கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரத்திற்கு உண்மையுடன் கீழ்ப்பட்டிருங்கள்
“யெகோவாவே நமக்கு நீதிபதி, யெகோவாவே நமக்கு சட்டம் வழங்குபவர், யெகோவாவே நமக்கு ராஜா.”—ஏசாயா 33:22, NW.
1. பண்டைய இஸ்ரவேல் தேசம் எவ்வாறு தனிச்சிறப்பு மிக்கதாய் விளங்கியது?
இஸ்ரவேல் தேசம் பொ.ச.மு. 1513-ல் உருவாக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அதற்கு தலைநகரமும் இல்லை, சொந்த நாடும் இல்லை, காணக்கூடிய ராஜாவும் இல்லை. அதன் குடிமக்கள் ஒரு காலத்தில் அடிமைகள். ஆனால் அந்தப் புதிய தேசம் வேறொரு விதத்தில் தனிச்சிறப்பு மிக்கதாய் விளங்கியது. யெகோவா தேவன் அதற்கு காணக்கூடாத நீதிபதியாகவும் சட்டம் வழங்குபவராகவும் ராஜாவாகவும் இருந்தார். (யாத்திராகமம் 19:5, 6; ஏசாயா 33:22, NW) வேறெந்த தேசமும் இப்படி சொல்லிக்கொள்ள முடியவில்லை!
2. இஸ்ரவேலர் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது சம்பந்தமாக என்ன கேள்வி எழும்புகிறது, இதற்கான பதில் ஏன் முக்கியமானது?
2 யெகோவா ஒழுங்கின் கடவுளாகவும் சமாதானத்தின் கடவுளாகவும் இருப்பதால் அவர் அரசாளும் எந்தத் தேசமும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் என்று நாம் எதிர்பார்ப்போம். (1 கொரிந்தியர் 14:33) இது இஸ்ரவேலரின் விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தது. ஆனால் பூமியிலிருக்கும் ஓர் அமைப்பை கண்களுக்குப் புலப்படாத கடவுள் எப்படி வழிநடத்த முடிந்தது? அந்தப் பூர்வ தேசத்தை யெகோவா அரசாண்ட விதத்தைப் புரிந்துகொள்வது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, இஸ்ரவேலரை அவர் நடத்திய விதத்தைக் கவனித்தோமானால் கடவுள் ஏற்படுத்தியுள்ள அதிகாரத்திற்கு உண்மையுடன் கீழ்ப்பட்டிருப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வோம்.
பண்டைய இஸ்ரவேல் எவ்வாறு ஆளப்பட்டது
3. தமது ஜனங்களை வழிநடத்த என்ன நடைமுறையான ஏற்பாடுகளை யெகோவா செய்திருந்தார்?
3 இஸ்ரவேலருக்கு யெகோவா கண்களுக்குப் புலப்படாத ராஜாவாக இருந்தாலும் உண்மையுள்ள நபர்களை தம் காணக்கூடிய பிரதிநிதிகளாக நியமித்தார். இவர்கள் அதிபதிகளாகவும் கோத்திர தலைவர்களாகவும் மூப்பர்களாகவும் இருந்தார்கள், இவர்கள் மக்களுக்கு ஆலோசகர்களாகவும் நியாயாதிபதிகளாகவும் சேவை செய்தார்கள். (யாத்திராகமம் 18:25, 26; உபாகமம் 1:15) ஆனால் கடவுளுடைய வழிநடத்துதல் இல்லாமல், பொறுப்புள்ள இந்த நபர்களால் நேர்மையாக காரியங்களை பகுத்துணர்ந்து, புரிந்துகொண்டு, நியாயந்தீர்க்க முடிந்திருக்கும் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. அவர்கள் பரிபூரணராக இருக்கவில்லை, உடன் வணக்கத்தாரின் இருதயங்களில் இருந்ததை அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும், கடவுள் பயமுள்ள நியாயாதிபதிகளால் சக வணக்கத்தாருக்கு பயனுள்ள ஆலோசனைகள் வழங்க முடிந்தது; ஏனென்றால் அவை யெகோவாவின் நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டன.—உபாகமம் 19:15; சங்கீதம் 119:97-100.
4. இஸ்ரவேலின் உண்மையுள்ள நியாயாதிபதிகள் என்ன குணங்களை தவிர்ப்பதில் கவனமாய் இருந்தனர், ஏன்?
4 ஆனால் நியாயாதிபதியாக இருப்பதற்கு நியாயப்பிரமாணத்தை அத்துப்படியாக அறிந்திருப்பது மாத்திரமே போதவில்லை. அவர்கள் அபூரணராக இருந்ததால் தன்னலம், பாரபட்சம், பேராசை போன்ற வேண்டாத குணங்களால் நியாயத்தைப் புரட்டாதபடிக்கு கவனமாய் இருக்க வேண்டியிருந்தது. மோசே அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: ‘நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பது போலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது.’ ஆம், இஸ்ரவேலரின் நியாயாதிபதிகள் யெகோவாவின் சார்பாக நியாயம் வழங்கினார்கள். அது எத்தனை கெளரவமான, ஒப்பற்ற பாக்கியம்!—உபாகமம் 1:16, 17.
5. நியாயாதிபதிகளை ஏற்படுத்தியதோடுகூட, தமது ஜனங்களை கவனித்துக்கொள்ள யெகோவா வேறு என்ன ஏற்பாடுகளையும் செய்தார்?
5 தமது ஜனங்களின் ஆன்மீக தேவைகளை கவனித்துக்கொள்வதற்காக யெகோவா வேறுசில ஏற்பாடுகளையும் செய்தார். அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வரும் முன்பே, மெய் வணக்கத்தின் மையமாக திகழும் ஆசரிப்புக்கூடாரத்தை ஸ்தாபிக்க அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். நியாயப்பிரமாணத்தை கற்பிப்பதற்கும், மிருக பலிகளைச் செலுத்துவதற்கும், காலையும் மாலையும் தூபவர்க்கம் எரிப்பதற்கும் ஆசாரியத்துவத்தையும் ஏற்படுத்தினார். மோசேயின் அண்ணன் ஆரோனை முதல் பிரதான ஆசாரியனாக நியமித்து அவருடைய குமாரர்களை அவருக்கு உதவியாக நியமித்தார்.—யாத்திராகமம் 28:1; எண்ணாகமம் 3:10; 2 நாளாகமம் 13:10, 11.
6, 7. (அ) ஆசாரியர்களுக்கும் ஆசாரியரல்லாத லேவியர்களுக்கும் இடையில் எப்படிப்பட்ட உறவு நிலவியது? (ஆ) லேவியர்கள் பல்வேறு வேலைகளைச் செய்தார்கள் என்ற உண்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (கொலோசெயர் 3:23)
6 பல லட்சக்கணக்கானோரின் ஆன்மீக தேவைகளை கவனித்துக்கொள்வது என்பது மிக பிரமாண்டமான வேலை. எண்ணிக்கையில் ஆசாரியர்கள் சற்று குறைவாகவே இருந்தார்கள். ஆகவே அவர்களுக்கு உதவ லேவி கோத்திரத்திலுள்ள மற்றவர்கள் நியமிக்கப்பட்டார்கள். மோசேயிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “லேவியரை ஆரோனிடத்திலும் அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுப்பாயாக; இஸ்ரவேல் புத்திரரில் இவர்கள் முற்றிலும் அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.”—எண்ணாகமம் 3:9, 39.
7 லேவியர்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் மூன்று குடும்பங்களாக பிரிக்கப்பட்டிருந்தார்கள்—கெர்சோனியர்கள், கோகாத்தியர்கள், மெராரியர்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வேலைகள் இருந்தன. (எண்ணாகமம் 3:14-17, 23-37) மற்றவற்றோடு ஒப்பிட சில வேலைகள் முக்கியமானவையாக தோன்றினாலும் எல்லா வேலைகளும் இன்றியமையாதவையே. கோகாத்திய லேவியர்களுடைய வேலை பரிசுத்த உடன்படிக்கை பெட்டி மற்றும் ஆசரிப்புக்கூடாரத்தின் தட்டுமுட்டுகளின் அருகிலிருந்து வேலை செய்வதை உட்படுத்தியது. ஆனால், கோகாத்தியனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு லேவியனும் அற்புதமான சிலாக்கியங்களை அனுபவித்தார். (எண்ணாகமம் 1:51, 53) சிலர் தாங்கள் பெற்ற சிலாக்கியங்களுக்கு மதித்துணர்வு காட்ட தவறியது வருந்தத்தக்கது. கடவுளுடைய அதிகாரத்துக்கு உண்மையுடன் கீழ்ப்பட்டிருப்பதற்குப் பதிலாக அவர்கள் அதிருப்தி அடைந்தார்கள்; பெருமை, பேராசை, பொறாமை ஆகிய குணங்களை வெளிக்காட்ட ஆரம்பித்தார்கள். அவர்களில் கோராகு என்ற லேவியனும் ஒருவன்.
“ஆசாரியப் பட்டத்தையும் தேடுகிறீர்களோ?”
8. (அ) கோராகு யார்? (ஆ) ஆசாரியர்களை மனித கண்ணோட்டத்திலேயே காணும்படி கோராகை எது தூண்டியிருக்கலாம்?
8 கோராகு லேவி கோத்திரத்திலுள்ள வம்சத் தலைவனுமில்லை, கோகாத்திய குடும்ப தலைவனும் இல்லை. (எண்ணாகமம் 3:30, 32) ஆனாலும் அவன் இஸ்ரவேலில் மதிப்புமிக்க தலைவனாக இருந்தான். கோராகு செய்த வேலைகள் ஆரோனோடும் அவருடைய குமாரர்களோடும் நெருங்கிப் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். (எண்ணாகமம் 4:18, 19) அபூரணத்தன்மையால் இவர்களிடம் காணப்பட்ட குற்றங்குறைகளை நேரில் பார்த்த கோராகு இவ்வாறு யோசித்திருக்கலாம்: ‘இந்த ஆசாரியர்கள் உண்மையிலேயே அபூரணர்கள்தான். அப்படியிருக்கையில் நான் அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டுமா என்ன? கொஞ்ச நாட்களுக்கு முன்புதானே ஆரோன் பொன் கன்றுக்குட்டியை உண்டுபண்ணினார். அதை வணங்கப் போய்தானே நமது ஜனங்கள் விக்கிரகாராதனைக்காரர் ஆனார்கள். இப்போது மோசேயின் அண்ணன் ஆரோன் பிரதான ஆசாரியன்! எவ்வளவு பாரபட்சம்! ஆரோனின் குமாரர்களாகிய நாதாபும் அபியூவும் மட்டும் யோக்கியமா என்ன? ஊழிய சிலாக்கியங்களை மதிக்காமல் யெகோவாவால் மரண தண்டனை அனுபவித்தவர்கள்தானே!’a (யாத்திராகமம் 32:1-5; லேவியராகமம் 10:1, 2) கோராகின் மனதில் எப்படிப்பட்ட எண்ணம் ஓடியிருந்தாலும் சரி, அவன் ஆசாரியத்துவத்தை மனித கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டது மட்டும் தெளிவாக தெரிகிறது. இதுதான் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகவும் கடைசியில் யெகோவாவுக்கு விரோதமாகவும்கூட கலகம் செய்ய அவனை தூண்டியது.—1 சாமுவேல் 15:23; யாக்கோபு 1:14, 15.
9, 10. கோராகும் அவனோடு சேர்ந்து கலகம் செய்தவர்களும் மோசேக்கு எதிராக என்ன குற்றச்சாட்டுகளைக் குவித்தனர், அவர்கள் ஏன் அவ்வாறு செய்திருக்கவே கூடாது?
9 கோராகு செல்வாக்கு மிக்கவனாக இருந்ததால் அவனைப் போலவே யோசித்த மற்றவர்களின் ஆதரவை திரட்டுவது அவனுக்கு கடினமாக இருக்கவில்லை. அவன் தாத்தான் அபிராம் உட்பட 250 பேரை தன் பக்கமாக சேர்த்துக்கொண்டான். இவர்கள் அனைவரும் சபையின் தலைவர்கள். இவர்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு மோசேயிடமும் ஆரோனிடமும் இவ்வாறு சொன்னார்கள்: “சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்”?—எண்ணாகமம் 16:1-3.
10 இந்தக் கலகக்காரர்கள் தெரிந்து வைத்திருந்த விஷயங்களை எண்ணிப்பார்த்தால் இவர்கள் மோசேயின் அதிகாரத்தை எதிர்த்திருக்கவே கூடாது. இதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் ஆரோனும் மிரியாமும் இதே காரியத்தை செய்திருந்தார்கள். சொல்லப்போனால், கோராகை போலவே சிந்தித்திருந்தார்கள்! எண்ணாகமம் 12:1, 2-ன்படி அவர்கள் இவ்வாறு கேட்டார்கள்: “கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ.” யெகோவா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். தலைவனாக தாம் தேர்ந்தெடுத்திருப்பவரை அடையாளம் காட்டுவதற்காக யெகோவா மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு வரும்படி கட்டளையிட்டார். அப்போது யெகோவா மிகத் தெளிவாக இவ்வாறு சொன்னார்: “உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல.” “என் வீட்டிலுள்ள அனைத்தும் அவனுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.” (NW) அதன் பின் மிரியாமை யெகோவா தண்டித்ததால் கொஞ்ச நாட்களுக்கு குஷ்டரோகத்தால் கஷ்டப்பட்டாள்.—எண்ணாகமம் 12:4-7, 10.
11. கோராகு சம்பந்தப்பட்ட விஷயத்தை மோசே எவ்வாறு கையாண்டார்?
11 கோராகுக்கும் அவனை ஆதரித்தவர்களுக்கும் இந்தச் சம்பவம் கண்டிப்பாக தெரிந்திருக்கும். அவர்கள் செய்த கலகத்தை நியாயப்படுத்த வழியே இல்லை. அப்போதும்கூட மோசே பொறுமையோடு அவர்களை நியாயமாக சிந்திக்க வைக்க முயற்சி செய்தார். அவர்கள் பெற்றிருந்த சிலாக்கியங்களுக்கு இன்னுமதிக நன்றியறிதலைக் காட்டுவதற்கு அவர்களை ஊக்குவித்து இவ்வாறு சொன்னார்: ‘உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்தது உங்களுக்கு அற்ப காரியமோ?’ இல்லை, அது ‘அற்ப காரியமில்லை’! ஏற்கெனவே லேவியர்களுக்கு ஏராளமான சிலாக்கியங்கள் அளிக்கப்பட்டிருந்தன. அப்படியிருக்க அவர்கள் வேறு எதற்கு ஆசைப்பட வேண்டும்? தொடர்ந்து மோசே சொன்ன வார்த்தைகள் அவர்களுடைய இருதயத்தின் எண்ணத்தை அம்பலப்படுத்தின: “இப்பொழுது ஆசாரியப் பட்டத்தையும் தேடுகிறீர்களோ?”b (எண்ணாகமம் 12:3; 16:9, 10) ஆனால் தாம் ஏற்படுத்திய அதிகாரத்திற்கு எதிராக தலைதூக்கிய இந்தக் கலகத்தைக் கண்ட யெகோவா என்ன செய்தார்?
இஸ்ரவேலின் நீதிபதி தலையிடுகிறார்
12. இஸ்ரவேலர் கடவுளோடு நல்லுறவை தொடர்ந்து அனுபவிப்பது எதை சார்ந்திருந்தது?
12 யெகோவா இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தபோது, அவர்கள் கீழ்ப்படிதலைக் காட்டினால் “பரிசுத்த ஜாதி”யாய் இருப்பார்கள் என்றும், தம் ஏற்பாட்டை மதித்து நடக்கும் வரை தொடர்ந்து பரிசுத்தமாய் நிலைத்திருப்பார்கள் என்றும் அவர்களிடம் சொன்னார். (யாத்திராகமம் 19:5, 6) ஆனால் இப்போது வெளிப்படையாக கலகம் நடந்துகொண்டிருக்கையில் இஸ்ரவேலின் நீதிபதியும் சட்டம் வழங்குபவருமானவர் தலையிடுவதற்கு சரியான சமயமாக இருந்தது! கோராகிடம் மோசே இவ்வாறு கூறினார்: “நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள். உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவர வேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டு வாருங்கள்.”—எண்ணாகமம் 16:16, 17.
13. (அ) கலகக்காரர்கள் யெகோவாவுக்கு முன்பு தூபங்காட்டுவது ஏன் அகம்பாவமான செயலாக இருந்தது? (ஆ) கலகக்காரர்களுக்கு யெகோவா என்ன செய்தார்?
13 கடவுளுடைய நியாயப்பிரமாணத்தின்படி, ஆசாரியர்கள் மாத்திரமே தூபங்காட்ட முடியும். ஆசாரியராக இல்லாத ஒரு லேவியன் யெகோவாவுக்கு முன்பு தூபங்காட்டுவது என்ற எண்ணமே அந்தக் கலகக்காரர்களுக்கு புத்தி தெளிய வைத்திருக்க வேண்டும். (யாத்திராகமம் 30:7; எண்ணாகமம் 4:16) ஆனால் கோராகுக்கும் அவனை ஆதரித்தவர்களுக்குமோ புத்தி தெளியவில்லை! அடுத்த நாள் “அவர்களுக்கு [மோசேக்கும் ஆரோனுக்கும்] விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடார வாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்.” பதிவு இவ்வாறு நமக்குச் சொல்கிறது: “கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி: இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார்.” ஆனால் மோசேயும் ஆரோனும் அந்த ஜனங்களுடைய உயிர் காக்கப்படும்படி மன்றாடினார்கள். யெகோவா அவர்களுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தார். கோராகுக்கும் அவனுடைய கூட்டத்தாருக்கும் என்ன நடந்தது? “அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப்போட்டது.”—எண்ணாகமம் 16:19-22, 35.c
14. இஸ்ரவேலருக்கு எதிராக யெகோவா ஏன் உறுதியான நடவடிக்கையை எடுத்தார்?
14 ஆனால் ஆச்சரியமான விஷயம், கலகக்காரர்களுக்கு யெகோவா என்ன செய்தார் என்பதைக் கண்ணார கண்டும் இஸ்ரவேலர் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. “மறுநாளில் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்றுபோட்டீர்கள் என்றார்கள்.” இஸ்ரவேலர் கலகக்காரர்களின் பக்கமாக பேசினார்கள்! கடைசியாக, யெகோவாவின் பொறுமை எல்லை மீறிப்போய்விட்டது. இப்போது யாருமே—மோசே அல்லது ஆரோனும்கூட—இந்த ஜனத்துக்காக பரிந்துபேச முடியாது. கீழ்ப்படியாதவர்களை யெகோவா வாதையினால் தண்டித்தார். “கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறு பேர்.”—எண்ணாகமம் 16:41-49.
15. (அ) மோசே, ஆரோன் ஆகியவர்களின் தலைமைத்துவத்தை இஸ்ரவேலர் எதன் நிமித்தம் தயங்காமல் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்? (ஆ) யெகோவாவைப் பற்றி இந்தப் பதிவு உங்களுக்கு என்ன கற்பித்திருக்கிறது?
15 இந்த மக்கள் அநாவசியமாக தங்கள் உயிரை இழந்தார்கள். நடந்தவற்றை தெளிவாக சிந்தித்துப் பார்த்திருந்தால் இந்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். பின்வருவதைப் போன்ற கேள்விகளை அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டிருந்திருக்கலாம்: ‘தங்கள் உயிரையும் பணயம் வைத்து பார்வோனிடம் பேசியவர்கள் யார்? இஸ்ரவேலரை விடுதலை செய்யும்படி வற்புறுத்தியவர்கள் யார்? இஸ்ரவேலரின் விடுதலைக்குப் பின்பு கடவுளுடைய தூதனோடு முகமுகமாய் பேசுவதற்கு ஓரேப் மலைக்கு வரும்படி யாருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டது?’ மோசே மற்றும் ஆரோனின் சிறந்த பதிவை பார்க்கும்போது யெகோவாவிடம் அவர்கள் வைத்திருந்த உண்மைப்பற்றுறுதிக்கும் அந்த ஜனங்களிடம் அவர்கள் காண்பித்த அன்புக்கும் உண்மையிலேயே அது அத்தாட்சி அளித்தது. (யாத்திராகமம் 10:28; 19:24; 24:12-15) கலகக்காரர்களை கொல்லுவது யெகோவாவுக்கு பிரியமானதல்ல. ஆனால் இவர்கள் தங்கள் கலகத்தன போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பது தெளிவான போது அவர் முடிவாக அந்த நடவடிக்கை எடுத்தார். (எசேக்கியேல் 33:11) இவை எல்லாமே இன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏன்?
இன்று முக்கிய வழியை அடையாளம் கண்டுகொள்ளுதல்
16. (அ) இயேசுவே யெகோவாவின் பிரதிநிதி என்று நம்புவதற்கு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு என்ன அத்தாட்சி இருந்தது? (ஆ) லேவிய ஆசாரியத்துவத்தை கடவுள் ஏன் நீக்கிவிட்டார், அதற்கு பதிலாக அவர் எதை ஏற்படுத்தினார்?
16 இன்று ஒரு புதிய ‘தேசமுள்ளது.’ இதன் காண முடியாத நீதிபதியும், சட்டம் வழங்குபவரும், ராஜாவும் யெகோவாவே. (மத்தேயு 21:43, NW) அந்தத் ‘தேசம்’ பொ.ச. முதல் நூற்றாண்டில் பிறந்தது. அந்தச் சமயத்தில் மோசேயின் நாளிலிருந்த ஆசரிப்புக் கூடாரத்திற்குப் பதிலாக எருசலேமின் அழகிய ஆலயமிருந்தது. இங்கே இன்னமும் லேவியர்களே சேவை செய்து வந்தார்கள். (லூக்கா 1:5, 8, 9) ஆனால், பொ.ச. 29-ல் மற்றொரு ஆலயம், அதாவது ஆவிக்குரிய ஆலயம் பிறந்தது. இயேசு கிறிஸ்துவே இதன் பிரதான ஆசாரியர். (எபிரெயர் 9:9, 11) கடவுளுடைய அதிகாரத்தின் பேரில் இப்போது மறுபடியும் கேள்வி எழும்பியது. இந்தப் புதிய ‘தேசத்தை’ வழிநடத்த யெகோவா யாரைப் பயன்படுத்தப் போகிறார்? எந்த நிபந்தனையுமின்றி கடவுளுக்கு உண்மை பற்றுறுதியுள்ளவராக இயேசு நிரூபித்தார். அவர் ஜனங்களை நேசித்தார். அவர் அநேக அற்புத அடையாளங்களைச் செய்துகாட்டினார். ஆனால் வணங்கா கழுத்துள்ள தங்கள் முன்னோர்களைப் போலவே பெரும்பாலான லேவியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. (மத்தேயு 26:63-68; அப்போஸ்தலர் 4:5, 6, 18; 5:17) கடைசியாக லேவிய ஆசாரியத்துவத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக மிகவும் வித்தியாசமான ராஜரீக ஆசாரியத்துவத்தை யெகோவா ஏற்படுத்தினார். அந்த ராஜரீக ஆசாரியத்துவம் இன்று வரை தொடர்ந்து செயல்படுகிறது.
17. (அ) இன்று அந்த ராஜரீக ஆசாரியத்துவத்தை உண்டுபண்ணுவது யார்? (ஆ) யெகோவா எவ்வாறு ராஜரீக ஆசாரியத்துவத்தை பயன்படுத்துகிறார்?
17 இன்று அந்த ராஜரீக ஆசாரியத்துவத்தை உண்டுபண்ணுவது யார்? அந்தக் கேள்விக்கு அப்போஸ்தலன் பேதுரு ஆவியால் ஏவப்பட்டு எழுதிய தன் முதல் கடிதத்தில் பதிலளிக்கிறார். கிறிஸ்துவின் சரீரமாகிய அபிஷேகம் செய்யப்பட்ட அங்கத்தினர்களுக்கு பேதுரு இவ்வாறு எழுதினார்: “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் [“தேசமாயும்,” NW], அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” (1 பேதுரு 2:9) அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் அடங்கிய தொகுதியே இந்த “ராஜரீகமான ஆசாரியக்கூட்டமா”யிருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. இவர்களை பேதுரு ‘பரிசுத்த தேசம்’ என்றும்கூட அழைக்கிறார். தம்முடைய ஜனங்களுக்கு போதனைகளையும் ஆவிக்குரிய வழிநடத்தலையும் அளிப்பதற்கு யெகோவா இவர்களைத்தான் முக்கிய வழியாக பயன்படுத்தி வருகிறார்.—மத்தேயு 24:45-47.
18. நியமிக்கப்பட்ட மூப்பர்களுக்கும் ராஜரீக ஆசாரியக் கூட்டத்தாருக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
18 பூமி முழுவதிலும் யெகோவாவின் மக்களுடைய சபைகளில் பொறுப்புள்ள ஸ்தானங்களில் சேவை செய்யும்படி நியமிக்கப்பட்ட மூப்பர்களே, ராஜரீக ஆசாரியக் கூட்டத்தாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி நாம் மரியாதை காட்டவும் முழுமையாக ஆதரிக்கவும் தகுந்தவர்கள். ஏன்? ஏனென்றால் யெகோவா தமது பரிசுத்த ஆவியால் மூப்பர்களை அவர்களுடைய ஸ்தானங்களில் நியமித்திருக்கிறார். (எபிரெயர் 13:7, 17) எப்படி?
19. மூப்பர்கள் எந்த வகையில் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்படுகிறார்கள்?
19 பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் இந்த மூப்பர்களுக்கு இருக்கின்றன. (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9) ஆகவே அவர்கள் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படலாம். (அப்போஸ்தலர் 20:28) இந்த மூப்பர்கள் கடவுளுடைய வார்த்தையை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். தங்களை நியமித்திருக்கும் உன்னத நீதிபதியைப் போலவே மூப்பர்கள் நியாயம் தீர்ப்பதில் பாரபட்சம் போல தோன்றும் எதையும் வெறுக்க வேண்டும்.—உபாகமம் 10:17, 18.
20. கடினமாக உழைக்கும் மூப்பர்களிடம் நீங்கள் எதை உயர்வாக மதிக்கிறீர்கள்?
20 மூப்பர்களுடைய அதிகாரத்தை கேள்வி கேட்பதற்குப் பதிலாக கடினமாக உழைக்கும் அவர்களை உண்மையிலேயே நாம் போற்றுகிறோம். பெரும்பாலும் பல பத்தாண்டுகளாக உண்மையுடன் அவர்கள் செய்து வரும் சேவை நம்பிக்கையை தூண்டுகிறது. அவர்கள் சபை கூட்டங்களுக்காக உண்மையுடன் தயாரிக்கிறார்கள், அவற்றை நடத்துகிறார்கள், ‘ராஜ்யத்தின் நற்செய்தியை’ நம்மோடு சேர்ந்து பிரசங்கிக்கிறார்கள், நமக்கு தேவையான சமயங்களில் வேதப்பூர்வ ஆலோசனைகளை அளிக்கிறார்கள். (மத்தேயு 24:14, NW; எபிரெயர் 10:23, 25; 1 பேதுரு 5:2) நாம் வியாதியாயிருக்கையில் நம்மை வந்து பார்க்கிறார்கள், துக்கப்படுகையில் நம்மை ஆறுதல்படுத்துகிறார்கள். அவர்கள் உண்மையுடனும் தன்னலமின்றியும் ராஜ்ய அக்கறைகளை ஆதரிக்கிறார்கள். யெகோவாவின் ஆவி அவர்கள்மேல் இருக்கிறது, அவருடைய அங்கீகாரம் அவர்களுக்கு உண்டு.—கலாத்தியர் 5:22, 23.
21. மூப்பர்கள் எதை மனதில் வைத்திருக்க வேண்டும், ஏன்?
21 மூப்பர்கள் உண்மையில் பரிபூரணமானவர்களாக இல்லை. தங்கள் குறைபாடுகளை மனதில் வைத்து ‘தேவனுடைய சுதந்திரமாகிய’ மந்தையை அடக்கியாள அவர்கள் முயற்சி செய்வது கிடையாது. மாறாக, அவர்கள் தங்கள் ‘சகோதரரின் சந்தோஷத்துக்கு சகாயராக’ தங்களைக் கருதுகிறார்கள். (1 பேதுரு 5:3, NW; 2 கொரிந்தியர் 1:24) மனத்தாழ்மையுள்ள, கடினமாக உழைக்கும் மூப்பர்கள் யெகோவாவை நேசிக்கிறார்கள். அவரை எந்தளவு நெருங்கி பின்பற்ற முயலுகிறார்களோ, அந்தளவு சபைக்கு அதிக நன்மைகள் உண்டாகும் என்பதை அவர்கள் அறிவார்கள். இதை மனதில் வைத்து, அன்பு, இரக்கம், பொறுமை போன்ற கடவுளின் குணங்களை வளர்த்துக்கொள்ள எப்போதும் பாடுபடுகிறார்கள்.
22. கோராகின் பதிவை சிந்தித்துப் பார்த்தது எவ்வாறு யெகோவாவின் காணக்கூடிய அமைப்பில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைப் பலப்படுத்தியுள்ளது?
22 யெகோவா காணக்கூடாத நம் அரசராகவும், இயேசு கிறிஸ்து நம்முடைய பிரதான ஆசாரியராகவும், அபிஷேகம் செய்யப்பட்ட ராஜரீக ஆசாரியக் கூட்டத்தார் நம்முடைய போதகர்களாகவும், உண்மையுள்ள கிறிஸ்தவ மூப்பர்கள் நம்முடைய ஆலோசகர்களாகவும் இருப்பது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது! மனிதர்களால் வழிநடத்தப்படும் எந்தவொரு அமைப்பும் பரிபூரணமாக செயல்படாத போதிலும் கடவுளுடைய அதிகாரத்துக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்பட்டிருக்கும் உண்மையுள்ள சக விசுவாசிகளோடு சேர்ந்து அவரை சேவிப்பதில் நாம் ஆனந்தமடைகிறோம்!
[அடிக்குறிப்புகள்]
a ஆரோனின் மற்ற இரண்டு குமாரர்கள் எலெயாசாரும் இத்தாமாரும் யெகோவாவின் சேவையில் சிறந்த முன்மாதிரிகளாக திகழ்ந்தார்கள்.—லேவியராகமம் 10:6.
b சதி செய்வதில் கோராகுக்கு துணைபோன தாத்தானும் அபிராமும் ரூபன் வம்சத்தை சேர்ந்தவர்கள். ஆகவே அவர்கள் ஆசாரியத்துவத்திற்கு ஆசைப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை, மோசேயின் தலைமைத்துவமும், அந்தச் சமயம் வரை அவர்கள் எதிர்பார்த்திருந்த வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை இன்னும் அடையாதிருந்ததுமே அவர்களுடைய கோபத்துக்கு காரணம்.—எண்ணாகமம் 16:12-14.
c முற்பிதாக்களின் காலத்தில், ஒவ்வொரு குடும்பத் தலைவனும் கடவுளுக்கு முன்பு தன் மனைவியையும் பிள்ளைகளையும் பிரதிநிதித்துவம் செய்து அவர்களுக்காக பலிகளையும்கூட செலுத்தி வந்தார். (ஆதியாகமம் 8:20; 46:1; யோபு 1:5) ஆனால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டபோது, ஆரோனின் குடும்பத்திலுள்ள ஆண் மக்களை ஆசாரியர்களாக யெகோவா நியமித்தார். இவர்கள் மூலமாகவே பலிகளை செலுத்த வேண்டியிருந்தது. அந்த 250 கலகக்காரர்களும் இந்த மாற்றத்தை ஏற்க மனமில்லாதவர்களாக இருந்தனர்.
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• இஸ்ரவேலரை கவனித்துக்கொள்ள யெகோவா செய்த அன்பான ஏற்பாடுகள் யாவை?
• மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக கோராகு கலகம் செய்தது ஏன் மன்னிக்க முடியாத குற்றம்?
• கலகக்காரர்களை யெகோவா நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
• யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு நன்றியுடன் இருப்பதை இன்று எவ்வாறு காட்டலாம்?
[பக்கம் 9-ன் படம்]
யெகோவாவின் சேவையில் பெறும் எந்தவொரு நியமிப்பையும் பாக்கியமாக கருதுகிறீர்களா?
[பக்கம் 10-ன் படம்]
“இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்”?
[பக்கம் 13-ன் படம்]
நியமிக்கப்பட்ட மூப்பர்கள் ராஜரீக ஆசாரியத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்