வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
நாதாபும் அபியூவும் இறந்தபின் ஆரோனின் மகன்களான எலெயாசார், இத்தாமார்மீது மோசே ஏன் கோபப்பட்டார், அவருடைய கோபம் எப்படித் தணிந்தது?—லேவி. 10:16-20.
ஆரோன் தலைமை குருவாக நியமிக்கப்பட்ட சில காலத்திலேயே அவருடைய மகன்கள் நாதாபையும் அபியூவையும் யெகோவா அழித்தார்; ஏனென்றால் அவர்கள் அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்திருந்தார்கள். (லேவி. 10:1, 2) இறந்துபோன சகோதரர்களுக்காக ஆரோனின் மற்ற இரண்டு மகன்களும் துக்கம் கொண்டாட வேண்டாமென மோசே கட்டளையிட்டார். இதற்குச் சற்று பின்னர் எலெயாசார் மற்றும் இத்தாமார்மீது மோசே சினம் கொண்டார்; ஏனென்றால் பாவநிவாரண பலியான வெள்ளாட்டுக்கடாவை அவர்கள் புசிக்கவில்லை. (லேவி. 9:3) மோசே ஏன் அப்படிப் பிரதிபலித்தார்?
பாவநிவாரண பலியை செலுத்திய குரு அதில் ஒரு பாகத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரத்தில் புசிக்க வேண்டுமென மோசேக்கு யெகோவா கொடுத்திருந்த சட்டங்கள் தெளிவாகக் குறிப்பிட்டன. அப்படிச் செய்வது, அந்தப் பலியைச் செலுத்தியவர்களின் பாவங்களுக்குப் பதிலளிப்பதாகக் கருதப்பட்டது. இருந்தாலும், அந்தப் பலிக்குரிய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து அதைப் பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டுபோயிருந்தால், அதாவது ஆலயத்தின் முதல் அறைக்குள் கொண்டுபோயிருந்தால், அந்தப் பலியைச் சாப்பிடக் கூடாது. மாறாக, அதை எரித்துவிட வேண்டும்.—லேவி. 6:24-26, 30.
அந்த நாளில் நடந்த சோக சம்பவத்திற்குப் பிறகு, யெகோவாவின் கட்டளைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டதா என்பதை மோசே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. பாவநிவாரண பலிக்குரிய வெள்ளாட்டுக்கடா எரிக்கப்பட்டதை மோசே அறிந்து, கட்டளையிடப்பட்டபடி ஏன் அதைப் புசிக்கவில்லை என எலெயாசாரையும் இத்தாமாரையும் கடும் கோபத்துடன் கேட்டார்; ஏனென்றால் அதன் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்தில் யெகோவாவுக்கு முன் கொண்டுவரப்படவில்லை.—லேவி. 10:17, 18.
ஆனால், மோசேயின் கேள்விக்கு ஆரோன் பதிலளித்தார்; ஏனென்றால் உயிரோடிருந்த எலெயாசாரும் இத்தாமாரும் ஆரோனுடைய பேச்சைக் கேட்டுத்தான் அப்படிச் செய்திருந்தார்கள். அவருடைய மகன்கள் கொலை செய்யப்பட்டதால், மற்ற குருமார்கள் யாரேனும் மனசாட்சியின் உறுத்தல் எதுவுமின்றி அந்த நாளில் பாவநிவாரண பலியைப் புசிப்பது சரியாக இருக்குமா என ஆரோன் யோசித்திருக்கலாம். நாதாபும் அபியூவும் செய்த தவறுக்கு மற்ற குருமார்கள் பொறுப்புள்ளவர்களாக இல்லாதபோதிலும், அவற்றை அவர்கள் புசிப்பது யெகோவாவுக்குப் பிரியமாக இருக்காது என அவர் நினைத்திருக்கலாம்.—லேவி. 10:19.
ஆரோனின் குடும்பத்தார் முதன்முதலில் தங்களுடைய குருத்துவப் பணிகளைச் செய்த அந்த நாளில் சின்ன சின்ன விஷயங்களிலும்கூட மிக ஜாக்கிரதையாய் இருந்திருக்க வேண்டுமென அவர் விளக்கம் அளித்திருக்கலாம். என்றாலும், நாதாப் மற்றும் அபியூவின் செயலால் யெகோவாவின் பெயர் தூஷிக்கப்பட்டிருந்தது, அவர்கள்மீது கடவுளுடைய கோபம் பற்றியெரிந்ததற்கு அதுவே காரணமாக இருந்தது. ஆகவே, குருவின் வீட்டு அங்கத்தினர்கள் இப்படிப்பட்ட பாவம் செய்ததால், பரிசுத்த பலியைச் சாப்பிட வேண்டியதில்லை என ஆரோன் நினைத்திருக்கலாம்.
அண்ணன் சொன்ன பதிலை மோசே ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது, ஏனென்றால் பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தார்.’ (லேவி. 10:20) அதோடு, யெகோவாவும் ஆரோன் சொன்ன பதிலில் திருப்தி அடைந்தார் என்றே தெரிகிறது.