கருச்சிதைவு—மற்றும் “ஜீவ ஊற்று”
இன்று நவீன தொழில் நுட்பத்துடன், மருத்துவர்கள் கருவிலேயே பிறக்கப்போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை மிக எளிதாகத் தீர்மானிக்க முடியும். ஆனால் அதன் தன்மையை யார் தீர்மானிக்க முடியும்? உயிருள்ள ஒரு மனித ஆத்துமாவாக அதன் திறமை வளத்தை யார் பார்க்க முடியும்? (ஆதியாகமம் 2:7) யெகோவா தேவனால் மட்டுமே முடியும், ஏனென்றால் அவரே “ஜீவ ஊற்று.” (சங்கீதம் 36:9) பின்வரும் வேதப்பூர்வமான உதாரணங்களைக் கவனியுங்கள்.
முற்பிதாக்களின் சுதந்தரிப்புச் சட்டங்கள் முதல் பிறப்புடன் சம்பந்தப்பட்டிருந்தது. என்றபோதிலும் ஈசாக்கின் மனைவியாகிய ரெபேக்காள் தன் கருவில் இரட்டைக் குழந்தைகளைத் தாங்கியபோது, கடவுள் அவளிடம் சொன்னதாவது: “மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்.” அந்த இரண்டு பையன்களாகிய யாக்கோபு மற்றும் ஏசாவின் வாழ்க்கை, அவர்கள் பிறப்பதற்கு முன்பாகவே யெகோவா அவர்களுடைய தன்மைகளை அறிய வல்லவராயிருந்தார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றது.—ஆதியாகமம் 25:22, 23.
பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஒரு தேவதூதன் ஆசாரியனாகிய சகரியாவிடம் அவனுடைய மனைவி எலிசபெத்து ஒரு குமாரனைப் பெறுவாள் என்றும், அவனுக்கு யோவன் என்று பெயரிடும்படியாகவும் சொன்னான். அவனுடைய மகன்தான் பின்னால் முழுக்காட்டுபவனாகிய யோவன் என்று அழைக்கப்பட்டான், மேசியாவாகிய இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தும் சிலாக்கியத்தையும் கொண்டிருந்தான். இந்த ஒரு ஊழியத்திற்கு மனத்தாழ்மை ஒரு தகுதியாக இருந்தது என்பதைக் கடவுள் அறிந்திருந்தார்.—லூக்கா 1:8-17.
மனித கரு—எவ்வளவு விலையேறப்பெற்றது?
அரசனாகிய தாவீது பின்வரும் காரியத்தை ஒப்புக்கொண்டான்: “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர் . . . என் கருவை உம்முடைய கண்கள் கண்டது. என் அவயவயங்கள் . . . அனைத்தும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தன.” அது நம்மைக் குறித்ததிலும் உண்மையாயிருக்கிறது.
“ஜீவ ஊற்றாகிய” யெகோவா தேவனுக்கு மனித கருதரிப்பு ஒவ்வொன்றும் விலையேறப்பெற்றது. அது எவ்வளவு விலையேறப்பெற்றது என்பதை மோசயின் நியாயப்பிரமாணம் யாத்திராகமம் 21:22, 23-ல் தெளிவுபடுத்துகிறது: “மனிதர் சண்டை பண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால் அவளுக்கு கர்ப்பம் விழுந்ததுபோனால் . . . வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன் கொடுக்க வேண்டும்.”
இந்தப் பிரமாணத்தில் முக்கியமான காரியம், கருவுக்கு அல்ல தாய்க்கு என்ன சம்பவித்தது என்பதுதான், என்ற கருத்தை சில மொழிபெயர்ப்பாளர்கள் கொடுக்க முற்படுகிறார்கள். என்றபோதிலும் மூல எபிரெயு வசனம் தாய் அல்லது குழந்தைக்கு ஏற்படும் சேதத்தைக் குறிப்பிடுவதாயிருக்கிறது.
பூர்வ கிறிஸ்தவ யோசனை
முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களின் மரணத்துக்குப் பின்னால் அவர்களுடைய போதனைகளின் பேரில் பலர் விளக்கங்களைக் கொடுத்தனர். இந்த எழுத்தாளர்கள் பைபிள் எழுத்தாளர்களைப் போல் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட எழுத்தாளர்கள் அல்ல, ஆனால் அவர்களுடைய குறிப்புகள் அக்கறைக்குரியவை, ஏனென்றால் இந்த முக்கியமான பிரச்னையின்பேரில் அது அவர்களுடைய மத யோசனையைப் பிரதிபலிக்கின்றன. அவற்றில் சில பகுதிகள் பின்வருமாறு:
பரனபாவின் கடிதம், அதிகாரம் 19:5 (பொ.ச. 100-132)
“கருச்சிதைவு செய்வதன் மூலம் குழந்தையைக் கொலை செய்யாதிருப்பாயாக; மற்றும் அது பிறந்த பின்பும் அதை அழித்துவிடாதே.”
டிடேஷ், அல்லது பன்னிரண்டு அப்போஸ்தலரின் போதனைகள் (பொ.ச. 150)
“இதுவே வாழ்க்கை முறை: . . . குழந்தையைக் கருவிலோ அல்லது புதிதாய்ப் பிறந்த குழந்தையையோ கொலை செய்யாதிருப்பாயாக.”
டெர்ட்டுலியன்: மன்னிப்பு, அதிகாரம் 9:8 (பொ.ச. 197)
“நம்மைக் குறித்ததில் கொலை செய்வது எல்லா சமயத்திற்கும் தடை செய்யப்பட்டிருக்கிறது. கர்ப்பத்தில் வளரும் கருவைக் கூட நாம் அழித்துவிடக்கூடாது. அது மனிதனாக உருவாவதற்கு இரத்தத்தை எடுத்துக்கொள்கிறது. குழந்தை பிறப்பதை தடைசெய்வது, திட்டமிடப்பட்ட ஒரு கொலை. ஏற்கெனவே பிறந்துவிட்ட ஒரு உயிரைக் கொல்லுவதற்கும் அல்லது அதன் பிறப்பில் குறுக்கிடுவதற்கும் எந்த ஒரு வித்தியாசமுமில்லை. ஒரு மனிதனாகப் போவது ஒரு மனிதனாக இருக்கிறது.”
பேஸில்: ஆம்ஃபிலோக்கியஸுக்கு எழுதிய நிருபம் (பொ.ச. 347)
“வேண்டுமென்றே கருவைக் கலைக்கும் ஒருத்தி கொலைக்கான அபராதத்தை செலுத்த வேண்டும். குழந்தைக் கரு உருவானதா இல்லையா என்பதன் பேரிலிருக்கும் மயிரிழையான எந்த ஒரு வேறுபாடும் நம்மால் ஏற்றுக்கொள்ளப்படாது.’
கிறிஸ்தவ கருத்து
மனித அபூரணத்தினிமித்தம் அல்லது ஒரு விபத்தினிமித்தம் வேண்டுமென்றிராத கருச்சிதைவு அல்லது காலமல்லாப் பிள்ளைப்பேறு ஏற்படக்கூடும். தேவையில்லாத ஒரு பிள்ளைப்பேறு ஏற்படக்கூடும். தேவையில்லாத ஒரு பிள்ளைப் பிறப்பை வேண்டுமென்றே தடை செய்வது வித்தியாசமான ஒன்று. நாம் பார்த்தபடி, வேதவசனங்களின் பிரகாரம், அது மனித உயிரை வேண்டுமென்றே எடுத்துப்போடுவதாகும்.
“பூமியையும் அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும் அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவர்” யார்? அது மனிதன் அல்ல, ஆனால் ஜீவ ஊற்றாகிய யெகோவா தேவன். (ஏசாயா 42:5) நம்முடைய பிள்ளைகளுக்கு உயிரைக் கடத்தும் கடவுள் கொடுத்த திறமையைக் கொண்டிருப்பது விலைமதிக்க முடியாத ஒரு சிலாக்கியம். மற்ற எல்லா காரியங்களிலும் இருப்பதுபோல “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்து தேவனுக்குக் கணக்கொப்பு விப்பான்.”—ரோமர் 14:12. (g87 4/8)
[பக்கம் 14-ன் பெட்டி]
சந்தோஷமுள்ள ஒரு கர்ப்பம்
1973-ல் விழித்தெழு! பத்திரிகையின் துணைப் பத்திரிகையாகிய காவற்கோபுரம் கருச்சிதைவின் பேரில் பைபிள் கருத்து குறித்த ஒரு சிறிய கட்டுரையைக் கொண்டிருந்தது. இதை ஒரு மாணவனும் மாணவியும் படித்தார்கள். அந்த இளம் மாணவி கருதரிக்க, அவளும் அந்தக் குழந்தைக்குத் தகப்பனும் கருச்சிதைவு செய்துகொள்ள தீர்மானித்தனர். ஆனால் இந்தக் கட்டுரை அவர்களை யோசிக்கச் செய்தது. இதன் பலனாக, தங்களுடைய குழந்தையைப் பெற்றெடுக்க தீர்மானித்தனர்.
அண்மையில் அந்த மனிதன் யெகோவாவின் சாட்சிகளால் சந்திக்கப்பட்டான். அப்பொழுது அவன் சொன்னதாவது: “உங்கள் பைபிள் இலக்கியங்களுக்கு நான் உயர்ந்த மதிப்பைக் கொண்டிருக்கிறேன். எங்களை அசைவித்த அந்தக் கட்டுரையால்தான் நாங்கள் இன்று நேசிக்கும் 13 வயது மகளின் பெற்றோராக இருப்பதில் பெருமைப்படுகிறோம்!”
வேதப்பூர்வமான ஒரு வழியை மேற்கொண்டது உண்மையிலேயே அவர்களுக்கு நல்ல பலனைக் கொடுத்தது.