கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?
நவம்பர் 1, 1755. காலை நேரம். போர்ச்சுகலில் உள்ள லிஸ்பன் நகரம் ஒரு பூகம்பத்தால் சின்னாபின்னமானது. அடுத்தடுத்து ஏற்பட்ட சுனாமியும், நெருப்பும் அந்த நகரத்தைச் சூறையாடின. ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்தன.
ஹெய்டியில் 2010-ல் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு கனடாவின் நேஷனல் போஸ்ட் செய்தித்தாளின் தலையங்கம் இவ்வாறு சொன்னது: “லிஸ்பனில் ஏற்பட்ட பூகம்பத்தைப் போலவே ஹெய்டியிலும் மற்ற இடங்களிலும் ஏற்படுகிற பயங்கரமான பூகம்பங்கள், கடவுள்மீது மனிதர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஆட்டங்காணச் செய்திருக்கின்றன. வேறெந்த துன்பமும் அந்த நம்பிக்கையை இந்தளவுக்கு உரசிப் பார்த்ததில்லை.” முடிவாக அந்தக் கட்டுரை, “கடவுள் ஹெய்டியை கைவிட்டுவிட்டார்” என்று குறிப்பிட்டது.
‘சர்வவல்லவரான’ யெகோவா தேவன் எல்லையில்லா சக்தி படைத்தவர். மனிதர்களின் துன்பங்களை அவரால் துடைத்தழிக்க முடியும். (சங்கீதம் 91:1) அதோடு, அவர் நம்மீது அக்கறையும் வைத்திருக்கிறார். அது நமக்கு எப்படித் தெரியும்?
கடவுள் எப்படிப்பட்டவர்?
துன்பப்படுகிறவர்கள்மீது இரக்கம் காட்டுகிறவர். எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் மக்களின் துன்பத்தைப் பார்த்த கடவுள், “என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்” என்று மோசேயிடம் சொன்னார். (யாத்திராகமம் 3:7) “அவர்கள் பட்ட கஷ்டங்களைப் பார்த்து வேதனைப்பட்டார்” என்று பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு வாழ்ந்த தீர்க்கதரிசியான ஏசாயாவும் எழுதினார். (ஏசாயா 63:9, NW) இது எதைக் காட்டுகிறது? மனிதர் படும் துயரங்களைக் கடவுள் கண்டுகொள்ளாமல் இருப்பதில்லை.
“அவர் வழிகளெல்லாம் நியாயம்.” (உபாகமம் 32:4) கடவுள் நீதிநியாயம் உள்ளவர்; யாரிடமும் பாரபட்சம் காட்டமாட்டார். அவர் “தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.” அதோடு, நல்லவர்களை “உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு அவர் உபத்திரவத்தைக் கொடுப்பார்.” (நீதிமொழிகள் 2:8; 2 தெசலோனிக்கேயர் 1:6, 7) “தலைவர்களை அவர் ஓரவஞ்சனையால் நடத்துகிறதில்லை, ஏழைகளைவிடச் செல்வர்களை அவர் மிகுதியாய் மதிக்கிறதில்லை. ஏனெனில் அவர்களனைவரும் அவருடைய கைவேலைகளே.” (யோபு 34:19, ஈஸி டு ரீட் வர்ஷன்) மனிதர்களின் துன்பங்களை எப்படிப் போக்குவது எனக் கடவுளுக்குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால், துன்பங்களைப் போக்க மனிதர்கள் எடுக்கிற முயற்சிகள் எல்லாம், குண்டடிபட்ட காயத்திற்கு ‘பேன்டேஜ்’ போடுவதைப் போலிருக்கிறது. ‘பேன்டேஜ்’ போட்டால் காயம் வெளியே தெரியாமல் மறையுமே தவிர, உள்ளே கொஞ்சம்கூட குணமாகாது, வலியும் தீராது.
கடவுள் “இரக்கமும், கிருபையும், . . . மகா தயையும்” உள்ளவர். (யாத்திராகமம் 34:6) பைபிளில் “இரக்கம்” என்ற வார்த்தை, கஷ்டப்படுகிறவரைப் பார்க்கும்போது ஒருவருடைய மனதில் சுரக்கும் அனுதாபத்தையும் கருணையையும் குறிக்கிறது; கஷ்டப்படுகிறவருக்கு உதவ இந்தக் குணங்கள் அவரைத் தூண்டுகின்றன. “கிருபை” என்பதற்கான எபிரெய மூலவார்த்தை, “கஷ்டப்படுகிற ஒருவரைப் பார்க்கும்போது, அவருக்கு எதையாவது செய்ய வேண்டுமென மனதார விரும்புவதை” அர்த்தப்படுத்துகிறது. தியோலாஜிக்கல் டிக்ஷனரி ஆஃப் தி ஓல்ட் டெஸ்டமென்ட் சொல்கிறபடி, “மகா தயை” என்பதற்கான மூல வார்த்தை “துன்பமோ துயரமோ அனுபவிக்கிறவர்களின் சார்பாகச் செயல்படுவது” என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? மனிதர்களுடைய கஷ்டங்களைப் பார்த்து யெகோவா வேதனைப்படுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. இரக்கம், கிருபை, மகா தயை போன்ற தம்முடைய குணங்களைக் காட்டி அவர்களுக்கு உதவியும் செய்கிறார். எனவே, துன்பங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைப்பார் என நாம் நூற்றுக்கு நூறு நம்பலாம்.
இன்று மனிதர்கள் படும் கஷ்டங்களுக்கான மூன்று காரணங்களைப் பற்றிப் போன கட்டுரையில் பார்த்தோம். துன்பங்களுக்குக் கடவுள் காரணமல்ல என்பதை அவை தெளிவாகக் காட்டின. அப்படியானால், அந்த மூன்று காரணங்களுக்கான ஆரம்பப் புள்ளியைக் கவனிப்போமா? (g11-E 07)
சொந்தத் தீர்மானம்
ஆரம்பத்தில், ஆதாம் கடவுளுடைய ஆட்சியின் கீழ் இருந்தான். என்றாலும், கடவுளின் ஆட்சி வேண்டுமா இல்லையா என்று தீர்மானம் எடுக்க வாய்ப்பு கிடைத்தபோது கடவுளுடைய அரசாட்சியை வேண்டாமென்று உதறித் தள்ளினான். இதனால் வரும் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தன் இஷ்டப்படி வாழ விரும்பினான். “சாகவே சாவாய்” என்று ஆதியாகமம் 2:17–ல் யெகோவா கொடுத்த எச்சரிப்பை அசட்டை செய்தான். இப்படி, கடவுளுடைய பரிபூரண ஆட்சியை நிராகரித்ததால் பாவமும் அபூரணமும் வந்தது. அதனால்தான், “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது” என்று பைபிளும் சொல்கிறது. (ரோமர் 5:12) ஆனால், பாவத்தின் விளைவுகளைக் கடவுள் நிச்சயம் நீக்குவார்.
எதிர்பாரா சம்பவங்கள்
மேலே பார்த்தபடி, முதல் மனிதனாகிய ஆதாம், கடவுளுடைய வழிநடத்துதலை வேண்டாமென்று தள்ளிவிட்டான். மனிதர்கள் பாதுகாப்பாக வாழ, இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படாமல் இருக்க, இந்த வழிநடத்துதல் அத்தியாவசியம். அவன் எடுத்த தீர்மானம் எப்படியிருந்தது என்றால், அனுபவமும் திறமையும் உள்ள ஒரு மருத்துவரின் கவனிப்பை ஒரு நோயாளி ஒதுக்கித் தள்ளுவது போல் இருந்தது. அந்த நோயாளிக்கு வந்திருக்கிற நோய் எவ்வளவு கொடியது, அதன் பாதிப்புகள் என்னவென்று மருத்துவருக்கு மட்டுமே தெரியும், நோயாளிக்குத் தெரியாது. எனவே, மருத்துவரின் ஆலோசனையை அந்த நோயாளி வேண்டுமென்றே ஒதுக்கித் தள்ளினால், அதன் பின்விளைவுகளை அவர்தான் அனுபவித்தாக வேண்டும். அதைப்போலவே, இன்று மனிதர்கள் பூமியைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்; விதிமுறைகளை மீறி கட்டடங்களைக் கட்டுகிறார்கள், இயற்கைச் சக்திகளின் எச்சரிப்புகளை அசட்டை செய்கிறார்கள்; இவையே இயற்கைப் பேரழிவுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. என்றாலும், கடவுள் இவற்றை ரொம்ப நாட்களுக்கு அனுமதிக்கமாட்டார்.
“இந்த உலகத்தை ஆளுகிறவன்”
சாத்தான் கலகம் செய்த பின்னும் இந்த உலகத்தை ஆட்சி செய்ய கடவுள் ஏன் அவனை அனுமதித்தார்? “புதிதாக ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் ஆரம்பத்தில் வருகிற பிரச்சினைகளுக்கு முந்தைய ஆட்சியைத்தான் குற்றம்சாட்டும்” என்பதாக ஒரு புத்தகம் சொல்கிறது. “இந்த உலகத்தை ஆளுகிற” சாத்தானை யெகோவா ஆரம்பத்திலேயே ஆட்சியிலிருந்து தூக்கியிருந்தால் அவன் தன்னுடைய இயலாமைக்குக் காரணம் முந்தின ஆட்சியாளரான கடவுள்தான் என்று குற்றம் சுமத்தியிருப்பான். (யோவான் 12:31) தன் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த உலகத்தை ஆட்சி செய்ய சாத்தானுக்குப் போதுமான கால அவகாசத்தைக் கடவுள் அனுமதித்தார். என்றாலும், அவனுடைய ஆட்சி முற்றிலும் தோல்வியடைந்திருப்பதால் அவன் ஆட்சி செய்ய தகுதியற்றவன் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், துன்பங்களுக்கு ஒரு முடிவு வரும் என்பதை நாம் எப்படி நம்பலாம்?