‘காத்திருக்கும் மனப்பான்மை’ உங்களுக்கு இருக்கிறதா?
“நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்.”—2 பேதுரு 3:11, 12.
1, 2. யெகோவாவின் நாளுக்காக “காத்திருக்கும் மனப்பான்மையைக்” காட்டுவதை உதாரணத்தின் மூலம் எவ்வாறு விளக்கலாம்?
விருந்தாளிகளின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு குடும்பத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அவர்கள் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சாப்பாட்டை தயாரிப்பதில் கடைசியாக செய்ய வேண்டியவற்றை மனைவி சுறுசுறுப்பாய் செய்து கொண்டிருக்கிறாள். எல்லாம் ஆயத்தமாயிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க கணவரும் பிள்ளைகளும் கூடமாட உதவி செய்கிறார்கள். எல்லாரும் பரபரப்புடன் இருக்கின்றனர். விருந்தாளிகளை அகமலர வரவேற்பதற்கு முழு குடும்பமும் ஆவலோடு காத்திருக்கிறது, அறுசுவை உணவையும் இனிய கூட்டுறவையும் அனுபவிக்க காத்திருக்கிறது.
2 கிறிஸ்தவர்களாகிய நாம் அதைப் பார்க்கிலும் மிக முக்கியமான ஒன்றிற்காக காத்திருக்கிறோம். எதற்காக? நாம் எல்லாருமே ‘யெகோவாவின் நாளுக்காக’ காத்திருக்கிறோம்! அது வரும் வரையில், தீர்க்கதரிசியாகிய மீகாவைப் போல் நாம் இருக்க வேண்டும். அவர் இவ்வாறு சொன்னார்: “நானோ யெகோவாவுக்காக நோக்கியிருப்பேன். என் இரட்சிப்பின் கடவுளுக்காகக் காத்திருக்கும் மனப்பான்மையைக் காட்டுவேன்.” (மீகா 7:7, NW) காத்திருப்பது செயலற்றிருப்பதைக் குறிக்கிறதா? இல்லவே இல்லை. செய்வதற்கு நிறைய வேலை இருக்கிறது.
3. இரண்டு பேதுரு 3:11, 12-ன் பிரகாரம், கிறிஸ்தவர்களுக்கு என்ன மனப்பான்மை இருக்க வேண்டும்?
3 காத்திருக்கையில் சரியான மனப்பான்மையுடன் இருக்க அப்போஸ்தலன் பேதுரு நமக்கு உதவி செய்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருக்கையில், பரிசுத்த நடத்தைக்குரிய கிரியைகளிலும் தேவபக்திக்குரிய செயல்களிலும் நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்!” (2 பேதுரு 3:11, 12, NW) பேதுரு இதை ஒரு கேள்வியாக கேட்கவில்லை. மாறாக இது ஓர் ஆச்சரியக் கூற்று என்பதைக் கவனியுங்கள். தேவ ஆவியால் ஏவப்பட்ட தன் இரண்டு நிருபங்களில், கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவர் விவரித்தார். மேலும், ‘பரிசுத்த நடத்தைக்குரிய கிரியைகளையும் தேவபக்திக்குரிய செயல்களையும்’ தொடர்ந்து நடப்பித்து வரும்படியும் அறிவுரை கூறினார். “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை” பற்றிய அடையாளத்தை இயேசு கிறிஸ்து கொடுத்து ஏறக்குறைய 30 ஆண்டுகள் கடந்திருந்தபோதிலும், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியிருந்தது. (மத்தேயு 24:3, NW) அவர்கள் ‘தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருக்க’ வேண்டியிருந்தது.
4. ‘தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு காத்திருப்பதன்’ அர்த்தம் என்ன?
4 நிச்சயமாகவே, யெகோவாவின் நாளை நாம் ‘சீக்கிரமாய் வர வைக்க’ முடியாது. சொல்லப்போனால், இயேசு கிறிஸ்து தமது பிதாவின் சத்துருக்களின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றப் போகும் ‘நாளையும் நாழிகையையும்’கூட நாம் அறியாதிருக்கிறோமே. (மத்தேயு 24:36; 25:13) ‘சீக்கிரமாய் வர’ என்பதன் அடிப்படை வினைச்சொல், இந்தச் சூழலில் “‘அவசரப்படுத்த’ என்ற அர்த்தமுடையது, இவ்வாறு ஒன்றைப் பற்றி ‘ஆர்வமும் சுறுசுறுப்பும் அக்கறையும் உடையவர்களாய் இருப்பதோடு’ நெருங்கிய தொடர்புடையது” என்று ஒரு புத்தகம் விளக்குகிறது. ஆகவே, யெகோவாவின் நாள் வருவதற்காக ஆவலுடன் காத்திருக்கும்படி சக விசுவாசிகளை பேதுரு உந்துவிக்கிறார். அந்நாளை இடைவிடாமல் மனதில் வைப்பதன் மூலம் அதற்காக அவர்கள் காத்திருக்கலாம். (2 பேதுரு 3:12) “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்” இப்போது அவ்வளவு சமீபமாயிருப்பதால், நமக்கும் அதே மனப்பான்மை இருக்க வேண்டும்.—யோவேல் 2:31.
‘பரிசுத்த நடத்தைக்குரிய கிரியைகள்’ உள்ளவர்களாய் காத்திருங்கள்
5. யெகோவாவின் நாளைக் காண மிகுந்த ஆவலுடன் இருக்கிறோமென்று நாம் எப்படி காட்டலாம்?
5 யெகோவாவின் நாளில் தப்பிப்பிழைக்க நாம் மிகுந்த ஆவலுடன் இருக்கிறோமென்றால், நமது “பரிசுத்த நடத்தைக்குரிய கிரியைகளும் தேவபக்திக்குரிய செயல்களும்” அதைத் தெளிவாக காட்டும். ‘பரிசுத்த நடத்தைக்குரிய கிரியைகள்’ என்ற சொற்றொடர், பேதுருவின் இந்த அறிவுரையை நமக்கு நினைப்பூட்டலாம்: “நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.”—1 பேதுரு 1:14-16.
6. பரிசுத்தராயிருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
6 பரிசுத்தராயிருப்பதற்கு உடல், மனம், ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய சுத்தத்தை நாம் காத்துவர வேண்டும். யெகோவாவின் பெயரைத் தரித்திருக்கும் தனிப்பட்ட நபர்களாக, நம்மை பரிசுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் ‘யெகோவாவின் நாளுக்காக’ ஆயத்தமாகிறோமா? ஆவிக்குரிய தூய்மையைக் காத்து வருவது இன்று எளிதல்ல, ஏனெனில், இந்த உலகத்தின் ஒழுக்க தராதரங்கள் படிப்படியாக சீரழிந்து வருகின்றன. (1 கொரிந்தியர் 7:31; 2 தீமோத்தேயு 3:13) ஒழுக்க தராதரங்களைப் பொறுத்தமட்டில், நமக்கும் இந்த உலகிற்கும் இடையே உள்ள வேறுபாடு அதிகரித்துக்கொண்டே போவதை காண்கிறோமா? இல்லையென்றால், இது கவனிக்க வேண்டிய விஷயம். இவ்வுலக தராதரங்களைப் பார்க்கிலும் நம்முடைய தனிப்பட்ட தராதரங்கள் உயர்ந்தவையாக இருக்கிறபோதிலும், அவை சீரழிந்து வருகின்றனவா? அப்படியானால், கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு, நம்மை நாமே திருத்திக்கொள்ள திட்டவட்டமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7, 8. (அ) ‘பரிசுத்த நடத்தைக்குரிய கிரியைகளில்’ ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை நாம் எவ்வாறு மறந்துவிடக்கூடும்? (ஆ) நம்மை திருத்திக்கொள்ள என்ன படிகளை எடுக்கலாம்?
7 ஒரு காலத்தில் ஆபாசமான ஒழுக்கங்கெட்ட காரியங்களைப் பார்க்க முடியாமல் இருந்த சிலர் இப்போதோ இன்டர்நெட் மூலம் “கணக்கு வழக்கில்லாத பாலியல் காட்சிகளைக்” காண்கிறார்கள் என ஒரு மருத்துவர் சொல்கிறார். அதுவும் தனியாக உட்கார்ந்து அதைப் பார்க்கும் வசதி வேறு இருப்பதால் கேட்கவே வேண்டாம். அத்தகைய அசுத்தமான இன்டர்நெட் சைட்டுகளை நாம் நாடுவோமானால், “அசுத்தமானதைத் தொடாதிருங்கள்” என்ற பைபிளின் கட்டளையை புறக்கணிக்கிறவர்களாகவே இருப்போம். (ஏசாயா 52:11) நாம் உண்மையில் ‘தேவனுடைய நாள் சீக்கிரமாய் வர காத்திருக்கிறவர்களாய்’ இருப்போமா? அல்லது, அசுத்தமான காரியங்களால் நம் மனதை களங்கப்படுத்தி வந்தாலுங்கூட நம்மை சுத்திகரித்துக்கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது என்ற நினைப்போடு, நம் மனதில் அந்த நாளைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறோமா? இவ்விஷயத்தில் நம்மிடம் பிரச்சினை இருந்தால், “வீணானவற்றைப் பாராதபடி நீர் என் கண்களைத் திருப்பியருளும்; உமது வழிகளில் என்னை உயிர்ப்பித்தருளும்” என்று நாம் யெகோவாவிடம் உடனடியாக மன்றாடுவது எவ்வளவு முக்கியம்!—சங்கீதம் 119:37, தி.மொ.
8 இளைஞர், பெரியோர் என யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலோர் கடவுளுடைய உயர்ந்த ஒழுக்க தராதரங்களை விடாது கடைப்பிடிக்கிறார்கள், இவ்வுலகத்தின் ஒழுக்கங்கெட்ட வசீகரங்களைத் தவிர்க்கிறார்கள். நம்முடைய காலங்களின் அவசரத் தன்மையையும், “யெகோவாவின் நாள் திருடன் வருகிற விதமாய் வரும்” என்ற பேதுருவின் எச்சரிக்கையையும் அறிந்து ‘பரிசுத்த நடத்தைக்குரிய கிரியைகளை’ தொடர்ந்து நடப்பிக்கிறார்கள். (2 பேதுரு 3:10, NW) ‘தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருக்கிறார்கள்’ என்பதை அவர்களது செயல்கள் நிரூபிக்கின்றன.a
‘தேவபக்திக்குரிய செயல்கள்’ செய்தவாறே காத்திருங்கள்
9. என்ன செய்யும்படி தேவபக்தி நம்மை தூண்ட வேண்டும்?
9 யெகோவாவின் நாளை நாம் மனதில் வைக்க வேண்டுமானால், ‘தேவபக்திக்குரிய செயல்களும்’ முக்கியமானவை. ‘தேவபக்தி’ என்பது கடவுளுடைய பார்வையில் பிரியமானதைச் செய்யும்படி நம்மை தூண்டுகிற பயபக்தியை உட்படுத்துகிறது. யெகோவா மீதுள்ள உண்மைப் பற்றுறுதியே அத்தகைய தேவபக்திக்குரிய செயல்களை செய்ய தூண்டுகிறது. “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டுமென்பது அவருடைய சித்தமாயிருக்கிறது. (1 தீமோத்தேயு 2:4) “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று” கடவுள் விரும்புகிறார். (2 பேதுரு 3:9) ஆகையால், யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ளவும் அவருடைய மாதிரியைப் பின்பற்றவும் ஆட்களுக்கு உதவிசெய்ய இன்னும் தீவிரமாக முயற்சி எடுக்கும்படி நம் தேவபக்தி நம்மை தூண்ட வேண்டும் அல்லவா?—எபேசியர் 5:1.
10. ‘ஐசுவரியத்தின் மயக்கத்திலிருந்து’ நம்மை ஏன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்?
10 கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவதாக தேடுவோமாகில், நம் வாழ்க்கை தேவபக்திக்குரிய செயல்களால் நிரம்பியிருக்கும். (மத்தேயு 6:33) இதற்காக நாம் பொருளாதார காரியங்களைப் பற்றிய சமநிலையான நோக்கு உடையோராக இருப்பது அவசியம். இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” (லூக்கா 12:15) பண ஆசை நம் கண்களை எப்படி குருடாக்கும் என்பதை கற்பனை செய்வது கடினமென்றாலும், ‘உலகக் கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும்’ கடவுளுடைய ‘வசனத்தை நெருக்கிப் போடக்கூடும்’ என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். (மத்தேயு 13:22) வாழ்க்கையை ஓட்டுவது ஒருவேளை கடினமாக இருக்கலாம். ஆகவே, வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதற்காக சில வருஷங்களுக்கு தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வளமிக்க வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமென அநேகர் நினைக்கின்றனர்; கடவுளுடைய ஜனங்களில் சிலருங்கூட இந்த முடிவுக்கே வந்திருக்கின்றனர். வேறொரு நாட்டுக்குச் செல்வதன் மூலம் தங்கள் குடும்பத்திற்கு நவீன சௌகரியங்களை அவர்கள் ஒருவேளை அளிக்கலாம். ஆனால் வீட்டில் இருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களின் ஆவிக்குரிய நிலை என்னவாகும்? வீட்டில் சரியான தலைமை வகிப்பு இல்லாத நிலையில், யெகோவாவின் நாளை தப்பிப் பிழைப்பதற்குத் தேவைப்படும் ஆவிக்குரிய பலம் அவர்களுக்கு இருக்குமா?
11. ஐசுவரியத்தைப் பார்க்கிலும் தேவபக்திக்குரிய செயல்கள் அதிக முக்கியம் என்பதை வேலை தேடி வெளிநாடு சென்றிருந்த ஒருவர் எவ்வாறு காட்டினார்?
11 பிலிப்பீன்ஸிலிருந்து ஜப்பானுக்கு வேலை தேடி சென்ற ஒருவர் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து பைபிள் சத்தியத்தைக் கற்றார். தலைமை வகிப்புக்குரிய வேதப்பூர்வ பொறுப்புகளைப் பற்றி கற்றபோது, யெகோவாவின் வணக்கத்தைப் பற்றி தன் குடும்பத்தாருக்கு கற்றுக் கொடுக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதை உணர்ந்தார். (1 கொரிந்தியர் 11:3) பிலிப்பீன்ஸிலிருந்த அவருடைய மனைவியோ, அந்தப் புதிய மதத்தை கடுமையாய் எதிர்த்தாள். அவளுடைய கணவர் தாய்நாடு திரும்பி வந்து பைபிள் சத்தியங்களை கற்றுக் கொடுப்பதை அவள் விரும்பவில்லை, மாறாக, தொடர்ந்து பணத்தை மட்டுமே அனுப்பும்படி விரும்பினாள். ஆனால் அவரோ, காலத்தின் அவசரத் தன்மையை உணர்ந்தவராக, தன் குடும்பத்தின் மீதான அக்கறையால் தூண்டப்பட்டவராக தாயகம் திரும்பினார். தன் குடும்பத்தினரை அன்போடும் பொறுமையோடும் நடத்தினார்; அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. காலப்போக்கில், அவருடைய குடும்பத்தினர் உண்மை வணக்கத்தில் ஒன்றுபட்டனர். அவருடைய மனைவி முழுநேர ஊழியத்தை ஏற்றாள்.
12. வாழ்க்கையில் ஆவிக்குரிய அக்கறைகளை நாம் ஏன் முதலில் வைக்க வேண்டும்?
12 தீப்பிடித்து எரிகிற ஒரு கட்டிடத்தில் சிக்கியிருக்கும் ஆட்களோடு நம்முடைய சூழ்நிலையை ஒப்பிடலாம். இடிந்து தரைமட்டமாகும் நிலையிலுள்ள அந்தக் கட்டிடத்திலிருந்து பொருட்களை எடுப்பதற்காக வெறிகொண்டு இங்குமங்குமாய் ஓடுவது ஞானமாய் இருக்குமா? நம் உயிரையும், நம் குடும்பத்தினருடைய உயிரையும், அந்தக் கட்டிடத்தில் வாழும் மற்றவர்களுடைய உயிர்களையும் காப்பாற்றுவதே அதைவிட முக்கியம் அல்லவா? இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறை விரைவில் அழியப்போகிறது, உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன. இதைத் தெளிவாக உணர்ந்தவர்களாக, நாம் ஆவிக்குரிய அக்கறைகளை முதலாவதாக வைத்து, உயிர் காக்கும் ராஜ்ய பிரசங்கிப்பு ஊழியத்தில் மும்முரமாகவும் ஆர்வத்தோடும் ஈடுபட வேண்டும்.—1 தீமோத்தேயு 4:16.
நாம் ‘கறையற்றவர்களாக’ இருக்க வேண்டும்
13. யெகோவாவின் நாள் வருகையில் நாம் என்ன நிலையில் இருக்க விரும்புவோம்?
13 காத்திருக்கும் மனப்பான்மையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்தி பேதுரு இவ்வாறு சொல்கிறார்: “ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் [கடவுள்] சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.” (2 பேதுரு 3:14) பரிசுத்த நடத்தைக்குரிய கிரியைகளிலும் தேவபக்திக்குரிய செயல்களிலும் ஈடுபடும்படி மட்டுமே பேதுரு அறிவுறுத்தாமல், இயேசுவின் அருமையான இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்ட ஆட்களாக முடிவில் யெகோவாவுக்கு முன் காணப்படுவதன் முக்கியத்துவத்தையும் அழுத்திக் காட்டுகிறார். (வெளிப்படுத்துதல் 7:9, 14) இதற்கு, ஒருவர் இயேசுவின் பலியில் விசுவாசம் வைத்து, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட ஊழியராக வேண்டும்.
14. “கறையற்றவர்களாக” இருப்பது எதை உட்படுத்துகிறது?
14 “கறையற்றவர்களாக” காணப்பட நம்மால் முடிந்ததை செய்யும்படி பேதுரு நம்மை ஊக்குவிக்கிறார். கிறிஸ்தவ நடத்தை எனும் நம்முடைய உடையை நாம் கறையற்றதாகவும், இவ்வுலகத்தால் பழுதாகாதவாறும் வைத்துக் கொள்கிறோமா? நம்முடைய உடைகளில் ஒரு சிறு கறையை கண்டவுடனேயே அதை நீக்க நாம் முயற்சி செய்கிறோம். அதுவும் நமக்குப் பிடித்தமான ஆடையாக இருந்தால், அந்தக் கறையை நீக்குவதிலேயே குறியாக இருக்கிறோம். நம்முடைய குணாம்சத்தில் அல்லது நடத்தையில் உள்ள ஏதோவொரு கோளாறினால் நம் கிறிஸ்தவ உடை கறையாகும்போது அவ்வாறே உணருகிறோமா?
15. (அ) இஸ்ரவேலர் ஏன் தங்கள் வஸ்திரங்களின் ஓரத்தில் தொங்கல்கள் வைக்க வேண்டியிருந்தது? (ஆ) யெகோவாவின் ஊழியர்கள் மற்றவர்களிடமிருந்து ஏன் வித்தியாசப்படுகிறார்கள்?
15 இஸ்ரவேலர் “தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட” வேண்டியிருந்தது. ஏன்? யெகோவாவின் கற்பனைகளை அவர்கள் நினைவுகூர்ந்து, அவற்றிற்குக் கீழ்ப்படிந்து, தங்கள் கடவுளுக்குப் ‘பரிசுத்தராயிருப்பதற்காக’ அப்படி செய்ய வேண்டியிருந்தது. (எண்ணாகமம் 15:37-40) யெகோவாவின் ஊழியர்களாக நாம் கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் கைக்கொள்வதால், மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறோம். உதாரணமாக, ஒழுக்க சுத்தத்தை நாம் காத்து வருகிறோம், இரத்தத்தின் புனிதத் தன்மையை மதிக்கிறோம், சகலவித விக்கிரகாராதனையையும் தவிர்க்கிறோம். (அப்போஸ்தலர் 15:28, 29) கறைபடாதவர்களாக இருக்க வேண்டுமென்ற நம் திட தீர்மானத்திற்காக பலர் நம்மை மதிக்கிறார்கள்.—யாக்கோபு 1:27.
“பிழையில்லாதவர்களாய்” நாம் இருக்க வேண்டும்
16. “பிழையில்லாதவர்களாய்” நம்மை வைத்துக்கொள்வதில் எது உட்படுகிறது?
16 “பிழையில்லாதவர்களாய்” நாம் காணப்பட வேண்டுமென்றும் பேதுரு சொல்கிறார். இது எப்படி சாத்தியம்? பொதுவாக, ஒரு கறையை துடைத்து சுத்தப்படுத்திவிடலாம், ஆனால் ஒரு பிழையை அவ்வாறு நீக்க முடியாது. ஒரு பிழை, உள்ளுக்குள் ஏதோ அதிக மோசமான தவறுள்ளது என்பதைக் காட்டுகிறது. பிலிப்பியிலிருந்த சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “உலகத்திலே சுடர்களைப் போல பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.” (பிலிப்பியர் 2:15, 16) இந்த அறிவுரையை நாம் பின்பற்றுவோமானால், முறுமுறுப்புகளையும் விவாதங்களையும் தவிர்த்து, களங்கமில்லா நோக்குடன் கடவுளை சேவிப்போம். “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தியை” நாம் பிரசங்கித்து வருகையில், யெகோவாவின் மீதும் மற்றவர்கள் மீதுமுள்ள அன்பால் தூண்டப்படுவோம். (மத்தேயு 22:35-40; 24:14) மேலும், கடவுளையும் அவருடைய வார்த்தையாகிய பைபிளையும் பற்றி கற்றுக்கொள்ளும்படி மற்றவர்களுக்கு உதவ நாம் ஏன் மனமுவந்து நம் நேரத்தை செலவிடுகிறோம் என்பதை அநேக ஜனங்கள் புரிந்துகொள்ளாவிடினும், தொடர்ந்து நற்செய்தியை யாவரறிய அறிவித்து வருவோம்.
17. கிறிஸ்தவ சபையில் ஊழிய சிலாக்கியங்களுக்காக பிரயாசப்படுகையில் நம் உள்நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?
17 “பிழையில்லாதவர்களாய்” காணப்படும்படி நாம் விரும்புவதால், நம்முடைய எல்லா ஈடுபாடுகளிலும் நம் உள்நோக்கங்களை கூர்ந்தாராய வேண்டும். சுயநலத்திற்காக, ஐசுவரியங்களை அல்லது செல்வாக்கை அடைய முயலுவது போன்ற தன்னல காரியங்களைச் செய்யும் இந்த உலகத்தின் போக்கை நாம் விட்டுவிட்டிருக்கிறோம். கிறிஸ்தவ சபையில் ஊழிய சிலாக்கியங்களைப் பெற்றுக்கொள்ள நாம் பிரயாசப்பட்டால், நம்முடைய உள்நோக்கம் கறையற்றதாகவும், யெகோவா மீதும் மற்றவர்கள் மீதுமுள்ள அன்பால் தூண்டப்பட்டதாகவும் எப்போதும் நிலைத்திருப்பதாக. யெகோவாவுக்கும் தங்கள் உடன் விசுவாசிகளுக்கும் மகிழ்ச்சியோடு சேவை செய்ய வேண்டுமென்ற தாழ்மையான ஆவலுடன் ‘கண்காணிப்பை விரும்பும்’ ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள சகோதரர்களைக் காண்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. (1 தீமோத்தேயு 3:1; 2 கொரிந்தியர் 1:24) நிச்சயமாகவே, மூப்பர்களாக சேவை செய்ய தகுதி பெற்றவர்கள், “தேவனுடைய மந்தையை . . . கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு” செய்கிறார்கள்.—1 பேதுரு 5:1-4.
“சமாதானத்தோடே” நாம் இருக்க வேண்டும்
18. யெகோவாவின் சாட்சிகள் எந்தப் பண்புகளுக்கு பெயர் பெற்றவர்கள்?
18 கடைசியாக, “சமாதானத்தோடே” இருக்கும்படி பேதுரு நமக்குச் சொல்கிறார். அவ்வாறு வாழ்வதற்கு, நாம் யெகோவாவுடனும் மற்றவர்களுடனும் சமாதானமாய் இருக்க வேண்டும். ‘ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாக’ இருப்பதன் முக்கியத்துவத்தையும், சக கிறிஸ்தவர்களுடன் சமாதானத்தைக் காத்துவருவதன் முக்கியத்துவத்தையும் பேதுரு வலியுறுத்துகிறார். (1 பேதுரு 2:17; 3:10, 11; 4:8; 2 பேதுரு 1:5-7) நம்மிடையே உள்ள சமாதானத்தைக் காத்து வருவதற்கு, நாம் ஒருவரோடு ஒருவர் அன்பாக இருக்க வேண்டும். (யோவான் 13:34, 35; எபேசியர் 4:1, 2) முக்கியமாக, நம்முடைய சர்வதேச மாநாடுகள் நடத்தப்படுகையில் நம் அன்பும் சமாதானமும் தெளிவாகத் தெரிகிறது. 1999-ல் கோஸ்டா ரிகாவில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில், விமானத்தில் வந்திறங்கியவர்களை வரவேற்க வந்த உள்ளூர் சாட்சிகள், தங்களை அறியாமல் ஒரு விற்பனை ஸ்டாலை மறைத்ததால் அந்த விற்பனையாளர் கோபமடைந்தார். எனினும், இரண்டாவது நாளின்போது, விமானத்தில் வந்திறங்கியவர்களை—தாங்கள் முன்பின் பார்த்திராதவர்களை—உள்ளூர் சாட்சிகள் உற்சாகத்தோடு வரவேற்பதில் காட்டிய அன்பையும் சமாதானத்தையும் அவர் கவனித்தார். கடைசி நாளில், அந்த விற்பனையாளரும் அந்த வரவேற்பில் கலந்துகொண்டார், பைபிள் படிப்பு வேண்டுமென்றும் கேட்டார்.
19. சக விசுவாசிகளுடன் சமாதானத்தைக் காத்து வருவது ஏன் முக்கியம்?
19 நம்முடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடன் மனப்பூர்வமாக சமாதானத்தை நாடுவது, யெகோவாவின் நாளுக்காகவும் வாக்குறுதி அளிக்கப்பட்ட அவருடைய புதிய உலகிற்காகவும் எந்தளவு ஊக்கத்துடன் காத்திருக்கிறோம் என்பதைக் காட்டும். (சங்கீதம் 37:11; 2 பேதுரு 3:13) சக விசுவாசி ஒருவருடன் சமாதானத்தைக் காத்து வருவது நமக்கு கடினமாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். பரதீஸில் அவருடன் சமாதானமாய் நம்மால் வாழ முடியுமா? நமக்கு எதிராக நம் சகோதரனிடம் ஏதோவொரு குறை இருக்கிறதென்றால், நாம் உடனடியாக ‘அவருடன் ஒப்புரவாக’ வேண்டும். (மத்தேயு 5:23, 24) அவ்வாறு செய்தால்தான் நாம் யெகோவாவுடன் சமாதானமாக இருக்க முடியும்.—சங்கீதம் 35:27; 1 யோவான் 4:20.
20. “காத்திருக்கும் மனப்பான்மை” என்னென்ன வழிகளில் காட்டப்பட வேண்டும்?
20 நாம் தனிப்பட்ட விதமாக, ‘தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருக்கிறோமா?’ ஒழுக்கக்கேடான இவ்வுலகில் பரிசுத்தமாக இருப்பதன் மூலம் பொல்லாங்கு முடிவடைவதைக் காண மிகுந்த ஆவலோடிருப்பதைக் காட்டுவோம். மேலும், யெகோவாவின் நாள் வருவதை ஆசையுடன் எதிர்பார்ப்பதும், ராஜ்ய ஆட்சியில் வாழ்வதற்கான ஏக்கத்தையும் தேவபக்திக்குரிய நம் செயல்கள் வெளிப்படுத்துகின்றன. மேலும் சக வணக்கத்தாரோடு இப்போது சமாதானத்துடன் இருக்க நாம் எடுக்கும் பிரயாசங்கள் சமாதானமான புதிய உலகத்தில் வாழும்படியான நம் எதிர்பார்ப்பை தெளிவாக காட்டுகிறது. இந்த வழிகளில், நமக்கு “காத்திருக்கும் மனப்பான்மை” இருக்கிறதென்றும், ‘தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு காத்திருக்கிறோம்’ என்றும் நாம் காட்டுகிறோம்.
[அடிக்குறிப்பு]
a உதாரணங்களுக்கு, காவற்கோபுரம் ஜனவரி 1, 2000, பக்கம் 16-ஐயும், 1997 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம், (ஆங்கிலம்) பக்கம் 51-ஐயும் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ‘தேவனுடைய நாள் சீக்கிரமாய் வர காத்திருப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது?
• நம் நடத்தை “காத்திருக்கும் மனப்பான்மையை” எவ்வாறு வெளிப்படுத்துகிறது?
• “தேவபக்திக்குரிய செயல்கள்” ஏன் இன்றியமையாதவை?
• யெகோவாவுக்கு முன்பாக நாம் ‘கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களும் சமாதானமுள்ளவர்களுமாக’ இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 11-ன் படம்]
“காத்திருக்கும் மனப்பான்மை” பரிசுத்த நடத்தைக்குரிய கிரியைகளில் தெரிகிறது
[பக்கம் 12-ன் படங்கள்]
ராஜ்ய பிரசங்கிப்பு ஊழியம் உயிரைக் காக்கிறது
[பக்கம் 14-ன் படம்]
யெகோவாவின் நாளுக்காக காத்திருக்கையில் மற்றவர்களுடன் சமாதானத்தை நாடுவோமாக