யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
லேவியராகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலை பெற்று இன்னும் ஒரு வருடம்கூட ஆகவில்லை. இப்போது, ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு புதிய தேசமாக கானான் தேசத்தை நோக்கி அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்தமான ஒரு ஜனம் அங்கே குடியிருக்க வேண்டும் என்பதே யெகோவாவின் நோக்கம். ஆனால், கானானியரின் வாழ்க்கைப் பாணியும் மதப் பழக்கவழக்கங்களும் மிகவும் தரங்கெட்டதாய் இருக்கின்றன. ஆகவே, தம்மை சேவிப்பதற்கென இஸ்ரவேல் சபையாரை தனியாக பிரித்து வைக்கும் வகையில் மெய்க் கடவுள் சட்டங்களை கொடுக்கிறார். இவை லேவியராகமம் என்ற பைபிள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்புத்தகம் மோசே தீர்க்கதரிசியால் சீனாய் வனாந்தரத்தில் பொ.ச.மு. 1512-ல் எழுதப்பட்டதாக தெரிகிறது. இதில் ஒரேவொரு சந்திர மாதக் காலப்பகுதியில் நிகழ்ந்த சரித்திரமே உள்ளது. (யாத்திராகமம் 40:17; எண்ணாகமம் 1:1-3) தம்மை வணங்குவோர் பரிசுத்தராயிருக்க வேண்டுமென யெகோவா திரும்பத் திரும்ப அறிவுறுத்துகிறார்.—லேவியராகமம் 11:44; 19:2; 20:7, 26.
யெகோவாவின் சாட்சிகள் இன்று மோசேயின் மூலம் கடவுள் கொடுத்த நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை. இயேசு கிறிஸ்துவின் மரணம் அந்த நியாயப்பிரமாணத்தை நீக்கிப் போட்டது. (ரோமர் 6:14; எபேசியர் 2:11-16) என்றாலும், லேவியராகமத்தில் காணப்படும் கட்டளைகள் நமக்கு பயனளிக்கும்; நம் கடவுளாகிய யெகோவாவை வணங்குவதைப் பற்றிய அதிகமான விஷயங்களை நமக்கு கற்றுத் தரும்.
மனமுவந்தும் கட்டாயமாகவும் செலுத்தப்படும் பரிசுத்த படைப்புகள்
நியாயப்பிரமாணத்தின்படி சில படைப்புகளும் பலிகளும் மனமுவந்து செலுத்தப்பட்டன, மற்றவையோ கட்டாயத்தின் பேரில் செலுத்தப்பட்டன. உதாரணமாக, தகன பலி மனமுவந்து செலுத்தப்பட்டது. அது கடவுளுக்கு முழுமையாக அளிக்கப்பட்டது; இயேசு கிறிஸ்து தம் உயிரையே மீட்கும் பலியாக மனமுவந்து முழுமையாக அளித்ததற்கு ஒப்பாக அது இருந்தது. மனமுவந்து செலுத்தப்பட்ட சமாதான பலி பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதி பலிபீடத்தில் கடவுளுக்கு அளிக்கப்பட்டது. மற்றொரு பகுதியை ஆசாரியரும் இன்னும் மீதமிருந்த பகுதியை பலி செலுத்தியவரும் சாப்பிட்டனர். அவ்வாறே, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு ஒரு கூட்டுப் போஜனமாக இருக்கிறது.—1 கொரிந்தியர் 10:16-22.
பாவநிவாரண பலிகளும் குற்றநிவாரண பலிகளும் கட்டாயத்தின் பேரில் செலுத்தப்பட்டன. அறியாமல் செய்த பாவங்களுக்காக பாவநிவாரண பலிகள் செலுத்தப்பட்டன. குற்றநிவாரண பலிகளோ உரிமை மீறப்படுகையில் அல்லது தவறு செய்தவர் மனந்திரும்பி மீண்டும் சில உரிமைகள் பெறுகையில் அல்லது இரு சந்தர்ப்பங்களிலும் கடவுளுக்கு செலுத்தப்பட்டன. யெகோவா தாராளமாக கொடுத்ததற்கு நன்றி செலுத்தும் வகையில் போஜன பலிகளும் செலுத்தப்பட்டன. இவை யாவும் நமக்கு அக்கறைக்குரியவை; ஏனெனில் நியாயப்பிரமாண உடன்படிக்கையின்படி கட்டளையிடப்பட்ட இந்த பலிகள் இயேசு கிறிஸ்துவையும் அவரது பலியையும் குறித்தன, அல்லது அவரது பலியின் மூலம் வரக்கூடிய நன்மைகளை குறித்தன.—எபிரெயர் 8:3-6; 9:9-14; 10:5-10.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
2:11, 12—தேனை ‘தகனபலியாகத் தகனிப்பதை’ யெகோவா ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? இங்கு சொல்லப்படும் தேன், தேனீக்களின் மூலம் கிடைக்கும் தேனை அர்த்தப்படுத்தாது. இந்தத் தேனை ‘தகனபலியாகத் தகனிப்பதற்கு’ யெகோவா அனுமதிக்காவிட்டாலும், ‘நிலத்தின் முதற்பலன்களில்’ இதுவும் சேர்க்கப்பட்டது. (2 நாளாகமம் 31:5) அப்படியானால் இந்தத் தேன், பழங்களிலிருந்து எடுக்கப்பட்ட சாறாக, அல்லது பாகாக இருக்கலாமென தெரிகிறது. இது புளித்துவிடும் என்பதால், பலிபீடத்தில் இதைப் படைப்பது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
2:13—‘படைக்கும் எல்லாவற்றோடும்’ ஏன் உப்பையும் படைக்க வேண்டியிருந்தது? பலிகளின் ருசியைக் கூட்டுவதற்காக அல்ல. உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாப்பதற்கு உப்பை உலகெங்கிலும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். கெட்டுவிடாமலும் அழுகிவிடாமலும் பாதுகாப்பதை இது அர்த்தப்படுத்தியதால் எல்லாவற்றோடு இதையும் படைக்க வேண்டியிருந்தது.
நமக்குப் பாடம்:
3:17. மிகச் சிறந்த, அல்லது ஊட்டமிக்க ஒரு பாகமாக கொழுப்பு கருதப்பட்டது. ஆகவே அதைச் சாப்பிடக் கூடாதென தடை செய்யப்பட்டிருந்ததானது, மிகச் சிறந்த பாகம் யெகோவாவுக்கே சேரும் என்பதை இஸ்ரவேலரின் மனதில் தெள்ளத் தெளிவாக பதிய வைத்திருக்கும். (ஆதியாகமம் 45:18) இது மிகச் சிறந்ததை யெகோவாவுக்கு கொடுக்க வேண்டும் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது.—நீதிமொழிகள் 3:9, 10; கொலோசெயர் 3:23, 24.
7:26, 27. இரத்தத்தை சாப்பிடக் கூடாது என்ற கட்டளை இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. கடவுளுடைய பார்வையில் இரத்தம் உயிரைக் குறிக்கிறது. “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது” என லேவியராகமம் 17:11 குறிப்பிடுகிறது. இரத்தத்திற்கு விலகியிருப்பது இன்றும் மெய்க் கிறிஸ்தவர்களுக்கு ஒரு தராதரமாக இருக்கிறது.—அப்போஸ்தலர் 15:28, 29.
பரிசுத்த ஆசாரியத்துவம் ஏற்படுத்தப்படுகிறது
பலிகள் மற்றும் படைப்புகள் சம்பந்தப்பட்ட வேலைகளை கவனிக்கும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட்டது? ஆசாரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடவுள் கொடுத்த அறிவுரையின்படி, ஆரோனை பிரதான ஆசாரியராகவும் அவரது நான்கு குமாரரை உதவி ஆசாரியர்களாகவும் நியமிக்கும் சடங்கை மோசே நடத்தினார். அது ஏழு நாட்கள் நடந்தது. அதற்கு அடுத்த நாள் முதற்கொண்டு ஆசாரியத்துவ வேலை ஆரம்பமானது.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
9:9—இரத்தத்தை பலிபீடத்தின் அடியிலே ஊற்றுவதும் பல்வேறு பொருட்களின் மீது பூசுவதும் எதை அர்த்தப்படுத்துகிறது? பாவநிவிர்த்திக்காக இரத்தத்தை யெகோவா ஏற்றுக்கொண்டதை இது காட்டியது. பாவநிவிர்த்திக்கான ஏற்பாடு முழுவதுமே இரத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. “நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்.—எபிரெயர் 9:22.
10:1, 2—ஆரோனின் குமாரர்களாகிய நாதாபும் அபியூவும் செய்த பாவத்தில் என்ன உட்பட்டிருக்கலாம்? நாதாபும் அபியூவும் தங்களுடைய ஆசாரிய கடமைகளைத் தகாத விதத்தில் செய்ததற்கு பிறகு சீக்கிரத்திலேயே ஆசாரியர்களுக்கு யெகோவா ஒரு கட்டளையைக் கொடுத்தார். அதாவது, ஆசரிப்புக் கூடாரத்தில் சேவை செய்யும்போது ஆசாரியர்கள் திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டார். (லேவியராகமம் 10:9) ஆகவே, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஆரோனின் குமாரர்கள் குடித்திருந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது. என்றாலும், அவர்களுடைய சாவுக்கு உண்மையான காரணம், ‘யெகோவா அவர்களுக்கு கட்டளையிடாத அந்நிய அக்கினியை’ அவர்கள் கொண்டு வந்ததுதான்.
நமக்குப் பாடம்:
10:1, 2. யெகோவாவின் பொறுப்புள்ள ஊழியர்கள், இன்று கடவுள் தேவைப்படுத்தும் காரியங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றுகையில் அகங்காரம் கொள்ளக் கூடாது.
10:9. மதுபானங்களை குடித்திருக்கும் போது கடவுள் கொடுத்த பொறுப்புகளை நாம் செய்யக் கூடாது.
பரிசுத்த வணக்கத்திற்கு சுத்தமாயிருப்பது அவசியம்
சுத்தமானதும் சுத்தமில்லாததுமான மிருகங்களை சாப்பிடுவதைப் பற்றிய சட்டங்கள் இஸ்ரவேலருக்கு இரண்டு வழிகளில் நன்மை அளித்தன. தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகள் தொற்றுவதிலிருந்து அவர்களை பாதுகாத்தன, அவர்களுக்கும் சுற்றிலுமிருந்த தேசத்தாருக்கும் இடையே இருந்த தடையையும் வலுப்படுத்தின. செத்த உடல்களைத் தொடுவதன் மூலம் தீட்டுப்படுதல், பிரசவமான பெண்ணின் சுத்திகரிப்பு, குஷ்டரோகம் சம்பந்தமான நடவடிக்கைகள், ஆண் மற்றும் பெண் பிறப்புறுப்புக்களிலிருந்து வெளிப்படும் கசிவுகளால் தீட்டுப்படுதல் ஆகியவை சம்பந்தமாகவும் சட்டங்கள் கொடுக்கப்பட்டன. தீட்டுப்பட்டவர்கள் சம்பந்தமான விவகாரங்களை ஆசாரியர்கள் கவனிக்க வேண்டியிருந்தது.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
12:2, 5—குழந்தைப்பேறு ஒரு பெண்ணை ஏன் ‘தீட்டுப்படுத்தியது’? பரிபூரண மனித உயிரை கடத்துவதற்காகவே இனவிருத்தி உறுப்புக்கள் உண்டாக்கப்பட்டன. என்றாலும், சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் பாதிப்புகளால் பாவமுள்ள அபூரண உயிரே பிள்ளைகளுக்கு கடத்தப்பட்டது. குழந்தைப்பேற்றினால் சிறிது காலத்திற்கு ‘தீட்டுப்பட்டிருப்பதும்,’ மாதவிடாய், இந்திரியம் கழிதல் ஆகியவையும் பரம்பரையாய் சுதந்தரித்த இந்தப் பாவத்தையே மனதிற்கு கொண்டு வந்தன. (லேவியராகமம் 15:16-24; சங்கீதம் 51:5; ரோமர் 5:12) இஸ்ரவேலர் செய்ய வேண்டியிருந்த சுத்திகரிப்பு முறைமைகள், மனிதகுலத்தின் பாவத்தை போக்குவதற்கும் மீண்டும் பரிபூரணத்தை அடைவதற்கும் மீட்கும் பலி அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். இவ்வாறு, நியாயப்பிரமாணம் ‘கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்தும் உபாத்தியாய்’ ஆனது.—கலாத்தியர் 3:24.
15:16-18—இந்த வசனங்களில் ‘இந்திரியம் கழிதல்’ என சொல்லப்பட்டிருப்பது எதைக் குறிக்கிறது? இது இரவு நேரத்தில் இந்திரியம் கழிவதையும் தாம்பத்திய உறவையும் குறிப்பதாக தெரிகிறது.
நமக்குப் பாடம்:
11:45. யெகோவா தேவன் பரிசுத்தராய் இருக்கிறார்; ஆகவே அவருக்கு பரிசுத்த சேவை செய்பவர்கள் பரிசுத்தராய் இருப்பது அவசியம். அவர்கள் பரிசுத்தத்தைக் கடைப்பிடித்து மாம்சப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.—2 கொரிந்தியர் 7:1; 1 பேதுரு 1:15, 16.
12:8. ஏழைகள் விலையுயர்ந்த செம்மறியாட்டுக்கு பதிலாக பறவைகளை பலி செலுத்த யெகோவா அனுமதித்தார். அவர் ஏழைகளுக்கு இரக்கம் காட்டுபவர்.
தொடர்ந்து பரிசுத்தமாக இருக்க வேண்டும்
வருடாந்தர பிராயச்சித்த நாளில் பாவங்களுக்காக மிக முக்கியமான பலிகள் செலுத்தப்பட்டன. ஆசாரியர்களுக்காகவும் லேவி கோத்திரத்தாருக்காகவும் ஒரு காளை பலி செலுத்தப்பட்டது. ஆசாரியரல்லாத இஸ்ரவேல் கோத்திரத்தாருக்காக ஒரு வெள்ளாட்டுக்கடா பலி செலுத்தப்பட்டது. மற்றொரு வெள்ளாட்டுக்கடாவின் மீதோ ஜனங்களின் பாவங்கள் சுமத்தப்பட்டு, பிறகு அது உயிரோடே வனாந்தரத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களுமே ஒரு பாவநிவாரண பலியாக கருதப்பட்டது. இவை யாவும், இயேசு கிறிஸ்து தம்மையே பலியாக அளிப்பார் என்பதையும் பாவங்களை நீக்கிவிடுவார் என்பதையும் குறித்துக் காட்டியது.
மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விஷயங்களும் பிற விஷயங்களும் நாம் யெகோவாவை வணங்கும்போது பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. ஆசாரியர்கள் தங்களை பரிசுத்தமாக வைத்துக்கொள்வது தகுந்ததாக இருந்தது. வருடத்தில் மூன்று பண்டிகைகள் கொண்டாடப்பட்டன; அவை பெருமகிழ்ச்சிக்கும் சிருஷ்டிகருக்கு நன்றி செலுத்துவதற்குமான சந்தர்ப்பங்களாக இருந்தன. தமது பெயருக்கு பரிசுத்த குலைச்சலை ஏற்படுத்துகிற காரியங்கள், ஓய்வுநாளையும் யூபிலியையும் ஆசரித்தல், ஏழைகளிடத்திலும் அடிமைகளிடத்திலும் நடந்துகொள்ளும் விதம் ஆகியவை சம்பந்தப்பட்ட சட்டங்களையும் யெகோவா தமது ஜனங்களுக்கு கொடுத்தார். கடவுளுக்கு கீழ்ப்படிவதால் வருகிற ஆசீர்வாதங்களுக்கும் கீழ்ப்படியாமையால் வருகிற சாபங்களுக்கும் மிகுந்த வித்தியாசம் இருப்பது காட்டப்படுகிறது. பொருத்தனைகளையும் மதிப்பீடுகளையும் மிருக ஜீவன்களின் தலையீற்றுகளையும் ‘யெகோவாவுக்கு பரிசுத்தமான ஒன்றாக’ தசமபாகங்களையும் செலுத்துவது சம்பந்தப்பட்ட சட்டங்களும் இருக்கின்றன.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
16:29—இஸ்ரவேலர் எவ்விதத்தில் ‘தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்த’ வேண்டியிருந்தது? பாவநிவாரண நாளில் கடைப்பிடிக்கப்பட்ட இந்த முறை, பாவங்களுக்காக மன்னிப்பு கேட்பதோடு சம்பந்தப்பட்டதாக இருந்தது. அந்த சமயத்தில் உபவாசமிருந்தது, பாவத்தை ஒப்புக்கொண்டதோடு சம்பந்தப்பட்டதாக இருந்திருக்கலாம். அப்படியானால், “ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவது” அநேகமாக உபவாசத்தைக் குறிப்பதாக இருக்கலாம்.
19:27—‘தலைமயிரைச் சுற்றி ஒதுக்க’ வேண்டாம் அல்லது தாடியின் “ஓரங்களைக் கத்தரிக்க” வேண்டாம் என்ற கட்டளையின் அர்த்தம் என்ன? புறமதத்தின் சில பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் வகையில் யூதர்கள் தங்கள் தாடியை அல்லது முடியை சிரைப்பதை தடுப்பதற்காக இந்தச் சட்டம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. (எரேமியா 9:25, 26, NW; 25:23, NW; 49:32, NW) ஆனால், யூதர்கள் தங்களுடைய தாடியை அல்லது முகத்திலுள்ள முடியை சிரைக்கவே கூடாது என கடவுளுடைய சட்டம் அர்த்தப்படுத்தவில்லை.—2 சாமுவேல் 19:24.
25:35-37—இஸ்ரவேலர் வட்டி வாங்குவது எப்போதுமே தவறாக இருந்ததா? வியாபார நோக்கங்களுக்காக கடன் கொடுக்கையில் வட்டி வாங்கலாம். ஆனால், ஏழ்மையின் நிமித்தம் கொடுக்கப்பட்ட கடனுக்கு வட்டி வாங்குவதை நியாயப்பிரமாண சட்டம் தடை செய்தது. அயலகத்தார் ஒருவருக்கு திடீரென பணக் கஷ்டம் ஏற்படும்போது அவரிடமிருந்து லாபம் பெறுவது தவறாக இருந்தது.—யாத்திராகமம் 22:25.
26:19—‘வானம் இரும்பைப் போலவும் பூமி வெண்கலத்தைப் போலவும் ஆவது’ எப்படி? மழையே பெய்யாததால், கானான் தேசத்து வானம் பார்ப்பதற்கு நுண்துளைகளற்ற இரும்பைப் போல கெட்டியாகத் தோன்றும். மழையில்லாததால் பூமி வெண்கல நிறத்தில் மின்னும்.
26:26—‘பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் அப்பத்தைச் சுடுவதன்’ அர்த்தம் என்ன? பொதுவாக அப்பத்தைச் சுடுவதற்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனி அடுப்பு தேவைப்படும். ஆனால் இந்த வார்த்தைகள் உணவு பற்றாக்குறையை அர்த்தப்படுத்தியது. ஆகவே பத்து ஸ்திரீகள் அப்பம் சுடுவதற்கு ஒரு அடுப்பே போதுமானதாக இருக்கும். இது பரிசுத்தத்தை காத்துக்கொள்ள தவறினால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து முன்னறிவிக்கப்பட்டவற்றில் ஒன்று.
நமக்குப் பாடம்:
20:9. கடும் வெறுப்பும் மூர்க்க குணமும் யெகோவாவின் பார்வையில் கொலைக்கு சமமாக இருந்தது. எனவே பெற்றோரை கொலை செய்ய வழங்கப்படும் அதே தண்டனை அவர்களை இழிவாகப் பேசுவதற்கும் கொடுக்கப்பட வேண்டுமென்று அவர் கட்டளையிட்டார். நம் சக விசுவாசிகளிடத்தில் அன்பு காட்டுவதற்கு இது நம்மை தூண்ட வேண்டும் அல்லவா?—1 யோவான் 3:14, 15.
22:32; 24:10-16, 23. யெகோவாவின் பெயரை நிந்திக்கக் கூடாது. மாறாக, அவருடைய பெயரை நாம் துதிக்க வேண்டும், அது பரிசுத்தப்படுவதற்காக ஜெபிக்க வேண்டும்.—சங்கீதம் 7:17; மத்தேயு 6:9.
நம் வணக்கத்தை லேவியராகமம் எப்படி பாதிக்கிறது
யெகோவாவின் சாட்சிகள் இன்று நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதில்லை. (கலாத்தியர் 3:23-25) என்றாலும், லேவியராகமத்தில் சொல்லப்பட்டிருப்பவை பல்வேறு விஷயங்களில் யெகோவாவின் நோக்குநிலையை திருத்தமாக புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்வதால், அது நம் வணக்கத்தை பாதிக்கிறது.
தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்காக வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதியை தயாரிக்கையில், தமது ஊழியர்கள் பரிசுத்தமாயிருக்கும்படி கடவுள் எதிர்பார்க்கிறார் என்ற விஷயம் நிச்சயமாகவே உங்கள் மனதில் பதியும். மகா உன்னதமானவருக்கு மிகச் சிறந்ததை அளிப்பதற்கும், அவருக்கு புகழ்ச்சியுண்டாக எப்போதும் பரிசுத்தத்தை காத்துக்கொள்வதற்கும்கூட இந்த பைபிள் புத்தகம் உங்களைத் தூண்டும்.
[பக்கம் 21-ன் படம்]
நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்ட பலிகள் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய பலியையும் குறித்தன
[பக்கம் 22-ன் படம்]
புளிப்பில்லா அப்பப் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சிக்குரிய சந்தர்ப்பமாக இருந்தது
[பக்கம் 23-ன் படம்]
கூடாரப் பண்டிகையைப் போன்ற வருடாந்தர பண்டிகைகள் யெகோவாவுக்கு நன்றி செலுத்துவதற்குரிய சந்தர்ப்பங்களாக இருந்தன