ஒப்புக்கொடுத்தலும் தெரிவு சுயாதீனமும்
“அத்தகைய சுயாதீனத்திற்கே கிறிஸ்து நம்மை விடுதலையாக்கினார்.”—கலாத்தியர் 5:1.
1. “ஒப்புக்கொடுத்தல்,” “தொடங்கி வைத்தல்,” அல்லது “அர்ப்பணம் செய்தல்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய மற்றும் கிரேக்கச் சொற்றொடர்கள் எதற்கு முக்கியமாய்ப் பொருந்துகின்றன?
ஒரு பரிசுத்த நோக்கத்தைச் சேவிப்பதற்காகத் தனிப்படுத்தி வைக்கப்பட்டிருப்பது அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது என்ற எண்ணத்தைத் தெரிவிப்பதற்கு பைபிள் எழுத்தாளர்கள் எபிரெயுவிலும் கிரேக்கிலும் பல சொற்றொடர்களைப் பயன்படுத்தினார்கள். ஆங்கில பைபிள்களில் இந்தச் சொற்றொடர்கள், “ஒப்புக்கொடுத்தல்,” “தொடங்கி வைத்தல்” அல்லது “அர்ப்பணம் செய்தல்” போன்ற அர்த்தத்தையுடைய சொற்றொடர்களாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் இந்தப் பதங்கள் கட்டிடங்கள் சம்பந்தமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன; பொதுவாக, பூர்வ எருசலேமிலிருந்த கடவுளுடைய ஆலயத்தின் சம்பந்தமாகவும் அங்கு நடைபெற்ற வணக்கம் சம்பந்தமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மதசார்பற்ற காரியங்கள் சம்பந்தமாக இந்தச் சொற்றொடர்கள் பயன்படுத்தப்படுவது அரிதாயுள்ளது.
‘இஸ்ரவேலின் தேவனுக்கு’ ஒப்புக்கொடுத்தல்
2. ஏன் யெகோவாவை ‘இஸ்ரவேலின் தேவன்’ என்று சரியாகவே அழைக்கலாம்?
2 பொ.ச.மு. 1513-ல், கடவுள் இஸ்ரவேலரை, எகிப்தில் அடிமைப்பட்டிருந்ததிலிருந்து விடுவித்தார். அதன்பின் சீக்கிரத்திலேயே அவர்களை தம்முடைய தனிப்பட்ட ஜனமாக ஒதுக்கி வைத்து, தம்முடன் ஓர் உடன்படிக்கை உறவுக்குள் ஏற்றார். அவர்கள் இவ்வாறு சொல்லப்பட்டார்கள்: “இப்பொழுது நீங்கள் என் சொல்லை உள்ளபடி கேட்டு, [“கண்டிப்பாய்க் கீழ்ப்படிந்து,” NW] என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால் சகல ஜாதிகளிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.” (யாத்திராகமம் 19:5, திருத்திய மொழிபெயர்ப்பு; சங்கீதம் 135:4) இஸ்ரவேலரைத் தம்முடைய சொந்த சம்பத்தாக்கினதால், யெகோவாவை ‘இஸ்ரவேலின் தேவன்’ என்று சரியாகவே அழைக்கலாம்.—யோசுவா 24:23.
3. இஸ்ரவேலரைத் தம்முடைய ஜனமாகத் தெரிவுசெய்ததில் யெகோவா ஏன் பட்சபாதமுள்ளவராக இல்லை?
3 இஸ்ரவேலரைத் தம்முடைய ஒப்புக்கொடுத்த ஜனமாக்கினதில், யெகோவா பட்சபாதமுள்ளவராக இல்லை, ஏனெனில், இஸ்ரவேலரல்லாதவர்களிடமும் அவர் அன்பு காட்டினார். தம்முடைய ஜனத்திற்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” தி.மொ.].” (லேவியராகமம் 19:33, 34) பல நூற்றாண்டுகளுக்கு அப்பால், அப்போஸ்தலனாகிய பேதுருவுக்கு, கடவுளுடைய நோக்குநிலை, மனதில் பதியும்வகையில் அறிவுறுத்தப்பட்டது. அவர் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
4. கடவுளுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே இருந்த உறவின் நிபந்தனைகள் யாவை, அந்த நிபந்தனைகளின்படி இஸ்ரவேலர் நடந்தார்களா?
4 கடவுளுடைய ஒப்புக்கொடுத்த ஜனமாக இருப்பது, நிபந்தனையின்பேரில் சார்ந்திருந்தது என்பதையும் கவனியுங்கள். கடவுளுடைய சொற்களுக்கு அவர்கள் கண்டிப்பாய்க் கீழ்ப்படிந்து அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டால் மாத்திரமே அவருடைய ‘சொந்த சம்பத்தாயிருப்பார்கள்.’ வருந்தத்தக்கதாய், இஸ்ரவேலர் இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தவறினார்கள். பொ.ச. முதல் நூற்றாண்டில், கடவுளால் அனுப்பப்பட்ட மேசியாவை ஏற்காது புறக்கணித்த பின்பு, தங்களுடைய சிலாக்கியமான நிலையை இழந்தார்கள். அதற்குமேலும் யெகோவா, ‘இஸ்ரவேலின் தேவனாக’ இல்லை. மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரும் கடவுளுடைய ஒப்புக்கொடுத்த ஜனமாக இனிமேலும் இல்லை.—மத்தேயு 23:23-ஐ ஒப்பிடுக.
‘கடவுளின் இஸ்ரவேலுடைய’ ஒப்புக்கொடுத்தல்
5, 6. (அ) மத்தேயு 21:42, 43-ல் பதிவுசெய்யப்பட்ட தம்முடைய தீர்க்கதரிசன வார்த்தைகளால் இயேசு அர்த்தப்படுத்தினது என்ன? (ஆ) “கடவுளின் இஸ்ரவேல்” எப்போது, எவ்வாறு உண்டாயிற்று?
5 ஒப்புக்கொடுத்த ஒரு ஜனம் இல்லாதவராக யெகோவா இப்போது இருந்தாரென இது அர்த்தப்படுத்தினதா? இல்லை. சங்கீதக்காரன் சொன்னதை மேற்கோளாகக் குறிப்பிட்டு, இயேசு கிறிஸ்து இவ்வாறு முன்னறிவித்தார்: “வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? ஆகையால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 21:42, 43.
6 கிறிஸ்தவ சபையே, ‘அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனமாக’ நிரூபித்தது. இயேசு, தாம் பூமியில் இருந்தபோது, அதன் எதிர்கால முதல் உறுப்பினர்களை தெரிந்தெடுத்தார். ஆனால், பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில், ஏறக்குறைய 120 பேரான அதன் முதல் உறுப்பினர்களின்மீது தம்முடைய பரிசுத்த ஆவியை ஊற்றுவதன்மூலம் யெகோவா தேவன்தாமே கிறிஸ்தவ சபையை ஸ்தாபித்தார். (அப்போஸ்தலர் 1:15; 2:1-4) பிற்பட்ட காலத்தில் அப்போஸ்தலன் பேதுரு எழுதினபடி, புதிதாக அமைக்கப்பட்ட இந்தச் சபை அப்போது, “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்” ஆயிற்று. (1 பேதுரு 2:9) என்ன காரணத்திற்காகத் தெரிந்துகொள்ளப்பட்டார்கள்? அவர்கள், “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” தெரிந்துகொள்ளப்பட்டார்கள். (1 பேதுரு 2:9) கிறிஸ்துவைப் பின்பற்றினோர், கடவுளுடைய ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்டு, இப்போது ஒப்புக்கொடுத்த ஜனமாக, ‘கடவுளின் இஸ்ரவேலாக’ இருந்தார்கள்.—கலாத்தியர் 6:16, தி.மொ.
7. கடவுளின் இஸ்ரவேலினுடைய உறுப்பினர்கள் எதை அனுபவித்து மகிழப்போகிறவர்களாக இருந்தார்கள், ஆகையால் எதைத் தவிர்க்கும்படி சொல்லப்பட்டார்கள்?
7 அந்தப் பரிசுத்த ஜனத்தின் உறுப்பினர்கள், ‘சொந்தமான ஜனமாக’ இருந்தபோதிலும், அவர்களை அடிமைப்படுத்தக்கூடாது. மாறாக, மாம்சத்தின்படியான, ஒப்புக்கொடுத்த இஸ்ரவேல் ஜனத்திற்கு இருந்ததைப் பார்க்கிலும் அதிகப்படியான சுயாதீனத்தை அவர்கள் அனுபவித்து மகிழப்போகிறவர்களாக இருந்தார்கள். இந்தப் புதிய ஜனத்தின் எதிர்கால உறுப்பினர்களுக்கு இயேசு இவ்வாறு வாக்குறுதியளித்தார்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:32) நியாயப்பிரமாண உடன்படிக்கை கட்டளையிட்டவற்றிலிருந்து கிறிஸ்தவர்கள் விடுதலையாக்கப்பட்டார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டுக் காட்டினார். இதன் சம்பந்தமாக, கலாத்தியாவிலிருந்த உடன்விசுவாசிகளுக்கு அவர் இவ்வாறு அறிவுரை கூறினார்: “ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.”—கலாத்தியர் 5:1.
8. எவ்வகையில், நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் அனுபவித்ததைப் பார்க்கிலும் அதிகப்படியான சுயாதீனத்தை கிறிஸ்தவ ஏற்பாடு நபர்களுக்கு அளிக்கிறது?
8 மாம்சத்தின்படியான பூர்வ இஸ்ரவேலைப்போல் இராமல், கடவுளின் இஸ்ரவேல், தன் ஒப்புக்கொடுத்தல் தேவைப்படுத்தினவற்றிற்கு இந்நாள் வரையாகக் கண்டிப்பாய்க் கீழ்ப்படிந்து வந்திருக்கிறது. இது ஆச்சரியமளிக்க வேண்டியதில்லை, ஏனெனில், கீழ்ப்படிவதற்கு அதன் உறுப்பினர்கள் சுயமாய்த் தெரிவு செய்தனர். மாம்சத்தின்படியான இஸ்ரவேலின் உறுப்பினர்கள் பிறப்பின் காரணத்தால் ஒப்புக்கொடுத்தவர்களாக ஆனார்கள், கடவுளின் இஸ்ரவேலினுடைய உறுப்பினரோவெனில், தெரிவின் மூலம் அத்தகையோராக ஆனார்கள். இவ்வாறு கிறிஸ்தவ ஏற்பாடு, தெரிவு சுயாதீனத்தை நபர்களுக்கு அனுமதியாமல் ஒப்புக்கொடுத்தலுக்கு அவர்களை உட்படுத்தின யூத நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு நேர்மாறாக இருந்தது.
9, 10. (அ) ஒப்புக்கொடுத்தல் சம்பந்தமாக ஒரு மாற்றம் இருக்கும் என்று எரேமியா எவ்வாறு தெரிவித்தார்? (ஆ) இன்றுள்ள ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் எல்லாருமே கடவுளின் இஸ்ரவேலாக இல்லை என்று நீங்கள் ஏன் சொல்வீர்கள்?
9 தீர்க்கதரிசியாகிய எரேமியா, பின்வருமாறு எழுதினபோது, ஒப்புக்கொடுத்தல் சம்பந்தமாக ஒரு மாற்றத்தை முன்னறிவித்தார்: “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். நான் அவர்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் [“யெகோவா,” தி.மொ.] சொல்லுகிறார்.”—எரேமியா 31:31-33.
10 கடவுளுடைய பிரமாணம், “அவர்கள் இருதயத்திலே” எழுதப்பட்டதுபோல் அதை ‘தங்கள் உள்ளத்திலே’ உடையோராக, கடவுளின் இஸ்ரவேலினுடைய உறுப்பினர்கள் தங்கள் ஒப்புக்கொடுத்தலின்படி வாழ்வதற்கு தூண்டப்படுகிறார்கள். தெரிவினால் அல்லாமல், பிறப்பினாலேயே ஒப்புக்கொடுத்தவர்களாக இருந்த, மாம்சத்தின்படியான இஸ்ரவேலரினுடையதைப் பார்க்கிலும் இவர்களுடைய உள்ளத் தூண்டுதல் உறுதிவாய்ந்ததாக இருக்கிறது. இன்று, கடவுளுடைய சித்தத்தைச் செய்யும்படி, கடவுளின் இஸ்ரவேல் வெளிப்படுத்திக் காட்டும் உறுதியான உள்ளத் தூண்டுதல், உலகம் முழுவதிலுமுள்ள ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட உடன் வணக்கத்தாரில் காணப்படுகிறது. அவர்களும் இவ்வாறே தங்கள் வாழ்க்கையை யெகோவா தேவனுடைய சித்தத்தைச் செய்யும்படி அவருக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். கடவுளின் இஸ்ரவேலரானோருக்கு இருப்பதைப் போன்ற, பரலோக வாழ்க்கைக்குரிய நம்பிக்கை இந்த நபர்களுக்கு இல்லாதபோதிலும், கடவுளுடைய பரலோக ராஜ்யத்தினுடைய ஆட்சியில், பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பில் இவர்கள் களிகூருகிறார்கள். தங்களை, ‘அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படி’ அளிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில், ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீந்திருக்கும் சொற்ப உறுப்பினர்களுக்கு இவர்கள் சுறுசுறுப்பாய் உதவிசெய்வதன்மூலம், அவர்களுக்கு தங்கள் நன்றிமதித்துணர்வைக் காட்டுகிறார்கள்.
கடவுள் அளித்திருக்கும் சுயாதீனத்தை ஞானமாய் பயன்படுத்துதல்
11. என்ன திறமை உடையவனாய் மனிதன் படைக்கப்பட்டான், அது எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும்?
11 சுயாதீனத்தை மதித்துப் போற்றும்படி கடவுள் மனிதரைப் படைத்தார். விருப்பப்படி தெரிவுசெய்யும் திறமையை அவர்களுக்கு அளித்தார். முதல் மனித தம்பதி தங்கள் தெரிவு சுயாதீனத்தைப் பயன்படுத்தினர். எனினும், அவர்கள், ஞானமற்றவர்களாயும் அன்பற்றவர்களாயும் தங்களுக்கும் தங்கள் சந்ததியாருக்கும் கேட்டை வருவித்த ஒரு தெரிவை செய்தார்கள். இருப்பினும், அறிவுக்கூர்மையுள்ள சிருஷ்டிகளை, தங்கள் உள்ளத் தூண்டுதல்களுக்கோ விருப்பங்களுக்கோ மாறான போக்கை ஏற்கும்படி யெகோவா ஒருபோதும் கட்டாயப்படுத்துகிறதில்லை என்பதை இது தெளிவாக நிரூபித்துக் காட்டுகிறது. “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” ஆதலால், அன்பில் ஆதாரங்கொண்டுள்ள ஒன்றே, மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் செய்யப்படும் ஒன்றே, தெரிவு சுயாதீனத்தில் ஆதாரமுடைய ஒன்றே அவருக்கு ஏற்கத்தகுந்த ஒரே ஒப்புக்கொடுத்தலாக இருக்கிறது. (2 கொரிந்தியர் 9:7) வேறு எந்த வகையானதும் ஏற்கத்தகுந்ததல்ல.
12, 13. சரியான முறையில் பிள்ளையைப் பயிற்றுவிப்பதற்கு, தீமோத்தேயு எவ்வாறு ஒரு மாதிரியாக இருக்கிறார், அவருடைய முன்மாதிரி பல இளைஞரை எதற்கு வழிநடத்தியிருக்கிறது?
12 இந்தத் தேவையை முழுமையாக உணர்ந்து ஏற்போராய், ஒருவர் தன்னை கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதை யெகோவாவின் சாட்சிகள் சிபாரிசு செய்கின்றனர்; ஆனால் அத்தகைய ஒரு ஒப்புக்கொடுத்தலை செய்யும்படி, எவரையும், தங்கள் பிள்ளைகளையும்கூட, அவர்கள் கட்டாயப்படுத்துகிறதில்லை. பல சர்ச்சுகள் செய்வதற்கு மாறாக, சாட்சிகள், தங்கள் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கையில் அவர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுப்பதில்லை. அவர்களே சொந்தமாக ஒப்புக்கொடுக்கும்படி தெரிவுசெய்ய வாய்ப்பளிக்காமல் அவர்களை வற்புறுத்தும் செயலாக இது இருப்பதால் சாட்சிகள் அப்படிப்பட்ட முழுக்காட்டுதல் கொடுப்பதில்லை. வாலிபனாகிய தீமோத்தேயு கடைப்பிடித்த ஒன்று, பின்பற்றுவதற்குரிய வேதப்பூர்வ மாதிரியாக இருக்கிறது. அவர் வயதுவந்தவரானபோது, அப்போஸ்தலன் பவுல் அவருக்கு இவ்வாறு கூறினார்: “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் [“குழந்தைப் பருவத்திலிருந்து,” NW] அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.”—2 தீமோத்தேயு 3:14, 15.
13 குழந்தைப் பருவத்திலிருந்தே தீமோத்தேயுவுக்கு பரிசுத்த எழுத்துக்கள் கற்பிக்கப்பட்டு வந்ததால் அவற்றை அறிந்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. கிறிஸ்தவ போதகங்களை நம்புவதற்கு அவர் வற்புறுத்தப்படவில்லை, மாறாக நிச்சயித்துக்கொள்ளும்படி அவருடைய தாயும் பாட்டியும் அவருக்கு உதவினர். (2 தீமோத்தேயு 1:5) இதன் பலனாக, தீமோத்தேயு, கிறிஸ்துவைப் பின்பற்றுவது ஞானமானது என்று கண்டு, இவ்வாறு, கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தலுக்கு உட்படும்படி தானே சொந்தமாய்த் தெரிவு செய்தார். தற்காலங்களில், யெகோவாவின் சாட்சிகளாயிருக்கும் பெற்றோரையுடைய ஆண்களும் பெண்களுமான பல பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள், இந்த முன்மாதிரியைப் பின்பற்றியிருக்கிறார்கள். (சங்கீதம் 110:3) மற்றவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இது அவரவர் சொந்தத் தெரிவின் காரியமாக இருக்கிறது.
யாருடைய அடிமையாக இருப்பதற்குத் தெரிந்துகொள்வது?
14. முற்றிலுமான சுயாதீனத்தைப் பற்றி ரோமர் 6:16 நமக்கு என்ன சொல்கிறது?
14 முற்றிலும் சுயாதீனமுள்ளவராக ஒருவரும் இல்லை. புவியீர்ப்பு விசை போன்ற இயற்கை விதிகளால் எல்லாருடைய சுயாதீனமும் கட்டுப்படுத்தப்படுகிறது; பாதிப்பு ஏற்படாமல் அவற்றை மீறமுடியாது. மேலும் ஆவிக்குரிய கருத்திலும் ஒருவரும் முற்றிலும் சுயாதீனராக இல்லை. பவுல் இவ்வாறு நியாயங்காட்டி பேசினார்: “மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?”—ரோமர் 6:16.
15. (அ) அடிமைகளாக இருப்பதைப்பற்றி ஜனங்கள் எவ்வாறு உணருகிறார்கள், ஆனால் பெரும்பான்மையர் இறுதியாக என்ன செய்வோராய் இருக்கிறார்கள்? (ஆ) என்ன பொருத்தமான கேள்விகளை நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம்?
15 ஒருவருக்கு அடிமையாக இருப்பது என்ற எண்ணம் பெரும்பான்மையருக்கு வெறுப்புணர்ச்சி உண்டாக்குவதாக இருக்கிறது. எனினும், இன்றைய உலகத்தில் ஜனங்கள், மிகப் பல தந்திரமான வழிகளில் கையாளப்படவும் வசீகரிக்கப்படவும் தங்களைப் பெரும்பாலும் அனுமதிப்பதனால், இறுதியாக தாங்கள் என்ன செய்யும்படி மற்றவர்கள் விரும்புகிறார்களோ அவற்றையே, அனிச்சையாய் செய்துவிடுகின்றனர் என்பதுதான் உண்மை. உதாரணமாக, விளம்பர தொழில் துறையும் பொழுதுபோக்குத் தொழில் உலகமும் ஜனங்களை ஒரு வார்ப்புக்குள் திணிக்க முயற்சிசெய்து, அவர்கள் பின்பற்றுவதற்கு தராதரங்களை ஏற்படுத்துகின்றன. அரசியல் மற்றும் மத அமைப்புகள், தங்கள் எண்ணங்களையும் இலக்குகளையும் ஆதரிக்கும்படி ஜனங்களைச் செய்விக்கின்றன; இதை, நம்பிக்கையூட்டும் விவாதங்கள் மூலமாய் எப்பொழுதும் செய்வதில்லை, ஆனால் கூட்டுப்பொறுப்புணர்வை அல்லது பற்றுறுதியை வசீகரிக்கும் முறையிலேயே பெரும்பாலும் செய்கின்றன. ‘யாருக்குக் கீழ்ப்படிய ஒப்புக்கொடுக்கிறோமோ அவர்களுக்கு அடிமைகளாக இருக்கிறோம்’ என்று பவுல் குறிப்பிட்டதனால், நாம் ஒவ்வொருவரும் நம்மைநாமே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது; ‘நான் யாருக்கு அடிமையாக இருக்கிறேன்? என் தீர்மானங்களிலும் என் வாழ்க்கை முறையிலும் யார் மிக அதிக செல்வாக்கைச் செலுத்துகின்றனர்? மத குருமார்களா, அரசியல் தலைவர்களா, பெரும் பணக்கார சீமான்களா பொழுதுபோக்கு கலைஞர்களா? யாருக்கு நான் கீழ்ப்படிகிறேன்—கடவுளுக்கா மனிதருக்கா?’
16. என்ன கருத்தில் கிறிஸ்தவர்கள் கடவுளின் அடிமைகளாக இருக்கிறார்கள், அத்தகைய அடிமைத்தனத்தைப் பற்றிய சரியான நோக்குநிலை என்ன?
16 கடவுளுக்குக் கீழ்ப்படிவதை, தங்கள் சொந்த சுயாதீனத்தில் நியாயமில்லாமல் குறுக்கிடும் ஒன்றாகக் கிறிஸ்தவர்கள் கருதுகிறதில்லை. அவர்கள், தங்கள் முன்மாதிரியானவராகிய இயேசு கிறிஸ்து பயன்படுத்தின முறையில் தங்கள் சுயாதீனத்தை மனப்பூர்வமாய்ப் பயன்படுத்தி, சொந்த விருப்பங்களையும் முன்னுரிமைகளையும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக செயல்படுத்துகிறார்கள். (யோவான் 5:30; 6:38) சபையின் தலைவராக கிறிஸ்துவுக்கே தங்களைக் கீழ்ப்படுத்துகிறவர்களாய், ‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்துக்கொள்கிறார்கள். (1 கொரிந்தியர் 2:14-16; கொலோசெயர் 1:15-18) தான் நேசிக்கிற மனிதனை மணம் செய்து, அவரோடு மனப்பூர்வமாய் ஒத்துழைக்கிற ஒரு பெண்ணின் காரியத்தில் இருப்பதுபோல் இது பெரும்பாலும் உள்ளது. உண்மையில், அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் தொகுதி, கிறிஸ்துவுக்கு நிச்சயிக்கப்பட்ட கற்புள்ள கன்னிகையாகப் பேசப்பட்டிருக்கிறது.—2 கொரிந்தியர் 11:2; எபேசியர் 5:23, 24; வெளிப்படுத்துதல் 19:7, 8.
17. யெகோவாவின் சாட்சிகள் யாவரும் என்ன ஆவதற்குத் தெரிவு செய்கிறார்கள்?
17 யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொருவரும், தான் பரலோகத்துக்குரிய அல்லது பூமிக்குரிய எந்த நம்பிக்கையுடையவராக இருந்தாலும், கடவுளுடைய சித்தத்தைச் செய்து, அரசராக அவருக்கே கீழ்ப்படியும்படி, அவருக்குத் தன்னைத்தானே ஒப்புக்கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சாட்சிக்கும், ஒப்புக்கொடுத்தலானது, மனிதரின் அடிமையாக இருப்பதைப் பார்க்கிலும் கடவுளின் அடிமையாக இருப்பது மேம்பட்டதாக, தானே சொந்தமாய் தெரிவுசெய்த ஒன்றாக இருந்திருக்கிறது. இது, அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் அறிவுரைக்கு இசைவாக உள்ளது: “நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.”—1 கொரிந்தியர் 7:23.
நமக்கு நன்மையுண்டாகும்படி கற்பது
18. சாட்சியாகப் போகிறவர், முழுக்காட்டுதலுக்கு எப்போது தகுதிபெறுகிறார்?
18 ஒரு நபர், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகும்படி தகுதிபெறுவதற்கு முன்பாக, வேதப்பூர்வ தகுதிகளைப் பெற்றவராக இருக்க வேண்டும். சாட்சியாகப்போகிறவர், கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தல் உட்படுத்துபவற்றை உண்மையில் புரிந்துகொண்டு இருக்கிறாரா என்பதைத் தீர்மானிப்பதில் மூப்பர்கள் மிகுந்த கவனத்தைச் செலுத்துகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருக்க அவர் உண்மையில் விரும்புகிறாரா? இது தேவைப்படுத்துவதற்கு ஏற்ப வாழ்க்கை நடத்துவதற்கு அவர் மனமுள்ளவராக இருக்கிறாரா? இல்லையெனில், முழுக்காட்டப்படுவதற்கு அவர் தகுதிபெறவில்லை.
19. கடவுளுடைய ஒப்புக்கொடுத்த ஊழியராகும்படி தீர்மானிக்கிற ஒருவரைக் குற்றங்குறை கூறுவதற்கு ஏன் காரணம் இல்லை?
19 எனினும், இந்த எல்லா தேவைகளையும் ஒரு நபர் பூர்த்திசெய்யும்போது கடவுளாலும் அவருடைய ஏவப்பட்ட வார்த்தையாலும், அவர் நல்லமுறையில் தூண்டப்பட்டு, தானாக மனமார்ந்து செய்த தீர்மானத்திற்காக அவர்மீது குற்றங்குறை கூறுவதேன்? மனிதரால் அல்லாமல் கடவுளால் செல்வாக்குச் செலுத்தப்பட தன்னை அனுமதிப்பது, குறைந்த ஏற்புடையதாய் உள்ளதா? அல்லது இது எவ்வாறாவது குறைந்த நன்மை பயக்குவதாக உள்ளதா? யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறு நினைக்கிறதில்லை. ஏசாயாவால் எழுதி வைக்கப்பட்ட, கடவுளுடைய இந்த வார்த்தைகளை அவர்கள் முழு இருதயத்துடன் ஒப்புக்கொள்கிறார்கள்: “உன் கடவுளாகிய யெகோவா நானே, பிரயோஜனமானவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன்; நீ செல்லவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிறேன்.”—ஏசாயா 48:17, தி.மொ.
20. பைபிள் சத்தியத்தால், என்ன விதங்களில் ஜனங்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்?
20 எரிகிற நரகத்தில் நித்திய காலமாக வதைக்கப்படுதல் போன்ற, பொய்யான மதக்கோட்பாடுகளை நம்புவதிலிருந்து பைபிள் சத்தியம் ஜனங்களை விடுதலையாக்குகிறது. (பிரசங்கி 9:5, 10) அதற்குப் பதிலாக, இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியின் ஆதாரத்தின்பேரில் சாத்தியமாக்கப்பட்ட மரித்தோருக்குரிய உண்மையான நம்பிக்கையாகிய உயிர்த்தெழுதல், அவர்களுடைய இருதயங்களை நன்றியறிதலால் நிரப்புகிறது. (மத்தேயு 20:28; அப்போஸ்தலர் 24:15; ரோமர் 6:23) பெரும்பாலும் நிறைவேறாத அரசியல் வாக்குறுதிகளில் நம்பி ஏமாற்றமடையும் சங்கடங்களிலிருந்து பைபிள் சத்தியம் ஆட்களை விடுதலையாக்குகிறது. மாறாக அது, யெகோவாவின் ராஜ்யம் பரலோகத்தில் ஏற்கெனவே ஆட்சி செய்கிறதென்றும், சீக்கிரத்தில் பூமி முழுவதிலும் ஆட்சி செய்யப்போகிறது என்றும் அறியச் செய்து, அவர்களுடைய இருதயங்களை மகிழ்ச்சியால் பொங்க செய்கிறது. சீர்கேடடைந்த மாம்சத்திற்குக் கவர்ச்சியூட்டுகிறபோதிலும், கடவுளுக்கு அவமதிப்பைக் கொண்டுவருபவையும், முறிந்த உறவு, நோய், அகால மரணம் ஆகியவற்றிற்கு உட்படுத்துபவையுமான பழக்கவழக்கங்களிலிருந்து ஆட்களை, பைபிள் சத்தியம் விடுதலையாக்குகிறது. சுருக்கமாகச் சொன்னால், கடவுளின் அடிமையாக இருப்பது, மனிதரின் அடிமையாக இருப்பதைப் பார்க்கிலும் மிக மேம்பட்ட முறையில் அதிக பயனுள்ளதாக இருக்கிறது. உண்மையில், கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பது, “இந்தக் காலக் கட்டத்தில்” நன்மைகளையும், “வரவிருக்கிற காரிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவனையும்” உறுதியளிக்கிறது.—மாற்கு 10:29, 30, NW.
21. கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தலை யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு கருதுகிறார்கள், அவர்களுடைய விருப்பம் என்ன?
21 இன்று இருக்கும் யெகோவாவின் சாட்சிகள், பூர்வ காலத்திய இஸ்ரவேலரைப்போல் பிறப்பின்மூலம் ஒப்புக்கொடுத்த ஒரு ஜனத்தின் பாகமாகவில்லை. ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களடங்கிய சபையின் பாகமாக இந்தச் சாட்சிகள் இருக்கிறார்கள். முழுக்காட்டப்பட்ட ஒவ்வொரு சாட்சியும், ஒப்புக்கொடுத்தலில் அவரவர் தனியே தன் சொந்த தெரிவு சுயாதீனத்தைப் பயன்படுத்தினதன் மூலமே அவ்வாறு ஆனார்கள். நிச்சயமாகவே, யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒப்புக்கொடுத்தலானது, கடவுளிடமான அன்புக்குரிய தனிப்பட்ட உறவில் விளைவடைகிறது; கடவுளை மனப்பூர்வமாய்ச் சேவிப்பதால் குறிக்கப்படுகிறது. மகிழ்ச்சி தரும் இந்த உறவை அவர்கள் விடாது பேணிக்காத்து, இயேசு கிறிஸ்து தங்களை விடுதலையாக்கி அருளிய அந்தச் சுயாதீனத்தை என்றென்றும் உறுதியாகப் பற்றிக்கொண்டு இருப்பதற்கு அவர்கள் முழு இருதயத்துடன் விரும்புகிறார்கள்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ இஸ்ரவேலை தம்முடைய ‘சொந்த சம்பத்தாகும்படி’ தெரிந்துகொண்டதில் கடவுள் ஏன் பட்சபாதம் காட்டவில்லை?
◻ கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தல், சுயாதீனத்தை இழப்பதை உட்படுத்துவதில்லை என்று ஏன் நீங்கள் சொல்வீர்கள்?
◻ யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதன் நன்மைகள் யாவை?
◻ மனிதரின் அடிமையாக இருப்பதைப் பார்க்கிலும் யெகோவாவின் ஊழியனாக இருப்பது ஏன் மேம்பட்டது?
[பக்கம் 15-ன் படம்]
பூர்வ இஸ்ரவேலில், கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தல் பிறப்பின்பேரில் சார்ந்திருந்தது
[பக்கம் 16-ன் படம்]
கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தல் தெரிவின்பேரில் சார்ந்திருக்கிறது