புனிதர்களிடம் நான் ஜெபம் செய்யலாமா?
பைபிள் தரும் பதில்
கூடாது. இயேசுவின் பெயரில் கடவுளிடம் மட்டுமே நாம் ஜெபம் செய்ய வேண்டும் என்று பைபிள் வசனங்கள் காட்டுகின்றன. இயேசு தன் சீஷர்களிடம், “நீங்கள் இப்படி ஜெபம் செய்யுங்கள்: ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்’” என்று சொன்னார். (மத்தேயு 6:9) புனிதர்களிடமோ, தேவதூதர்களிடமோ, அல்லது கடவுளைத் தவிர வேறு எந்தவொரு நபரிடமோ ஜெபம் செய்யச் சொல்லி அவர் கற்றுக்கொடுக்கவில்லை.
“நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று அவர் தன் சீஷர்களிடம் சொன்னார். (யோவான் 14:6) நமக்காகப் பரிந்துபேச இயேசு மட்டுமே கடவுளால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.—எபிரெயர் 7:25.
கடவுளிடமும் ஜெபம் செய்து, புனிதர்களிடமும் ஜெபம் செய்தால் என்ன?
கடவுள் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தபோது, “நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார். (யாத்திராகமம் 20:5) “தனக்கு மட்டுமே பற்றுறுதி காட்டப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறவராக” இருக்கிறார் என நியு அமெரிக்கன் பைபிளில் உள்ள அடிக்குறிப்பு சொல்கிறது. தனக்கு மட்டுமே பற்றுறுதி காட்டப்பட அல்லது வணக்கம் செலுத்தப்பட (இதில் ஜெபமும் உட்பட்டிருக்கிறது) வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார்.—ஏசாயா 48:11.
வேறு யாரிடமும், புனிதர்களிடமோ பரிசுத்த தேவதூதர்களிடமோகூட, நாம் ஜெபம் செய்தால் கடவுளுடைய மனதைப் புண்படுத்திவிடுவோம். அப்போஸ்தலன் யோவான் ஒரு தேவதூதரை வணங்க முயன்றபோது, அந்தத் தேவதூதர் அவரைத் தடுத்து, “வேண்டாம்! அப்படிச் செய்யாதே! உன்னைப் போலவும், இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுக்கிற உன் சகோதரர்களைப் போலவும் நானும் ஓர் அடிமைதான்; கடவுளை மட்டும் வணங்கு!” என்று சொன்னார்.—வெளிப்படுத்துதல் 19:10.