முக்கியமானதற்கே முதலிடம்!
மீட்டிங் நாள், வேலையோ தலைக்குமேல். எதற்கு முதலிடம் கொடுப்பீர்கள்?
நீங்கள் ஒரு கணவராகவும் தகப்பனாகவும் இருக்கிறீர்கள். வேலை உங்களை சக்கையாக பிழிந்தெடுத்துவிட்டதால் அந்த நாளில் களைப்படைந்திருக்கிறீர்கள். மாலை நடக்கவிருக்கும் சபைக் கூட்டத்தைப் பற்றிய சிந்தனை உங்கள் மனத்திரையில் ஓடுகிறது. நீங்கள் சட்டுபுட்டென்று கிளம்பினால்தான் வீட்டுக்குப் போய் ஒரு குளியல்போட்டு, உடைமாற்றி, வாயில் இரண்டு பருக்கையை அள்ளிப்போட்டுக் கொண்டு ஓட சரியாக இருக்கும். திடீரென்று முதலாளி உங்கள் முன்னால் தோன்றுகிறார். ஓவர் டைம் செய்யுங்கள், ஜாஸ்தி பணம் தருகிறேன் என்று சொல்கிறார். உங்களுக்கோ அந்தப் பணம் அவசியம்.
அல்லது நீங்கள் ஒரு மனைவியாகவும் தாயாகவும் இருக்கிறீர்கள். இரவு சாப்பாட்டுக்காக அடுப்பை பற்றவைக்கும்போது அயர்ன் செய்யாமல் ஒரு மூலையில் பொதிபோல் கிடக்கிற துணிமணிகளிடம் உங்கள் கவனம் திரும்புகிறது. நாளைக்கு போட்டுக்கொள்ள தேவையான துணிமணிகளும் அதில் கிடக்கிறது. ‘இன்னைக்கு மீட்டிங்குக்கு போனா, எப்ப வந்து இதெல்லாத்தையும் அயர்ன் பண்ணி முடிக்கப்போறேன்?’ என மனசுக்குள்ளே நினைக்கிறீர்கள். கொஞ்ச நாளுக்கு முன்புதான் புதிதாக வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறீர்கள்; அதனால் வேலையும் பார்த்துக்கொண்டு வீட்டையும் கவனிப்பது, அப்பப்பா, இப்பொழுதுதான் கஷ்டம் உங்களுக்கு புரிகிறது.
அல்லது நீ ஒரு பள்ளி மாணவன். உன்னுடைய ரூம் டேபிளில் ஹோம்வொர்க் செய்ய வேண்டிய புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அதெல்லாம் முன்னமே செய்திருக்க வேண்டியவை. நாளை நாளை என்று நாளை கடத்தியதால் இப்போது ஒட்டுமொத்தமாக செய்து முடிக்க வேண்டியதாயிற்று. மீட்டிங் போகாமல் வீட்டிலிருந்து ஹோம்வொர்க்கை எல்லாம் செய்துமுடிக்க அப்பா அம்மாவிடம் பர்மிஷன் கேட்க நீ நினைக்கிறாய்.
எதற்கு நீங்கள் முதலிடம் கொடுப்பீர்கள்? ஓவர் டைமுக்கா? அயர்ன் செய்யவேண்டியதற்கா? ஹோம்வொர்க்குக்கா? மீட்டிங்குக்கா? முக்கியமானதற்கு முதலிடம் என்பது ஆவிக்குரிய கருத்தில் எதை அர்த்தப்படுத்துகிறது? யெகோவா அதை எப்படி கருதுகிறார்?
எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்?
இஸ்ரவேலர்களுக்கு பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டு கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தன; இப்பொழுதோ ஒரு மனிதன் ஓய்வுநாளில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தான். நியாயப்பிரமாணத்தில் இது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டிருந்தது. (எண்ணாகமம் 15:32-34; உபாகமம் 5:12-15) இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களை தீர்ப்பு வழங்க சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? ஆடம்பர வாழ்க்கைக்கு அல்ல, குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்குத்தானே விறகு பொறுக்கினான் என்று விவாதித்து அவனை விட்டு விட்டிருப்பீர்களா? வருஷம் முழுவதும் எத்தனையோ ஓய்வுநாட்கள் வரப்போகுது, ஒரு ஓய்வுநாளை கடைப்பிடிக்கவில்லை என்றால் குடியா முழுகிப்போய்விடும், கொஞ்சம் முன்யோசனையோடு செய்யாததால் ஏதோ ஏற்பட்டுவிட்டது என காரணம்காட்டி மன்னித்து விட்டிருப்பீர்களா?
யெகோவா இதைப் பெரும் தவறாக கருதினார். “கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்” என சொன்னதாக பைபிள் குறிப்பிடுகிறது. (எண்ணாகமம் 15:35) அந்த மனிதன் செய்ததை கடவுள் ஏன் சாதாரண காரியமாக நினைக்கவில்லை?
விறகு பொறுக்குவதற்கும், உணவு, உடை, இருப்பிடம் போன்ற தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கும் மக்களுக்கு ஆறு நாட்கள் இருந்தன. ஏழாவது நாளோ அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டிய நாள். விறகு பொறுக்குவதில் தவறேதுமில்லை; ஆனால் யெகோவாவை வணங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நேரத்தில் அதைச் செய்ததே தவறாகியது. கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கட்டுப்பட்டவர்களாய் இல்லாதபோதிலும், இன்று நம்முடைய வாழ்க்கையில் முக்கியமானதற்கு முதலிடம் கொடுக்க வேண்டியதன் சம்பந்தமாக இந்தச் சம்பவம் நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறதல்லவா?—பிலிப்பியர் 1:10, NW.
வனாந்தரத்தில் 40 வருடங்களைக் கழித்த பிறகு இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க தயாராக இருந்தார்கள். வனாந்தரத்தில் கடவுள் கொடுத்த மன்னாவை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்துப் போய்விட்டதாக சிலர் உணர்ந்தனர்; அறுசுவையுடன் சாப்பிட அவர்கள் ஏங்கி காத்திருந்ததில் ஆச்சரியமேதுமில்லை. அதனால், “பாலும் தேனும் ஓடுகிற” தேசத்தில் நுழைகையில் சரியான நோக்குநிலையுடன் இருக்க உதவுவதற்காக யெகோவா அவர்களிடம் பின்வருமாறு நினைப்பூட்டினார்: “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”—யாத்திராகமம் 3:8; உபாகமம் 8:3.
‘பாலையும் தேனையும்’ பெற இஸ்ரவேலர்கள் கடினமாக வேலை செய்யவேண்டியிருந்தது. அங்கே எதிரிகளை முறியடிக்க வேண்டியிருந்தது, வீடுகளை கட்ட வேண்டியிருந்தது, வயல்களை பயிரிட வேண்டியிருந்தது. இருந்தபோதிலும், ஆவிக்குரிய காரியங்களை தியானிக்க ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்கும்படி யெகோவா ஜனங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். பிள்ளைகளுக்குக் கடவுளுடைய வழிகளை போதிப்பதற்கும் நேரத்தை செலவிட வேண்டியிருந்தது. யெகோவா சொன்னார்: “[என்னுடைய கட்டளைகளை] உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிற போதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசுவீர்களாக.”—உபாகமம் 11:20.
இஸ்ரவேலர்களிலும் இஸ்ரவேலராக மதம் மாறியவர்களிலும் ஆண் மக்கள் ஒவ்வொருவரும் வருடத்திற்கு மூன்று முறை யெகோவாவுக்கு முன்பாக கூடிவரும்படி கட்டளையிடப்பட்டிருந்தனர். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் முழுக் குடும்பமும் ஆவிக்குரிய விதமாக பயனடையும் என்பதை உணர்ந்த அநேக குடும்பத் தலைவர்கள் தங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர். இப்படி எல்லாரும் போய்விட்டால் வீடு வாசலையும் காடு கழனியையும் எதிரியிடமிருந்து யார் பாதுகாப்பார்? யெகோவா இவ்வாறு உறுதியளித்திருந்தார்: “வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை.” (யாத்திராகமம் 34:24) ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கையில் பொருள் சம்பந்தமாக எதையும் இழந்துபோக மாட்டார்கள் என்பதை நம்புவதற்கு இஸ்ரவேலர்களுக்கு விசுவாசம் தேவைப்பட்டது. யெகோவா தாம் சொன்னபடியே செய்தாரா? நிச்சயமாகவே செய்தார்!
தொடர்ந்து ராஜ்யத்தை முதலாவது தேடுங்கள்
எல்லாவற்றிற்கும் முன்பாக ஆவிக்குரிய காரியங்களுக்கே முதலிடம் கொடுக்கும்படி தம்மைப் பின்பற்றினவர்களுக்கு இயேசு போதித்தார். மலைப் பிரசங்கத்தில், தமக்குச் செவிகொடுத்தவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். முதலாவது தேவனுடைய, ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், . . . இவைகளெல்லாம் [அவசியமான பொருள் காரியங்கள் எல்லாம்] உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:31, 33) இயேசுவின் மரணத்திற்குப்பின் வெகு சீக்கிரத்திலேயே, புதிதாக முழுக்காட்டுதல் பெற்ற கிறிஸ்தவர்கள் அந்த அறிவுரையைப் பின்பற்றினார்கள். பொ.ச. 33-ல் எருசலேமில் நடைபெற்ற பெந்தெகொஸ்தே பண்டிகையில் கலந்துகொள்வதற்கு வந்தவர்களில் அநேகர் யூதர்களாகவோ யூத மதத்திற்கு மதம் மாறியவர்களாகவோ இருந்தனர். அவர்கள் அங்கிருந்தபோது எதிர்பாராத ஒன்று சம்பவித்தது. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அவர்கள் கேட்டறிந்தபோது ஏற்றுக்கொண்டனர். புதிதாக அறிந்து கொண்ட விசுவாச மார்க்கத்தைப்பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள ஆர்வமிக்கவர்களாய் எருசலேமிலேயே தங்கிவிட்டனர். கையில் கொண்டுவந்த பொருட்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்துபோக ஆரம்பித்தன; ஆனால் பொருள் சம்பந்தமான காரியங்கள் அவர்களுக்கு அவ்வளவு முக்கியமானவையாக இல்லை. அவர்கள்தான் மேசியாவை கண்டுபிடித்துவிட்டனரே! அவர்களுடைய கிறிஸ்தவ சகோதரர்கள் தங்களிடமிருந்த பொருளுடைமைகளை எல்லாம் பகிர்ந்துகொண்டனர்; இவ்வாறு அவர்கள் அனைவரும் தொடர்ந்து, “அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், . . . ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.”—அப்போஸ்தலர் 2:42.
காலப்போக்கில், தவறாமல் கூட்டங்களுக்கு வருவதன் முக்கியத்துவத்தை கிறிஸ்தவர்களில் சிலர் அசட்டை செய்ய ஆரம்பித்தனர். (எபிரெயர் 10:23-25) ஒருவேளை பொருளாசைமிக்கவர்களாய் மாறியிருக்கலாம்; பண சம்பந்தமாக தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கலாம்; அதனால் ஆவிக்குரிய காரியங்களை அந்தளவுக்குப் பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம். கூட்டங்களைத் தவறவிடாமலிருக்கும்படி தன் சகோதரர்களுக்கு தூண்டுதல் அளித்தப்பின் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாவது: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.”—எபிரெயர் 13:5.
பவுலுடைய அந்த ஆலோசனை காலத்துக்கேற்றதாய் இருந்தது. பவுல் தன்னுடைய கடிதத்தை எபிரெயர்களுக்கு எழுதி ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப்பின், செஸ்டஸ் காலஸின் தலைமையில் வந்த ரோமப் படை எருசலேமை முற்றுகையிட்டது. விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் இந்த எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொண்டனர்: “நீங்கள் அதை . . . காணும் போது, . . . வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன்.” (மாற்கு 13:14-16) நிரந்தரமான வேலையிலோ அல்லது பொருளுடைமைகளிலோ தப்பிப்பிழைத்தல் சார்ந்தில்லை, ஆனால் இயேசுவின் புத்திமதிகளுக்கு கீழ்ப்படிவதிலேயே சார்ந்திருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். பவுலின் புத்திமதிக்கு செவிசாய்த்தவர்களும் ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுத்தவர்களும் வீடு, வேலை, பொக்கிஷம்போல் பாதுகாத்த உடைமைகள் ஆகியவற்றை விட்டுவிட்டு மலைகளுக்கு ஓடிப்போவதை எளிதாக கண்டதில் ஆச்சரியமேதுமில்லை; ஆனால் பண ஆசைமிக்க பெருச்சாளிகளுக்கோ அவற்றை விட்டோடுவது சுலபமாக இருக்கவில்லை.
இன்று சிலர் எப்படி முக்கியமானதற்கே முதலிடம் கொடுக்கின்றனர்
இன்று உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் சகோதரர்களோடு தவறாமல் கூடிவருவதை நெஞ்சார நேசிக்கின்றனர்; அநேகர் கூட்டங்களுக்கு வருவதற்காக பற்பல தியாகங்களைச் செய்கின்றனர். சில இடங்களில், ஷிப்ட் டியூட்டி உள்ள வேலைகளே கிடைக்கின்றன. சனிக்கிழமை இரவுகளை பொழுதுபோக்கிற்கு உபயோகிக்கும் ஒரு சமுதாயத்தில் ஒரு சகோதரர் வசிக்கிறார்; தான் அந்த இரவுகளில் ஷிப்ட் டியூட்டி செய்வதன் மூலம் மீட்டிங் நாட்களில் மற்றவர்கள் தனக்கு பதில் ஷிப்ட் டியூட்டி செய்ய ஏற்பாடு செய்துகொள்கிறார். சில சகோதரர்கள் என்ன செய்கிறார்களென்றால், தங்கள் சபையில் நடக்கும் கூட்டங்களுக்குப் போக முடியாதளவு ஷிப்ட் டியூட்டி இடைஞ்சல் செய்கையில் அருகிலுள்ள மற்றொரு சபைக்கு செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூட்டங்களை அநேகமாக ஒருபோதும் தவறவிடாதவாறு பார்த்துக் கொள்கின்றனர். கனடாவில் புதிதாக கூட்டங்களுக்கு வரும் ஒரு பெண், தேவராஜ்ய ஊழியப் பள்ளி மற்றும் ஊழியக் கூட்டங்களின் முக்கியத்துவத்தை வெகு சீக்கிரத்தில் புரிந்துகொண்டார்; ஆனால், அவருடைய வேலை நேரமும் கூட்ட நேரமும் ஒத்துப்போகவில்லை. எனவே, உடன் வேலை செய்யும் நபரிடம் மீட்டிங் தினங்களில் தனக்காக வேலை செய்யும்படியும் அதற்குத் தன் சம்பளத்திலிருந்து பணம் கொடுத்துவிடுவதாகவும் ஏற்பாடு செய்துகொண்டார்; அதன் பலனாக, முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டங்களுக்கு செல்வதில் இப்போது அவருக்குத் தடையேதுமில்லை.
தீராத வியாதியால் கஷ்டப்படுகிறவர்களும்கூட கூட்டங்களைத் தவறவிடுவது மிக அரிதே. ராஜ்ய மன்றத்திற்கு செல்ல முடியாவிட்டாலும், டெலிபோன் மூலம் அல்லது டேப் செய்யப்பட்ட பேச்சுகளைக் கேட்பதன்மூலம் நிகழ்ச்சிநிரலை அவர்கள் தவறவிடுவதில்லை. ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலம் யெகோவா அளிக்கும் ஆவிக்குரிய காரியங்களுக்கான அவர்களுடைய நன்றியுணர்வு இருதயங்களில் பொங்கி வழிகிறது! (மத்தேயு 24:45, NW) கிறிஸ்தவர்களில் சிலர், வயதான பெற்றோர்களை இரவுபகலாக கவனித்துக் கொள்கின்றனர். ஒரு சகோதரனோ சகோதரியோ இப்படிப்பட்டவருடைய பெற்றோரை கொஞ்ச நேரம் கவனித்துக் கொள்வதன் மூலம் அந்தப் பராமரிப்பாளர் சில சமயங்களில் கூட்டங்களுக்குச் சென்றுவர உதவுகையில் அவர்கள் உண்மையில் வெகுவாக சந்தோஷப்படுகின்றனர்.
முன்னதாகவே திட்டமிடுங்கள்!
பெற்றோர்தாமே ஆவிக்குரிய உணர்வுள்ளவர்களாய் இருக்கையில், கிறிஸ்தவ கூட்டங்களை மதிப்பதற்கு தங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்வார்கள். பொதுவாக, ஹோம்வொர்க் கொடுத்த அன்றே அதை பிள்ளைகள் செய்துமுடிக்கிறார்களா என்று பார்த்துக்கொள்வார்கள்; ஹோம்வொர்க் செய்யாமல் அதை மலைபோல் குவிய அனுமதிக்க மாட்டார்கள். மீட்டிங் நாட்களில் ஸ்கூலிலிருந்து பிள்ளைகள் வந்ததுமே உடனடியாக ஹோம்வொர்க் செய்து முடிக்கிறார்கள். ஹாபிகளும் மற்ற பொழுதுபோக்குகளும் சபைக் கூட்டங்களின் சமயத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது.
ஒரு கணவனாகவும் தகப்பனாகவும் கூட்டங்களுக்கு நீங்கள் முதலிடம் கொடுக்கிறீர்களா? ஒரு மனைவியாகவும் தாயாகவும் கூட்டங்களை தவறவிடாதபடி நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்து முடித்துவிடுகிறீர்களா? ஓர் இளைஞனாக, உங்கள் விஷயத்தில் மீட்டிங்கை முதலிடத்தில் வைத்து ஹோம்வொர்க் செய்கிறீர்களா அல்லது ஹோம்வொர்க்கை முதலிடத்தில் வைத்து மீட்டிங் போகிறீர்களா?
சபைக் கூட்டங்கள் யெகோவாவின் அன்பான ஓர் ஏற்பாடு. அந்த ஏற்பாட்டில் கலந்துகொள்ள நாம் எல்லா விதத்திலும் முயற்சி செய்யவேண்டும். முக்கியமானதற்கு முதலிடம் கொடுக்கையில் யெகோவா உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார்!