ஆபிரகாம், சாராள்-இவர்களின் விசுவாசத்தை உங்களால் பின்பற்ற முடியும்!
‘விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பன்’ என அவர் அழைக்கப்படுகிறார். (ரோமர் 4:11) அவரது அருமை மனைவியும் இத்தகைய விசுவாசம் வைத்திருந்தார். (எபிரெயர் 11:11) அவர்களே தேவபயமுடைய ஆபிரகாம், தேவபக்திமிக்க அவரது மனைவி சாராள். விசுவாசத்திற்கு ஏன் சிறந்த முன்மாதிரியாக அவர்கள் திகழ்ந்தார்கள்? அவர்கள் என்னென்ன சோதனைகளை சகித்தார்கள்? அவர்களுடைய வாழ்க்கை சரிதை நமக்கு எந்தளவு மதிப்புமிக்கது?
தனது ஊரைவிட்டுச் செல்லும்படி ஆபிரகாமுக்கு யெகோவா கட்டளையிட்டபோது அவர் விசுவாசத்தைக் காண்பித்தார். “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” என யெகோவா கூறினார். (ஆதியாகமம் 12:1) உண்மையுள்ள இந்த முற்பிதா கீழ்ப்படிந்தார், ஏனென்றால் “விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனான்” என பைபிள் நமக்கு சொல்கிறது. (எபிரெயர் 11:8) அப்படி அவர் புறப்பட்டுச் சென்றதில் என்னென்ன காரியங்கள் உட்பட்டிருந்தன என்பதை இப்பொழுது நாம் ஆராயலாம்.
ஊர் என்ற பட்டணத்தில் ஆபிரகாம் வாழ்ந்து வந்தார், அது இப்பொழுது தெற்கு ஈராக்கில் இருக்கிறது. ஊர் பட்டணம் மெசொப்பொத்தாமியாவின் செல்வச்செழிப்புமிக்கதோர் மையமாக அமைந்திருந்தது; பெர்சிய வளைகுடா, பெரும்பாலும் இந்து பள்ளத்தாக்கு போன்ற தேசங்களுடன் வாணிபத் தொடர்பு வைத்திருந்தது. ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் பெரும்பாலான வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டு, சாந்து பூசப்பட்டு, வெள்ளை அடிக்கப்பட்டிருந்தன என ஊர் பட்டணத்தை முறையாக அகழ்வாய்வு செய்வதில் முன்னின்று வழிநடத்திய சர் லியோனார்டு வுல்லி சுட்டிக் காட்டுகிறார். உதாரணமாக, ஒரு செல்வச்சீமானுடைய வீடு இரண்டு மாடி கொண்டதாக இருந்தது, அதின் மத்திபத்தில் தளம் பாவப்பட்ட முற்றம் இருந்தது. அடித்தளத்தில் வீட்டு வேலைக்காரர்களும் விருந்தினர்களும் தங்கியிருந்தனர். முதல் தளத்தில், சுவரைச் சுற்றிலும் மரத்தாலான பால்கனி அமைக்கப்பட்டிருந்தது, இதனால் குடும்பம் பயன்படுத்தும் அறைகளுக்குச் செல்ல வசதியாக இருந்தது. 10 முதல் 20 அறைகள் கொண்ட இத்தகைய வீடுகள் “ஓரளவு விஸ்தாரமாகவும், சௌகரியமாகவும், கீழை நாடுகளின் தரத்திற்கேற்ப ஆடம்பரமாகவும் இருந்தன” என வுல்லி கூறுகிறார். அவை “நாகரிக மக்களின் புகழ்மிக்க வீடுகள், நன்கு வளர்ச்சியடைந்த நகர வாழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தன.” கூடாரங்களில் வாழ ஆபிரகாமும் சாராளும் இப்பேர்ப்பட்ட ஒரு வீட்டைவிட்டுச் சென்றிருந்தால், அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய உண்மையில் பெரும் தியாகங்களைச் செய்தார்கள்.
ஆபிரகாம் முதலில் தனது குடும்பத்தாருடன் வடக்கு மெசொப்பொத்தாமியாவிலிருந்த ஒரு பட்டணமாகிய ஆரானுக்கும் பிற்பாடு கானானுக்கும் சென்றார். அது சுமார் 1,600 கிலோமீட்டர் தூரமுடையது—வயதான தம்பதியருக்கு இது உண்மையிலேயே மாபெரும் பயணமே! ஆரானைவிட்டுப் புறப்படுகையில், ஆபிரகாமுக்கு 75 வயது, சாராளுக்கு 65.—ஆதியாகமம் 12:4.
ஊர் பட்டணத்தைவிட்டுச் செல்லப் போவதைப் பற்றி சாராளிடம் ஆபிரகாம் தெரிவித்தபோது அவள் எப்படி உணர்ந்திருக்கலாம்? பாதுகாப்புமிக்க சொகுசான வீட்டைவிட்டு, முன்பின் தெரியாத ஓர் இடத்திற்கு, பகைமையை எதிர்ப்படும் ஓர் இடத்திற்குச் சென்று, மோசமான வாழ்க்கைச் சூழலில் வாழ்வதை ஏற்றுக்கொள்வது அவளுக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம். ஆனால், ஆபிரகாமை தனது ‘ஆண்டவன்’ என நினைத்து சாராள் கீழ்ப்படிந்தாள். (1 பேதுரு 3:5, 6) ஆபிரகாமிடம் சாராள் காட்டிய “வழக்கமான, மரியாதைக்குரிய மனப்பான்மையையும் நடத்தையையும்” இது வெளிப்படுத்துகிறது, “சிந்தையிலும் உணர்ச்சியிலும் நிறைந்திருந்த உண்மையான பழக்கங்களுக்கு” அத்தாட்சியாக விளங்குகிறது என அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, சாராள் யெகோவா மீது நம்பிக்கை வைத்தாள். அவளது கீழ்ப்படிதலும் விசுவாசமும் கிறிஸ்தவ மனைவிமார்களுக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
வேறொரு நாட்டில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு முழுநேர ஊழியர்கள் சிலர் தங்களுடைய தாயகத்தை விட்டு வந்திருக்கிறார்கள் என்றாலும், நாமும் அதேபோல் செய்ய வேண்டுமென கடவுள் கேட்பதில்லை. கடவுளை நாம் எங்கிருந்து சேவித்தாலும், நமது வாழ்க்கையில் ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கும்போது, அவர் நம் தேவைகளைப் பூர்த்தி செய்வார்.—மத்தேயு 6:25-33.
சாராளோ ஆபிரகாமோ தாங்கள் எடுத்த முடிவைக் குறித்து வருத்தப்படவில்லை. “தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்” என அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். ஆனால் அவர்கள் திரும்பிச் செல்லவில்லை. யெகோவா ‘தம்மை [“ஊக்கமாய்,” NW] தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்று’ நம்பிக்கை வைத்து, அவருடைய வாக்குறுதிகளில் விசுவாசத்தைக் காண்பித்தார்கள். தொடர்ந்து முழு ஆத்துமாவுடன் யெகோவாவுக்கு பக்தியைக் காட்ட வேண்டுமானால், நாமும் அதையே செய்ய வேண்டும்.—எபிரெயர் 11:6, 15, 16; பொது மொழிபெயர்ப்பு.
ஆன்மீக செல்வங்களும் பொருட்செல்வங்களும்
ஆபிரகாம் கானானுக்குச் சென்றபின்பு, “உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்” என கடவுள் அவரிடம் கூறினார். யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, ‘யெகோவாவின் நாமத்தில்’ கூப்பிடுவதன் மூலம் ஆபிரகாம் தனது நன்றியைக் காட்டினார். (ஆதியாகமம் 12:7, 8) ஆபிரகாமை யெகோவா செல்வந்தராக்கினார், அவருடன் தங்கியிருந்தவர்களும் எண்ணிக்கையில் திரளாய் இருந்தார்கள். தனது வீட்டில் பிறந்த அடிமைகளில் பயிற்சி பெற்ற 318 பேரை திரட்டிக்கொண்டு போனார்; அப்படியென்றால், அவருடன் தங்கியிருந்தவர்கள் “ஆயிரத்திற்கும் அதிகமானோர் இருந்திருக்க வேண்டும்” என கருத்து தெரிவிக்கப்படுகிறது. எதுவாக இருந்தாலும்சரி, ஜனங்கள் அவரை “மகா பிரபு” என அழைத்தார்கள்.—ஆதியாகமம் 13:2; 14:14; 23:6.
வழிபாட்டு காரியங்களில் ஆபிரகாம் தலைமை வகித்து நடத்தினார், “நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நட”க்க தமது வீட்டிலிருந்தவர்களுக்கு கற்பித்தார். (ஆதியாகமம் 18:19) யெகோவாவை சார்ந்திருந்து நீதியான வழியில் நடக்க தனது குடும்ப அங்கத்தினர்களுக்கு கற்பிப்பதில் வெற்றி கண்ட ஒரு நபராக ஆபிரகாம் விளங்கினார்; தற்காலத்தில் கிறிஸ்தவ குடும்பத் தலைவர்கள் ஆபிரகாமின் இந்த உதாரணத்திலிருந்து உற்சாகத்தைப் பெறலாம். ஆகவே, சாராளுடைய எகிப்திய பணிப்பெண் ஆகாரும் முற்பிதாவின் மூத்த ஊழியக்காரனும் ஆபிரகாமின் மகன் ஈசாக்கும் ஜெபத்தில் யெகோவாவிடம் சார்ந்திருந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை.—ஆதியாகமம் 16:5, 13; 24:10-14; 25:21.
ஆபிரகாம் சமாதானத்தை நாடினார்
ஆபிரகாம் தேவபக்திக்கேற்ற குணங்களை காண்பித்ததை அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. தனது ஆடுகளை மேய்ப்பவர்களுக்கும் தனது உறவினனாகிய லோத்துவின் ஆடுகளை மேய்ப்பவர்களுக்கும் இடையே வந்த சண்டை தொடராமலிருக்க பிரிந்துபோகும்படி ஆலோசனை அளித்தார்; அப்போது, வயதில் இளையவராகிய லோத்துவை அழைத்து அவருக்குப் பிடித்த தேசத்தை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். ஆபிரகாம் சமாதானம் பண்ணுகிறவராக இருந்தார்.—ஆதியாகமம் 13:5-13.
உரிமைகளை வற்புறுத்திக் கேட்பதா அல்லது சமாதானத்தைக் காத்துக்கொள்ள விட்டுக்கொடுத்துப் போவதா என்ற நிலை நமக்கு வந்தால் இந்த விஷயத்தை நினைத்துக் கொள்ளலாம்: லோத்துவுக்கு இரக்கம் காண்பித்ததால் ஆபிரகாம் கஷ்டப்படும்படி யெகோவா விட்டுவிடவில்லை; மாறாக, ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் கண்ணுக்கு எட்டிய தூரமளவுக்கு எல்லா திசையிலும் இருக்கும் தேசத்தை கொடுப்பதாக பிற்பாடு வாக்குறுதியும் அளித்தார். (ஆதியாகமம் 13:14-17) “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்,” ஏனென்றால் “அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” என்று இயேசு கூறினார்.—மத்தேயு 5:9.
யார் ஆபிரகாமின் வாரிசு?
வித்துவைப் பற்றிய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தபோதிலும், சாராள் மலடியாகவே இருந்தாள். ஆபிரகாம் இந்த விஷயத்தை கடவுளிடம் முறையிட்டார். அவருக்குரிய எல்லாவற்றையும் அவரது ஊழியக்காரனாகிய எலியேசர் சொந்தமாக்கிக் கொண்டானா? இல்லை, ஏனென்றால் “இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப் பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” என யெகோவா சொன்னார்.—ஆதியாகமம் 15:1-4.
என்றாலும், இன்னும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. 75 வயதான சாராள் கர்ப்பந்தரிக்கும் நம்பிக்கையை கைவிட்டுவிட்டாள். ஆகவே, ஆபிரகாமிடம் இவ்வாறு கூறினாள்: “நான் பிள்ளை பெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும்.” பின்பு ஆபிரகாம் ஆகாரை தனது இரண்டாம் மனைவியாக ஏற்றுக்கொண்டு, அவளுடன் உறவு கொண்டார், அதனால் அவள் கர்ப்பமானாள். தான் கர்ப்பம் தரித்திருப்பதை ஆகார் அறிந்தவுடன், தனது எஜமானியை இகழ ஆரம்பித்தாள். ஆபிரகாமிடம் சாராள் மனங்கசந்து முறையிட்டாள், ஆகாரை கடினமாய் நடத்தினாள்; இதனால் அந்தப் பணிப்பெண் அவளைவிட்டு ஓடினாள்.—ஆதியாகமம் 16:1-6.
ஆபிரகாமும் சாராளும் நல் விசுவாசத்துடன் செயல்பட்டார்கள், தங்களுடைய நாளில் நிலவிய பழக்கங்களுக்கு இசைவாக செயல்பட்டார்கள். என்றாலும், ஆபிரகாமுக்கு சந்ததியைப் பிறப்பிக்க அது யெகோவாவின் வழியாக இருக்கவில்லை. ஆகவே, பல்வேறு சூழ்நிலைமைகளில் சில செயல்கள் சரியென நமது கலாச்சாரம் சொன்னாலும் அவற்றை யெகோவா அங்கீகரிக்கிறார் என நினைத்துவிட முடியாது. நமது சூழ்நிலைமையைப் பற்றி அவருடைய நோக்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கலாம். ஆகவே, நாம் கடவுளுடைய வழிநடத்துதலை நாட வேண்டும், நாம் செயல்பட வேண்டிய வழியை நமக்கு சுட்டிக்காட்டும்படி அவரிடம் ஜெபிக்க வேண்டும்.—சங்கீதம் 25:4, 5; 143:8, 10.
‘யெகோவாவினால் ஆகாத காரியம்’ ஒன்றுமில்லை
ஏற்ற காலத்தில், ஆகார் மூலம் ஆபிரகாமுக்கு இஸ்மவேல் என்ற மகன் பிறந்தான். என்றாலும், அவன் வாக்குப்பண்ணப்பட்ட வித்து அல்ல. சாராள் வயது சென்றவளாக இருந்தபோதிலும், அவளே அந்த வாரிசைப் பிறப்பிக்க வேண்டியிருந்தது.—ஆதியாகமம் 17:15, 16.
சாராள் தனது கணவனுக்கு ஒரு குமாரனை பெற்றெடுப்பாள் என கடவுள் சொன்னபோது, “ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறு வயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்[டார்].” (ஆதியாகமம் 17:17) சாராள் காதுபட ஒரு தேவதூதன் மீண்டும் இதைச் சொன்னபோது, அவளும் ‘உள்ளத்திலே நகைத்தாள்.’ ஆனால் ‘யெகோவாவினால் ஆகாத காரியம்’ ஒன்றுமில்லை. தமக்கு சித்தமான எதையும் அவரால் செய்ய முடியும் என்ற விசுவாசம் நமக்கு வேண்டும்.—ஆதியாகமம் 18:12-14.
“விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயது சென்றவளாயிருந்தும் பிள்ளை பெற்றாள்.” (எபிரெயர் 11:11) காலப்போக்கில், சாராள் ஈசாக்கைப் பெற்றெடுத்தாள், அவனுடைய பெயரின் அர்த்தம் “நகைப்பு” என்பதாகும்.
கடவுளின் வாக்குறுதிகளில் முழு நம்பிக்கை
நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு ஈசாக்குதான் என்பதை யெகோவா அடையாளம் காட்டினார். (ஆதியாகமம் 21:12) ஆகவே, அவனை பலியாக தர வேண்டுமென கடவுள் கேட்டபோது ஆபிரகாமுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், கடவுளை முழுமையாக நம்ப ஆபிரகாமுக்கு நல்ல காரணங்கள் இருந்தன. ஈசாக்கை மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்ப யெகோவாவிற்கு சக்தி இருந்தது அல்லவா? (எபிரெயர் 11:17-19) ஈசாக்கைப் பெற்றெடுக்க இனப்பெருக்கம் செய்யும் சக்தியை ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் அற்புதகரமாக புதுப்பித்து தந்ததன் மூலம் கடவுள் தமது வல்லமையை நிரூபித்திருந்தார் அல்லவா? ஆகவே, கடவுளுக்கு தமது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வல்லமை இருப்பதை ஆபிரகாம் உறுதியாக நம்பினார், அதனால் அவருக்குக் கீழ்ப்படிய தயாராக இருந்தார். அவர் தனது மகனை கொலை செய்யவிருந்த தருணத்தில் தடுக்கப்பட்டார் என்பது உண்மைதான். (ஆதியாகமம் 22:1-14) ஆனால் இதன் சம்பந்தமாக ஆபிரகாம் வகித்த பாகம், ‘விசுவாசிக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவதற்காக’ யெகோவா ‘தமது ஒரேபேறான குமாரனை கொடுத்தது’ அவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.—யோவான் 3:16; மத்தேயு 20:28.
யெகோவாவின் மீது ஆபிரகாம் விசுவாசம் வைத்திருந்ததால், அவரது வாக்குறுதிகளின்படி பிறந்த வாரிசு கானான் தேசத்து பொய் வணக்கத்தாளை மணமுடிக்க முடியாது என்பதை அறிந்திருந்தார். தேவபக்தியுள்ள பெற்றோர், யெகோவாவை வணங்காத ஒருத்தியை எப்படி தங்கள் பிள்ளைக்கு மணமுடித்து வைக்க முடியும்? அதனால் ஈசாக்கிற்காக ஆபிரகாம் ஒரு பொருத்தமான மனைவியை 800 கிலோமீட்டருக்கு அப்பால் மெசொப்பொத்தாமியாவிலிருந்த தனது உறவினர்கள் மத்தியில் தேடினார். கடவுள் அந்த முயற்சியை ஆசீர்வதித்து, ரெபெக்காளே ஈசாக்கின் மணமகளாக ஆவதற்கும் மேசியாவின் முன்னோராக இருப்பதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் என்பதை சுட்டிக்காட்டினார். ஆம், யெகோவா “ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.”—ஆதியாகமம் 24:1-67; மத்தேயு 1:1, 2.
எல்லா தேசத்தாருக்கும் ஆசீர்வாதங்கள்
சோதனைகளை சகித்திருப்பதிலும் கடவுளுடைய வாக்குறுதிகளில் விசுவாசத்தை காண்பிப்பதிலும் ஆபிரகாமும் சாராளும் முன்மாதிரியாக திகழ்ந்தார்கள். இத்தகைய வாக்குறுதிகளின் நிறைவேற்றம் மனிதகுலத்தின் நித்திய ஆசீர்வாதங்களோடு தொடர்புடையதாக இருக்கிறது, ஏனென்றால் ஆபிரகாமுக்கு யெகோவா இவ்வாறு உறுதியளித்தார்: “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.”—ஆதியாகமம் 22:18.
நம்மைப் போலவே ஆபிரகாமும் சாராளும் அபூரணராக இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் கடவுளுடைய சித்தம் என்ன என்பது அவர்களுக்குத் தெளிவானபோது, அதனால் எவ்வளவு தியாகம் செய்ய வேண்டியதாயிருந்தாலும், அவர்கள் உடனடியாக அதற்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆகவேதான், ஆபிரகாம் ‘யெகோவாவின் சிநேகிதன்’ என்றும், சாராள் “தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீ” என்றும் நினைவுகூரப்படுகிறார்கள். (யாக்கோபு 2:23; 1 பேதுரு 3:5) ஆபிரகாம் மற்றும் சாராள் காண்பித்த விசுவாசத்தைப் பின்பற்ற கடினமாக முயலுவதன் மூலம் நாமும் கடவுளுடன் அருமையான உறவை அனுபவித்து மகிழலாம். ஆபிரகாமுக்கு யெகோவா கொடுத்த அருமையான வாக்குறுதிகளிலிருந்தும் நன்மை அடையலாம்.—ஆதியாகமம் 17:7.
[பக்கம் 26-ன் படம்]
அவர்களுடைய விசுவாசத்தின் நிமித்தம், முதிர்வயதில் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஒரு மகனை கொடுத்து யெகோவா ஆசீர்வதித்தார்
[பக்கம் 28-ன் படம்]
யெகோவா தமது ஒரேபேறான குமாரனை மரிக்க அனுமதித்தது அவரை எந்தளவு பாதித்தது என்பதைப் புரிந்துகொள்ள ஆபிரகாமின் உதாரணம் நமக்கு உதவுகிறது