படிப்புக் கட்டுரை 48
‘நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’
“உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்.”—1 பே. 1:15.
பாட்டு 34 உத்தம பாதையில் செல்வேன்
இந்தக் கட்டுரையில்...a
1. அன்றைக்கு இருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு என்ன ஆலோசனை கொடுத்தார், அவர் கொடுத்த ஆலோசனை நமக்கு ஏன் கஷ்டமாகத் தோன்றலாம்?
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு இப்படி எழுதினார்: “உங்களை அழைத்தவர் பரிசுத்தமானவராக இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள். ‘நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருக்கிறதே.” (1 பே. 1:15, 16) பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு மட்டுமல்ல, பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களுக்கும் இந்த ஆலோசனை ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். பரிசுத்தமே உருவான யெகோவாவைப் போல் நாமும் பரிசுத்தமாக இருக்க முடியும் என்பதை இந்த ஆலோசனையிலிருந்து தெரிந்துகொள்கிறோம். அப்படியென்றால், நாம் கண்டிப்பாக பரிசுத்தமாக இருக்க வேண்டும். நம்மால் அப்படிப் பரிசுத்தமாக இருக்கவும் முடியும். பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், பரிசுத்தமாக இருக்க நம்மால் முடியாது என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், பேதுருவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவரும் சில தவறுகளைச் செய்திருக்கிறார். இருந்தாலும், ‘பரிசுத்தமாக இருக்க முடியும்’ என்பதை அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
2. இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வோம்?
2 பரிசுத்தமாக இருப்பது என்றால் என்ன? யெகோவாவின் பரிசுத்தத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? நம்முடைய நடத்தை எல்லாவற்றிலும் நாம் எப்படிப் பரிசுத்தமாக இருக்க முடியும்? பரிசுத்தமாக இருப்பதற்கும் யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்திற்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் தெரிந்துகொள்வோம்.
பரிசுத்தமாக இருப்பது என்றால் என்ன?
3. பரிசுத்தமாக இருக்கிற ஒருவர் எப்படி இருப்பார் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள், ஆனால், அதைப் பற்றி நாம் எங்கிருந்து தெரிந்துகொள்ள முடியும்?
3 பரிசுத்தமானவர் என்ற வார்த்தையைக் கேட்டாலே, முகத்தில் சந்தோஷமே இல்லாமல், ஏதாவது மதத்தை அடையாளப்படுத்துகிற உடையைப் போட்டுக்கொண்டிருக்கிற ஒருவர்தான் நிறையப் பேருக்கு ஞாபகம் வரும். ஆனால், பரிசுத்தமானவர்கள் இப்படித்தான் இருப்பார்களா? இல்லை. ஏனென்றால், பரிசுத்தமான கடவுளாகிய யெகோவாவை “சந்தோஷமுள்ள கடவுள்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீ. 1:11) அவரை வணங்குகிறவர்களும் “சந்தோஷமானவர்கள்” என்று அது சொல்கிறது. (சங். 144:15) விசேஷமான உடைகளை உடுத்திக்கொண்டு மற்றவர்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக நல்லது செய்தவர்களை இயேசு கண்டித்தார். (மத். 6:1; மாற். 12:38) பரிசுத்தமாக இருப்பது என்றால் என்ன என்பது உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நமக்கு நன்றாகத் தெரியும். அதைப் பற்றி நாம் பைபிளிலிருந்து தெரிந்துவைத்திருக்கிறோம். யெகோவா அன்பான கடவுள். நம்மால் முடியாத ஒரு விஷயத்தைச் செய்யும்படி அவர் சொல்ல மாட்டார் என்றும் நாம் உறுதியாக நம்புகிறோம். அதனால், ‘நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’ என்று அவர் சொல்லியிருக்கிறார் என்றால் நிச்சயம் நம்மால் அப்படியிருக்க முடியும். ஆனால், பரிசுத்தமாக இருப்பது என்றால் என்ன என்பது தெரிந்தால்தானே நம்மால் நம்முடைய நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க முடியும்! அதனால், முதலில் அதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
4. பரிசுத்தமாக இருப்பது என்றால் என்ன?
4 பைபிளைப் பொறுத்தவரை ‘பரிசுத்தமாக இருப்பது’ என்றால், ஒழுக்க விஷயத்திலும் வணக்க விஷயத்திலும் சுத்தமாக இருப்பது அல்லது புனிதமாக இருப்பது என்று அர்த்தம். அதோடு, கடவுளுடைய வேலைக்காக பிரித்து வைக்கப்படுவது என்ற அர்த்தமும் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், நாம் ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருந்தால்... யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி அவரை வணங்கினால்... அவரோடு ஒரு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொண்டால்... பரிசுத்தமாக இருக்கிறோம் என்று அர்த்தம். பரிசுத்தமே உருவான யெகோவா, பாவ இயல்புள்ள நம்மோடு நட்பை வளர்த்துக்கொள்ள ஆசைப்படுவதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?
“யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்”
5. யெகோவாவைப் பற்றி உண்மையுள்ள தேவதூதர்களிடமிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?
5 யெகோவாவின் சிம்மாசனத்துக்குப் பக்கத்திலிருந்து சேவை செய்கிற சேராபீன்களில் சிலர், “பரலோகப் படைகளின் யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். (ஏசா. 6:3) யெகோவா எந்தளவு பரிசுத்தமானவர், புனிதமானவர் என்று இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம். யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், தேவதூதர்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். சொல்லப்போனால், அவர்கள் பரிசுத்தமாகத்தான் இருக்கிறார்கள். அதனால்தான், யெகோவாவின் செய்தியைச் சொல்வதற்கு தேவதூதர்கள் பூமிக்கு வந்தபோதெல்லாம் அந்த இடமே பரிசுத்தமாக ஆனது. உதாரணத்துக்கு, கொழுந்துவிட்டு எரிகிற முட்புதரின் நடுவிலிருந்து ஒரு தேவதூதர் மோசேயிடம் பேசியபோது, அந்த இடமே பரிசுத்தமாக ஆனது.—யாத். 3:2-5; யோசு. 5:15.
6-7. (அ) யாத்திராகமம் 15:1, 11 சொல்கிறபடி, கடவுள் பரிசுத்தமானவர் என்ற விஷயத்தை இஸ்ரவேலர்களின் மனதில் மோசே எப்படிப் பதிய வைத்தார்? (ஆ) கடவுள் பரிசுத்தமானவர் என்பது இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் எப்படித் தெரிந்திருக்கும்? (அட்டைப் படம்)
6 இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடந்துவந்த பின்பு, தங்களுடைய கடவுளாகிய யெகோவா பரிசுத்தமானவர் என்பதை மோசே அவர்களுடைய மனதில் பதியவைத்தார். (யாத்திராகமம் 15:1-யும் 11-யும் வாசியுங்கள்.) ஏனென்றால், பொய் தெய்வங்களை வணங்கிய எகிப்து மக்கள் பரிசுத்தமானவர்களாக இருக்கவில்லை. இஸ்ரவேல் மக்கள் போகவிருந்த கானான் தேசத்து மக்களும் பரிசுத்தமானவர்கள் கிடையாது. அவர்கள் தங்களுடைய தெய்வங்களைக் கும்பிட்டபோது, பிள்ளைகளைப் பலிகொடுத்தார்கள், ஒழுக்கங்கெட்ட விஷயங்களைச் செய்தார்கள். (லேவி. 18:3, 4, 21-24; உபா. 18:9, 10) ஆனால், யெகோவா தன்னை வணங்குபவர்களிடம் இப்படிப்பட்ட அருவருப்பான விஷயங்களைச் செய்யும்படி சொல்வது கிடையாது. அவர் ரொம்ப பரிசுத்தமானவர். தலைமைக் குருவின் தலைப்பாகையில் கட்டப்பட்டிருந்த தங்கத் தகட்டில் “யெகோவா பரிசுத்தமே உருவானவர்” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. இது யெகோவா எந்தளவு பரிசுத்தமானவர் என்பதைத் தெளிவாகக் காட்டியது.—யாத். 28:36-38.
7 அந்தத் தங்கத் தகட்டைப் பார்க்கிற ஒருவருக்கு யெகோவா உண்மையிலேயே பரிசுத்தமானவர் என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும். ஆனால், தலைமைக் குருவைப் பார்க்க முடியாத ஒருவருக்கு அந்தத் தங்கத் தகட்டில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாதே! அப்படியென்றால், யெகோவா பரிசுத்தமானவர் என்பது அவருக்குத் தெரியாமல் போயிருக்குமா? இல்லை. ஏனென்றால், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்று எல்லார் முன்பும் திருச்சட்டம் வாசிக்கப்பட்டபோது, இஸ்ரவேலர்கள் எல்லாருடைய காதிலும் யெகோவா பரிசுத்தமானவர் என்ற வார்த்தைகள் விழுந்திருக்கும். (உபா. 31:9-12) நீங்கள் அங்கே இருந்திருந்தால், இந்த வார்த்தைகள் உங்கள் காதிலும் விழுந்திருக்கும்: “நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நான் பரிசுத்தமானவர். அதனால் நீங்களும் . . . பரிசுத்தமாக இருக்க வேண்டும்.” “யெகோவாவாகிய நான் பரிசுத்தமாக இருப்பதால், நீங்களும் என்முன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.”—லேவி. 11:44, 45; 20:7, 26.
8. லேவியராகமம் 19:2-லிருந்தும் 1 பேதுரு 1:14-16-லிருந்தும் நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
8 இப்போது நாம் லேவியராகமம் 19:2-ல் இருக்கிற விஷயத்தைப் பார்க்கலாம். அதில் யெகோவா மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’” என்று சொன்னார். ‘நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’ என்று கிறிஸ்தவர்களிடம் பேதுரு சொன்னபோது லேவியராகமம் 19:2-ல் இருக்கிற வார்த்தைகளை அவர் எடுத்துச் சொல்லியிருக்கலாம். (1 பேதுரு 1:14-16-ஐ வாசியுங்கள்.) நாம் இன்றைக்கு திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், பேதுரு சொன்ன வார்த்தைகளிலிருந்து ஒரு விஷயத்தை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம். யெகோவா பரிசுத்தமானவராக இருப்பதால் அவரை நேசிக்கிறவர்களும் பரிசுத்தமாக இருப்பதற்கு கடினமாக முயற்சி செய்ய வேண்டும். நமக்கு பரலோகத்தில் வாழும் நம்பிக்கையிருந்தாலும் சரி, பூஞ்சோலை பூமியில் வாழும் நம்பிக்கையிருந்தாலும் சரி, பரிசுத்தமாக இருப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.—1 பே. 1:4; 2 பே. 3:13.
“உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்”
9. லேவியராகமம் 19-ஆம் அதிகாரம் நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?
9 பரிசுத்தமான கடவுளாகிய யெகோவாவைச் சந்தோஷப்படுத்த நாம் விரும்புகிறோம். அதனால், பரிசுத்தமாக நடந்துகொள்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம். அதற்கு உதவும் சில அருமையான ஆலோசனைகளை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். அது லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் இருக்கிறது. “இந்த அதிகாரம் லேவியராகமம் புத்தகத்தில் மட்டுமல்ல, பைபிளில் இருக்கிற முதல் ஐந்து புத்தகங்களிலேயே ரொம்ப முக்கியமான அதிகாரமாக இருந்திருக்கலாம்” என்று எபிரெய அறிஞர் மார்கஸ் காலிஷ் எழுதினார். லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில், ‘நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’ என்று சொன்ன பின்புதான், யெகோவா சில ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார். நாம் எந்தெந்த விதங்களில் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள இந்த அதிகாரத்திலிருந்து சில வசனங்களை இப்போது பார்க்கலாம்.
10-11. நாம் என்ன செய்ய வேண்டுமென்று லேவியராகமம் 19:3-ன் ஆரம்ப வார்த்தைகள் காட்டுகின்றன, அது ஏன் முக்கியம்?
10 ‘நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’ என்று இஸ்ரவேல் ஜனங்களிடம் யெகோவா சொன்ன பிறகு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய அம்மா அப்பாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். . . . நான் உங்கள் கடவுளாகிய யெகோவா” என்றும் சொன்னார்.—லேவி. 19:2, 3.
11 அப்பா அம்மாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று கடவுள் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிவது ரொம்ப முக்கியம். “முடிவில்லாத வாழ்வைப் பெற என்ன நல்ல காரியங்களை நான் செய்ய வேண்டும்?” என்று ஒருவன் கேட்டபோது, இயேசு அவனுக்குக் கொடுத்த பதிலில் அப்பா அம்மாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதையும் சொன்னார். (மத். 19:16-19) பரிசேயர்களும் வேத அறிஞர்களும் தங்களுடைய அப்பா அம்மாவைக் கவனிக்கும் பொறுப்பைத் தட்டிக்கழிக்க தங்களால் முடிந்ததையெல்லாம் செய்தார்கள். ‘இப்படி கடவுளுடைய வார்த்தையை மதிப்பற்றதாக’ ஆக்கினார்கள். அதனால், இயேசு அவர்களைக் கண்டித்தார். (மத். 15:3-6) “கடவுளுடைய வார்த்தை” என்று இயேசு சொன்னபோது, பத்துக் கட்டளைகளில் ஐந்தாவது கட்டளையும் லேவியராகமம் 19:3-ம் அவருடைய மனதில் இருந்திருக்கலாம். (யாத். 20:12) மறுபடியும் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். லேவியராகமம் 19:3-ல், அப்பா அம்மாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று சொல்வதற்கு முன்பு, “நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
12. லேவியராகமம் 19:3-ல் கொடுத்திருக்கிற ஆலோசனைக்கு நாம் எப்படிக் கீழ்ப்படியலாம்?
12 அப்பா அம்மாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று யெகோவா கொடுத்த கட்டளையை மனதில் வைத்துக்கொண்டு, ‘இந்த விஷயத்தில நான் எப்படி நடந்துக்கறேன்?’ என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ளலாம். அவர்களை இன்னும் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அப்படியென்றால், முடிந்துபோனதை யோசித்துக்கொண்டிருக்காதீர்கள். இனிமேல் அவர்களை நன்றாக கவனித்துக்கொள்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசித்துப்பாருங்கள். ஒருவேளை, நீங்கள் அவர்களோடு நேரம் செலவு செய்யலாம். அவர்களுக்குப் பண உதவி செய்யலாம். அவர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம். யெகோவாவை வணங்குவதற்கும் அவரோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வதற்கும் உதவலாம். அவர்களிடம் ஆறுதலாகப் பேசலாம். அவர்களை உற்சாகப்படுத்தலாம். இவற்றையெல்லாம் நீங்கள் செய்யும்போது, லேவியராகமம் 19:3-ல் இருக்கிற ஆலோசனைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்று அர்த்தம்.
13. (அ) பரிசுத்தமாக இருப்பதற்கு நாம் வேறு என்ன செய்ய வேண்டுமென்று லேவியராகமம் 19:3 சொல்கிறது? (ஆ) லூக்கா 4:16-18-ல் இயேசுவைப் பற்றிச் சொல்லியிருக்கிற விஷயத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
13 பரிசுத்தமாக இருப்பதற்கு நாம் செய்ய வேண்டிய இன்னொரு விஷயத்தையும் லேவியராகமம் 19:3 சொல்கிறது. அதுதான் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது. நாம் திருச்சட்டத்தின் கீழ் இல்லாததால் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், இஸ்ரவேலர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடித்தபோது அவர்களுக்குக் கிடைத்த நன்மைகளைப் பற்றி நாம் யோசித்துப்பார்த்தால், நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். தினமும் செய்கிற வேலையிலிருந்து ஓய்வு எடுப்பதற்கும் யெகோவாவை வணங்குவதற்கும் இஸ்ரவேலர்கள் அந்த நாளைப் பயன்படுத்தினார்கள்.b அதனால்தான், இயேசுவும்கூட ஓய்வுநாளில் தவறாமல் ஜெபக்கூடத்துக்குப் போய் கடவுளுடைய வார்த்தையைப் படித்தார். (யாத். 31:12-15; லூக்கா 4:16-18-ஐ வாசியுங்கள்.) லேவியராகமம் 19:3-ல், ‘ஓய்வுநாட்களைக் கடைப்பிடிக்கும்படி’ கடவுள் கொடுத்த கட்டளையிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? தினமும் நம்முடைய வேலைகளிலேயே மூழ்கிவிடாமல், கடவுளுடைய காரியங்களுக்கு நேரம் ஒதுக்குவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நீங்கள் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறதா? அப்படியென்றால், அதை உடனடியாகச் செய்யுங்கள். அப்போதுதான், உங்களுக்கும் யெகோவாவுக்கும் இடையே இருக்கிற நட்பு பலமாகும். பரிசுத்தமாக இருப்பதற்கு இது ரொம்ப முக்கியம்.
யெகோவாவோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள்
14. எந்த முக்கியமான விஷயம் லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் திரும்பத் திரும்ப வருகிறது?
14 நாம் ஏன் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கான முக்கியக் காரணம், லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டிருக்கிறது. 4-ஆம் வசனத்தின் கடைசியில், “நான் உங்கள் கடவுளாகிய யெகோவா” என்ற வார்த்தைகள் இருக்கின்றன. இதுபோன்ற வார்த்தைகள் அந்த அதிகாரம் முழுக்க 16 தடவைகள் வருகின்றன. இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது பத்துக் கட்டளைகளில் இருக்கிற முதலாம் கட்டளைதான் ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது, “உங்கள் கடவுளாகிய யெகோவா நான்தான். என்னைத் தவிர வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது” என்ற கட்டளைதான் ஞாபகத்துக்கு வருகிறது. (யாத். 20:2, 3) பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், நமக்கும் யெகோவாவுக்கும் இடையே இருக்கிற பந்தத்துக்கு யாரும், எதுவும் தடையாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருப்பதால், அவருடைய பரிசுத்தமான பெயருக்கு எந்தக் களங்கமும் வராமல் நடந்துகொள்ள வேண்டும்.—லேவி. 19:12; ஏசா. 57:15.
15. பலி செலுத்துவதைப் பற்றி லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் படிக்கும்போது என்ன செய்ய வேண்டுமென்ற ஆசை நமக்கு வருகிறது?
15 இஸ்ரவேலர்கள் யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவரைத் தங்களுடைய கடவுளாக ஏற்றுக்கொண்டார்கள். “நீங்கள் என் நீதித்தீர்ப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். என்னுடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். நான் உங்கள் கடவுளாகிய யெகோவா” என்று லேவியராகமம் 18:4 சொல்கிறது. அவர்களுக்குக் கொடுத்த சில ‘சட்டதிட்டங்கள்’ லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் இருக்கின்றன. உதாரணத்துக்கு, மிருக பலிகளை இஸ்ரவேலர்கள் எப்படிக் கொடுக்க வேண்டும் என்று 5-8 வசனங்களிலும் 21, 22 வசனங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தப் பலிகளை ‘யெகோவா பரிசுத்தமாக நினைத்ததால், அவரை அவமதிக்காத’ விதத்தில் அதைக் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த வசனங்களையெல்லாம் வாசிக்கும்போது, யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதற்கும் எபிரெயர் 13:15 சொல்கிறபடி அவருக்குப் புகழ்ச்சிப் பலி செலுத்துவதற்கும், அதுவும் அவர் ஏற்றுக்கொள்கிற விதத்தில் அதைச் செலுத்துவதற்கும் நாம் ஆசைப்படுகிறோம்.
16. யெகோவாவுக்குச் சேவை செய்கிறவர்களுக்கும் சேவை செய்யாதவர்களுக்கும் இருக்கிற வித்தியாசத்தை லேவியராகமம் 19:19 எப்படி நமக்குப் புரிய வைக்கிறது?
16 நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டுமென்றால், யெகோவாவை வணங்காதவர்களிலிருந்து வித்தியாசமானவர்களாக இருப்பது ரொம்ப முக்கியம். ஆனால், சில சமயங்களில் அப்படி இருப்பது கஷ்டம்தான். ஏனென்றால், கூடப் படிப்பவர்களும், வேலை செய்பவர்களும், யெகோவாவை வணங்காத சொந்தக்காரர்களும் அவருக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்யச்சொல்லி நம்மை கட்டாயப்படுத்தலாம். அப்படிப்பட்ட சமயங்களில், முக்கியமான முடிவுகளை நாம் எடுக்க வேண்டியிருக்கிறது. அதை எப்படி எடுக்கலாம்? லேவியராகமம் 19:19 என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள். “இரண்டு விதமான நூல்களைக் கலந்து நெய்யப்பட்ட உடையை உடுத்தக் கூடாது” என்று அது சொல்கிறது. சுற்றியிருந்த ஜனங்களிடமிருந்து இஸ்ரவேலர்களை வித்தியாசப்படுத்திக் காட்ட இந்தச் சட்டம் உதவியது. இன்றைக்கு நாம் திருச்சட்டத்தின் கீழ் இல்லாததால், காட்டன், பாலிஸ்டர் போன்ற வித்தியாசமான நூல்கள் கலந்த உடைகளை உடுத்துகிறோம். இருந்தாலும், அந்தச் சட்டத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? கூடப் படிப்பவர்கள், வேலை செய்பவர்கள், சொந்தக்காரர்கள் ஆகியவர்களுடைய நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் பைபிளுக்கு எதிராக இருப்பதால், நாம் அவர்களைப் போல் நடந்துகொள்ள மாட்டோம். நம்முடைய சொந்தக்காரர்கள்மேல் நமக்குப் பாசம் இருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கிறவர்களையும் நாம் நேசிக்கிறோம். ஆனால், யெகோவாவை வணங்குகிற விஷயத்தில், நாம் அவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்கத் தயங்க மாட்டோம். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பரிசுத்தமாக இருப்பதற்கு, மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருப்பது முக்கியம். ஏனென்றால், நாம் கடவுளுடைய சேவையைச் செய்வதற்காகப் பிரித்துவைக்கப்பட்டிருக்கிறோம்.—2 கொ. 6:14-16; 1 பே. 4:3, 4.
17-18. லேவியராகமம் 19:23-25-லிருந்து என்ன முக்கியமான பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்?
17 “நான் உங்கள் கடவுளாகிய யெகோவா” என்ற வார்த்தைகள் யெகோவாவோடு இருக்கிற நட்புக்குத்தான் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கும். (லேவியராகமம் 19:23-25-ஐ வாசியுங்கள்.) கானான் தேசத்துக்குப் போன பின்பு இஸ்ரவேலர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதை இப்போது பார்க்கலாம். அவர்கள் ஒரு மரத்தை நட்டால், மூன்று வருஷங்களுக்கு அதிலிருந்து வரும் பழங்களைச் சாப்பிடக் கூடாது. நான்காம் வருஷம் விளைவதை யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. ஐந்தாம் வருஷம் விளைவதை அவர்கள் சாப்பிடலாம். இஸ்ரவேலர்களுக்கு இந்தச் சட்டம் எதை ஞாபகப்படுத்தியிருக்கும்? தங்களுடைய தேவைகளைவிட யெகோவாவுக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தியிருக்கும். அவர்களுக்குத் தேவையானவற்றை யெகோவா கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு அவருடைய வணக்கத்துக்கு முதலிடம் கொடுத்தால், அவர்களுக்கு எந்தக் குறையும் வைக்காமல் யெகோவா தாராளமாக கொடுப்பார். அதனால், வழிபாட்டுக் கூடாரத்துக்குத் தாராளமாக நன்கொடைகள் கொடுக்கும்படி யெகோவா சொன்னார்.
18 லேவியராகமம் 19:23-25-ல் இருக்கிற சட்டம் மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்ன வார்த்தைகளை ஞாபகப்படுத்துகிறது. “எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது . . . என்று . . . கவலைப்படுவதை நிறுத்துங்கள் . . . இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும்” என்று அவர் சொன்னார். பறவைகளையே கவனித்துக்கொள்கிற யெகோவா நம்மைக் கவனித்துக்கொள்ள மாட்டாரா? (மத். 6:25, 26, 32) அதனால், யெகோவா நமக்குத் தாராளமாக கொடுப்பார் என்று நாம் உறுதியாக நம்ப வேண்டும். கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு “தானதர்மம் செய்யும்போது” தம்பட்டம் அடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சபை செலவுகளுக்குத் தாராளமாக நன்கொடை கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, யெகோவா நம்மை நிச்சயம் ஆசீர்வதிப்பார். (மத். 6:2-4) நாம் தாராள குணத்தைக் காட்டும்போது லேவியராகமம் 19:23-25-ல் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களை நன்றாகப் புரிந்துவைத்திருப்பதைக் காட்டுகிறோம்.
19. லேவியராகமம் புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் உங்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தன?
19 கடவுளைப் போலவே பரிசுத்தமாக இருக்க உதவுகிற சில பாடங்களை லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் பார்த்தோம். அவரைப் போலவே நடக்க முயற்சி செய்யும்போது, நம்முடைய ‘நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க முடியும்.’ (1 பே. 1:15) நம்முடைய நல்ல நடத்தையை நிறையப் பேர் பாராட்டியிருக்கிறார்கள். சொல்லப்போனால், இன்னும் சிலர் யெகோவாவுக்குப் புகழ் சேர்த்திருக்கிறார்கள். (1 பே. 2:12) அடுத்த கட்டுரையில், லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்திலிருந்து இன்னும் சில வசனங்களைப் பார்ப்போம். பேதுரு சொன்னதுபோல், இன்னும் எந்தெந்த விதங்களில் ‘பரிசுத்தமாக இருக்கலாம்’ என்பதை அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
பாட்டு 80 “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்”
a நாம் யெகோவாவை ரொம்பவே நேசிக்கிறோம். அவரைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். யெகோவா பரிசுத்தமாக இருக்கிறார், தன்னை வணங்குகிறவர்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். ஆனால், நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் நம்மால் பரிசுத்தமாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியும். அன்றைக்கு இருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு கொடுத்த ஆலோசனையையும் இஸ்ரவேல் மக்களுக்கு யெகோவா கொடுத்த ஆலோசனைகளையும் நாம் கவனமாகப் படித்தால், நம்முடைய நடத்தை எல்லாவற்றிலும் எப்படிப் பரிசுத்தமாக இருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
b ஓய்வுநாளையும் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற பாடங்களையும் பற்றித் தெரிந்துகொள்ள, டிசம்பர் 2019 காவற்கோபுரத்தில், “வேலை செய்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் ‘ஒரு நேரம் இருக்கிறது’” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
c படவிளக்கம்: ஒருவர் தன்னுடைய அப்பா அம்மாவைப் பார்க்க மனைவியையும் மகளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அம்மா அப்பாவிடம் அடிக்கடி பேச முயற்சி செய்கிறார்.
d படவிளக்கம்: இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு விவசாயி, தான் நட்ட மரத்தின் பழங்களைப் பார்க்கிறார்.