கடவுளுடைய மகத்தான பெயரைக் கௌரவப்படுத்துங்கள்
“உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.”—சங். 86:12.
1, 2. கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளைப் போலின்றி, கடவுளுடைய பெயருக்கு யெகோவாவின் சாட்சிகள் எப்படி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்?
பொதுவாக, கடவுளுடைய பெயரைக் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் ஓரங்கட்டிவிட்டன. உதாரணத்திற்கு, ரிவைஸ்டு ஸ்டான்டர்டு வர்ஷன் பைபிளின் முகவுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “ஒரே உண்மைக் கடவுளை எந்தவொரு தனிப்பட்ட பெயரிலும் அழைப்பது . . . உலகளாவிய கிறிஸ்தவ சர்ச்சின் விசுவாசத்திற்குக் கொஞ்சம்கூட பொருந்தாது.”
2 ஆனால், யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் கடவுளுடைய பெயரைத் தாங்கியிருப்பதையும் அதை மகிமைப்படுத்துவதையும் கௌரவமாகக் கருதுகிறோம். (சங்கீதம் 86:12-ஐயும் ஏசாயா 43:10-ஐயும் வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, அந்தப் பெயரின் அர்த்தம் என்ன என்பதையும், அதைப் பரிசுத்தப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதையும் புரிந்திருப்பதைப் பாக்கியமாய் நினைக்கிறோம். (மத். 6:9) என்றாலும், இந்தப் பாக்கியத்தை நாம் ஒருபோதும் அலட்சியமாய்க் கருதக் கூடாது. இப்போது, மூன்று முக்கியமான கேள்விகளைச் சிந்திக்கலாம்: கடவுளுடைய பெயரை அறிந்திருப்பது என்றால் என்ன? யெகோவா தமது மகத்தான பெயருக்கேற்ப செயல்பட்டிருக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்? நாம் எப்படி யெகோவாவின் பெயரில் நடக்கலாம்?
கடவுளுடைய பெயரை அறிந்திருப்பது என்றால் என்ன?
3. கடவுளுடைய பெயரை அறிந்திருப்பது என்றால் என்ன?
3 கடவுளுடைய பெயரை அறிந்திருப்பது என்றால் வெறுமனே “யெகோவா” என்ற பெயரைத் தெரிந்து வைத்திருப்பது அல்ல. மாறாக, யெகோவாவின் புகழை... நோக்கத்தை... குணங்களை... செயல்களை... அதாவது தம்முடைய மக்களை நடத்திய விதங்களை... தெரிந்து வைத்திருப்பதாகும். யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற நிறைவேற்ற... இவற்றையெல்லாம் படிப்படியாக நமக்குப் புரிய வைக்கிறார். (நீதி. 4:18) முதல் மனித ஜோடிக்கு யெகோவா தமது பெயரை வெளிப்படுத்தினார்; ஆகவே, காயீன் பிறந்த சமயத்தில் ஏவாள் அந்தப் பெயரைப் பயன்படுத்தினாள். (ஆதி. 4:1, NW) விசுவாசத்தில் தலைசிறந்து விளங்கிய நம் முன்னோர்களான நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரும் கடவுளுடைய பெயரை அறிந்திருந்தார்கள். அவர்களை யெகோவா கண்ணும்கருத்துமாய்க் கவனித்துக்கொண்டார்... அவர்கள்மீது ஆசீர்வாதத்தைப் பொழிந்தார்... தமது நோக்கத்தின் சில அம்சங்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அதனால், காலங்கள் செல்லச் செல்ல, அவர் எப்படிப்பட்டவர் என்பதை இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டார்கள். பிற்பாடு, மோசே கடவுளுடைய பெயரை விசேஷமான விதத்தில் புரிந்துகொள்ளும் பாக்கியத்தைப் பெற்றார்.
4. கடவுளுடைய பெயரைப் பற்றி மோசே ஏன் கேட்டார், மோசே நினைத்தது நியாயம்தான் என ஏன் சொல்லலாம்?
4 யாத்திராகமம் 3:10-15-ஐ வாசியுங்கள். மோசேக்கு 80 வயதானபோது, கடவுள் அவருக்கு ஒரு பெரும் பொறுப்பைக் கொடுத்தார்; ‘நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவா’ என்றார். அப்போது மோசே அர்த்தம்பொதிந்த ஒரு கேள்வியைக் கடவுளிடம் பணிவுடன் கேட்டார். ஒரு கருத்தில் பார்த்தால், ‘உங்களுடைய பெயர் என்ன?’ என்பதுதான் அந்தக் கேள்வி. கடவுளுடைய பெயரை மனிதர்கள் வெகு காலமாக அறிந்திருந்தார்களே, அப்படியிருக்கும்போது மோசே எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்டார்? அந்தப் பெயருக்குச் சொந்தமானவரைப் பற்றி இன்னும் அதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள அவர் விரும்பினார்; அந்தத் தகவல்களை வைத்து, கடவுள் தங்களை நிச்சயம் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை இஸ்ரவேலருடைய மனதில் விதைக்க முடியும் என்று அவர் நினைத்தார். மோசே அப்படி நினைத்தது நியாயம்தான். ஏனென்றால், இஸ்ரவேலர் பல காலமாக அடிமைகளாய் இருந்தார்கள். தங்கள் முன்னோரின் கடவுளால் தங்களைக் காப்பாற்ற முடியுமா என்று அவர்கள் சந்தேகப்பட்டிருக்கலாம். சொல்லப்போனால், அவர்களில் சிலர் எகிப்திய தெய்வங்களை வழிபட்டுவந்தார்கள்!—எசே. 20:7, 8.
5. மோசே கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது யெகோவா எவ்வாறு தம் பெயரின் அர்த்தத்தை இன்னும் தெளிவாக்கினார்?
5 மோசேயின் கேள்விக்கு யெகோவா என்ன பதில் சொன்னார்? இஸ்ரவேலரிடம் போய், ‘உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடத்துக்கு அனுப்பியிருக்கிறார்’ என்று சொல்லச் சொன்னார்; அதோடு, “‘ஆவேன்’ என்பவர் உங்களிடம் என்னை அனுப்பியிருக்கிறார் என்று சொல்”a (NW) என்றார். இதன் மூலம், தம்மைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரியப்படுத்தினார். அதாவது, தமது நோக்கத்தை நிறைவேற்ற தாம் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறாரோ அப்படியெல்லாம் ஆவார் என்பதைத் தெரியப்படுத்தினார்; எப்போதுமே தம் சொல்லைக் காப்பாற்றுவார் என்பதையும் தெரியப்படுத்தினார். அதனால்தான், “என்றென்றும் இதுவே என் பெயர்; தலைமுறை தலைமுறையாக இப்படித்தான் என்னை நினைவுகூர வேண்டும்” என்று யெகோவா சொன்னதாக 15-ஆம் (NW) வசனத்தில் பார்க்கிறோம். அதைக் கேட்டதும் மோசேயின் இதயத்தில் விசுவாசமும் பயபக்தியும் எந்தளவு அதிகரித்திருக்கும்!
யெகோவா தமது பெயருக்கேற்ப செயல்பட்டார்
6, 7. யெகோவா எவ்வாறு முழுக்க முழுக்க தமது மகத்தான பெயருக்கேற்ப செயல்பட்டார்?
6 மோசேக்குப் பொறுப்பளித்த கொஞ்சக் காலத்திலேயே, யெகோவா முழுக்க முழுக்க தமது பெயருக்கேற்ப செயல்பட்டார்; ஆம், இஸ்ரவேலரின் மீட்பராக ‘ஆனார்.’ பத்துக் கொடிய வாதைகளைக் கொண்டுவந்து எகிப்தை அடிபணிய வைத்தார்; பார்வோனுக்கும் எகிப்தின் மற்ற தெய்வங்களுக்கும் சக்தி இல்லை என்பதை வெட்டவெளிச்சமாக்கினார். (யாத். 12:12) அதன்பின், செங்கடலைப் பிளந்து, அதன் நடுவே இஸ்ரவேலரை நடத்திச் சென்றார்; ஆனால், பார்வோனையும் அவனது படையையும் கடலில் சமாதியாக்கினார். (சங். 136:13-15) கிட்டத்தட்ட 20 அல்லது 30 லட்சத்துக்கும் அதிகமான இஸ்ரவேலருக்கு ‘பயங்கரமான பெரிய வனாந்தரத்தில்’ உணவும் தண்ணீரும் தந்தார்; இவ்வாறு, அவர்களுடைய உயிரைக் காப்பவராக ஆனார். அதுமட்டுமல்ல, அவர்களுடைய உடை கிழிந்துபோகாமலும் காலணி பழையதாகிப்போகாமலும் பார்த்துக்கொண்டார். (உபா. 1:19; 29:5) ஆம், யெகோவா என்ற நிகரற்ற பெயருக்கேற்ப அவர் செயல்படுவதை யாராலும் தடுக்க முடியாது. “நான், நானே யெகோவா; என்னைத் தவிர வேறு மீட்பர் இல்லை” என்று அவர் பிற்பாடு ஏசாயாவிடம் குறிப்பிட்டார்.—ஏசா. 43:11, NW.
7 எகிப்திலும் வனாந்தரத்திலும் யெகோவா செய்த மாபெரும் அற்புதங்களை மோசேக்கு அடுத்துவந்த யோசுவாவும் கண்கூடாகப் பார்த்தார். அதனால், தமது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் சக இஸ்ரவேலரிடம் இவ்வாறு திட நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்: ‘உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.’ (யோசு. 23:14) ஆம், யெகோவா தம் சொல்லைக் காப்பாற்றுபவராக ‘ஆனார்’ என்பதில் சந்தேகமே இல்லை.
8. இன்று யெகோவா எப்படித் தமது பெயருக்கேற்ப செயல்படுகிறார்?
8 இன்றும் யெகோவா தாம் எப்படியெல்லாம் ஆக வேண்டுமென நினைக்கிறாரோ அப்படியெல்லாம் ‘ஆகிறார்.’ கடைசி நாட்களில், தமது அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி “உலகமெங்கும்” பிரசங்கிக்கப்படும் என இயேசு மூலம் முன்னுரைத்தார். (மத். 24:14) சர்வவல்லமையுள்ள தேவனைத் தவிர வேறு யாரால் இந்த வேலையைப் பற்றி முன்னுரைக்க முடியும்? யாரால் இந்த வேலையைச் செய்துமுடிக்க முடியும், அதுவும் “கல்வியறிவு இல்லாத சாதாரண” ஆட்களை வைத்து? (அப். 4:13) ஆகவே, நாம் இந்த வேலையில் ஈடுபடும்போது உண்மையில் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் பங்கு வகிக்கிறோம்; நம் பரலோகத் தகப்பனையும் கௌரவிக்கிறோம். அதோடு, “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்” என்பது நம் உள்ளப்பூர்வமான ஜெபம் எனக் காட்டுகிறோம்.—மத். 6:9, 10.
அவருடைய பெயர் மகத்தானது
9, 10. இஸ்ரவேலரிடம் யெகோவா செயல்பட்ட விதத்திலிருந்து அவரைப் பற்றி நாம் இன்னும் என்ன கற்றுக்கொள்கிறோம்?
9 இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டுவந்த கொஞ்சக் காலத்திலேயே, யெகோவா தம்மைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரியப்படுத்தினார். அவர்களுடன் திருச்சட்ட ஒப்பந்தம் செய்து, ஒரு கணவன் தன் மனைவியைக் கவனித்துக்கொள்வதுபோல் தாம் அவர்களைக் கவனித்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்தார். (எரே. 3:14) இதனால், இஸ்ரவேலர் அவருடைய மனைவியைப்போல் ஆனார்கள்; அவருடைய பெயர் தாங்கிய மக்களாக ஆனார்கள். (ஏசா. 54:5, 6) அவர்கள் மனப்பூர்வமாக அவருக்குக் கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில்... அவர்களை அவர் ஆசீர்வதிப்பார், கண்மணியைப் போல் காப்பார், அவர்களுக்குச் சமாதானத்தை அருளுவார். (எண். 6:22-27) இப்படி, யெகோவாவைப் போல் மகத்தான கடவுள் வேறொருவரும் இல்லை என்பதை எல்லாத் தேசத்தாரும் அறிந்துகொள்வார்கள். (உபாகமம் 4:5-8-ஐயும் சங்கீதம் 86:7-10-ஐயும் வாசியுங்கள்.) இஸ்ரவேலர் கடவுளுடைய மக்களாக இருந்த காலத்தில், அந்நியர் பலர் உண்மை வணக்கத்தாராக மாறினார்கள். நகோமியிடம் மோவாபியப் பெண் ரூத் தெரிவித்த விதமாகவே, “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என அவர்கள் சொல்லாமல் சொன்னார்கள்.—ரூத் 1:16.
10 கிட்டத்தட்ட 1,500 ஆண்டுகளாக இஸ்ரவேலரிடம் யெகோவா செயல்பட்ட விதத்தில், அவருடைய குணாதிசயம் புதுப் புதுக் கோணங்களில் வெளிப்பட்டது. இஸ்ரவேலர் திரும்பத் திரும்ப அவருடைய வழியைவிட்டு விலகியபோதிலும், யெகோவா மிகுந்த இரக்கத்தையும் பொறுமையையும் காட்டினார். (யாத். 34:5-7) என்றாலும், அவரது பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு; அதனால், யூதர்கள் அவரது மகனை ஏற்றுக்கொள்ளாமல் கொலை செய்தபோது அவரது பொறுமை முடிவுக்கு வந்தது. (மத். 23:37, 38) அதன்பின் இஸ்ரவேல் வம்சத்தார் கடவுளுடைய பெயர் தாங்கிய மக்களாக இருக்கவில்லை. சொல்லப்போனால், பட்டுப்போன மரத்தைப் போல ஆனார்கள்; அதாவது, ஆன்மீக ரீதியில் இறந்துபோனார்கள். (லூக். 23:31) அதற்குப் பின்பு கடவுளுடைய பெயரைக் குறித்ததில் அவர்களுடைய கண்ணோட்டம் எப்படி மாறியது?
11. கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதை யூதர்கள் ஏன் நிறுத்திவிட்டார்கள்?
11 கடவுளுடைய பெயர் மிகவும் புனிதமானது... அதை உச்சரிக்கவே கூடாது... என்ற மூடநம்பிக்கையைக் கொஞ்சக் காலத்திற்குப் பின்பு யூதர்கள் வளர்த்துக்கொண்டார்கள். (யாத். 20:7) அதனால், கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டார்கள். இப்படி, அவர்கள் தமது பெயரை அவமதித்ததைக் கண்டு யெகோவா நிச்சயம் விசனப்பட்டிருப்பார். (சங். 78:40, 41) யெகோவா என்ற பெயர் அவருக்கு மிக முக்கியம்; சொல்லப்போனால், அந்தப் பெயரை யாரும் களங்கப்படுத்துவதை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று பைபிள் சொல்கிறது. (யாத். 34:14, NW) அதனால்தான், தமது பெயரை யூதர்கள் அவமதித்தபோது அதைத் தாங்கியிருக்கும் பாக்கியத்தை அவர்களிடமிருந்து பறித்துவிட்டார். நம் படைப்பாளரின் பெயருக்கு மதிப்புமரியாதை கொடுப்பது மிகமிக முக்கியம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது, அல்லவா?
கடவுளுடைய பெயரால் அழைக்கப்படுகிற புதிய மக்கள்
12. தம்முடைய பெயரால் அழைக்கப்படுகிற மக்களை யெகோவா எவ்வாறு தேர்ந்தெடுத்தார்?
12 ஒரு புது தேசத்துடன், அதாவது ஆன்மீக இஸ்ரவேலுடன், “புது உடன்படிக்கை” செய்யப்போவதாக எரேமியா மூலம் யெகோவா சொன்னார். அந்தத் தேசத்தைச் சேர்ந்த “சிறியவன்முதல் பெரியவன்மட்டும்” எல்லோரும் யெகோவாவை “அறிந்துகொள்வார்கள்” என எரேமியா முன்னுரைத்தார். (எரே. 31:31, 33, 34) அந்தப் புது உடன்படிக்கையை எப்போது கடவுள் செய்தார்? கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று செய்தார். யாருடன்? ‘கடவுளுடைய இஸ்ரவேலருடன்’ என பைபிள் சொல்கிறது; இவர்களில் எல்லாத் தேசத்தையும் சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். இவர்களைத்தான், ‘தம்முடைய பெயருக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட மக்கள் தொகுதி’ என யெகோவா குறிப்பிடுகிறார்.—கலா. 6:16; அப்போஸ்தலர் 15:14-17-ஐ வாசியுங்கள்; மத். 21:43.
13. (அ) ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்களா? விளக்குங்கள். (ஆ) ஊழியத்தில் யெகோவாவின் பெயரை அறிவிப்பதை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்?
13 கடவுளுடைய ‘பெயரால் அழைக்கப்படுகிற’ அந்தப் புதிய தேசத்தார் அந்தப் பெயரைப் பயன்படுத்தினார்கள்; உதாரணத்திற்கு, எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டியபோது அந்தப் பெயரைப் பயன்படுத்தினார்கள்.b ஆகவே, கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று யூதர்கள் மற்றும் யூத மதத்திற்கு மாறியவர்கள் முன்னால் அப்போஸ்தலன் பேதுரு சொற்பொழிவாற்றியபோது, கடவுளுடைய பெயரைப் பலமுறை குறிப்பிட்டார். (அப். 2:14, 20, 21, 25, 34) இப்படி, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் யெகோவாவைக் கௌரவித்தார்கள்; அதனால், அவர்களுடைய பிரசங்க வேலையை அவர் ஆசீர்வதித்தார். அதேபோல், நாமும் யெகோவாவின் பெயரை மக்களுக்கு அறிவிக்கும்போது, அதுவும் அவர்களுடைய பைபிளிலிருந்து அந்தப் பெயரைக் காட்டும்போது, அவர் நம் ஊழியத்தை ஆசீர்வதிக்கிறார். நாம் அவருடைய பெயரை அறிவிக்கும்போது உண்மைக் கடவுள் யார் என்பதை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பாக்கியத்தைப் பெறுகிறோம்! அந்தச் சந்தர்ப்பம்தானே சிலருக்கு யெகோவாவோடு ஓர் அற்புத பந்தம் உருவாவதற்கு ஆரம்பப் படியாக அமையலாம்; ஆம், மேன்மேலும் பலமாகிற ஒரு பந்தம்... என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு பந்தம்... உருவாவதற்கு ஆரம்பப் படியாக அமையலாம்.
14, 15. விசுவாசதுரோகம் தலைதூக்கியபோதிலும் தமது பெயர் அழியாதபடி யெகோவா எவ்வாறு பாதுகாத்திருக்கிறார்?
14 பிற்பாடு, கிறிஸ்தவச் சபையில் விசுவாசதுரோகம் தலைதூக்க ஆரம்பித்தது, குறிப்பாக அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பின்பு. (2 தெ. 2:3-7) யூதர்களுடைய பாரம்பரியத்தைப் பின்பற்றிய பொய்ப் போதகர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். ஆனால், தமது பெயர் சுவடு தெரியாமல் அழிந்துபோவதற்கு யெகோவா அனுமதிப்பாரா? ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்! அதன் சரியான உச்சரிப்பு இன்று நமக்குத் தெரியாது என்றாலும் அந்தப் பெயர் அழியாமல் இன்றுவரை நிலைத்திருக்கிறது. பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகளிலும் பைபிள் அறிஞர்களுடைய பல நூல்களிலும் அந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, கடவுளுக்குப் பல பட்டப்பெயர்கள் இருந்தாலும் “யெகோவா” என்ற பெயர் “அவருடைய குணாதிசயத்தை ஒப்பற்ற விதத்தில் எடுத்துக்காட்டுகிறது” என 1757-ல் சார்ல்ஸ் பீட்டர்ஸ் எழுதினார். கடவுளை வழிபடுவது சம்பந்தமாக ஹாப்டன் ஹேனஸ் 1797-ல் வெளியிட்ட புத்தகத்தில், 7-ஆம் அதிகாரத்தின் ஆரம்பத்தில் இவ்வாறு எழுதினார்: “யெகோவா என்பது யூதர்களின் கடவுளுடைய பெயர்; யெகோவாவை மட்டுமே அவர்கள் வணங்கினார்கள்; கிறிஸ்துவும் அவரது அப்போஸ்தலர்களும்கூட அப்படித்தான் செய்தார்கள்.” ஹென்றி க்ரூ (1781-1862) என்பவர் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், அது களங்கப்பட்டிருக்கிறது என்றும் அது புனிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதேபோல், நெருங்கிய நண்பர்களாய் இருந்த ஜார்ஜ் ஸ்டார்ஸும் (1796-1879) சார்ல்ஸ் டி. ரஸலும்கூட கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்கள்.
15 1931-ஆம் ஆண்டு கடவுளுடைய மக்களுக்குக் குறிப்பிடத்தக்க ஒரு ஆண்டு; ஏனென்றால், சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் என அழைக்கப்பட்ட அவர்கள், அந்த ஆண்டில்தான் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றார்கள். (ஏசா. 43:10-12) இப்படி, ‘அவருடைய பெயருக்கென்ற மக்களாக’ இருப்பதில், அந்தப் பெயரைப் போற்றிப் புகழ்வதில், தாங்கள் பெருமிதம் கொள்வதை உலகத்திற்கு அறிவித்தார்கள். (அப். 15:14) “சூரியன் உதிக்கிற திசை தொடங்கி அது அஸ்தமிக்கிற திசை வரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்” என மல்கியா 1:11-ல் யெகோவா குறிப்பிட்டிருப்பதை இந்தச் சம்பவங்கள் நமக்கு நினைப்பூட்டுகின்றன.
யெகோவாவின் பெயரில் நடவுங்கள்
16. யெகோவாவின் பெயரில் நடப்பதை நாம் ஏன் கௌரவமாக நினைக்க வேண்டும்?
16 தீர்க்கதரிசியாகிய மீகா இவ்வாறு எழுதினார்: ‘சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய யெகோவாவின் நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.’ (மீ. 4:5) யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை பைபிள் மாணாக்கர்கள் சூட்டிக்கொண்டது அவர்களுக்குப் பெரிய கௌரவமாக மட்டுமல்ல, யெகோவாவிடமிருந்து கிடைத்த அங்கீகாரமாகவும் இருந்தது. (மல்கியா 3:16-18-ஐ வாசியுங்கள்.) இப்போது, உங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? ‘யெகோவாவின் நாமத்தில் நடக்க’ நீங்கள் முழுமுயற்சி எடுக்கிறீர்களா? கடவுளுடைய பெயரில் நடக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்திருக்கிறீர்களா?
17. கடவுளுடைய பெயரில் நடக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
17 கடவுளுடைய பெயரில் நடக்க குறைந்தபட்சம் மூன்று காரியங்களை நாம் செய்ய வேண்டும். முதலாவதாக, நாம் அந்தப் பெயரை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும், ஏனென்றால் ‘யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறவர்கள்’ மட்டுமே ‘மீட்புப் பெறுவார்கள்.’ (ரோ. 10:13) இரண்டாவதாக, யெகோவாவின் குணங்களை, முக்கியமாக அன்பை, நாம் காட்ட வேண்டும். மூன்றாவதாக, அவருடைய பரிசுத்த பெயருக்குக் களங்கம் ஏற்படாதவாறு அவரது நெறிமுறைகளைச் சந்தோஷத்துடன் கடைப்பிடிக்க வேண்டும். (1 யோ. 4:8; 5:3) கடவுளாகிய ‘யெகோவாவின் நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடக்க’ நீங்கள் தீர்மானமாய் இருக்கிறீர்களா?
18. யெகோவாவின் மகத்தான பெயரைக் கௌரவிக்கும் அனைவரும் ஏன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள்?
18 யெகோவாவை அவமதிக்கிற அல்லது எதிர்க்கிற எல்லோரும் அவர் யாரென்று உணர்ந்துகொள்கிற காலம் சீக்கிரம் வரும். (எசே. 38:23) ‘யெகோவாவின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்?’ என்று கேட்ட பார்வோன் அதைச் சீக்கிரத்தில் உணர்ந்துகொண்டான்; இன்று அவனைப் போன்ற மனநிலையைக் காட்டுகிற ஆட்களும் அதை உணர்ந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுவார்கள். (யாத். 5:1, 2; 9:16; 12:29) நாமோ, யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்ள மனப்பூர்வமாக முன்வந்திருக்கிறோம். அவருடைய பெயரைத் தாங்கியிருக்கும் மக்களாக... கீழ்ப்படிதலுள்ள மக்களாக... இருப்பதைப் பெருமையாக நினைக்கிறோம். ஆகையால், ‘யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்’ என்று சங்கீதம் 9:10-ல் சங்கீதக்காரன் சொன்ன வாக்குறுதிக்கு இசைவாக எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.
a கடவுளுடைய பெயர், “ஆகு” என்ற அர்த்தமுள்ள ஒரு எபிரெய வினைச்சொல்லாகும். ஆகவே, “யெகோவா” என்றால் “ஆகும்படி செய்கிறவர்” என அர்த்தம்.—ஆதி. 2:4, NW அடிக்குறிப்பு.
b ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய எபிரெய வேதாகமத்தில் கடவுளுடைய பெயர் நான்கெழுத்து வடிவத்தில் காணப்பட்டது. அதன் கிரேக்க மொழிபெயர்ப்பாகிய செப்டுவஜின்ட்டின் ஆரம்பப் பிரதிகளில்கூட அந்தப் பெயர் இருந்ததாக அத்தாட்சிகள் காட்டுகின்றன.