‘இந்தத் திராட்சைச் செடியை கவனித்துக் கொள்ளும்’!
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வேவுபார்க்க சென்ற 12 பேரும் அந்தத் தேசமெங்கும் சுற்றித் திரிந்தார்கள். அந்தத் தேசத்தார் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்து வரும்படியும் அதன் விளைச்சலில் கொஞ்சத்தைக் கொண்டு வரும்படியும் மோசே அவர்களிடம் கூறியிருந்தார். தேசத்தின் விளைச்சலில் எது அவர்களுடைய கண்களைக் கவர்ந்தது? எபிரோனுக்கு அருகிலிருந்த திராட்சைத் தோட்டத்தின் கனிகள்தான். அந்தக் கனிகள் அவ்வளவு பெரியதாக இருந்ததால் இரண்டுபேர் சேர்ந்து ஒரு திராட்சைக் குலையைத் தூக்க வேண்டியிருந்தது. அந்த இடத்தின் விளைச்சல் அவர்களுடைய மனதை அந்தளவிற்கு கவர்ந்ததால் செழுமையான அவ்விடத்திற்கு “எஸ்கோல் பள்ளத்தாக்கு” என்று பெயரிட்டார்கள், எஸ்கோல் என்பதன் அர்த்தம் ‘திராட்சைக் குலைகள்’ என்பதாகும்.—எண்ணாகமம் 13:21-24.
19-ம் நூற்றாண்டில், பாலஸ்தீனாவைச் சுற்றிப்பார்க்க சென்ற ஒருவர் இவ்வாறு கூறினார்: “எஸ்கோலில், அதாவது திராட்சை பள்ளத்தாக்கில் . . . இன்றும் திராட்சைச் செடிகள் ஏராளம் உள்ளன; அங்கு விளையும் திராட்சைதான் பாலஸ்தீனாவில் உள்ளதிலேயே அருமையானவை, மிகப்பெரியவை.” எஸ்கோல் பள்ளத்தாக்கின் திராட்சைச் செடிகள் விசேஷித்தவையாய் இருந்தபோதிலும், பைபிள் காலங்களில் பாலஸ்தீனாவின் பெரும்பாலான பகுதிகளில் அருமையான திராட்சை விளைந்தது. பார்வோன்கள், கானான் தேசத்திலிருந்துதான் திராட்சை மதுவை இறக்குமதி செய்ததாக எகிப்திய ஆவணங்கள் காட்டுகின்றன.
“[பாலஸ்தீனாவின்] கரடுமுரடான மலைச்சரிவுகள் திராட்சை சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. ஏனெனில், அதன் மண் மணற்பாங்கானது, அங்கு சூரியவொளி தாராளமாக கிடைத்தது; கோடையில் போதுமான வெப்பம் கிடைத்தது, குளிர்காலத்தில் பெய்த மழை நீரும் தேங்கி நிற்காமல் ஓடிவிட்டது. இவை அனைத்தும் ஒருசேர அமைந்திருந்ததால் அது திராட்சை சாகுபடிக்கு பொருத்தமான இடமாகும்” என த நாச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் த பைபிள் என்ற புத்தகம் கூறுகிறது. சில இடங்களில் ஆயிரம் திராட்சைச் செடிகள் வரை இருந்ததாக ஏசாயா கூறினார்.—ஏசாயா 7:23.
‘திராட்சைச் செடிகளுள்ள தேசம்’
‘திராட்சைச் செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள’ தேசத்தில்தான் அவர்கள் குடியிருக்கப் போகிறார்கள் என்று இஸ்ரவேலரிடம் மோசே கூறினார். (உபாகமம் 8:8) பைபிள் தாவரங்களின் பேக்கர் என்ஸைக்ளோப்பீடியா (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “பூர்வ பாலஸ்தீனாவில் திராட்சைச் செடிகள் எங்கும் நிறைந்திருந்தன; அதனால்தான், அங்கே அகழ்வாராய்ச்சிக்காக தோண்டிய பெரும்பாலான இடங்களில் திராட்சைக் கொட்டைகளைக் காண முடிந்தது.” பொ.ச.மு. 607-ல் நேபுகாத்நேச்சாரின் படைகள் யூதா தேசத்தை பாழாக்கியபோதிலும் அங்கு மீந்திருந்த ஜனங்கள், “திராட்சரசத்தையும் பழங்களையும் மிகுதியாய்ச் சேர்த்து வைத்தார்கள்.” அந்தத் தேசத்தின் திராட்சைச் செடிகள் அந்தளவு செழுமையாக இருந்தன.—எரேமியா 40:12; 52:16.
அதிகமான திராட்சை மதுவைப் பெறுவதற்காக, இஸ்ரவேல் விவசாயிகள் திராட்சைச் செடிகளை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இஸ்ரவேலிலிருந்த திராட்சைத் தோட்டக்காரரின் நடவடிக்கைகளை ஏசாயா புத்தகம் பின்வருமாறு விவரிக்கிறது: அவர் மலைச்சரிவில் ஒரு நிலத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அதிலிருக்கும் பெரிய பெரிய கற்களை எல்லாம் அகற்றிவிட்டு ‘நற்குல திராட்சைச் செடிகளை’ அதிலே நடுகிறார். பிறகு, நிலத்திலிருந்து அகற்றிய கற்களையே உபயோகித்து அதைச் சுற்றிலும் ஒரு சுவரை எழுப்புவார். இந்தச் சுவர், ஆடு மாடுகள் திராட்சைச் செடிகளை மிதித்துப்போடாமல் இருக்க உதவும்; அதோடு நரிகளும், காட்டுப் பன்றிகளும், திருடர்களும் உள்ளே நுழையாமல் பாதுகாக்கவும் உதவும். தோட்டத்திலே ஒரு திராட்சை ஆலையையும் ஒரு சிறிய கோபுரத்தையும்கூட அவர் கட்டுவார். அறுவடை காலத்தில் திராட்சைச் செடிகளுக்கு அதிகமான பாதுகாப்பு தேவை என்பதால் அந்தச் சமயத்தில் குளுகுளுவென்றிருக்கும் அந்தக் கோபுரத்தில் அவர் தங்கிக்கொள்ள முடியும். இந்த முதல் கட்ட வேலைகளையெல்லாம் செய்துவிட்ட பிறகு நல்ல மகசூலை அவர் எதிர்பார்க்கலாம்.—ஏசாயா 5:1, 2.a
நல்ல மகசூலைப் பெற விரும்பும் விவசாயி, திராட்சைக் கொடிகளை அடிக்கடி வெட்டிவிடுவார்; அப்போதுதான் அது செழிப்பாக வளரும். களைகள், முட்செடிகள் போன்றவை வளருவதைத் தடுக்க அவர் நிலத்தையும் அடிக்கடி கொத்திவிடுவார். வசந்த காலத்தில் போதுமான மழை பெய்யவில்லை என்றால் கோடை காலத்தில் அவர் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவார்.—ஏசாயா 5:6; 18:5; 27:2-4.
கோடை காலத்தின் முடிவில் நடக்கும் திராட்சை அறுவடை, மகிழ்ச்சிபொங்கும் ஒரு சமயமாகும். (ஏசாயா 16:10) மூன்று சங்கீதங்களின் மேற்குறிப்பில், “கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க” என்ற சொற்றொடர் காணப்படுகிறது. (சங்கீதம் 8, 81, 84) இசையோடு சம்பந்தப்பட்ட இந்த வார்த்தையின் அர்த்தம் சரியாக தெரியவில்லை என்றாலும், இது செப்டுவஜின்டில் “திராட்சை ஆலைகள்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே, திராட்சை அறுவடையின்போது இஸ்ரவேலர் இந்தச் சங்கீதங்களைப் பாடியிருக்கலாம் என தெரிகிறது. மது தயாரிப்பதற்காகவே திராட்சை முக்கியமாக பயன்படுத்தப்பட்டாலும், இஸ்ரவேலர் திராட்சையை அப்படியே பழமாகவும் சாப்பிட்டார்கள், உலர வைத்தும் சாப்பிட்டார்கள்.—1 சாமுவேல் 25:18; 2 சாமுவேல் 16:1.
இஸ்ரவேல் எனும் திராட்சைச் செடி
பைபிள், கடவுளுடைய ஜனங்களை அடிக்கடி திராட்சை செடியாக வர்ணிக்கிறது. இஸ்ரவேலருக்கு திராட்சைச் செடி மிகவும் முக்கியமானதாக இருந்ததால் இந்த ஒப்புமை பொருத்தமாக இருந்தது. 80-ம் சங்கீதத்தில் ஆசாப், கானானில் யெகோவா நாட்டிய திராட்சைச் செடிக்கு இஸ்ரவேல் தேசத்தை ஒப்பிடுகிறார். இஸ்ரவேல் எனும் திராட்சைச் செடி வேரூன்றி, ஓங்கி வளருவதற்காக அந்தத் தேசம் சுத்திகரிக்கப்பட்டது. ஆனால், வருடங்கள் பல கடந்தபோது, அதைச் சுற்றிலுமிருந்த பாதுகாப்பு சுவர்கள் இடிந்து விழுந்தன. அந்தத் தேசம் யெகோவா தேவன்மேல் தொடர்ந்து நம்பிக்கை வைக்கவில்லை, அவரும் அதற்கு பாதுகாப்பு அளிப்பதை நிறுத்திவிட்டார். ஒரு காட்டுப் பன்றி திராட்சைத் தோட்டத்திற்குள் புகுந்து நாசம் ஏற்படுத்துவதைப் போல, இஸ்ரவேலின் செல்வங்களை எல்லாம் எதிரிகள் கொள்ளையடித்தார்கள். அதன் முந்தைய மகிமையை மீண்டும் பெற இஸ்ரவேலுக்கு உதவும்படி யெகோவாவிடம் ஆசாப் ஜெபித்தார். ‘இந்தத் திராட்சைச் செடியை விசாரித்தருளும் [அல்லது கவனித்துக் கொள்ளும்]’ என்று அவர் மன்றாடினார்.—சங்கீதம் 80:8-15.
“கசப்பான பழங்களை” அல்லது கெட்டுப்போன, காட்டுப் பழங்களைத் தந்த திராட்சைத் தோட்டத்திற்கு ‘இஸ்ரவேல் வம்சத்தாரை’ ஏசாயா ஒப்பிட்டார். (ஏசாயா 5:2, 7) பயிரிடப்படும் திராட்சையைவிட காட்டு திராட்சை மிகவும் சிறியதாக இருக்கும்; அதன் விதையே பழத்தில் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பதால் சதைப்பற்று குறைவாக இருக்கும். காட்டு திராட்சைகள் மது எடுக்கவும் பயன்படாது, அவற்றை சாப்பிடவும் முடியாது. நீதிக்கு பதிலாக அநீதியைப் பிறப்பித்த விசுவாசதுரோக தேசத்திற்கு அது எவ்வளவு பொருத்தமான அடையாளம்! இந்த மோசமான விளைச்சலுக்கு திராட்சைச் செடியை நாட்டியவர் காரணமல்ல. அந்தத் தேசம் பலன் தருவதற்காக தம்மால் முடிந்த எல்லாவற்றையும் யெகோவா செய்திருந்தார். ‘நான் என் திராட்சைத் தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்?’ என்று அவர் கேட்டார்.—ஏசாயா 5:4.
இஸ்ரவேல் எனும் திராட்சைச் செடி பலன் தரவில்லை என்பதால் தமது மக்களைச் சுற்றிலும் கட்டியிருந்த பாதுகாப்பு சுவரை தாமே உடைக்கப்போவதாக யெகோவா எச்சரித்தார். அடையாள அர்த்தமுள்ள தமது திராட்சைச் செடியின் கொடிகளை அவர் இனியும் வெட்டிவிடமாட்டார், அதன் மண்ணையும் கொத்திவிடமாட்டார். திராட்சைச் செடிகளுக்கு மிகவும் அவசியமான வசந்தகால மழை இனியும் பெய்யாது, முட்செடிகளும் களைகளும் திராட்சைத் தோட்டம் முழுவதையும் ஆக்கிரமிக்கும்.—ஏசாயா 5:5, 6.
இஸ்ரவேலின் விசுவாசதுரோகம் காரணமாக அவர்களுடைய திராட்சைத் தோட்டங்களும்கூட வாடிவதங்கும் என மோசே தீர்க்கதரிசனம் உரைத்தார். ‘திராட்சைத் தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சை ரசம் குடிப்பதும் இல்லை, திராட்சைப் பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுபோடும்.’ (உபாகமம் 28:39) திராட்சைச் செடியின் முக்கிய தண்டிற்குள் ஒரு புழு நுழைந்து அதன் உட்புறத்தைத் தின்றுவிட்டால் அது ஓரிரு நாட்களில் வாடிவதங்கிவிடும்.—ஏசாயா 24:7.
‘மெய்யான திராட்சைச் செடி’
யெகோவா, இஸ்ரவேல் தேசத்தை திராட்சைச் செடிக்கு ஒப்பிட்டதைப் போலவே இயேசுவும் ஓர் உருவகத்தை உபயோகித்தார். தமது சீஷர்களோடு இருந்த கடைசி இரவன்று, ‘நான் மெய்யான திராட்சைச் செடி, என் பிதா திராட்சைத் தோட்டக்காரர்’ என்று இயேசு கூறினார். (யோவான் 15:1) தமது சீஷர்களை அந்தத் திராட்சைச் செடியின் கொடிகளுக்கு அவர் ஒப்பிட்டார். ஒரு திராட்சைச் செடியின் கொடிகள் அதன் முக்கிய தண்டிலிருந்து போஷாக்கைப் பெறுவதைப் போல இயேசுவின் சீஷர்களும் அவரோடு ஐக்கியமாக இருந்தால்தான் போஷாக்கைப் பெற முடியும். “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று கூறினார். (யோவான் 15:5) பலனைப் பெறுவதற்காகவே விவசாயிகள் திராட்சைச் செடிகளை வளர்க்கிறார்கள்; அதைப்போலவே, தமது மக்களும் ஆவிக்குரிய பலனைக் கொடுக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அப்படி பலன் கொடுக்கையில், திராட்சைச் செடியை வளர்த்தவரான கடவுளுக்கு மகிமையும் திருப்தியும் கிடைக்கின்றன.—யோவான் 15:8.
ஒரு திராட்சைச் செடியை வெட்டிவிட்டு நன்கு சுத்தம்செய்தால்தான் நல்ல பலன் தரும்; இந்த இரண்டு காரியங்களைப் பற்றியும் இயேசு குறிப்பிடுகிறார். திராட்சைச் தோட்டக்காரர் மிகவும் அதிகமான மகசூலைப் பெற திராட்சைச் செடியை வருடத்தில் இரண்டு முறை வெட்டிவிடுவார். குளிர் காலத்தில், ஒரு திராட்சைச் செடியின் கொடிகளில் பெரும்பாலானவை வெட்டிவிடப்படலாம். இந்தக் கொடிகள் எல்லாம் முந்தைய வருடத்தில் வளர்ந்தவை. முக்கிய தண்டிலிருந்து வரும் மூன்று, நான்கு கொடிகளை மட்டுமே அவர் விட்டுவைக்கலாம்; ஒவ்வொரு கொடியிலும் ஓரிரு துளிர்கள் இருக்கலாம். முந்தைய வருடத்தின் துளிர்களைப் போலவே இவை அடுத்த கோடை காலத்தில் கனிதரும் கொடிகளாக வளரும். இவ்வாறு வெட்டிய கொடிகளை எல்லாம் தோட்டக்காரர் கொளுத்திவிடுகிறார்.
அதிகமாக வெட்டிவிடப்படும் இந்தச் சந்தர்ப்பத்தை இயேசு பின்வருமாறு விவரிக்கிறார்: “ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.” (யோவான் 15:6) இந்தச் சமயத்தில் திராட்சைச் செடியைப் பார்த்தால் கொடிகளே இல்லாமல் மொட்டையாக இருப்பதுபோல் தோன்றலாம்; என்றாலும், வசந்த காலத்தில் மீண்டும் சிறிதளவு வெட்டிவிடப்படும்.
“என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்” என்று இயேசு கூறினார். (யோவான் 15:2) இது பிற்பாடு வெட்டிவிடப்படுவதைக் குறிக்கலாம். அதாவது திராட்சைச் செடி நன்கு வளர்ந்து, சிறுசிறு திராட்சைக் கொத்துக்கள் தென்பட ஆரம்பித்த பிறகு, கனிதராத கொடிகளை வெட்டிவிடுவதைக் குறிக்கலாம். தோட்டக்காரர் ஒவ்வொரு புதிய கொடியையும் கவனமாக ஆராய்ந்து எதில் பழம் இருக்கிறது, எதில் இல்லை என்று பார்க்கிறார். பழம் இல்லாத கொடிகளை செடியிலே விட்டுவைத்தால் அவை தொடர்ந்து ஊட்டச்சத்தையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டே இருக்கும். ஆகவே, பழம் இல்லாத கொடிகளை தோட்டக்காரர் வெட்டிவிடுகிறார்; அப்போதுதான் திராட்சைச் செடியின் ஊட்டச்சத்துகள் எல்லாம் பழம் உள்ள கொடிகளுக்கு கிடைக்கும்.
கடைசியாக, சுத்தப்படுத்தும் வேலையை இயேசு குறிப்பிடுகிறார். “கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.” (யோவான் 15:2) பழம் இல்லாத கொடிகள் நீக்கப்பட்ட பிறகு, பழம் உள்ள கொடிகள் ஒவ்வொன்றையும் தோட்டக்காரர் கவனமாக ஆராய்கிறார். அந்தக் கொடிகளின் ஆரம்பத்தில் சிறிய, புதிய துளிர்கள் நிச்சயம் வளர்ந்திருக்கும்; இவற்றையும் நீக்கியாக வேண்டும். இல்லையெனில், திராட்சைப் பழங்களுக்கு மிகவும் அவசியமான தண்ணீரை அவை உறிஞ்சிக்கொள்ளலாம். அவ்வாறே, சில பெரிய இலைகளும்கூட நீக்கப்படலாம். அப்போதுதான் திராட்சைப் பிஞ்சுகளுக்கு போதுமான சூரிய ஒளி கிடைக்கும். இப்படியெல்லாம் செய்தால்தான் பழம் உள்ள கொடிகள் இன்னும் ஏராளமான பலனைத் தரும்.
‘மிகுந்த கனிகளைக் கொடுங்கள்’
‘மெய்யான திராட்சைச் செடியின்’ அடையாள அர்த்தமுள்ள கொடிகள் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது. என்றாலும், ‘வேறே ஆடுகளைச்’ சேர்ந்தவர்களும்கூட கிறிஸ்துவின் பலன்தரும் சீஷர்களாக இருக்க வேண்டும். (யோவான் 10:16) அவர்களாலும்கூட ‘மிகுந்த கனிகளைக் கொடுத்து’ தங்கள் பரலோக தகப்பனுக்கு மகிமை சேர்க்க முடியும். (யோவான் 15:5, 8) நாம் இயேசுவோடு ஐக்கியமாக இருந்து, ஆன்மீக ரீதியில் நல்ல பலனைக் கொடுத்தால்தான் இரட்சிப்பைப் பெற முடியும் என்பதை மெய்யான திராட்சைச் செடி பற்றிய இயேசுவின் உவமை நமக்கு நினைப்பூட்டுகிறது. “நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” என்று இயேசு கூறினார்.—யோவான் 15:10.
சகரியாவின் காலத்தில், உண்மையுள்ள இஸ்ரவேலரின் மீதியானோருக்கு கடவுள் ஒரு வாக்குறுதி அளித்தார். தேசத்தில் மறுபடியும் ‘விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சைச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்’ என்பதே அந்த வாக்குறுதி. (சகரியா 8:12) கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியில் கடவுளுடைய ஜனங்கள் அனுபவிக்கப்போகும் சமாதானத்தை விவரிக்கவும் திராட்சைச் செடி உபயோகிக்கப்பட்டுள்ளது. ‘அவனவன் தன்தன் திராட்சைச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று’ என்று மீகா தீர்க்கதரிசனம் உரைத்தார்.—மீகா 4:4.
[அடிக்குறிப்பு]
a கருஞ்சிவப்பு நிற பழங்களைக் கொடுத்த திராட்சைச் செடிகளையே இஸ்ரவேல் விவசாயிகள் விரும்பியதாக என்ஸைக்ளோப்பீடியா ஜூடைக்கா கூறுகிறது. சாரேக் என்று அழைக்கப்படும் இந்த வகைச் செடிகளைப் பற்றித்தான் ஏசாயா 5:2 கூறுவதாக தோன்றுகிறது. இந்தத் திராட்சையிலிருந்து சிவந்தநிற, தித்திப்பான திராட்சை மது தயாரிக்கப்படுகிறது.
[பக்கம் 18-ன் படம்]
சமீபத்தில் வாடிவதங்கிய திராட்சைச் செடி
[பக்கம் 18-ன் படம்]
குளிர்காலத்தில் வெட்டிவிடுதல்
[பக்கம் 18-ன் படம்]
வெட்டப்பட்ட கொடிகள் எரிக்கப்படுதல்