முறுமுறுத்ததால் கடவுளுடைய மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதை நாம் சிந்தித்த பெரும்பாலான பைபிள் உதாரணங்கள் காட்டுகின்றன. ஆகவே, இன்றும் அதன் அரித்துப்போடும் பாதிப்பைக் குறித்து நாம் கவனமாக யோசிக்க வேண்டியது அவசியம். இதை ஓர் உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். துருப்பிடிக்கும் இயல்புடைய உலோகங்கள் பல உள்ளன. துருப்பிடிப்பதை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், கடைசியில் அவற்றைப் பயன்படுத்த முடியாமலே போய்விடும். எண்ணற்ற வாகனங்கள் காயலான் கடைக்கு சென்றுள்ளதற்கு காரணம் இயந்திர கோளாறு அல்ல, மாறாக, அந்த வாகனத்திலுள்ள உலோக பாகங்கள் அந்தளவு துருப்பிடித்து, பயன்படுத்துவதற்கே லாயக்கற்றதாக ஆகிவிடுவதால்தான். முறுமுறுத்தலுக்கு இந்த உதாரணத்தை எவ்வாறு பொருத்தலாம்?
13 சில உலோகங்களுக்கு துருப்பிடிக்கும் இயல்பிருப்பதுபோல, அபூரண மனிதர்களுக்கும் குறைகூறும் இயல்பு இருக்கிறது. குறைகூறும் மனப்போக்கு நமக்குள் எழும்புவதைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஈரப்பதமும், உப்புக் காற்றும் இருந்தால் எளிதில் துருப்பிடித்துவிடலாம். அதுபோல, கஷ்டமான சூழ்நிலைகள் நம்மை முறுமுறுக்கத் தூண்டிவிடலாம். மனஅழுத்தம் காரணமாக சின்னச்சின்ன உரசல்கள்கூட பெரியபெரிய மனஸ்தாபங்களில் போய் முடியலாம். இந்தக் கடைசி நாட்களில் சூழ்நிலைகள் மோசமாகிக்கொண்டே போவதால் குறைகூறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கலாம். (2 தீமோத்தேயு 3:1-5) அதனால் யெகோவாவை வணங்கும் ஒருவர் சக வணக்கத்தாரைப் பற்றி முறுமுறுக்க ஆரம்பிக்கலாம். ஏதாவது சிறிய விஷயம்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். உதாரணமாக, பிறருடைய பலவீனங்கள், திறமைகள், விசேஷ ஊழிய சிலாக்கியங்கள் ஆகியவற்றைக் குறித்த அதிருப்தி அதற்குக் காரணமாக இருக்கலாம்.
14, 15. குறைகூறும் மனப்பான்மை வளருவதற்கு நாம் ஏன் அனுமதிக்கக்கூடாது?
14 காரணம் எதுவாக இருந்தாலும், குறைகூறும் மனப்பான்மையை வளரவிட்டால், அது அதிருப்தியை நமக்குள் ஏற்படுத்திவிடலாம். குறைகூறுவதை ஒரு பழக்கமாகவே ஆக்கிவிடலாம். ஆம், ஆன்மீக ரீதியில் அரித்துப்போடும் முறுமுறுப்பு நம்மை முற்றிலும் சீரழித்துவிடலாம். இஸ்ரவேலர் தங்களுடைய வனாந்தர வாழ்க்கையைக் குறித்து முறுமுறுத்தபோது, அவர்கள் யெகோவாவையே குறைகூறுமளவுக்குச் சென்றுவிட்டார்கள். (யாத்திராகமம் 16:8) நாம் அவர்களைப் போல மாறிவிடாதபடிக்கு எச்சரிக்கையாய் இருப்போமாக!
15 ஒரு உலோகம் துருப்பிடிக்காமலிருக்க அதற்கு பெயிண்ட் அடிக்கலாம்; அதோடு, ஆங்காங்கே துருப்பிடித்துப்போன இடங்களை உடனடியாக சரிசெய்யலாம். அதேபோல, குறைகூறும் மனப்பான்மை நம்மில் தென்பட்டால், உடனடியாக ஜெபம் செய்து அதை சரிசெய்ய முயலும்போது அதை வளர விடாமல் நாம் தடுக்க முடியும். அதை எப்படிச் செய்யலாம்?
காரியங்களை யெகோவாவின் நோக்குநிலையில் பாருங்கள்
16. குறைகூறும் மனப்பான்மை நமக்கு இருந்தால் அதை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம்?
16 முறுமுறுக்கும்போது, நம்மையும் நமக்கிருக்கும் பிரச்சினைகளையும் மட்டுமே நாம் கவனத்தில் கொள்கிறோம். யெகோவாவுக்கு சாட்சிகளாய் இருப்பதால் நாம் பெற்றிருக்கும் ஆசீர்வாதங்களை அது நம் கண்ணிலிருந்து மறைத்துவிடுகிறது. குறைகூறும் மனப்பான்மையை நாம் மேற்கொள்ள விரும்பினால் இந்த ஆசீர்வாதங்களை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வது அவசியம். உதாரணமாக, யெகோவாவின் பெயரைத் தாங்கிய ஜனங்களாக இருக்கும் அருமையான பாக்கியம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. (ஏசாயா 43:10) அவருடன் ஒரு நெருக்கமான பந்தத்தை நாம் வளர்த்துக்கொள்ள முடிகிறது; அதன் மூலம் ‘ஜெபத்தைக் கேட்கிறவரிடம்’ எந்த நேரத்திலும் பேச முடிகிறது. (சங்கீதம் 65:2; யாக்கோபு 4:8) கடவுளுடைய பேரரசாட்சி பற்றிய விவாதத்தை நாம் புரிந்து வைத்திருக்கிறோம்; கடவுளுக்கு எப்போதும் உத்தமமாய் இருப்பது நமக்கு கிடைத்திருக்கும் சிலாக்கியம் என்பதை நினைவில் வைத்திருக்கிறோம்; இவை நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன. (நீதிமொழிகள் 27:11) ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிப்பதில் நம்மால் தொடர்ந்து ஈடுபட முடிகிறது. (மத்தேயு 24:14) இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைப்பது சுத்தமான மனசாட்சியைக் கொண்டிருக்க நமக்கு உதவுகிறது. (யோவான் 3:16) எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளை சகித்துக்கொண்டிருந்தாலும் இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்கிறோம்.
17. குறைகூற நமக்கு தகுந்த காரணம் இருந்தாலும்கூட, நாம் ஏன் காரியங்களை யெகோவாவின் நோக்குநிலையில் பார்க்க முயல வேண்டும்?
17 எதையும் நம்முடைய நோக்குநிலையில் பார்க்காமல் யெகோவாவின் நோக்குநிலையில் பார்க்க நாம் முயற்சி செய்யலாம். “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்” என்று சங்கீதக்காரனாகிய தாவீது பாடினார். (சங்கீதம் 25:4) குறைகூற நமக்கு தகுந்த காரணம் இருக்குமானால் அது யெகோவாவுக்கு நன்றாகவே தெரியும். அதை அவரால் உடனடியாக சரிசெய்துவிட முடியும். ஆனாலும் சில சமயங்களில் அந்தப் பிரச்சினை தொடர அவர் ஏன் அனுமதிக்கிறார்? ஒருவேளை பொறுமை, சகிப்புத்தன்மை, விசுவாசம், நீடிய பொறுமை போன்ற குணங்களை நாம் வளர்த்துக்கொள்வதற்காக அவ்வாறு அனுமதிக்கலாம்.—யாக்கோபு 1:2-4.
18, 19. அசௌகரியங்களைப் பற்றிக் குறைகூறாமல் பொறுத்துக்கொள்வதால் வரக்கூடிய நல்ல விளைவுகளை உதாரணத்துடன் விளக்குங்கள்.
18 நமக்கு ஏற்படும் சங்கடங்களைக் குறித்து குறைகூறாமல் சகிக்கும்போது நம்முடைய சுபாவத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, நம்மைப் பார்க்கிறவர்கள்கூட கவரப்படுவார்கள். 2003-ல் நடந்த ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக யெகோவாவின் சாட்சிகள் ஒரு தொகுதியாக ஜெர்மனியிலிருந்து ஹங்கேரிக்கு பஸ்ஸில் பயணித்தார்கள். பஸ் டிரைவர் ஒரு சாட்சி அல்ல. பத்து நாட்கள் சாட்சிகளோடு இருக்க அந்த டிரைவருக்கு உண்மையிலேயே இஷ்டமிருக்கவில்லை. ஆனால் அந்த பயணம் முடிவுக்கு வந்தபோது சாட்சிகளைப் பற்றிய அவரது எண்ணமே மாறிவிட்டது. ஏன்?
19 ஏனென்றால், அந்த பயணத்தின்போது நிறைய அசௌகரியங்கள் ஏற்பட்டன. ஆனால் சாட்சிகள் குறைகூறவேயில்லை. இவர்களைப் போன்ற மிகச் சிறந்த பயணிகளை தான் இதுவரை பார்த்ததில்லை என்று அந்த டிரைவர் கூறினார். அதுமட்டுமா, அடுத்தமுறை தன்னுடைய வீட்டிற்கு சாட்சிகள் வரும்போது அவர்களை உள்ளே அழைத்து அவர்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்கப்போவதாகவும் கூறினார். ‘எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமல் . . . செய்ததன்’ மூலம் இந்தப் பயணிகள் எப்பேர்ப்பட்ட நல்ல விளைவை ஏற்படுத்தினர்!
மன்னிப்பது ஒற்றுமைக்குப் பங்களிக்கிறது
20. நாம் ஏன் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும்?
20 சக விசுவாசியைப் பற்றி நமக்கு ஏதாவது குறை இருந்தால் என்ன செய்வது? அந்தப் பிரச்சினை மிக மோசமானதாக இருந்தால், மத்தேயு 18:15-17-ல் இயேசு கூறிய நியமங்களை நாம் பின்பற்றலாம். எப்போதுமே இதை செய்யவேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் பெரும்பாலான குறைகள் மிகச் சிறியதாகவே இருக்கும். மன்னிப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக அதை ஏன் கருதக்கூடாது? “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று பவுல் எழுதினார். (கொலோசெயர் 3:13, 14) நாம் மன்னிக்கத் தயாராக இருக்கிறோமா? நம்மைக் குறைகூற யெகோவாவுக்கு காரணம் இல்லையா? இருந்தாலும், அவர் தொடர்ந்து இரக்கம் காட்டுகிறார், மன்னிக்கிறார்.
21. முறுமுறுப்பதைக் கேட்பதால் மற்றவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம்?
21 பிரச்சினை எதுவாக இருந்தாலும், முறுமுறுப்பதால் அது சரியாகி விடாது. ‘முறுமுறுப்பது’ என்பதன் எபிரெய சொல் ‘கோபத்தோடு புலம்புவது’ என்ற அர்த்தத்தையும் தருகிறது. எப்போதுமே முறுமுறுத்துக்கொண்டிருக்கும் ஒருவரோடு இருக்க நாம் விரும்புவதில்லை. அவரைவிட்டு சற்று ஒதுங்கியிருக்கவே நாம் முயலுவோம். நாம் முறுமுறுத்தால் அல்லது கோபத்தோடு புலம்பினால் நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்போரும் அதே விதமாகவே உணரக்கூடும். ஏன், அவர்கள் அந்தளவு அசௌகரியமாக உணருவதால் நம்முடன் சகவாசமே வேண்டாமென அவர்கள் ஒதுங்கிப்போய்விடலாம்! வெளிப்படையாகவே முறுமுறுப்பதால் மற்றவர்களுடைய கவனத்தை நாம் ஈர்க்கலாம், ஆனால் அவர்கள் மனதை நம்மிடம் ஈர்க்க முடியாது.
22. யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஒரு பெண் என்ன கூறினாள்?
22 மன்னிக்கும் குணம் ஒற்றுமையை ஏற்படுத்தும். அந்த ஒற்றுமையை யெகோவாவின் மக்கள் பொக்கிஷமாக கருதுகிறார்கள். (சங்கீதம் 133:1-3) ஐரோப்பிய நாடுகள் ஒன்றில், 17 வயது கத்தோலிக்கப் பெண், யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு கடிதம் எழுதினாள். அதில் அவர்களை மெச்சி இவ்வாறு குறிப்பிட்டிருந்தாள்: “வெறுப்பு, பேராசை, சகிப்பின்மை, சுயநலம், வேற்றுமை ஆகியவற்றால் பிரிவுபடாத அங்கத்தினர்களைக் கொண்ட ஒரே அமைப்பு இதுதான்.”
23. அடுத்தக் கட்டுரையில் எதைக் குறித்து சிந்திப்போம்?
23 உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் வணக்கத்தாரான நமக்கு கிடைக்கும் எல்லா ஆன்மீக ஆசீர்வாதங்களுக்காகவும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கையில் நம்மால் ஒற்றுமையைக் காத்துக்கொள்ள முடியும், அதோடு மற்றவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களைக் குறித்து முறுமுறுப்பதை தவிர்க்கவும் முடியும். யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தைக் குறித்து முறுமுறுப்பதுதான் மிகவும் மோசமான ஒன்று. அவ்வாறு செய்வதைத் தவிர்க்க தெய்வீக பண்புகள் நமக்கு எவ்வாறு உதவும் என்பதை அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• முறுமுறுப்பதில் என்ன உட்பட்டுள்ளது?
• முறுமுறுப்பதால்வரும் விளைவுகளை எவ்வாறு உதாரணத்துடன் விளக்குவீர்கள்?
• முறுமுறுப்பதை வளர விடாமல் தடுக்க எது நமக்கு உதவும்?
• மன்னிக்க மனமுள்ளவர்களாக இருப்பது முறுமுறுப்பதைத் தவிர்க்க நமக்கு எப்படி உதவும்?
[பக்கம் 15-ன் படம்]
இஸ்ரவேலர் யெகோவாவுக்கு விரோதமாகவே முறுமுறுத்தார்கள்!
[பக்கம் 17-ன் படம்]
காரியங்களை யெகோவாவின் நோக்குநிலையில் பார்க்க முயலுகிறீர்களா?
[பக்கம் 18-ன் படங்கள்]
மன்னிப்பது கிறிஸ்தவ ஒற்றுமைக்கு பங்களிக்கிறது